1
என்னை விட்டு அகலுங்கள்
மரணதேவதை என்னை வந்தடையட்டும்
இந்தப் பாவிகளை விட்டு தூரப் பறக்க மரணம் எனக்குச் சிறகுகள் தரும்
வாலிபத்தில் இலை போல இலகுவாக இருந்த உடம்பு
வயோதிகத்தில் இரும்பென கனக்கிறது
கடந்த காலத்தில் நான் செய்த பாவகாரியங்களை நினைவுகள்
ஞாபகப்படுத்தி என்னைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்கின்றன
மரணம் என்னிடமிருந்து பிரித்துக் கொண்டவர்களை எண்ணி
துயரத்தில் ஆழ்கிறது என்மனம்
பசி வேளையில் எனக்கு உணவளித்தவர்களை
நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்
எனக்குள் காதலை விதைத்தவளை நான் இறப்பதற்கு முன்
இன்னொருமுறை பார்க்க வேண்டும்
எந்த எதிர்பார்ப்புமின்றி என்னை
வளர்த்தெடுத்த என் அன்னையின்
பாதங்களைக் கண்ணீரால் கழுவுகிறேன்
வயிறு நிறைந்தால் போதுமென்றிருந்த என்னை எழுப்பி எனக்குள்
அறிவுத்தாகத்தை ஏற்படுத்திய குருமார்களை
என்னால் மறக்க முடியுமா?
எனது காதலை அவள் ஏற்க மறுத்தாலும்
அவள் ஏற்றி வைத்த நெருப்புதான்
இன்றும் என் நெஞ்சில் கனலாக
எரிந்து கொண்டிருக்கிறது
எனது கவிதை நதிக்கு அணை போட்டுவிட்டது மரணம்
எனது கடைசி கவிதையை
காற்றில் கைவிரல்களால் எழுதிச் செல்கிறேன்
விரக்தியின் உச்சத்தில் இருப்பவர்களுக்குத் தான்
அந்தக் கவிதையின் பொருள் விளங்கும்.
2
நான் எப்படி பைத்தியக்காரன் ஆனேன்
இந்த உலகம் முகமூடி அணியாதவர்களை
என்ன பெயர் சொல்லி அழைக்கும்
பந்தயத்திலிருந்து விலகி வேடிக்கைப் பார்ப்பவனுக்கு என்ன பெயர்
நினைத்ததை அடைவதற்கு எதையும் செய்யத் துணிந்தவர்கள்
மத்தியில் உண்மையின் பாதையை
தேர்ந்தெடுத்தவனுக்கு வேறென்ன பெயர்
தோற்றத்தில் மயங்கும் கன்னிகைகள்
என் அவலட்சண உருவத்தைப் பார்த்து
என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள்
பணத்தின் மூலம் எதையும் சாதித்துக் கொள்ளும் உலகில்
நான் இன்னும் பிச்சைக்காரன் தானே
ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தியடிக்கப்பட்ட ஆதாமின்
சந்ததிகள் தானே நாம்
மனிதன் தன்னை கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்க
நான் மட்டும் என்னை ஏன் பாவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்
என் எதிரிகள் என்னிடத்தில் மட்டும் எப்படி தங்களை
கடவுளாக நிரூபித்துக் கொள்ள முடிகிறது
எல்லா மனிதர்களுக்கும்
நான் ஏன் அடிமையாக இருப்பதற்கு நிர்பந்திக்கப்படுகிறேன்
கேளிக்கை விடுதியாகிவிட்ட இந்தப்பூமியில்
கடவுளைத் தேடிக் கொண்டிருப்பது என் தவறா?
மனம் தூய்மையாக இருந்தால் போதும் இறைவன் வசிக்க
வான்முட்டும் ஆலயங்கள் எதற்கு என்று கேட்டது தவறா?
மனசாட்சியின் குரலுக்கு யாரும் மதிப்பளிப்பதில்லையே ஏன்
எனக்கு அளிக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளில்
நான் ஏன் மரணத்தைத் தேர்ந்தெடுத்தேன் என்று
என்னிடம் நீங்கள் கேட்டிருக்கலாமே
சமீபகாலமாக என் வீட்டைச் சுற்றி இருப்பது கடவுளின் காலடியா?
பொய்யான உலகத்தில் பொம்மைகளோடு விளையாடிக்
கொண்டிருப்பவர்கள் தானே நாமெல்லோரும்
இந்தக் கல்லறைத் தோட்டத்திற்கு கடவுள் தான் காவலாளியா?
இந்தப் பைத்தியக்காரனிடம் கடவுள் ஏன் பேசிக்கொண்டிருக்கிறார்?
கடவுள் பரிசளித்த இந்த உடலை பாவ காரியங்களுக்கு
பயன்படுத்திக் கொள்வது தவறல்லவா?
பைத்தியக்காரர்கள் வரிசையில் கடவுளுக்கு அடுத்தபடி
என் ஒருவனின் பெயர்தானே இடம்பெற்றிருக்கிறது
இந்த உலகம் விழித்துக் கொண்டே
நாம் காணும் கனவு என்று இறைவன் உங்களுக்கும்
புரியவைப்பான் அல்லவா?
என்னுடைய மரணக் கவிதைகளுக்கெல்லாம்
கடவுள்தானே முற்றுப்புள்ளி வைக்கின்றான்
கடவுள் இந்த உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வரை
என்னை பைத்தியக்காரனாகத்தானே அலைய வைப்பான்
இந்த உலகின் அதிபதிக்கு அடிமை சேவகம் செய்வதற்கு
நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தானே
என்னை புறக்கணித்துவிடலாம் எனக்குப் பிறகு வருபவனுக்கு
நீங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
3
நீ எனக்குத் தந்த வாய்ப்புகளையெல்லாம்
நான் பயன்படுத்திக் கொள்ளவில்லை
என்னை விட்டுவிடு வாழ்க்கையின் அநித்யத்தை
நான் உணர்ந்து கொள்ளவில்லை
பெண்களின் வதனங்களிலேயே மயங்கிக் கிடந்துவிட்டேன்
பிறமனிதர்கள் வியக்கும் வண்ணம்
வாழ வேண்டுமென்பதே என் குறிக்கோளாக இருந்தது
விதி வகுத்தவன் என் முன்பு வந்து நிற்பான் என்று
கனவில் கூட எண்ணியதில்லை
இதுநாள் வரை தவறு செய்கின்றோமே என்ற
சின்ன உறுத்தல் கூட என்னிடம் இருந்ததில்லை
இரைக்கு ஆசைப்பட்டு கடவுள் வைத்த பொறியில் சிக்கிக்கொண்டேன்
பலமுறை என் எதிரில் வெளிப்பட்டும் கடவுளை
என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை
நியாயந் தீர்க்க கடவுளுக்கு மட்டுமே அதிகாரம் உண்டென்று
இப்போது தான் எனக்குப் புரிந்தது
பொக்கிஷமாக நான் நினைத்ததெல்லாம் உப்புக்குப் பெறாதவை
என்ற உண்மை இப்போதுதான் எனக்கு விளங்கியது
வாழ்க்கைப் புத்தகத்தில் என் பக்கத்தை யாரும் வாசிக்க வேண்டாம்
உண்மை கசப்பாகத்தான் இருக்குமென்று இறைவன்தான்
எனக்கு உணர வைத்தான்
நான் முக்கியத்துவமளித்து செய்ததெல்லாம் என்னை
வருத்தப்படச் செய்துவிட்டன
புலன்கள் என்னை இழுத்துச் சென்று நாற்சந்தியில் நிறுத்திவிட்டன
என்னை இழுத்துச் செல்வதற்கு மரண அலைகள் வந்துவிட்டன
வாழ்க்கையில் ஒவ்வொருநாளும்
பொக்கிஷமென்று இப்போதுதான் நான் உணருகிறேன்
ஒவ்வொரு தோல்வியிருந்தும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள தவறிவிட்டேன்
நெறிதவறி வாழ்ந்த எனக்கு மரணத்திற்கு பிறகான வாழ்வு நிம்மதி தராது
என் ஆத்மாவின் ராகங்களை நிச்சயம் அவள் கேட்டு கண்ணீர் வடிப்பாள்
வெளியேறும் வழி தெரியாதவரை நாமெல்லோரும் அடிமைகள்தானே
அவளை முத்தமிட்டுச் செல்லும்
அலைகளில் என் கண்ணீரும் கலந்திருக்கும்
விதியின் கைகள் மனிதர்களை பொம்மையாக ஆட்டுவிக்கிறது
இறந்த பின்னும் அவள் சிரிப்பொலி
என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
என்னைச் சுற்றிலும் மனிதர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்
இமை திறக்க முடியாத ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் எனக்கு
கடவுளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கிறது
பாவிகளின் கூடாரத்திலிருந்து எனக்கு கிடைத்த விடுதலையை
பின்னொரு நாளில் நீங்களெல்லோரும்
விழாவாக கொண்டாடுவீர்கள்!
4
மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்படாதா
தேவ வசனம் எனது காதுகளில்
ஒலித்துக் கொண்டிருக்கிறது
உண்மையின் பாதையில் செல்லும் துணிச்சல்
ஒரே ஒருவருக்குத்தான் இருந்தது
வாழ்க்கையின் வேர்களாக இருக்கும்
அவரை உங்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறதா
நீ விதைத்த விதை முளைவிட எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்
மலர்ச்சியான உன் திருமுகத்தைக் காண
எனக்குத்தான் கொடுப்பினை இல்லை
உன்னைக் கருவில் சுமந்தவளை
எண்ணிக் கண்ணீர் வடித்திருப்பாய் அல்லவா
ஒரே தேவ ஆட்டுக் குட்டியையும்
தொலைத்துவிட்டதல்லவா இந்த உலகம்
ஏதேனும் ஒரு சமயத்தில்
எதேச்சையாக எதிர்ப்பட நேர்ந்தால்
என்னைப் பார்த்து புன்னகை புரிவாயா
உன்னைப் பின்தொடர்ந்தவர்களெல்லாம்
என்னைப் போன்ற விளிம்புநிலை மனிதர்களதானே
எனக்கு வேறெதுவும் வேண்டாம்
உனது நிழலில் இளைப்பாறுவதே எனக்கு ஆறுதலளிக்கும்
என் மரணத்திற்குப் பிறகு என்னவர்கள் என்னைப் புறக்கணித்தாலும்
உனது கூடாரத்தில் நீ எனக்கு அடைக்கலம் தரவேண்டும்
5
உனது இரத்தக்கறைப் படிந்த
சிலுவையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
உனது உதிரத்தால் புனிதமான மண்ணல்லவா இது
நீ அன்று கேட்டதைப் போலவே
நான் இன்று உன்னைப் பார்த்துக் கேட்கிறேன்
என்னை ஏன் கைவிட்டீர்
உனது தாயின் துயரம் என்னவென்று
ஒரு குழந்தைக்குத் தந்தையான
என்னால்தான் உணர முடியும்
ஆணியை அடிக்கும்போது உனக்கு வலித்திருக்குமே எப்படி
பொறுத்துக் கொண்டிருப்பாய்
உன்மீது காறி உமிழ்ந்தவர்களிடம்
சொல்லி இருக்கலாமே நீதான் கடவுளென்று
உன் உதிரம் பட்ட மண்ணை என் கல்லறையில் தூவுவார்களா
என் மரணத்திற்குப் பிறகு என் கண்களை மூடாதீர்கள்
அவன் வாழ்ந்த உலகத்தை நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்
உனது மரணத்தின் துயரிலிருந்து
இந்த உலகம் இன்னும் மீளவில்லை
உயிர் பிரியும் தருணத்தில் உனது கண்கள் யாரைத் தேடியிருக்கும்
முள்முடி தரித்த உன் ஒருவனால்தானே
இந்த உலகத்தில் உயிர்த்தெழ முடிந்தது
துயரச்சிலுவையை நான் ஒருவன் மட்டுமே இவ்வுலகில்
சுமந்து கொண்டிருக்கிறேனே ஏன்
உன் குரலுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன்
நீ என்னை எப்போது அழைப்பாய்?