காற்றை வடிகட்டும் கண்களுக்குத் தெரியாத அலைகளால் ஆன வலையை சில ஊர்களைச் சுற்றி அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்தார்கள். அப்பொழுது த்வரிதாவிற்கு பத்து வயதுக்கு மேல் இருக்கலாம்.
“வீட்லயே இருக்கனும் த்வரிதா…” என்பதை கேட்டுக் கேட்டு சலித்தாள். அவளின் கூட்டாளிகளும் அவ்வாறே வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள்.
விலைமதிப்பில்லாத அந்தத் திட்டம் நகர்களை சமைக்கும் அமைப்பின் சாதனைகளின் சிகரம் என்பதால் அதை வடிகட்டிய காற்றின் அலைகளில் பதிக்கும் பணியும் விரைந்து நடந்து கொண்டிருந்தது.
நவீன வாழ்வின் அத்தனை அம்சங்களும் இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அது மேட்டுநிலப் பகுதி.நீர் நிற்காத நிலம். ஆனால் ஊற்றுகள் எங்கும் இருந்தன. அவர்கள் இயற்கையோடு நின்று பெற்று வாழ்ந்தார்கள். அந்த இயற்கை ஒரு உள்ளங்கை போல விரிந்து தன்னை காண்பித்து ஈர்த்தபடி இருந்தது. அதன் ஆழத்தில் உள்ளதன் சாரமென அது விரிந்திருந்தது.
அன்றாட செயல்களில் இருந்த ஊர்களில், மெதுவாக மெல்லிய அறியாத கெட்ட வாசனை காற்றில் கலப்பதைப் போல புரளிகள் பரவி சூழ்ந்தன. எங்கிருந்தோ ஆபத்து என்று பேசிப் பேசி அது இல்லாமலேயே அதை அருகில் கண்டார்கள். த்வரிதாவின் கண்கள் காணவே ஒரு மாயத்திரை ஓவியத்தை மெல்ல மெல்ல கலைத்து விரித்ததைப் போல சூழல் மாறிக் கொண்டிருந்தது.
“நாளைக்கு என்ன நடக்குமோ என்ற கேள்வி,” இயல்பிலிருந்து எச்சரிக்கைக்கு மாறியது. அது பேரச்சமாக மாறி சூழ்ந்ததும், மனிதர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அதைப் பற்றியே சிந்தித்தார்கள். அந்தத் தருணத்தில் இந்த பாதுகாப்பு வலை மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது. அவர்கள் அந்தவலை போலவே பூமிக்கு அடியில் உருவான இன்னொரு பாதையை அறியவே இல்லை.
ஒவ்வொரு முறையும் வடிகட்டிய காற்றின் புதியஅலை கடந்து செல்கையில் அரசின் சாதனை மென்மையாக காதுகளில் ஒருமுறை ஒலித்துச் செல்வதாக இருந்ததால் த்வரிதா தோள்களை குறுக்கி கண்களை மூடிக் கொண்டு சிரித்தாள்.
என்றைக்கு பக்கத்து நகரத்து அரசு தன் நுண்ணுயிர் ஆயுதத்தை பரப்பும் என்று அறிய தீவிரமாக ஒற்று வேலை நடந்தது. நகரின் மேல் பறந்த நுண் ஒற்றனான செயலி அளித்த கணிப்பு நாளிற்கு முன், வேலைகள் முடியும் களிப்பு அறிஞர்களிடம் இருந்தது.
இரு ஆண்டுகளில் ஊர்கள் இணைந்து மெல்ல மெல்ல ஒரு நகரமாகிக் கொண்டிருந்தது. மனிதர்களும் மாறிக் கொண்டிருந்தார்கள். புது ஆட்கள் குடியேறினார்கள்.
த்வரிதா சுற்றுலா வந்த இடத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதைப் போன்ற மனநிலையில் இருந்தாள். தன் வீடு எங்கோ இருப்பதான ஒரு பிரமை அவளுக்கு எப்போதும் இருந்தது. உறங்கி விழிக்கையில் எங்கிருக்கிறேன் என்ற எண்ணம் அகன்றபின் இதயம் படபடக்கும். ஒருவாறு ‘நம்ம வீடு தான்….நம்ம வீடுதான்,” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்.
பயன் தரும் கால்நடைகளுக்கு மட்டும் நகரின் எல்லையில் வாழிடம் உருவாக்கப்பட்டிருந்தது. தன் வீட்டு பப்பியை நகர்அமைப்பின் ஆட்கள் அழைத்துச் செல்கையில் அவள் கலாட்டா செய்ததால் அவள் மனநலமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.
மருத்துவர், “ஏன் இவ்வளவு சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாமல் இருக்கிறாய்,”என்று சர்வைவல் ஆப் பிட்டஸ்ட் பற்றி நிறைய பேசினார்.
“பப்பி யாரையும் எதுவும் செய்யாது,” என்றாள்.
“நம்ம சிட்டிக்கு மைக்ரோ வெப்பன்ஸ்ஸால வார் வரப்போறது தெரியாதா?”
“ம்”
“உன்னோட பப்பி அதோட கேரியரா இருக்க வாய்ப்பிருக்கு,”
“அப்ப நானும் கேரியரா?”
“இவளுக்கு ஆங்சைட்டி லெவல் கூடுதல். கவுன்சிலிங்கோடு மருந்துகள் கொடுக்கனும்,”என்று இன்னொருவரிடம் அனுப்பி வைத்தார்.
வீட்டில் இதனால் அம்மா, அப்பா பயந்திருந்ததாலும், மாத்திரைகளின் தொல்லையாலும் அவள் பப்பியை மனதிற்குள் புதைத்தாள்.
பயனுள்ள கால்நடைகளை குரலி மூலமும், எங்கோ இருந்து கொடுக்கப்படும் தங்களுக்கான ஆணைகளால் செயல்கள் மூலமாகவும் ரோபோக்கள் பராமரித்தன. மனிதர்களும் அவ்வாறு இடம் மாற்றப்பட்டார்கள்.
எங்கோ தொலைவில் விவசாயம் என்னும் தொழில் நட்புநகரத்தில் நடந்து கொண்டிருந்தது. இத்தனை தொழில் நுட்பங்கள் வந்தும் அது எங்கே என்பது தெரியாததாக இருந்தது. அங்கிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப்பொருட்கள் செரிவாக்கப்பட்டு சமைக்கப்பட்டு அங்காடிகளில் கிடைத்தன. நகரின் புறவழிகள் மெல்ல மெல்ல காணாமல் போயின.
மக்கள் நகருக்குள் அன்றாடமும், திரும்பத் திரும்ப ஒன்று போல் ஒரே வேலையை வெவ்வேறாக செய்து கொண்டிருந்தார்கள். மாதம் ஒருமுறை அவர்கள் செய்யும் வேலையின் மகத்துவம் புகழப்பட்டு அவர்களின் பொறுப்புணர்வு பாராட்டப்பட்டது. அனைவரும் ஏதோ ஒரு வேலையில் இருந்தார்கள். ஆனால் தாங்கள் செய்யும் வேலையைப் பற்றி அவர்கள் அறியவில்லை. முழு வேலையின் ஏதோ ஒருப் பகுதியை செய்தார்கள்.
த்வரிதா சமையலறையாக இருந்து, பழைய பொருட்கள் அடைக்கும் இடமாகிப்போன அறையை மாற்ற விரும்பினாள். அம்மாவின் நினைவாக அங்கு எதாவது செய்யலாம் என்று நினைத்திருந்தாள். அவள் கணவன் பிள்ளைகளுக்காக புதிதாக வாங்கியிருந்த ரோபோ விளையாட்டுக் கூடத்தை அங்கு அமைக்கலாம் என வாதிட்டான்.
நுண்ணுயிரி போர் தொடங்கலாம் என யூகிக்கப்பட்டு மூன்று தலைமுறைகள் கடந்திருந்தன. அது இன்று வரலாம் என்பதே நிரந்தர கணிப்பாக இருந்தது. த்வரிதா தன் பேரப்பிள்ளைகளுடன் விரிவு செய்து மாற்றப்பட்ட அதே வீட்டிலிருந்தாள். வீடுகள் அடுக்குகளாக உயர்ந்தன. வானம் பார்த்தல் கூட அரிதாகிப்போன சமூகமாக ஆனார்கள்.
அவளின் சிறுவயதில் சமையலறையாக இருந்த அந்த அறை அவளுக்கு ஒதுக்கப்பட்டது. தரைதளத்தில் வெளியில் சென்று நிற்க வசதியாக இருந்தது. அவள் தன் காலத்திய மொபைல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருப்பதற்காக அனைவராலும் கேலி செய்யப்பட்டாள்.
அவள் தன் அறைக்கு வெளியிலிருந்த சிற்றிடத்தில் நாற்காலி போன்ற காற்று மெத்தையில் அமர்ந்தாள். வாகனங்கள் போவதும் வருவதும் தெளிவற்று கண்களுக்குத் தெரிந்தது. ஒலியில்லாத நகர்வு எப்போதும் அவளை பயப்படுத்தியது. எனவே அவள் அடிக்கடி தன் கேட்கும் தன்மையை சோதித்துக் கொண்டாள். அவளின் நடவடிக்கையை கண்ட மகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.
மருத்துவர்கள் , “அம்மாவுக்கு சென்ற தலைமுறை ஆட்களுக்குரிய ஆங்சைட்டி ,” என்றதும் த்வரிதா புன்னகைத்து, “அதனால் எனக்குப் பெரிய பிரச்சனையில்லை,”என்றாள். உள்ளுக்குள் மாத்திரைகளில் இருந்து தப்பித்த நிம்மதி இருந்தது.
த்வரிதா ஒன்றுபோல மாற்றப்பட்டிருந்த சாலைகளில் அதன் கிளைவழிகளில் குழம்பினாள். அவளின் தோழியின் வீட்டின் மல்லிகைச்செடி அகற்றப்பட்டதிலிருந்து அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் மாறிவிடக்கூடாது என்ற எண்ணமே அங்கு செல்வதை நாள்போக்கில் நிறுத்தியது.
த்வரிதா பெயரனுடன் நெருக்கமாக இருந்தாள். அவனுக்கு தினமும் கதைகள் சொன்னாள். அந்தக் கதைகளில், அவள் பால்யத்திலிருந்த இந்தஊரின் கதையும் இருந்தது. அவன் இளைஞனான பின் பலக்கதைகள் சொன்னான். அந்தக் கதைகள் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் த்வரிதா அவனுடனிருப்பதற்காகக் கேட்டாள். படங்களைக் காண்பித்தான். அன்றும் அப்படித்தான் த்வரிதாவிடம் அவளின் பெயரன், சில புதுவகையான அனிமேசன் படங்களைக் காட்டினான். காற்றில் மிதக்கும் அவற்றைப் பார்க்க சிரமமாக இருந்தாலும் த்வரிதா ஆசையாகப் பார்த்தாள்.
மதிய நேரங்களில் இவளின் அருகில் அமர்ந்து அனிமேஷன் படங்களைப் பார்த்த ஹரீஸ்க்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. எதுவும் அனைத்து மனிதர்களுக்கும் ஒன்று போல அல்ல என்பதே அந்தப்படங்களில் அவனுக்கு வசீகரமானதாக இருந்தது. அவன் நண்பர்களுடன் பகிர்ந்தான்.
சிலர் முன்பே தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அந்தப்படங்களில் வந்த அந்தகாலத்தைக் கனவு கண்டார்கள். அந்தக் கனவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். நாள்போக்கில் கனவென்றில்லாமல் அவர்கள் நினைப்பதையே கனவுபோல சொல்லி மகிழ்ந்தார்கள். விதவிதமான கதைகள் அந்திவானில் பரவும் வண்ணங்கள் என பரவின. அந்த வண்ணங்களில் தங்களின் சிந்தையில் நின்ற வண்ணத்தை எடுத்து தங்கள் கனவில் பரப்பினர்.
இந்த நகரில் வாகனத்தை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதைப் போல பதின் பருவத்தினர் தங்களை உணர, தங்களை புரிந்து கொள்ள பழக்கப் படுத்தப்பட்டார்கள். ஹார்மோன்களின் வேலைகளை புரிந்து கொண்டு தங்களை வழிநடத்திக் கொள்வதன் மூலம் நகரில் வன்முறையை முற்றாக ஒழிப்பது கடமையாக கொள்ளப்பட்டது. அனைத்திற்கும் மேலாக அவர்கள் எதையோ இழந்ததை உணரும் தருணங்களில் பொழுதுபோக்குக் கூடங்களில் கழித்தார்கள்.
அந்தக் கதைகளின் வழியே மேடும் பள்ளமும் இல்லாத அவர்களின் நகரத்தின் சாலைகளில் செம்புலம் எழுந்துவந்தது. அவர்களின் கனவுகளுக்கு சிறகளித்தது. கனவுகள் மனதை பறக்க உந்தின. ஒரே விதமான வெப்பநிலை பேணப்பட்ட நகரின் கனவுகளில் கோடையும், பனியும், மழையும் மாற்றி மாற்றி உணரப்பட்டன.
அரசு விபரீதத்தை உணர்ந்து சட்டங்களை உருவாக்கி அந்தக் கதைகளை பேச தடை விதித்தது. பழைய பாடல்களில் இருந்து அந்தக் கதைகள் எழுந்து வந்திருக்கலாம் என யூகித்தது. உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்தது. நகருக்கு வெளியே ஒன்றுமில்லை என்று விதவிதமான விளம்பரங்களை வெளியிட்டு அவை எப்போதும் மக்களின் கண்களில் படும்படி பார்த்துக் கொண்டது.
பொதுவெளியிலிருந்து அந்தக்கதைகள் அகற்றப்பட்டன. எனினும் அவர்கள் சந்தித்துக் கொள்கையில் பேசிக்கொண்டார்கள். தங்களின் தனிப்பட்ட எழுதியில் பதிய வைத்தார்கள். வீட்டிற்குள் பேசப்பட்டு கொண்டன. முதிய தலைமுறை, பிள்ளைகள் வெறும் கனவில் ஆழ்ந்து நடைமுறையைத் தொலைத்துவிடக்கூடும் என்றஞ்சி கதைகளை நிறுத்திக் கொண்டார்கள்.
த்வரிதாவிற்கு மனதில் இப்பொழுதெல்லாம் அந்தநிலங்கள், மரங்கள், காலநிலை பற்றிய நினைவுகளும் கனவுகளும் அதிகமாக எழுந்தன. ஹரீஸும், த்வரிதாவும் தங்களுக்குள் அந்தக் கதைகளை பேசிக்கொண்டார்கள்.
அடர்ஆரஞ்சுநிற நிலவெழுந்த அந்தியில் த்வரிதா, “நாம ரெண்டுபேரும் சிட்டியவிட்டு வெளிய போய் பாக்கலாமா?” என்றாள்.
ஹரீஸ், “அங்க என்ன இருக்கும்?” என்று கழுத்தை தேய்த்தபடி வானத்தைப் பார்த்தான்.
“நம்ம கதைகளில் உள்ள இடங்கள் இருக்கலாம்,”என்றபடி கால்விரல்களை மடக்கி மடக்கி நீட்டினாள்.
“அது இமாஜினேசன்,”என்றபடி நடைப்பாதை கம்பியை பிடித்தபடி முன்னும் பின்னும் சாய்ந்து ஆடியபடி சாலையைப் பார்த்தான்.
“இல்ல…எப்பவாவது இருந்திருக்கும். இந்த நிலாவ நீ பாக்கறதானே?” என்று கண்களை விரித்து சிரித்தாள்.
“ஆமா கிராணி. சரி போய் பாக்கலாம்… நான் என்ன பேக் பண்ணட்டும்?”
“ட்ரஸ், கொஞ்சம் பூட் அண்டு வாட்டர்,” என்றாள்.
அவர்கள் தயாராகி நிறைய நாட்கள் காத்திருந்தார்கள். ஒரு வழியும் புலப்படவில்லை. ஒரு சந்திர கிரகண நாளில் நகரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அலைவலை குழையும் என்றும் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் நகரத்தார் எச்சரிக்கப்பட்டார்கள்.
சந்திரகிரகணத்தன்று த்வரிதா, ஹரீஸ் இருவரும் அனைவரும் உறங்கும் நேரத்தில் கிளம்பி எல்லையை அடைந்தார்கள். எங்கிருந்தோ கண்காணிக்கப்படும் உணர்வு அவர்களை எல்லையிலேயே நிறுத்தியது. பார்வையில் எதையும் எதிரொளிக்காத, எதையும் காட்டாத, தானே இல்லாத ஒருமாயத்திரை முன் விதிர்த்து நின்றார்கள்.
த்வரிதாவிற்கு உடல் நடுக்கம் எடுத்தது. கிரகணம் முடிந்து முழுச்சந்திரன் எழுந்திருந்தான். ஹரீஸ் திரும்பி செல்ல எத்தனித்த நொடியில் த்வரிதா நிலைதடுமாறி எல்லைக்கு வெளியில் விழுந்து சிறிது தூரம் சறுக்கினாள். அனிச்சையாக ஹரீஸ் பின்னால் ஓடினான். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடந்தார்கள். நிலவொளியில் காடும், குன்றுகளும், அப்பால் ஊர்களும் விரிந்தன. மேட்டிலிருந்து இறங்கி நடந்தார்கள்.
ஹரீஸ், “நாம ஏன் அங்கயே இருந்தோம்?”என்றான்.
த்வரிதா பேசாமல் புன்னகைத்தாள்.
அடுத்த நாள் இருவர் நகரைவிட்டு வெளியேறிய செய்தி நகர் முழுவதும் பரவியது. மேலிடம் கட்டுப்பாடுகளை அதிகரித்தது. போர் வருமென எச்சரித்து பயம் காட்டியது. வசதிகளை அதிகப்படுத்தி அனைத்தையும் மாற்றியமைத்தது. ஆனால் நகரிலிருந்து மக்கள் காணாமலாகிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்கள் புதிய கதைகளை சொல்லத் தொடங்கினார்கள்.