கல் பதித்து சிமெண்ட் பூச்சால் இணைக்கப்பட்ட தரை அங்கங்கே வெடித்திருந்தது. அது குளக்கரை மேடை. பனியின் குளிர்ச்சி பிளவுகளின் இடையே பரந்திருந்த மண்ணிலும், பல்லிளித்த கற்களிலும் இன்னமும் இருந்தது. ஆனாலும் மேலே சூரியன் ஒளிப்பிரகாசனாய் இருந்தான். அடர்த்தியான அரச மர நிழலில் நானும் பிள்ளையாருமாக உட்கார்ந்திருந்தோம். இளம் பிள்ளையார். அனுபவங்களின் கசடுகள், கசப்புக்கள் இல்லாமல் தொந்தியின் மேலெழும் தும்பிக்கையுடன் அசையாமல் அமர்ந்திருந்தார். இலைகளின் ஊடே தண்ணீர்த் தகட்டில் நிழலாடும் ஆடியென வானம் கண்ணாமூச்சி காட்டியது. நான் கணேசனைப் பார்த்து நட்புடன் சிரித்தேன். எனக்கே வியப்பாக இருந்தது. சிரிப்பு… நட்பு.. இந்த உணர்வுகள் மரத்துவிட்டதென்றே நினைத்திருந்தேனே, இன்னமும் வாழும் முனைப்பு என்னிடம் இருக்கிறதோ?என் குறுஞ்சிரிப்பு இப்பொழுது முரண் நகையாகி ஏளனச் சிரிப்பாக வழிந்தது. ’என்னை ஏன் கலவரப்படுத்துகிறாய்?’ என்று அசையாப் பிள்ளையார் கேட்பது போல் தோன்றவும் வாய் விட்டுச் சிரித்தேன். என்னைப் பார்த்து எத்தனை பேர் சிரித்திருக்கிறார்கள்- இப்பொழுது என் முறை, பிள்ளையே!
அரசிலைகள் சலசலத்து நீரின் மேல் நில்லாக் கோலங்களை வரைந்தன. தெளிவில்லா உருவங்கள். பிம்பங்கள் கலைந்து கலைந்து ஒன்று மற்றொன்றாய் உருவெடுத்து அழிந்தன. சாரையும் சர்ப்பமுமாய் ஆட்டம் காட்டின. வளைந்து வழுக்கி ஓடும் அது சாரையா அல்லது காமினியா, கவிதாவா, புவனாவா?ஆவலுடன் நீந்திச் செல்லும் அந்த சர்ப்பம் நானோ? அவை ஒரு மாலையைப் போல் ஏன் காட்சி தருகின்றன? இல்லை, மாலையில்லை ஒரு வட்டம், நீள் வட்டம், அடியும் நுனியும் காணாத வட்டம். தொடக்கப் புள்ளியையும் முடிக்கும் புள்ளியையும் விழுங்கிவிட்ட முழு வட்டம்.
வட்டம் எப்போது அரசிலை ஆனது?அல்லது அரசிலைதான் வட்டமாகக் காட்டியதா? பிள்ளையாரைக் கேட்கலாம் என்றால் அவ்வளவு பெரிய செவிகள் இருந்தும் காதுகளை அவர் மூடிக் கொண்டுவிட்டார். துண்டை உதறி என் எதிர்ப்பைக் காட்டிவிட்டு அவரின் பின்புறம் சென்று படுத்துக் கொண்டேன். நினைவுகளை இப்படி உதற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
என்னுடைய பதினாறாம் வயதிலே நாங்கள் அந்த ஊருக்கு வந்தோம். பேரையும், ஊரையும் சொல்லி நான் யாரையும் சங்கடப்படுத்தப் போவதில்லை. மொத்தமே பதினாறு வீதிகள் தான். ஒவ்வொரு வீதியிலும் இருவது, முப்பது குடும்பங்கள். இரு நாட்களில் ஊரின் முகங்கள் முழுதும் பரிச்சயமாயிற்று.
சைக்கிள் ஓட்டிக் கொண்டு ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு பால் ஊற்ற வந்தாள். ’பொன்னுத்தாயி ஊருக்குப் போயிடிச்சு. நாந்தான் வருவேன் இனி. என்னா, முழிக்கிறே? பால் சொம்பு கொண்டா’ என்றாள்.’அம்மா, பால்’ என்று குரல் கொடுத்துவிட்டு நான் வாசலில் அவள் சைக்கிளைப் பார்க்க விரைந்தேன். ரொம்பப் பழைய மாடல் ‘ஹெர்குலஸ்’. ஆண்களுக்கே உயரம் அதிகம். பால் கேனை மாட்டிவிட்டு அதில் அவள் ஏறிய லாகவம். பிரமிப்பதற்குள் விரைந்து விட்டாள்.
இலேசான மினுமினுப்போடும் உறுதியோடும் தெரிந்த அந்த கணுக்கால்களையும், ஆடுசதையினையும் நான் அடிக்கடி பார்க்க நேரிட்டது. குறுக்கும் நெடுக்கும் பறந்து கொண்டேயிருப்பாள். புல்லுக்கட்டு, புண்ணாக்கு, தவிடு என அவள் கேரியரில் ஏதாவது பயணித்துக் கொண்டிருக்கும். ஒரு நாள் அசந்தே போய்விட்டேன், நோயுற்ற பெரிய கன்றுக்குட்டியை சைக்கிளில் கட்டி ஓட்டிப் போனாள். அசாத்யமான பெண். அவளைப் பற்றி என் மதிப்பு உயர்ந்து கொண்டே போயிற்று. என் அக்காவும் இருக்கிறாளே.. தேங்காயை உரித்துத் தந்தால் மட்டும் போதாது, உடைத்தும் தர வேண்டும். அவளிடத்தில் எனக்கு என்ன ஈர்ப்பு என்றே புரியவில்லை. அவளைப் பற்றி யாரோடாவது பேசி கிண்டலுக்குள்ளாவேன்.
தன்னை மறந்து செயலில் முனைப்போடு இருக்கும் அவளை முடிந்தபோதெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
“டேய், மோகினி உன்ன புடிச்சிருக்கு.விட்டுடு, இல்ல தவிப்ப” என்று சீனி சொன்னபொழுது ‘போடா, டேய்’ என்றுதான் சொன்னேன்.
அவள் என்னைவிட ஆறேழு வயது பெரியவள். ’இந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணாம வச்சிருக்கா அவ அத்தை வீட்ல. பாவம், அம்மா, அப்பா இல்லயாம். ஓடா உழச்சி மாடாத் தேயறது, என்னிக்கு விடியுமோ?’ அம்மா பேச்சுவாக்கில் சொன்ன செய்தியில் நான் அவளுக்கு காமினி எனப் பெயரிட்டேன்.’நா இருக்கேன் உனக்கு’ என மனதில் சொல்லிக்கொண்டேயிருந்தேன்.
கோடை விடுமுறை வந்தது. அவள் சைக்கிளில் ராஜா குளத்திற்குப் போவதைப் பார்த்தேன். கானல் அலை அடிக்கும் அக்னி நக்ஷத்ரம். தெருவில் ஈ காக்கை இல்லை. ஒரு மரத்தின் இலை கூட அசையவில்லை. வீடுகள் ஆழ்ந்த மதிய உறக்கத்தில் இருந்தன. பனியனுடனும், அரைக்காற்சட்டையுடனும் நான் அவளைப் பின் தொடர்ந்தேன்.
‘என்ன தம்பி, என்ன வேணும்?’ அவள் என்னை எப்பொழுது பார்த்தாள் எனத் தெரியவில்லை, இத்தனைக்கும் நான் மரத்தின் பின்னிருந்துதான் அவள் குளத்திலிருந்து மேடேறி கரைக்கு வருவதைப் பார்த்து க்கொண்டிருந்தேன்.தண்ணீர் குடிக்க வந்த ஆடுகள் கவனமாக அடி வைத்து இறங்கிக் கொண்டிருந்தன.
‘இந்தா, பேச்சி, பாத்து இறங்கு, சீமான பாத்து பயந்துடாதே,’ என்று குட்டியாட்டைப் பார்த்து சிரித்தாள். ஈரத்தில் உதடுகள் நனைந்து ஒளியுடன் மின்னின. நெற்றியில் படிந்த கூந்தல் இழைகள் தனி அழகைக் கொடுத்தன.தோள்பட்டை எலும்புகளும், சரிந்து இறங்கும் கழுத்தும் கொள்ளை கொண்டன. உயர்த்திய கைகள் காட்டிய மறைந்த அழகுகள் இம்சித்தன. உரமேறிய உடலும், இளமையும் என்னைப் பித்தாக்கின.
‘அம்மா சொன்னாங்க’ என்றேன்
“விருந்தாளி வந்திருக்கா? பால் கூட வோணுமா?’’
‘அதில்ல, நான் வந்து..’
‘‘நீ வந்து..? ’’
‘நாம..’
‘’நாம?’’
‘இல்ல.உனக்கு கல்யாணம் ஆவலயாமே?’
‘‘ப்பூ.. இதானா? அதைக் கேக்கவா இங்க வந்த?’’
‘அதில்ல, எனக்கு உன்ன புடிச்சிருக்கு’
‘’சரி’’
‘என்ன சரிங்கற’
‘’வேற என்ன சொல்லணும்?’’
‘நாம… நாம’
‘‘கண்ணாலம் கட்டிக்கலாம்க்றியா?’’
பொட்டில் அடித்தாற் போல் அவள் அப்படிக் கேட்பாள் என நினைக்கவில்லை. தடுமாறினேன்.
’’கண்ணாலமெல்லாம் வேணாம். எனக்கு ஒரு முத்தம் மட்டும் கொடு அது போதும்’’
அவள் விளையாடுகிறாள் என நினைத்தேன்.அவள் மூச்சுக்காற்று பட என்னை நெருங்கி அணைக்கையில் வெலவெலத்துப் போய்விட்டேன்.
‘‘ராசா, என் கண்ணில்ல, முத்தம் மட்டும்தான்யா நீ கொடுக்க முடியும், எனக்கு கிடைக்காதது அதான்யா.’’
எனக்குப் புரியாமல் ஓடி வீட்டிற்கு வந்து விட்டேன். பிச்சியைப் போல் அவள் சிரித்தது என்னை ஓயாமல் துரத்தியது. அன்று கனவில் வெள்ளை ரோஜாக்களாக வந்தன. அதன் நடுவில் அவள் கரும் முள்ளென ஓங்கி நின்றாள். செடிகளிலிருந்து பறித்துப் போட்ட பூக்கள் முட்கள் நெருட குருதி வாசம் வீசியது. தலையை உலுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தால் தள்ளாடியது.
ஒரு சமயம் மாமா வீட்டிற்குப் போயிருக்கையில் அந்த ஊரில் ஒரு கடற்கரையை நான் பார்த்தேன். பெரிதாக எழும்பி வரும் அலை என்னை மூழ்கடிக்கப் போவதாக எண்ணி அதற்கு பாய்ச்சல் காட்ட நான் தயாராக நின்றிருந்தேன். இதோ…இதோ ஓடப் போகிறேன். அது என் காலைக் கூட நனைக்காமல் ஏமாற்றி விட்டது. ஏனென்று புரியாமல் அழுதேன்.
‘முப்பது பணம் கொடுத்து மூணு குளம் வெட்டினேன் < em>ரண்டு குளம் பாழு ஒண்ணு தண்ணியேயில்ல’
வழிப்போக்கன் பாடிக்கொண்டு செல்வதை படுத்துக்கொண்டே கேட்டேன்.
‘தண்ணியில்லா குளத்துக்கு காவல்மார் மூணு பேர்
ரண்டு பேர் முடம் ஒண்ணு காலேயில்ல’
‘ஓய், புள்ளையாரே, ஏதோ உம்ம இடத்ல படுத்திருக்கேன்னு எதிர்ப்பாட்டெல்லாம் வேணாம். நல்லாருக்காது, சொல்லிப்புட்டேன் ஆமா’
‘‘இது நீ பாடும் பாட்டு அப்பா. சொல்லப்போனா கவிதா பாட வச்ச பாட்டு’’
ஆம், உண்மைதான். ஓரளவு படித்து, ஒரு சுமார் வேலையில் இருந்தேன். வயது இருபத்தியாறு.வேறு ஊர், வேறு மனிதர்கள். பஞ்சுப் பொதிக்குள் விழுந்த குண்டென காமினி எங்கோ வலிக்காமல் ஆழ்ந்து போனாள். கவிதா, அழகான பெயர். சுமாரான அழகு. எல்லாவற்றையும்விட ஜாதகங்கள் பொருந்தியது முக்கியமாகப் போய்விட்டது. ’ரஜ்ஜு தட்டல. அமோகமா இருப்பா’ அந்த ஜோதிடரைப் பார்த்தால் … அடித்துக் கொன்றுவிட்டால் என்ன என்று செய்ய இயலாத ஆத்திரம் இன்று வரை இருக்கிறது. கவிதாவிடம் தோற்றேன். காதல் இருந்தது அவளிடம். ஆனால் கனன்று எரியவில்லை. ஏனெனக் கேட்க முடியவில்லை, யாரிடமும் பகிரவும் முடியவில்லை; எங்கள் தனிமையில் அவள் மிரளும் கண்களும், நடுங்கும் உடலும், திரளும் கண்ணீரும்… என்னால் புரிய வைக்க முடியவில்லை.
“உனக்கெல்லாம் ஆரு வேலை கொடுத்தான்? இஷ்டமில்லேன்னா கால் கடிதாசி கொடுய்யா? கம்பெனி பொழைக்கும்.’’
முப்பத்தைந்து வயதில் நாலு பேர் கேட்க என்னை நோக்கி சொல்லப்பட்ட வார்த்தைகள் சூட்டுக்கோல்கள். ஆனால், நான் தாங்கிக்கொண்டேன். அதிக சேமிப்புமில்லை, வயதான பெற்றோர்,வேறு வேலை கிடைக்கும் வாய்ப்பு என் படிப்பிற்கு கிடைப்பது கடினம்.
‘காலில்லா காவல் மாருக்கு மூணு பணம் மாதப் பணம்
ரண்டு பணம்செல்லாக்காசு ஒண்ணு காசே இல்ல’
கவிதா என் வறட்சியை வேறு விதத்தில் சமாளிக்கப் பார்த்தாள். நாங்கள் பொருத்தமான ஜோடி என்றே அறியப்பட்டோம். நான் நினைப்பதை அதற்கும் முன்பாகவே செய்தாள், வேலைக்கும் போய் சம்பாதித்தாள், அம்மா,அப்பாவுடன் பாசமாக இருந்தாள். ஆனால், என்னைக் கனவினிலேயே இருக்க வைத்தாள்.
சில நாட்களுக்குப் பின்னர் ஒரு சம்பவம். இடக்கரத்தால் பிரமன் என் தலையில் எழுதிய எழுத்து .. என்ன பிள்ளையே.. நீ கேளு இல்ல கேக்காம இரு.. நா மாட்டுக்கும் சொல்லுவேன். எங்கள் அலுவலக நண்பர் புவனாவின் குழந்தைக்கு காது குத்தியற்கான பார்ட்டி அவர்கள் வீட்டில். என் மனது தடுத்தும் நான் போனேன். ’’அவசரமா? கொஞ்சம் இரேன், பேசணும்’’ என்றாள்.
என்ன பேசப் போகிறாள்? என்ன இருக்கிறது பேசுவதற்கு?நான்அவ்வளவு பொருட்டா என்ன? எங்கள் குடும்பத்தைப் பற்றி ஊகித்துவிட்டாளோ? தாள் கைக்குட்டையில் முகத்தை ஒற்றி ஒற்றி நான் அவசரமாகக் கசக்கி குப்பைக்கூடையில் போட்ட தாள்கூட அரசிலை போலத்தான் இருந்தது.
‘காசில்லா காசைக்கொண்டு கடப்பொருள் வாங்கப் போனேன்
ரண்டு பொருள் ஊசிப்போச்சு ஒண்ணுபொருளேயில்ல’
‘சபாஷ், உன் விதிய யாரோ முன்னமே பாடி வச்சிருக்கான் போலிருக்கு’ என்றார் பிள்ளையார்.
நான் சிரித்தேன், நெருப்புப் பொறி பரக்கச் சிரித்தேன், பின்னர் சிரிப்பாய்ச் சிரித்தேன். சுடுசொல் தொலைக்காத வேலையை அவச்சொல் போக்கிவிட்ட விந்தையை நினைத்து இன்றும் சிரிக்கிறேன்.
‘பொருளில்லா சாமான் கொண்டு மூவிருந்து செஞ்சு பாத்தேன்
மொத்த சட்டி காலி இந்த வயிறும் காலி’
அம்மாவின் தவிப்பு, அப்பாவின் பாராமுகம், கவிதா கொண்டு வரும் வருமானம். நாற்பது வயதிற்குள் அலுத்துவிட்டேன்.
‘நான், புள்ளையாரே, நல்லவன்யா. நீ எப்படி?’
‘‘எப்படின்னா?’’’
‘உனக்கு ஒரு கஷ்டமுமில்ல. நீ நல்லவனாத்தான் இருக்கமுடியும். அல்லல் பட்டவன்தாய்யா அனுபவசாலி.’‘
‘‘சரி’’
‘என்ன சரி?’
‘‘நீ எது சொன்னாலும் சரி’’
‘அப்படின்னா?’
‘‘உங்கிட்ட துணிவில்ல, நேர்மையுமில்ல, நம்பிக்கையுமில்ல. வெத்து அனுபவம் சொல்ற. கடமையையாவது செஞ்சியான்னா அதுவுமில்ல’’
‘என்னக் குத்தம் சொல்றதுக்கா சரி,சரின்ன புள்ளையே’
‘‘அதில்லடா, மனிதா. நடந்ததிலேயே இருக்கியே.’’
‘அடுத்தவ தேவைக்கு பசியேலில்லாம ஒப்புக் கொடுத்தேன் பாரு, அங்கதான்யா என்னையே வெறுத்தேன்.’
அகாலத்தில் குயில் ஒன்று புலனாகாத இடத்திலிருந்து கூவியது.