சீர் – கமல தேவி சிறுகதை

கமல தேவி

மழை பெயருக்கு பெய்திருந்த முன்மதியம். மண்ணில் விழுந்து காய்ந்த துளிகளின் தடங்களின் மேலிருந்த சில பாதங்களைப் பார்த்தபடி அமுதா வாசல் படியில் அமர்ந்திருந்தாள். எதிர்த்தத் திண்ணையில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாயசாளிப் பாட்டிகளும், அம்மாக்களும், எதிர்வீட்டுஅய்யாவும் அடுத்தத் தெரு மாமாவும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

செல்லத்தின் குரல் கிழக்கே தெரு முடக்கில் தெளிவில்லாமல் கேட்டது. பதறியக் குரலாக இருக்கவும் அமுதா சட்டென எழுந்தாள். அதைப்பார்த்த எதிர்வீட்டய்யா, “என்னம்மா,” என்றார். சரியாகத் தெரியாமல், “ஒன்னுமில்லங்கய்யா,” என்றாள்.

குரல் நெருங்கி வந்ததும், “செல்லத்துக் குரல் கேக்கல,” என்றாள்.

தாயக்கட்டைகளை நிறுத்தி கூர்ந்தப்பின், “ஆமா… என்னன்னு தெரியலயே,”என்று எழுந்து தெருவின் நாற்சந்திப்பில் நின்றார்கள். ஒருப்பக்கம் துப்பட்டா வீதியில் இழுபட  வெள்ளய்யன் தாத்தா வீட்டில் பேசிவிட்டு விடுவிடு என்று வந்தாள்.

“நா என்னத்த செய்ய? எங்காளுக்கிட்ட என்ன பதில் சொல்றது?”என்று அழுதபடி வந்தாள். மேற்கு பக்கம் நின்றவள் நகர்ந்து வடக்குப் பக்கமாக நின்றாள்.

அய்யா கொஞ்சம் முன்னால் வந்து, “என்னாச்சு… பதறாம சொல்லு,” என்றார்.

செல்விஅம்மா, “கன்னுக்குட்டி எங்கடி,” என்றாள். மீண்டும் திரும்பி நின்று தலையைத் தடவிவிட்டுக் கொண்டாள்.

செல்லம் மூச்சு வாங்கியபடி அய்யாவிடம், “மாமா… கன்னுக்குட்டிக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு பாலம் வர வந்துட்டேன். கன்னுக்குட்டி ஆத்துல பூந்துருச்சு,” என்றாள்.

“யாரையாச்சு கூப்பிட வேண்டியது தானே..” என்றபடி அவர் முன்னால் வந்தார்.

“அக்கம் பக்கம் ஆளில்ல மாமா. ஆத்துல எறங்கி பின்னாலயே ஓடுனா, அது ஓட்டத்துக்கு என்னால முடியல. மேல வயல்ல ஏறி மறஞ்சிருச்சி. கள்ளுக்கட முடக்குல ஆளுகளப் பாக்கவும் ஓடியாந்து சொல்லி அவங்க பைக்குல கொஞ்ச தூரம் பாத்துட்டு வந்துட்டாங்க..” என்றபடி இடையில் கைவைத்து குனிந்து வளைந்து நின்றாள்.

“ஜல்லிக்காளையில்ல… என்னப்புள்ள நீ..”

“அவன் அதுக்கு மீறின ஐல்லிக்காள. என்னப் பண்ணப் போறியோ?”

“ஆம்பிளயள போவச் சொல்லாம உனக்கதுக்கு?” என்ற பங்காரு அத்தை குரலை கடுமையாக்கினாள்.

“அதுதான் இன்னிக்கு நாளக்குன்னு பெரும்போக்கா இருக்கவும் நா போனேன்,”என்ற செல்லத்தின் குரல் வெட்டி வெட்டி நின்றது.

“குமாரு எங்க?” என்ற பூஞ்சோலை அம்மா வடக்குப் பாதையைப் பார்த்தாள்.

“அதுக்கு போன் பண்ணி கள்ளுக்கட முடக்குக்கு வந்துருச்சு. தேடிப் போயிருக்கு,”

“அடிச்சானா..” என்று சின்னசாமிமாமா குரலை தாழ்த்திக் கேட்டார்.

“ம். அங்கனயே.. ஆளுங்க வந்து தடுத்துட்டாங்க,” என்படி குனிந்து அழுதாள்.

“பின்ன கொஞ்சுவானா?” என்ற கிழவியின் குரலால் அமைதியானார்கள்.

“இன்னிக்கு அந்தக் கன்னுக்குட்டி என்ன வெலக்கி போகும். பொழப்புல கருத்து வேணாம். என்னத்த எழவு இந்த காலத்துப் பிள்ளங்க வெவரமும் பொழப்பும்,” என்று மணியக்கா சொல்லிக் கொண்டிருக்கையில் கலைந்தார்கள்.

அமுதா, “அது போனதுக்கு நீ என்ன பண்ணுவ… பேசாம இரு. ரெண்டு நாளில வேகம் குறஞ்சிரும். என்னப் பண்றது… நாம நெனச்சா நடக்குது,” என்றாள்.

படியாக போட்டிருந்த அகன்ற கருங்கல்லில் அமர்ந்தாள். ஆளாளுக்கு பேசிவிட்டு விட்ட இடத்திலிருந்து தாயத்தை தொடர்ந்தார்கள். வழியில் வந்தவர்கள் போனவர்கள் என்று அனைவருக்கும் செல்லம் ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு வயிற்றில் பசி எரிந்தது. எந்த நேரத்திலும் யாரும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று சோற்றுக் கிண்ணத்தைப் பார்த்தபடி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கல்லில் அமர்ந்தாள். பக்கவாட்டில் குந்தாணியில் அமர்ந்த காகம் தலையைகுனிந்து எடுத்துத் தின்றது.

மதியம் கடந்து வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்தாள். வரும் வழியில் காலில் கல் குத்திய இடத்தை தடவிவிட்டபடி இருந்தாள்.

“கன்னுக்குட்டி பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதாய்யா…”

“…….”

அலைபேசி நின்றதும் செல்லம் உதட்டை வளைத்தபடி அதை பக்கத்தில் வைத்தாள். மணியைப் பார்த்தாள். பிள்ளைகள் வரும் நேரம். சட்டென்று எழுந்தாள். தகரக்கதவை ஒருக்களித்து வைத்து அப்படியே இருக்க அகல கல்லை பின்னால் முட்டுகொடுத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

உள்கதவை ஒருக்களித்து வெளியில் பார்க்கும்படி நான்று அவசர அவசரமாக வெறும் சோற்றை அள்ளித் தின்றாள். தண்ணீர் குடிக்கையில் வண்டி சத்தம் கேட்கவும் கிண்ணிய மூடி வாயைத் துடைத்தபடி வந்தவள் தாழ்வாரத்திலிருந்த கருங்கல் தொட்டி நீரில் கையை அலசி துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

“என்ன வேலய பண்ணித் தொலச்சிருக்க…” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தவனை உடன்வந்த பயல்கள் பிடித்துக் கொண்டார்கள்.

“உங்கண்ணன் பொங்கலுக்கு சீராக் குடுத்ததுன்னு சீராட்டி வளத்தது இப்படி தர்மத்துக்கு ஓட்டிவிடத்தானா..” என்று கத்தினான்.

செல்லம் அசையாமல் நின்றாள். அவன் கத்திக் கொண்டிருந்தான்.

“நான் என்னப் பண்றது.. ஆள ஒருஇழுப்பு இழுத்து விட்டுட்டு ஓடிருச்சு. தடுமாறி பின்னால ஓடறதுக்குள்ள அது ஆத்துக்குள்ள நிக்குது. பின்னால ஓடி கன்னுக்குட்டியப் பிடிச்சவங்க யாரு?”

குமார், “நல்லா பேசு… இரு ஒனக்கு இருக்கு,” என்றான்.

பப்புலு அண்ணனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

“ம்மா…மாமா ஊர்க்கு போலாமா,” என்று திருந்தாத மொழியில் கேட்டாள்.

“ஆமா…அது ஒன்னுதான் குறச்சல்,”என்று அவள் முதுகில் ஒன்று வைத்தான். அவள் வீல் என்று கத்தவும், அவள் அண்ணனும் சேர்ந்து அழுதான்.

“அந்தட்டம் போவல தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவன்,” என்று அவன் கத்திக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டிலிருந்து அவன் அக்கா வந்து பிள்ளைகளை தூக்கிக்கொண்டு போனாள்.

“த்த ப்பா அடிக்குது,”என்றாள்.

அத்தை, “செவல காணாமப் போச்சுடி,”என்றாள்.

“அது தண்ணிக் குடிக்க வந்துடும்,”என்ற பப்புலு இடையிலிருந்து இறங்கியபடி, “அப்பா அடிக்குதுன்னு அங்க போச்சா,”என்று கையை தூக்கிக் காட்டினாள்.

வெளியில் நடராசு ஆசாரியார், “டேய்…பழகுன கன்னுக்குட்டி காத்தால வந்துடும்,” என்றார்.

“அது என்ன நாய்க்குட்டியா வரதுக்கு,” என்றான். கன்று காணாமல் போன இடத்திலிருந்து முன்னப் பின்ன பக்கத்து ஊர்களில், வயல்காடுகளில் விசாரித்தான். ஒருவரும் கன்றை பார்த்ததாகக்கூட சொல்லவில்லை. வயல்காட்டுக்குள்ளயே போயிருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். “ஒத்தக் கண்ணுலக் கூடவா படல,” என்று உடன்வந்தப் பயல்கள் சொல்லவும் ஆற்றுக்குள் இறங்கி ஆனமட்டும் தேடிவிட்டு வந்தார்கள்.

காலையில் வந்தால் ஆளைத் தேடும் என்று குமார் வயலில் போய் படுத்துக் கொண்டான்.

அதிகாலையில் அமுதா வாசல் தெளித்து கூட்டுவதற்காக தென்னம்மார் துடைப்பத்தை இடது உள்ளங்கையில் தட்டி சரிசெய்தாள். செல்லம் வாசல் தெளித்துவிட்டு கல்லில் உட்கார்ந்தாள். மெலிந்த தேகம் அவளுக்கு. கல்லூரிக்கு போகும் வயதில் பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள். செல்லத்துக்கு ஊரறிந்த காதல் கல்யாணம்.

சொந்தத்தில் கல்யாணத்தில் பார்த்த இவனைத்தான் கட்டிக்குவேன்னு வயசு பதினெட்டாக காத்திருந்து கல்யாணம் செய்து கொண்டதை நினைத்துக் கொண்ட அமுதா, “என்னாச்சு செல்லம்,” என்று கேட்டாள்.

“நேத்து சரியா சோறு திங்கல. நடுராத்திரி வர அந்தாளு பேசிக்கிட்ட இருந்துட்டு வயலுக்கு போயிருக்கு”

“கன்னுக்குட்டி வந்துரும் . மனசப்போட்டு குழப்பிக்காத. உங்கண்ணன் கல்யாணம் நாளக்கு தானே. போகலியா?”

இல்லை என தலையாட்டியபடி செல்லம் பெருமூச்சு விட்டாள். எழுந்து வாசலைக் கூட்டினாள்.

இருவரும் தெருவிளக்குக்கடியில் கூட்டிக்கொண்டு நெருங்கி வருகையில் நிமிர்ந்து நின்றார்கள். தெருவில் யாரும் விழிக்கவில்லை. ராசு தாத்தா மட்டும் டீ க்கடைக்கு போய்க் கொண்டிருந்தார்.

“வறக்காப்பியாச்சும் போட்டுக்குடி செல்லம்”

“பப்புலு ராத்திரி பசிக்குதுன்னு அழுதா. வறக்காப்பி ரெண்டு கிளாஸ் குடிச்சா.. மிச்சம் இருக்கு,” என்றாள்.

“அண்ணன் கல்யாணத்துக்கு போகனுமேன்னு இருக்கா?”என்று தோளில் கைவைத்தாள்.

“நீ வேறக்கா. என்னயவிட நொந்து போவியாட்டுக்கு,”

“இல்ல… அண்ணன் கல்யாணம்ன்னா ஆசதானே,” என்று கையை எடுத்துக்கெண்டாள்.

“கட்டிக்கிட்டு வந்தப்புறம் அண்ணன் கல்யாணம்ன்னாலும் சீரோட போனாதான் எல்லாம்..”

“எதும் வாங்கலியா?”

“எதுவும் வாங்காட்டி பரவாயில்லயே. எங்கண்ணங்கிட்ட வாங்கின கடன கல்யாண செலவுக்குக் கேட்டா, எங்காளு குடுக்காம எகத்தாளம் பேசுது. என்னால கூடப் பொறந்தவன் மூஞ்சியில முழிக்க முடியல. அதான்…”என்றபடி சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள்.

“அதான்.. அநியாயக்காரனுக்கு என்ன நியாயம்ன்னு நேத்து அண்ணன ஆத்துக்குள்ள நிக்க சொல்லி கன்னுக்குட்டிய ஓட்டிவிட்டுட்டேன்”

“ஐய்யோ… யாருக்கும் தெரிஞ்சுட்டா…”

“அண்ணன் ஆத்தோட கொண்டு போய் வித்து காசாக்கிருச்சு,” என்றபோது மேற்கால வீட்டுக்கதவு திறந்தது. செல்லம் குனிந்து கூட்டியபடி நகர்ந்து உள்ளே சென்றாள்.

“கூட்டிட்டு எடுப்பியா.. இந்நேரத்துல சாவகாசமா நின்னுக்கிட்டு. இந்த சந்தில சங்கிலிகருப்பன் ஓட்டம் இருக்குல்ல,” என்று மேற்கால வீட்டு அம்மா அமுதாவை விரட்டினாள்.

வானில் மெல்லிய ஔி பரவிக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்க அரைமணியாகும்  என்று நினைத்தபடி கோலத்தை வரைந்துவிட்டு எழுந்து பெருமூச்சு விட்டபடி செல்லத்து வீட்டைப் பார்த்தாள். கூட்டிப்பெருக்கிய வாசல் சந்தடியின்றி அரையிருளில் தெரிந்தது.

 

 

 

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.