திரையில் அது மின்னல் எனத் தோன்றியது. அறுபது நேனோ வினாடிகள் நீடித்த அது பொன்னொளி கொண்டிருந்தது. படம் எடுக்கும் தொலைநோக்கி கருவியுடன் இணைந்த ரோபோ தன் கோணத்தையும், ’ரெசல்யுஷனை’யும் சரி செய்து கொள்வதற்குள் அது இல்லாமல் போய்விட்டது.
தரையிலிருந்து வானக் கட்டுப்பாட்டகம் அது என்னவென்று ஆராய முடியுமா அல்லது வேறு சாதனங்கள் தேவையா என்று கேட்டுக் கொண்டிருக்கையிலே சிறு கீற்று மின்னல் போல் பளீரிட்டது. இம்முறை அது எழுபது நேனோ வினாடிகள் நீடித்தது. ரோபோ அதை படம் எடுத்துவிட்டது. அதை அறிய விண்வெளியில் அமைந்துள்ள ‘இன்டெர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷனில்’ஸ்காட் கெல்லி, ரம்யா மற்றும் லியோ ஜாய் செயலில் இறங்கினர்.
“இன்று என் அம்மாவின் பிறந்த தினம். நான் ஒரே பையன். என் வொய்ப்பும், மகளும் போய் கொண்டாடுவார்கள். நான் ஃபோட்டோ அனுப்பச் சொல்லியிருக்கிறேன்” என்றான் கெல்லி.
“பிறந்த நாள் வாழ்த்துக்கள் உன் அம்மாவிற்கு. ஷாம்பெய்ன் இருந்தால் எப்படி இருக்கும் இப்பொழுது?” என்று சப்புக் கொட்டினான் ஜாய்.
“ரொம்ப வருத்தப்படாதே. சோம பானமே உனக்கு கிடைச்சாலும் கிடைக்கும்” என்று சிரித்தாள் ரம்யா. ’நம் மூவர் ஃபோட்டோவையும் அம்மாவுக்கு அனுப்பு கெல்லி எங்கள் வாழ்த்துக்களுடன்.”
விண்வெளி ஆய்வுக்கூடம். அறிவியலின் திறத்தால் ஆறு ‘லைட் இயெர்ஸ் தொலைவில் காணப்படும் பூமியைப் போன்ற அந்தப் பதினோரு கோள்களில் எதிலாவது உயிரினம் இருக்குமா என ஆராய அவர்கள் வந்துள்ளார்கள். புவியில் காணப்படுவது போன்றே பாறைப் படிமங்களும், ஆக்ஸிஜன், மீதேன் போன்ற வாயுக்களும் வேற்று கிரக வாசிகளை தேடும் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.
இளமை ததும்பும் வயது; பார்ப்பது, வியப்பது, ஆராய்வது எல்லாமே சிறுவர்களைப் போல. விண்வெளி ஆய்வுக்கூட லிகொவில் வெற்றிடம் உருவாக்குவதுண்டு. எவர்சில்வர் குழாய்களிலிருந்து ஹைட்ரஜனை நீக்கி வெற்றிடம் உருவாக்கி அதிர்வுகளை தவிர்க்கிறார்கள். இது துல்லியத்திற்காக செய்யப்படுகிறது. கெல்லி இதை நிர்வகிப்பதில் வல்லவன். .ரம்யா துல்லியமான கணிதத்தில் நிபுணி. விண்வெளிக் கற்கள், அவைகளின் சுழல் வேகத்தினை கணினியின் உதவியுடன் கணக்கிட்டு அவற்றுடனான மோதலைத் தவிர்த்து விண்வெளி ஓடத்தின் பாதையை ஆணைகளிட்டு கட்டுப்படுத்தும் திறனுடையவள். ஜாய் விண்ணில் அரிதாகக் கேட்கும் விந்தை மிகு ஒலிகளை ஆராய்ச்சி செய்பவன். அவை வேற்று கிரக உயிரிகள் எழுப்பும் ஒலியா அல்லது வேறு ஏதாவதா என்று நுட்பமாகப் பதிவான். பின்னர் அதை ‘டிஜிடைஸ்’ செய்து ‘அலை நீள’ வாரியாகப் பகுத்துத் தொகுப்பான்.
இப்பொழுது பூவுலகின் அனைத்து நாடுகளும் ‘இன்ஸ்பேஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி ஒற்றுமையாகச் செயல்படுகின்றன.
“இந்தப் பொன்னொளி எதாயிருக்கும்? வேறு கோளங்கள்ல பூமியைப் போல மழை பெய்கிறதோ? மின்னல் அதனால் காணப்படுகிறதோ? நாம பாக்கற மாரி வலுவானதா? இது நிகழக்கூடும் என்றால், ஏன் இடியின் ஒலி கேட்கவில்லை?” இது ரம்யா
‘ட்ரேப்பிஸ்ட்’ கிட்டத்தட்ட நம் சூரியன்தான். எடை குறைந்தும், ஒளி மிகுந்தும் இருக்கு. அந்த சுழல் கிரகங்கள் நான்கில் பகலும், இரவும் மாறி மாறி வருது.’ என்றான் கெல்லி.
‘உண்மதான். ஒருக்கால் கடவுளின் இடமோ? இல்ல, தேவர்கள்.. தப்பு தப்பு.. அசுரர்கள்? நம்மள அப்டக்ட் செய்வார்கள் எனத் தோன்றுகிறது’ என்றான் ஜாய்.
‘உன்ன சாப்ட அசுரன் வரப்போறான்’ என்றாள் ரம்யா.
இந்த உரையாடல்களுக்கு இடையே ரம்யா கணினியில் அனைத்து விவரங்களையும் சரி பார்த்தாள் ம்….ஹூம்.. கணினி திணறியது. அந்தக் காட்சி மீண்டும் வரவில்லை. அண்ட சராசரத்தின் ஏதோ ஒரு நிகழ்வு என அவர்கள் முடிவு செய்தனர்.
இரு நாட்களுக்குப் பிறகு ரம்யா தன் இருக்கையுடன் மிதந்து வந்தாள். மிக அரிதாகத்தான் உணர்ச்சிவசப் படுவாள்.”எக்சைடிங்க் யார்’ட்ரேப்பிஸ்ட்’ நட்சத்திரம் தன் சுழல் வேகத்தை மிதப்படுத்தியிருக்குமோன்னு ஒரு அனுமானத்திற்கு வழி புலப்படுகிறது. இது ஒரு அற்புதம், ஒரு பொன்னான வாய்ப்பு. நம் விண் ஓடத்தின் வேகத்தை அதிகப்படுத்தினா, நாம் அருகே நெருங்க முடியும்.” என்றாள். .
“எப்படிச் சொல்றே?” என்றான் கெல்லி.
“கணினியிடம் சிமிலாரிடீஸ் கேட்டேன். வாயேஜர் 1 பதிஞ்ச சூரிய சுழற்சியப் பத்தி சொல்லியது”என்றாள் அவள்.
“அப்படின்னா?” இது கெல்லி
‘எனக்கும் முதல்ல இது புரியல; பின்னர் யோசிச்சேன். காஸ்மிக் கதிர்களின் ஃப்ளக்ஸ் எதிர்பாராத விதமா அதிகரிச்சு, சோலார் காற்றின் துகள்கள் கொறஞ்சுதுன்னா சூரியனின் சுழற்சி 2 லேந்து நாலு மடங்கு அதிகரிக்கும். அது போல இது ட்ரேப்பிஸ்ட்டின் செயல் எனத் தோணிச்சு. இதை உறுதிப்படுத்த ஜாய் உதவணும்”என்றாள் ரம்யா.
“ஓ,பேபி, மார்வலஸ்.நான் என்ன செய்யணும்?’’ என்றான் ஜாய்.
“முதல்ல பேபின்னு கூப்பிடுவதை நிறுத்து. நாம பூமில பாப்பமே மின்னலும், இடியுமென; அதைப் போல, அல்ல, அப்படியே அல்ல ,ஆனால் மிக மெல்லிய ஓசையும் வருகிறது.அதை வைத்து மின்னல் மோகினி யார்னு கண்டு பிடிக்கப் பார்”
கெல்லி தன் கருவிகளை எடுத்துக் கொண்டான். ”’ஸ்பேஸ் வாக்’ போய் வருகிறேன். ஏதாவதுதெளிவாகிறதான்னு பாக்கலாமே?.”
“அது ரிஸ்க், கெல்லி . அவ்வளவு கிட்டக்க அது ஏற்பட்டிருந்தா, நம் கணினிகள் கதறியிருக்கும். வெயிட் செய்யலாம். அதற்குமுன் அந்த ஒலிகளைப் பாத்து எதனுடனும் ‘மேட்ச்’ ஆகிறதா எனச் சொல்றேனே”என்றான் ஜாய்.
“டோன்ட் வொரி. இதை சூட்டோடு சூடாச் செய்யணும் .நான் ‘வேக்குவம் பாட்டை’யும் எடுத்துக்கொண்டு போறேன். ரம்யா, நீ என் ‘வாக்கை’ பதிவு செய்து கொண்டே வா. வெற்றிடத்தில் என்னால் முடிந்தவரை நிலைப்பேன். அப்பொழுது ஏதேனும் நடக்கலாம். இது ஒரு அனுமானம் தான். அப்படி ஏதும் நடக்காவிட்டால் உடனே திரும்பிவிடுவேன். என் உயிர் உன் கைகளில். ஏதேனும் ஆபத்து எனத் தோன்றினால் ‘ஸ்பேஸ் சூட்டை’த் திறந்து என்னை உள்ளே இழுத்துவிடு”
“இவ்ளோ ரிஸ்க் எதுக்கு கெல்லி, பாத்துக்கலாமே” அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் போய்விட்டான்.பரபரப்புடன் அவள் இருக்கையை கணினிமுன் வடிவமைத்து அமர்ந்து கொண்டாள்.
“முன்னாடி விண்வெளியில் இந்த ஒலிகளை நான் கேட்டதில்ல. ஆனா கீழே கேட்டிருக்கேன்” என்றான் ஜாய்.
மூவரும் அவர்களின் உணவை அச்சமயம் உண்டு கொண்டிருந்தார்கள். ”கீழேன்னா எங்கடா?”
“பூமிலதான்”
“என்னது,பூமியின் ஒலி இங்க டைரக்டா கேட்குமா?”
“கூல், கூல் பேபி. பூமியின் ஒலி இல்ல இது; ஆனா, பறவைகளின் குரல்களின், சிறகுகளின் ஒலி. எங்கள் பண்ணை வீட்டில், தாத்தாவுடன் கேட்ட ஒலியைப் போல் இருக்கு” என்றான் அவன்.
கெல்லி பூமிக்கு செய்தி அனுப்பி பண்ணை வீட்டில் அங்கு வரும் பறவைகளின் ஓசையை சேகரித்து அனுப்பச் சொன்னான்.
ஒரு வாரம் அமைதியாக ஓடிற்று. அவர்களின் ஸ்பேஸ் ஸ்டேஷன் காலம் முடியப் போகிறது. ஒரு நிகழ்வு, அதன் ஈர்ப்பு, அதன் விடை புரியாத தன்மை அவர்கள் விவாதித்துக் கொண்டே இருந்தார்கள். பூமியிலிருந்து வந்த பறவை ஒலிகள் குரலொலிகளாகவே இருந்தன. சிறகோசைக்கும், குரலோசைக்கும் …
.நான் சிறகோசைகளை பெரிதுபடுத்தி கேட்டுப் பார்க்கிறேன். ஏதேனும் பிடிபடலாம்”
அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மீண்டும் கணிணித் திரையில் பொன் வண்ண மின்னல் பளீரிட்டது. கெல்லி “மேக்னிஃபையிங்க்” கமாண்டும் ரம்யா “ஆம்ப்லிஃபையிங்க்” கமாண்டும் ஜாய் ”சவுண்ட் ஒன்லி’ கமாண்டும் கொடுக்க திரையில் பார்த்த காட்சி மூவரையும் பேச்சிழக்கச் செய்துவிட்டது. பொன் உடலோடு மிகப் பெரிதான ஒரு தும்பி, தங்கமும், வெள்ளியும் கலந்து இழையோடும் பல்லடுக்குச் சிறகுகள், முகத்தில் பல்லாயிரக் கணக்கான கண்கள் அவைகளும் பொன்னிறத்தில் ஒளிர்ந்தன. அது ‘ட்ரேப்பிஸ்டின்’ ‘டி’ கோளிலிருந்து வெளிப்பட்டு, தன் சிறகுகளை படபடவென அடித்துக் கொண்டு நீள் வட்டப் பாதையில் பயணித்து இவர்களின் ஸ்டேஷனை நோக்கி வருவது தெரிந்தது. அதன் வேகம் அளப்பரியதாக இருந்தது. சிறகுகள் அடுக்கடுக்காக மிக மெல்லியதாக, அதன் பட பட அடிப்பில் உந்து சக்தி உற்பத்தி செய்வதாக, அதன் மூலம் பறக்க இயல்வதாக அமைந்திருந்தன.
கீழே புவி பரபரப்பானது. ”நோ ஸ்பேஸ் வாக்ஸ் .நோ ஸ்பேஸ் ஷிப் நவ். ஸ்டேஷனிலேயே இருங்கள். இன்னும் பத்து நிமிடங்களில், பூமியின் கணக்குப்படி உங்கள் ஷிப் உங்களை ஏற்றிக்கொண்டு பூமிக்குத் திரும்பத் தொடங்கும். ஆல் த பெஸ்ட்”என்று மெசேஜ் வந்தது.
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து செய்வது என்ன என்று புரியாமல் தவித்தனர். அவர்களை பொன்னொளி சூழ்ந்தது. கெல்லி வெகு வேகமாக பொதுவில் பொருந்தக்கூடிய சங்கேத மொழியில் அதற்கு செய்தி அனுப்பினான். ’நாங்கள் பூமியிலிருந்து வந்திருக்கிறோம். நீங்கள் யார்?’
‘மகிழ்ச்சி. விரைவில் அறிவீர்கள்’ என பதில் வந்தது.
‘உங்கள் கோள் எது? ஏன் எங்களை நோக்கி வருகிறீர்கள்?’
‘நான் உங்களுக்கு தீமை செய்ய மாட்டேன்’
‘நல்லது.ஆனால் எப்படி நம்புவது?’
‘வேறு வழியில்லை உங்களுக்கு.’
‘அப்படியல்ல. நேர் பதில்கள் இல்லையெனில் உங்களை அழிக்க நேரிடலாம்’
‘உயிரைத் தேடி வந்துட்டு உயிரை அழிப்பாயா என்ன?’
மூவரும் விக்கித்தார்கள்.இவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்துதான் இது வந்திருக்கிறது.
“கெல்லி காம்பேட் பாட்டை செயல்படுத்து. அதை தடுமாறச் செய்ய முடியுமா எனப் பார்.எங்கள் கணக்குப்படி உங்களுக்கு ஐந்து நிமிடங்களே உள்ளன. அசட்டுத் துணிச்சல் அபாயகரமானது.” என்று பூமியிலிருந்து கட்டளை வந்தது.
மூவருக்கும் இப்பொழுது தெளிவு வந்துவிட்டது. ஸ்பேஸ் ஸ்டேஷனின் கதவு திறந்து, பொன்மின்னல் தன்னை சிறிதாக்கிக் கொண்டு உள்ளே வந்தது. ‘நேரமில்லை. உங்கள் கோளில் விரைவில் வாழ்வில்லை. எங்கள் கோளில் மனிதரில்லை. என்னுடன் வந்தால் நீங்கள் சரித்திர நாயகர்கள். இல்லையெனில் உங்கள் விருப்பம். வெற்றிடத்தில் நிலைக்கும் உங்கள் ஆற்றலைப் பார்த்ததுமே நீங்கள் தான் எங்களது விருந்தினர்கள் என்று முடிவு செய்து நான் வந்தேன் என்றது
‘ஃப்யர்’ என்ற ஆணை கட்டுப்பாட்டகத்திலிருந்து வருவதற்குள் விண் ஓடம் பிரிந்தது.