கோடை காலம் தொடங்கப் போகிறது என்றாலும் இந்த இள மஞ்சள் மாலை வேளை சற்று குளிர்ச்சியாக இருந்தது. சந்தோஷ் தான் உடுத்தியிருந்த டி ஷர்ட்டையும், பர்முடாசையும் பார்த்துக்கொண்டான். நீலமும், வெண்மையுமான மேகங்கள் தலையில் மட்டும் செந்நிறம் கொண்டு விரைந்து கொண்டிருந்தன. ”என் பாட்டி இருக்கும் விண்ணகர் வரை நீங்கள் செல்வீர்கள்தானே. அவளிடம் சொல்லுங்கள்- அவள் அளித்த உடுப்பு இன்றும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது என”
அவள் தன்னை அவனாக அறிந்தது சிறு வயது முதலே. ஆனால் தெளிவில்லாமல் இருந்தது. திம்மாச்சிபுரத்தில் பாட்டியின் வீட்டில் பார்த்த அந்த ஆளுயரக் கண்ணாடி அவளை இரண்டெனக் காட்டியது. கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கையில் நிழல் கூத்து கட்டியது. தான் மறைந்து தான் தோன்றியதை பயத்துடன்தான் பார்த்தாள். இரண்டு எனக் காட்டி ஒன்றெனப் புரிந்தது அவளது பதினாங்காம் வயதில் தெளிவாயிற்று.
தன் ஏழாவது வயதில் சந்தியா அம்மா, அப்பா, அண்ணனுடன் திம்மாச்சிபுரத்திற்கு பாட்டி வீட்டிற்கு வந்தாள். அந்த ஊருக்கு அவர்கள் சென்ற நேரம் குளிர் காலம் போய் இள வேனில் அடியெடுத்து வைத்த நேரம். இந்தப் பருவங்களின் காலடி ஓசை என்பது இயற்கை மாற்றங்களில்தான் கேட்கிறது. மெதுமெதுவாக வந்து, சிறிது சிறிதாகப் பரிணமித்து பின் முழுதாக தன் கோலம் மட்டுமே காட்டும் பருவ மாறுதல்கள். ஆனால் அவை கால அளவுகளை ஒரு சீராகத்தான் பின்பற்றுமா என்ன? குளிரிலிருந்தும், முதுவேனிலிலிருந்தும் சிறிது களவாடிக்கொள்ளும் போலும்!
அவர்கள் பம்பாயிலிருந்து சென்னை வந்து பின்னர் திருச்சி வந்து அங்கிருந்து வாடகை காரில் திம்மாச்சிபுரம் வந்தனர். அம்மாவிற்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பிரார்த்தனை இருந்தது. வழியெங்கும் சிறு சிறு குளங்கள், அதன் கரையோரங்களில் பெரும் மரங்கள். அவை நீரின் மேலே கிளைகளைத் தாழவிட்டு வரையும் நிழல் ஒவியங்கள்- நீரலையில் காற்றலை செல்ல கலைந்து கூடும் சித்திரங்கள். இன்னதென்று புரியாத சந்தோஷமும், கிலியும் சந்தியாவிற்கு ஏற்பட்டது. அம்மா அவளை அவளைப் பார்த்துவிட்டு அப்பாவிடம் பழிப்பு காட்டினாள். அப்பா வழக்கமான அமைதியில்.
தாத்தா வரவேற்றதே, “என்னடி, இப்படி ‘க்ளோஸ் கட்’ பண்ணிண்டிருக்கே” என்றுதான். ”சந்தீப் தலையப் பாருங்கோ, ஹிப்பி மாரி வச்சுண்டிருக்கான்” என்றாள் அவள். “அவன் புருஷக் கொழைந்தேடி. எப்படியும் இருப்பான்.” அம்மா மேலே பேசாதே என்று ஜாடை காட்டினாள். ”கட்டித் தங்கமே. பாட்டி உனக்குத்தான் ஸப்போர்ட். நீ உன் இஷ்டப்படி இருடி கொழந்தே” அன்றுதான் இந்த விதை முளை விட்டிருக்க வேண்டும். அங்கே இருந்த முப்பது நாட்களும் அவள் சந்தீப்பின் உடைகளை வேண்டுமென்றே அணிந்து கொண்டு தாத்தாவின் வாயில் விழுந்து புறப்பட்டுக் கொண்டேயிருந்தாள். எப்படியும் அவர்கள்தான் அமெரிக்கா போகப் போகிறார்களே- அப்ப இந்தத் தாத்தா என்ன செய்வாராம்?
இன்று முப்பதாவது வயதில் கோடை தொடங்கும் பருவத்தில் இங்கே ந்யூயார்க்கில் தனிமையில் அமர்ந்திருக்கையில் அவனுக்கு பாட்டியும், அந்த ஊரும் நினைவில் கிளர்ந்தெழுந்தன. ஒரே ஒருமுறை பார்த்த ஊர், என்றுமே நினைவில்..
அவள் அதுவரை ’இருவாக்ஷி’ என்ற பூவைப் பார்த்ததேயில்லை. ஊருக்கு வந்த மறுநாள் இளங்காலைப் பொழுதில் வந்த அந்த வாசம். அவள் அரவமே செய்யாமல் தோட்டத்திற்கு வந்தாள். செடிகளில் முளைத்த நட்சத்திரங்களென அவை மின்னின. இருளுமில்லை, ஒளியுமில்லை என இரண்டும் சந்திக்கும் மாலையை அவள் அறிவாள். ஜூஹூ பீச்சை பார்த்திருக்கும் அவர்களது பம்பாய் வீட்டில் அதை அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள். ஆனால், இரவும், பகலும் சந்திக்கும் இந்தக் காலை-இதுதான் நான் மலரும் வேளை என வாசம் வீசும் இருவாக்ஷி. பாட்டி வீடு இத்தனை அழகா?
அந்தக் கிராமத்தில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பெரிய வட்ட வடிவமான கிணறு. உள்ளே இறங்க படிக்கட்டுகள், தண்ணீர் இறைக்க ராட்டினம், அந்த தாம்புக் கயிறும் அதன் முடிவில் கட்டப்பட்டுள்ள தோண்டியும், பாட்டி மடிசார் கட்டிக் கொண்டு அதில் பூஜைக்கெனவும், குடிப்பதற்கெனவும் சுமக்கும் குடங்களும் அவளை வியப்பில் ஆழ்த்தின. குளிப்பதற்கென மோட்டார் கனெக்க்ஷன் வேறு இருந்தது. அவள் நீந்தத்தான் ஆசைப்பட்டாள். அந்தக் கிணற்றிலே ஐந்து நாட்களில் அவள் டைவ் அடிக்கக் கற்றுக் கொண்டுவிட்டாள்.
“நடராஜா, இந்தப் பொண்ணு இங்கியே இப்டி ஆம்பிளைத்தனமா இருக்கேடா. அமரிக்காவுல எப்படி ஆகப் போறதோ?” அப்பா என்றைக்கு பதில் சொல்லியிருக்கிறார் இன்று சொல்ல? தாத்தாவைப் போல் ஏன் பாட்டி அந்த வீட்டில் ஒரு முக்கிய ஆளாக இல்லை? அவள் பச்சைக்குதிரை தாண்டினாள். கபடி ஆடினாள். கிட்டிப்புள் அடிக்கக் கற்றுக் கொண்டாள். பெண்கள் விளையாட்டில் அவளுக்குப் பிடித்ததே ஏழாங்கல் மட்டும்தான்.
அவர்களின் குலதெய்வக் கோயிலில்கூட தாத்தாவிற்குத்தான் பரிவட்டம் கட்டினார்கள். அப்பாவிற்கு மாலை போட்டார்கள், சந்தீப்பிற்கு குட்டி மாலை. ’எனக்கு’ என்றாள் சந்தியா. ”நிக்கர் போட்டுண்டா நீ என் வம்சமாயிடுவியாடி?” என்றார் தாத்தா. பாட்டி அதற்குள் தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி, “நோக்கு வாடாத மாலை, சந்தியா,” என்று அவள் கழுத்தில் போட்டுவிட்டாள். அம்மாவிற்கு கண்ணைக் கண்ணை உருட்டுவதைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.
அவள் காற்றாகச் சுற்றினாள். மிகப் பெரிய விடுதலையை உணர்ந்தாள். அன்றைய தன் நிலைக்கு இன்றைய வார்த்தைகள்! உள்ளுணர்வு அறிவிக்காமல் இருப்பதில்லை எதையும். ஆனால், அப்பட்டமாகப் புரிந்து கொள்ள முடியுமா?
“சந்தியா, நீ கேட்டுண்ட்ருக்கியே, அந்த ரூமை இப்ப திறக்கப் போறேன்”. பாட்டி அவளை அழைத்துச் சென்ற அறை அவ்வளவு பெரியது. சுவர் முழுதும் அவள் பார்த்திருந்த ஸ்வாமி படங்களைத் தவிர பல படங்கள்; இரு வேறு உடல் பகுதிகள் இணைக்கப்பட்ட வண்ண ஓவியங்கள், சிறகு முளைத்த தேவதைகள், வீணை வடிவான பெண் மிக அழகாக இருந்தாள். பாட்டி சொல்லி அர்ச்சுனன் பெண்ணான கதையைக் கேட்டாள். அந்த மாறுதலை மழுப்பிய வண்ணங்களோடு வரைந்திருந்தார்கள். அன்று பாட்டி ‘ஹைமவதி’யைப் பற்றிச் சொன்னது புரியவில்லை. ஆனால், அந்த ஓவியம் இன்றும் கண்முன் எழுகிறது. இவை தவிர கல்யாணப் புகைப்படங்கள் இருந்தன.
“பாட்டி, உன் கல்யாண போட்டோ இருக்கா. இந்தத் தாத்தா அப்பயும் இப்படித்தான் வெஞ்சுண்டே இருந்தாரா?” என்றாள் சந்தியா. ”போட்டோ இல்லடி. ஆனா ரெண்டு டிரெஸ் இருக்கு. அந்தப் பெட்டிக்குள்ள வச்சிருக்கேன் பாரு.”
பாட்டி காண்பித்த நீல நிற கால் சராயும், பட்டு மஞ்சள் மேல்சட்டையும் பொன்னிறப் பூ இழைகளால் சந்தியாவை அப்படிக் கவர்ந்தன. இதோ இதையும் பாரு, என்று பாட்டி காண்பித்தது அதே நீல நிறத்தில் பட்டுப் பாவாடையும், மஞ்சள் நிற ஜாக்கெட்டுமாக அதை விடச் சற்றுப் பெரியதாக இருந்தது. ”பாட்டி, ரெண்டுமே இவ்ளோ சின்னதா இருக்கே. ஏன் இன்னும் வச்சுண்டிருக்கே?”
“உனக்காத்தான் சந்தியா. நேக்கு கல்யாணம் ஆறச்சே உன் வயசு. அப்ப மட்டும் இல்லடி, இப்பக்கூட கல்யாணத்தை சரியா புரிஞ்சுக்க முடியல்லே. எங்களுக்கு நாலு நாள் கல்யாணம். அப்போ மூணாம் நா சாயங்காலமா ‘அம்மான் ஊர்வலம்’னு ஒன்னு நடந்தது. அன்னிக்கு ரெட்டக் குதிர சாரட்டுல, பேண்டு, நாதசுரம், வாண வேடிக்கையோட பொண்ணு, மாப்ளயை ஊர்வலமா அழைப்பா. அப்போ, பெண்ணுக்கு ஆண் டிரெஸ், ஆணுக்கு பெண் டிரெஸ். நானும், உன் தாத்தாவும் சின்னவாதானே. நேக்கு ஆண்கள் டிரெஸ் பொருத்தமா இருந்ததாம். அவரும் சில்லாட்டமா இருப்பார் அப்போ. சீதைக்கும், ராமனுக்கும் அப்படி ஒரு ஊர்கோலம் நடந்ததாம்.’
“பாட்டி, ஸ்வாரஸ்யமாயிருக்கு. அம்மாவுக்கு இதெல்லாம் தெரில்ல போலிருக்கு. அப்பாகிட்ட கதை கேட்டா காக்கா வடை திருடின கதை மட்டும்தான் சொல்றா”
“இத்தனை நாள் காப்பாத்தியாச்சு, நோக்கு இரண்டையும் தரென், இனிமே இது உனக்குத்தான்”
யாருக்கும் புரியாத அவனை, அவனுக்கே தெளிவில்லாத அவனை, பாட்டி எப்படி அறிந்தாள்? பாட்டி தந்த உடுப்புகளை உடனே தொட்டுத் தடவ அவனுக்கு ஆசை வந்தது.
அருமையான சிறுகதை. மன ஓட்டங்கள் வெகு அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. படிக்க நிறைவாக இருந்தது.