காக்காக்குஞ்சு – மு. வெங்கடேஷ்

மு வெங்கடேஷ்

ஊரில் ஆலமரத்தடி ஸ்டாப் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பெரிய கோவிலுக்குச் செல்வதென்றால் அந்த நிறுத்தத்தில்தான் இறங்கிச் செல்ல வேண்டும். உள்ளூர்வாசிகள் மட்டுமில்லாமல் வெளியூர்வாசிகளும் அநேகம் வந்து செல்லும் இடம். பல நேரங்களில் வருபவர்கள் மரத்தடியில் விட்டுச் சென்ற வாகனங்களில் எச்சம் போட்டிருப்பதைக் கண்டு பறவைகளைத் திட்டுவது அங்கு உள்ளவர்களை எரிச்சலடைய வைக்கும். அப்படித் திட்டிய வெளியூர்க்காரருடன் ஒருநாள் கோமதி சண்டைக்கே போய் விட்டாள், “அக்கற உள்ளவுக வண்டிய மூடி வச்சிட்டுப் போனும், இல்ல வேற எங்கயாது விட்டுப் போனும்,” என்று.

அவர்களின் பொழுதுபோக்கே அந்த மரத்தடியில் உட்கார்ந்து கதை பேசி விளையாடி நேரத்தைச் செலவிடுவதுதான். வீட்டில் சமைத்ததை எடுத்து வந்து வட்டமாக மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்ட நாட்கள் ஏராளம். அந்த மரத்திற்கு வயது சுமார் அறுபது எழுபது இருக்கும். மரத்திற்கு அருகில்தான் வசந்தியின் வீடும். அதனால் அவளின் வீட்டை அடையாளம் காண்பதில் அத்தனை சிரமங்கள் இருந்ததில்லை. கூடுதலாக இன்று பந்தலும் மைக் செட்டும்.
விடிந்தால் தை 11. வெள்ளிக்கிழமை. இருபது வருடங்களையும் அந்த அழகான இடத்தில் கழித்துவிட்டு நாளை அமையப்போகும் புது வாழ்க்கையை எண்ணி உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் வசந்தி. மணி பன்னிரெண்டைக் கடந்திருந்தது. அருகில் படுத்திருந்த அம்மாவின் கையை எடுத்துத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். “என்னடி மேல் இப்படிச் சுடுது, சுகமில்லையா?” என்ற அம்மாவிடம் “அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நீ பேசாம படு” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டாள், கண்களில் வடியும் கண்ணீரை மறைப்பதற்காக.

“ஏன்டி, இப்டிலாம் பண்ணக் கூடாது. பொழுது விடிஞ்சா மாப்ள வீட்ல இருந்து பொண்ணழைக்க வந்துருவாக, வெளில தாத்தா மாமாலாம் படுத்துருக்காக. சந்தோசமா இருக்கனும். மாப்ள பாக்குறதுக்கு நல்லவராத்தான் தெரியுது. உன்ன நல்லவடியா பாத்துக்குவாரு. பேசாம மனசப் போட்டு கொழப்பிக்காம படுத்துத் தூங்கு,” என்று அம்மா சொன்ன சமாதானம் அவளின் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவளின் சிந்தனை எல்லாம் வேறெங்கோ சுற்றிக் கொண்டிருந்தது. மாப்பிள்ளையை அவள் அதற்கு முன் ஒருமுறை பார்த்திருந்தும் மனதில் பதிந்திராத முகம்தான். அம்மாவும் மாமாவும் சொன்னதால் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருந்தாள்.

அம்மா அத்தனை அறிவுரைகள் சொல்லியும் அவளால் அதையெல்லாம் மறக்க முடியவில்லை. புது வாழ்க்கையை ஏற்பதற்கு ஒருவித தடுமாற்றம். எதனால் என்று சரியாகத் தெரியவில்லை. பல காரணங்கள் இருக்கலாம். தூக்கம் வராததால் அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தவள் ஜன்னல் வழியாக வெளியே பார்க்கையில் மரத்தடியில் தம்பி தனியாக அமர்ந்து எதையோ உற்று பார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. அவள் நினைத்தது சரிதான். அந்த காக்கா கூட்டைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். காக்கா சாம்பல் காக்கா, வீட்டின் மூன்றாவது பிள்ளை.

மரத்தில் பல பறவைகள் கூடு கட்டி வாழ்ந்து வந்ததால் எப்போதும் கீச் கீச் சத்தம்தான். தோழிகளுக்குள் பிரித்துக் கொண்டார்கள், ஆளுக்கொரு பறவையாக. “ஏய் என் கிளி வந்துட்டு”, “ஏய் இன்னைக்கு என் புறா குஞ்சு பொரிச்சிருக்கு”, “என் மைனா சாப்டுச்சு” என்று அவர்களின் பேச்சுக்களும் அந்த பறவைகளைச் சுற்றியேதான் இருந்தன. தன் குயில் வரவில்லை என்று கோமதி அழுததும், தன் கிளியைக் குறவன் பிடித்துச் சென்று விட்டான் என்று அமுதா காய்ச்சலில் படுத்த கதைகளும் உண்டு. அவ்வாறு பிரிக்கப்பட்டதில் அவளுக்கான பறவை ஒரு காகம்.

பிரிக்கப்பட்டு வந்தாலும் அந்த காகத்தின் மீது இயல்பாகவே அவளுக்கொரு ஈர்ப்பு இருந்தது. மற்ற காகங்களை ஒப்பிடுகையில் அது சற்று மாறுபட்டிருந்தது. அதன் மூக்குப் பகுதி வளைந்தும் கழுத்தில் சாம்பல் நிறக் கோடும் இருந்தது. குரலும் மாறுபட்டே ஒலித்தது. அதை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

தினமும் காலை எட்டு மணிக்கு அவள் வீட்டுச் சுவரில் வந்து நின்று கொண்டு “கா கா” என்று கத்திக் கொண்டிருக்கும். அவள் அம்மா வைக்கும் இட்லியையோ சாதத்தையோ சாப்பிட்டு விட்டு நன்றி சொல்வதுபோல் “கா கா” என்று மீண்டும் ஒருமுறை கத்திவிட்டுப் பறந்து செல்லும். இதையே தினமும் வாடிக்கையாக வைத்திருந்த காகம் நாளடைவில் அவர்களின் வீட்டில் ஒருவராகவே ஒட்டிக் கொண்டது.

ஒரு நாள் வீட்டுச் சுவரில் வந்து நின்ற காகம், அவள் அம்மா வைத்த சாதத்தை எடுத்து உண்ணாமல் அதைத் தன் வாயில் கவ்விக் கொண்டு கூட்டை நோக்கிப் பறந்தது. “என்னடா சாதத்த சாப்பிடாம கூட்டப் பாக்கப் போதே” என்று எண்ணி அதைப் பின் தொடர்ந்தாள். வீட்டு மாடியில் சென்று அதன் கூட்டை எட்டிப் பார்க்கையில் உள்ளே புதிதாக இரண்டு குஞ்சுகள். சாதத்தை எடுத்துச் சென்ற அந்தத் தாய் காகம் அதைத் தன் குஞ்சுகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது.

அந்தக் காட்சியை அவளோடு சேர்ந்து அவள் தம்பியும் ரசித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அந்த இரு குஞ்சுகளையும் பார்க்கையில் பிறந்த குழந்தைகளைப் பார்ப்பது போன்ற உணர்வு. உற்சாகத்தில் குதித்துக் கொண்டிருந்தான். “எக்கா இது அம்மா காக்கா இது ரெண்டும் குஞ்சுக அப்போ அப்பா காக்கா எங்கக்கா?” என்று கேட்க, இதற்கெல்லாம் இவனுக்கு பதில் சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தவள் “நம்மளப் போல அதுகளுக்கும் அப்பா இல்லடா” என்று சொன்னாள். “ஓ அப்படியாக்கா? பாவம்” என்று சொன்னவனின் முகம் சோகமடைந்தது. பின் அவனாகவே “எவ்ளோ நாள்க்கா இந்த அம்மா காக்கா அந்த குஞ்சுகளுக்கு ஊட்டி விடும்?” என்றான்.

“அந்த குஞ்சுகளுக்கு றெக்க முளைக்கிறவர, தானா சாப்பிடத் தெரியிற வர” என்று சொன்னாள்.

“அப்புறம்?”

“அப்புறம் குஞ்சு ரெண்டும் தானா சாப்பிடும்”

“அப்புறம்?”

“அப்புறம் குஞ்சு ரெண்டும் பறந்து போயிரும்”

“அப்புறம் அம்மா காக்கா?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும்போதே “பிள்ளைகளா மொட்ட மாடியில நின்னு என்ன பண்ணிட்டு இருக்கீக? கீழ இறங்கி வாங்க. சாமி கும்பிட நேரமாயிட்டு” என்று அம்மா அழைக்கும் சத்தம் கேட்கவே இருவரும் கீழ் இறங்கிச் சென்றார்கள்.

சந்தோசமாக குதித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி வந்தவன், “எம்மா இனி தெனமும் காலைல கொஞ்சம் நெறையா சாப்பாடு வை. நம்ம வீட்டுக்கு ரெண்டு புது விருந்தாளி வந்துருக்காங்க,” என்று சொல்ல விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டவள், “சரிடா கண்ணு, வச்சிட்டாப் போச்சு” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். அவனுக்கோ சந்தோசம் பொறுக்க முடியவில்லை.

அன்று முதல் இன்று வரை அந்தக் காக்காவும் குஞ்சுகளும்தான் அவனுக்கு நண்பர்கள். விடிந்தாலும் அடைந்தாலும் அதே பேச்சுத்தான். அந்த காக்காவைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அவன் கேட்கும் ஒரே கேள்வி, “பாவம்லா அந்த குஞ்சுக, அப்பா இல்லாம எவ்ளோ கஷ்டம்? ” என்பதாகத் தான் இருந்தது.

ஆறு வருடங்களுக்கு முன்பு, இதே தை மாதத்தில்தான் தங்களின் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத நாளாக மாற்றிவிட்டுச் சென்றிருந்தார் அப்பா. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகளை காலை பள்ளி செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு டாட்டா காண்பித்தவாறே நெஞ்சில் கை வைத்து தரையில் அமர்ந்தவர்தான், இன்று வீட்டுச் சுவரில் மாலையுடன் தொங்கிக் கொண்டிருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்து நின்று கொண்டிருந்த நாட்கள் அவை.

அன்று தனக்கு அத்தனை விவரம் தெரியவில்லை என்றபோதிலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்பதை நன்றாக உணர முடிந்திருந்தது அவளால். வீட்டில் கூட்டம் கூட, ஒரு பெண் தன் வாழ் நாளில் எதை அனுபவிக்கக் கூடாது என்றெண்ணி நித்தமும் வேண்டிக் கொள்வாளோ அதை அம்மா அன்று அனுபவித்துக் கொண்டிருந்தாள். தன் கண் முன்னே நடந்தவைகளைக் கண்ட போது அவளுக்குள் ஒரு பயம் தானாகவே தொற்றிக் கொண்டது. அம்மாவின் அழுகை சத்தத்தை அந்தப் பறவைகள்கூட பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பதாக எண்ணினாள்.

ஆதரவற்று நின்று கொண்டிருந்தவர்களை அரவணைத்துக் கொண்டது தாத்தாவும் மாமாவும்தான். உள்ளூரில் யாரும் இல்லை என்ற போதிலும் தங்களை எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள் என்றெண்ணினாள். கணவனைப் பிரிந்த தன் அம்மா படும் துயரங்களை தினமும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பா இல்லாத பிள்ளைகளாகக் கூட தங்களால் இருந்து விட முடியும், ஆனால் கணவனை இழந்த பெண்ணாகத் தன் அம்மாவை அவளால் பார்க்க முடியவில்லை.

“அன்னைக்கே சொன்னேன் இந்த எடுபட்ட பயட்ட இதெல்லாம் நம்மக்கு ஒத்து வராதுன்னு, கேட்டானா?”, “சோசியக்காரன் சொன்னாம்மா இது வெளங்காதுன்னு”, “இவா பெரிய மைசூர் மஹாராணி இவளத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நெலயா நின்னுல்லா கெட்டுனான், இன்னைக்குப் போயி சேந்துட்டானே”, “போன சென்மத்துல என்ன வரம் வாங்கீட்டு வந்துச்சோ மூதேயி, நம்ம வீட்லல்லா வந்து கெடக்கு” என்று நித்தமும் வசை. தனி ஒரு பெண்ணாக இரு பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கரை சேர்ப்பதென்பது அத்தனை எளிதான செயல் இல்லை. அப்பா இருந்தவரை கோவில் வாசலில் பூக்கடை. தற்போது அதற்கும் வழி இல்லை. வீட்டிலேயே தீப்பெட்டி ஒட்டும் வேலை. அதில் வரும் வருமானத்தில்தான் இருவரையும் படிக்க வைத்துக் கொண்டிருந்தாள் அம்மா. அவ்வப்போது ஏற்படும் பணப் பற்றாக் குறையை தாத்தாவும், மாமாவும் சரி செய்ய, அப்பா இருந்திருந்தால் எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் வளர்த்தாள். தான் சம்பாதிக்கத் தொடங்கிய பின்னும் அம்மா தீப்பெட்டி ஒட்டுவதை நிறுத்தவில்லை.

தான் சம்பாதித்து அம்மாவுக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடிகிறதை எண்ணி அவளுக்கு மிகுந்த சந்தோசம். அம்மாவுக்கும்தான். தம்பிக்கான படிப்பு செலவை தானே ஏற்றுக் கொண்டாள். அதற்கான அனைத்து வழிகளையும் செய்து வைத்திருந்தாள். இதை எல்லாம் பார்க்கையில் அம்மாவுக்கு சந்தோசம்தான். ஆனால் சில நாட்களாக அவள் ஏதோ கவலையில் இருப்பதைப் போன்று உணர்ந்தாள். கேட்டால் “உனக்குத் தான் காலகாலத்துல ஒரு நல்லது பண்ணிப் பாக்கணும்” என்றாள் அம்மா. தம்பி படிப்பு முடியும் வரை வேண்டாமென்று சொல்லியும் அவள் கேட்பதாகத் தெரியவில்லை. மறுவாரமே பெண் பார்க்க வந்திருந்தார்கள். மாப்பிள்ளை சொந்தமாக கடை வைத்திருக்கிறார். அவள் மாமா வழியில் தூரத்து சொந்தம். பார்த்துவிட்டுச் சென்றவர்கள் நல்ல செய்தி சொல்ல ஒரு மாதத்தில் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது தை பதினொன்று என. தாத்தாவும் மாமாவும் முன்னின்று நடத்தினார்கள்.

இன்னும் சற்று நேரத்தில் திருமணம். அவள் அம்மா சொன்னது போல் சரியாக ஏழு மணிக்குப் பெண் அழைக்க வந்திருந்தார்கள். குளித்துக் கிளம்பி வெளியில் வர மணி எட்டு. காகம் கத்தும் சத்தம் கேட்க, சென்று பார்த்தாள். வீட்டுச் சுவரில் அதே காகம். தம்பியிடம் சாப்பாடு வைக்கச் சொல்லிவிட்டு வண்டியில் ஏற, நல்ல நேரம் முடிவதற்குள் செல்ல வேண்டும் என்பதால் வண்டி உடனே மாப்பிள்ளையின் சொந்த ஊரான அம்பாசமுத்திரத்துக்குப் புறப்பட்டது.

வருபவர்களை வரவேற்றுக் கொண்டு மகளுக்கு உதவியாக சேலையை சரி செய்வதும், வியர்வையைத் துடைத்துவிடுவதுமாக அருகிலேயே நின்று கொண்டிருந்தாள் அம்மா. முகூர்த்த நேரம் வரவும், “பொண்ண அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயர் சொல்ல இவள் மணமேடை சென்று அமர்ந்தாள். பூசைகள் பல செய்யச் சொல்லிக் கொண்டிருந்தார் ஐயர். பின்னர் சற்று நேரத்தில் “பொண்ணோட அம்மாவையும் தோப்பனாரையும் கூப்பிடுங்கோ” என்று சொல்ல சித்தியும் சித்தப்பாவும் அவள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்களைப் பார்த்தவுடன் தன்னை அறியாமல் அவள் கண்கள் அம்மாவைத் தேடியது. கூட்டத்தின் ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள். அருகில் தம்பி.

One comment

  1. என்ன வெங்கடேஷ்,
    கதையை மொட்டையாக முடித்த்துபோல் செய்துவிட்டீர்களே? வாசகர்களாக
    முடிவுசெய்யட்டும் என்று விட்டுவிட்டீர்களா?அருமையான நடையில்
    சென்று கொண்டிருந்த்தை இடையில் முடித்த்துவிட்டீர்களே?என்ன சொல்லவருகிறீர்கள்?காக்கைக் குஞ்சுகள் போல் ஒருநாள் தாயைவிட்டு குழந்தைகள் செல்லவேண்டியுள்ளது என்றா?
    நீங்கள் சாத்தூர் அல்லது கோயில்பட்டி அருகே என்று நினைக்கிறேன்.கதை
    மனதைமிகவும் பாதிக்கிறது.நம் பெண்களின் தியாகத்திற்கு ஈடே கிடையாது.
    முன்பின் அறியாதவர்களோடு செல்வது என்பது எவ்வளவு பெரிய துயர்?
    அப்படியே விழுங்கிவிடுகிறார்களே?
    நல்ல கதை.வாழ்த்துக்கள்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.