பன்மொழி இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் தாகூரின் கவிதைகளைப் படித்து ரசித்திராமல் இருக்க முடியாது. ஆன்மீகம், தாய்மை, குழந்தைகளைப் பற்றிய கவிதைகள், காதல், தத்துவம், மதம் இன்னும் பல என்று அவர் தனது எழுத்தில் கையாளாத விஷயங்களே கிடையாது எனலாம்.
எந்தவொரு பொருளையும் கையாளும்போது சிற்சில சிந்தனைகளை வாசகனின் அனுமானத்திற்கு விட்டுவிடும் நயமும், உவமைகளைத் தேர்ந்து காட்சிகளில் பொருத்தும் அழகும் உள்ளத்தைக் கவர்வன. இதனாலேயே அவருடைய பெரும்பாலான கவிதைகளும் கதைகளும் திரும்பத்திரும்பப் படிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. ஒவ்வொரு வாசிப்பிலும் புத்தம் புதிய கருத்துக்கள் உருவாகின்றன. அவருடைய பிறைநிலா எனும் கவிதை நூல் குழந்தைகளைப் பற்றியது. தாய், குழந்தை, இவர்களைப் பார்ப்பவர் ஆகியோரின் உரையாடல்கள் வாயிலாக உளவியல் ரீதியான எண்ணங்களை எழுத்தில் அழகாக வடித்துள்ளமை கருத்தைக் கவரும் தன்மையுடையது.
தாகூரின் வண்ணமயமான எண்ணச்சிதறல்களுள் இந்த நூலும் ஒன்று – இதில் உள்ள கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் புதிதான எண்ணங்கள் தோன்றி பிரமிக்க வைப்பதுண்டு. ஒரு கவிஞன் தான் காணும், கண்ட பிரபஞ்சக் காட்சிகளை இதைவிட, நுட்பமாக, துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டவியலுமா எனும் பிரமிப்புத்தான் அது. காட்சி விளக்கங்கள் தனித்து ஒவ்வொன்றும் ஒரு உருக்கொண்டு உளவியல் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் மாயம் ஒரு விந்தை! ஒவ்வொரு எண்ணமும் அந்த உளவியல் ரீதியான வண்ணங்கள் தீட்டப்பட்டுப் பொலிவது மற்றொரு பேரதிசயம்.
ஒரு நம்பிக்கையற்ற முடிவில் கவிதையின் துவக்கம்
வீடு (Home- கவிதை- ரவீந்திரநாத் தாகூர்– பிறைநிலா (Crescent Moon) எனும் கவிதைத்தொகுப்பிலிருந்து)
‘சூரியாஸ்தமனம் தனது கடைசிப் பொற்கிரணங்களைக் கஞ்சனைப்போல் ஒளித்துக்கொள்ளும் வேளையில் நான் மைதானத்தின் குறுக்கே தனியாக நடந்தபடி இருந்தேன்.
பகலின் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக ஆழமான இருளினுள் புதைந்து கொண்டிருக்க, அறுவடை கொள்முதல் செய்யப்பட்டு விதவைக் கோலமாகக் காணப்பட்ட நிலம் அமைதியாகக் கிடந்தது.
திடீரென ஒரு சிறுவனின் கிறீச்சிட்ட குரல் ஆகாயத்தினூடே எழுந்தது. அவனுடைய பாட்டின் தடத்தை மட்டும் அந்த மாலைப்போதின் அமைதியில் பின்னடைய விட்டுவிட்டு அவன் அந்த இருளில் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியைக் கடந்து சென்றான்.’
ஒரு வெறுமையைத் தேக்கிய வண்ணம் துவங்கும் கவிதை- ஆமாம், வெறுமைதான்- சூரியாஸ்தமனம், விதவைக்கோலம் பூண்ட அறுவடை நிலம், தனித்த ஒரு சிறுவனின் குரல்- இவையெல்லாம் ஒரு இலக்கற்ற, நட்பற்ற, வெறுமை மட்டுமே நிறைந்த உலகைக் கண்முன் விரிக்கின்றன.
தனியனான கவிஞர், சூரியாஸ்தமனத்தின் முடிவு – எனும் சுவாரசியமற்ற, வெறுமை நிறைந்து வழியும் காட்சிகளுக்குப் பதிலாக, தான் காண்பவற்றை அழகிய நிலா ஒளிரும் இரவின் ஆனந்தமான துவக்கமாகக் காண்பித்திருக்கலாமல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை? விதவைக்கோலம் பூண்ட அறுவடை நிலத்திற்குப் பதிலாக, பிரசவித்துக் களைத்திருந்தாலும், மகிழ்ச்சியில் ஆழ்ந்து, ஒரு சாதனையின் நிறைவில் அமிழ்ந்திருக்கும் தாயின் உள்ளத்தைப் பிரதிபலிக்கலாகாதா? இப்படியெல்லாம் சோகமான உவமைகளை ஏன் தாகூர் கையாண்டிருக்கிறார்? சிறுவனின் ஒற்றைக்குரல், வீடுசெல்லும் உற்சாகத்தை நிரப்பிக் கொண்டு இனிமையான பாடலாக ஒலிக்கலாகாதா? அது ஏன் தனித்துக் ‘கிறீச்சிட’ வேண்டும்?…
விடைகாண நீண்டநேரம் தவிக்க வேண்டிய அவசியமேயில்லாமல் செய்கின்றன கவிதையின் அடுத்த வரிகள்!
‘அவனுடைய கிராமத்து வீடு அந்த தரிசான நிலத்தின் முடிவில் கரும்பு வயல்களைத் தாண்டி, வாழை மரங்கள், மெல்லிய பாக்கு மரங்கள், தேங்காய் மற்றும் ஆழ்ந்த பச்சை நிறப் பலா மரங்கள் இவற்றினால் மறைந்திருந்தது,’
அச்சிறுவன், தரிசான நிலத்தின் முடிவில் கரும்பு வயல்களைத் தாண்டி, வாழை மரங்கள், மெல்லிய பாக்கு மரங்கள், தேங்காய் மற்றும் ஆழந்த பச்சை நிறப் பலா மரங்கள் இவற்றினால் மறைந்திருந்த தனது கிராமத்து வீட்டை நோக்கித்தான் செல்கிறான். இவ்வரிகளில் வாழையும், கரும்பும், பாக்கும், பலாவும், தேங்காயும் வாழ்வின் வளமையை, பசுமையை, எதிர்பார்ப்பை, நம்பிக்கையை அறிவுறுத்தும் சாட்சியங்களாகி நிமிர்ந்து கம்பீரமாக நிற்கின்றன என அழுத்தமான நம்பிக்கையைப் பதிவுசெய்து விடுகிறார் தாகூர்.
முதல் சில வரிகள் நம் மனதில் விதைத்த வெறுமை அவசரமாக எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது. ஒரு ஆர்வமான எதிர்பார்ப்புடன் அடுத்தடுத்த வரிகளுக்கு கண்களும் உள்ளமும் கடிதில் தாவுகின்றன. இழப்புக்கும் இருப்புக்கும் இடையே ஒரு பாலம் அமைக்கும் சொற்கள் நிறைந்த வரிகள்!
அடுத்து என்ன சொல்கிறார் எனப் பார்ப்போமா?
எனது தனிமையான வழியில் நான் அந்த நட்சத்திர ஒளியின் கீழ் சிறிது தயங்கி நின்றேன். என் கண் முன்பு விரிந்து கிடந்த இருளான பூமி, தொட்டில்களாலும், படுக்கைகளாலும் அன்னைமார்களின் கனிவான இதயங்களாலும், மாலை நேரத்து விளக்குகளாலும் நிரம்பியிருந்தது; அந்த எண்ணற்ற வீடுகளில் இருக்கும் தளிர் போலும் பிஞ்சு உயிர்களை- தம் உள்ளங்கள் ஆனந்தத்தில் நிரம்பியிருக்க, உலகத்தோர் கொண்டாடும் ‘மகிழ்ச்சி’யின் மதிப்பினைச் சிறிதும் அறியாதவர்களாக வாழும் பிஞ்சுகளை- தனது இரு கரங்களாலும் அவ்விருண்ட பூமி அணைத்திருந்தது.
ஏதோ ஒரு எண்ணம் கவிஞரை ஒரு தயக்கத்திற்குள்ளாக்கி விடுகிறது. நட்சத்திர ஒளியின் கீழ் தயங்கி நிற்க வைக்கின்றது. இத்தனை பொழுதும் கண் முன் விரிந்து கிடந்த இரவும், அதன் இருளும், வண்ணமயமான எண்ணச்சிதறல்களாகி நின்று, வானில் ஒளிரும் நம்பிக்கை நட்சத்திரங்களைப்போல் காண இயலும் மாலை நேரத்து விளக்குகளையும், உணர மட்டுமே இயலும் அன்னைமார்களின் அன்பு இதயங்களையும் நம்முன் விரிக்கின்றன. அன்னைமார்களின் கனிவான அன்பு இதயங்களை அறிமுகப்படுத்த கவிஞர் கையாளும் உத்தி ‘தொட்டில்களும் படுக்கைகளும் நிரம்பிய வீடு’களைக் காண்பிப்பதுதான்.
வாழ்வின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் ஏன் அன்னைமாரின் கனிவான அன்பில் மட்டுமே வெளிப்பட வேண்டும்? ஒரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல், தெய்வபக்தி, கல்வியின் பயன் இவற்றால் வாழ்க்கையின் சிறப்பை விளக்கவியலாதா எனும் கேள்விகள் அடுத்தடுத்து எழுகின்றன அல்லவா? எனக்குள் எழுந்தது!
தாய்மையின் சிறப்பு தனித்துவமானது என்பதனை விளக்கவே தாகூர் இவ்வாறு செய்தாரோ என எண்ணத் தோன்றுகிறது. தனது சிறுகுழந்தையைக் கண்டதும் கனியும் இதயம் தாய்க்கே உரியது. அந்தக் குழந்தைக்கு அறுபது வயது நிறைந்தாலும்கூடத் தாயின் பாசம் மட்டும் மாறுவதேயில்லை. இதுதான் இந்த உவமைக்கு விளக்கமா எனும் கேள்வி எழுகிறது! சரி, அப்படியானால் தொட்டில் குழந்தைகளை இங்கு குறிப்பிடுவானேன்?
தொட்டில் குழந்தைகளான பிஞ்சு உள்ளங்கள் வளர்ந்த மனிதர்கள் அறியும், அல்லது அனுபவிக்கும் நுட்பமான உணர்வுகளான கோபம், தாபம், பகைமை, பொறாமை, இன்ன பிறவற்றிற்கு இன்னமும் ஆட்படாதவர்கள்! தாயினையே அக்குழந்தைகள் உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் சார்ந்து இருப்பதனால், அவள் முகத்தைக் கண்டதும் அன்பும், பாதுகாப்பு உணர்வும், அதனால் எழும் நிறைவும், அதன் தொடர்பான ஆனந்தமும் அவர்களின் பிஞ்சு உள்ளங்களில் எழுந்து பொங்குகின்றன. இதுவே பிஞ்சு உள்ளங்கள் அனுபவிக்கும் ஆனந்தம். மானிடர்கள் பெரிதும் நயக்கும் விலைமதிப்பற்ற ஆனந்தம். இத்தகைய ஆனந்தத்தின் மதிப்பை, மகிழ்ச்சி உணர்வை உலகத்தோர் பெரிதும் போற்றி மதித்துக் கொண்டாடுகிறார்களே- ஏன் தெரியுமா? பணம், பதவி, ஆட்கள், கல்வி தரும் பெருமிதம், காதலின் வெற்றி, வழிபாட்டுத் தலங்கள் இவையனைத்தும் மட்டுமே பாதுகாப்பு உணர்வு, நிறைவு, பெருமிதம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை உலகத்தோர் உள்ளங்களில் நிறைக்கின்றன. ஆனால் ஒரு சிறு பிஞ்சுக் குழந்தைக்கு இவை ஒன்றும் வேண்டாம். தாயின் முகத்தைக் காண்பதன் மூலமும், அவளுடைய அணைப்பின் மூலமும் மட்டுமே இவை கிடைத்து விடுகின்றன என நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இல்லை?
மேலும் அந்த மழலைகள் இந்த ‘உலகத்தோர் கொண்டாடும் மகிழ்ச்சி’யின் மதிப்பை உணராதவர்கள். அதன் மதிப்பு வேறானது என மேலே கண்டோம். அதனை அறியாத வரையே அவர்கள் உயர்வான பிஞ்சு மழலைகள். இந்த உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இக்குழந்தைகள்தான்! வளர்ந்துவிட்டால் மனித உணர்வுகள் அவர்களைப் பற்றிக்கொண்டு விடுகின்றன!!
இந்தக் காட்சியை ‘வீடு’ எனும் தலைப்பின் கீழ் ஒரு அழகான வசன கவிதையாக்கி வைத்துள்ளார் தாகூர். உலகு பல தேசங்களைக் கொண்டது; தேசம் பல வீடுகளைக் கொண்டது; வீடு செழிக்க, குடும்பம் செழிக்க, நாடும் செழிக்க குழந்தைகள் இன்றியமையாதவர்கள். இந்த உன்னதமான கருத்தை எளிய அன்றாட நிகழ்வுகள் கொண்ட கவிதையில் பொதிந்து வைத்துள்ள நயம் இரசிக்கத்தக்கது.
இதுபோலும் பல கவிதைகள் கொண்ட கவிதைத் தொகுதிக்கு ‘பிறைநிலா’ என அழகான பெயரையும் இட்டுள்ளார் தாகூர். பிறைநிலா கீற்று கீற்றாக நாள்தோறும் வளருவது போலக் குழந்தைகளும் வளர்கிறார்கள் அல்லவா? அதனால்தானோ என்னவோ இப்பெயரைத் தெரிவு செய்துள்ளார்.
நம்பிக்கை இழந்த நிலைக்கும் நம்பிக்கை பிறக்கும் நிலைக்குமான வெறுமை- நிறைவு (Hope & Despair) இவற்றின் தொடர்பை இக்கவிதை வெகு அருமையாகச் சித்தரித்துள்ளது. நம்பிக்கை- இழப்பு எனும் இரு நிலைகளையும் விவரிக்கும் ‘நம்பிக்கை- வெறுமை’ சார்ந்த கருத்துக்கள் ‘வெறுமை -நம்பிக்கை’ என மாற்றிப்போடப்பட்டுள்ளதால் அற்புதமான பொருளைக் கொடுக்கும் அழகான கவிதை இதுவல்லவோ?
இருளின் கருமையிலிருந்து துவங்கி, மரங்களின் பச்சை, ஒளிரும் நட்சத்திரங்களின் வெள்ளி, விளக்குகளின் பொன்னிறம், குழந்தைகளின் புன்னகைக்கும் ரோஜா முகங்கள் என வண்ணமயமாக விளங்கும் இக்கவிதைக்கு ‘வீடு’ எனப்பெயரிட்டதும்கூட ஒரு பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையையும் மனித மனங்களில் எழுப்பத்தானோ என்னவோ எனத் தோன்றுகிறது!
ஒளிப்பட உதவி – Bangla Sahitto
One comment