கண்ணுக்குத் தெரியாத உலகம் – பாவண்ணன்

பாவண்ணன்

வளவனூர் ஏரியைச் சுற்றியும் நான்கு பக்கங்களிலும்  சின்னச்சின்ன கிராமங்கள். தெற்குக்கரைக்கு அப்பால் சாலையாம்பாளையம். அர்ப்பிசம்பாளையம், ஓட்டேரிப்பாளையம். தாதம்பாளையம். கிழக்குக்கரைக்கு அப்பால் சிறுவந்தாடு, மடுகரை. மேற்குக்கரைக்கு அப்பால் ராமையன்பாளையம். பஞ்சமாதேவி. சுற்றுவட்டாரத்தில் உள்ள ஊர்களிலிருந்து படிக்க வருபவர்கள் வளவனூர் உயர்நிலைப்பள்ளிக்குத்தான் வரவேண்டும். தயிர், கீரை, கிழங்கு, விறகு, வெள்ளரிப்பழம், தேங்காய், மாம்பழம், உப்பு என எதை விற்பதாக இருந்தாலும் வளவனூருக்குத்தான் வரவேண்டும். அல்லது வளவனூரைத் தாண்டிச் செல்லவேண்டும். 

அந்தக் காலத்தில் நடப்பதற்கு யாரும் அஞ்சுவதே இல்லை. ஏரியில் தண்ணீர் நிறைந்திருந்தால் கரையோரமாக கதை பேசிக்கொண்டே சென்றுவிடுவார்கள். தண்ணீர் இல்லாத காலத்தில் ஏரிக்குள் இறங்கி குறுக்கே புகுந்து நடந்து செல்வார்கள்.

கரையில் நடந்து செல்வது இனிய அனுபவம். கரைநெடுக ஒருபக்கம் பனைமரங்கள் காணப்படும். மறுபக்கம் புளியமரங்களும் புங்கமரங்களும் நின்று நிழல் பரப்பியபடி இருக்கும். நடந்து நடந்து மழமழவென்று மாறிவிட்ட தரையில் காற்று வாங்கியபடியும் கதை பேசியபடியும் நடந்து செல்லும்போது பொழுது போவதே தெரியாது. இடையிடையில் கொடுக்காப்புளி மரங்களும் நாவல் மரங்களும் இருக்கும். காற்றில் விழுந்து சிதறிக்கிடக்கும் பழங்களை எடுத்துத் தின்றுவிட்டு ஏரியில் இறங்கி கையால் தண்ணீர் அள்ளிக் குடித்துவிட்டு தெம்பாக நடந்து செல்லலாம். கரையைத் தாண்டி கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் பச்சைப்பசேலென நெல்வயல்களும் கரும்பு வயல்களும் பரவியிருக்கும்.

கரையோரம் மரத்தடியில் சாய்ந்தபடி கூடைகளோடு உட்கார்ந்திருக்கும் பாட்டிகளின் வியாபாரம் நடந்துசெல்கிறவர்களுக்கு எளியதோர் விருந்து. வேகவைத்து எடுத்துவந்து, அறுத்து கூறுபோட்டு விற்கும் மரவள்ளிக்கிழங்கைத் தேடி வந்து வாங்குவார்கள். மோர்ப்பானையிலிருந்து குவளையில் மோரை எடுக்கும்போதே வெண்ணெய்மணம் வரும். மந்தாரை இலையில் இட்லிகளையும் தோசைகளையும் எண்ணிவைத்து விற்பார்கள் சிலர். அவர்கள் ஊற்றும் சாம்பார் மணத்துக்கும் காரச்சட்டினிக்கும் மயங்கி கூடுதலாக இரண்டு இட்லி வாங்கியுண்ணாதவர்களே இல்லை. பக்கத்திலேயே பனஞ்சாறு.  அடிநாக்கில் படிந்துவிடும் அதன் இனிப்பை அசைபோடுவது நடைப்பயணத்தில் முக்கியமான அனுபவம்.

எல்லாமே அரைநூற்றாண்டுக்கு முந்தைய காட்சிகள். இப்போதும் ஏரி இருக்கிறது. ஆயினும் வறண்டு வெடித்து கைவிடப்பட்ட மைதானத்தைப்போல உள்ளது. அன்று கண்ட மரங்கள் அனைத்தும் கரையோரங்களில் இன்றும் உள்ளன. ஆளரவமற்ற நடைபாதையில் முள்ளும் செடியும் படர்ந்து அடர்ந்திருக்கிறது. எங்கும் வயல்களே இல்லை. எல்லாமே மண்மேடுகள். அங்கங்கே எழுந்து நிற்கும் வீடுகள். புதர்கள். ஷேர் ஆட்டோக்களும் சிற்றுந்துகளும் ஊராரைச் சுமந்துகொண்டு வடக்குக்கும் தெற்குக்கும் ஓடுகின்றன.

குலதெய்வக் கோவிலில் தம்பி பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு படையல் வைத்தார்கள். பிறகு, அந்த வளாகத்திலேயே துணிக்கூடாரம் எழுப்பி மேசை போட்டு வந்தவர்கள் எல்லோருக்கும் விருந்து சாப்பாடு பரிமாறினார்கள். பொங்கல் கூடைகளோடு வீட்டுக்குத் திரும்பும்போது மாலை நான்கு மணியாகிவிட்டது. வீட்டுக்குள் ஒரே புழுக்கம். மீண்டும் மீண்டும் ஒரே பேச்சை பேசிப்பேசி சலித்துவிட்டது. ஒரு தேநீர் அருந்திய பிறகு “ஏரிக்கரை வரைக்கும் போய்ட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.

அரசமரத்தடியில் ஆடுகள் மேய்ந்த குளம்புத்தடங்கள். உலர்ந்து உருண்டிருக்கும் நாவல்பழங்களென அங்கங்கே குவிந்திருக்கும் ஆட்டுப்புழுக்கைகள். மண்பாதையில் பாரமேற்றிச் சென்ற மாட்டுவண்டிகளின் சக்கரத்தடங்கள். எருக்கம்புதரில் சிக்கிக்கொண்டு காற்றில் கொடிபோல அசையும் கிழிந்த மஞ்சள் துணி. எல்லாவற்றையும் கடந்து ஏரியை அடைந்து சரிவில் அடர்ந்திருந்த வேலிக்காத்தான் செடிகளை விலக்கிக்கொண்டு மேட்டில் ஏறி வெடிப்புகளுடன் வெட்டவெளி மைதானம்போல விரிந்திருந்த ஏரியைப் பார்த்தபடி நின்றேன்.

வெப்பத்துக்கு இதமான காற்று தழுவிச் சென்றது. கொடி பிடித்தபடி  ஓடிவரும் சிறுவனைப்போல வெடித்த மணற்பரப்பிலிருந்து  மென்புழுதிப்படலத்தை ஒரு துணியைப்போல சுருட்டி இழுத்துக்கொண்டு வந்தது காற்று. இறகு விரித்து உயர்ந்தும் தாழ்ந்தும் பறந்துவரும் பறவையென அந்தப் புழுதி கரையை நோக்கி வந்தது. வந்த வேகத்திலேயே ஒரு நாட்டியக்காரியைப் போல சட்டென ஒரு கோணத்தில் திரும்பி மற்றொரு திசைநோக்கி நகர்ந்தது. சிற்சில கணங்களிலேயே அங்கிருந்தும் வளைந்து திரும்பி ஒரு நாடகப்பாத்திரத்தைப் போல வட்டமடித்துக்கொண்டு வந்தது. காற்றே இசை. காற்றே தாளம். காற்றே பாடல். காற்றே நடனம். அக்கணம் ஒரு காவியப்பொழுது.

“யார பாக்கணும் தம்பி?” என்ற குரல் கேட்ட பிறகுதான் மரத்தடியில் ஒரு பாட்டி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். ஒல்லியான உடல். தோல் சுருங்கிய முகமும் தேகமும். கழுத்தில் குன்றிமணி அளவுக்கு சின்னஞ்சிறிய சிவப்புமணி மாலை அவர் கழுத்தில் தொங்கியது. வற்றிய உடலை மூடிக்கொண்டிருந்தது ஒரு பச்சைப்புடவை. அவர் முன்னால் துணியால் மூடப்பட்ட கிழங்குக்கூடை அருகிலேயே ஒரு சின்ன அரிவாள்மனை.

”யாரயும் தேடி வரலை ஆயா. சும்மா ஏரிய பாக்கலாம்ன்னு வந்தன்”

முதற்கணம்தான் அடையாளம் தெரியவில்லையே தவிர, மறுகணமே அவர் யாரென்ற நினைவு வந்துவிட்டது. சின்ன வயதில் பல முறை அவரிடம் கிழங்கு வாங்கி சாப்பிட்டிருக்கிறேன். ஐந்து பைசாவுக்கு வள்ளிக்கிழங்கு வாங்கித் தின்று ஐந்து பைசாவுக்கு பனஞ்சாறு குடித்துவிட்டால் நெடுநேரத்துக்கு பசியே தெரியாது. பொழுது போவது தெரியாமல் ஆடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் செல்வேன்.

அந்த ஆயாவுக்கு அருகில் சென்று ஒரு கல் மீது அமர்ந்தேன்.  “என்ன தெரியலயா ஆயா?. நான் இந்தத் தெருதான். டைலர் வீடு” என்றேன். தலையை வெறுமனே அசைத்துக்கொண்டார்.

“ஒங்கள எனக்கு நல்லா தெரியும் ஆயா. செல்லமுத்து அம்மாதான நீங்க?” என்றேன். என் சொற்கள் அவர் நெஞ்சைத் தொடவே இல்லை. தலையில் சற்றே நடுக்கம் தெரிந்தது. தொலைவிலிருந்து பார்க்கும்போது அது தெரியவில்லை. நெருக்கத்தில் தெளிவாக அந்த நடுக்கத்தைப் பார்க்க முடிந்தது.

“செல்லமுத்து அம்மாதான நீங்க?” என் முயற்சியைக் கைவிடாதவனாக குரலை உயர்த்தி நிறுத்தி நிதானமாக இரண்டுமூன்று முறை கேட்டேன். அவர் என் உதட்டசைவிலிருந்து எதையோ புரிந்துகொண்டதுபோல    இருந்தது. ஒருகணம் அவர் கண்கள் மின்னியதைப் பார்த்தேன்.

“செல்லமுத்துவா?” என்று கேட்டபோது பல்லில்லாத அவர் வாயில் புன்னகை படர்ந்தது. நானும் அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.

“அவன் அப்பவே சாலையாம்பாளையத்து பொண்ண கல்யாணம் பண்ணிகினு மெட்ராஸ்க்கு போயிட்டான். அங்கதான் ஆட்டோ ஓட்டறான். மூணு பசங்க அவனுக்கு. ரெண்டு பொண்ணு. ஒரு பையன். மூத்த பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டான்” அவர் முகத்தில் பெருமை தெரிந்தது.

“நீங்களும் அவுங்க கூட போய் இருக்கலாமில்ல?” என்றேன். அதில் ஒரு சொல்லைக் கூட அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவர் போக்கில் விட்டுவிடுவோம் என நானும் அமைதியாக இருந்தேன்.

”போன மாசம்தான் அவளுக்கு வளைகாப்பு செஞ்சி ஊட்டுக்கு கூட்டியாந்தான். வளகாப்புக்கு என்ன வந்து கூட்டிகினு போறன்னுதான் சொன்னான். கடைசி நேரத்துல என்னாச்சோ ஏதாச்சோ தெரியலை. ஆளே வரலை”

அவர் சொல்வதையெல்லாம் காது கொடுத்து கேட்கிறேன் என்பதற்கு அடையாளமாக அடிக்கடி தலையசைத்தபடி அவரைப் பார்த்து புன்னகைத்தேன். அது போதுமாக இருந்தது அவருக்கு.

“யாராச்சும் கூட்டாளிய தேடி வந்தியா?” அவர் மறுபடியும் பழைய கேள்வியிலிருந்து தொடங்கினார். நான் பதில் எதுவும் சொல்லாமல் மையமாக அவரைப் பார்த்து புன்னகைத்தேன்.

“முந்தி மாதிரி இல்ல இப்ப. எல்லாமே மாறிட்டுது” என்றார். “ஒரு காலத்துல இந்த கரை மேல ஜனங்க ஜேஜேன்னு போய்கினும் வந்துகினும் இருப்பாங்க. இப்ப ஒரு காக்கா குருவி கூட வரமாட்டுது”

நான் அவர் முகத்தை ஆர்வத்துடன் கவனிப்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார்.

”இது சாதாரண ஏரி இல்ல. கடல் மாதிரி பொங்கி நொர தள்ளும். மழ காலத்துல அவ்ளோ தண்ணி இருக்கும். தென்பெண்ணையாத்திலேருந்து ஏரி வரைக்கும் தண்ணி ஓடியாறதுக்காகவே இங்கிலீஷ்காரன் வெட்டன வாய்க்கா இருந்திச்சி.”

அப்படியா என்பதுபோல தலையை மட்டும் அசைத்தேன்.

“கார்த்தி மாசம் பொறந்திட்டுதுன்னா முப்பதுநாளும் மழ நின்னு பெய்யும். ஜனங்களுக்கு கூழு குடிக்கக் கூட  வழி இல்லாம போயிடும்”

அப்படி ஒரு மழையை நானும் சின்ன வயதில் பார்த்திருந்ததால் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

“இந்த ஏரிக்கு ஆறு மதகு. அந்த காலத்துல எங்க ஊட்டுக்காருதான் எல்லாத்துக்கும் பொறுப்பு. நேரம் பாத்து தெறக்கறது, மூடறது, கழனிங்களுக்கு போவற வாய்க்கால்ங்களுக்கு தண்ணிய தெறந்துவிடறதுலாம் அவருதான். ராத்திரியெல்லாம் கரைமேல சுத்திகினே இருப்பாரு.”

“நெலம் வச்சிருக்கவங்கள்லாம் அறுவட சமயத்துல படியளப்பாங்க.  நாங்க ரெண்டு பேரும் போய் சாக்குல கட்டி எடுத்துகினு தூக்கிட்டு வருவம்.”

“சிறுவந்தாட்டுக்குப் பக்கத்துலதான் எங்கூரு. கல்யாணத்துக்கு அப்பறம் அதோ அந்த கரை வழியாதான் நடந்தே வந்தோம். அவரு நல்லா பாடுவாரு. வழியெல்லாம் பாடிகினே வந்தாரு. எனக்கு வெக்கம்னா வெக்கம். வந்து ஊட்டுக்குள்ள பூந்தவ நாலு நாளைக்கி வெளியேவே வரலை”

ஆயா சில கணங்கள் பேசாமல் தலை குனிந்தபடி இருந்தார். கூடையின் மேல்தடுப்பில் வைத்திருந்த கிழங்கை உருட்டுவதும் கவிழ்ப்பதுமாக இருந்தார். பிறகு ஒரு பெருமூச்சோடு வாயை குதப்பிக்கொண்டு மறுபடியும் தொடங்கினார்.

“மூணு பொண்ணுங்க பொறந்ததுக்கு அப்பறமாதான் செல்லமுத்து பொறந்தான். அந்த வருஷத்துல என்னமோ புதுசா சட்டம் வந்துட்டுதுனு சொன்னாங்க. யாரும் படியளக்கலை. பஞ்சாயத்துல சம்பளம் வாங்கிக்கன்னு சொல்லிட்டாங்க. எந்த காலத்துலயாவது நெல்லும் பணமும் ஒன்னாவுமா, சொல்லு தம்பி? என்னமோ ஊருகாரங்க சொல்றாங்கன்னு ஊமையா இருந்துட்டம்”

“அந்த ஆத்தா அடிமேல அடிகொடுத்துட்டா எனக்கு. அந்த வருஷமும் நல்ல மழை. ஏரியில கடல்மாதிரி தண்ணி ஏறி வந்து கரைய தொட்டு வழியுது. ஊரக் காப்பாத்தணும்ன்னா மதகுங்கள தெறக்கறத தவிர வேற வழியில்லை. மதக தெறந்தா சுத்தி இருக்கிற நெலங்களுக்கு ஆபத்து.”

“கூடி கூடி பேசறாங்களே தவிர, யாரும் ஒரு முடிவ சொல்ல மாட்டறாங்க. இதோ வரேன் சாமின்னு சொல்லிட்டு எங்கூட்டுக்காரு எழுந்து ஓலத்தடுக்க எடுத்து தலையில கவுத்துகினு மதக தெறக்க போயிட்டாரு. மொதல் மதக தெறந்துட்டு ரெண்டாவது மதகுப் பக்கமா போவும்போது காத்துல ஒரு மரத்துலேருந்து ஒரு பெரிய கெள முரிஞ்சி  அவரு தலை மேல உழுந்து ஆள அமுக்கிடுச்சி. அங்கயே உயிரு போயிட்டுது. காலையில மழ விட்டப்பறம்தான் எல்லாரும் அவர தூக்கியாந்து ஊட்டுல போட்டாங்க.”

அதற்குப் பிறகு சில கணங்கள் அவர் பேசாமல் மெளனமாகவே இருந்தார். நானும் மெளனமாகவே இருந்தேன்.

“அப்பதான் இந்த கெழங்குக் கூடய எடுத்தேன். நாலு புள்ளைங்களயும் ஆளாக்கி நிறுத்தணும்னு ஒரு வைராக்கியத்துல இங்க வந்து உக்காந்தன். ஐயோ அவரு போய்ட்டாரேனு அழுதுகினு மூலையில உக்காந்திட்டிருந்தா யாரு எங்களுக்கு சோறு போடுவாங்க?”

“பொண்ணுங்களயெல்லாம் கவுரவமா கட்டிக் குடுத்தாச்சி. இங்கதான் பேட்டைல ஒருத்தி இருக்கா. இன்னொருத்தி கோலியனூருல இருக்கா. சின்ன பொண்ணு கெங்கராம்பாளையத்துல இருக்கா. நல்ல நாள் கெட்ட நாள்னா வந்து பாத்துட்டு போவாளுங்க. இங்க எதுக்கு இருக்கற, வந்து எங்ககூட இருந்துக்கோனு ஒரொருத்தியும் கூப்புடத்தான் செய்யறாளுங்க. எனக்குத்தான் இந்த ஏரிக்கரைய உட்டுட்டு போறதுக்கு மனசில்ல. அவளுங்க கண்ணுக்கு இது வெறும் கட்டாந்தரை. என் கண்ணுக்கு மட்டும் அன்னைக்கு பாத்த சமுத்திரம் மாதிரியே இருக்குது.”

பேச்சை நிறுத்திவிட்டு நாக்கை குதப்பியபடி இடுப்பில் செருகியிருந்த  சுருக்குப்பையை எடுத்துப் பிரித்து வெற்றிலை, பாக்கு, புகையிலையை எடுத்தார் ஆயா. முதலில் கண்ணாடித் துண்டுபோன்ற வெற்றிலையின் பச்சைக்காம்பை நகத்தால் கிள்ளி எறிந்தார். பிறகு தொடையில் வைத்து இருபக்கங்களையும் தேய்த்து உதறினார். கரண்டவத்திலிருந்து ஆட்காட்டி விரலால் சுண்ணாம்பைத் தொட்டெடுத்து வெற்றிலையில் தடவி புகையிலைக்காம்பையும் பாக்குத்துண்டையும் நடுவில் வைத்து மேலும் கீழுமாக மடித்து வாய்க்குள் வைத்து அதக்கிக்கொண்டார். வாய்க்குள் நிறைந்த முதல் சாற்றினை மெல்ல மெல்ல விழுங்கியபோது அவர் முகம் தன்னிச்சையாக மலர்வதைப் பார்த்தேன்.

”ஒரு நாள்ல முப்பது நாப்பது தரம் இந்தக் கரையில குறுக்கும் நெடுக்குமா  நடையா நடக்கற ஆளு அவரு. அவரு எந்தப் பக்கம் இருந்தாலும் சரி, தோல் செருப்பு போட்டுகினு சரக் சரக்னு அவர் நடக்கற சத்தம் எனக்கு கேட்டுகினே இருக்கும். அவரு பாடற சத்தம், இருமற சத்தம், கூப்புடற சத்தம், சிரிக்கிற சத்தம் எல்லாமே எனக்கு கேக்கும். என்னமோ பக்கத்துல ஒக்காந்து மூச்சு உடறமாதிரி கேக்கும்”

வெற்றிலைச்சாறு கடைவாயில் ஒழுக ஒழுக ஒருமாதிரி கோணலாக வாயை அண்ணாந்து வைத்தபடி ஒவ்வொரு சொல்லாகச் சொன்னார். அதற்குப் பிறகு சிறிது நேரம் பேச்சில்லை. கையை ஊன்றி இடுப்பைப் பின்பக்கமாக நகர்த்திச் சென்று சிறிது தொலைவில் சக்கையைத் துப்பிவிட்டு புடவை முந்தானையில் உதடுகளைத் துடைத்தபடி திரும்பி வந்து கூடைக்கு அருகில் உட்கார்ந்தார்.

லேசாக தொண்டையை கனைத்தபடி “அவரு உயிரோட இல்லைங்கறதால, அவரு சத்தம் இல்லைன்னு ஆயிடுமா, சொல்லு தம்பி. எனக்கு அன்னைக்கும்  கேட்டுது. இன்னைக்கும் கேட்டுகினுதான் இருக்குது. இங்க வந்து உக்காந்தா போதும், காத்துல அந்த சத்தம் அப்படியே மெதந்துட்டு வரும். வா வான்னு சொல்றாளுங்களே, நான் எப்படி இந்த சத்தத்த விட்டுட்டு போவமுடியும், நீயே சொல்லு தம்பி”

முள்ளும் புதரும் மண்டிய கரையோரங்களையும் வெடித்து வாய்பிளந்து வானத்தைப் பார்த்தபடி கட்டாந்தரையாகக் கிடக்கும் ஏரியையும் திரும்பிப் பார்த்தேன். ஏதோ சுட்ட மணம் எழுந்து வருவதுபோல இருந்தது. என்னிடம் இசையைச் சேர்த்த காற்று அவரிடம் அவர் கணவனின் காலடி ஓசையையும் குரலையும் சேர்த்திருக்கக்கூடாதா என்ன என்று தோன்றியது.

நான் ஆயாவின் பக்கம் திரும்பியபோது அவர் என் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். அவரைப் பார்த்து புன்னகைத்தபடி அவர் கைகளைப் பற்றியெடுத்து என் கைகளுக்குள் வைத்துக்கொண்டேன்.

மெதுவாக அவர் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக “நீங்க உக்காந்திருக்கறதுலாம் சரி ஆயா. இந்த கெழங்க எதுக்கு கொண்டுவந்து வச்சிருக்கீங்க? இங்க வந்து யாரு வாங்குவா ஒங்ககிட்ட? விக்கலைன்னா வீணாதான போவும்?” என்று அடுக்கிவைத்திருக்கும் கிழங்குகளை கையால் இரண்டுமூன்று தரம் சுட்டிக்காட்டி சத்தமாகக் கேட்டேன். அவருக்கு என் கேள்வியின் பொருள் புரிந்துவிட்டது. அவருடைய தலையசைப்பிலிருந்தே அதை நான் புரிந்துகொண்டேன்.

“யாராச்சும் வந்து வாங்குவாங்க” என்று பொக்கைவாயைத் திறந்து சொன்னார் ஆயா. “அதோ, ரயில்வே ஸ்டேஷனுக்கு வர ஆளுங்க யாராவது தேடி வந்து வாங்கினு போவாங்க. ஆல மரத்துப் பக்கமா சாராயம் குடிக்க வரவனுங்களும் வாங்குவானுங்க.”

நான் நம்பிக்கை வராதவனாக அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.

“யாருமே வாங்கலைன்னா கூட எனக்கு ஒன்னும் நஷ்டம் இல்லை. ரெண்டு கெழங்க எடுத்து நானே பொறிச்சி சாப்ட்டுடுவன். மிச்சத்த துண்டுதுண்டா கிள்ளி காக்கா குருவிங்களுக்கு போட்டுடுவன். இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்து பாரேன்.  ஊருல இருக்கற காக்காய்ங்க எல்லாம் இங்க வந்து பள்ளிக்கூடத்து பசங்களாட்டம் சுத்தி நின்னுக்கும். அப்ப நீயே புரிஞ்சிக்குவ.”

என்னிடம் பேசிக்கொண்டே ஆயா புருவங்களுக்கு மேல் கையை கிடைமட்டமாக வைத்து கண்ணுக்கெட்டிய தொலைவுவரைக்கும் எதையோ வானத்தில் தேடினாள். அவள் பார்வை செல்லும் திசையிலெல்லாம் நானும் என் பார்வையைச் செலுத்தினேன்.  சில கணங்களுக்குப் பிறகு ஒரு மூலையிலிருந்து ஒரு காக்கைப்பட்டாளம் ஆயாவை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்தபோது என் உடல் சிலிர்த்தது.

One comment

  1. கண்ணுக்குத்தெரியாமல் போன கிராமத்து ஏரிபராமரிப்பபையும், மக்களையும் அவர்களது வாஞ்சையையும் நம்பிக்கையையும் பாட்டியின் வழி மனதுக்கு நெருக்கமாக சொல்லிய பாவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.