ப்ரியன்
ரெண்டு நாளா பேக்கரி பக்கம் போகாம இருக்கிறது உள்ளுக்குள் என்னவோ மாதிரி இருந்தது. வேலை வெட்டிக்கு போகாம கவர்மெண்ட் வேலைக்கு பரீட்சை எழுதிக்கிட்டு திரியுறவன். யாரைப் பார்த்தாலும், “என்னங்க எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் சுகமா,” என்று கேட்கிறவன். ஊருக்குள்ள எல்லாரும் இவன மதிச்சி பேசுற அளவு குணம் இருக்கறவன். இப்போ வீட்டுலய குத்தூக்காலிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கான்னா என்னா காரியமா இருக்கும்னு அவன் அம்மா அவனை யோசனை செய்தபடியே வந்து காபி தம்ளரை வைத்துவிட்டு, ’’இன்னா ராசா இன்னிக்கு ஊர்கோலம் போலாய்ப்பா… உன் சிநேகிதக்காரனுங்க காத்திருக்க மாட்டாங்க?’’
’’இல்லம்மா உடம்பு ஒரு மாதிரி இருக்கு’’
’’என்னாச்சு ராசா’’ என்று கழுத்தை தொட்டுப் பார்த்து கை பிடித்துப் பார்த்தாள்.
’’சொரம் கூட அடிக்கிலியே ராசா’’
உடம்பு சரியில்லனா வெறும் உடம்ப மட்டும் யோசிக்கிறாங்கள, இந்த மனசும் உடம்போட சேர்ந்ததுதான்னு ஏன் யோசிக்க மாட்றாங்க- உள்ளுக்குள்ளே ஆதங்கப்பட்டேன்.
’’ஒன்னுமில்ல நீ போம்மா,’’ அவளை விரட்டினேன்.
போன் வந்தது.
’’மாப்ள என்ன படித்துறைக்கு வரலையா’’
’’வரலைடா உடம்பு சரியில்ல,” என்று சுரத்தையில்லாமல் சொன்னேன்.
’டேய் நீ என் வரலனு தெரியும்டே’’
’’என்னாடா ஏன்?’’
’’ பேக்கரி திறக்கல அதானே?’’
’’லேய் மூடிட்டு உங்க வேலைய பாருங்கடா,” என்று போனைத் துண்டித்தேன்.
செண்பகா பேக்கரி திறந்து ஆறு மாசம் ஆகி இருக்கும். படித்துறை நண்பர்கள் கூடுகை நடக்குமிடம்.பேக்கரியை கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். பேக்கரிக்கு இந்தப் பக்கம் இருந்து நான் மட்டுமே போவேன்.
கடை திறந்த முதல் நாளே நான் கையில் இருந்த பத்து ரூவாய்க்கு பக்கோடா வாங்கினேன். அந்தப் புள்ள செண்பகாதான் கொடுத்துச்சு. நல்ல வடிவா களையான முகம். ஆளை இழுக்கும் அழகான சிரிப்பு. பேச்சும் இன்னும் கொஞ்சம் பேசலாம் போலயே எனத் தோன்றும்.
தினம் படித்துறைக்கு போரப்பலாம் கையில் பத்து ரூவா வைச்சுகிட்டு பேக்கரி பக்கம் போறப்போ செண்பகா உள்ள ஏதாச்சும் வேலை இருந்து என்ன பார்க்கலன்னா அப்படியே போயிடுவேன். பாத்துட்டா அவ பார்வைக்கு மரியாதை செய்யும் விதமா போயி பத்து ரூவாய்க்கு ஏதாச்சும் வாங்கி மென்னுகிட்டே போவேன்.
நாளாக நாளாக என்னாலே பேக்கரில ஏதும் வாங்காம, இல்லன்னா செண்பகாகிட்ட பேசாம, இருக்க முடியல. ஒரு நாள் அவ ரொம்ப வேலையா இருந்தப்போ பேக்கரில போய் நின்னுகிட்டு பேச்சு கொடுத்தேன். அவ அசரல. பின் என்னன்னமோ பண்னேன். அவ வேலையிலெ கருத்தா இருந்தா.
அப்போ அவளோட ரெண்டு வயசு பொண்ணு என்கிட்ட உசுரா இருந்தா. அவள தூக்கிக்கிட்டு ஊர்கோலம் போனேன். ஆமாங்க, செண்பகாக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. அவ புருசன் மார்க்கெட் போறது பன்னு, பக்கோடா போடுறது முடிஞ்சதும் போயிடுவான். புறவு ராவிக்கிதான் வருவான். என்ன புடுங்குவான் தெரியல அம்மா நேரம்.
ஆனா அதுவும் எனக்கு சாதகமாதான் இருந்துச்சு. அவகிட்ட பேசாத பொழுதே வாழ்க்கையில இல்லனு ஆனாமாதிரி படித்துறைக்கு போறேனு சொல்லிட்டு பேக்கரில பொழுத கழிக்க ஆரம்பிச்சேன். அவ ஊட்டுக்காரன் கொஞ்சம் காரமான ஆள்தான். ஆனாலும் என் மேல ஏதோ நல்ல அபிப்ராயத்திலே அவரு வரப்போ நான் இருந்தா கண்டுக்க மாட்டாரு. போதாதுக்கு செண்பகா, அந்தா வந்துட்டாரு அண்ணே அந்த சேரை நவுத்துங்க, வண்டிய ஓரமா விடுங்கண்ணே, என்பாள். எனக்குத் தெரியும் அவள் மனசார கூப்பிடலனு. ஒரு நாள் வேண்டும்னே பேக்கரிப்பக்கம் போகாம இருந்தேன். மறுநாள் போனதுக்கு, என்னங்க ஏதாச்சும் கோபமா? காய்ச்சலானு வந்து கழுத்த தொட்டு பார்த்தா… கிறுக்கிமவ எனக்கு உள்ளுர இப்போ நிஜமாவே காய்ச்சல் வந்துடும்போல இருந்துச்சி… மனசே சரியில்ல நேத்து உங்கள காணலைனு, என்றாள்.
பொறவு ஊர்த்திருவிழாவுக்கு போறேனு பேக்கரிய நாலுநாள் லீவு வுட்டாங்க. பயங்க எவனும் என்னைச் சீண்டலா, எண்டா வெண்ணமக்கா இப்போ மட்டும் நாங்க தேவப்படுதா, இம்புட்டு நாள் அந்த பேக்கரியதானே கட்டிட்டு அழுதே… போய் அவ எங்கே திருவிழா காண போயிருக்காளோ அங்கனே போய் இருந்து சாகு, என்று சபித்தார்கள்… பொழுது ஓடவில்லை. இரவு விடியவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு நாட்கள் கடந்தன.
அவ பிள்ளையை கொஞ்சியதெல்லாம் அவளதான்னு அவளுக்கு மட்டும் புரிஞ்சுருக்கு. ஒரு நாள் பேக்கரி உள்ளே அவ வேலை செஞ்சுட்டு இருந்தப்போ நான் ப்ரேட் எடுக்க போனேன்.. அவ குனிஞ்சு மாராப்பு விலகி வேலை செஞ்சுட்டுருந்தா. நான் சத்த நேரம் அவளையே பார்த்து அசந்து நின்னுட்டேன்.
உள்ளே என்னப்பா பண்றே, என்ற குரல் கேட்டுத் திரும்ப, அவ புருஷன் காட்டமா பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஒன்னுமில்லனே பன்னு எடுக்க வந்தேன்’’
“எதா இருந்தாலும் நாங்க எடுத்து தர்றோம். நீங்க உள்ள வராதிங்க தம்பீ”
நான் அவன் சூடு தெரிந்து, ‘’ மன்னிச்சுக்கோங்க’’ என்றேன்.
பிறகு ரெண்டு நாள் பேக்கரி பக்கமே போகல. சினிமா பாக்க அவ பேக்கரிய சிவநேசன் வண்டியில கடந்து போகயில. அவ இருக்காளான்னு பார்த்தேன். அப்பதான் எதையோ எடுத்துகிட்டு வெளியே வந்தவ கண்ணூத்தி பாம்பா பார்த்தா… எனக்கு அடி மனசு பெசய ஆரம்பிச்சுது.
மாப்ள சரக்கு அடிக்கலாமா?, என தோதா அவன் கேட்டான்.
யோசிக்காமல், சரி, என்றேன்.
மப்பு தலைக்கேறி வண்டிய தள்ளிட்டு வரும்போது, “சிரிக்கி மவ என் உயிர வாங்குறளே”
“யாரு மாப்ள?”
“அந்த பேக்கரிக்காரிதான்.”
“அவ என்னடா பண்ணா?”
“என்ன பண்ணல… அவ பார்வை, நடை , நெருக்கம் இதெல்லாம் அனுபவிச்சா தெரியும்டே… புருசன் வந்தா அப்படியே பத்தினியாகிட்றாடா…”
“விடு மாப்ள இந்த மாதிரி தான் ஊருக்குள்ள எல்லாம் அலையுதுங்க”
“டேய் இவள அவளுக கூட சேக்காத இவ வேற சாதிடா… அவ மனசு எனக்கு தெரியும்டா…”
மறுநாள் பேக்கரிக்கு போனப்போ செண்பகம் கமகமனு மஞ்ச முகத்தோட ஓடியாடி வேலை செஞ்சுட்டு இருந்தா. நான் போயி சேரில் உட்கார்ந்து அவளையே கவனிச்சுட்டு இருந்தேன், மதிய நேரம் ஆள் நடமாட்டமில்லாத நேரம் குழந்தை உள்ளயே ஓரமா படுக்க வைச்சுட்டா… உள்ள இருந்து எண்ணெய், டின், மாவுலாம் எடுக்க ஆரம்பிச்சா. நான் எழுந்து, ஒத்தாசைக்கு வரட்டுமான்னு கேட்டேன். வேண்டாங்க பரவாயில்ல, எனச் சொல்லியும் உள்ளே போனேன். அவ மனம் மனசு பூரா அடிச்சு துவைச்சுது. பின்னாடியே போயி கேக் செய்யுற அறையுள்ள அவ மாவு எடுக்க குனிஞ்சப்போ பின்பக்கமா அவ மார்போடு செத்துப் புடிச்சு இறுக்கி செண்பகம்னு கண்ணு சொருக சொல்லிகிட்டே அவளக் கட்டிக்கிட்டேன். அவளும் திமிரிட்டு அடங்குனா… கொஞ்சம் நேரம் என்ன ஆச்சுன்னு தெரியாத அளவு கிறக்கத்துல இருந்தோம். திடீர்னு எழுந்து வெளிய போனவ துடப்பத்த எடுத்துட்டு வந்து என்ன அடிச்சிட்டா. நான் அழுதுட்டே அவ காலைப் பிடிக்க போனேன் அவ என்ன தாண்டி வெளியே போயி உட்கார்ந்துட்டா. நான் சட்டையையும் தலையையும் சரி செஞ்சுகிட்ட வெளிய வந்து இறுக்கமா வீட்டுக்கு வந்துட்டேன்.
பொறவு ரெண்டு நாள் மாமா ஊருக்கு போயிட்டு வந்தேன். வந்தா செண்பகம் கடை அங்கன இல்ல. சிவநேசன் குடிச்சுட்டு செண்பகா கிட்ட தப்பா நடந்துகிட்டிருக்கான். நான் செண்பகா பத்தி சொல்லி வைச்சதாலதான் அப்படி பண்ணிருக்கான். அவ புருஷன் இவன அடிக்க, பொழைக்க வந்த நாயிங்க எங்க மேலேயே கை வைக்குறீங்களானு எல்லாரும் கடைய அடிச்சு நொறுக்கி போட்டுட்டானுங்க. அவங்களும் அவமானம் தாங்க முடியாம ராவோடு ராவா காலி பண்ணிட்டு போயிட்டாங்க.