ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஆகி
தத்தம் பெயர்களை ஒப்புக்கொண்டு எப்படி அவர்கள் இத்தனை காலம் மெத்தனமாக இருந்தார்களோ, அதே மெத்தனத்துடன் அவர்களில் பெரும்பாலானோர் பெயரற்றிருப்பதையும் ஏற்றுக்கொண்டனர். திமிங்கலங்கள், ஓங்கில்கள், கடல்நாய்கள் மற்றும் நீர்நாய்கள் அவர்களுக்கே உரிய நேர்த்தியுடனும் ஆர்வத்துடனும் ஒப்புதலளித்து தமது தனிமத்தினுள் சறுக்கிச் செல்வதுபோல் பெயரற்ற நிலைக்குள் செல்வதை ஏற்றுக்கொண்டனர். எனினும் கவரிமாக்களின் ஒரு பிரிவினர் ஆட்சேபித்தனர். “கவரிமா” என்பது சரியான ஒலிப்புமுறை எனவும் தங்கள் இருப்பை அறிந்திருந்த எவரும் தங்களை அவ்வாறே அழைப்பதாகவும் அவர்கள் கூறினர். நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வெவ்வேறு பெயர்களால் பாபேலின் காலந்தொட்டு அழைக்கப்பட்ட, நீக்கமற நிறைந்துள்ள உயிரினங்களான எலிகளையும் தெள்ளுகளையும் போலல்லாது கவரிமாக்கள் மெய்யாகவே தங்களுக்கு ஒரு பெயர் உண்டென்று கூறிக்கொள்ளலாம் என்றும் அவர்கள் கூறினர். கோடை முழுவதும் இந்த விடயத்தை விவாதித்தனர். மற்றவர்களுக்கு இந்த பெயர் பயனுள்ளதாயிருக்கலாம் ஆயினும் கவரிமாக்களின் பார்வைக் கோணத்திலிருந்து காண்கையில் இது மிகவும் தேவையற்றதாகையால் இதை அவர்கள் ஒருபோதும் உச்சரித்ததேயில்லை ஆதலால் இதை கைவிட்டு விடலாமென்று மன்றத்தின் முதிய பெண்கள் இறுதியில் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தங்களின் தர்க்கத்தை இந்த கோணத்திலிருந்து தங்கள் காளைகளிடம் முன்வைத்தபோது முழு கருத்தொருமைப்பாடு கடுமையாக தொடங்கிய முன்பருவ பனிப்புயல்களால் மட்டுமே காலதாமதமாயிற்று. வெதுவெதுப்பு தொடங்கியவுடன், அவர்களின் உடன்பாடு எட்டப்பட்டு “கவரிமா” என்ற பெயரிடல் பெயரளித்தவரிடம் திருப்பப் பட்டது.
குதிரைகளை அவர்களின் சொற்களஞ்சியத்திலிருந்தே டீன் ஸ்விஃப்ட் பெயரிட முயற்சித்து அதிலவர் தோல்வியுற்ற பிறகு, இவ்வீட்டு விலங்குகளில் வெகு சிலருக்கே எவர் தம்மை எங்ஙனம் அழைக்கின்றனர் என்பதைப் பற்றி அக்கறை இருந்தது. மாடுகள், செம்மறியாடுகள், பன்றிகள், கழுதைகள், கோவேறு கழுதைகள் மற்றும் வெள்ளாடுகள், இவர்களோடிணைந்து கோழிகள், வாத்துக்கள் மற்றும் வான்கோழிகள் என எல்லோரும் தமது உரிமையாளர் என்று அவர்கள் எவரெவரை கருதினார்களோ அவர்களிடம் தங்கள் பெயர்களை ஆர்வத்துடன் திருப்பியளிக்க உடன்பட்டனர்.
சிற்சில பிரச்சினைகள் செல்லப்பிராணிகள் விடயத்தில் தோன்றியது. எதிர்பார்த்தவண்ணம், எல்லா பூனைகளும் தமக்கு சுயமாக சூட்டப்பட்ட, உச்சரிக்கப்படாத, வருணிக்கவியலாத தனிப்பட்ட பெயர்கள் தவிர வேறெந்தப் பெயரும் இருந்ததை உறுதியுடன் மறுத்தனர். எலியட் என்ற கவி கூறியதுபோல் அவர்கள் நீண்ட நேரமெடுத்து சிந்தித்த பெயர்களிவை—ஆயினும் எந்தவொரு சிந்தனையாளரும் தாங்கள் சிந்திப்பது தமது பெயர்களைத்தான் என்று ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை, மேலும் அவர்களால் உற்று நோக்கப்பட்ட பொருள் உண்மையில் அந்த முழுநிறைவான, அல்லது பிளேட்டோனிய, சுண்டெலியாக இருக்கலாமென்று பார்வையாளர்களில் சிலர் சந்தேகித்துள்ளனர். எது எவ்வாறாயினும் அது இப்போது முக்கியத்துவமற்றது. நாய்களுடன், மேலும் சில கிளிகள், காதற்பறவைகள், அண்டங்காக்கைகள் மற்றும் மைனாக்களுடனும், சிரமம் எழுந்தது. இந்த வாய்மொழி திறன்மிக்க நபர்கள் தமது பெயர்கள் தமக்கு முக்கியமானவை என்று வலியுறுத்தினர், மேலும் அவற்றை விட்டகல முற்றிலும் மறுத்துவிட்டனர். ஆனாலும் இது உண்மையில் தனிப்பட்ட தெரிவு குறித்த பிரச்சினையே, எவரேனும் ரோவர், ஃப்ரூஃப்ரூ, காகா கிகீ அல்லது குகூஎன்றுகூட தனிப்பட்ட உணர்வினடிப்படையில் அழைக்கப்பட விரும்பினால் அவர்கள் அவ்வாறு தாராளமாக அழைக்கப்படலாம் என்று புரிந்துகொண்ட தருணத்தில், ”பூடுல்”, ”கிளி”, “நாய்”, ”பறவை” போன்ற இனம் சார்ந்த சிற்றெழுத்து (அல்லது, ஜெர்மானிய உயிரினங்கள் சம்பந்தமாக, பேரெழுத்து) பெயரிடல்களையும், இருநூறாண்டுகளாக அவர்களை வாலில் கட்டப்பட்ட தகரடப்பாக்களைப்போல் பின் தொடர்ந்த லின்னேயசின் அனைத்து அடைகளையும் விட்டகல அவர்களில் ஒருவரேனும் சிறிதும் ஆட்சேபிக்கவில்லை.
பூச்சிகள் அகன்ற மேகங்களில் நிலையற்ற அசைகளின் திரள்களில் சலசலத்தும் கொட்டியும் ரீங்கரித்தும் படபடத்தும் ஊர்ந்தும் துளையிட்டும் தங்கள் பெயர்களை விட்டகன்றனர்.
கடல் மீன்களை பொருத்தமட்டில், அவர்களின் பெயர்கள் அவர்களிடமிருந்து சமுத்திரங்களெங்கும் கணவாய் மீனின் மங்கலான கரிய மை போல அமைதியாக பரவிச் சென்று சுவடே தெரியாமல் நீரோட்டத்தில் விலகிச் சென்றன.
…………………………..
ஒருவரும் இப்போது பெயரை திரும்பப் பெறுவதற்கு மிஞ்சவில்லை, எனினும் அவர்களில் யாரேனும் நீந்துவதை, பறப்பதை, தவ்வுவதை, பாதையில் குறுக்கேயோ என் மேலேயோ தவழ்வதை, இரவில் என்னை பின்தொடர்வதை அல்லது பகலில் சற்று நேரம் என்னுடன் வருவதை நான் காண்கையில், எத்துணை நெருக்கமாக அவர்களை நான் உணர்ந்தேன். எனக்கும் அவர்களுக்கும் இடையில் அவர்களின் பெயர்கள் ஒரு பெரிய தடைபோல் நின்ற பொழுதில் எனக்கு தோன்றியதைக் காட்டிலும், இப்போது அவர்களை பற்றிய என் அச்சமும் என்னை பற்றிய அவர்களின் அச்சமும் ஒரே அச்சமாகும் அளவுக்கு மிக மிக நெருக்கமாக, மிகவும் அருகிலிருந்தனர். மேலும் நம்மில் பலர் உணர்ந்த கவர்ச்சி, அதாவது ஒருவரை இன்னொருவர் வெதுவெதுப்பாக வைத்திருப்பதற்கான, ஒருவரின் வாசனையை இன்னொருவர் முகர்வதற்கான, ஒருவர் இன்னொருவரின் குருதியை அல்லது சதையை சுவைப்பதற்கான, ஒருவரின் செதில்களை, தோலை, இறகுகளை அல்லது மென்மயிர்களை இன்னொருவர் தொட்டுணர்வதற்கான, உரசிக்கொள்வதற்கான அல்லது வருடுவதற்கான இச்சை—அந்தக் கவர்ச்சி இப்போது அச்சத்துடன் இரண்டறக் கலந்துவிட்டது, வேடரை இரையிலிருந்தும் உண்ணுபவரை உணவிலிருந்தும் பிரித்தறிய இயலவில்லை.
இதுவே நான் சற்றேறக்குறைய முன்நோக்கிய விளைவு. நான் எதிர்பார்த்ததைவிட இது சற்று ஆற்றல்மிக்கதாக இருந்தது, ஆனாலும் என்னால் இப்போது என் மனசாட்சிக்கு துரோகமிழைக்காமல் எனக்காக ஒரு விதிவிலக்கை ஏற்படுத்திக் கொள்ள இயலவில்லை. நான் தயக்கமின்றி பதட்டத்தை தள்ளி வைத்துவிட்டு, ஆதாமிடம் சென்று, ”நீரும் உம் தந்தையும் இதை எனக்கு இரவல் கொடுத்தீர்கள்; உண்மையில், எனக்கு அதை அளித்தீர்கள். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, ஆனால் இப்போதெல்லாம் அது சரிபட்டு வருவதாகத் தெரியவில்லை. ஆனாலும், உண்மையாகவே அது பயனுள்ளதாக இருந்தது, மிக்க நன்றி!” என்று கூறினேன்.
ஒரு பரிசை எரிச்சல் தொனிக்காமலோ நன்றியற்ற தன்மை வெளிப்படாமலோ திருப்பிக் கொடுப்பதென்பது கடினம், மேலும் என்னைப் பற்றி அந்த மாதிரியான ஒவ்வாதவொரு மனப்பதிவை ஏற்படுத்திவிட்டு நான் அவரை பிரிந்து செல்ல விரும்பவில்லை. நடந்ததென்னவோ, அவர் கவனமில்லாமல், “அதை அங்கே வைத்துவிடு, சரியா?” என்று மட்டும் கூறிவிட்டு, அவர் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை மீண்டும் செய்யத் தொடங்கிவிட்டார்.
நான் இந்த காரியத்தை ஏன் செயல்படுத்தினேன் என்பதற்கு உரையாடல் எங்களிடையே எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு காரணம், ஆனால் எப்படி இருந்தபோதிலும் நான் சற்று கைவிடப்பட்டதாகவே உணர்ந்தேன். எனது தீர்மானத்தை தக்க வைத்துக்கொள்ள நான் ஆயத்தமாகவே இருந்தேன். மேலும் ஒருவேளை இதை கவனித்தபின் அவர் வருத்தப்படலாம், உரையாட முன்வரலாம் என்று எண்ணியிருந்தேன். சில பொருட்களை இங்குமங்கும் நகர்த்தி வைப்பதும், எதையோ செய்வதுமாய் பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன், ஆனாலும் அவர் பிற எதையும் கவனிக்காமல் என்ன செய்து கொண்டிருந்தாரோ அதை தொடர்ந்து செய்தவண்ணமிருந்தார். இறுதியாக, “நன்று, அன்பே, விடைபெறுகிறேன். தோட்டத்தின் சாவி திரும்பக் கிடைத்தாலும் கிடைக்குமென்று நம்புகிறேன்,” என்று கூறினேன்.
பாகங்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தவர் திரும்பிப் பார்க்காமல், “சரி, அன்பே, நல்லது. இரவு சாப்பாடு எப்போது?” என்றார்.
”உறுதியாக எதையும் சொல்வதற்கில்லை,” என்றேன் நான். ”இப்போது நான் போகிறேன். அவை…” என்று சற்று தயங்கி நின்றுவிட்டு, பின் இறுதியாக, “அவர்களுடன், தெரியுமல்லவா,” என்று கூறிவிட்டு வெளியே சென்றேன். என் தரப்பை விளக்கிச் சொல்வதென்பது எவ்வளவு கடினமான ஒன்றாக இருந்திருக்குமென்பதை உண்மையில் அக்கணத்தில்தான் நான் உணர்ந்தேன். எல்லாவற்றையும் வழங்கப்பட்டதாக எடுத்துக்கொண்டு என்னால் முன்னைப்போல அரட்டையடித்துக் கொண்டிருக்க முடியவில்லை. குளிர்பருவ பிரகாசத்தை எதிர்நோக்கி நிற்கும் கரிய கிளைகளையுடைய நிச்சலனமான நெடிய நாட்டியக்காரர்களினூடாக, வீட்டிலிருந்து வெளிச்செல்லும் பாதையில் செல்கையில் நான் எடுத்து வைத்த காலடிகள் போல என் சொற்கள் இப்போது மெதுவானதாக, புதிதானதாக, தனியானதாக, தீர்மானமற்றதாக இருந்தாக வேண்டும்.
…………………………..
(1985ல் New Yorker இதழில் முதலில் பிரசுரமான She Unnames Them குறுங்கதையின் அனுமதிபெறப்படாத, இலாப நோக்கற்ற தமிழாக்கம்.
Grandmaster of Science Fiction பட்டம் வழங்கப்பெற்றுள்ள அர்சுய்லா லெ ஃக்வின் The Dispossessed, The Word for World is Forest, The Left Hand of Darkness, The Lathe of Heaven மற்றும் பிற புனைவுகளில்—மானுடவியல், மனவியல், சமூகவியல், சூழல்வாதம், பாலிமை, சமயம் மற்றும் தாவோயிச-அரசின்மைவாதம் சார்ந்த பரிசோதனைகளினூடாக—சாகசக் கதைகளின் ஆதிக்கத்தினுள் சிக்குண்டிருந்த ஊகப்புனைவு வகைமையை கட்டவிழ்த்து வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றவர். The Birthday of the World and Other Stories மற்றும் Four Ways to Forgiveness இவருடைய சில சிறுகதை தொகுப்புகள்)