“சேது சித்தப்பா செத்துப் போயிட்டாராம் ஊருக்குக் கிளம்பணும்ன்னு அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, வாடி போலாம்”
2-ஏ வில் படிக்கும் பானு இரண்டாம் வகுப்பு பி பிரிவுக்கு வந்து மாலாவைக் கூப்பிட்டாள்
“அய்… ஊருக்காடி, ஜாலியா விளையாடலாம் இல்ல? சேது மாமாவா செத்துப் போயிட்டாங்க? தெரியாம சொல்லாத, தலைல வெள்ளயா முடி இருக்கவங்கதானே? சாமி கிட்ட போவாங்க?”
“தெர்லடி, அம்மா சீக்கிரம் கிளம்பணும்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க. வேகமா வா”
மாலாவுக்கு வேகமா நடக்க வராது. எப்போதும் எதையாவது பராக்கு பார்த்துக் கொண்டு மெதுவாகத்தான் நடப்பாள். பானு வேகமாக வீட்டுக்குப் போய்விட்டாள். பானு வீட்டுக்கு மாலா, போய்ச் சேர்ந்த நேரத்தில் அவள் ஜட்டியோடு நின்று கொண்டிருந்தாள் கையில் பால் டம்ளர் இருந்தது. அதை வேக வேகமாக குடித்துக் கொண்டிருந்தவள், மாலா வருவதைப் பார்த்து டம்ளரைப் பின் பக்கம் மறைந்தாள்.
“அய், சேம் சேம்”
“போடீ!! நான் யுனிபார்ம் மாத்தறேன்”
“அத்த எனக்கு பால்” என்றாள் மாலா.
“பால் தீர்ந்து போச்சு. உனக்கு வாளப்பளம் தரேன் அது தான் உனக்கு பிடிக்குமே. பளம் உனக்கு மட்டும் தான் பானுவுக்கு இல்லை”
மாலா பையை மேசை மீது வைக்கத் திரும்பிய போது “ஸ்ஸ் ஆ ஆ” என்று பானு முனகுவது கேட்டு திரும்பிப் பார்த்தாள், பானு தன் கைகளை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.
“ஏன்னடி ஆச்சு?”
“தெர்லடி வலிக்கிறது போல இருந்துச்சி.”
உள்ளே போயிருந்த அத்தை ஒரு சின்ன வாழைப்பழத்தை கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது செல்வம் அங்கு வந்து சேர்ந்தான்.
“ஏ உம்மான மூஞ்சி, எங்கடி இங்க வந்த உங்க வீட்டுக்கு போ” என்றான்.
பையை எடுத்துக் கொண்டு கிளம்ப இருந்தவளை, “மாலா, உங்க அம்மா ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போயிட்டு இங்கேயே வந்துடுறேன்னு சொன்னாங்க. நீ இரு மாலா, அவன் கிடக்கிறான்” என்றாள் அத்தை.
செல்வமும் யூனிபார்மை கழற்றிவிட்டு வேறு கலர் உடுப்பு மாற்றிக் கொண்டான். அத்தை செல்வத்தை உள்ளறைக்கு அழைத்தாள். செல்வம் கையில் டம்ளரோடு வந்தான். மாலா ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரம் பள்ளிக்கூடத்தில் இருந்திருந்தால் அவளுக்குப் பிடித்த உடைந்த கோதுமை உப்புமா கிடைத்திருக்கும். அம்மா அடிப்பாங்க என்று தெரிந்தும் திருட்டுத்தனமாக அதை வாங்கிச் சாப்பிடுவாள். இப்போது மாலாவுக்குப் பசிப்பது போலிருந்தது.
“செல்வம் உள்ள போய்க் குடி, டம்ளரை வெளக்கற இடத்தில் வைச்சிடு”
“இரும்மா குடிச்சிட்டுப் போறேன்”
பால் மேல் உதட்டில் மெல்லிய வெள்ளைக் கோடாக பதிந்தது. “அத்த பால் தீர்ந்து போச்சுன்னு சொன்னீங்க” என்றாள் மாலா.
“போன்னு சொல்றேன்ல” என்ற மெல்லிய குரலில் செல்வத்தை மிரட்டினாள் அத்தை.
“அத்தை நீங்க ஏன் மெதுவாவே பேசறீங்க, அம்மால்லாம் கோவம் வந்தா சத்தமா பேசறாங்க”
சன்னமாகச் சிரித்தாள் அத்தை. “அது பவுடர் பால் மாலுக் குட்டி, நல்லா இருக்காது கசக்கும், அவன் உன்ன வம்பிழுத்தான்ல அதான் அவனுக்கு கசக்கட்டும்ன்னு தந்தேன்”
“ஓ அப்படியா நல்லா வேணும் அவனுக்கு”
ஏதோ வேலை செய்ய அத்தை உள்ளே போய்விட செல்வம், பானு, மாலா மூவரும் ஒளிந்து பிடித்து விளையாட முடிவு எடுத்தார்கள்.
“சாட் பூட் திரி”
“எப்போதும் நானே கண்டுபிடிக்குணுமா?” சிணுங்கினாள் மாலா.
“கண்டு பிடிச்சா பிடி, இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் வேற விளையாடறோம்” என்றான் செல்வம். கோபித்துக் கொண்டு மாலா போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள். பானுவும், செல்வமும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஊருக்குப் போனால் இப்படி இல்லை எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம். செல்வம் பண்ணும் அட்டசாகத்துகு எல்லாம் சேது மாமா அடி போடுவார். முழுப் பரிட்சை லீவுக்கு அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் ஊருக்கு போவோம். அத்தை வீட்டிலேயும் எல்லோரும் வருவாங்க. சித்தி வீட்டிலிருந்தும் வருவாங்க. நாங்க எல்லாரோடும் அங்கே ஏழு கல் பாண்டி, பல்லாங்குழி, தாயம் எல்லாம் விளையாடுவோம். சேது மாமா தான் ஒவ்வொரு முறையும் ஒரு புது விளையாட்டை சொல்லித் தருவாங்க. போன லீவில் அவர் நிறைய புளியாங்கொட்டையைப் பரப்பி வைத்து, வாயால் சேது மாமா ஊதிக் காட்டினார் பத்து பன்னென்டு புளியாங்கொட்டை டான்ஸ் ஆடறது மாதிரி ஓடி அங்கொன்னும் இங்கொன்னுமாக, பாக்க அளகா இருந்துச்சு, அப்பறம் அதை எல்லாம் மறுபடி ஒன்னா வைச்சிட்டு இப்படி ஒவ்வொருத்தரும் ஊதுங்க, யார் அதிகம் புளியாங்கொட்டை சேருதோ அவங்க ஜெயிச்சவங்கன்னு சொன்னார். நாங்க எல்லாரும் ஜோரா விளையாடினோம். செம கலாட்டா. அப்ப பார்த்து அந்த பக்கமா பெரிய மாமா வந்ததாரு, ஓடி போய் சேது மாமா புது வெளயாட்டு சொன்னாரு மாமான்னு சொல்லிட்டே கட்டி பிடிச்சேன். அவரு ஏதோ தேளு கடிச்ச மாதிரி கைய உதரிக்கிட்டு முஞ்சிய கோவமா வைச்சிச்சி கிட்டு உள்ள போயிட்டாரு. இதுவே சேது மாமான்னா தூக்கி தலைமேல சுத்துவாரு. அப்படி தான் முன்ன ஒரு முறை சுத்தின போது சரியா தாத்தா “பிள்ளய தல மேல தூக்கி சுத்தாத குடலேறிக்கும்ன்னு எத்தன வாட்டி சொல்றது. இப்படி சின்ன பிள்ளகளோட எப்போது பாரு ஒரே ஆட்டம், வெல வெட்டிக்கு போவலன்னாலும் வீட்டுல மூட்ட ஏத்தா இறக்க ஒட்டடை அடிக்கன்னு வேல பாக்கலாமே. படிப்பு முடிஞ்சிட்டா துர மாறி இருக்கனுமா?” என்ற போது சேது மாமா கொஞ்ச நேரம் சோகமா உட்கார்ந்து இருந்தாரு. தாத்தா அம்மாவுக்கு அப்பா தானே அதான் இப்படி எப்போப் பாரு திட்டிகிட்டே இருக்காரு. “சேது மாமா நீ செல்வத்தோட அம்மாச்சி வீட்டுல பொறந்திருக்கலாம் அத்த மாறி அவங்க அப்பா கூட மெல்ல பேசுவாங்க, கோவமா திட்டவே மாட்டாருன்னு நினைக்கிறேன்னு” சொன்னதும் உடனே சிரிச்சிட்டே “பெரியவங்கன்னா அப்படி தான் குட்டி இருப்பாங்க. அவங்க திட்டறதெல்லாம் நல்லதுக்கு” சொன்னாரு. “அய் மாமா சிரிச்சிட்டாரு பாரு பானு, பன்னீர் மாமாவ நான் சிரிக்க வைச்சிட்டேன்” என்று சொன்னதும், சேது மாமா மறுபடியும் தட்ட மாலை சுற்றினதும் எனக்கு கிறுகிறுன்னு வந்துட்டுட்டது.
அம்மாயி வீடு ரொம்ப பெரியது, ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெரு வரையிலும் நெடுக இருக்கும் வீடு. அம்மா கிட்ட மாலா அடிக்கடி கேட்பா ஏம்மா அம்மாயி வீடு இவ்வளவு பெரிசா இருக்குன்னு. நெல் காய வைக்க, வெங்காயம், மிளகாய் மூட்டை எல்லாம் அடிக்க வசதியா அப்படி நெட்டுக்க கட்டி இருக்காங்கன்னு சொல்லுவாங்க அம்மா. கிழக்கு வாசல் இருக்கும் தெருவுக்கும் மண் வாசலுக்கும் நடுவுல பெரிய மேடு இருக்கும். கருங்கல்லு, வெள்ளை கல்லுன்னு அங்கங்க கல்லு கிடக்கும். நாங்க சாயுங்காலம் கல்லா மண்ணா விளையாட அது தான் இடம். கொஞ்சம் உள்ள தகரம் போட்ட தாழ்வாரத்தில நாலஞ்சி மாடு இருக்கும். எல்லாம் பசு மாடு. மாட்டுக்கு தண்ணி வைக்கத் தொட்டி இருக்கும். லட்சுமியும் மத்த மாடுங்க எல்லாம் எதையாவது மென்றுகிட்டே நிக்கும். அப்படி நிறைய நேரம் மென்னு தின்னா தான் நானும் நல்லா பெரிய பொண்ணா ஆவேன்னு அம்மா சொல்லுவாங்க. இந்த புறம் உச்சா போற இடம், குளிக்கிற இடம் இருக்கும். கக்கூஸுக்கு காலைல வாரிக்கு தான் போகனும்.
மண் வாசல் ஓரமா வடக்கால சின்ன இடத்தில் வேப்பமரம், கொஞ்சம் பூச்செடி எல்லாம் இருக்கும். நாலைஞ்சி குண்டு மல்லி தான் பூக்கும். அதுக்கு நானும் பானுவும் சண்டை போட்டுக்குவோம். அக்கா சத்தம் போடாமா பறிச்சி வச்சிச்சிப்பா. எங்களுக்கு எப்பவும் கனகாம்பரம் தான் கிடைக்கும். அத்த வந்து உங்களுக்குத் தான் அதிகம் பூன்னு எங்க இரண்டு பேரையும் அழாம இருக்க சொல்லுவாங்க. அம்மா தோசை ஊத்தி போடும் போது எல்லா பிள்ளைகளும் அங்கே உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு இடம் இருக்கும். சிலமுறை சோறு பிசைஞ்சிட்டு வந்து வாசலில் வைச்சி எல்லா பிள்ளைகளுக்கும் கொடுப்பாங்க அப்ப செல்வம் லபக் லபக்னு தின்னுட்டு முன்ன முன்னக் கைய நீட்டுவான். அத்த சண்டை போட்டா ஓடிப் போய் செவுத்துல முட்டிக்குவான். அம்மா அவனுக்கு எப்போதும் அதிகம் சப்போர்ட் பண்ணுவாங்க. வளர்ற பிள்ள திங்கட்டும்பாங்க. ஆனா அவன் என் கையிலிருந்து பிடுக்கிப்பான். அதைக் கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவன் தங்கிச்சிய மட்டும் நல்லா பார்த்துக்குவான். என் அக்கா அப்படி இல்ல, என் கூட சண்டை போடறா. அம்மாகிட்ட கோள் மூட்டி அடி வாங்கி வைக்கிறா. நினைக்க நினைக்க அழுகையா வரும். சேது மாமா மட்டும் தான் உம்முன்னு இருக்கக் கூடாது. சிரிச்சிட்டே இருக்கணும்னு சொல்லி கிச்சி கிச்சி மூட்டுவாங்க.
அது வடக்கு வாசல் வரை ஒரே ரூமாட்டாம் இருக்கும். வடக்கு வாசலைத் தாண்டினதும் வெளில முல்லப்பூ பந்தல் இருக்கும். நிறைய முல்லை பூக்கும். ஏணி வச்சி ஏறி செல்வமும், பன்னீரும் பூப்பறிச்சித் தருவாங்க. அம்மா, அத்தை எல்லாம் சேர்ந்து சாயுங்காலம் முழுக்கக் கட்டி எல்லோருக்கும் வச்சி உடுவாங்க. அம்மா ரொம்ப நெருக்கமாக் கட்டுவாங்க. அவங்கிட்ட நைஸ் பண்ணி பானுவும், அக்காவும் வாங்கி வச்சிப்பாங்க. எனக்கு எப்போதும் அத்தை கட்டின லொட லொட பூ தான் கிடைக்கும். வாங்கி வச்சிக் கிட்டு கொஞ்ச நேரம் உம்முன்னு இருப்பேன். ஆனா எல்லாரும் ஓடிப் பிடிச்சி விளையாடும் போது போய் விளையாட சேர்ந்துக்குவேன்.
காலையில எல்லா பிள்ளைகளும் எந்திரிச்சி வாரிக்குப் போவோம். லீவுக்கு போகும்போது எப்போவுமே வாரில தண்ணி இருக்காது. எப்பவாவது ஐய்யாத்தில் தண்ணி வந்தா வாரிலையும் வரும்ன்னு சேது மாமா சொல்லுவாரு. ஒரே ஒரு தபா வாரியில் தண்ணி நிறைய வந்துச்சி அப்ப அது பாக்க காவேரி மாதிரி இருந்துச்சி சொன்னாரு. ஆனா நான் ஒரு வாட்டி கூட வாரில தண்ணி வந்து பார்த்தது இல்லை. வாரிக்கும் வீட்டிக்கும் நடுப்புற பெரிய புளியாமரம் இருக்கும். சேது மாமா பிள்ளைங்களை அதில் கிளையப் பிடிச்சி ஆடச் சொல்லி ஒரு விளையாட்டு சொல்லிக் குடுத்தாங்க ஒரு முறை. அப்படி ஆடிக் கீழ விழுந்து பன்னீர் ஒரு டைம் கைய ஒடச்சிக்கிட்டான் அன்னிக்கு சேது மாமாவுக்கு செம திட்டு. அதுக்கு அப்பறம் யாரும் தாத்தாக்கு தெரிஞ்சி புளியங்கிளையில் ஆட மாட்டோம். தாத்தா தோட்டத்துக்கு போயிருக்காங்கன்னா ஒரே குதியாட்டம் போட்டு கிளையிலும் தொங்குவோம். கிளை எட்டாத பிள்ளைங்களை மாமா தான் தூக்கி விடுவாரு. என்ன ஒரு முறை தூக்கி கிளைய பிடிச்சி ஆடச் சொன்னப்பா ஒரே கத்தா கத்திட்டேன். கை வேற எரிஞ்சது. சிவப்பாயிடுச்சி. ஒரே அழுகை. அப்பறம் மாமா தும்பப் பூவில மோதிரம் செய்து போட்டுவிட்டா ரொம்ப நேரம் புதுசா வைச்சிருக்கானு என்னைச் சொல்லுவாரு. எல்லோரும் சீக்கிரம் பிச்சிப் போட்டுடுவாங்க. பானுவுக்குப் பத்து நிமிஷம் கூட போட்டு இருக்க துப்பு இருக்காது. என்னோடதையும் பிக்க பாப்பா தடிச்சி. பூவரச மரத்து பீப்பி கூட செய்து ஊதிக் காட்டுவாங்க. செல்வத்துக்குக் கூட ஊத வராது. நான் ஊதிடுவேன். கற்பூர புத்தின்னு சொல்லுவாரு. ரொம்ப நல்ல மாமா.
யோசித்துக் கொண்டிருந்த மாலா கொஞ்ச நேரத்தில் எழுந்து அவர்களோடு சேர்ந்து ஓடி ஆரம்பித்தாள். உடனே செல்வம் ஏதோ கிண்டல் செய்ய பானு அவளைப் பார்த்துச் சிரித்தாள். இவங்களை மாதிரி இல்லை சேது மாமா அவர்தான் ரொம்ப நல்லவர் என்று நினைத்தாள்.
“ஏய் பேசமா ஒரு இடத்தில் உட்காருங்க, இப்ப ஊருக்குக் கிளம்பணும், ஓடி பிடிக்கிறேன்னு எதையும் தள்ளி கிள்ளி விட்டீங்க, அடிதான்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் மாலாவின் அம்மா.
“இவ்வளவு நேரம் சும்மா இருந்தா இல்ல, இப்போ நான் இன்னும் ட்ரஸ் கூட மாத்தலன்னு அழுவா பாரேன்” என்று செல்வம் சொல்லி முடிக்கும் முன்னேயே மாலா “அம்மா நான் இன்னும் யூனிபார்ம் கூட மாத்தல” என்று சிணுங்கி அழத் தொடங்கியதும், செல்வமும், பானுவும் கொலென்று சிரித்தார்கள்.
“இதுக்கு தான் உனக்கு அத்த கசக்கிற பால் குடுத்தாங்க வெவ்வெவ்வே”
“கசக்கிற பாலா” என்று ஒரு வினாடி யோசித்த மாலாவின் அம்மா “சரி அழகு காட்டினது போதும் இங்க வா ட்ரஸ் கொண்டு வந்திருக்கேன், வா மாத்தி விடறேன்” என்று பேச்சை மாற்றினாள்.
“ஹும் இங்கே வேணாம், நம்ம வீட்டுக்கு போனால் இவங்க ’சேம் சேம்’ சொல்லுவாங்க,” என்று அடம் பிடித்தாள் மாலா.
சின்னதாய் ஒரு அடி போட்டு சட்டை, அரைப்பாவாடையை வலுக்கட்டாயமாகக் கழற்றினாள் அம்மா. குனிந்து குனிந்து கைகளை மடக்கி வித விதமாய் ஆட்டம் காட்டினாள். அம்மாவை விட்டுக் கொஞ்சம் தூரம் ஓடப்பார்த்தாள். அம்மாவுக்கு கோவம் வந்து ஒரு சாத்து சாத்தினாள். இருந்தாலும் மாலா யூனிபார்மை கழற்ற விடவில்லை.
“அண்ணி அந்த சூட்டுக்கோலைக் கொண்டாங்க இன்னிக்கி ஒரு இளுப்பு இளுத்தாத்தான் சரிப்படும்” என்றாள்.
மாலா பயந்துபோய் நின்ற ஒரு நிமிடத்தில் யூனிபார்மை பிடித்து இழுத்துக் கழற்றினாள் பானு. யூனிபார்ம் கிழிந்துபோனது. அவ்வளவுதான் ஜட்டியோடு ஒரேடியாக அழ ஆரம்பித்தவளைப் பார்த்து செல்வமும் பானுவும் ஷேம் ஷேம் என்றார்கள். அம்மா யூனிபாரம் கிழிந்ததைக் கவனிக்காமல் சுருட்டி எடுத்து கூடைப்பையில் திணித்தார். வேறு சட்டையை போட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினார்கள்.
அம்மாவும் அத்தையும் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். செல்வமும் பானுவும் பஸ்ஸிலும் ஓயாது எதையாவது விளையாடினார்கள். யூனிபார்ம் கிழிந்து போனதை நினைத்து ஒரே கவலையாக இருந்தது மாலாவுக்கு. அவளால் செல்வம், பானுவோடு விளையாட முடியவில்லை. முன்பொரு முறை சிலேட் உடைந்து போனபோதும் காட்டாமல் வைத்திருந்தற்கு கிடைத்த அடியை நினைத்து ரொம்ப பயமாக இருந்தது.
“ஊருக்குப் போயிட்டு சுருக்க வரணும், காலாண்டு நெருங்குதுல்ல, மாலா அப்பா மஞ்சுவை பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்காரு. அதான் சுருக்க வரணும்.”
“ஆமாக்கா வீட்ல போட்டது போட்டபடி இருக்கு. இந்த சேது ஆனா இப்படி பண்ணி இருக்கக் கூடாது, சும்மா வேல வெட்டியில்ல, என்னன்னு கேட்டதுக்கு இப்படியா ?”
“என்னவோ போ அய்யாவுக்கு அவன் ஒரு பாடாத்தான் இருந்தான். அய்யாவும், அண்ணனும் சும்மா இருக்காம ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க. அவனுக்கு இரண்டு வருஷம் கழிஞ்சா நேரம் சரியாடும், பெரிய உத்தியோகம் கிடைக்கும் வடுகப்பட்டி வள்ளுவ ஜோசியர் சொன்னதாக மாலா அப்பா சொன்னாங்க. அதுக்குள்ள இப்படி அநியாயம் பண்ணி அண்ணா பேருல தீராத பழியாக்கிட்டுப் போயிட்டான்”
சேது மாமா என்ன பண்ணி இருக்கக் கூடாது, பெரிய மாமா மேல் என்ன பழியாகும் அம்மாவும் அத்தையும் பேசுவது ஒன்றும் விளங்காமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் மாலா. சேது மாமாவை ஏன் தாத்தா எப்போது பார்த்தாலும் திட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நினைப்பாள். பெரிய மாமாவும் சேது மாமாவை திட்டிட்டாங்களோ. அதுக்கு சேது மாமா என்ன பண்ணி இருப்பாங்க?
பஸ் நின்றது. ரோட்டிலிருந்து வீட்டுக்கு கொஞ்ச தூரம்தான். மாலா வேகமாக நடக்க மாட்டாள் என்று இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு மாலா அம்மாவும் அத்தையும் வேகவேகமாக நடந்தார்கள்.
“அக்கா அவள இறக்கி விடுங்க இல்லாட்டா பானுவும் அடம் பண்ணப் போற என்னால தூக்க முடியாது”
பானு மிடுக்காக “என்னை ஒன்ணும் தூக்க வேண்டாம் நானே நடப்பேன், அவ சோமாசி. அவளை தூக்கிக்கங்க ’சேம் சேம்’ என்றாள்” பானுவைப் பார்த்து
“அம்மா இறக்கி விடுங்க அம்மா நான் வேகமா வரேன்” என்று கெஞ்சினாள் மாலா.
மாலாவை இறக்கிவிட்டு இன்னும் கதைகள் பேசிக்கொண்டே வந்தார்கள் அம்மாவும் அத்தையும்.வீட்டுக்கு பக்கத்தில் வந்ததும், ஸ்விட்ச் போட்டது போல அம்மாவும் அத்தையும் அழ ஆரம்பித்தார்கள் மாலாவுக்குச் சிரிப்பாக வந்தது. “பாவி ராஜா இப்படிப் பண்ணுவியா” என சன்னமாக அத்தையும், “அய்யோ கண்ணு இப்படிப் பண்ணிட்டியேடா, பூ வைச்சி பொட்டு வைச்சி கல்யாண கோலம் பாக்காம இப்படி போயிட்டியே” என்று சத்தமாக அம்மாவும் அழுததும் மாலா எதுவும் புரியாமல் அம்மாவையும் அத்தையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வீடு நிறைய இவ்வளவு கூட்டம் அவள் ஒருநாளும் பார்த்தது இல்லை. கிழக்கு வாசல் வழி உள்ளே நுழைந்த போது சிமெண்ட் திண்ணையை ஒட்டி இருக்கும் ஓடு போட்ட திண்ணையில் நடுவில் ஒரு சேரில் சேது மாமாவை மாலை போட்டு உட்கார வைத்திருந்தார்கள். நெற்றியில் பெரிய பொட்டு. தலையைச் சுற்றி தாவங்கட்டை வரை ஒரு வெள்ளைத் துணி கட்டப்பட்டு இருந்தது. கையைச் சேரோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். “மாமா கைய ஏன் அப்படி கட்டிப் போட்டாங்க, இவ்வளவு பேரை பார்த்து பயந்து ஓடிடுவாங்கன்ணு கட்டிப் போட்டாங்களோ” என்று நினைத்தாள் மாலா. ஊதுபத்தி மணந்து கொண்டிருந்தது. “ஏன் ஊதுபத்தி திண்ணைல வைச்சி இருக்காங்க, எடுத்துட்டு போய் பூஜையில் வைச்சிட்டு வரலாம்” என்று யோசித்தாள். மேலே மாடத்தில் விளக்கு வேறு எரிந்து கொண்டிருந்தது. தேங்காய் உடைத்து வைத்திருந்தது எல்லாம் பார்த்து பூஜை அறையை திண்ணைக்கு மாத்திட்டாங்கம்மா என்று அம்மாவிடம் சொல்ல ஓடினாள். உள்ளே பக்கத்து வீட்டுப் பாட்டியோடு அம்மா ஏதோ ஜாடையாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும் மீண்டும் குழப்பமாக இருந்தது. அந்தப் பாட்டியும் அம்மாவும் வெளிய அழுதுட்டுல இருந்தாங்க, எப்படி அழுகை நின்னுச்சி?
புளியாங்கொட்டைகள் பரப்பியிருந்த மூலை கண்ணுக்குப் பட அங்கே சென்றாள். கூட்டமெல்லாம் கலைந்ததும் எல்லா பிள்ளைகளும் சேர்ந்து புளியாங்கொட்டை ஊதி விளையாடலாம் என்று நினைத்தாள். சேது மாமாவைக் கூப்பிட்டு அது பற்றி பேசலாம் என்று நினைத்து திண்ணைக்கு போனாள். சேது மாமாவின் பக்கத்தில் போய் கையை தொட்டு பார்த்தாள் மாலா. ஐஸ் போல சில்லுன்னு இருந்தது மாமாவின் கை.
“மாமா புளியாங்கொட்டை ஊதி விளையாடலாமா நீங்க எந்திரிச்சி வந்ததும்”
இதைக் கேட்டதும் அவளை இழுத்து கட்டிக் கொண்டு அழுதாள் பெரிய அத்தை. பெரிய மாமா துண்டை வாயில் பொத்திக் கொண்டு அழுதபடி அவர்களைப் பார்த்தார். ராஜி, பன்னீர், எப்போதும் வராத சின்னாம்மா பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். பெரியவங்க எல்லோரும் ஏன் இப்படி அழறாங்க என்று ஒரே குழப்பமாக இருந்தது மாலாவுக்கு, அத்தை அருகில் பானு கூட அழுது கொண்டிருந்தாள். அடிக்கடி அம்மா சொல்லுவாங்களே “பானுவ பாரு எவ்வளவு சமத்தா இருக்கா, தண்டகழுத மாதிரி திரியற நீ, அவள பார்த்து கத்துக்க” நானும் அழனுமோ. கண்கள் மூடியிருந்த சேது மாமாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இந்தப்பக்கம் திரும்பினாள். தூரத்தில் தெரிந்த கூடைப்பையில் அவளுடைய யூனிபார்ம் தெரிந்தது. யூனிபார்ம் கிழிந்து போனது அம்மாவுக்குத் தெரிந்தால்… அவள் உதடு பிதுங்கி முகம் கோணியது. கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.