குழந்தை பின்னும் இரட்டைவலை!
(ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்– பிறைநிலா (Crescent Moon) எனும் கவிதைத் தொகுப்பிலிருந்து)
ஒரு சின்னஞ்சிறு பிஞ்சுப்பாப்பாவின் செயல்களுக்கு அழகான பொருளைக் கற்பிதம் செய்துகொள்ள உள்ளம் முழுவதும் கவிதையாலும் அதன் இனிமையாலும் நிரம்பி வழியும் தாகூரைப் போன்ற ஒரு கவிஞரால் மட்டுமே இயலும்.
பிறைநிலா எனும் தொகுப்பிலிருந்து மற்றொரு ‘அற்புதமா’ன கவிதை. அருமை என்று கூறாமல் அற்புதம் எனும் சொல்லைத் தேர்ந்தது எதனால் தெரியுமா? அருமை எனும் சொல் கவிதைச் சொல்லாக்கத்தின் உயர்வை மட்டும் பதிவு செய்கிறது. அற்புதம் என்பது படைப்பின் கற்பனை நயம்கண்டு வியப்பின் உச்சத்தைத் தொட்டு நிற்கிறது. வேறு எந்தக் கவிஞனாலும் தொட இயலாத தாகூரின் படைப்பின் உச்சம் இதுவாகும்.
‘குழந்தை மட்டும் தான் விரும்பினால் இந்த நிமிஷமே சுவர்க்கத்திற்குப் பறந்தோடிவிட முடியும்!
சும்மா ஒன்றும் அவன் நம்மை விட்டுப்பிரியாமல் இருக்கவில்லை!
தனது தலையை தாயின் மார்பில் புதைத்துக் கொள்வதில் அவனுக்கு
மிகவும் விருப்பம் உண்டு!
அவளைத் தனது பார்வையிலிருந்தும் தவற விடுவதை அவன்
பொறுக்கவேமாட்டான்!’
எனத் துவங்கும் கவிதை!
கடவுளைக் குழந்தையாக்கி அழகு பார்த்தது பிள்ளைத்தமிழ்!
குழந்தையைக் கடவுளாக்கிப் பொருள்கொண்டது தாகூரின் கவிதை!
ஒன்றும் அறியாதது போன்றிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சின் செயல்முறைகள் அனைத்தும் ஒரு காரணத்தின் பொருட்டே நிகழ்கின்றன; அவனால் நிகழ்த்தப்படுகின்றன என்பதே வியப்பாக இல்லை?
தாயின் அன்பை அனுபவித்து நெகிழ்வதற்கான அவனுடைய சிறு தந்திரங்களே இவை என்கிறார் தாகூர். தாய்க்கு அவன் குழந்தைதான். கடவுளாக அவனை எண்ணுவது அவளுடைய அன்பு உள்ளமே தவிர அதன் உண்மையையோ அதன் நிதரிசனத்தையோ அவள் உணர்ந்தவளல்ல; உணர்ந்தாலும் அவளுக்கு அது ஒரு பொருட்டல்ல. கிருஷ்ணனின் அன்னை யசோதையைப்போல!
தாயின் மார்பில் தன்னைப் புதைத்துக் கொண்டு அவளுடைய அனைத்தும் உருகும் அணைப்பில் தன்னை இழந்து அவளையும் உருகவைக்கும் ஒப்பற்றதொரு அனுபவத்திற்காகவே குழந்தை இந்த உலகில் அவள் மகனாக வந்திருக்கிறான் என்பது எத்தனை உயரிய உண்மை! தாயான அவள் தனக்கு எவ்வளவு இன்றியமையாத ஒரு உறவு என உணர்த்தவே அவளைத் தன் பார்வையிலிருந்து தவற விடுவதை அவன் பொறுத்துக் கொள்வதில்லையாம்!
கருத்துக்களின் எல்லைகளில் சிறகடிக்கும் எண்ணங்கள் இவையன்றோ?
‘புத்திசாலித்தனமான சொற்கள் அனைத்தும் குழந்தைக்குத் தெரியும்;
ஆனால் இந்த உலகத்தில் ஒரு சிலருக்கே அவற்றின் பொருள் புரியும்!
வெறுமனே ஒன்றும் அவன் பேசாமல் இருக்க விரும்பவில்லை!
அவன் தனது தாயின் வாய்மொழியாகவே சொற்களைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.
அதனால்தான் ஒன்றுமே தெரியாத வெகுளிபோலக் காணப்படுகிறான்.’
பல தாய்மார்கள் குழந்தையின் சிணுங்கல் தொனியைக் கொண்டே அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள்- பசி அழுகையா? உறங்குவதற்கான சிணுங்கலா? குழந்தைக்குத் தன் தேவையைத் தாய்க்கு அறிவிக்க இந்தவிதமான சில ஒலிகளே போதுமானவையாகும். உலகில் அன்பான தாயாக இருப்பவர்களுக்கே இதன் பொருளும் புரியுமாம்! வார்த்தைகளைக் கொட்டிப் பேசுவதனால் என்ன பயன்? யார் எதனை அறிந்துகொள்ள வேண்டுமோ அவர்களுக்குப் புரிந்துவிட்டால் போதுமே! மேலும் சொற்கள் தேவைப்பட்டால் அன்னையே அதனைக் குழந்தைக்குப் பயிற்றுவிப்பாள். அதனால்தான் குழந்தை ஒன்றுமறியாத அப்பாவிபோல அவளுடைய அன்பையும் மற்றவைகளையும் அடைவதற்காகக் காத்திருக்கிறானாம்!
‘குழந்தையினிடம் தங்கம் முத்துக்கள் எனச் செல்வங்கள் குவியல் குவியலாக இருக்கின்றன;
இருந்தாலும் ஒன்றுமே இல்லாத பஞ்சைப்பராரி போல அவன் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறான்.
வேலையில்லாமல் ஒன்றும் அவன் இவ்விதத்தில் இங்கு வந்திருக்கவில்லை!
இந்த நிர்வாணமான அருமைச்சிறுகுட்டனான பராரி தனக்கு யாருமே ஒன்றுமே இல்லாததுபோல் வேடமணிந்து கொண்டிருப்பது தன் தாயின் அன்பெனும் இணையற்ற செல்வத்தை அனுபவிப்பதற்காகத்தான்!’
குழந்தை எனும் உயர்ந்த பிறவி உலகிற்கு வந்திருப்பதேஒரு அரிய பெரிய காரியத்திற்காகத்தான் என்கிறார் தாகூர். அவனிடம் இல்லாத செல்வங்களே இல்லை; இருந்தாலும் ஒன்றுமில்லாத பஞ்சைப்பராரி போல தாயிடமிருந்தே அனைத்தையும் பெற ஆசைப்படுகிறான் அவன்.
ஒரு குழந்தையைப் போற்றிக் கொண்டாடுவதனைப்போல் உன்னதமான பேரின்பம் வேறில்லை என்பதனால் அதனைத் தன் தாய் எனும் அன்பான பெண்மணி முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைகொண்டு தனது பங்கையும் சேர்த்து அவளைப் பேரின்ப வெள்ளத்தில் ஆழ்த்துகிறான் குழந்தை.
‘பிறைநிலாவின் நாட்டில் ஒரு கட்டுத்தளையுமில்லாமல் சுதந்திரமாக இருந்தான் இக்குழந்தை!
காரணமொன்றுமில்லாமல் அவன் தனது சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவில்லை!
தனது தாயின் உள்ளத்தின் சிறுமூலையில் எல்லையற்ற ஆனந்தத்திற்கு இடமிருப்பதனையும்,
அவளுடைய கைகளால் பிடித்து இறுக அணைத்துக்கொள்ளப்படுவது சுதந்திரத்தைவிட இனிமையானது என்பதனையும் அவன் அறிந்து வைத்திருக்கிறான்.’
நிலாக்கீற்றின் விளிம்பில் அமர்ந்துகொண்டு குட்டிக் கால்களை ஆட்டி மகிழ்பவன், தன் சுதந்திரத்தைத் தனக்காக உருகும் தாயன்பிற்காகவே விட்டுக் கொடுத்து விட்டான் போலும்! அவளுடைய இதயத்தில் தனக்கான ஒரு தனி இடம் இருப்பதனை எப்படியோ இக்கள்ளக்குட்டன் அறிந்து கொண்டு விட்டான். அதனை எல்லையற்ற ஆனந்தத்தினால் நிரப்புவதனைத்தன் கடமையாகக் கருதி விட்டான் இவன்! ‘அவளுடைய அன்பெனும் அமுதம் பெருகியோடும் கரங்களால் சிறைப்படுத்தப் படுவதனை மிகவும் இனிமையானதென அறிந்து கொண்டு விட்டான்; ஆகவே அதனை விரும்பி அந்த அன்புச்சிறையில் அகப்படவே வந்துள்ளான்,’ என்று அழகாகக் கூறுகிறார் தாகூர்.
‘குழந்தைக்கு அழவே தெரிந்திருக்கவில்லை. அவன் பூரணமான பேரானந்தத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவன்.
ஒரு காரியமுமில்லாமல் அவன் கண்ணீர் விட்டு அழ முயலவில்லை!
முகத்தில் காட்டும் குறுநகையால் அவன் தாயின் ஆவல்பொங்கும் உள்ளத்தைத் தன்பால் கவர்ந்திழுத்தாலும், சின்னச்சின்ன காரணங்களுக்காகச் சிறிது அழுவதனால் அன்பு- பரிவு எனும் இரட்டைவலையையும் அவளைச்சுற்றிப் பின்னுகிறான்!’
அழவே தெரியாதவன், அன்னையின் அன்புள்ளத்தைத் தன்பால் கவர்ந்திழுக்க, காரணமேயில்லாமல் சிணுங்கி அழுதும், பின்பு குட்டிப் புன்முறுவலால் அவள் உள்ளத்தைக் கொள்ளைகொண்டும் விளையாடுகிறான். இந்த விளையாட்டை ரசிக்கிறான். அவளிடமிருந்து பெருகும் அன்பு- பரிவு எனும் இரண்டிலும் தானும் பங்குகொண்டு அவற்றாலான இரட்டைவலையை அவளைச் சுற்றிப் பின்னுகிறான் இந்தக் கள்ளக்குட்டன்.
ஒன்றுமறியாத ஒரு பச்சிளங்குழந்தையை, எல்லாம் அறிந்த பரம்பொருளாக்க தாகூரால்தால் முடியும்! ‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே,’ எனக்கூறியது வெறும் பேச்சுக்காக மட்டுமில்லை என இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாமா? அந்தக் குழந்தையை தெய்வமாகக் கொண்டாட தாயைவிடப் பொருத்தமானவர் வேறு யாருமேயில்லை! பிள்ளைத்தமிழ் பாடிய கவிஞர்கள் கடவுளைக் குழந்தையாக்கி மகிழ்ந்தார்கள். தாகூர் நவீன பாணியில், குழந்தையைக் கடவுளாக்கி மகிழ்கிறார்! (மானிடர்கள்மேல் பாடப்பட்ட பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வுத்தியைக் கடைப்பிடித்தனவா எனத் தெரியவில்லை!) தெய்வம், கடவுள் எனும் சொற்களைக் கையாளாவிடினும், குழந்தைக்கு எதுவும் தேவையில்லை எனும் நிலையைக் கூறி- அது உண்மைதானே?- அவனை தெய்வத்தின் நிலைக்கு உயர்த்திவிடுகிறார். வேண்டுதல், வேண்டாமை இலான் யார்? கடவுள் தானே?
தாகூரை, பிள்ளைத்தமிழ் புலவர்களுடன் ஒப்பிடுவதில் மகிழ்ச்சி பொங்குகிறது!
தாயின் அணைப்பில் பரவசமடைவதற்காக குழந்தை சுவர்க்கத்திலிருந்து வந்திருக்கிறான்.
எல்லாம் தெரிந்திருந்தும் தெரியாதவனைப்போலத் தாயினிடமிருந்து கற்றுக்கொள்வதில் விருப்பமுள்ளவனாக இருக்கிறான்.
எல்லாச் செல்வங்களையும் துச்சமாக மதித்து தாயன்பு எனும் செல்வத்தை மட்டும் அள்ளியள்ளி அனுபவிக்க ஆசைப்படுகிறான்.
தாயின் அணைப்பில் சிறைப்பட்டு ஆனந்திப்பதற்காகவே தன் பூரண சுதந்திரத்தை விட்டுக்கொடுத்துள்ளான்.
(உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன்?) சிரிப்பு, அழுகை இவற்றினால் அன்பு பரிவு எனும் இரட்டைவலையைத் தாயுள்ளத்தில் பின்னுகிறான்!
‘மினுக், மினுக்’கென எத்தனை வண்ணங்களின் சிதறல்கள் மத்தாப்பு போல இக்கவிதையின் சொற்களில் தெறித்து ஒளிர்கின்றன? கனவுகளும் கற்பனைகளும் உணர்வுகளும் உன்னத எண்ணங்களும் பொங்கியெழும் உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்த அற்புதமான கவிதைகள். பொழுது போவதே தெரிவதில்லை!
சமயம் வாய்த்தால் இன்னும் காணலாம்.