துல்லிய நீல வானம். மேற்கே பதுங்கும் சூரியன். மேகப் பூங்கொத்துக்களில் செந்தீ. ஊளையிடும் வடக்குக் காத்து. ஆறின் கடல் சங்கமம். பாறைகளில் சலம்பும் ஒலி. சிதறிப் பரவிய கூழாங்கல். செம்போத்து நாரையின் கேவல். படபடக்கும் சிறகோசைப் பறவைகள். குரலோசையால் எழுத்து நின்றது.
‘பறக்கற குருதைல முனி.காவ நிக்கும் தேவரு.அவரு செனந்தா அம்புட்டுத்தான். ரத்தம் பாக்காம ஓயாது. வாலிபம் மதத்து நிக்குது. அவரு என்னேரமும் குமரு. ஜல்லுங்குது கால்ல சதங்கை. சேணத்தில கொடி சொருகியிருக்காப்ல. கறுப்பு பட்டு உடுத்தியிருக்காரு. மேல நீலச் சட்ட. விர்ருங்குது சாட்டைக் கம்பு. உறுத்துப் பாக்குது விழி. செவப்பா நாக்கு காங்குது. ரத்தம் குடிச்ச வொதடு.வெடச்சு நிக்குது காது. வெள்ளாட்டுப் பாலின் வீச்சு. ராப்போதுல சுத்தி வாரான். நெலா வானத்ல ஒளிஞ்சுகிச்சு நாய்க்கெல்லாம் மூச்சு போச்சு. பூதமெல்லாம் பம்மி வருது.”
‘‘அய்யோ, நிறுத்தேன் முத்தம்மா’’
‘நம்மத் தேவரு மக்கா’
‘‘எனக்கு கேரா இருக்கில்ல’’
‘இதுக்கேவா பாட்டுப் படிக்கற’
‘‘பொறவு எதுக்கு சொல்லுதாக’’
‘அவுக உலா வந்தாயளா?’
‘‘விடமாட்டீயளா, ரவைப் போது’’
‘அந்தக் காச்சிய கண்டாக’
‘‘என்னத்த அப்படி கண்டாக?’’
‘என்னான்னு சொல்ல மக்கா’
‘‘சொல்லாம நிப்பாட்டிப் போடேன்’
‘அதுக்கா வந்து நிக்கேன்’
‘‘வம்பு வலிக்காம முடியல்ல’’
‘செட்டியாரு சம்சாரம் வந்தாக’
‘‘சிலுக்கப்பட்டி சின்ன மீனாளா’’
‘இலுப்பைக்குடி எங்கிட்டு வரும்?’
‘‘மேலே சொல்லு ஆத்தா’’
‘புனுகு அடிச்சு வீசுது’
‘‘ராவைக்கு அது என்னாத்துக்கு?’’
‘வாசம் வளச்சுப் போவுது’
‘‘தாக்கம் அப்படி போச்சாக்கும்’’
‘சிலும்பிட்டு நிக்கான் சிங்கம்புணரி’
‘‘யாரு அவுக நொழையறாக?’’
‘முனி பாக்க நொழயலாமா?’
‘‘அப்ப சேதம் ஏதுமா?’’
‘பொறவு? அடிச்சுப் போட்டகள்ள’
‘‘யார, ரண்டு உசிருமா?’’
‘ரத்தம் கக்கி செத்தாக’
‘‘போலீசு கேசு உண்டுமா?’’
‘முனிக்க சட்டம் உண்டுமா?’
‘‘அப்ப செட்டியாரு தப்பிச்சாரு’’
‘கேனப் பேச்சு மக்கா’
‘முனி முனைஞ்சா நிக்குமா?’
எழுத்திலிருந்து குதித்து நின்றாள். ஒரு முனி வேண்டும். சலம்பலைச் சாடும் முனி. சுவடில்லாத கடுங்காவல் அரசன். கருங்குதிரை ஏறும் காவலாள்.
“அப்ப,சேவுகன் செத்தானே?’’
‘அவன் கத வேற’
‘’பாவாட இல்லியா காரணம்?”
‘அது அப்பாவிப் புள்ள’
“பொறவு ஏன் செத்தாரு?’’
‘அவளுக்கு கன்னி கழியல்ல. சொய சுகம் கண்டுகிட்டா. பசிச்சா சோறு வேணுமில்ல? எம்புட்டு பட்டினி கிடக்க? யாரு கைய இழுத்தா? எவ குடியக் கெடுத்தா? களவாடி வாச இருக்கில்ல; யாருமில்லன்னு அதுல பொரண்டுட்டா. சேவுகன் அதப் பாத்துட்டாரு. அவள வப்பாட்டியா கேட்டிருக்காரு. த்ராணி செத்த மனுஷன். அவ போய்யான்னு ஒதுங்கிட்டா. இவருக்கு வஞ்சம் புடுங்கிச்சு. அக்கம் பக்கம் சொன்னாரு. கள்ளச் சிரிப்பு சிரிச்சாரு. பாவாடய ஊரே தொறத்திச்சு. நிம்மதியா கொறட்ல தூங்குனாரு. மக்காநா மசானம் போய்ட்டாரு’
“இதுவும் முனிக்க வேலயா?’’
‘பொறவு? நெனெச்சா செஞ்சிடுவாரே?’
இப்ப முனி எங்கேயிருப்பாரு? எழுத்தில் எழும்பியவள் நினைத்தாள். குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலம். சைலி அவசியம் என்றார்கள். கையிருப்பு பட்டாக வடிவெடுத்தது. சொத்து நகையாக மின்னியது. பெருமை பந்தியாய் இறைந்தது. பொருத்தமின்மை பார்வைகளில் சிரித்தது. லாங்ஷாட் புகைப்படங்களில் அவர்கள். காணொலிகளில் பக்கவாட்டுத் தோற்றம். எப்படி இணைந்தது புரியவில்லை. ஹோமத்தீயில் இரும்பை உருக்குவார்களா? சுடாமல் சுட்டுவிடும் எரியோ?
“முத்தம்மா, இன்னும் உண்டுமோ?”
‘ஏகமா கொட்டிக் கிடக்கு’
“அல்லாம் ஒழுக்க மாட்டாக்கும்?”
‘பேர் சொல்லிக்கு நடந்தது அதில்ல’
“அவரு என்ன செஞ்சாரு?”
‘முனியுட பாதைல படுத்திருந்தாரு.’
“வீட்டுக்குள்ள வருவாரா தேவரு?’’
‘அவரு ஜட்ஜூ மக்கா, வீட்டில எட்டிப் பாக்காதவரு’
“அப்ப தெருவில படுத்திருந்தாரோ?’’
‘ஆமாங்கேன்,மேலக் கேளு; ராவுல வந்தாரா தேவரு. சதங்கைய ஓங்கி ஒலிச்சாரு. சாட்டையால பேர்சொல்லியத் தொட்டாரு. இவரு கொறட்ட விட்டிட்டிருக்காரு. கட்டிலோட கண்மாய்ல வச்சுப்புட்டாரு. காலயில ஊரே சிரிக்குது’
“குடியில அங்கன படுத்திருப்பாரு”
‘மக்கா,கோட்டி செய்யாதீஹ. தப்புன்னு கன்னத்ல போடு’
எழுத்தில் இறங்கியவள் சிரித்தாள். புனித நெருப்பில் ஆஹூதி.வாழ்த்திச் சிதறிய அக்ஷதை. மலர்களின் சிலிர்ப்பு மழை. அப்பாவின் கன்னங்களில் ஈரம். பகலில் பார்த்த அருந்ததி. பொருள் புரியா சடங்குகள். அக்குரல்கள் மீண்டும் ஒலித்தன.
“பகல்ல காங்குமா முனி?’’
‘சூரியத் தேவரு பகலுக்கு’
“அவரு காயறாரே அல்லாரையும்”
‘அது எச்சரிக மக்கா’
“இத்தன காவல் என்னாத்துக்கு”
‘மீறி வெளயாடயில புடிக்கத்தான்’
எழுத்தின் நாயகி திகைத்தாள். சிறு வயதின் பாடல். ஒரு குடத் தண்ணியில ஆமா, ஆமா, ஆமாம் ஒத்தப் பூ பூத்தது, இரு குடத் தண்ணியில ஓஹோ, ஓஹோ, ஓஹோ ரண்டு பூ பூத்தது. ஏழு குடத் தண்ணில… எருக்கு அல்லவா பூத்தது? ஏழுக்கும் எழும்பாப் பூ!
“அக்குறும்பா இருக்கு முத்தம்மா”
‘ஒண்ணொணுக்கும் வில இருக்கு’
“என்னா சொல்ல வர?”
‘அறம் பொழச்சா அரம். மாட்டினா அறுத்து வீசிடும். மாட்டாத வர பொழச்சுக்க. முனி மன்னிச்சும் போச்சு’
“அவருக்கும் கருண உண்டுமா?”
‘தெய்வத் தேவரு அவரு’
“மெய்யாலும் அப்படிச் செஞ்சாரா?”
‘மேக்கத்தி காத்து வீசிச்சு. நெலாவச் சுத்தி கோட்ட. அப்பமே ஊருக்கு தெரிஞ்சிரிச்சி. இந்திரனுக்கும் வருணனுக்கும் சண்ட. கொட்டிக் கவுக்குது மழ. கண்ணுல காங்கல பூமி. ஆட்டுக்கு கூளம் இல்ல; செம்பட்டி சந்த சரக்கு. நிகுநிகுன்னு கண்ணப் பறிக்கும். சின்னவனுக்கு அதான் உசுரு.மேய் மழ நிக்காம பேயுது. வய வரப்பு வேலயில்ல. காஞ்சு எரியுது வவுறு. முனிக்க நேந்த ஆடு. அதுவும் கத்துது பசியில. வவுறு எல்லாத்துக்கும் ஒண்ணுதான? ஈனமா கத்திகிட்டு நிக்குது. கண்ணுல தண்ணீ முட்டுது. தாளல வெட்டிப்புடுன்னு கேக்குது. அவுத்தா வெள்ளத்ல போயிறும். அது எங்களத் தின்னாது. நாங்க அதத் தின்னுட்டோம். பொறவு முனிகிட்ட அழுதோம். சாராயத்தோட மன்னிச்சு விட்டாரு’
எழுத்தின் நாயகி சிந்தித்தாள். அறமும், அறப்பிழையும், எதுவென்பது?
இனி என்ன செய்ய? ’மம ஜீவன ஹேது’. நம் வாழ்வின் பொருள். நாம் இணை என்றும். நம் வாழ்வின் நிறைவு. எரியின் தழலே சாட்சி. ஒருவரின் நிழலென வருவோம். இருவருமாக சபதம் எடுப்போம். காதலாகிக் கண்ணீர் மல்குவோம். ஒரே உணவை உண்போம். முதலடியில் பகிர்வது பலம். இரண்டில் துடிப்பைப் பகிர்வோம். செல்வம் மூன்றாவதில் சமனாகும். நாலில் மகிழ்வு பெருகட்டும். ஐந்தில் வாரிசு வளரட்டும். ஆறில் பருவம் மாறாதிருக்கட்டும். ஏழில் தோழமை பெருகட்டும். எழாப்பூவின் ஏழு அடிகள்.
அன்றும் நீல வானம். கற்பனை செய்த முதலிரவு. எண்ண வண்ணங்களில் திளைப்பு. நாடிகளில் பயம் ஓடியது. அன்னையும் தோழியும் அருகில்லை. இயற்கைக்கு இத்தனை செயற்கையா? கலவியும் கள்வமும் ஒன்றோ? தூக்கணாங்குருவி கட்டும் கூடு. பெண்ணிற்கு இல்லாத உரிமை. நிதானமாக அருகே வந்தான். ’எனக்கு உன்ன புடிக்கல’
குரல்கள் இப்போ கிசுகிசுத்தன.
“முனிக்கு கண்ணாலம் ஆயிட்டோ?”
‘ராச்சுத்தறவன எவ கட்டுவா?’
“மெய்யாலுமா சொல்ற, ஆத்தா”
‘கண்ணாலம் அவருக்கு என்னாத்துக்கு?’
“எல்லா சாமியும் பண்ணிருக்கே”
‘இவரு ஐயப்பன் அம்சம்’
“நீலா இருக்குதே கொட்டாய்ல”
‘பொற வாசலோட சரி. அவரு பொம்பளய இச்சிக்க மாட்டாரு’
“அது எப்படி ஆத்தா?’
‘மேக்கூரை வனைய விடாது. செனந்து செனந்து காக்கும். ரா முச்சூடும் சுத்தும். கண்ணாலம் கட்டலன்னா விடேன். அதுக்கு நாட்டமில்லன்னா விட்டுடணும்.’
நெருப்பை அணைத்த கண்ணீர்.