நாகாஸ்திரம் – காலத்துகள்

காலத்துகள்

அழைத்த எண்ணை இப்போது தொடர்பு கொள்ள முடியாது என்று பதிவு செய்யப்பட்ட குரல் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “சாப்ட வாடா, மணி ஏழே முக்காலாச்சு,” கதவைத் தட்டியபடி அம்மா சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்டு அலைபேசியை படுக்கையின்மீது போட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவன், “ம்மா தாத்தா மொபைல் இன்னும் நம்ம கிட்டதான இருக்கு, சிம்லாம் ரிடர்ன் பண்ணிட்டோம்மா என்ன,” என்று கேட்க, “வீட்லதாண்டா இருக்கு, என் ரூம் பீரோலதான் வெச்சிருக்கு, எதுக்கு” என்று பதில் சொன்னாள் அம்மா.

“ஒண்ணுலமா, அத நா எடுத்துக்கறேன், சில போட்டோஸ் இருக்கு,” என்றபடி அம்மாவின் அறையினுள் சென்று பீரோவைத் திறந்தான். தாத்தாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஹாலுக்கு வந்தவனிடம், “இந்த சண்டே அபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்குடா” என்றாள் அம்மா.

“என்ன பிரச்சனை இப்போ”

“அதான் யாரோ ரெண்டு மூணு வாரமா ராத்திரி ராத்திரி காலிங் பெல்ல அடிச்சுட்டு போய்டுறாங்கல்ல அதப் பத்திதான், காத்தால பத்து மணிக்கு. எங்கயும் வெளில போலல”

“வீட்லதான் இருப்பேன், பசங்களாத்தான் இருக்கும், வேற யாரு பண்ணப் போறாங்க. க்ருஷ்ணா, ப்பப்பூ இதெல்லாம் பண்ணக்கூடியவங்கதான்,” என்றபடி சாப்பிட அமர்ந்தவன் முன் தட்டை வைத்தபடி, “சின்னப் பசங்க எப்படிடா அந்த நேரத்துல வீட்ட தொறந்துட்டு வருவாங்க, இது வெளியாள் யாரோதான் பண்றாங்க.” என்றாள் அம்மா.

சோற்றை தட்டில் போட்டு குழம்பை ஊற்றிப் பிசைந்து தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான். உருளைக் கிழங்கை தட்டில் வைத்துக் கொண்டே, “அவருக்கும் உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும், ஒங்கப்பாக்கும்தான். அந்த ஜீன் அப்படியே ஒனக்கு வந்திருக்கு.”

“…”

“ஏண்டா ஷேவ் பண்றதில்லையா” என்று கேட்டாள்.

“ரெண்டு மூணு நாளாச்சு, அவ்ளோதான்”

“நல்ல வாழ்ந்தா, வியாதில படுத்து எல்லாருக்கும் தொல்லை கொடுக்காம தூக்கத்திலேயே போய் சேந்துட்டா, கல்யாண சாவுதான்”

“….”

“ஒரு மாசத்துக்கு மேல ஆகப்போறது, நீ பொண்டாட்டி செத்தவன் மாதிரி ஷேவ் பண்ணாம இருக்க ஆரம்பிச்சிட்ட”

“படுத்தாதம்மா, ரெண்டு நாள் ஷேவ் பண்ணாதது பெரிய விஷயமா. ஆபிஸ்ல வேல அதிகம், அதுவும் இந்த டேக்ஸ் சேஞ்ஜுக்கப்பறம்” வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டே சொன்னவன் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்து அதை இயக்கினான்.

தொடுதிரையில் அவனுடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம், உற்சாகச் சிரிப்புடன் தாத்தா. இவன் சிறுவனாக இருக்கும்போது, தாத்தா வசித்து வந்த ஊருக்கு விடுமுறைகளில் செல்லும்போது, அதன் மிகப் புகழ்பெற்ற கோவிலுக்கு -”நினைத்தாலே மோட்சம்” என்ற சொலவடை அவ்வூரைப் பற்றியும், அதன் பிரதான தெய்வம் பற்றியும் உண்டு – அழைத்துச் செல்பவர், இவன் பிடிவாதம் காரணமாக கோவில் யானைக்கு அரைசீப்பு வாழைப்பழத்தை ஒரு நாள் வாங்கித் தர, அதன் பின் இவன் ஐந்தாவது ஆறாவது வரும், -யானைக்கு உணவளிப்பதை கூச்சமளிக்கும் ஒன்றாக உணரும்- வரைக்கும் அந்த வழக்கம் தொடர்ந்தது. கோவிலிலிருந்து திரும்பும்போது இனிப்புக் கடைக்கு அழைத்துச் செல்வார்.கடையின் முன்புறம் சதுரக் கண்ணாடிப் பெட்டிக்குள் குமித்து வைக்கப்பட்டிருக்கும், லட்டின் ஒற்றை வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் சிறிது பசுபிசுப்புடன் இருக்கும் இனிப்பு பூந்திகள். வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் பூந்திப் பொட்டலத்தை காலி செய்திருப்பான். இந்தக் கடற்கரை நகரத்திற்கு குடிவந்த ஆறேழு ஆண்டுகளில் தாத்தாவுடன் ஒவ்வொரு வார இறுதியிலும், குறைந்த பட்சம் மாதம் இருமுறையேனும் கடற்கரைக்குச் சென்று வருவது வழக்கம்.

தன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான், தாத்தாவின் அலைபேசியில் அவருக்குப் பிடித்தமான பக்திப் பாடலொன்றின் வரிகள் ஒலித்தன. அழைப்பு தானாக அறுபடும்வரைக் காதருகில் தன் அலைபேசியை வைத்திருந்து விட்டு, மூன்று வாரங்களாகப் படித்து முடிக்க முயன்று கொண்டிருக்கும் நாவலை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். அம்புலிமாமா, “அமர் சித்ர கதா” எல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்பே கதைக சொல்ல ஆரம்பித்தவர் தாத்தா. ஆறேழு வயது வரை இரவில் எழுந்து “விடு சக்ராயுதத்தை”, “பிரம்மாஸ்திரம் வருது” என்று கத்திக் கொண்டே அறைகளை சுற்றிக் கொண்டு வந்தவனுக்கு இனி கதையெல்லாம் சொல்ல வேண்டாம், அவன் எதுவும் படிக்கத் தேவையில்லை என்று வீட்டினர் தடுத்தும், “எல்லாம் தானா சரியாயிடும் கோந்தேக்கு, அதுக்காக கத கேக்காம படிக்காம இருக்கறதா,” என்று சொன்னார். இவன் வாசிப்பின் திசை மாறிய பின்னும் அவ்வப்போது படிக்கச் செய்யும் “விக்ரமாதித்தன் கதைகள்” போன்ற சில புத்தங்கள் பற்றி காலமாகும் வரை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். நாவலை வைத்துவிட்டு டிரெஸ்ஸிங் டேபிளின் அடியில் இருந்த பெரிய அட்டைப் பெட்டியை இழுத்து அதிலிருந்த டைரிகளில் இரண்டை எடுத்துக் கொண்டு படுத்தான்.

எண்பத்தெட்டில் பணி ஓய்வு பெற்ற ஓரிரு வருடங்கள் கழித்து டைரி குறிப்புக்களை எழுத ஆரம்பித்திருந்த தாத்தாவிடம் சிறு வயதில் அவர் எழுதுவதைப் பற்றி கேட்க எதுவும் சொல்லாமல் புன்சிரிப்புடன் அதை கடந்திருக்கிறார். வளர ஆரம்பித்தபின் அதைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. அவர் காலமான பின்பு, சேர்ந்திருந்த முப்பதிற்கும் மேற்பட்ட டைரிகளை பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிடலாம் என்று வீட்டில் பேச்சு எழுந்தபோது இவன் அவற்றை தன் அறைக்கு கொண்டுச் சென்றான். தினசரி நிகழ்வுகள் மட்டுமில்லாமல் நினைவுச் சிதறல்களாகவும் -நாலைந்து நாட்களுக்கான பக்கங்களுக்கு நீளும் – உள்ளக் குறிப்புக்கள். சில நேரம் தொடர்ச்சியாக பல வெற்றுத் தாள்கள். தொண்ணூற்றியிரண்டு மற்றும் தொண்ணூற்றியைந்தாம் வருடங்களில் மட்டும் இரு டைரிகள் தேவைப்படும் அளவிற்கு எழுதி இருக்கிறார்.பதினேழு பதினெட்டு வயதில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு அலைந்த நாட்களில் சுடுகாட்டில் இரவொன்றை கழித்ததைப் பற்றிய குறிப்பு தொண்ணூறாம் வருட மார்ச் பதினைந்தாம் தேதி அன்று. பின் ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் இறுதி வருடம் மெசபடேமியாவில் கழித்த சில மாதங்கள் பற்றி அந்த வருட மே எட்டாம் தேதியில். அகர்கர் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த அன்று அதை சிலாகித்து எழுதி இருக்கிறார்.ரஞ்சி அரை இறுதியில் சச்சினின் இரட்டைச் சதத்தை பற்றிய மகிழ்ச்சியும், அதனால் தமிழ் நாடு தோற்றதைப் பற்றிய வருத்தமும் கலந்த குறிப்பு இரண்டாயிராமாம் ஆண்டில். நூறு பேரகூட இல்லாத ஸ்டேடியத்தில் நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருப்பார். இதுவரை புரட்டியவற்றில் இவனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

முழிப்பு கொடுக்கும்போது, வழக்கம் போல் கூர்க்காவின் குரல் கேட்டது. ஒன்றரை மணியாகி இருக்கும். டைரியை அருகில் வைத்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னல் திரையை விலக்கினான். லத்தியைத் தட்டியபடி, இவன் அடுக்ககத்தைத் தாண்டிச் செல்லும் கூர்க்கா தெரு விளக்கின் கீழ் வந்தான், சிவந்த நிறம். படுத்திருந்த இரு நாய்கள் எழாமல் வாலாட்டின. தன் தெருவைத் தாண்டி எட்டாவது க்ராசினுள் அவன் நுழையும்வரை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, படுக்கைக்கு வந்து மல்லாக்காகப் படுத்து, திரையின் விலகல்கள் ஏற்படுத்தும் இடைவெளியில் உள் நுழையும் நிலவின் கீற்றுக்களில், மூன்று மடங்காக மாறிச் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் இறகுகளைப் பார்த்தபடி இருந்தான்.

செங்கல்பட்டு வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுவின் பேச்சு. “ஏன் இவன் கொழந்தையா இருக்கும் போது கலர் கொடுப்பான்,கலர் கொடுப்பான்னு சொல்லி சொல்லியே கொஞ்சமா க்ரீம் தடவினாரு, கைவிரல் தேஞ்சது தான் மிச்சம்” என்று தாத்தி சொல்ல சிரிப்பு. “கோந்தே நல்ல கலர்தான்” இவனை அணைத்தபடி தாத்தா கூறியதற்கு “சும்மா ஒன் பேரன்னு சொல்லாத்தப்பா, அவன் மாநிறம் தான்,அதெல்லாம் எப்படி கலர் கொடுக்கும்,அதுவும் அஞ்சாறு வயசுக்கப்பறம்” என்று அப்பா சொல்ல, “ஏன், இன்னும் வயசிருக்கு அவனுக்கு கலர் குடுக்க, நீ வேணா பாரு” என்று பதிலுரைக்கும் தாத்தா.

படுக்கையிலிருந்து எழுந்து, டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தான். அம்மாவின் அறையில் எந்த சலனமும் இல்லை. மெதுவாக வெளிப்புறக் கதவை திறந்து, இரண்டாம் தளத்திற்கு சென்றான். பேங்க்காரர் வீட்டின் அழைப்பு மணியை மூன்று நான்கு முறை முறை அழுத்தமாக அழுத்தி விட்டு, இரண்டிரண்டு அடிகளாக படிகளில் ஏறி தன் தளத்திற்கு வந்தான். தன் அறைக்குள் நுழைந்து மீண்டும் தன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்து விட்டு படுக்கையில் சாய்ந்தான்.

“சொல்லு கோந்தே” என்று எதிர்முனையில் குரல். அறையை நோட்டம் விட்டு அலைபேசியின் திரையை பார்த்தான், அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது.அதைத் துண்டித்து விட்டு அலைபேசியை படுக்கையில் போட்டான். தலையை உலுக்கி விட்டு அங்குமிங்கும் நடந்தவன் மீண்டும் அழைப்பு விடுக்க, மீண்டும், “சொல்லு கோந்தே, ரொம்ப நாளா கூப்டிட்டிருகே” மறுமுனையில் அதே குரல். பின்னங் கழுத்து வேர்த்திருக்க, இடது தோள்பட்டை வலிக்க ஆரம்பித்திருந்தது. தாத்தாவின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், அணைக்கப்பட்டிருந்தது. இரு அலைபேசிகளையும் அருகே மேஜையின் மீது வைத்துவிட்டு கண்ணை மூடினான். இவன் அன்றே பார்த்தாக வேண்டும் என்று சொன்னதால் கூட்டத்தில் சிக்கி மிதிபட்டு இவனுக்குப் பிடித்த நடிகரின் படத்திற்கான டிக்கெட்களை வாங்கி வந்த தாத்தா. உடலை அரைவட்டமாகக் குறுக்கிக் கொண்டு, போர்வையை முகத்தின் மீது மூடிக் கொண்டான். பசித்தது.

தாத்தா ஊருக்கு விடுமுறைக்குச் செல்லும்போது, கோவிலுக்கு அழைத்துச் செல்லாத நாட்களில் காலையுணவு கணபதி அய்யர் மெஸ்ஸில்தான். போண்டாவைவிட, பிரமாதமான ருசியுடன் இருக்கும், அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் சாம்பாரும், தேங்காய் சட்னியும். சர்வர் மேஜையின் மீது வைத்துச் செல்லும் இரட்டை சட்டியில் இருந்து அவை இரண்டையும் எடுத்து ஒன்றாகக் கலக்கும்போது வரும் மணம். போண்டாவின் விலை என்ன இருந்தது? இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கடை முதலாளியுடன் கொண்டிருக்கும், உண்டு முடித்த பின்பு விரலில் ஒட்டி இருக்கும் எச்சத்தை இவன் உறுஞ்சுவதைப் பார்த்து “இன்னொன்னு சாப்டு கோந்தே” என்று சொல்லும் தாத்தா.பணம் கொடுத்துவிட்டு கிளம்பும்போது “தாத்திட்ட சொல்லக் கூடாதென்ன,” என்று தாத்தா கோரினாலும், மெஸ்சை அடுத்திருக்கும் “பங்க்” கடையில் பன்னீர் சோடா குடித்து விட்டு, மூக்கை எரிச்சலுற வைக்கும் ஏப்பங்களை வீட்டிற்கு வந்த பின்பும் இவன் விட்டுக்கொண்டிருப்பதை வைத்து தாத்தி கண்டு பிடித்து விடுவார்.

எழுந்து உட்கார்ந்து மீண்டும் அழைப்பு விடுத்தவன், அது ஏற்கப்பட்டதும் “யாரிது, ஒங்களுக்கு எப்படி இந்த கால் வருது” என்றான்.

“நீ யார கால் பண்ணற கோந்தே”

“இது என் தாத்தா நம்பர் நீங்க யாரு “

“இது ஒன் தாத்தா நம்பர்னா நா ஒன் தாத்தா தான் கோந்தே” குரலை வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அணைக்கப்பட்டிருந்த தாத்தாவின் அலைபேசியை பார்த்தபடி இருந்தான்.

“காலிங் பெல் அடிச்சிட்டு ஓடி வரியே கோந்தே, திண்ணாமலைல பாத்த அந்தப் படம் இன்னும் ஞாபகம் இருக்கா”

அங்கு பார்த்த திரைப்படத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டியை சில சிறுவர்கள், அவர் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கடி அழுத்தி விட்டு ஓடி கேலி செய்யவார்கள். அப்படத்தின் முடிவில் அழ ஆரம்பித்த தாத்தி, வீடு வந்து சேர்ந்த பின்னரும் அதை நிறுத்தாமல் தொடர, “சாரதே, கரையாதே, சாரதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் தாத்தா.

“.. ஹவ் டூ யூ.. .. என்ன”

“ஒப்ளிக்ஸ் இன்னும் குண்டா இருக்கானே கோந்தே” சிறுவயதில் ஓபிலிக்ஸ் குறித்து “என்னமா குண்டா இருக்கான்” என்று கேட்டு , “ஹி இஸ் நாட் ஃபேட், ஜஸ்ட் வெல் ஃபெட்” என்று அதற்கு அந்தக் கதைகளில் ஓபிலிக்ஸ் சொல்லும் வாதத்தையே இவன் பதிலாக சொல்வதற்கு “அதெல்லாம் இல்ல கேட்டியா, சரியான திண்டி அவன். கடோத்கஜன், பகாசுரன்லாம் அவன்ட்ட பிச்ச வாங்கணும்” என்று தொடர்ந்து சீண்டுவார்.

“தனியா கஷ்டப்படறியே கோந்தே, தாத்தா எப்பவுமே ஒன் கூடத் தான் இருக்கேன்” வருடும் குரல்.

ஜன்னல் கம்பிகளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு “எங்க தாத்தா என் கிட்டக்க இருக்க, நீ இல்லாம வீட்ல இருக்கவே முடியல. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு, பீச்சுக்கு போலாம்னா அதுவும் முடியல”

“ஒன் கிட்டதான் இருக்கேன் கோந்தே”

“மெடிடேஷன், இல்ல யோகா எதாவது பண்ணலாம்னு இருக்கேன்”

“நா இருக்கறப்ப அதெல்லாம் எதுக்கு ஒனக்கு, தாத்தா ஒண்ணு சொல்லட்டா எல்லாம் சரியாப் போயிடும்”

“என்ன தாத்தா “

“என் கிட்ட வந்துடறியா கோந்தே”

“…”

“என்ன கோந்தே, கணபதி ஐயர் கூட இங்க ஒன்ன கேட்டுட்டிருக்கார்”

“…”

“மாடிக்கு வா கோந்தே”

“எங்க…”

“மாடி கிட்டக்கதான் கோந்தே, வா”

அழைப்பை துண்டித்தவன் அலைபேசியை அணைத்து மேஜையில் மீது வைத்து விட்டு உடலைக் குறுக்கிக் கொண்டு போர்வையை முழுதும் போர்த்தியபடி படுத்தான். வெளியே செல்ல முடியாத மூச்சுக் காற்றின் சூடு. முகப்பகுதியில் மட்டும் போர்வையை சற்று விலக்கும்போது நான்காம் வகுப்பில் படிக்கும்போது கற்றுக் கொண்ட, இவனுக்கு மிகவும் பிடித்தமான நடிகரின், அபிமான மகானைப் பற்றிய – அந்த மகானாக அப்போதுதான் திரைப்படமொன்றில் அவர் நடித்திருந்தார் -, இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக உச்சரித்திராத ஸ்லோகத்தின் நான்கு வரிகளை அட்சரம் பிசகாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

கூர்க்காவின் குரல் மீண்டும் அருகில் ஒலிக்க, எழுந்து முணுமுணுத்துக் கொண்டே ஜன்னலருகில் சென்று கூர்க்கா அடுக்ககத்தை தாண்டிச் செல்வதை பார்த்தபடி நின்றிருந்தவன், “கோந்தே என் கிட்ட வந்துடு, ரொம்ப ஈஸி மாடிக்கு மட்டும் நீ வந்தா போதும்” என்ற குரலை கேட்டதும், ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டான். மிக அருகில் கேட்கும் குரல், கழுத்துப் பின் பக்கம் தடவிச் செல்வது பேசுபவரின் மூச்சுக் காற்று.

“வா கோந்தே, பயப்படாதே”.

ஸ்லோக வரிகளை உச்சரிக்காமல் இப்போது உதடுகள் வெறுமனே அசைந்து கொண்டிருந்தன. மீண்டும் அவற்றை மீட்டெடுக்க முடியாமல் ஜன்னல் கம்பிகளின் மேல் கண்களை இறுக்க மூடியபடி முகத்தை சாய்த்துக் கொண்டு கம்பிகளில் வழிந்து உதடுகளில் பட்ட விழிநீரை நாவால் வருடியவன், உள்ளங்கைக்களுள் கம்பிகள் நெகிழ ஆரம்பிக்க தலையை பின்னிழுத்துக் கொண்டான். நெளியும் இரு கம்பிகளின் இரு முனைகளிலும் சிவப்புக் கண்களும், பிளவுபட்ட பச்சை நாக்கும் கொண்ட கரு நாகங்கள் இவனை அவர்களுடன் சேர அழைத்தன.

கம்பிகளை விட்டு விட்டு பின்னகர்ந்தவன் அருகே இருந்த நாற்காலியை பற்றிக் கொண்டான். ஜன்னலின் அனைத்து கம்பிகளும் இவனை நோக்கி இரு முனைகளிலிருந்தும் நாவை நீட்டியபடி நெளிந்துகொண்டிருந்தன. இருபது கம்பிகள், நாற்பது கருநாகத் தலைகள், உள்ளத்தைத் தீண்டும் நாற்பது நாக்குகள். நாக்கின் இரண்டு கவையும் தனித்தனியாக, அதே நேரம் ஒத்திசைவாக “மாடிக்கு நாப்பது அடி வெச்சா போதும் கோந்தே” என்று ஒலித்தன. எண்பது குரல்கள்.

நாற்காலி பிடியிலிருந்து நழுவத் தடுமாறியபடி இன்னும் பின்னகர்ந்தவன் அருகிலிருந்த மேஜையை பற்றி அதனருகில் தரையில் அமர்ந்தான். நாகங்களின் அழைகுரலின் உறுதியும், சத்தமும் அதிகமாகிக் கொண்டிருக்க, செவிகளை கைகளால் மூடிக்கொண்டு முட்டியை முகத்துடன் ஒட்டிக்கொண்டவன் கண்களை மூடும் முன் அவன் பார்வை மேஜை மீதிருந்த தாத்தாவின் அலைபேசியின்மீது விழுந்தது. மூடிய இமைகளுக்குள் ரோஸ், சிவப்பு நிற ஒளிச் சிதறல்கள் சர்ப்பங்களாக மாறி அவனுள் பரவின.நாகங்கள் உள் நுழைந்து கொண்டே இருக்க, உடலெங்கும் உச்சாடனம் போல் சர்ப்பங்களின் அழைப்பு ஒலி. மிகுந்த பிரயாசைப்பட்டு கண்களைத் திறந்தவனின் உடலும் மனமும் உள்ளிருக்கும் குரல்களின் தாள கதிக்குப் பழக ஆரம்பிக்க, மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மேஜையின் மீது தலையை கவிழ்த்துக் கொண்டான்.

“வா கோந்தே, ஏந்திரு மாடிக்குப் போலாம் “, “தாத்தா ஒன் கூடவே தான் வரேன் ஏந்திரு” நரம்புகளாக மாறி விட்ட குரல்கள்.

எழுந்து அறைக் கதவை நெருங்கியவன், கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் இவன் வீடிருக்கும் திசைச் நோக்கி சுழலவும் அறையில் ஓரிரு கணங்கள் பரவிய வெளிச்சத்தில் சுவற்றில் நெளியும் சர்ப்ப நிழல்களைப் பார்த்தான். மீண்டும் தன்னுடலை உந்தித் தள்ளி மேஜையருகே வந்து ஒரு கையினால் அதை இறுக்கப் பற்றிக் மறு கையில் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் அதைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுழற்சியில் மீண்டும் அறை தற்காலிகமாக ஒளி பெற்றது. தரையில் அமர்ந்து அலைபேசியின் பின்பகுதியை, “கோந்தே, என்ன கோந்தே பண்ற” என்று வந்த குரல்களினூடே கழற்ற முயன்றான். பாதி பிரித்திருந்த நிலையில் ஆங்காரமான சீறல் ஒலி கேட்க உடல் விதிர்த்தவனின் கையிலிருந்து அலைபேசி நழுவி விழுந்த வேகத்தில் தரையில் உரசியபடி ஜன்னலருகே சென்றது. விழும் அலைபேசியை பிடிப்பதற்காக குனிந்து முழங்காலிட்டு அதனருகே சென்றவன் தலையை உயர்த்தி ஜன்னலை நோக்கினான். கருநாகங்களின் கண்கள் இன்னும் சிவந்திருக்க, நீள ஆரம்பித்திருந்த நாக்குகள் ஜன்னல் சுவற்றில் இறங்கியபடி அலைபேசியை நோக்கி நீண்டு கொண்டிருந்தன. கேவல் ஒலி எழுப்பியவாறே, அலைபேசியை எடுத்துக் கொண்டு தவழ்த்தபடியே அறையின் மூலைக்குச் சென்றவன், பின்பகுதியை முற்றிலும் பிரித்தெடுக்க நடுங்கும் விரல்களால் இரண்டு மூன்று முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பிரித்தபின் அதைத் தூக்கி எறிந்தவன், சீறல் ஒலி இல்லாதிருக்க, ஜன்னலை பார்த்து கூச்சலிட்டான்.

ஒவ்வொரு கருநாகத்தின் வால் பகுதியிலும் இருந்த இருந்த தலை மற்றொன்றின் வால் பகுதி தலையுடன் இணைய, இருபது தலைகள் கொண்ட ஒரு பெரு கரு நாகம், அனைத்து பத்திகளும் விரித்து இவனை நோக்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று பாம்பு மாத்திரைகளை அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி பற்ற வைத்து ஒரு உருவத்தை உருவாக்குவதைப் போல். அதன் விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தவன் கணுக்காலில் ஏதோ சுற்ற ஆரம்பித்ததை உணர்ந்த அதே கணம் அறைக்கதவின் மீது எறியப்பட்டான். பின்னந்தலையை பிடித்துக் கொண்டு எழ முயன்றவன் நீண்ட கயிறு போல் ஒன்று அலைபேசியை தன்னுள் சுற்றிக் கொண்டு பின்வாங்குவதைப் கண்டான். நாக்குகளும் இணைந்து விட்டனவா. உள்ளங்கைகளையும் கால் முட்டிகளையும் தரையில் தேய்த்துக் கொண்டே அதனருகில் சென்றபோது கிலுகிலுப்பை ஒலி கேட்டது. “ராட்டில் சிநேக்” ஆஸ்திரேலியாவில்தான் இருக்கும், கருநாகங்களுக்கும் இத்தகைய வால் உண்டா. மீண்டும் உடலை உந்தி அதைப் பற்றினான்.

சிறு வயதில் வீட்டில் வளர்த்த முயல்களையும் நாயையும் தூக்கும்போது அவற்றின் உடலில் உருவாகும் நெளிவுக்கு மாறாக, சொரசொரப்பான, வெதுவெதுப்பான சருமம், வளைந்ததில் உட்சதையை ஊடுருவி பிய்த்து மறுபுறம் வெளியேறி விடும் வேகம். உள்ளங்கையை துளைத்து வெளி வந்திருக்கும் வால் முன்னே செல்ல அதன் பின்னால் எழுத்துச் செல்லப்படுகிறான். கையை உதறி உள்ளங்கையை முகத்தினருகில் கொண்டு சென்றபோது குமட்டியது, எந்தப் பிளவும் இல்லை. ஜன்னலருகே சென்று விட்ட வால்பி ன்வாங்குகிறதா அல்லது சுருங்குகிறதா. மீண்டும் அருகே சென்று அதைப் பற்றி வளைத்து அலைபேசியை பிரித்தெடுக்க முனைய, நாகத்தின் இருபது தலைகளும் சீறியபடி முகத்தினருகே வந்து நாவை நீட்டின. தேங்கிய மழைநீரில் மிதக்கும் மட்கிய இலைகளின் மணம். வளர்த்தால் பணம் வருமென்று இவன் பள்ளிப் பருவத்தில் நாலைந்து ஆண்டுகள் இவர்களின் போர்ஷன் கதவையொட்டி பதியம் செய்யப்பட்டு, கதவின் உயரத்திற்கு வளர்ந்து வாசலை போர்த்தியபடி பரவியிருந்த மிகப் பெரிய -வெற்றிலை போன்ற- “மணி பிளாண்ட்” இலைகள். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடியவனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்த “மணி பிளாண்ட்டின்” ஒற்றை விழியுடைய பச்சை இலைகள் நாக பத்திகளாக மாறி உடலை முழுதும் போர்த்தின. குழைய ஆரம்பித்த உடலின் இடுப்புக்குக் கீழ் இணைந்து ஒன்றாகிவிட்ட இரு கால்கள். இடது கை, வலது மணிக்கட்டை பற்றி தன்னுள் கோர்த்துக் கொள்ள முயன்றதை மிகுந்த பிரயாசையுடன் விலக்கி மீண்டும் கையை நீட்டி துழாவியவனுக்கு, அலைபேசி மீது பிடி கிடைக்க, வேகமாக இழுத்து பின்புறம் வீசி எறிந்து அது சுவற்றில் மோதி தரையில் விழும் ஒலியை கேட்டபடி கீழே சாய்ந்தான்.

மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தபோது உடலைச் சுற்றி எதுவும் இல்லை, கால்களை அசைத்துப் பார்த்தான். கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுற்றுக்காக காத்திருந்தான், சுவற்றில் நெளியாத நிழல் கம்பிகள். மெதுவாக எழுந்து சென்று அறையின் மறுமுனை சுவற்றின் கீழ் கிடந்த அலைபேசியை எடுத்தான், அதனருகே கழன்று வந்திருந்த பேட்டரி. சுவற்றில் சாய்ந்தபடி “சிம்” கார்ட்டில் ஆட்காட்டி, கட்டை விரல்களை வைத்து எடுக்க முயன்ற போது சாம்பார், சட்னி வாசம். எச்சிலில் இனிப்பு பூந்தியின் சுவை. “தாத்தாவ மறந்துடாத கோந்தே” என்று யானையின் பிளிறல். சிம்மை நீக்கியபின் மேஜையருகே சென்று அதன் மேலிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தரையில் அமர்ந்தான்.

காலை எழுந்திருக்கும்போது உடலெங்கும் வலி, மணி ஒன்பதரை ஆகியிருந்தது. படுக்கையின் ஓரத்திற்கு படுத்தபடியே நகர்ந்து, கால்களை மெதுவாக தரையில் வைத்து, குனிந்தபடி அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்து ஜன்னலருகே சென்று அதன் கம்பிகளை கைமுட்டிகளால் தட்டினான். கம்பிகளை பற்களால் மெல்ல கவ்வும்போது நெகிழ்வு, விலகிப் பார்க்க, அசையா கம்பிகள். அறையிலோ, உள்ளங்கைகளில் எந்த மணமும் இல்லை. கவிழ்ந்திருந்த நாற்காலியை நிமிர்த்தியபின், இரு ஜன்னல்களையும் மூடி படுக்கையில் அமர்ந்து கூர்ந்து கேட்டவனுக்கு தெருவில் செல்லும் வண்டிகளின் மெல்லிய ஒளியைத் தவிர வேறெந்த குரலும் ஒலிக்கவில்லை. ஜன்னல்களைத்’ திறந்து அறையெங்கும் பார்வையை செலுத்தினான். மேஜையின் மேல் உடைந்த சிம், அறையின் மூலையில் அலைபேசி, அதன் பேட்டரி. அனைத்தையும் பொறுக்கி எடுத்து படுக்கையின் மீது போட்டு விட்டு மீண்டும் ஜன்னலருகே சிறிது நேரம் நின்றிருந்தபின் முகம் கழுவ குளியலறைக்குச் சென்றான். தண்ணீரை முகத்திலறைந்த பின் கண்களைத் திறக்க, வாஷ்பேசினின் துளைகள் பாம்பின் கண்களாக மாறின. விலகி குளியலறை கதவைப் பற்றியபடி நின்றான். திறந்திருக்கும் குழாயிலிருந்து வெளிவரும் நீர், துளைகள் வழியே உள்ளே சென்று கொண்டிருக்க, பேசினின் அடிப் பகுதியில் இருந்த ரப்பர் குழாயை குதிகாலிட்டபடி அமர்ந்து அசைத்துப் பார்த்து வெளியே வந்து முகம் துடைத்து விட்டு படுக்கையில் அமர்ந்தான்.

வாக்கு கொடுத்திருந்தாலும், கர்ணன் நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை செலுத்தி இருக்க வேண்டுமென்று தாத்தாவிடம் சிறுவயதில் ஆதங்கத்துடன் புலம்புபவனுடைய தனிப்பட்ட பாரதத்தில் இரண்டாம் முறை அஸ்திரத்தை செலுத்தும் கர்ணனே வெற்றி பெறுவான். “இந்த வாட்டி நெஞ்சுக்கு தான் குறிவைப்பான் தாத்தா”. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்கொண்ட மிகப் பெரும் அவமானத்தை ஆற்றுப்படுத்த, “எதோ இந்த மட்டோட விட்டுச்சே, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்கோ,” என்று அடுத்த சில மாதங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

துணிகள் வைக்கும் மர அலமாரியில் இருந்து பிளாஸ்டிக் பையொன்றை எடுத்து படுக்கையில் தாத்தாவின் அலைபேசியின் பகுதிகளை அதில் போட்டான். பின் அணைக்கப்பட்டிருந்த தன் அலைபேசியை எடுத்து அதை இயக்கி புகைப்பட தொகுப்பில் இருந்த தாத்தாவின் புகைப்படங்களையும், அவருடைய அலைபேசி எண்ணையும் அழித்து அதில் இருந்த மற்ற புகைப்படங்களையும், தொடர்பு எண்களையும் மடிக்கணினிக்கு மாற்றிய பின் அணைத்து அதன் சிம்மை வெளியே எடுத்தவன், தன் அலைபேசியையும் பையினுள் போட்டான். மேஜைக்கு கீழிருந்த அட்டைப்பெட்டியை எடுத்து படுக்கையின் மீதிருந்த இரண்டு டைரிகளை அதனுள் வைத்துவிட்டு, உடையணிந்த பின், பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு, அட்டைப்பெட்டியை காலால் உந்தித் தள்ளியபடி அறையை விட்டு வெளியே வந்தவன் “ம்மா, நா வெளில போறேன் புது மொபைல் வாங்கணும்” என்று சொல்ல “என்னடா நாலஞ்சு மாசம் முன்னாடி தானே தாத்தா பென்ஷன் அரியர்ல வாங்கி தந்தாரு,” என்றாள் அம்மா.

“மொபைல்ல ப்ரச்சன “

“பிளாஸ்டிக் பைல என்ன, தாத்தா டைரிலாம் எங்க எடுத்துட்டுப் போற”

“எடத்த அடச்சிட்டிருக்கு மா, கொசு வேற மேயுது கடிச்சு கிடிச்சு வியாதி வந்துதுன்னா”

“கடைல போடப்போறேன்னா அவனே வந்து எடுத்துட்டுப் போவான், போம்போது சொல்லிட்டுப் போ எதுக்கு நீ தூக்கிட்டு”

துணிக்கடைகளில் தரும் காடா பையில் டைரிகளை போட்டடைத்து சமயலறைக்குள் சென்று வத்திப்பெட்டியை எடுத்துக் கொண்டு “கடேல போட்டுட்டா மட்டும்..” என்று சொல்லியபடி கிளம்பியவனிடம் “என்னடா காதுல விழல, சத்தமா சொல்லு” என்று அம்மா கேட்டாள்.

‘ஒண்ணுலமா, பதினொண்ணு மணிக்குள்ள வந்துடுவேன்’ என்று பதில் சொல்லிவிட்டு இவன் கிளம்ப, முன்னறையில் இருந்த லேண்ட்லைனிற்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசிய அம்மா,’ஹலோ, ஹலோ, யாரு வேணும்’ என்று கேட்டு கீழே வைத்து விட்டு ‘யாருன்னு தெரியலையே, எதுவும் பேச மாட்டேங்கறாங்க,
தானா கட் ஆகிடுச்சு’ என்றாள்.

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.