வடகலை தென்கலை
எதுவாயினும்,
பெருமாள் பக்தர்கள் அனைவருக்கும்
ஒரு அன்பான
வேண்டுகோள்.
வைகுண்டத்தில்
மகாவிஷ்ணு செய்த
அதே பிழையை
நீங்களாவது செய்யாதிருங்கள்.
நீங்கள் துயில்வது
ஆதிசேஷன் மீதுதான் என்றாலும் சரி
அடுத்தமுறை
படுக்கையறையுள் நுழையும் முன்
பாதுகைகளை
கவனமாக கழற்றிவிடுங்கள்.
முக்கியமாக,
கழற்றிய பாதுகையை
படுக்கையின் மீது மட்டும்
வைத்துவிட வேண்டாம்.
தூணிலும் துரும்பிலும்
இருக்கும் திருமாலின்
சங்கும் சக்கரமும்
உங்கள் திருஷ்டிக்கு தெரியாமல்
அருகிருந்து விட்டால்
ஆபத்து.
அவை
பாதுகையை
கோபித்து கூச்சலிட்டு
ஸ்ரீவிஷ்ணுவால் சபிக்கப் பெற்று
திரேதாயுகத்தில்
பரத சத்ருகர்களாகப் பிறக்க,
பாதுகைகளோ
மற்றுமொரு சடாரியாய் மறுவடிவாகி,
முக்தியடைந்த இன்னுமொரு புதிய ஆழ்வார்
திருமாலின் திருப்பாதமாக,
பெருமாளின் பிரசாதமாய்
மஞ்சள் காப்பு குங்குமம்
திருத்துழாய் உடன்
திருமாலின்
திருவடி பொறித்த திருமகுடம்
பூர்வஜென்ம கர்மத்தின் சடம் சபித்த
ஸ்ரீ சடகோபர் வடிவான
சடாரியுடன் –
தாமரைக்கூம்பின் குறடு கொண்ட
மற்றுமொரு
பித்தளைக் கும்பாதனை
வரிசையில் நின்று
சிரசில் தரித்து
பாதுகா சகஸ்ரம் துதித்து
திருமால் தரிசனம் முடிந்து
நெடுஞ்சாலையில் கிடந்து
சனியன்று மாலை
வீடு திரும்ப,
மிகவும்
தாமதமாகிவிடும்தானே நமக்கு?
சிறிய பிழைகள்தாம்
என்றாலும்
பெரிய விளைவுகள்.
மகாவிஷ்ணு
மற்றும் மனிதர்கள்,
யாராயினும்,
-காஸ்மிக்தூசி