நினைவுநாள் – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

1

செடிகள் யாவும்
கூச்சலிட்டிருந்தபோது
நீ வந்தாய்
பிரமையோ நிஜமோயென
அனுமானிக்க முடியாதபடிக்கு
உன்னை என்ன செய்வதென்றே
தெரியவில்லை
இந்த இரவு காமத்தையும்
வரையப்பட்ட காமம்
மீண்டும் இரவையும் வரைகிறது
எதிலும் வண்ணமில்லை
வெளியை நிறைக்கிறது இருட்டு
மரணம் பிரிவா என்ன
கரையானால் அரிக்கப்பட்ட சின்னஞ்சிறிய சாக்கு
இந்நெடிய இன்மைக்கு பிறகு
உன்னிடம்
எது கூடியிருக்கிறதோ இல்லையோ
புதிர்த்தன்மை கூடியிருக்கிறது
பெய்கிற மழை எண்ணங்களை நனைக்கிறது
அதை எங்கு உலர்த்துவது
மண்டைக்குள் புழுங்கிய நாற்றமடிக்கிறது
இப்பொழுது தோன்றுகிறது
என் வெற்றுப் பீடிகைகள்
சகட்டுமேனிக்கு
உன்னை ஏமாற்றியிருக்கக்கூடும்

2

தனிமையின் நிவாரணியே
என் குற்றவுணர்ச்சியின் கிணறே
உதிரும் சிற்றிலையும்
உன்னை
ஞாபகப்படுத்திவிடுகிறது
உடலுக்குள்ளிருக்கும் பூரான்கள்
துடிகொண்டு
அலைகின்றன அங்கும் இங்கும்
மூளைக்கும் இதயத்திற்குமான
பாலத்தில் கனரகவாகனங்கள்
கடந்தகாலத்தை ஏற்றிக்கொண்டு
தாறுமாறாக திரிகின்றன
நடுக்கம் ஏன் துருப்பிடித்த ஏக்கத்துடன்
பேசிக்கொண்டிருக்கிறது இப்போது
சன்னதிகளில் காமம் ஏன்
இப்படி கரைபுரண்டோடுகிறது
இந்த வாழ்க்கையே உனக்கான காணிக்கைதான்
இருப்பு இன்மை என்பதெல்லாம் கட்டுக்கதையென
சொல்லத்தான் வந்தாயோ
வில்லென இவ்வுடலைப்பிடி
நினைவின் நாணிலேற்றிவிடு வாழ்வை
அதோ அந்த நட்சத்திரத்திற்கு குறிவை
தவறினாலும் பிசகில்லை தேவி
ஞாபகம் என்ன ஒற்றையிலை மரத்தின் நிழலோ
இல்லை இலையற்ற மரத்தின் துயரமோ

3

இருந்தாலும்
காலம் இப்படி
அரிக்கப்பட்டிருக்கக்கூடாது
சீரழிவு அச்சுறுத்துகிறது
வழித்துணையாக வந்திருக்கலாம் நீ
இப்படி சுக்குநூறாய்
உடைந்திருக்க நேர்ந்திருக்காது
சீழ்நதியும் வற்றியிருக்கும்
எந்த அறிவும் எனக்கு உதவவில்லை
இந்த அறிவை தீவைத்து எரிக்கமுடியுமா
அதற்கொரு வழியுண்டா
மனதை தோண்டத் தோண்ட
காதலின் எலும்புக்கூடுகளை
கண்டெடுக்கும் துயரத்தை
என்னவென்று சொல்வேன்
பிரமைகளை கத்தரித்து
எடுக்கப்பார்க்கின்றது காலம்
உன்னை குறித்த பிரமைகளை
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
ஏழு மலை ஏழுகடல் தாண்டியிருக்கும்
என் இன்னொரு உடலின் நிலவறைக்குள்
வெளியே காவலுக்கு பணித்திருக்கிறேன் பூரான்களை
இனி விசனப்பட வேண்டாம்

4

இச்சையின் நெளியும்
சாலைகளினூடாக
எங்கெங்கோ செல்லும் நம் ஊழ்வினையை
எப்படி விபத்துக்குள்ளாக அனுமதித்தோம்
உன் வெறிபிடித்த வெற்றிடத்தை
எதையெதையோ
இட்டு நிரப்ப முயற்சித்தேன் இதுகாறும்
அத்தனையும் தங்கள் தோல்வியை
விடியும் முன்னதாகவே
சொல்லிச்சென்றுவிட்டன
உன்னை இவ்வளவு தனியாக
விட்டுச் சென்றிருக்கக்கூடாது
வெளவால்களும் இருட்டும்
மோதிப்பறக்கும் குகைவிழிகளையோ
நன்மையும் தீமையும்
சறுக்கிவிளையாடும் பின்னங்கழுத்தையோ
விட்டுவிட்டு வந்திருக்கக்கூடாது
குறைந்தப்பட்சம் கடலோரங்களில்
கொடும்புயலாய் கனக்கும்
உன் குரலையாவது வாங்கிவந்திருக்கவேண்டும்
பிரம்மாண்ட எலும்புத்துண்டொன்று
வானில் மிதக்கிறது இப்பொழுது
சன்னலை சாத்திவிடவா
இந்த இரவின் சிற்பம் தள்ளாட
எதிரொலிக்கிறது உன் வளையோசை
உன் மாயையை எதிர்கொள்ள இயலுமோ
இன்னது இன்னதென விதிக்கும்
உன் உள்மனதை அறியமுடியுமோ
இந்நாளில் இப்படி
வந்துநிற்கும் உன்னை
என்ன செய்வதென்றே தெரியவில்லை

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.