வளவ. துரையன்
வயலும் வயலைச் சார்ந்த இடங்களும் மருதம் என வகைப் படுத்தப்பட்டது. சங்கப் பாடல்களில் மருத நிலத்தின் இயற்கைக் காட்சிகள் அழகாகப் புனைந்துரைக்கப்பட்டுள்ளன. ஒரு வயலில் தானியங்கள் விளைந்து முற்றி இருக்கின்றன. அவற்றைத் தின்ன வரும் பறவைகளைப் பறைகொட்டி விரட்டுகின்றனர். அவர்களை “அரிப்பரை வினைஞர்” எனப் பாடல் காட்டுகிறது. அந்த வயலில் குருகுகள் நிறைய மேய்கின்றன. அக்குருகுகள் அவ்வயலில் இருக்கும் ஆமைகளைப் பிடித்துத் தின்கின்றன. அந்த ஆமைகளின் வெண்மையான தசையை முழுதும் உண்ணாமல் மிச்சம் வைத்துவிட்டுப் போகின்றன. பறை கொட்டுபவர்கள் அந்த மிச்சத்தைத் தங்கள் உணவாக உண்கின்றனர்.
இக்காட்சியைச் சொல்லிப் பரத்தை தலைவனின் பாங்காயினர் கேட்கக் கூறுகிறாள். “மிகுதியான அழகான மலர்களால் பொய்கை அழகு பெறும் வளங்கொண்ட நாடன் ஊரனே! நீ என்னை விரும்புகிறேன் என்று உரைக்கிறாய்; இதைக் கேட்டால் உன் மனைவி மிகவும் வருந்துவாள்”
குருகு உண்ட மிச்சத்தை உண்ணும் பறை கொட்டுபவர் போல தலைவன் தன் மனைவியை விட்டுவிட்டுப் பரத்தையிடம் வந்து இன்பம் துய்க்கிறான் என்பது உள்ளுறைப் பொருளாகும். ஐங்குறுநூறில் உள்ள மருதத் திணையில் புலவி விராய பத்தின் முதல் பாடலில் இதைக் காணமுடிகிறது. புலவி என்பது ஊடலைக் குறிக்கும். இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ஊடலின் பொருட்டு எழுந்தவையாகும். தலைவி, தோழி, மற்றும் பரத்தை ஆகியோரின் கூற்றுகளாக அமைந்துள்ளன. இப்பாடல்கள் தாங்களே கண்டவற்றை உரைப்பனவாகவும், தூது வருபவர்களிடம் மறுப்புரை கூறுவதாகவும் அமைந்துள்ளதால் இப்பகுதி ”புலவி விராய பத்து” என்று பெயர் பெற்றுள்ளது. பாடல் இதோ:
”குருகுஉடைத்து உண்ட வெள்அகட்டு யாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலர்அணி வாயில் பொய்கை, ஊரநீ
என்னை ‘நயந்தனென்’ என்றிநின்
மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே”.
தலைவி கூற்றாக வரும் ஒரு பாடலைப் பார்ப்போம். இப்பாடல் தலைவி தலைவனிடம் சினம் கொண்டு ஊடி உரைப்பது போல் உள்ளது. அவள் தலைவனிடம் அனைப்பற்றி நேரடியாகவே குற்றம் கூறுகிறாள். “நீ என்னை மணந்துகொண்ட கணவன்; ஆனால் நீ என்மீது அன்பு செலுத்தவில்லை” என்கிறாள். பாடலில், “மணந்தனை அருளாய் ஆயினும்” எனும் சொற்கள் இதைக் காட்டுகின்றன. மேலும் அவள் பொய்க்கோபமாக, “நீ குளிர்ச்சியாக நீர்த்துறைகள் உள்ள உன்னுடைய ஊருக்குச் செல்வாயாக. அங்கே வாழும் பரத்தையர்களிடம் சேர்ந்து அவர்களும் உன் பெண்டிரே என ஊரார் மொழியும் அளவிற்கு என்னை விட்டுப் பிரிந்து செல்வாயாக” எனக் கூறுகிறாள்.
பரத்தையர் பற்றிப் பொறாமையுடன் சினந்து கூறும்போது கூடத் தலைவி, அவர்களை, “ஒண்தொடி” என்ற சொல்லால் ஒளி பொருந்திய வளையல்களைப் பூண்டவர்கள் என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் ”நீ அவர்களைச் சேர்ந்தால் மணந்த தலைவியை விட்டுவிட்டு இவர்களிடம் சேர்ந்திருக்கிறானே” என்று ஊரார் பழிப்பர் என்பதை மறைபொருளாக அவனுக்குத் தெரிவிக்கிறாள். புலவி விராய பத்தின் மூன்றாம் பாடல் இது.
”மணந்தனை அருளாய் ஆயினும், பைபயத்
தணந்தனை ஆகி, உய்ம்மோ நும்ஊர்
ஒண்தொடி முன்கை ஆயமும்
தண்துறை ஊரன் பெண்டுஎனப் படற்கே”
இப்பத்தின் நான்காம் பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. அக்காலப் பெண்டிர் தம் கூந்தலை ஐந்தாக வகுத்துப் பின்னி இருந்தனர் என இப்பாடலில் உள்ள ஐம்பால் மகளிர்” எனும் சொல் காட்டுகிறது.
”செவியின் கேட்பினும் சொல்இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என்ஆ குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போல,
பலர்படிந்து உண்ணும்நின் பரத்தை மார்பே?”
பெண்கள் தைத் திங்களில் குளிர்ச்சி பொருந்திய குளங்களில் நீராடும் வழக்கம் இருந்ததையும் இப்பாடல் காட்டுகிறது. மேலும் அக்குளமானது தலைவனின் மார்புக்கு உவமையாகச் சொல்லப்படுகிறது. “பலர் வந்து நீராடும் குளம் போல உன் மார்பு பரத்தையர் வந்து படியும் தன்மை உடையது என ஊரார் பேசுகின்றனர். அதைக் காதால் கேட்டாலே உன் தலைவி சினம் அடைகிறாள். நீ இப்பொழுது பரத்தை இல்லில் தங்கிய குறிகளுடன் வந்திருக்கிறாய்; தலைவி இப்பொழுது உன்னைக் கண்ணால் கண்டால் என்ன ஆவளோ?” எனத் தலைவி கூறுகிறாள்.
அடுத்த பாடலில் தலைவி, தலைவனைப் பார்த்து, “ஊரனே! உன் செயல் சிறுபிள்ளைகள் செய்வதைப் போல இருக்கிறது. இதைக் கண்டு ஊர்ப்பெரியவர்கள் எள்ளி நகையாட மாட்டார்களா?” எனக் கேட்கிறாள். மேலும் உன் ஊரில் சம்பங்கோழி அதன் பெடையோடு இணைந்து வாழ்கிறது என்று கூறி பறவையே அப்படி வாழ்கையில் அது போல நீ இருக்க வேண்டாமா எனக் குறிப்பாகக் கூறுகிறாள். கம்புள் என்பது சம்பங்கோழியைக் குறிக்கும். சம்பங்கோழியைக் கூட வெண்மையான நெற்றி உடையது எனும் பொருளில், “வெண்நுதல்” என வருணிக்கும் பாங்கு குறிப்பிடத்தக்கது.
இதோ ஐந்தாம் பாடல்:
”வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை
தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும்
மறுஇல் யாணர் மலிகேழ் ஊரநீ
சிறுவரின் இனைய செய்தி;
அகாரோ பெருமநின் கண்டிசி னோரே”
பரத்தை கூற்றாக புலவி விராய பத்தின் எட்டாம் பாடல் விளங்குகிறது.
”வண்துறை நயவரும் வளமலர்ப் பொய்கைத்
தண்துறை ஊரனை, எவ்வை எம்வயின்
வருதல் வேண்டுதும் என்பது
ஒல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே.”
”பரத்தையானவள் தன்னிடம் தலைவன் வந்து சேர்வதை விருப்பம் இல்லாதது போலக் காட்டுவாள்; ஆனால் அவள் விரும்பிக் கொண்டிருக்கிறாள்: அதுபோலிருக்கத் தன்னல் இயலாது” எனத் தலைவி கூறுகிறாள். அதைக் கேட்ட பரத்தை ‘ஆமாம்; நாங்கள் விரும்புகின்றோம். ஆனால் அதை வெளியில் சொல்லமாட்டோம். அதற்கு உடன்படாத்து போலக் காட்டி மனத்துள் உடன்படுகின்றோம்” எனக் கூறுகிறாள்.
வண்டானது மலர்விட்டு மலர் சென்று தேன் உண்ணுதலை தலைவன் பரத்தையரிடம் சென்று இன்பம் துய்த்தலுக்கு உவமையாகப் பல பாடல்களும் இது போல் சொல்லி இருக்கின்றன. தலைவன் ஊரில் வண்டுகள் தங்கும் வளமான மலர்கள் உள்ளன என்று இங்கு குறிப்பாக மறைபொருளாகச் சொல்லப்படுகிறது. தலைவியை உறவு முறையாகப் பரத்தை தமக்கை என்றழைக்கிறாள். ’எவ்வை’ எனும் சொல் அதைக் காட்டுகிறது.
இது பத்தாம் பாடல்:
மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்னது ஆகலும் அறியாள்,
எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே”
இப்பாடலில் பரத்தை ’புதல்வனின் தாய்’ எனத் தலைவியைக் காட்டுவதிலிருந்து மணமாகி சில ஆண்டுகள் தலைவியுடன் வாழ்ந்த பின் புதல்வனும் பிறந்தபின்னர் தலைவன் பரத்தை இல் சென்றுள்ளான் எனபது புலனாகிறது. இப்பாடலிலும் பல மலர்களுக்குச் சென்று வரும் வண்டு தலைவனுக்கு உவமையாகக் கூறப்படுகின்றது. தன்னிடமிருந்து தலைவனைப் பரத்தைதான் விலக்குகின்றாள் எனத் தலைவி கூறுவதைக் கேட்ட பரத்தை கூறுவது போல் அமைந்த பாடல் இதுவாகும்.
”வண்டு பல மலர்களிடம் சென்று தேனை உண்ணல் மரபு. தலைவனும் அதே போன்று பல பரத்தையரிடம் சென்று இன்பம் துய்க்கிறான். தலைவன் குணத்தை வண்டுகள் பெற்றனவா? இல்லை வண்டின் குணத்தைத் தலைவன் பெற்றானா என்பது தெரியவில்லை; அப்படி இருக்கத் தலைவனுடன் கலந்து புதல்வனைப் பெற்ற தலைவி எம்மைக் குறை கூறுகிறாளே” என்பது பரத்தை கூற்றாகும்.
சில ஆண்டுகள் பழகியபின்னரும் தலைவனின் குணத்தைத் தலைவி அறியவில்லையே என்பதை மறைமுகமாகக் காட்டவே இந்த இடத்தில் புதல்வனைக் குறிப்பிடுகின்றாள். “அன்னது ஆகலும் அறியாள்” என்ற சொறோடர் இதைத் தெரியப்படுத்துகிறது.
இவ்வாறு இயற்கைக் காட்சிகளைக் காட்டி அவற்றின் வழி தலைவன் மற்றும் பரத்தை போன்றோரின் வாழ்முறைகளையும் ஐங்குறு நூறு காட்டுகிறது எனலாம்.