முழுநேரத் தேநீரகம்
பேசக்கூடாது பேசக்கூடாது
பேசக்கூடாதென்றால்
பேசாமலென்ன செய்வதாம்
பேசவேண்டாம் சரி
எதுவுமே பேசக்கூடாதா
எதப் பேசக்கூடாது முதலாளி
அரசியலா
அதைத் தவிர்த்து பிறிதொன்றை
குறிப்பா இலக்கியம் பேசக்கூடாது
அரசியலென்றால் இலக்கியமுந்தானே அடக்கம்
கூடாது கூடாது பேசக்கூடாதென்றால் கூடாது
இப்படித்தான் டீக்கடைக்காரர் அவ்வப்போது
எதையாச்சும் புதுசு புதுசாக எடுத்துவிடுவார்
இப்போதெல்லாம் கதவைத் தட்டாமலே
வாடைக்காற்று உள்ளே புகுந்துவிடுகிறதென்று நாங்கள்
லொக்கு லொக்கென்று பேசி முடித்து நடையைக் கட்டினோம்
டீக்குக் காசு தரவில்லையே அன்பர்களே
நாங்கள்தான் குடிக்கவேயில்லையே முதலாளி
குடித்துவிட்டுதான் போகவேண்டும் தெரியுந்தானே
இப்போதெல்லாம் எமக்கு கேப்பைக் கூழ் மட்டுந்தான்
கீழே இறங்குதுன்னா நம்பவாப் போகின்றீர்
நாற்பது பேர்களா இன்றைக்கு நாற்பத்து நாலா
எத்தனை வண்டி வேண்டும் சொல்லுங்கள் இறக்கிவிடுவோம்
இப்படித்தான் டீக்கடைக்காரர் எம்மை அவ்வப்போது
திருதிருவென முழிக்கவும் வைத்துவிடுவார்
எம்மை என்றால் என்னை மட்டும்தான்
தேக்கரண்டியைத் தட்டித் தட்டி அத்தாளகதியில்
சும்மா அப்படியே தேமேயென்று உட்கார்ந்திருப்பேன்
சும்மா சும்மா கையை ஓங்கக்கூடாதென்று விரலை
நீட்டிக்கொண்டு எழுந்தால் மூவர் முப்பத்து மூணு பேர்களாயிருப்போம்
அம்மாட்டப் போவணும்
அப்பாட்டச் சொல்லிருவேன்
ஒண்ணுக்குப் போயிட்டேன்
தலைக்குள் இடித்துக் கொள்வதற்கு நேருக்கு நேர் அடித்து
விவாதித்து வியாக்கியானித்துக் கொள்வது எவ்வளவோ தேவலை
இவளே மோர்காக்கின் ஐயர்ன் ஆர்க்கிட்தானேடி அப்படிச் சொன்னது
பேசக்கூடாது பேசக்கூடாது இலக்கியம் பேசக்கூடாதென்று
சொல்லிக்கொண்டே இருக்கவேண்டுமா உங்களுக்கு
முதலாளி எனக்கு இருமலுக்கு கசாயமிட்டுக் குடிக்கனும்
இவங்களுக்கு கேப்பக் கூழ் ஆளுக்கு லொக்கு லொக் ஒரு கப்
கூழெல்லாம் தேனா தீயாயினிக்கிது சரிதான் முதலாளி ஆனாலென்ன
தேநீர் கடன்னா சில்லுன்னுக் கள்ளு இல்லன்னா குறைந்தபட்சம்
சப்புக்கொட்டப் பதநீராவது வச்சிருக்கவேண்டாமா
oOo
மண்டையோடெனும் பால்மண்டலம்
ஏதேன் தோட்டத்திற்கு ஞானப்பழம் தேடிப்போன முருகன்
ஆட்டக்காரர் மட்டையால் பந்தடிப்பதைக் கண்டு ஆரவாரிக்கிறான்
பாறாங்கல்லில் கால்வைத்து நிற்கும் மேய்ப்பனின் கோல் கண்ணின்
ஓரு சிமிட்டலில் திரிசூலாய் மற்றொரு சிமிட்டலில் வேலாகிறது
மிஸ்கோமகட் கடற்கரையில் தயங்கும் மெல்லிசாவின் விம்மல்கள்
அல்பட்ரோசாய் அலையில் பாய்ந்து சிறகுவிரித்தெழுகிறது
குறிசொல்வதை குறிக்கோளாய்க் கொண்ட குருவிச்சித்தர்
குறியீட்டை குறியாக்க முப்பரிமாண அச்சுப்பொறியைத் தேடுகிறார்
பொறுமைசாலியென்று பெயரெடுத்த ஆங்குயின் பெங்குயினின்
முதுகுக்குப் பின்னால் முகஞ்சுழித்து முணுமுணுக்கிறாள்
ட்ரோனாய் வந்திறங்கிய ட்ரோஜன் ஒட்டகம் அரேபியப் பாலையில்
தீகக்கி அணையாப் பிழம்பாய் சடசடத்து முறிந்தெரிகிறது
நரிகள் திரியும் தேரியில் குறிபார்த்து எறியப்பட்டக் கூழாங்கல்
செம்மண்கறை படிந்த கோள்பந்தாய் பத்ரகாளியின் காலடியில்
கிணறுகள் அகற்றப்பட்ட மண்டையோடெனும் பால்மண்டலத்தில்
எண்ணிறந்தோர் என்னுள் எண்ணங்களாய் வசிக்கின்றனர்
ஆப்பிள் கடையை வலம் வந்து விலை கேட்டால் கணேசன் சொல்கிறான்
தலையை அடகுவைத்தால் அசல் ஆப்பிள் கிடைக்குமோ கிடைக்காதோ
கடிபட்ட மெழுகு ஆப்பிள் ஒன்றிரெண்டு கிடைத்தாலும் கிடைக்கும்
oOo