மேளம் இசைக்கிறது காற்று பரவுகிறது

கவியரசு

“தென்கிழக்கு திசையிலிருந்து
கொள்ளை கொள்ளும் காற்று வரும்”
சோதிடர் அறிவித்த நாளிலிருந்து
வானத்தில் திசையைக் கிழித்து
வீட்டை நகர்த்துகிறாள்
தூணில் மோதி நாணும் முகம்
முற்றிலும் புதிதாக எழுகிறது
அழிந்தழிந்து பரவுகிறது ஒளி
ஓடுவதும் தாவுவதுமாக
யார் பேச்சிலும் நிற்காத உடலை
பாவாடையால் இறுக்கிக் கட்டுகிறாள்
திறந்து திறந்து பூட்டுகிறாள்
தனக்கு மட்டுமே தெரிந்த உண்டியலை
சிதறியோடும் காசுகளில் எல்லாம்
பூரிப்பு பூரிப்பு பூரிப்பு

*

இவளது ஊரை அறிவதற்காக
வேறொரு ஊரில்
அலைந்து கொண்டிருக்கிறான்
நேர்கோட்டிலும்
குறுக்குத் தெருக்களிலுமென
நீள்கிறது தேடல்
கிரகங்கள் வீட்டுக்குள் வந்துவிட்டதால்
வாசலில் உறங்கும் வாழ்வு
விண்மீன்களால் மட்டுமே
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது
நிராகரித்ததும்
நிராகரிப்பதும்
இரண்டு கன்னங்களையும்
கடித்துக் கொண்டிருக்கின்றன
கூந்தல் உதிரும் கொடிய காலம்
மொட்டை மாடியில் மன்றாடுகிறான்
“குற்ற உணர்ச்சியைக்
கொல்லும் வாளை
எவளிடமாவது
கொடுத்தனுப்புங்கள் ”

*

வந்து வந்து செல்லும் காற்றல்ல
ஆழ்கிணற்றில்
நடனமிடும் பெருங்காற்று
என்றுணர்ந்த பொற்கணத்தில்
தேநீரை வீசுகிறாள்
அமர்ந்திருந்த கூட்டம் மிதக்கிறது
தாவிப் பிடித்து முதலில் விழுங்குபவன்
லட்சணங்களின்
பெருஞ்சுவையில் பொலிவடைகிறான்
தனியாகப் பேசுவதற்காக
அழைத்துச் செல்லும் போதே
அனுமதி கேளாமல் தொடங்கிவிடுகிறது
முடிவற்ற சுழல் நடனம்

*

பிடித்திருக்கிறது
பிடித்திருக்கிறது
அவளுக்குள் ஒரு தெரியாத திசை
அவனுக்குள் ஒரு தெரியாத திசை
உள்ளும் புறமுமாய்
பயணம் தொடங்கும்போது
மேளம் இசைக்கிறது
காற்று பரவுகிறது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.