அறிமுக எழுத்தாளர் அரிசங்கர் மூன்று நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். மாயப்படகு இவரது பதின்ம வயதில் எழுதி சிறார் இதழொன்றில் தொடராக வெளிவந்தது என்று தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். பதிலடி என்ற சிறுகதைத் தொகுப்பு இதில் பதினாறு கதைகள் இருக்கின்றன. அதைத் தவிர பாரிஸ் என்ற குறுநாவலும் எழுதியிருக்கிறார்.
மாயப்படகு இது அவரது சிறுவயதில் எழுதப்பட்டதால் அந்த சாகச மனநிலைக்குரிய எழுத்துநடையும் ஊர் சுற்றும் சுவாரஸ்யமான அனுபவமும் நிறைந்திருக்கிறது. ஆனால் அந்த பதின்வயதில் அவரது கதாநாயகனை பற்றி ஒரு வரி அந்த நூலில் வருவது போலவே வயதுக்கு மீறிய அறிவு கொண்டவராக, சிறுவயது பாலகர்களுக்கு இளைஞராக வாழும் என்ற கனவு ஆகியவற்றின் காரணமாக கதை சொன்னபோது அவருக்கு இருந்த வயதிலும் அதிக வயதுடைய இளைஞனை கதைக்குள் கொண்டு வந்து சாகசங்களை நிகழ்த்தியிருக்கிறார். கூடவே குழந்தைத்தனமான கதாநாயக சாகசங்களும் இருக்கிறது. கல்மிஷமற்ற எல்லோருக்கும் இரக்கப்படும் குழந்தை மனது முழு நாவலிலும் பயணம் செய்கிறது.
பதிலடி சிறுகதைத் தொகுப்பிலுள்ள பதினாறு கதைகளுமே ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைகளங்களை கதையம்சங்களை கொண்டவை. இவை அனைத்துமே சிறுகதை என்று வடிவத்துக்குள் பொருந்துகின்றன. இதுவரை பேசப்படாத கதைக்களங்களையும் கையாளுவதில் ஹரி சங்கர் சிறிது வெற்றி பெற்றிருக்கிறார். சமூக பிரச்சனைகளை, ஏற்றத்தாழ்வுகளை, அரசியல் பார்வைகளை, சீரழரிவுகளை கதையூடே சொல்லியிருக்கிறார். அவை எதுவும் வலிந்து திணிக்கப்படாமல் கதையோடு ஒட்டிவருவதே இந்த கதைகளின் தனிச்சிறப்பு.
புதுசட்டை கதையில் சிறுவயது பாலகனை அவனுடைய வறுமையை பயன்படுத்தி சுரண்டும் சுயநலம் பிடித்த உறவினர் கூட்டம் பற்றிய கதை என்று விலகி போய் விட முடியாது. தமிழ்நாட்டின் அரசியலை சினிமா எவ்வளவு பாதித்தது என்பது வரலாறு. அதே போலவே சின்னதிரையின் அறிமுகம் பல்வேறு அரசியல் மாற்றங்களும் காரணமாகியதோ இல்லையோ, மக்கள் மனதை அது எந்த அளவுக்கு அடிமைபடுத்தி வைத்திருந்தது அதன் பொருட்டு இயங்கும் உளவியல் பிரச்சனைகளை பூடகமாக சொல்கிறது இந்த கதை. கரையும் நினைவுகள் ஒரு மாயத்தன்மையுடைய கதை போல இருந்தாலும், மருத்துவமனைகளில் நிகழும் நம்பத்தன்மையற்ற போக்குகளையும், அதன் பொருட்டு பாதிப்புக்குள்ளாகும் தாய், மகன் அவன் காதலி ஆகியோரது கதை. துருவங்கள் ஆண், பெண் உறுவு சிக்கலை பேசுகிறது. ஆண் மனம் ஆணாகவும் பெண் மனம் ஆண் மனதில் தெரியும் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். இவரது இந்த கதையில் மட்டுமல்லாது பிற கதைகளின் பெண் மாந்தர்களும் ஆண்மனதில் தெரியும் பெண் சித்திரங்களாகவே இருப்பது வியத்தகு உண்மை.
வாசனை நுட்பமான கதைக்களம். கணவன் உடலில் ஒவ்வாத வாசனையை உணரும் பெண்ணின் உளசிக்கலாக விரியும் இந்த கதை இறுதி சில பத்திகளில் கதையின் பரிமாணம் பிறன்மனை நோக்கின் பொருட்டு எழுந்த சிக்கலாக மாறி போகிறது. இந்த கதையின் தொடக்கம் மையம் இவை முன்னர் சொன்ன கருத்தை இன்னும் வலுவானதாக பேசியிருந்தால் இன்னும் சிறப்பான கதையாக அமைந்திருக்கும். திருடர்கள் கதையில் காலகுழப்பம் கொஞ்சமிருந்தாலும், சிறுவயது பாலகர்களை பணிக்கு நிமித்தல் அவர்களுக்கு என்னவிதமான மனகுழப்பங்களையும், சிறுவர்கள் மனதில் கசடையும் எப்படி உறுவாக்க கூடும் என்பதை சொல்லும் சிறப்பான கதை.
தொகுப்பில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கதைகளில் ஒன்று மௌனம் கலையட்டும், சிறு வயதில் பாலியல் துன்புறுத்துதல்களுக்கு உள்ளாகும் சிறுமிகள் பற்றிய பலகதைகளும் அவர்களின் உளவியல் சிக்கல்களும், திருமண வயதடையும் போது உண்டாகும் மன உளைச்சல் பற்றியும் பல பதிவுகளை படித்திருத்திருக்கிறோம். சில இளைஞர்களால், சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் போது அதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று சொல்லும் கதையை நான் இதுவரை படித்தது இல்லை. பாம்பு என்ற உருவகத்தில் வரும் நினைவும் அந்த நினைவின் பொருட்டு அலைகலிப்பும், பயமும் மிக அழகாக பதிவாகியிருக்கின்றன. அந்த கதையில் அந்நிகழ்வின் பின்னர் கதைசொல்லி காலில் முள் தைப்பதை உணர முடியாத வேகத்தோடு கண்மண் தெரியாமல் ஓடிவரும் பாலகனாக சித்திரக்கப்பட்டிருப்பார். இந்த சித்தரிப்பு அந்தருணத்தின் வலியை சொல்லாமலே உணர்த்திவிடுகிறது. கதையின் முடிவை மட்டும் கொஞ்சம் செழுமையாக்கியிருக்கலாமென்று எனக்கு தோன்றியது.
விடிவிப்பு சமூகத்தின் கீழ்தட்டிலிருக்கும் பெண்களின் சிக்கல்களை பேச முற்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனியாக வேலை தேடும் பொருட்டு நின்றிருந்தால் ‘அங்கே வா’ என்று சொல்லி அழைத்து போய் வலுகட்டாயமாய் கலவி கொள்ள வேண்டுமென்ற மனநிலையில் இயக்கும் ஒரு மனநிலையுள்ள ஆண்மகனும், இன்னது அன்னது என்று காரணமே இல்லாமல் மனைவியை எதற்கெடுத்தாலும் அடித்து துவைக்கும் கணவன், அவள் கற்பு நிலையின் மீது கலங்கம் கற்பிப்பவனை அடித்து அதன் பொருட்டு அடிபடவும் தயாராக இருக்கும் மனநிலையுள்ள இன்னொரு ஆண்மகனும் என்று சமூகத்தின் முரண் மனநிலையை பதிவு செய்கிறது. பெண்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் இந்த முரண் மனநிலையே காரணம் என்று நாம் ஆராய சிறு திறப்பை இந்த கதை ஏற்படுத்துகிறது.
நகரி மற்றொரு சிறப்பான கதையாகி இருக்க வேண்டிய கதை. மிகச்சிறப்பாக தொடங்குகிறது, மிக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சிறுவயதில் கதாநாயக பாவத்துடன் பார்க்கப்படுவரையே இரண்டாம் திருமணம் செய்து கொள்ளும் நாயகி, அவளது கற்பனை பிம்பம் எப்படி சிதைகிறது, பொருந்த மணம் அவளை எப்படி பாதிக்கிறது என்பதை எழுதும் வாய்ப்புகளை தன்னுள்ளே வைத்திருக்கும் கதை. நிழல் தேடும் பறவையும் அதே போல மிக கனமான களம் இதில் கதைசொல்லியின் மன அழுத்தங்களை பதிவு செய்திருக்க வேண்டும். கணவன் இறந்து போக தனது கணவனுடன் பிறந்த திருநங்கையை மணக்க நேரிடும் பெண்ணை பற்றிய கதைகள் இதுவரை வந்திருக்கிறதா தெரியவில்லை. ஆனால் கதாநாயகியின் வலி பெருளாதாரம் சார்ந்தது என்பதோடு சுருங்கிவிடுகிறது. அந்த திருமணத்திற்கு பின்னர் அவள் அடையும் உளசிக்கலை பேசும் சாத்தியமுடைய கதை. அவ்வாறு பேசப்பட்டிருந்தாலும் இது மிகவும் வலுவான கதையாக மாறியிருக்கும் இருப்பினும் மிக சிறப்பானதொரு கதை களம்.
புயல் கதையும் தன்னளவிலான சமூக அவலங்களை பதிவு செய்திருக்கிறது. கதையில் அப்பா மகள் உறவு சார்ந்த பதிவுகளை ஹரி சங்கர் எளிதாக சேர்த்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் இந்த கதையின் கனம் இறுதியில் கூடியிருக்க வாய்ப்புகள் அதிகம். பிணந்தின்னிகள் கதையில் சாதிய ஏற்றதாழ்வுகள் பதிவு செய்கிறது. ஆயினும் சின்னய்யா வெட்டியான் என்பதை பதிவு செய்ய புஷ்பநாதன் என்ற கதாபாத்திரமும் அவரது மனைவியின் இறப்பும் கதைக்குள் அவ்வளவு விரிவாக பதிவாகியிருப்பது எதற்காக என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதை கதையில் வடிவயுத்தி என்று சொல்லலாமா என்பதில் எனக்கு குழப்பமிருக்கிறது. இவரது பிற கதைகளான செஞ்சிறை, குப்பைகள் போன்ற கதைகளிலும் கதையின் மைய ஓட்டத்துக்கு பொருந்தாக காட்சி கதை தொடக்கத்தில் விரிவாக பதிவாகிறது. இது கதையின் இறுக்கத்தை ஒருவித்தத்தில் பாதிக்கிறதென்றே சொல்ல வேண்டும். செஞ்சிறை கதையிலும் முதல் பத்தியிலேயே இறந்து போகும் புருஷோத்தமன் எப்படி கொல்லப்பட்டார் என்பதற்கான சித்திரம் இவ்வளவு விரிவாக தேவையா என்ற கேள்வியுண்டு எனக்கு. ஏனென்றால் கதையின் களம் வேறு. இந்த கொலையின் பொருட்டு சந்தேகத்தின் பெயரில் சிறை செல்லும் கற்பிணியின் கதை. அந்த பெண்ணின் அல்லலும், காவல்துறையின் மெத்தனம், கரிசனமற்ற போக்கு இதுவே களம். இது ஓரளவு சிறப்பாக பதிவாகியிருக்கும் போது கொலையான புருஷோத்தமனின் கொலை சம்பவம் விரிவாக எழுதப்பட வேண்டுமா என்பதை மறுபரிசீலனை செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
மைதானம் தொகுப்பின் மிக சிறந்த கதை என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்த கதையில் சின்ன சின்ன வடிவ குளறுபடிகள் இருந்தாலும் மிக சிறப்பான கதையிது. இதில் வரும் சிறுவனுக்கும், வயதான பெரியவருக்குமான உரையாடல் மிக அழகானது. பெரியவர் கண்ட ஏரி தற்காலத்தில் பிள்ளைகள் விளையாடும் மைதானமாக மாறியது பல நீர்நிலைகளை நாம் இழந்ததன் சாட்சிபதிவு. சூழல் சார்ந்த அக்கரையுடைய யாரையுமே கொஞ்சம் அதிர்வடைய செய்யும் கதை. உலக வெப்பமயமாவதும், பிளாஸ்டிக் போன்ற மக்காத பொருட்களால் சூழல் சீரழிவது அதை அறியாத பேதைகளாக நாம் வாழ்வதும், நம் சந்ததி இப்படி சீரழிகிறதே என்ற முந்திய தலைமுறையினரின் ஆதங்கமும், கேவல்களும் ஒருமித்து ஒலிக்கும் குரல் இந்த சிறுகதை.
குப்பைகள் சமூக ஏற்றதாழ்வுகளை ஒரே வாக்கியத்தில் சொல்லி அதிர்வடைய செய்யும் கதை குப்பையில் வீசப்படும் புழு வைத்த அரிசி பொட்டலத்தை வாங்கிக் கொள்ளும் துப்புரவு பணியிலிருக்கும் பெண் “கழுவிட்டு வடிச்சா சோறு, அப்படியே பண்ணா பிரியாணி” என்ற வாக்கியம் ஏற்படுத்தும் அதிர்வு கதை முழுவதும் கூடவே வருகிறது. ஆனாலும் இப்படி எழுதியதற்கு சம்மந்தப்பட்டவர் கண்ணில் பட்டால் மிகப்பெரிய சர்சையில் சிக்குவதற்கான எல்லா வாய்ப்புகளையும் கொண்ட கதை. பதிலடி கதையும் சமூக ஏற்றதாழ்வையும், சாதிய வெறுப்பு மனநிலையையும் பதிவு செய்யும் கதை. தொடுத்தல் மாற்று திறனாளிகள் பற்றிய கதை.
இவரது பாரிஸ் குறுநாவல் இரண்டு மூன்று மணிநேரத்தில் விறுவிறுவென்று வாசிக்கக்கூடிய குழப்பமே இல்லாத நடை. வித்தியாசமான கதைகளம். மூன்று தனித்தனி இழையாக விரியும் கதை அவை ஒன்றுகொன்று மிக அழகாக இணைந்து பின்னலாக மாறியிருப்பது மிகத்தேர்ச்சி பெற்ற கதை சொல்லும் முறை. இதுவரை நாம் அறியாத பாண்டிச்சேரியை காட்டியிருக்கிறார் ஹரிசங்கர்.
கதை சொல்லும் முறையில் முன்னர் நடந்ததை பின் கூறி அல்லது பின்னர் நடக்க இருப்பதை முன்னமே சொல்லி அடுத்தடுத்த அத்தியாயங்களை இணைக்கவோ அல்லது நவீன முறையின் கதைசொல்லும் யுத்தியென நினைத்தோ சில விஷயங்களை செய்திருப்பது இதுவரை பிற புனைவுகளில் நான் காணாத ஒன்று.
காட்சி சித்தரிப்புகள், கதாபாத்திர விபரணைகள் எல்லாம் மிக நேர்த்தியாக செய்திருப்பது இந்த நாவலில் மற்றொரு முக்கிய அம்சமாக குறிப்பிடலாம். நாவலை வாசித்து முடித்த பின்னர் அசோக், கதிர், ரஃபி, கிரிஸ்டோ போன்ற கதாபத்திரங்கள் நம் முன் உலவி வர அந்த கதாபாத்திர வர்ணனைகள் உதவுகின்றன.
கதை நிகழும் நிலம் சார்ந்த வர்ணனைகள் இன்னும் கொஞ்சம் சேர்த்திருந்தால் இன்னும் வலுவான நாவலாக இது மாறியிருக்கும். அதே போல சில விஷயங்கள் நாவலுக்கு வலுசேர்க்கவில்லையோ என்றும் தோன்றியது. அதையெல்லாம் நீக்கி, இன்னும் கொஞ்சம் செழுமையாக்கியிருந்தால் இது ஒரு அபாரமான படைப்பாக மாறியிருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமே இல்லை.
ஒட்டுமொத்தமாக ஹரிசங்கர் படைப்புகளை ஆராயும் போது இவரது படைப்புகளில் கதைமாந்தர்களில் சிறுவர்கள் அதிகமிருக்கின்றர்கள். சிறார் நாவலும் எழுதியிருக்கிறார் ஆகவே இவரது படைப்பு மனம் இன்னும் இளம்பிராயத்து சம்பவங்களை பதிவு செய்து முடிக்கவில்லை அல்லது அந்த பால்ய உலகத்து கனவு, சுவாரஸ்யங்களை இழக்க விரும்பவில்லை என்று சொல்லலாம். அதே சமயம் பாரீஸ் நாவலில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் பதிவாகி படைப்பாளி சமகாலத்தில் இயக்கும் கலகமனம் கொண்ட இளம்படைப்பாளாகவும் தெரிகிறார்.
படைப்புலகின் நிலப்பரப்பு பெரும்பாலும் பாண்டிச்சேரியாக இருக்கிறது. ஆனால் அதன் நிலக்காட்சிகள் குறைவாக இருக்கிறது. உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் டூபிளக்ஸ் சிலை என்று ஒரு சிலையை பற்றிய பதிவு அவரது கதை மற்றும் நாவல் இரண்டிலும் வருகிறது. பாண்டிச்சேரியை பற்றி அறிந்தவர்களுக்கு அது உடனடியாக புரியக்கூடும் ஆனால் அந்த சிலை எப்படியிருக்கும் என்ற வர்ணனையிருந்தால் வாசகர்களுக்கு கதையுடன் இணக்கமாகும் வாய்ப்புகள் அதிகம். இப்போது அது அழகான பெயருடைய சிலை என்பதாக மட்டும் நின்றுவிடுகிறது. மிக குறுகிய காலத்திலேயே சிறார் நாவல், சிறுகதை, குறுநாவல் என்று பல்வேறு இலக்கிய வடிவங்களின் தீவிரமாக இயங்கும் ஹரி சங்கருக்கு வாழ்த்துகள்.