1
நில்லுங்கள்
தவறான வழிகாட்டுதலின்படி இங்கே வந்துள்ளீர்கள்
பொறுத்திருங்கள்
வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால்
சற்று பொறுத்திருங்கள்
ஓய்வெடுங்கள்
இந்த இடத்தினை அடைவதற்கு எவ்வளவு தடைகளை எதிர்கொண்டீர்கள்
கவனியுங்கள்
எதிர்ப்படுபவர்களில் யாரேனும் கடவுளாக இருக்கலாம்
இறக்கி வையுங்கள்
சுமைகளை இன்னும் சுமந்து கொண்டு இருக்காதீர்கள்
விழித்துக் கொள்ளுங்கள்
வாழ்க்கைக் கனவு உண்மையென நம்பிவிடாதீர்கள்
உணர்ந்து கொள்ளுங்கள்
இந்த உலகம் மனத்திரையில் விரியும் சித்திரம்தான் என
ஏமாந்துவிடாதீர்கள்
உடலெடுத்ததன் நோக்கமே சுகம் அனுபவிக்கத்தான் என்றெண்ணி
ஓடாதீர்கள்
உங்களைப் பின்தொடர்ந்து வருவது கடவுள்தான்
கலங்காதீர்கள்
பாவக் கணக்கைத் தீர்க்க பலமுறை பிறந்துதான் ஆகவேண்டும்
விலக்கி வையுங்கள்
வெற்றி மகுடத்தைக் கைப்பற்ற தவறான வழிகாட்டும் மனிதர்களை
ஓய்வெடுங்கள்
வாழ்க்கையில்பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் மரணம் இளைப்பாறுதல் தரும்
துறந்துவிடுங்கள்
பெண்ணாசையால் கடவுளைத் தேடும் பாதையிலிருந்து விலகிவிடுவீர்கள்
நம்பிக்கை வையுங்கள்
பிதாவானவர் ஒருபோதும் மனுஷகுமாரனைக் கைவிடமாட்டார்
புரிந்துகொள்ளுங்கள்
நரக இருள் கவிந்த பூமியை சுவர்க்கமாக்குவது
உங்கள் கைகளில்தான் உள்ளது.
2
நாளைய பொழுதை எதிர்கொள்ள தயக்கமாக உள்ளது
ஒவ்வொரு விடியலும் வேதனையைத் தருகிறது
மனதின் லகான் இப்போது என் கையில் இல்லை
பெண் போதையிலிருந்து என்னால் மீள முடியவில்லை
அழகான பெண்களின் உள்ளிலிருந்து
ஆண்டவன் என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்
நான்கு பேருக்கு மத்தியில்
கேலிப் பொருளாகிவிடுவேனோ என பயமாக உள்ளது
வருமானத்திற்கு வழி ஏதுமில்லை
குடும்ப பாரம் மலையென கனக்கிறது.
பிறப்புக்கு மனிதனின் விருப்பம் கேட்கப்படுவதில்லை
சாவை அவன் கூவி அழைத்தாலும் வருவதாய்த் தெரியவில்லை
வாழ்க்கை மனிதனை நூல்கொண்டு ஆடும் பொம்மையாகத்தான்
ஆக்கி வைத்திருக்கிறது
வேதாளம் போடும் விடுகதைக்கு அவனுக்கு விடை தெரியவில்லை
இல்லறம் துறந்து துறவறம் பூணலாம் இருந்தும்
மயக்கும் கன்னிகள் அவனைக் கனவில் துரத்தத்தான் செய்வார்கள்
உலகைவிட்டு வெளியேற வழி தெரியவில்லை
தீர்ப்பு எழுதியவனுக்கே தண்டனைக் காலம்
எப்போது முடியுமென்று தெரியும்
என் பாவக்கணக்கைத் தீர்க்க
குருடனாய் ஒருநாளும்
செவிடனாய் ஒருநாளும்
முடவனாய் ஒருநாளும் காலத்தைக் கழிக்கிறேன்
கைவிடப்பட்ட எனக்கு வேறு கதியில்லை
இறைவனைக் கூவி அழைத்தாலும் வருவதாய்த் தெரியவில்லை.
3
இந்த மாலையில் என் மன பாரத்தை
இறக்கி வைக்க தகுந்த இடம் தேடுகிறேன்
துரத்தி வரும் மரணத்தை மறந்து
மக்கள் கேளிக்கைகளிலும், களியாட்டங்களிலும்
தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்
இந்த மண்ணில்தான் காலணிகளைக் கூட
அணியாமல் உச்சிவெயிலில் புத்தர்
நடந்து சென்றிருப்பார் அல்லவா
இதோ இந்த புத்தவிஹாரம்தானே
இயேசுவை கிறிஸ்து ஆக்கியது
காந்தி அகிம்சையை ஆயுதமாகப்
பயன்படுத்தியதால்தானே நமக்கு சுதந்திரம் கிடைத்தது
குருட்ஷேத்திர பூமிதானே திராவிடம் அழிவதற்கு வித்திட்டது
சமாதானத்தைப் போதித்தவருக்கு இந்த
சமூகம்தானே சிலுவையை பரிசளித்தது
சத்தியத்தை உயிராக மதித்தவருக்கு கடைசியில்
துப்பாக்கித் தோட்டாக்கள் தான் பரிசாகக் கிடைத்தது
எல்லையற்ற வானவெளியில் சிறுதூசுதானே இந்தப் பூமிப்பந்து
எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும்
ஆயுளை ஒரு நொடியாவது நீட்டிக்க முடியுமா?
கடவுளின் படைப்புகள் பூரணமடையாததற்கு
என்ன காரணம் என்று நாம் யோசித்துப் பார்த்தோமா?
நீர்க்குமிழிகள் திரும்பவும் கடலில்தானே கலக்க வேண்டும்
பரிசுத்தமான ஆத்மாவைக் கண்கள் காட்டிக் கொடுப்பதில்லையா
சடங்குகள் மூலம் கடவுளைத் திருப்திப்படுத்திவிட முடியுமா?
கடவுளின் கைப்பாவைதான் நிழல்
அதனால்தானோ எட்டப்பன் வேலை செய்கிறது
இயேசு யூதாசுக்கு நன்றிக் கடன்பட்டவர்
அவனால்தான் இயேசுவால் மரணத்தை வெல்ல முடிந்தது.
4
எல்லைமீறும் போதெல்லாம் மனதின்
உள்ளிருந்து மணியோசை கேட்கிறது
வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம்
அளிக்கவேண்டும் எனத் தெரியவில்லை
வாழ்க்கையில் சிகரத்தை அடைய
வேண்டுமென்றால் யாரையும் துணை சேர்க்கக் கூடாது
நம்முடைய காரியங்களை விரைந்து முடித்துவிட வேண்டும்
எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம்
விதியின் கைகளில் மனிதன் மைதானத்துப் பந்தாய் உதைபடுகிறான்
இந்தக் கனவுச்சிறையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் எண்ணம்
யாருக்கும் இல்லை
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடாமல்
வயிற்றை நிரப்பிக் கொண்டு இருக்கிறான்
மனிதனுக்கு சுதந்திரம் தேவையில்லை
மஞ்சத்தில் கன்னியரோடு வீழ்ந்து கிடந்தாலே அவனுக்கு போதும்
அமிர்தத்துக்கும், மலத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஈக்களைப்
போன்றவன்தான் மனிதன்
செய்த தவறுக்கு குற்றவுணர்ச்சி கொள்பவர்களை இதுவரை நான்
சந்தித்ததே இல்லை
கடவுள் தனக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பார் என நம்புகிறான்
மனிதன் கர்வப்படும்போதெல்லாம் மாரன் தனக்குத்தானே
சிரித்துக் கொள்கிறான்
சுகபோகத்துடன் வாழ்பவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது
தவித்துத்தான் போவார்கள்
மரணம் உன் கோப்புகளைப் படிக்காது
நீ பிச்சைக்காரனா, பேரரசனா என அதற்குத் தெரியாது
பேரழகிகளாக உன் கண்ணுக்குத் தெரிபவர்களெல்லாம்
மரண தேவதைகளாகத்தான் பூமியில் அலைகிறார்கள்.
5
கடிகார முட்கள் நத்தை போல் நகர்ந்து கொண்டிருக்கின்றன
விட்டத்தில் மின்விசிறி சுற்றிக் கொண்டிருக்கிறது
முள் படுக்கையில் படுத்திருப்பதைப் போன்ற உணர்வு
என்னை நானே அமைதிப்படுத்திக் கொள்ள முயல்கிறேன்
மனம் கடந்தகாலக் குப்பைகளை கிளறிக் கொண்டிருந்தது
யாராவது தன்னை மடியில் வைத்து
தாலாட்டமாட்டார்களா என மனம் ஏங்குகிறது
உறக்கமில்லாத இந்த இரவு நரகத்தைவிடக் கொடியதாகப்படுகிறது
சபிக்கப்பட்டவனாக நான் இருப்பதினாலேயே
இப்போது பரிதவித்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்வு என்பது கடவுள் எனக்குத் தந்த கொடூரத்தண்டனையாகப்படுகிறது
மரணம் ஒன்றே எனக்குத் தரும் பரிசாக அமையும்
இறப்பிற்குப் பிறகான வாழ்க்கையிலாவது எனக்கு இளைப்பாறுதல் கிடைக்கட்டும்
கடவுளிடம் நான் பிரார்த்திக்கிறேன்
எனக்கு இப்போது தேவை உறக்கம் மட்டுமே
துயிலலைகளில் மனிதர்கள் மூழ்கி இருக்கும்போது
நான் மட்டும் மிதந்து கொண்டிருக்கிறேன்
வாழ்க்கைப் பயணத்தில் இறங்குமிடத்தை நிர்ணயம் செய்வது
என் கையில் இல்லை
என்னைத் தவிர எல்லோரும் பேட்டரி மூலம் இயங்கும்
இய்ந்திரமாகத்தான் தெரிகிறார்கள்
என் அகந்தையைக் கொல்வதற்காகவே
இறைவன் என்னை இங்கே அனுப்பியிருக்கக்கூடும்
சரணடைந்துவிட்டேன்
இனி என் பெயரைச் சொல்லிக்கொண்டு
இங்கு இறைவன் வாழ்ந்து கொள்ளட்டும்.