வெயிலும் நீர்ப்பாம்புகளும்
தெளிவாய் ஓடினாள் தென்பெண்ணை
நான் யார் என்று கேள், என்று சொன்னார்கள்
அவ்வாறே ஐயா…
மாலை நீர் இதமாயிருந்தது
நான் யாரென்று கேட்பது யாரென்று கேளெனச் சொன்னார்கள்
ஆம் சுவாமி……
நீர் மடியில் தலை சாய்த்திருந்தேன்…
நான் யாரென்று கேட்பவர் யாரென்பதைப் பார்ப்பவர்
யாரென்று பார், என்று சொன்னார்கள்….
அப்படியே குருவே….
மூச்சுத் திணறி வெண்மணலில் விழுந்தேன்…
என்னில் பாதியை நானே விழுங்கியிருப்பதை
வெயிலிடம் சொல்லி சிரிக்கின்றன நீர்ப்பாம்புகள்.
oOo
மரணத்தை ஸ்பரிசித்தல்
இறந்தகாலத்தை மிதி
மிதிக்க மிதிக்க அது நழுவுகிறதே
எதிர்காலத்தைத் துப்பு
ஐயோ அது முன்னரே குடலோரங்களில் உறிஞ்சப்பட்டுவிட்டதே
இப்பொழுதை உணர்…
உணர்கிறேன்… உணர்கிறேன்…..
இப்பொழுதின் சக்தியை ஏந்து
ஏந்துகிறேன்… ஏந்துகிறேன்…
இப்பொழுதின் வெம்மையில் உறைந்திரு…
இருக்கிறேன்… இருக்கிறேன்…
சரி, சொல், இப்பொழுது எப்படி இருக்கிறது
அது இறந்தகாலத்தின் இனிமையாகவும்
எதிர்காலத்தின் பயமாகவும் உள்ளது…
தப்பாகச் சொல்கிறாய், மீண்டும் சொல்…
அது சுட்ட தீயாகவும் குத்தப்போகும் முள்ளாகவும் உள்ளது….
இல்லையில்லை, மீண்டும் சொல்…
அது புணர்ச்சியாகவும் பிரசவமாகவும் உள்ளது
தோல்வியுற்றாய், போய் வா…
அது என் அழுகையாகவும் உங்கள் புன்னகையாகவும் உள்ளது.
மௌனமாய் மூடப்பட்ட கதவுகளுக்கு முன் நின்று நான் கதறினேன்
ஐயா, அது என் மரணமாக உள்ளது.