மேகபுரி சாகசம்
‘ஹி வாஸ் டிராப்புடு பிகாஸ் ஆப் ஹிஸ் பார்ம். பார்ம், தட் மீன்ஸ் அவன் ஒடம்பு ஷேப்ல ஏதோ பிராப்ளம், சரியில்ல. அதனால அவன டீம்லேந்து எடுத்துட்டாங்க.’ உடலை இடுப்பருகில் வளைத்து மேற்பகுதியை குறுக்கி, ‘பார்மில்’ ஏற்படக்கூடிய பிரச்னையை செவென்-எப் வகுப்பறையில் மைக்கேல் சார் விளக்கிக் கொண்டிருந்தார்.
தலையை குனிந்தபடி சந்துரு பக்கம் திரும்பி, ‘என்னடா பார்ம்க்கு இப்படி ..’ என்று சொல்ல ஆரம்பித்து, ஜன்னலுக்கு வெளியே வானில் மூக்குரசிக் கொண்டிருந்த பழுப்பு நிற ஆமையையும் பன்றிக் குட்டியையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டவன், ‘என்னடா’ என்று கேட்ட சந்துருவுக்கு பதில் சொல்லாமல் தலையசைத்தான். சில மாதங்களாக,எதைப் பற்றிய பேச்சு எழுந்தாலும் இடைச்செறுகலாக ஸார் சொல்லும், ‘ஒங்கள விட மூணு நாலு வயசு தான் பெரியவன் சச்சின் பாத்துக்குங்க’விற்குச் சென்று விட்டார்.
நோட்டில் எழுதுவது போல் குனிந்து மீண்டும் வெளியே பார்த்தபோது, வாலும், பின்னங்கால்களும் மறைந்துவிட்ட பன்றிக்குட்டி, முதலையாக மாறிவிட்ட ஆமையுடன் முகமுரசிக் கொண்டிருந்தது. இரண்டைச் சுற்றியும் சுற்றி புதிதாக இன்னும் சில மேகங்கள் வெவ்வேறு உருவங்களில். ‘நீங்களும் சச்சின் மாதிரி யுங் ஏஜ்லையே அச்சீவ் பண்ணனும்’. சிறிது நேரம் முன்பு வரை உணராத குளிர் வகுப்பறையில். க்ளாஸ் நோட்டில் எழுதிக் கொண்டிருக்கும் பக்கத்தின் வலதோர நுனியைப் பிய்த்து வாயில் போட்டு மென்றவன், பின் இடது உள்ளங்கையால் வாயை மூடிக் கொண்டு இரண்டு மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு, ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டுமென்ற உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஸார் பின்னாலிருக்கும் கரும்பலகையின் மீது முழு கவனத்தை செலுத்தினான்.
பலகையில் இன்று பூத்திருந்த ஐம்பத்தி எட்டு ‘பட்ஸும்’ மறைந்து மைதானத்தில் பேட் செய்து கொண்டிருக்கிறான். வகார் யூனிஸின் பந்து முகத்தில் மோதி விழுபவனின் அருகே பதறி வருகிறார் சச்சின். சமாளித்து எழுந்து தொடர்ந்து ஆடுவதாகச் சொல்பவன் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்க, சச்சின் உற்சாகமாக அவன் தோளில் குத்துகிறார். டெஸ்ட் டிராவில் முடிந்ததில் இவனுடைய பங்கை அனைவரும் பாராட்டுகிறார்கள். அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட ஒருநாள் போட்டியில் அப்துல் காதிரின் பந்து வீச்சை துவம்சம் செய்கிறான். ஒரே ஓவரில் மூன்று நான்கு சிக்ஸர். அடுத்த பந்திற்காக காத்துக் கொண்டிருந்தவனின் எதிரே, காதிருக்கு பதிலாக ரிக்க்ஷா தாத்தா சாக்கை தலையில் போர்த்திக் கொண்டு மெல்ல நடந்து வர, பேட்டை கீழே போட்டு விட்டு மைதானத்திலிருந்து ஓடி, மாம்பலம் கிரி ஸ்ட்ரீட்டிற்குச் சென்று, கார்கால நாளொன்றின் மாலை நேர மழைக்குள் நுழைபவனுக்கு இப்போது ஆறு வயது.
அம்மா வேலை முடித்து வர வீட்டில் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறான். இவனைப் பள்ளிக்கு ரிக்க்ஷாவில் அழைத்துச் செல்லும் தாத்தா, சற்றே கூன் போட்ட, உயரமான உடலின் மேற்பகுதியை மட்டும் போர்த்தியிருக்கும் சாக்குடன் மழையினூடே தள்ளாடியபடி நடந்து வந்து இவன் போர்ஷன் முன் நிற்கிறார். ஏதோ சொல்ல ஆரம்பிப்பவரின் குரல் உயர, அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் மாமியின் தலையீட்டுக்குப் பின் திரும்பிச் செல்கிறார். பின் அம்மாவும் அடுத்த போர்ஷன் மாமியும் பேசிக் கொண்டதை கேட்டதில் ரிக்க்ஷா வாடகை, குடி போன்ற வார்த்தைகள் காதில் விழுகின்றன. மழை தொடர்ந்த அடுத்த இரு நாட்களும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்து பின் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவன் அந்த பள்ளியாண்டில் மீதி இருந்த மூன்று மாதங்களும் தாத்தாவின் முகம் பார்க்கவே -அவர் பலமுறை தானாகவே பேச்சு கொடுக்க முயன்றபோதும் – பயந்தான். அந்த ஏப்ரல் மாதம்தான் செங்கல்பட்டிற்கு குடி பெயர்ந்தார்கள்.
இறுதி பெல் அடித்தது. சந்துரு பேசியபடி வர, வானை பார்த்தபடியே முதல் தள வராண்டாவில் நடந்தான். இந்த ஆறு வருடங்களில் தாத்தாவின் முகத்தை மறந்து விட்டாலும், மழை மேகங்களினுள் சாக்கைப் போர்த்திக் கொண்டு தள்ளாடியபடி நடந்து வரும் அவருடைய நெடிய உருவத்தை இன்றும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.
‘எங்க போற, இரு’, என்று சந்துரு சொல்ல நின்றான். சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு வந்திருந்தார்கள். ‘நான் போயிட்டிருக்கேண்டா, நீ வண்டிய எடுத்துட்டு வா’, என்றிவன் சொல்ல, ‘என்ன அவசரம், வெயிட் பண்ணு’, என்று ஸ்டேண்ட்டினுள் நுழைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சந்துருவும் சேர்ந்தான். வெளியேறிக் கொண்டிருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தவன், பெண்கள் பக்கத்திலிருந்து உமா சைக்கிளில் வர வேறு பக்கம் பார்வையை திருப்பி, அவள் தன்னை கடந்து செல்ல தேவைப்படக்கூடிய கணங்கள் கழித்து, திரும்பி அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆறாவதில் இருந்தே பள்ளிக்கு சைக்கிளில்தான் வருகிறாள், பி.எஸ்.ஏ. எஸ்.எல்.ஆர். அவள் வீட்டில் கார்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். வானில் மேகமொன்றிலிருந்து துதிக்கை நீட்டிக் கொண்டிருந்தது. ‘வாடா,’ என்று சந்துரு சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான். காலையில் பள்ளிக்கு வரும்போது மட்டும்தான் அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வருவான், மாலையில் அதை தள்ளிக் கொண்டே இவனுடன் நடைதான்.
‘டபுள்ஸ் போலாமாடா, மழ வர மாதிரி இருக்கு, சீக்கிரம் போயிடலாம்’.
‘சரி வா’, என்று சந்துரு சொல்ல, பின்னால் அமர்ந்து கொண்டான். செட்டித் தெருவில் சந்துரு வீடு வந்தவுடன் ‘வரேண்டா நாளைக்கு பாக்கலாம்’ என்று கிளம்பியவனிடம், ‘தண்ணி குடிச்சுட்டு போடா’, என்று சந்துரு கேட்க, ‘இல்ல மழ ஆரம்பிக்கறதுக்கு முன்ன போய்டறேன்’, என்று சொல்லிவிட்டு இப்போது எந்த உருவமும் தென்படாத, முழுதும் ஒற்றை அடர் பழுப்பு நிறமாகிவிட்ட வானை அவ்வப்போது பார்த்தபடியே விரைந்தவன், செட்டித் தெரு முனையை அடைந்து பெரிய மணியக்காரத் தெருவிற்குள் நுழைய சாலையை கடக்கும்போது இடி சப்தம் கேட்டு பாய் கடையருகே ஒதுங்கி வானத்தைப் பார்த்தான்.
வெண்ணிறமும் சிகப்பும் கலந்த சற்றே கிறுக்கலாக எழுதப்பட்ட ‘Y’ போலிருந்த மின்னல், மறையும் முன் வானின் சிறு பகுதியை விண்டு விட்டுச் செல்ல, பிரிந்த அந்தப் பகுதி தன் பழுப்பு நிறத்தை இழந்து வெள்ளை நிற யானையாக மாறி, மெல்ல மிதந்தபடியே அதன் துதிக்கையை அங்கிருந்து இவனை நோக்கி நீட்ட, அதைப் பற்றிக் கொண்டவனை உயர்த்தி தன் மேல் அமர்த்திக் கொண்டு மீண்டும் வானுடன் இணைந்து உள் நுழைந்தது.
‘இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல ட்யூட்டி ஆரம்பிக்கணும், என்னமா குளுருது’ என்று தன் வட்ட உடலைச் சிலுப்பியபடி சொல்லிக் கொண்டிருந்த நிலவிலிருந்து சில நீர்த்துளிகள் இவன் மீது பட்டன. முதலில் நிலவிடம் இவனை அறிமுகம் செய்து வைத்த யானை, ‘அங்க யார் வரா பாரு’, என்று சுட்டிய திசையில் நோக்கினான். நட்சத்திரக் கூட்டமொன்று இணைந்து கரடியாக மாறி இவனை நோக்கி வந்தது. ‘ஏன் பயப்படற, ஷேக் ஹாண்ட் பண்ணு’ என்று யானை சொன்னதைப் போல் செய்தான். ‘வா என் மேல ஏறிக்கோ’ என்று கரடி அழைக்க, தயங்கியவனை யானை சிறு குன்று போலிருந்த மேகத்தின் மீது அமர வைத்தது. ‘யாரு புதுசா இருக்கு’ என்றபடி வந்த ஆமையொன்று ‘இவங்க ரெண்டு பேரையும் விட நான் ஸ்பீடா போவேன், என் மேல ஏறிக்கோ’ என்று கூறியதற்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தவனிடம் ‘யோசிக்காத, நான் மலையையே முதுகுல சுமந்த பரம்பரைல வந்தவன் தைரியமா வா’ என்று மேலும் கூறியது. ‘உக்கும் இதையே எத்தனை யுகத்துக்கு இதே புராணத்த சொல்லப் போறானோ’. யானையின் குரல். ‘சும்மா பேசக் கூடாது ரேஸ் போலாமா’ என்று ஆமை அறைகூவல் விடுக்க ஓட்டப்பந்தயம் ஆரம்பித்தது.
போட்டோ பினிஷ். ‘நான்தான பர்ஸ்ட்’ என்று மூச்சிரைத்துக் கொண்டே யானை இவனிடம் கேட்க, ‘ஒடம்ப குறை மொதல்ல, நீ லாஸ்ட்’ என்றது ஆமை. ‘இவன் சின்னப் பையன், இரு நான் அவர கேக்கறேன்’ என்று அங்கே தோன்றியிருந்த விண்மீன் கூட்டத்தைச் சுட்டி யானை அழைத்ததும், அவை வில்லேந்திய ஆணாக உருப்பெற, அவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். ‘இவர் பெரிய ஹன்டர், பேரு ஒரயன்’ என்று இவனிடம் நிலவு கூறியதும், ‘நம்மூர்ல கூப்பிடற பேர சொல்லு, இவர் பேரு ம்ரிகா’ என்று ஆமை இடைமறித்தது. ‘நீ இந்த இடத்த விட்டு நகர மாட்ட, நான் எல்லா எடத்துக்கும் போகணும். ஒவ்வொரு எடத்துல ஒரு பேரு இவருக்கு, எனக்கே எங்க எந்த பேர்ல இவர கூப்பிடனும்னு குழப்பம் உண்டு’, என்று நிலவு சொன்னது. ‘ஏதோ ஒரு பேரு விடு, யாரு ஜெயிச்சாங்க அத சொல்லுங்க,’ என்று யானை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் தூறல்கள் ஊடுருவ நிலவு சிலிர்த்தது. மேகக் குன்றிலிருந்து அவசரமாக இறங்கி தடுமாறியபடி ஓட ஆரம்பித்தவனைத் தடுத்த வேட்டைக்காரர், ‘இரு பயப்படாதே’ என்று கூறிவிட்டு வளைந்த நீண்ட வாளை இவனிடம் தந்து, ‘விக்கிரமாதித்யன் உபயோகித்த, தேவியின் அருள் பெற்ற, வாள் இது’ என்று சொல்ல, கையில் அதை ஏந்திக் கொண்டான். ‘எலுமிச்சைப் பழம் என்னாச்சு அழுகிடுச்சா’ என்று கரடி கேட்டதற்கு யானை பிளிறிச் சிரிக்க, ‘சும்மாருங்க ரெண்டு பேரும்’ என்றது நிலவு. இவனை நோக்கி வந்த மழைக் கணைகளை வாளால் இன்னும் சின்னஞ் சிறிய சிதறல்களாக துண்டாக்க ஆரம்பித்தான்.
‘போதும், முடிந்து விட்டது அங்கே பார்,’ என்று இவன் தோளைத் தொட்டு நிறுத்தி வேட்டைக்காரர் சுட்டிய திசையில் மேகங்களினுள் ஊடுருவிக் கொண்டிருந்த நிறச்சேர்க்கையைப் பார்த்து, ‘ரெயின்போதான அது’, என்று கேட்டான்.’ஆமாம், போய் அதை எடுத்துட்டு வா, பயப்படாத’ என்றவர் சொல்ல, கரடியின் மீதேறி அமர்ந்தவன், வானவில்லின் அருகில் சென்று வளைந்த அதன் நடுப்பகுதியில் கை வைத்து அரைவட்டமாக பிடித்து எடுத்தான். அப்போது தோன்றிய மின்னலிழையொன்றை தும்பிக்கையால் பிடித்திழுத்து இவனிடம் நீட்டி, ‘இந்தா இதை அம்புக் கயிறா கட்டிக்கோ’ என்றது யானை. வேட்டைக்காரர் உதவியுடன் நாண் பூட்டியபின் ‘அம்பு’ என்று கேட்டவனிடம், ‘தோ’, என்று நீண்ட இடித்துண்டொன்றை அவர் நீட்ட, அதை வானவில்லில்
பொருத்தினான். ‘நல்லா காது வரைக்கும் இழு அறுந்துடாது’, என்று வேட்டைக்காரர் சொல்ல, பின்கழுத்து வரை இழுத்து வேட்டைக்காரரை பார்த்தவனிடம், ‘அங்க விடு’, என்று எதிரே இருந்த மேகத்திரையைச் சுட்டினார். மூச்சை உள்ளிழுத்து, மின்னலம்பைத் தொடுத்தான். பள்ளி மேடையில் நாடகம் தொடங்கும்போது திரைச்சீலை இரண்டாக பிரிவது போல் மேகம் பிளவுபட, கண்கூசச் செய்யும் அடர்மஞ்சள் ஒளிக்கற்றைகள் உள்நுழைந்து அவ்விடத்தை நிறைத்தன. யானையின் பிளிறல் ஓசையுடன், நிலவின் மென்மையான கூக்குரல் இணைந்தது.
‘என்னடா அப்படியே நனஞ்சுட்டே வந்திருக்க, கொஞ்சம் வெயிட் பண்ணி வரக்கூடாதா. மழை நின்னுடுச்சு பாரு, இப்ப திருப்பி வெயிலடிக்குது. சரி போய் ட்ரெஸ் சேஞ் பண்ணு போ’, அம்மாவின் குரல் கேட்ட போது தன் வீட்டு போர்ஷனின் முன் நின்றிருந்தான்.
முகமற்றவர்களின் மர்மம்
‘ரூம்ல நானும், எங்கம்மாவும்தான் இருக்கோம். இவன் தொட்டில்ல. எல்லாருக்கும் தகவல் சொல்ல எங்கப்பா போய்ட்டா. இவன பாக்கவே மாட்டேன்னுட்டு மூஞ்சிய சுவத்து பக்கம் திருப்பிட்டிருந்தா. ம்மா பாரும்மான்னு கூப்படறேன், மாட்டேங்கறா. கொழந்த பொறந்தத நர்ஸ் சொன்னத, பொண் கொழந்த பொறந்ததா புரிஞ்சிண்டு ஒரே வருத்தம். கண்ண தொடச்சுக்கிட்டே ஒக்காந்திருக்கா. எங்கக்காக்கும் பொண் கொழந்ததான். என்னமா பேரன பொறந்துருக்கான், பாக்க மாட்டேங்கறன்னு சொன்னவுடன அப்படியே பாஞ்சு வந்து இவன் மேலே
போட்டிருந்த துணிய தூக்கி பாத்தா பாரு, ஆம்ப்ள கொழந்தடி, ஆம்ப்ள கொழந்தன்னு அப்டியொரு சந்தோஷம்’. சுந்தரி அக்காவிடம் அம்மா சொல்லிக் கொண்டிருக்க, படித்துக் கொண்டிருந்த ‘டின்டின்’ சித்திரக் கதையை மூடி வைத்துவிட்டு போர்ஷனை விட்டு வெளியே வந்தவனுக்குப் பின்னால் உரத்த சிரிப்புடன் சுந்தரி அக்காவின், ‘எல்லாடத்தலையும் இப்படித்தான்’. அம்மா அவ்வப்போது விவரிக்கும் நிகழ்வுதான், ஒவ்வொரு முறையும் கேட்பவர்களுக்கு உண்டாகும் குதூகலமும் பரிச்சயமானதுதான்.
போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டி வந்தமர்ந்தான். அம்மா அந்தச் சம்பவம் குறித்து பேசும்போதெல்லாம் இவனுள் உருவாகும், யாரிடமும் பகிர்ந்திராத, இப்போது தன்னுள் கவிய ஆரம்பிக்கக் போவதை சில கணங்களுக்கு முன்பே உணர்த்தும், நன்றறிந்த சங்கடம்.
அம்மாவின் அம்மா தவறாக காதில் வணங்கிக் கொண்டாள் என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? பிறந்த குழந்தைகள் சின்ன கவனமின்மையால் எளிதாக மாறி விடுவது பல திரைப்படங்களில் வருகிறது. ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரைகூட இந்த பேச்செழும் போதெல்லாம் அன்றிரவு உடல் முழுதும் போர்த்திக் கொண்டு மூச்சுக் காற்றின் ஓசையை கேட்டபடி நெடுநேரம் விழித்திருப்பான். தனக்கும் அம்மா, அப்பாவிற்கும் உள்ள உருவ ஒற்றுமைகளை தேடிப் பட்டியலிட்ட நாட்களும் உண்டு. மூவரின் மாநிறத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் தாத்தியும் சரி, அம்மாவின் அம்மாவும் சரி, நல்ல சிவப்பு என்பதில் வேறொரு குழப்பம். (‘எங்கம்மா மஞ்சள் வெள்ளை, அதான் அழகு வெள்ளை,’ என்கிறாள் அம்மா). ஒருபோதும் உறுதியான முடிவுக்கு வர முடியாத ஒப்பீடு, இப்போது போல்.
‘நல்லா பாத்தேன், இவன போட்டிருந்த தொட்டில் பக்கத்துல சாய் பாபா நின்னிட்டிருக்கார். தல நிறைய முடி, ரெட் ட்ரெஸ். இவனையே பாத்திட்டிருக்கார்’. அம்மா இதையும் இந்த நிகழ்வின் பின்னொட்டாகச் சொல்வதுண்டு. சாய்பாபா வந்து பார்த்திருந்தால் குழந்தை மாற வாய்ப்பே இல்லை, அவர் அப்படியெல்லாம் நடக்க விடமாட்டார், என்றுதான் அவரைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்துள்ளதை வைத்து நம்ப வேண்டியுள்ளது. ஆனால் ‘அதெல்லாம் பிரமை, நீயே அர மயக்கத்துல இருந்திருப்ப. அவருக்காக விரதம்லாம் இருந்தேல்ல, அதான் ஒனக்கு அப்படி தோணி இருக்கு’ என்கிறார் அப்பா.
‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’. போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள். ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. அவர்களின் கைகளின் அசைவிற்கேற்ப குரலின் ஒலி வலுப்பெற அம்மா அழுகிறாள். கால்சட்டை இவனை நோக்கி வர, அவரைத்’ தள்ளி விட்டு வீட்டிலிருந்து ஓடி பெருமாள் கோவில் குளத்தினருகே செல்பவன், அங்கிருக்கும் ஆலமரத்தின் கீழ் இவனுக்கு பரிச்சயமான, சிறுவனா இளைஞனா என்று சொல்லமுடியாத, முன்மண்டையில் குடுமியை செங்குத்தாக நட்டு வைத்திருப்பதைப் போன்ற சிகையமைப்பு உடைய, உலகெங்கும் அலைந்து திரிந்து தீயவர்களை வீழ்த்தும் சாகசக்கார நிருபர், மேலுடம்பில் எதுவும் அணியாத, கொழுத்த தொந்தியுடைய கத்திரிக்காயுடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டு அங்கிருக்கும் மாவு மில்லின் திண்ணையில் நின்று கொண்டு அவர்களை கவனித்தபடி இருந்தவனைப் பார்த்த டின்டின், அருகில் அழைத்தான்.
தன் பிரச்னையை விவரித்தவனிடம், ‘தண்டரிங் தய்பூன்ஸ், ஐ வில் ஹெல்ப் யூ’ என்று டின்டின் சொல்ல, கத்திரிக்காய் இவன் தோளில் தட்டி ‘கவலைப்படாதே, எங்கள் ஆசிரியர் சங்கர்லால் இருந்திருந்தால் மிகச் சுலபமாக இதை தீர்த்து வைப்பார். இப்போது அவர் மணிமொழியின் பிரச்னையை முடித்து வைக்கச் சென்றிருக்கிறார். ஆனால் இவரும் சாதாரணமானவர் அல்ல’, என்று தைரியமளித்தான். ‘ஸ்நோவி வரலையா’ என்று டின்டினிடம் இவன் கேட்க, ‘ஹி மஸ்ட் ஹவ் கம் அக்ராஸ் அ போன்’ என்று சலித்தபடி பதிலளித்து பின்னால் திரும்பி டின்டின் அழைத்தவுடன், டீக்கடையிலிருந்து வெளியே வந்த வெண்ணிற நாய் இவர்களுடன் சேர்ந்து கொண்டது.
‘வீ ஹாவ் டு கோ டு த நர்சிங் ஹோம் பர்ஸ்ட்’, என்று டின்டின் சொன்னதற்கு ‘வண்டி இல்லையே’, என்றிவன் பதிலளித்தான். ‘அதெல்லாம் கிடைக்கும் அங்கே பார்’, என்று கத்திரிக்காய் சுட்ட, ஆலரமரத்தின் அருகே இரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு, மரத்தின் பின்னால் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். ‘லெட்ஸ் டேக் தெம்’, என்று சொல்லிவிட்டு டின்டின், அவற்றில் ஒன்றில் ஸ்நோவியுடன் ஏறிக்கொள்கிறான். கத்திரிக்காயை இவன் ‘டபுள்ஸ்’ அடிக்க, சிறுநீர் கழிப்பதை பாதியில் நிறுத்தி விட்டு வண்டியின் உரிமையாளர்கள் கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்து, பின் களைத்து நின்றுவிடுகிறார்கள். மருத்துவமனையில் நர்ஸிடம் ஏதோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் டின்டின், முழுதும் ஆவணங்களால் நிரப்பப்பட்டிருக்கும் பெரிய அறைக்குள் கத்திரிக்காயுடன் சென்று தேடுகிறான். கையில் கோப்புடன் ‘கிடைத்து விட்டது ஐயா’, என்று உரக்க சத்தமிடும் கத்திரிக்காயை அணைத்து தட்டிக் கொடுத்து ‘லெட்ஸ் கோ’ என்கிறான் டின்டின். கிளம்பி வீடு வருகிறார்கள்.
பின்புறச் சுவற்றின் ஓரத்தில் உள்ள எலுமிச்சை மரத்தினடியில் டின்டின் புடவை, பேண்ட் சட்டை ஆட்களிடம், கோப்பு காட்டி ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, அவனை ஊக்குவித்தபடி கத்திரிக்காய். ஸ்நோவியின் சிறிய உறுமல்கள். பயங்கொண்ட வெண்தோல் போர்த்திய முகங்கள் சைகை செய்ய, புதிதாக மூன்று பேர் சேர்ந்து கொள்கிறார்கள். டின்டினின் முஷ்டி அவர்களின் தாடையை பதம் பார்த்ததும், அவர்கள் மேலெழும்பி தரையில் விழ, அப்போது காற்றில் வரையப்படும், ‘கோன் ஐஸ்’ போன்று தலை கீழாக திருப்பிப் போடப்பட்ட முக்கோணமும், மேல் பகுதியில் காளானின் வடிவமும் கொண்ட, சித்திரக் கதைகளில் வருவது போன்ற வெண்ணிற பலகைகளில்
BOOM!
THUMP!
WHAM!
CRASH!
கீழே விழுந்து கிடப்பவர்களின் தலையச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை நிற நட்சத்திரங்கள், அவர்களின் இடுங்கிய கண்களின் கீழ் கருவளையங்கள். சுதாரித்து, சுவற்றை அடுத்திருக்கும் காலி மனையில் குதித்து அனைவரும் ஓட, குரைத்தபடி எதிராளிகளைத் துரத்தும் ஸ்நோவி, அவர்களில் ஒருவனின் பின்புறத்தை கடிக்க
OVV!
என்று புட்டத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் குதிக்கிறான். ‘எல்லாம் நல்லபடியாக முடிந்தது நண்பா’ என்று இவன் தோளைத் தட்டி விட்டு கத்திரிக்காய் செல்கிறான். ‘ஐ வில் அல்வேஸ் பி தேர் டு ஹெல்ப் யூ’ என்கிறான் டின்டின்.
‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’ போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள், ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றொருவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. இவன் குளக்கரைக்கு ஓட, அங்கே மீண்டும் டின்டின், கத்திரிக்காய், ஸ்நோவி. மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்.
BOOM!
THUMP!
WHAM!
CRASH!
தலையைச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை வண்ண நட்சத்திரங்கள். முகமில்லாதவர்களின் ஓட்டம். பிருஷ்டத்தைக் கடிக்கும் ஸ்நோவி.
‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன்..’
‘என்னடா அங்க தனியா பாக்ஸிங் பண்ணிட்டிருக்க, பெரிய டைசன்தான். அம்மா கூப்டுட்டே இருக்காங்க என்னன்னு போய் கேளு’, சுந்தரி அக்காவின் குரல் கேட்டு, முகத்தினருகே இருந்த முஷ்டிகளை இறக்கியவன், சற்று குனிந்திருந்த உடலை நிமிர்த்திக் கொண்டு போர்ஷனை நோக்கிச் சென்றான். யாருமில்லாத கிணற்றடியைக் கடக்கும்போது திரும்பிப் பார்க்க பின்புற மனை எப்போதும் போல் காலியாக இருந்தது.
படுகளம்
சிறுவனொருவன் செய்யும் சாகசக் கதையொன்றை படித்துக் கொண்டிருந்தான். இதெல்லாம் பெரிய விஷயமில்லை, அந்தப் பயலைவிட எளிதாக, விரைவாக, இவன் செய்து முடித்து விடுவான். ‘மலைக்குகை மர்மத்தை’ கண்டுபிடிப்பவன், வியப்பு நிறைந்திருக்கும் கண்களால் இவனைப் பார்த்தபடியே இருக்கும், இவனுடன் படிக்கும், உமா மற்றும் மீராவின் பக்கம் திரும்பாமல், காரியத்தை முடித்த நிறைவுடன் அவர்களை கடந்து செல்கிறான். ‘இன்னிக்கு கண்டிப்பா போயிட்டு வந்துடு, டிலே பண்ணாத’, அப்பா சொன்னதற்கு பதிலேதும் சொல்லாமல் எழுந்து அரிந்து முடித்த கீரையுடன் சமையலறைக்குள் அம்மா நுழைய ‘என்ன முணுமுணுக்கற, எதுவாருந்தாலும் நேர சொல்லு, பின்னாடி பேசாத, எனக்கு எதுவும் நேரா சொல்லித்தான் பழக்கம்’. பின்னால் சென்றபடி அப்பா, அம்மா எதுவும் கூறியது போல் தெரியவில்லை. இதுவரை அவள் அப்பாவின் முகத்தின் எதிரே சொல்லிப் பார்த்ததும் இல்லை.
போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டியுள்ள சுவற்றில் அமர்ந்தான். இன்னும் இரண்டு வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து விடுவதற்குள் கண்டுபிடிக்க வேண்டிய மர்மங்கள், புதையல்கள் பல உள்ளன. இந்த வருடம் எட்டாவது. இனி பள்ளிக்கு பேண்ட் அணித்து செல்லலாம், இன்னும் பெரிய சாகசங்களை நிகழ்த்தலாம்.
இவனை அம்மா அழைக்கும் குரல் கேட்டு உள்ளே செல்லும்போது மணி பதினொன்றே முக்கால். ‘வா எல்.எல் வீட்டுக்கு போயிட்டு வரலாம்’ என்றாள்.
‘என்னமா’
‘வேல இருக்கு, அருணாவும் ஒன்ன பாக்கணும்னு சொல்லிட்டிருக்கான்னு எல்.எல் சொன்னாங்க, நீயும் வா’
கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவளுடன் போர்ஷன் வாசலுக்கு வந்தபோது, முன்னறையில் இருந்த அப்பா ‘கெளம்பிட்டியா, சும்மா வந்துடாத’ என்று சொல்ல, வெறுமனே தலையாட்டினாள். கோம்ஸ் மிஸ் போர்ஷனை தாண்டும்போது ‘எதுக்கு போறோம்மா’ என்று மீண்டும் கேட்டான்.
‘அதான் சொன்னேனே வேல இருக்கு’
‘நா வரணுமாமா’
‘…’
‘அப்பறம் போய் அருணாக்காவ பாத்துக்கறேன்’
‘அதெல்லாம் வேணாம் வா’
பெரியமணிக்காரத் தெருவிலிருந்து, மேட்டுத்தெருவை தாண்டி பதினைந்து நிமிட நடை தூரத்தில் அம்மாவுடன் வேலை செய்யும் எல்.எல். டீச்சரின் வீடு. அம்மாவைவிட பத்து பதினைந்து வயது அதிகமிருக்கக் கூடியவருக்கு, சுருட்டை முடியில் பரவ ஆரம்பித்திருக்கும் நரையும், மூக்குத்தியும் கம்பீரம் கூட்டுகின்றன. அவரும் மஞ்சள் வெள்ளை என்கிறாள் அம்மா. வீட்டினுள் நுழைந்தபோது நோட்டில் எழுதிக் கொண்டிருந்தவர், ‘வா வா’, என்று அதை மூடிக் கொண்டே சொல்கிறார். ‘என்ன டீச்சர் நோட்ஸ் ஆப் லெஸ்ஸன் எழுதறீங்களா’, என்றபடி அம்மா அமர, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அருணாக்கா, ‘என்னடா எப்படி இருக்க, தோ வரேன்’, கேட்டு விட்டு மீண்டும் உள்ளே செல்கிறார் .’ஒக்கார்டா’ என்றிவன் கையை பிடித்து தன்னருகே அமர வைத்துக் கொல்கிறார் எல்.எல்.
‘டிஸ்டர்ப் பண்ணிட்டோமா டீச்சர்’, என்று அம்மா கேட்க ‘அதெல்லாம் இல்ல, அருணாதான் இன்னிக்கு சமையல். எங்களலாம் பாக்க வரமாட்டியா’, என்று இவனிடம் கேட்டவர், ‘வருவேன், மாட்டேன் எதுன்னு புரியாத மாதிரியே தலையாட்டறான் பாரு’, என்று சொல்ல. அம்மாவும், மீண்டும் ஹாலுக்கு வந்திருந்த அருணா அக்காவும் சிரித்தார்கள். ‘இந்த வருஷம் ரிசல்ட் வரது கஷ்டம் போலருக்கு டீச்சர், இந்த செட்ட நெனச்சா நம்பிக்கையே வர மாட்டேங்குது, ரொம்ப மோசமா இருக்காங்க’, எல்.எல்லிடம் பேசிக் கொண்டிருக்கும போதே, அருணாவின் பக்கம் அவ்வப்போது பார்த்தபடி இருந்தாள் அம்மா.
குக்கர் விசில் சத்தம் கேட்டு ‘தோ வரேன்’, என்று அக்கா உள்ளே செல்ல ‘டீச்சர் ஒரு ஹெல்ப்’, என்று ஆரம்பித்து நிறுத்திய அம்மா, ஓரிரு நொடிகளுக்குப்பின், ‘இன்னிக்கு காத்தால தாம்பரம் போயிருந்தோம், என் அத்தைய பாக்க. திரும்பி வரும்போது டி-சிக்ஸ்டில செம ரஷ், என் பர்ஸ்ஸ இவன்கிட்ட குடுத்திருந்தேன், அத தொலைச்சிட்டான்’, என்று தொடர்ந்தாள்.
‘ஐயோ சின்னப் பையன்கிட்ட போய் ஏன் குடுத்த, ஏண்டா கொஞ்சம் கேர்புல்லா இருக்கப்படாதா’, என்று இவனிடம் எல்.எல். கேட்டுக் கொண்டிருக்கும்போது அருணாக்கா மீண்டும் ஹாலுக்கு வந்தார். இவன் எதுவும் பேசாமலிருந்தான்.
‘டிக்கெட் வாங்க காச எடுத்துட்டு, இத கொஞ்ச நேரம் வெச்சுக்கடான்னு குடுத்தேன், திரும்பி வாங்க மறந்துட்டேன். இவனும் தரலை, கீழ போட்டுட்டானோ இல்ல, யாராவது திருடிட்டாங்களான்னு தெரியல’ என்று அம்மா சொல்ல, தலையை குனிந்து கொண்டான்.
‘பஸ்ல இந்த மாதிரி நெறைய நடக்குது ஆண்ட்டி, இனி கேர்புல்லா இருப்பான் திட்டாதீங்க’
‘அதெல்லாம் திட்டல அருணா’
‘எவ்ளோ பணம் இருந்துச்சு’, என்று எல்.எல் கேட்டதற்கு, ‘அதான் இப்ப பெரிய பிரச்சனை’ என்று அம்மா சொல்ல எல்.எல் எதுவும் பேசவில்லை.
‘பர்ஸ்ல தான் வீட்ல இருந்த மொத்த காசு, எறநூத்தம்பது ரூபா இருந்தது, இன்னும் ஒரு வாரம் ஓட்டனும்’
‘ஏண்டி எல்லா பணத்தையும் ஒரே எடத்துல வெச்சிருந்தியா’
மீண்டும் சூழ்ந்த மௌனத்தை தலை நிமிர்ந்து நோக்கினான். அருணாவின் மீது பார்வையை செலுத்திய அம்மா சொல்ல ஆரம்பித்ததை நிறுத்தி சில கணங்களுக்கு பின் ‘அதான் டீச்சர் தப்பு பண்ணிட்டேன்…. ஒரு அம்பது ரூபா கெடச்சா, இந்த ப்ரைடே சாலரி வந்தவுடனே தந்துடுவேன்.. தப்பா எடுத்துக்காதீங்க’ என்று சொல்ல ‘உள்ள பர்ஸ் எடுத்துட்டு வா அருணா’ என்றார் எல்.எல்.
அம்மாவின் பர்ஸை கண்டுபிடிக்க டின்டினிடம் இவன் உதவி கோர, ‘ஸாரி, ஐ கான்ட் ஹெல்ப் யூ’, என்று சர்வதேச சதிகார கும்பலை பிடிக்கும் முயற்சியை ஸ்நோவியுடன் தொடர ஆரம்பித்தான். ‘மணிக்கொடியின் பிரச்சனையை இப்போதுதான் தீர்த்து விட்டு வந்தார் சங்கர்லால். ஆனால் அவரால்கூட இதை கண்டுபிடிக்க முடியாது, மன்னித்து விடு’, என்று தொந்தி மீது கையை மடக்கி வைத்துக் கொண்டு சொல்லி விட்டு கத்திரிக்காயும் தலை குனிந்து செல்கிறான். வேறொரு வானின் இரவில் டைட் ட்யுடி பார்த்துக் கொண்டிருந்த வேட்டைக்காரர், வெளிச்சத்தில் தன்னால் உதவ முடியாது என்றார். இவர் கண்டிப்பாக பர்ஸை கண்டுபிடிப்பார் என்று இறுதி நம்பிக்கையாக உதவி கேட்ட, நீள் அங்கி, தொப்பி அணிந்த, பைப் பிடித்துக் கொண்டிருந்தவரும் ‘ஸாரி, திஸ் இஸ் நாட் எலிமெண்டரி மை டியர் பாய்’ என்று கூறிவிட்டு, கேஸ் விளக்கின் வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்த மூடுபனி படர்ந்த தெருவினுள் இருக்கும் தன் மாடி போர்ஷனுக்குள் நுழைந்து, லண்டன் நகர குற்றவாளிகளில் முதன்மையானவரும், தன் பரம வைரியுமான பேராசிரியரை கைது செய்ய என்ன வியுகம் வகுப்பது என்பது குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்.