கவிஞனின் நினைவுக் கோப்புக்குள் பழுப்பேறிய சில காகிதங்கள்:
‘அலையெழும்பி புதையுண்ட கண்டம் உண்டாம், குமரி அதன் பேராம். ஒற்றைக்கால் தவசில் ஒருத்தி பாறையொன்றில் நிற்கிறாள், காலம் அவளின் முன்னே பின்னே நகர்கிறது. தெறிக்கும் அலை அவ்வப்போது அவளின் உதட்டில் படிந்து, அவளே அறிவாள், சொட்டின் தணுப்பை. பின் வழிந்து கடலில் கலக்கும். முத்தத்தைப் போல, அத்துளி கரையை ஒரு நாள் தொடும். ஒரு கிழவன், அக்கரையில் சாவின் ருசியறியாது காத்திருக்கிறான். ‘
‘பெரும்கவியின் காலில் மாட்டிய சங்கிலிகள், அவனை நிகழ்பிரபஞ்சத்தில் இழுத்துப் பிடிக்கலாம். நகராதே! என பயமுறுத்தலாம். கனவின் சஞ்சாரம், எங்கு வேண்டுமோ அழைத்து செல்லலாம். அங்கே தடை போட யாருமில்லை. அவன் மாத்திரமே. கண்முன் விரிந்த பரந்து கடலும். அவன் நானாய் நின்றேன். அலை ஒன்றை நோக்கி ஓடினேன், அங்கே கண்டேன் வெள்ளை ஜிப்பாவும், கசங்கிய வேட்டியும், ஒட்ட சவரம் செய்த முகமுமாய் ஒருத்தர், சிரித்தபடி ‘இதானய்யா, கபாடபுரம்’ என்றார்.’
‘கடலாய் நிற்கிறாள் அவள், கைகள் காற்றிலே அசைக்கிறாள். ஒரே ஓசையால் இசைத்துணுக்கு ஒன்று காற்றிலே அலைந்து, ஓவென அதே ஒலியுடன் கரையை தவழுகிறது, வெம்மையான அணைப்பு. கடலாய் நிற்கிறாள், அக்கன்னி. மீண்டும் பிறக்கிறாள், இறக்கவே. எதன் கணம் நிகழ்கிறதோ! இவ்விளையாட்டு. நீலப்பறவை ஒன்றை நான் அறிவேன். உயர மட்டுமே அலையும். அதன் நிழல் அவளின் மேலே வியாபித்திருக்கும். சிலநாள் கரும்பறவை, சாம்பல் பறவை மேனியின் மேலே பறக்கும். நிழலை அள்ளி உண்பவள் அவள். கடலே, எல்லையற்றது. உருவகித்தேன் உன்னாலே. கனவே, நினைவே எல்லாம் கடலே. கரையெல்லாம் பாதச்சுவடு, எல்லாமுமே நான்தான். வெறிக்கிறேன், கருவிழியை பிடுங்கி உன்னுள் எறிகிறேன். வாறி எடுத்துக்கொள். உன்வழியே என்னைப் பார்க்க பிரயாசையில் ஒரு குழந்தையின் முயற்சி அவ்வளவே. ‘
‘அக்காள், கிழவியின் கனவில் வந்தாராம் கோனார். கையிலே இளம் ஆட்டுக்குட்டி. நிகழ்வை கனவு தீர்மானித்தது. நான் உன்னாலே கவிஞன் ஆனேன் தெரியுமா? தெரியுமா! நீயே நான். உன் பின்னே அலையும் நாய்குட்டி. அக்காக்கள் சொன்னது உண்மையே. எதுவுமே நம் கையில் இல்லையா? முடிவுகள் யாரோடது. உன்னுடைய பாதை, யாராலோ தீர்மானிக்கப்படுகிறது. நீ சகிக்கிறாய். உன் ஈரக் கூந்தல், பூக்களின் மணம் நுகர தடைப் போட நீ யார். நீ பெண்ணென்றதாலே சகிக்கிறாய். பெண்மையின் வரம் அது. நான் பாவப்பட்ட ஆண், உள்ளுக்குள் குமைகிறேன். உன்னையும், என் கடலையும் விட்டு தூரத் தேசம் சென்றேன். எதிலிருந்து விடுபட, என் முட்டாள்தனம். நீதானே நான்.’
‘உன் பார்வைகளின் தடயத்தை விட்டுச்செல்ல நீ எக்காலமும் மறப்பதில்லை. என்றாவது நான் அதை கவனிப்பேன் என. பெண்ணே! எப்படி புரியவைப்பேன். ஆணின் சிறிய அறையால் ஆன இருதயத்தை. அங்கே நீயாக நுழைய முயற்சித்தாய். நானே திணித்திருந்தால் உன் திருமண அட்டையை வாங்கியிருக்க மாட்டேன். நானே சமைத்த விதி இது விஜிலா’
‘புகைப்படத்தில் இன்றுமே கன்னியாய் நிற்கிறாள். என்னுள்ளே ஆற்றாமையாய் பெருகும் நீர்த்துளி, தணுப்பை மறந்து எரிகுழம்பாய் கொதிக்கிறது. மரியே! நின்னைச் சந்தித்தது யாதொரு குற்றம். மரியபுஷ்பா. உன் பார்வையே தவிர்க்கவே தினமும் நிந்திக்கிறேன். தெரியுமா? அது மகாகாயம்.’
‘சாரா. காதலுக்கு மறுபெயர் சூட்ட வாய்ப்பு கிடைத்தால், உன் பெயரையே சூட்டுவேன். உன் கொலுசும், வளையும் எழுப்பும் ஒலி ஒரு கொடும்ஆயுதம் என அறிவாயா? நீ உதிர்க்கும் வார்த்தைகளின் கனம் அறிவாயா? பூமியின் கனம். ஒப்புக்கொள், என் மெலிந்த இதயம் அதை தாங்கும் சக்தி கொண்டதா? விட்டொழி, உன் தடுக்கத்தை. அதானே, நீ கண்களால் என்னிடம் கூற விழைவது. ஏன் அவ்விரவு, அதில் நீயும் நானும் கலக்க வேண்டும். உன் உதடு, உப்புக்கரித்தது. கடலின் சுவை நான் அறிவேன். உன் கூந்தல், உடல், முலை, அக்குள், யோனி எல்லாமுமே உப்பு. கடலின் முத்தம் உப்புக்கரிக்குமா? என் கன்னியே. சப்பிய குடம் நான், எனக்கு உன் இடையில் இடமில்லையா?’
‘அத்தை, அறியாத முகத்திற்கு அழகு அதிகம். நம் ஆழ்மனதில் அழகிற்கு என்ன இலக்கணமோ! அதையல்லவா நாம் பொருத்திக்கொள்கிறோம். பாட்டியறிவாள். அவளுக்கு மகளுமுண்டு, அதே முகம். கனவுகளில் அவளோடு நான் பல அத்தியாயங்கள் வாழ்ந்திருக்கிறேன். சிறுமியாய், குமரியாய் எல்லாமுமே என்னுள் பரவியிருக்கிறது. அவளின் மணம் கூட அறிவேன். தாழம்பூவின் மணம்.’
‘கன்னி மேரியே! எதன் பொருட்டு நீ மறைத்தாய் உன் கர்ப்பத்தை. யார் அதன் தந்தை. இதல்லவா முதல். கடவுளை பலியாக்கி, அவனின் குழந்தையாக்கி. நீ கன்னியாகி! ஏன் பெண்ணே. பெரும்பிழை’
‘கடலில் மணல் குவிவதும் நல்லது, சிலநேரம் நீட்டித்து காலம் நீள்கிறதே. அவளோடு நான் நடக்கும் போதெல்லாம், நீ மகிழ்ந்தாயா? அலையற்று கிடப்பாய் அந்நேரம். நீயும் அறிவாயா? அவள் கன்னியென்று. நீயும் கன்னிதானே! என் கடலே. கிழவன் ஒருநாள் நானாய் இருப்பேன். அன்றாவது முத்தம் இடுவாயா உன் கரைக்கு’
வழிப்போக்கனின் சில குறிப்புகள்:
பிரான்சிஸ் சந்தனப் பாண்டி, சந்தையொன்றில் சந்தித்தேன். உயிரை பிய்த்து, பிரபஞ்ச சமுத்திரத்தில் கலந்துகொண்டிருந்த ஒரு ஆத்துமாவை அவன் கையிலே வைத்திருந்தான். மெசியாவின் கருணையை அறியாத சாதாரண மனிதன், அவனை அழைத்து சென்றான் எங்கோ. மணப்பாட்டில் சந்தித்தேன் ஒருமுறை, அந்தோணியார் குகை முன்னே, சப்பணங்கால் போட்டமர்ந்து கடலோடு பேசிக்கொண்டிருந்தான். எனக்கு அதிகப்பிரசங்கித்தனம், எட்டிப் பார்க்க கன்னி வெட்கத்தோடு கடலில் அவளின் பரியில் ஏறிப் புறப்பட்டு விட்டாள். மெல்லிய புன்னகையோடு என்னைக் கடந்து சென்றான். மற்றொரு நாள் மணப்பாட்டில் இவனோடு, அழகான பெண்ணொருத்தி கடற்கரையில் பாதம் புதைய நடந்தாள், யார் என்றேன், அக்கா என்றான். பிழைத்தேன். மீண்டும், சுலோச்சன முதலியார் பாலத்தில் சந்தித்தேன். பலநாள் பரிச்சயமோ, மெல்லிய புன்னகை உதிர்த்தான். அது தாமிரபரணியில் கலந்தது. விட்ட புன்னகையை தேடி, ஆற்றில் பார்த்தேன், விட்டான் கெட்டான்.
ஏதோ அவனுள் புகுந்துள்ளது என ஊரார் கேட்டு, நானும் சென்றேன். ஏலான ஆசாரி, சங்கிலிக்கு அளவு எடுத்துக்கொண்டிருந்தார். அவனின் பம்பரம், ஆணி அடிக்கையிலே உடையும் போதும் நான் அங்கிருந்தேன். அவன் அறிவான் எல்லாமுமே, அவன்தானே அழைத்துச்சென்றான். அவன் சொற்களின், கனவுகளின் பித்தன், ஆகவே கவிஞன். அவன் மாத்திரம் தரிசிக்கும் கடல் உண்டு. அங்கே மீனும், பால் நண்டும் உண்டு. கரையிலே குடிசை உண்டு, அங்கே கள்ளுடன் கிழவனும் உண்டு. பாதம் மீன்களாகும் பாதை ஒருமுறை அவன் சொன்னான்.
வழிப்போக்கனின் கைகளில் புத்தகம். கண்களை மூடி சொற்களின், கனவுகளின் சமுத்திரத்தில் ஆசைத் தீர நீந்தினேன். கூடவே பிரான்சிஸ் கிருபா எனும் தூய ஆத்துமாவின் எழுத்தில் கரைந்தேன்.
ஒரு புத்தகம் முழுக்க கனவின் சாயல். ஏன் என்றால் ‘கன்னி’ கவிஞனின் நாவல். வழிப்போக்கன் நான் ஈரிரு நாள் வாழ்ந்தது அங்கேயே. நன்றி கூறுவேன் அவனுக்கு, அவன் ஜெ பிரான்சிஸ் கிருபா .சொற்களின் கனம், உணர்ச்சிகளின் குவியல், எது சரி? தவறு? என்பதை நிர்ணயிக்க நாம் யார்?.