மிகு நேர்த்தியாக
இலக்கங்களுடன் தொடங்குகிறது
வாழ்வு
பிரசவத்தின் அடுத்த கணமே
கைகளில் மாட்டப்படுகிறது
பிரத்தியேக இலக்கம்
எல்லா விண்ணப்பங்களிலும்
எனது அடையாள அட்டை
இலக்கம் கேட்கப்படுகிறது
புதிதாகச் சந்திக்கும்
ஒவ்வொருவரும்
எனது தொலைபேசி இலக்கத்தை
மறக்காமல் பதிவுசெய்கின்றனர்
எனது வீட்டு இலக்கம்தான்
எனது முகவரி
நான் இலக்கங்களாலேயே அறியப்படுகிறேன்
பேரூந்தில் நடத்துனர்
எனது இருக்கையின் இலக்கத்தை
வினவுகிறார்
கடைசியில்
மருத்துவமனைக் கட்டிலில்
நான் எனது அறை இலக்கத்தைக் கொண்டும்
கட்டிலின் இலக்கத்தைக் கொண்டும்
அறியப்படுகிறேன்
இலக்கங்களிலேதான் இருக்கிறது
எனது இருப்பும் இறப்பும்