பசி

பா சிவகுமார் 

தீநுண்மியின்
தாக்கம் அதிகரிப்பு
பொதுமுடக்கமென
அரசு அறிவிப்பு
வெறிச்சோடியிருக்கிறது
நகரம்
வீட்டிலே முடங்கிக் கிடக்கிறார்கள்
மக்கள்
முடங்காமல் நேரத்திற்கு
வந்து விடுகிறது பசி

பஞ்சடைத்த செவிகள்;
ஒளியிழந்த விழிகள்;
வறட்சியான வார்த்தைகளென
காய்ந்த அகவயிற்றினழகு
முகத்தில் தெரிய
பொருளீட்ட வழியின்றி
உடல்மனம் சோர்ந்து
பசி மயக்கத்தில்
சாலையோர குடிசையில்
சுருண்டுக் கிடக்கின்றனர்
அன்றாடங்காய்ச்சிகள்

வறண்டு வறட்சியாக
கிடக்கின்றன
சமையலறையும்
பலரின் வயிறுகளும்
உழைப்பு; ஊதியம்;
உணவு; பசி; வறுமையென
சில சொற்களின் நேரடிப் பொருள்
இப்பொழுது
வயிற்றிற்கும்
தெரிய வருகிறது
பசித்தீயை நீருற்றி
தற்காலிகமாக
அணைக்கின்றனர்

நிவாரணத் தொகை
விரைவில் வழங்கப்படும்
என்ற செய்தி
எங்கோ காற்றில்
மிதந்து வருகிறது
வயிற்றிற்கு உணவில்லாதபோது
செவிக்கு அங்கே ஈயப்படுகிறது

அம்…மா…. என கத்தியவாறு
ஓடி வரும் சிறுமியின் கையில்
யாரோ அளித்த
உணவுப் பொட்டலங்கள்
பசியாறுகிறது குடும்பம்
வாழ்வின் மீதான நம்பிக்கையை
யாரோ வழியெங்கும்
விதைத்துச் செல்கிறார்கள்
நாளை விடிந்துவிடும் என்ற
நம்பிக்கையில் பசியாறி
உழைக்கத் தயாராகின்றனர்
குடிசைவாழ் மக்கள்
இரண்டு வேளை
உணவென்பதே
இவர்களின்
இப்போதைய இலக்கு

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.