சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் அவர்களின் சமீபத்திய நாவல், “ பதிமூணாவது மையவாடி”. அட்டைப்படத்தை சற்று நேரம் உற்றுப் பார்த்தாலே, நாவலின் உள்ளடக்கம் புரிந்து விடுவது போல இருக்கிறது. ஒரு கிராமத்து பாலகன், சிறுவனாக தன் கிராமத்தை விட்டு, படிப்பதற்காக வெளியூருக்குச் செல்கிறான். கருத்தமுத்து என்ற அந்தப் பையன் வழியாக ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த சில நிறுவனத் தில்லுமுல்லுகளை எவ்வித ஒளிவு மறைவுமில்லாமல் தர்மன் எடுத்து வைக்கிறார்.
கிறித்தவ மதம் நம் நாட்டில் பரவத் தொடங்கியது கல்வி வழியாகவும், வயிற்றுப் பசி போக்கும் உணவு வழியாகவும் என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும், தெரிந்த விஷயம். பள்ளிகளுக்கு ஃபாதர் ஸ்கூல், “சிஸ்டர் ஸ்கூல்” என்றே பெயர் வைத்து பாமர மக்களால் அழைக்கப்பட்டது. ஆனால், இவற்றின் வழியே அந்த மதமும் பரப்பப் பட்டது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் ஒழுக்கமானவர்களாக இருப்பார்கள் என இன்றளவும் நம்பப்படுகிறது. இதற்குக் காரணம், துறவு பூண்டு, வெள்ளை உடை அணிந்து, இறைவனுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் இந்த ஃபாதர்களும், சிஸ்டர்களும் என்ற எண்ணம், பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. கிறித்துவத் துறவறம் என்றால் வெண்மையும், இந்துத் துறவறம் என்றால் காவியும் என்று காலம் காலமாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறது. அன்பும், கருணையும், நேர்மையும், உண்மையும், சத்தியமும் குடிகொண்டிருக்க வேண்டிய, இந்த உடைகளுக்குள் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களில் ஒரு பகுதியினர் உண்மையில் அப்படியில்லை என்பதை தர்மன் இந்த நாவலின் மூலம் சொல்கிறார்.
முக்கியமாக துறவறம் மேற்கொண்டவர்கள் வெல்ல வேண்டிய காமத்தை வெல்ல முடியாமல், ஆனால், வெளியில் முற்றும் துறந்தவர்கள் போலவும், புனிதர்களாகவும் காட்டிக் கொள்வதில் போலிப் பெருமையைக் கொண்டார்களாக இருக்கிறார்கள். கடவுளுக்கு நெருக்கமானவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு நம்ப வைக்கிறார்கள். இந்த நாவலில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை எடுத்துக் கொண்டு பேசியிருந்தாலும், இது மதங்களையும், அவற்றைப் போற்றுவதையும் கார்ப்போரேட் நிறுவனங்களாக ஆக்கிகியிருக்கும் எல்லா சாமியார்களுக்கும் பொதுவானது என்றே சொல்லலாம். எதன் மேலும் ஆசையற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டே மண், பெண், பொன் என்ற எந்த ஆசையையுமே துறவாமல் எல்லா சுகங்களையும் அனுபவித்துக் கொண்டே, ஊருக்கு உபதேசம் செய்பவர்களாக மாறிப் போயிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.
காமம் துறப்பது துறவறம் எனப்படுகிறது. இந்த இடத்தில் காமம் என்பது வெறும் உடற்பசி என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால், காமத்தைத் துறத்தல் என்பது எல்லாப் பற்றுக்களின் மீதுமான ஆசையைத் துறப்பதுதான். உணவின் மீதான விருப்புக்களைக் கூடத் துறக்க முடியாதவர்களால் எப்படி மற்ற காமங்களிலிருந்து விடுபட முடியும்? நாவலில், துறவறம் பூண்டு கன்னியாஸ்திரிகளாக இருப்பவர்களால் வித விதமாகச் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. பசி, தாகம் போன்றே உடற்பசியும் ஒரு மனிதத் தேவைதான். ஆனால், இதைத் துறந்து விட்டேன் என்று கூறிக் கொண்டு, கள்ளத்தனமாகவும், மூடி மறைத்தும் உறவு கொள்வதும், வெளியில் அதைக் காட்டிக் கொள்ளாமல் நடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதும் நாவல் நெடுகிலும் விரவிக் கிடக்கிறது.
இன்று பல மடங்கள், பீடங்கள் சம்பந்தமாக செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. யாரோ உண்மையாய் இருக்க விரும்பும் ஒருவர் மூலம், உள்ளே நடக்கின்ற தில்லு முல்லுகள், தவறான செயல்முறைகள், ஒழுக்கச் சீர்கேடுகள் எல்லாம் வெளியே வருகின்றன. ஆனால், அதன் பிறகு, அப்படி வெளிக் கொணர்பவர்களின் கதி என்ன ஆகிறது என்று பார்க்கிறோம். இந்த உண்மையை, நாவல் பேசுகிறது. ரேஷ்மா சிஸ்டர், ரீட்டா சிஸ்டரின் வாழ்க்கை உண்மையை, அவர் குழந்தை பெற்று விட்டுத்தான், சிஸ்டராக வலம் வருகிறாள் என்பதைச் சொல்ல வருகிறாள் என்றவுடனே, பைத்தியமாக சித்தரிக்கப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டு, சாவை எட்டும்படியே செய்யப்படுகிறாள். அது போல், மடத்தின் கணக்கு வழக்குகளைத் தட்டிக் கேட்கும் ஃபாதரும், பெண் சகவாசம் வைத்துக் கொண்டிருக்கும் ஃபாதர் பற்றிய உண்மையை வெளியே சொல்ல வரும் ஃபாதரும் கொல்லப்படுகிறார்கள். துறவறம் பூணுகிறவர்கள், தாங்கள் இறைவனுக்கு மிக நெருக்கமானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவதோடு, தாங்கள் காமத்திலிருந்து விலகியவர்கள் என்றும் இந்த உலகத்தின் முன் காட்டிக் கொள்ள விரும்புகிறார்கள்.
காமம் என்பதுதான் மனிதனை ஆட்டி வைக்கும் பெரிய பேய். இதை மிகச் சாதாரணமாக, இது ஒரு விதத் தேவை என எடுத்துக் கொள்ளும்போது பெரிய விஷயமாகத் தோன்றுவதேயில்லை. தாகமெடுக்கும்போது தண்ணீர் அருந்துகிறோம். பசிக்கு உணவு உட்கொள்கிறோம். உடம்புக்குத் தேவையான காமமும் அப்படி ஒன்றே என்பதைத் துறவறம் ஊணாமாலே சாதாரண மனிதர்களால் உணர முடிகிறது. இதற்கும் நாவலில் சில பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார் தர்மன். அரியான் சுடுகாட்டில் பிணங்களை எரிப்பவனாக இருந்தாலும், மனித நேயத்தோடு செயல்படுகிறான். மஞ்சக்குருவி என்ற பொதுமகளை அங்கு தன் விருப்பத்திற்கு துய்ப்பவர்களை அவன் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறான். ஆனால், அதே சமயம், ஒரு இளைஞர் கும்பல், ஒரு இளம்பெண்ணை வற்புறுத்தி கல்லறை மையத்தில் வைத்து வண்புணர முயலும்போது போராடி அதைத் தடுக்கிறான்.
அதே போல, நாவலில் ஜெஸ்ஸியின் காமம், கருத்தமுத்துவிடம் அவள் நடந்து கொள்ளும் விதம் மிக ஆச்சர்யத்துக்குரியது. அவள் ஏற்கனவே ஒரு ஆடவனுடன் உடன்போகி ஏமாந்து திரும்பி வந்தவள். பெருகுகின்ற அவளுடைய காமம், கருத்தமுத்துவை, அவனுக்கு விபரம் தெரியாத பதின்பருவத்திலிருந்து உபயோகப்படுத்திக் கொள்கிறது. அதன் பிறகு அவளுக்குத் திருமணம் ஆன பிறகும் கூட அவள் கருத்தமுத்துவிடம் ஆசையுடன் கூடிய காமத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால், இதில் அவளுக்குத் தயக்கமும் இல்லை; குற்ற உணர்வும் இல்லை. அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறாள். கருத்தமுத்துவும் இந்த காமத்தால் பீடிக்கப்பட்டவனாக இல்லை. அப்படியே அதற்கு அலைபவனாகவும் இல்லை. முரணாக, அவனுக்கு ஏஞ்சல் சிஸ்டரைப் பிடிக்கிறது. அவளும் தன் மனம் கருத்தமுத்துவிடம் ஈடுபடுவதை உணர்ந்து தன் துறவு நிலையிலிருந்து சாதாரணப் பெண்ணாக வந்து இணைகிறாள். காமம் மறைத்து ஒளித்து வைக்கப்படும்போது அது மேலும் மேலும் பொய்களுக்கும், ஏமாற்றுகளுக்கும் இட்டுச் செல்கிறது. அதனாலேயே, காமத்தை மனதிற்குள் பெரிய பாரமாக எடுத்துக் கொள்ளாத ஜெஸ்ஸிக்கு, தன் தாய், தந்தையை விடுத்து, மடத்து ஃபாதருடன் உறவு வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாவலின் கடைசியில் கடற்கரை ஓரத்தில் ஒரு பறவை வருகிறது. ஏஞ்சல் சிஸ்டர்தான் அதனை வெள்ளைக் கூகை என்று அடையாளம் கண்டு சொல்கிறாள். அவள் அந்தப் பறவை பற்றிச் சொல்லும் வார்த்தைகள்: “அத ஒண்ணும் செய்ய வேண்டாம்னு சொல்லுடா, ராத்திரியானாத்தான் அதால பறக்க முடியும். இப்ப வெளில வந்தா பறக்க முடியாது, எதுலயாவது மோதிச்செத்திடும், இல்லனா மத்த பறவைங்க எல்லாம் சேர்ந்து கொத்திக் கொன்னுடும்”
இது ஒரு விதத்தில் வெள்ளை உடை அணிந்து பகலில் பைபிளும் கையுமாய் அலைந்து கொண்டு, எப்போதும் பரம மண்டல பிதாவையே நினைத்துக் கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டு மற்றவர்களோடு சாதாரணமாக ஒட்டி விடாமல் கண்ணையும் கருத்தையும் காமத்தையும் மறைத்துக் கொண்டு இரவுப் பறவைகளாய் அலையும் கன்னியாஸ்தீரிகளுக்கும், ஃபாதர் எனப்படும் சாமியார்களுக்கும் பொருத்தமாகவே உள்ளது.
நாவல் நடைபெறும் முக்கிய இடம், இடுகாடுகளின் வரிசை பனிரெண்டு முடிந்து பதிமூணாவதாக பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்த ஃபாதர்கள் மடமாக இருக்கிறது. அதிலிருந்து தனியே கன்னியாஸ்திரிகள் மடம் உள்ளது. ஆசை பாசங்கள் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு வாழ்வது கூட பிணத்திற்குச் சமம் என்பதாலோ அல்லது இந்த மடங்களே கூட தங்கள் பொய்மைகளுக்கு ஒத்து வராத சிஸ்டர், ஃபாதர்களை ஒழித்துக் கட்டி சமாதி கட்டுவதாலோ இந்த நாவலுக்கு பதிமூணாவது மைய வாடி என்பது மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.
கிறித்தவ மதத்தில் பதிமூன்று என்ற எண் ஒரு ராசியற்ற எண் என்று கருதப்படுகிறது. ஏசு கிறிஸ்துவை அவருடைய கடைசி உணவு மேசையில் காட்டிக் கொடுத்த யூதாஸ், அவருடைய பனிரெண்டு முக்கிய சீடர்களோடு, பதின்மூன்றாவதாக சேர்ந்து கொண்டவன். தூக்குக் கயிற்றில் பதின்மூன்று சுருக்குக் கண்ணிகள் இருக்கும் என்பது கூட இந்த நாவலின் தலைப்புக்குப் பொருந்துவதாக இருக்கிறது. மதத்தின் அடையாளங்களோடு, அதனைத் தாங்கிப் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு தூக்கித் தோளில் சுமப்பவருக்கு அதுவே சுருக்குக் கயிறாகவும் மாறும் என்பதனை நாவல் உணர்த்துவதாகவே சொல்லலாம்.
திடீரென முளைத்து பிரபலமாகும் ஆலயம் பற்றிப் பேசுகிறது. அதில் திரளும் மக்கள் கூட்டத்தோடு, புரளும் பணம் பற்றி பேசுகிறது. இது பொதுவாக எல்லா மததிற்கும் பொருத்திப் பார்க்கலாம். அதனால், அந்த கோவிலை நிர்வகிப்பவருக்குள்ளும் எழும் மனக் கசப்புகள் இவை எல்லாம் ஒரு பொதுவான ”தெய்வப் பெயர் சொல்லி கார்ப்பொரேட்டுகள்” என்ற வகையில் அடங்கும். சில நல்லவர்களும் இருப்பதை ஆங்காங்கே காட்டிச் செல்லும் நாவல் நடு நடுவே சலிப்புத் தட்டத்தான் செய்கிறது. கதையோட்டத்தோடு இல்லாமல், வலிந்து மரக்கால் பாண்டியன் என்ற பாத்திரம் திணிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் பற்றி பேச வைக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய விவாதங்கள் தேவையில்லாமல், பாத்திரம் பேசாமல், ஆசிரியர் இடைப் புகுந்து பேசுவது போல் இருக்கிறது. கருத்தமுத்து கிராமத்திலிருந்து வந்த பிறகு, அவனுடைய பெற்றோருக்கும் அவனுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றியோ, அவனுடைய ஆருயிர் நண்பணுடனான உறவு பற்றியோ பேசவேயில்லை.
கொஞ்சம் சலிப்பூட்டினாலும், அடைபட்டிருக்கும் ஒரு பகுதியினரின் வெளியில் தெரியாத மற்றொரு வாழ்க்கை பற்றிய சித்திரத்தைத் தீட்டிக் காட்டுவதில் நாவல் வெற்றி அடைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதற்காக நாவலாசிரியரைப் பாராட்டலாம். சிறந்த முறையில் அச்சிட்டிருக்கும் அடையாளம் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.
(பதிமூனாவது மையவாடி, நாவல்,சோ.தர்மன், விலை:ரூ.320/- அடையாளம் பதிப்பகம்)
One comment