தனிமை
♪
நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்து
தனிமையை ஒரு இரவாக வரைந்தேன்
இரவிற்கு
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது
தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது
இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாறலாம்.
குளிர்
♪
இது மூன்றாம் ஜாமம்
நான் தற்செயலாக எழுந்திருக்கவில்லை
அப்படி எழுந்திருப்பவனுமல்ல
என்னை யாரோ
எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் நினைக்கலாம்
என்னை நான் எழுப்பி இருக்க வேண்டுமென
நீங்கள் யூகிக்க முடியாது
நான் நன்றாக தூக்கத்திலிருந்ததை
நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இப்படி முடிவிற்கு வரலாம்
மழை நாட்கள் என்பதால்
ஒரு குளிர் என்னை
எழுப்பி இருக்கலாம்
அல்லது நுளம்புகள் சில
எழுப்பி இருக்கலாம்
நுளம்பு எழுப்புவதற்கு வாய்ப்பில்லை
வலையை கட்டிலில் மனைவி
சென்ற வாரந்தான்
ஒரு கூடாரம் போல் அமைத்திருந்தாள்
அப்படியெனில்
குளிர்தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும்
குளிரை இனி அருகி்ல் வைத்திருக்க முடியாது
அதனை குளிர்ச் சாதனப் பெட்டிக்குள் வைக்க வேண்டும்
குளிர் என்னிடம் இருக்கிறது
மன்னிக்கவும், பெட்டி உங்களிடம் இருக்கிறதா.