சாகர மேகலை – பானுமதி. ந

பானுமதி. ந

மாலினி சிரித்துக் கொண்டாள். நீல வண்ணத்தில் அவள் அணிந்திருந்த ஒளியாடையில் ஆங்காங்கே நீல இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. நீலோத்பலம், செவ்விய அவளது வலது மேற்கரத்தில் பாதி இதழ் விரித்து தாமரையில் மலர்ந்த அல்லி என இருந்தது. மயிலின் நீலப் பீலி மேற்புர இடக்கையில். நீல வைரங்கள் மின்னும் கங்கணம் அணிந்த கீழ் வலக்கரம் மடியில் ஆடையின் மடிப்பில் மேல் கிடந்தது. காகச் சிறகுகளால் செய்யப்பட்ட உருட்டு மாலை கீழ் இடக்கரத்தில் இருந்தது. காலம் அணுகா யௌவனத் தோற்றம். தன் மாளிகையில் அந்த இளைஞன் இருப்பதை விஷ்வகோசத்திடம் அவள் தெரிவிக்கவில்லை. ஏன் என அவளுக்கே விளங்கவில்லை.

அவன் இன்னமும் மயக்கத்தில்தான் இருக்கிறானா என்றும் அவளுக்கு ஐயம் இருந்தது.

காசினி வந்து வணங்கினாள். அவர்களின் மொழியில்,’அவன் முனகுகிறான்’, என்றாள்.

இயல்பாக தன் இரு கரங்களை மறைத்துக்கொண்டு, அவனைத் தன் முன் நிறுத்தும்படி கட்டளையிட்டாள்.

அவனைப் பார்க்கையில் எழும் அந்த உணர்விற்கு என்ன பெயர்? அவனுக்கு ஒரு ஒளியிருக்கை அமைத்து அதில் அவனைக் கட்ட வேண்டியிருந்தது.

அவன் அவளைப் பார்ப்பதும், தவிர்ப்பதுமாக இருந்தான். இவர்களின் ஒளியாடையில் அவன் இவர்களில் ஒருவனாகத்தான் தெரிந்தான். ஆனால், இத்தனை இக்கட்டிலும் அவன் கண்கள் ஒளியுடன் இருப்பதையும், அலைபாய்ந்து கொண்டிருப்பதையும் அவள் கவனித்தாள்.

“யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” அவன் அதிர்வதும், மகிழ்வதும் கட்டப்பட்டிருந்த அந்த நிலையிலும் தெரிந்தது.

“தமிழ் தெரியுமா, உங்களுக்கு? நான் விவேகானந்தன்”, என்றான் இவன் மிக மெல்லிய குரலில்.

மாலினி புன்னகைத்தாள். ”எப்படி வந்தாய்? ஏன் வந்தாய்? அது என்ன ஊர்தி? உன்னை மட்டும்தான் பார்த்தேன். மானுடர்கள் இறக்கும் பிரிவினைச் சேர்ந்தவர்கள். உண்மையைச் சொல், இங்கே உனக்கென்ன வேலை?”

“நான் ஆய்வின் பொருட்டு வந்தவன். நாங்கள் எங்கள் அனுமானத்தின்படி ‘சூன்யவாத நிலையில்’ ஏதேனும் கோள் இருக்குமா எனத் தேடி வான மண்டலத்தைக் கடந்து அந்த ஊர்தியின் மீது ஏறி நால்வர் என  வந்தோம். மூவர் எஞ்சவில்லை. எங்கள் ஊர்தியும் பழுதுபட்டு உங்கள் கோளின் அப்பகுதியில் விழுந்தது.”

“அது உன் உலகிற்கு உதவாது”

“இல்லை. காலத்தை, வெளியை முற்றாக அறிய வேண்டும். எங்கள் வாழ்வின் எல்லைகள் விரிந்தாக வேண்டும். அறிவும் ஆற்றலும் அனைவருக்கும் பொதுவானது. காலத்தை, வெளியை ஒருமித்த உங்கள் கணிதம் தேடி வந்தோம். நான் ஒருவன் மட்டுமே இருக்கிறேன்.”

“எதை வைத்து நாங்கள் காலத்தை, வெளியை ஒருமித்தவர்கள் என்கிறாய்?”

‘நீங்கள்தானா அது என்பது எனக்கு அறுதியாகத் தெரியாது. ஆனால், நீல வண்ண உங்கள் நீள்சுழல் பாதையில் ”கால சக்ர பேதத்தை” நான் யூகித்துக்கொண்டேன்”

இப்பொழுது காசினி சிரித்தாள். ”உங்கள் ‘காசினி ஆர்பிடர்’ சனி கோளைச் சுற்றி வருகிறது என  அறிவோம். அதனாலெல்லாம் நீங்கள் காலசக்ர பேதத்தை அறிய முடியாது.”

“நன்றி. இது நீள்வட்டப் பாதையின் நீல்வட்ட வெளியென சொன்னதற்கு,” என்றான் விவேகானந்தன்.

“உன்னால் அதை அறிந்து கொள்ள முடியாது. அப்படியே தெரிந்து கொண்டாலும் உன் உலகிற்கு நீ திரும்பினால் அல்லவா அதைப் பற்றி பேச?”என்று விஷ்வாவின் குரல் கேட்டது. மாலினி திடுக்கிட்டாள். அவளையும், காசினியையும் அறிவொளி நம்பி அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.

“என் உலகிற்கு நான் திரும்பிச் செல்லாவிடில் மற்றொருவன் வருவான், மேலும் ஒருவன்… மேலும் ஒருவன். அவ்வளவு  எளிதாக  விட்டுவிட மாட்டோம். நம் உரையாடல் இந்த நேரம் இரகசியமான ஓரிடத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறது. எங்களின் வேத ஜோதிடம் ஒட்டி முத்துஸ்வாமி தீஷிதர் எழுதிய ’திவாகரதனுஜம் சனைச்சரம்’ என்ற யதுகுல காம்போதி பாடலில்’ கால சக்ர பேதம்’ செய்வதில் சனி கோளிற்கு இருக்கும் மகத்துவம் பற்றிச் சொல்லியிருக்கிறார். எங்கள் காசினி சுற்ற, ஹூயுஜன்ஸ் அனுப்பும் புகைப்படங்கள் எங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்” என்றான் விவேகானந்தன்.

“அப்படியா? எப்படியும் நீ மீளப்போவதில்லை. அறிவொளி நம்பியும், மாலினியும் வெவ்வேறு கோள்களிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு  பின்னர் எங்கள் குடிமக்கள் ஆகிவிட்டனர். நீ தானாகவே வந்திருக்கிறாய். உன்னையும் எங்கள் குடிமகன் எனச் செய்யப்போகிறேன்” என்ற விஷ்வா,‘நம்பி, நம் அனைத்து உயிரிகளும் இனி இயங்கலாம், தடையில்லை. நாழி ஒன்றில் இவன் ஏழாம் உயிரினமாக மாற்றப்படுவான். ஏற்பாடுகள் செய்யுங்கள்”

‘விஷ்வா, இப்பொழுது நாழி பதினெட்டுதான் ஆகிறது’

“ஆறு நாழி போதும்”, என்றான் விஷ்வா. அங்கிருந்து செல்கையில் அவன் கண்கள் மாலினியையும், நம்பியையும் விரைவாக சந்தித்து மீண்டன.

“உன்னையும், காசினியையும் விஷ்வா விட்டு வைக்க மாட்டான். ஏன் இப்படிச் செய்தீர்கள்? இன்று காலை முதல் எல்லாமே இங்கு சரியாக இயங்கவில்லை. ஒளி இருக்கையோடு இந்தப் பையனை விஷ்வாவின் இடத்திற்கு அனுப்பிவிடு. என்ன யோசிக்கிறாய்?”என்றான் நம்பி

“ஒன்றும் இல்லை, நம்பி. இன்னம் ஆறு நாழி இருக்கிறதே. எப்படியும் நம்முடன்தானே இவன் இனி இருக்கப் போகிறான். நானும், காசினியும் இவனைப் பார்த்தபோது இவன் உணர்வோடில்லை. சரி செய்தபிறகு விஷ்வாவிடம் சொல்லலாம் என இருந்துவிட்டோம். நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“இன்று நடந்ததை நீ அறியமாட்டாய்.”

“முழுதும் பார்த்தேன், நம்பி, நீ போ, விஷ்வா தேடப் போகிறான்”

நடந்த அனைத்துமே அவள் அறிவாள். ஒளியலைகளால் ஆன இருக்கையில் விஷ்வகோசம் அமர்ந்திருந்தான். அன்று அவர்களுக்குள் எண்ண அலைகளை இயக்கும் நாள் இல்லை. அனைத்தும் ஒத்திசைக்கப்பட்ட நியதியில் தான் நடந்து கொண்டிருக்கும். எண்ணற்ற நுண்ணுயிரிகளால் ஆன ஒளி நெசவு இது. இங்கே ஏழாம் எண்களிலிருந்து பதினைந்தாம் எண்கள் வரை பகுத்துப் பிரிக்கப்பட்ட உயிரிகள் அனைத்தையும், அந்த நுண்ணுயிரிகளே வழிநடத்தும். அவை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன.

ஏழாம் உயிரினம் தன் வேலையைச் செய்யும் இடமே அந்தக் கடல் பகுதியில்தான். ஒளிக் கோளின் கதிரனைத்தையும் அதுவே வாங்கிக்கொள்ளும். இந்த மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் இயங்கும் அது, தன் இனத்தில் சரியாகச் செயல்படாதிருக்கும் பகுதியை புதுப்பித்துக் கொண்டுவிடும். தன் எண்ணிக்கைகள் குறையாது பார்த்துக் கொள்ளும்.

எட்டாம் உயிரினம் தன்னிடம் முன் உயிரினம் கொடுத்துக் கொண்டேயிருக்கும் கதிர்களை அணுக்களாக மாற்றி ஒன்பதாம் உயிரியிடம் கொடுக்கும். இந்த செயல்பாடுகளில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை

ஒன்பதாவது, அணுக்களைப் பகுக்கும். சில கருந்துளைகளை அடையாளம் கண்டு அதை பத்தாவதற்கு அனுப்பிவிட்டு, எதிர்மின்னிகளைச்  சேமிக்கும்.

கருந்துளைகள் வரப் பெற்றவுடன் அவற்றை எடையற்ற சிறு துகள்களாக மாற்றி சுற்றியுள்ள கடலின் அமைதிக்குள் பத்தாவது செலுத்திவிடும். இந்தத் துகள்கள் கோளின் மைய விசை அழுத்தத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்.

பதினொன்றாவது உயிரினம் இவை அனைத்தையும் கண்காணிக்கும்.

பன்னிரண்டாவது செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக மாற்றி அத்தனை உயிரினமும் அறிந்து கொள்ளச் செய்துவிடும்.

பதின்மூன்றாம் உயிரினம் கடலின் காவல் பொறுப்பு. முக்கியமாக கடலில் செலுத்தப்பட்ட கருந்துளைகள் மறு ஆணை வரும் வரை பாதுகாப்பாக இருக்கின்றனவா என கண்காணிக்கும். மேகங்கள் போன்ற சில சஞ்சரிப்புகளால் ஒளிக் கோளிலிருந்து ஒளி தடைபடும் நிகழ்வுகளில் சேமிக்கப்பட்ட எதிர்மின்னியிலிருந்து நுண் ஒளியலைகளை இது அமைக்கும்.

பதினான்காம் உயிரினம் நேர்மின்மம் தங்கும் உயிரி. அதன் செயல்பாடுகள் ஒளியலைகளால் புனையப்பட்ட இவ்விடத்தில் வெளியையும் காலத்தையும் ஒருங்கே சட்டகமென இழுத்து, செயல் புதைந்த பொருளிலிருந்து விசையை வெளிக் கொணர்ந்து அனைத்து உயிரியினையும் இந்தக் கோளில் இயங்கச் செய்யும்.

பதினைந்தாம் உயிரினம் விஷ்வகோசம். அவன்தான் ஒன்றிலிருந்து  ஒவ்வொன்றும் இருநூறு ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஐந்து கோள்களின் நிலவுகளுக்குச் சென்று வருபவன். நொதுமின்னியையும் லெப்டான்களையும் அறிந்தவனும் அவனே. ஒளியலைகள் பயணிக்கும் வேகம் அசாதரணமானது.ஆனாலும், அந்த ஐந்து கிரகங்களும் கொண்டிருக்கும் கோள் விசையில் மாறுபாடு உண்டு. அதையொட்டியே அதனதன் நிலவுகளின் மாறுபட்ட சுழற்சியும் அமையும். அதையும் அவன் கணக்கிட வேண்டும். ஒவ்வொரு கோளிலும், அதனைச் சுற்றியுள்ள நிலவுகளிலும் அதனதன் தூசி அடுக்குகள் கணத்திற்கு கணம் மாறும்; அதைக் கணித வடிவங்களாக பல்காலம் பயின்று அந்த தூசைக் கடந்து உள் செல்லும் வடிவமைத்தவன் அவன். தூசியைக் கடப்பதற்கு மட்டும்தான் அது.

நிலவுகளின் நீள்வட்டப் பாதையில் உள்ளே நுழைகையில் அதன் ஈர்ப்பு விசைக்கேற்ப ஒளி அலை ஊர்தியை மாற்றி அமைக்க வேண்டும்.

இந்தக் கோளில் ஒரு பக்கத்தில் கருமை என்பது கிடையாது. ஒளிக்கோள் வழங்கும் வெளிச்சம் ஒரே சுழற்சிக்கு ஏற்ப  நடைபெறுவதால் இரவு நிகழும் பகுதி இவர்கள் அறியப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

ஒளி அலை இருக்கையை விஷ்வகோசம் நகராமல் இருக்கும் பொருட்டு அமைத்தான். பதினான்காவது உயிரியை எண்ண அலைகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தான். ஏழு முதல் அனைத்துமே எண்ணக் கதம்ப உரையாடலில் இணைந்தது கேட்டு வியந்தான்.

“ஒளிக் கோளின் கதிர்களை வாங்கிக் கொண்டிருக்கையில் மிக நூதனமான ஒரு நிகழ்வினை என் திரையில் கண்டேன். இருளென நாம் கொண்டிருக்கும் பகுதியில் நாம் எப்போழுதோ பார்த்த புதக்கோளின் ஒளிர் பச்சையில் ஒரு ஊர்தி வரும் அதிர்வுகளை என் திரை காட்டிற்று. இதுவரை அறியாத ஒன்று. நான் பதினான்கிடம் தெரிவித்தேன். ஒளிக் கதிர்களை  வாங்குவதை அவர் அறிவுரையின் பேரில் நிறுத்தி வைத்துள்ளேன்”, என்றது ஏழாம் உயிரி.

“கதிர்கள் இல்லாததால் அணு மாற்றம் செய்து அதை ஒன்பதாம் உயிரிக்கு அனுப்ப இயலவில்லை”, என்றது எட்டாம் உயிரி.

“அணு பகுத்தல் நடைபெறவில்லை” இது ஒன்பதாம் உயிரி.

“கருந்துளைகள் வந்தால் அல்லவோ கடலுக்குள் செலுத்த?” என்றது பத்து.

“நிகழாத செயல்களை எப்படிக் கண்காணிப்பது?” பதினொன்றின் கேள்வி.

“செயல் அறிக்கைகளை நுண் ஒளியலைகளாக்கும் நான் திகைத்துப் போயிருக்கிறேன்”, பன்னிரண்டு கவலைப்பட்டது.

“கருந்துளைகள் பாதுகாப்பாக இருக்கின்றன. சேமிக்கப்பட்ட எதிர்மின்னிகளிலிருந்து வெளிப்படும் ஒளி அலைகளின் உற்பத்தி குறையவில்லை”. நல்ல தகவல் சொல்லிற்று  பதின்மூன்று.

“பதினான்காம் உயிரியே, ஏழாம் உயிரி முதல் அனைத்தும் உணர்த்தும் இவ்விஷயம் நாமே அறியாத ஒன்று. அங்கே எது வரக்கூடும்? நாம் எவ்வாறு செல்வது?” என்றான் விஷ்வ கோசம்.

‘இதுவரை நிகழாத ஒன்று. நாம் யோசித்துத்தான் செயல்படவேண்டும். இந்தப் பால்வெளியில் யாரும் நம்மை நாடி வந்ததில்லை; நாமாகக் கொண்டு வந்தவர்களைத் தவிர. நம்முடைய விழிப்புணர்வை பரிசோதிக்க கடலை மேகலையெனக் கொண்ட அன்னையின் ஆடலா, அல்லது வேறு ஏதாவதா, புரியவில்லையே’,என்றார் அறிவொளி நம்பி.

இந்தக் காட்சியை விவேகானந்தனுக்கு மாலினி போட்டுக் காட்டினாள். ”ஏன் எனத் தெரியவில்லை, உன்னை எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. உன்னுடன் நான் உன் உலகிற்கு வர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால், விஷ்வா அதை அனுமதிக்கமாட்டான். அவனுக்கு நிகரான அவன் விரும்பும் ஒரே சக உயிரி நான். என்னை இழக்க நேர்ந்தால் அவன் உன்னை உருவற்று அழித்துவிடுவான். இப்பொழுது அவன் உன்னை விட்டுச் சென்றிருப்பதே பெரிய விஷயம். எப்படியும் உன்னுடன் நான் நட்பு கொள்ள அவன் விடமாட்டான். உன்னை ஏழாம் உயிரியாகச் செய்தாலும் நான் உன்னிடம் நட்புடன் இருப்பேன் என்பதை அவன் அறிவான். உன்னை அழித்தாலோ எப்பொழுதும் அவனுக்கு நான் உடன்படமாட்டேன் என்பதும் அவனுக்குத் தெரியும். உன்னை நானே தப்புவித்தால் பழி அவன் மேல் விழாது.  அது அவனது திட்டம். போகும் பாதையில் உனக்கு மரணம் கூட ஏற்படலாம். ஆனால், எனக்காக உன்னை விட்டுவிட்டு தனக்காக என்னை மன்னித்து விடுவான்”.

இதை உள்வாங்கவே விவேகானந்தனுக்கு சில வினாடிகள் பிடித்தன.

“உனக்கு சில இரகசியங்கள் சொல்கிறேன். இந்தக் குளிகை உன் மூளையின் மேல் பரப்பில் வைத்துத் தைக்கப்படும். இது பயோ- கம்பெடபில். சரியாக நான்கு மாதங்களில் உன் குருதியிலேயே இது உயிர் பெற்று நீ விரும்பும் வேகத்தில் கால நேரங்களை இயக்கும். அதனால் நீங்கள் உலகின் அதி வேக சுழற்சியில் பல நூற்றாண்டு கடந்து செல்வீர்கள். அதே நேரம் மற்ற கண்டங்கள் மிகப் பின்தங்கிய நிலையில் இருக்கும். இருவித செயல்பாடு உண்டு இதில். என் ‘பாட்கள்’ உன் ஊர்தியை சரி செய்து நுண் கதிர் வேகத்தில் உன் உலகை நோக்கிச் செலுத்திவிடும்.”

“உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்? எனக்காக எத்தனை தியாகம்? உங்களுக்கு என் பொருட்டு ஆபத்து எனத் தோன்றுகிறதே?” “

“ஆம், ஆனால் விஷ்வா என்னை இழக்க மாட்டான். ஆனால், தண்டிக்கக் கூடும். அதிலிருந்தும் என்னை அவனே மீட்பான்.”

“என் பொருட்டு நீங்கள் ஆபத்தைச் சந்திக்க வேண்டாம். அவர் என்னை இந்தக் கோளின் வாசியாகத்தானே மாற்றுகிறார்.”

அவள் சிரித்தாள். “மனிதனாக இருந்தும் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருப்பவர்களை நீ அறியவில்லையே”

“இருந்தாலும்..”

“எனக்காக ஏன்  என்றுதானே கேட்க வருகிறாய்?”

“……”

“நான் ஜூவாலமுகீ, செவ்வாய்க் கோளில் இருந்தபோது. அங்கே செந்தணல், இங்கே நீலாக்னி. உங்கள் ஜோதிட நூல் செவ்வாயை பூமியின் குமாரன் என்று சொல்கிறது. நீ பூமைந்தன். பூமி உனக்குத் தாய் என்றால் நான் அவள் பெயர்த்தி”

அவன் அசந்து போனான். சனியும், செவ்வாயும் பகையாளிகள் என அவன் அப்பா சொன்னது நிழலாடியது. ’ஜூவால மாலினி’ என நினைத்துக் கொண்டான்.

“கிளம்பும் சமயம். விரைவாக எழும்பு. என்றோ ஒரு நிகழ்வில் நாம் மீண்டும் சந்திக்கவும் கூடும்”

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.