வாராணசி – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

புறப்படுதல்

வாழ்வின் மண்டபத்தில்
அபத்த சங்கீத பிரவாகம்
பின்தொடரும் இனியதோல்வியை
சுயம்வரித்துக் கொண்டேன்
நோயுற்ற காக்கையாய்
ப்ளாட்பாரங்களில்
கூச்சலிட்டது இதயம்
அதோ ஒரு துருப்பிடித்த ரயில்
தொலைந்துபோவதற்காக
அதன் ஏதோவொரு சன்னலோர இருக்கையில்
ஒடுங்கியிருக்கும்
அடக்கமுடியாத ஆசைதான் நானா

பயணம்

ஒரு நிலவெளியிலிருந்து
இன்னொரு நிலவெளி
அந்த இன்னொரு நிலவெளியிலிருந்து
இன்னொரு நிலவெளியென
விரைகிறது ரயில்.
ஒவ்வொரு நிலவெளியும்
ரயிலை
ஒவ்வொரு விதமாய் வரவேற்கிறது.
நிலவெளி ஏதுமற்ற நிலத்தை
ரயில் அடையும் போது
அந்த ரயிலே
ஒரு நிலவெளியாய் மாறி விரைகிறது
இன்னொரு நிலவெளியை நோக்கி

வாராணசி சித்திரங்கள்

0

மைந்தன் கனலுக்கு
காத்திருக்கிறான்
காலை மத்தியானமாக
மலர்ந்துவிட்டது
அந்தப்பக்கமாக நானே
இரண்டு மூன்று முறை
சென்றுவிட்டேன்
இன்னும் கனல்
கிடைக்கவில்லை போலும்
அன்னாரின் உடல்
வருத்தத்திலிருக்கிறது
சாயும்காலமும்
நெருங்கிவிட்டது தன் பத்து தலைகளுடன்
சற்றுதொலைவில் காத்திருந்தேன்
எனக்கு மட்டும்தான்
தெரிந்ததாயென தெரியவில்லை
அந்திச்சூரியனுக்கு பக்கத்தில்
எண்ணற்ற கரங்கள் கனலோடு நிற்க
தன் தந்தையை சுமந்துபடி
அவன் விண் ஏகிக்கொண்டிருந்தான்

0

யாத்ரீகர்கள் பராக்குப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
குரங்களும் பசுக்களும் கூட
சவம் சுடலையில் காத்திருக்கிறது
இனி பிறக்கவே கூடாது என்ற
வைராக்கியமும் அதற்கிருக்கிறது
நல்லதுதான்
விறகுகளை கம்பளித்துணியைப்போல
போர்த்துகிறார்கள்
பின்பு காத்திருந்து பெற்ற நெருப்பை
விறகின் மேல்
உட்காரவைத்தார்கள்
நீங்களும் நானும்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்
நீங்கள் உங்கள் நிலக்கடலை பொட்டலத்தை
பிரிக்கிறீர்கள்
நான் என்னுடையதை
பிறகு நாம் நம் அழகிய புட்டங்களை
எழில்பட ஆட்டினோம் மரணத்தின் முகத்திற்கெதிராக

0

மல்லாந்து படுத்திருக்கிறது வாராணசி
காலம் அதன் கழுத்தில் ஆபரணமாய்
அமரத்துவம் அதன் தலையணையாய்
வாராணசி இன்னும்
தூங்கிக் கொண்டிருக்கிறது
ஏழு ரத சூரியனும்
வந்துவிட்டது
வாராணசியை எழுப்பவேண்டாமா
ஆளுக்கொரு திசையில்
திகைத்து நிற்கின்றன
ஆலய மணிகள்

0

துறவிகள் பயணிகள் திருடர்கள்
ஆய்வாளர்கள் நீங்கள், நான்
என எல்லோரும்
குழுமியிருக்கிறோம்
கங்கைக்கு தீபாராதனை
பெண்கள் விளக்குகளை
மிதக்கவிடுகிறார்கள்
நரிகள் பரிகளான கதையாய்
அத்தனையும் ஓடங்களாக உருதிரிய
அதிலொன்றில் கேமராக்களுடன்
ஆய்வாளர்கள் ஏறிக்கொள்கிறார்கள்
பிறிதொன்றில்
உள்ளூர்வாசிகள் குழாம்
நான் இன்னொன்றில்
ஏறிக்கொள்ளப்போகிறேன்
நீங்களும் வருகிறீர்களா

திரும்புதல்

எங்கிருந்தோ ஒலிக்கின்றன
பூசாரிகளின் உச்சாடன குரல்கள்
முதலைகள் கண்களுக்குள்
நீந்துகின்றன
சேலை மாற்றிக்கொண்டிருக்கிறாள்
எனக்குள்ளிருக்கும் பெண்
இந்நீண்ட மத்தியானவேளையில்
கங்கை
வீதியில் பாய்கிறது
அதன் கரைகளில் புகை
உடுக்கையடித்தபடி ஆடுகிறது
நான் இன்னும் வீடுவந்து
சேரவில்லையோ

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.