‘கில்லாப் பரண்டி, கீப் பரண்டி, மாப்பரண்டி
மல்லிக மொட்டு போன்றவனே!
முன் ஆனி மாம்பழம் தின்னவனே!
ஆனி மாம்பழம் தின்னவனே
அப்புச்சிக் கைய மடக்கு
மாட்டேன்னா போ போ
இங்கே இங்கே வா வா
பார் பார் வாழைத்தார்
தாளம் போட்ட கோபுரம்
சீமா தேவி பூமா தேவி
கை மடக்கு
கை எங்க காணும்?
குருவி கொத்திப் போச்சு’
ஆம், குருவிதான் கொத்திப் போயிருக்க வேண்டும்.அது கொத்திப் போனது உடலையா, உணர்வையா? இரண்டும் கொஞ்சம் கொஞ்சம் எஞ்சிப் போகும்படி கொத்தியிருக்கிறதா இல்லை விஞ்சிப் போகும்படியா? சிறு வயதில் என்னுடன் அம்மா விளையாடிக்கொண்டே சொல்லிய பாடல்கள் பலவற்றில் பொருளற்றதாகத் தோன்றும் வார்த்தைகளுடன் உள்ள இந்தப் பாடல் மட்டும் நினைவிருப்பது விந்தைதான்.
என் பெற்றோர்களின் பிறந்த ஊர் இது. நான் கூட இங்குதான் பிறந்தேனாம். எனக்கு இரண்டு வயதாகையில்,அம்மாவின் ஆசைக்கிணங்கி அப்பா நல்ல வேலை தேடி எங்களுடன் சென்னைக்குப் போனாராம்.சிறிது சிறிதாக பிறந்த மண் பிரிந்து விட்டது. அப்பாவும் என் பதின்மூன்றாம் வயதில் என்னையும் அம்மாவையும் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார். இருபத்தி இரண்டு ஆண்டுகள் நான் வந்திராத ஊர். சொந்தங்களின் கேள்விகளுக்கு அஞ்சி அம்மா வரமறுத்த ஊர். நான் மிகப் பிடிவாதமாக வந்துள்ளேன். அப்பத்தா வீட்டில் தான் வாசம். வீட்டு வாசலின் முகப்பில் அழகான வளைவு, அதன் இரு புறங்களிலும் வெள்ளை யானைகள் துதிக்கைகளை மேல் நோக்கி வளைத்து வரவேற்கும் தோற்றத்தை அமைத்த அந்த வித்தகனைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டேன். அப்பத்தா சிரித்தார்.
“நீயி கல்லைப் பாரு, கலயப் பாரு,காசுக்காக இல்லாம உசுரு நிக்க மாரி படச்சுப் போட்டானே அத்த நெனச்சுப் பாரு, அவன பாக்க ஏலாதையா, அவன் ஒரு பரதேசி.எங்கிட்டிருந்தோ வந்தான் திடீன்னு; சாதி, குலம், குடும்பம் ஒன்னும் வெளங்கல; இக்கட்டடம் கட்டயில வந்தான்யா;மேஸ்திரி வளவுக்கு தடுமாறுராரு, சித்தன் கணக்கா வந்தான். முட்டயும், சுண்ணாம்பும் முத்தும் ஒடச்சு அச்செடுத்தான், பதிச்சான் களிறும் பிடியுமா சமச்சான் ’ ஐய, ஒன்னு, பிடி வையி, இல்ல களிறு என்னா ரெண்டையும் கொழப்புதேன்னு சொன்ன உன் அப்பனப் பாத்து சிரிச்சான்.மக்கா நா போயிட்டான்.அவனக் கண்டா காலுல விழுவணும்னு எம் மனசு அடிச்சுக்குது.அதென்ன பிடியும், களிறும்னு மண்ட சாயும் முன்ன தெரியணும்னு ஆவலாதியா இருக்கு.உனக்காவது பிடிபடுதா” என்றாள். யாருக்கோ எங்கேயோ தப்பாக புரிபட்டு நான் இங்க வந்திருக்கிறேன்னு அப்பத்தாகிட்ட எப்படிச் சொல்ல? கருவினுள் மீண்டும் புகுந்து கொள்ளும் ஆசையில் நான் இப்படித் தீர்மானித்தேனோ என்று என்னையே நான் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அப்பத்தாவிடம் எதற்குச் சொல்ல வேண்டும்?
நடந்து நடந்து புதுக்குளக் கரைக்கு வந்துவிட்டதை உணர்ந்தேன்.அருகிலிருக்கும் கோயிலிலிருந்து ரீங்கரிக்கும் மணியோசை காற்றில் மிதந்து வருகிறது. இல்லை, இந்த நேரம் இன்னமும் நடையே திறந்திருக்கமாட்டார்களே ? ஏதும் விசேஷமா இல்லை என் மனக்காதுகள் கேட்கும் ஒலியா? தலையை உதறிக் கொண்டேன் எண்ணங்களை உதறும் முகமாக. செம்மண் நிறத்தில் இருக்கிறது இந்த புதுக்குளம்; ஆனால், கையில் நீர் அள்ளியவுடன் நிறமற்றுத்தான் தெரிகிறது.அசைந்தாடும் இடையில் குடத்தை இருத்தி நீர் மொண்டு செல்லும் பெண் என்னை வினோதமாகப் பார்த்துக்கொண்டே சென்றாள்.’செம்புலப் பெயல் நீர் போல’என்பதற்கு மண்ணின் நிறம் கொள்ளும் தண்ணீர் என்று நான் படித்த காலத்தில் ஒரு விளக்கம் சொல்வார்கள்; இன்று அதற்கு மாறுபட்ட அர்த்தத்தை சிலர் சொல்லக் கேட்கையில் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.மண்ணின் நிறம் படியாத நீர்- இல்லை அப்படிச் சொல்வதற்கில்லை-குடத்தில் மொள்ளும் போதும்,வீட்டில் சேமித்து வைக்கும் போதும் அந்த நிறம் சற்றே தெரியத்தான் தெரிகிறது;கைகளில் அள்ளும் போதுதான் மாயமாகிவிடுகிறது.இடுக்கின் வழியே மாயமாகும் நிறமற்ற நீர்.
நான் இந்த ஊருக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. என் விடுமுறை முடியப் போகிறது.நான் பணியில் மீண்டும் சேர்வதா அல்லது மருத்துவரைப் பார்ப்பதா?அம்மா முதலாவதையும், நான் இரண்டாவதையும் தேர்ந்தெடுக்கும் மனநிலையில் இருக்கிறோம். ஆனாலும் என்னுடைய தேர்வு எனக்குக் குழப்பமாக இருக்கிறது.இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டேவந்தவன் கால் போன போக்கில் குயவர் தெருவிற்குள் வந்துவிட்டேன்.மண் வனைந்து வனைந்து பாண்டமாவது என்ன ஒரு விந்தை! நேர்த்தியாக, மிக நேர்த்தியாக சுழன்று சுழன்று வரும் சக்கரத்தின் மேலே உருவாகும் ஒரு பிம்பம்-ஓ, என்னைப் பார்த்து அவர் கவனம் சற்றே கலைய திறமையான விரல்கள் இலாவகமாகப் பிடித்தாலும் பானை உரு மாறியது.ஆனால், அவரோ சிரித்துக் கொண்டே ‘‘பானயை நெனைச்சேன், கலயத்தைப் புடிச்சேன்,எதுவானா என்ன அதததுக்கு தக்கின பயன்’’என்றார். எதுவானால் என்ன என்று எதையும் விட்டுவிட முடியுமா?
முடியும் போலும்.அப்படித்தான் கடவுள் என்னை விட்டு விட்டார். அவர் என்னை வனைந்த போது குறுக்கிட்டது எது அல்லது யார்? என்னை பானையாகப் பிடிக்க நினைத்தாரா, நான் தான் கலயமாகி விட்டேனா? வனையப்பட்ட பொருளுக்கு அந்த உரிமை உள்ளதா என்ன?
“என்ன தம்பி, ரொம்ப யோசிச்சிக்கிட்டு நின்னுட்டீங்க.இது ஏற்பட்றதுதான்,நாங்க உரு மாத்துவோம்,இல்ல அழிச்சி செய்வோம்,ஏதோ ஒப்பேத்தணுமில்ல.”
‘ஏங்க, கடமெல்லாம் இதில செய்வீங்களா?’
அவர் சிரித்தார். ’ஏல மூக்கையா, தம்பிக்கு மண்ணெல்லாம் ஒன்னு போலிருக்கு.கரம்பக் காட்டையும்,களிமண்ணு நிலத்தையும், செம்மண் பூமியையும், கரிசல் காட்டையும் ஒண்ணா பாக்குது’
‘அதுடவுன்லேந்து வந்திருக்கு.அதுக்கு இன்னா தெரியும்?நாமள்ள சொல்லோணும்’
“அதுவும் செரித்தான்.மண்ணுக்கு மரபுண்டு, குணமுண்டு, இன்ன இன்ன நெலத்துல நான் இப்படீப்படி வருவேன்னு அது சொல்லும் தம்பி.அதை விட்டுப் போட்டு அதுங்குணத்தை நாம மாத்தக்கூடாது.அது சரி தம்பி, கடம் வேணுங்களா உங்களுக்கு?தட்ட வருமா?’
‘இல்லீங்க, சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன். நா வரேணுங்க”
அப்படியென்றால் இரு வேறு மண்ணெடுத்து என்னை அந்தக் கடவுள் எப்படிக் கடைந்தான்? கடமுமில்லை, பானையுமில்லை ஆனால், இரண்டும் இருக்கிறதே என்னிடம்.
“இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு என்ன விட்டு வேறுயாரு உன்னைத் தொடுவார்” என்று பாலு டீக்கடையிலிருந்து பாடிக்கொண்டிருந்தார்.அங்கே பெஞ்சில் அமர்ந்திருந்த கூட்டத்தில் என்னை சிறிது நேரம் தொலைக்க விரும்பி ‘கட்ட சாய்’ எனச் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டேன். பாலு மீண்டும் பல்லவிக்கு வந்து’இரண்டில் ஒன்று’ என்றார்.கதர் சட்டையும், பெரிய பெரிய பூக்கள் போட்ட கைலியுமாக இருந்தவர் ‘ஏன்யா, பழசான பாட்டத்தான் போடுவியா?’என்றார்.
“உன்னயெல்லாம் உக்காரவுட்டதே தப்பு;நீ ஏதும் பொருத்தமா ட்ரஸ் போட்ருக்கியா, கதர் சட்டயும், கைலியும் இதில பாட்டு பழசாம்,பெரிசா சொல்லவந்துட்டாரு.என்னைக்கும் உள்ள பாட்டுய்யா,என்ன சார் நாஞ் சொல்றது?” கடைக்காரர் திடீரென என்னைக் கேட்பார் என நான் நினைக்கவில்லை.மையமாகச் சிரித்தேன்.
ஆனால், அகிலா என்னைக் கேட்டாள், இரண்டில் நீ எது என்று. நீ ஈரிதழ் சிட்டா என்றும் சினந்தாள். கடுமையான கோடை அப்பொழுது; மேற்கே பார்த்திருந்த வீட்டில் சூரியன் மறைந்த பிறகும் அவன் ஆதிக்கத்தின் தாக்கம் மிகுந்திருந்தது. காற்றை அவன்தான் கைது செய்திருக்க வேண்டும்; விடுவிக்க மனமில்லை இன்னமும் அவனுக்கு. உடல் ஆடைகளிலிருந்து விடுதலை கேட்டது.
’மால தீபாராதன பாக்கப் போறேன். நீ எங்கியாவது போறதுன்னா,சாவிய வழக்கமான இடத்ல வச்சிடு’ என்று அம்மா கோயிலுக்குப் போய்விட்டாள். சற்று காற்றாட இருக்கலாம் என்று உடுப்பைக் கழற்றிவிட்டு இடையில் ஓரிழை துண்டைக் கட்டிக் கொண்டு நாவலுடன் உட்கார்ந்துவிட்டேன். அதில் தொலைந்து போனவன், கதவு திறந்திருப்பதையோ, அருகில் அகிலா நின்றிருப்பதையோ முதலில் கவனிக்கவில்லை.பதட்டத்துடன் எழுந்தவன் பரபரப்போடு ஆடைகளை அணிந்து கொண்டேன். அவள் முகம் அதிர்ச்சி, அருவெறுப்பு, கோபமென பல உணர்வுகளைக் காட்டியது. வாயிலை நோக்கி வேகமாகப் போனவளை தடுத்துப் பிடித்தேன்.சீறினாள், என் கையை உதறினாள்; ’தொடாதே,கரப்பான் ஊர்ற மாரி இருக்கு’ என்றாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், அவள் தொடர்ந்தாள்.
’ஏன்?ஏன்? நீயார், இரண்டில் எது நீ?’
தன்னிலையச் சீண்டும் இந்தக் கேள்விக்கு எனக்கு கோபம்தான் வந்திருக்க வேண்டும்; ஆனால், அழுகைதான் வந்தது. அவள் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். சிறிது நேரம் கழித்து ஒன்றுமே சொல்லாமல் போய் விட்டாள். நான் இடிந்து போய் உட்கார்ந்துவிட்டேன்.
மறு நாள் மாலை அலுவலகத்திற்கு வந்தவள்’வா என்னோடு’ என்றாள். ’எங்கே’என்றேன்.
“மருத்துவரை சந்திக்கப் போகிறோம்”
‘எதற்கு?’
“உன்ன அவர் பாக்கட்டும்”
‘என்ன எதுக்கு அவர் பாக்கணும்?’
“பின்ன,உன் பிரச்சன என்னன்னு தெரியணுமில்ல”
‘கண்டபடி கற்பன பண்ணாத; எனக்கு ஒண்ணுமில்ல’
“அத அவரு சொல்லட்டம்”
‘நான் இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டேன்.உனக்கு இப்படியெல்லாம் எங்கிட்ட பேச வெக்கமே இல்லியா? என்ன ரொம்ப காயப்படுத்தற’
“நான் உனக்கு நல்லதுதான் சொல்றன்.வெக்கப்பட என்ன இருக்கு இதில? ”
‘ இல்ல, உனக்குப் புரியல்ல, நீ சந்தேகப்படற.உங்கிட்ட என்ன நா ஏன் நிரூபிச்சுக்கணும்?பலிகடாவாக நா தயாரில்ல’
“புரிஞ்சுக்க, நா மொத்தமா உன்ன வுட்டுப் போயிடுவேன், நீ ஒத்துக்கலைன்னாக்க”
‘போ,போ,நல்லவேள, கல்யாணம் நடக்கல, உன்ன வச்சு குடும்பம் நடத்தமுடியாது தாயீ, நாம ஏதோ சந்திச்சோம்,பிடிச்சிருந்திச்சு, பழகினோம், இப்ப வெலகறோம், அவ்ளவ்தான்’
“அவ்ளோதானா,சரி, எனக்கு நல்ல காலம் போல.”
அவள் பிரிந்து போனாள்; அவளுக்குக் கல்யாணமும் ஆயிற்று.நான் போகவில்லை; ஆனால், அவளைக் கேட்க வேண்டும் போலிருந்தது-இந்த உன் மாப்பிள்ளையை எப்படித் தேர்ந்தெடுத்தாய் என்று.
வீட்டில் என்னையும் மீறி விக்கி அழும்போது அம்மாவிற்கும் தெரிய வந்தது.ஆறுதல் சொன்னாள் அம்மா. ஆனால் ‘விட்றா, நான் நூறு பொண்ண கொண்டு வந்து நிறத்தறேன், கவலப்படாதே ’என்று சொல்லவில்லை.அம்மாவும் உணர்ந்திருக்கிறாளோ? எனக்குப் புரியவில்லை. சுண்டிய நாணயத்தில் பூவும் இல்லாமல், தலையும் இல்லாமல் நெட்டுக்குத்தாய் நிற்கும் ஒரு பகடையாட்டம்; அமைந்து இருக்கையில் பூவும் இருக்கிறதே, தலையும் இருக்கிறதே;நிலவின் மறைந்த மறுபக்கம் எனக்குத் தெரிகிறதே- யாரிடம் சொல்ல முடியும், யாரைக் கேட்க முடியும்?
ஆசாபாசங்கள் அனைவருக்கும் பொதுவில் ஏற்படுவதில்லையா? உள்ளின் உள்ளாக என்னில் பொதிந்துள்ள என் உருவை மறுத்து, நான் விரும்பாத, நான் நம்ப மறுத்ததை ஏதோ ஒரு மருத்துவ பரிசோதனை காட்டிவிட்டால் நான் என்ன செய்வேன்? அதுதான் உண்மை என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதன்படி ஒரு புதுத் தோற்றம் பெற்றுக் கொள்ள முடியுமா? மனம் ஒன்று உடல் ஒன்றாக உலா வர முடியுமா?
கேள்விகள், கேள்விகள், சூழும் கேள்விகள்,பதிலுக்குப் பயப்படும் கேள்விகள்; விடை தெரியாத கேள்விகள் எவ்வளவோ பரவாயில்லை. நேர்ப்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் பதிலை அணுக என்னால் முடியுமா?
“வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு இருக்கணும்,சரி பாத்து அடிக்கணும்,கண் அளக்க, கை விரையணும்,இல்லேன்னா வெட்டவே வரக் கூடாது” தெருவில் இரு மர ஆசாரிகள் பேசிக்கொண்டே என்னைக் கடந்து சென்றார்கள்.
அம்மா அதைத்தான் சொல்லாமல் சொல்லிவிட்டாள். ’நா இருக்கேன் உனக்கு, நீ இருக்க எனக்கு, இப்படியே இருந்துடுவோம்டா’
எனக்கு வாய் விட்டுச் சொல்ல வரவில்லை. திரிசங்கு சொர்க்கம் இதுதானோ?