பல்லைக் குத்திக்கொண்டிருந்த வம்சி ஆடுகளை ஒரு கவனிப்பு கவனித்தார். மலையோரம் சற்று சரிவாக அந்த ஆடுகள் புற்களை மேய்ந்துக்கொண்டிருந்தது. கீழே சற்று தள்ளி சிறிய ஓடை. தண்ணீர் குறைந்து மேலாக்க ஓடிக்கொண்டிருந்தது. வேப்ப மரத்தடியில் அருணா தனியாக கல்லாட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.
இரண்டு ஆடுகள் ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டிருந்தன. சந்தைக்கு போகும் வண்டிகள் பாலத்தின் திருப்பத்தில் சத்தம் போட்டுப் போனது. ஒரு பக்கம் கனிந்து வரிசையாக இருக்கும் மாந்தோப்புகள். நடுநடுவே அகல வயல்களில் மாடுகள் தென்பட்டது… அவ்வபோது கேட்கும் மலையாடுகளின் சத்தம். வெயில் உரைத்து கன்னத்தில் சுட்டது. தலைக்கு துண்டு கட்டியிருந்தாலும் தலை வழியாக சூடு உடலில் பரவி தண்ணீர் தேவைப்பட்டுக் கொண்டேயிருந்தது.
“பாப்பா. “ என்றார். கைகளில் சொரிந்துக்கொண்டார். கொஞ்சம் ஒதுங்கி இவரைப் பார்த்த ஆட்டைப் பார்த்து. “போடா செல்லம். அந்தாப்ல போ. புல்லு மேயறதைப் பாரு. என்கிட்ட என்ன சோலி. ?”
அது அருகில் வந்துப் படுத்துக்க கொண்டது. கொஞ்சம் தடவிக் கொடுத்தார். “உன்னைய இந்த வாரம் வித்திருவேன். “ என்றவர் “பாப்பா” என்றார் மறுபடியும்.
;என்னத் தாத்தா. ?;” அருணா திரும்பிப் பார்க்காமல் “தாத்தா. எங்க அந்தண்ணனைக் காணோம்.? “ என்றாள்.
“பக்கோடாவா.? வருவான். எங்கிட்டாவது தின்னுக்கிட்டிருப்பான். இல்லன்னா வேல செஞ்சுக்கிட்டிருப்பான். கொஞ்சம் தண்ணி வேணும் பாப்பா. “
“இதா வந்தர்றேன். “ அருணா தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தாள். அவளுக்கு இந்தக் கல்லாட்டம் புடிக்கும். முதலில் வீட்டருகே கீதா. ராசு. தம்பிப் பய இவர்களோடு விளையாடுவாள். தாத்தா கூட வரும்போது அவரே விளையாடுவார். ஆனால் தாத்தா விளையாடுவது இவளுக்கு பிடிக்கவில்லை. “நீ எனக்கு உட்டுத்தர்றே தாத்தா. போ. இனிமே நானே விளையாடிக்கறேன். “
வெயில். மழை என்றெல்லாம் இல்லை. கல்லாட்டம். ஒன்னு. ரண்டு. மூணு. “தாத்தா. இங்கன பாரு . எல்லாக் கல்லையும் புடுச்சுட்டேன். “
தனியாக விளையாடுவது பழகிவிட்டது. ஏதாவது ஒரு மரத்தடியில் கற்களோடு பேசியபடி இரண்டு காலையும் விரித்தபடி விளையாடுவாள். அப்படியே தூங்கி விடுவாள். ஒன்பது வயதிருக்கலாம். நான்காவது படிக்கிறாள். நன்றாக வாசிப்பாள். சுலோச்சனா டீச்சரைப் பிடிக்கும். கோயிந்து பெட்டிக்கடையில் கமர்கட்டு பிடிக்கும். பெரிய வீட்டு நாய் பிடிக்கும். அப்பா அம்மாவைக் கொஞ்சினால் பிடிக்கும். பள்ளிக்கூடத்தை விட்டு முதலில் ஓடிவருவது பிடிக்கும். முக்கியமாக அந்த பக்கோடாவைப் பிடிக்கும்.
“அண்ணே. உங்கப்பேரு பக்கோடாதானா…?”
“உகும்,, கம்சன்”
“கம்சனா.?”
“ஆமா. கம்சன். எனக்கு கம்சன் கத தெரியும். ஆனா கம்சனை எனக்குப் புடிக்கும். “
“நீ ஏன் படிக்கல.?”
“எங்கப்பா சின்ன வயசுலேயே செத்துட்டார். எங்கம்மா என்னைய வேலைக்கு அனுப்புச்சுட்டாங்க. ;
“இங்கெல்லாம் எங்கப் பாத்தாலும் நீதான் இருக்க.”
“எனக்கு ஆட்டுப் பாழையெல்லாம் தெரியும். மனசுக்குள்ள என்ன நினைக்குதுன்னு தெரியும். அதை கசாப்புக்கு அனுப்பறது எனக்குப் புடிக்காது. ஆட்டுக்கு நம்மை புடிச்சுடுச்சுன்னா நம்மளோடப் பேசும். நம்ம மடியில வந்து படுத்துக்கும். “
அவன் அப்படித்தான் நடந்துக்கொள்வான். திடீரென்று கனைப்பான். ஆடு நின்று அவனைக் கவனிக்கும். அது அவளுக்குப் பிடித்திருந்தது. எங்கு மேய்க்க வேண்டும். எங்கு மேய்க்கக் கூடாது என்றெல்லாம் தெரிந்து வைத்திருந்தான். முதுகில் ஒரு பையை தொங்க வைத்திருப்பான்.
“அதுல என்ன இருக்குது.?”
“தண்ணி. கம்பங்கஞ்சி. ஊறுகா. அப்புறம் சிவாஜி பாட்டுப் புத்தகம்.”
“சிவாஜியா.?”
“இல்ல பாப்பா. சிவாஜி கணேசன். எனக்கு கம்சன புடிக்குமுன்னு சொன்னேன் இல்லையா… அதே மாதிரி சிவாஜியையும் புடிக்கும். சிவாஜி பாடுன எல்லாப் பாட்டும் எனக்குப் புடிக்கும். சட்டி சுட்டதடா. கை விட்டதடா. “
கல்லாட்டம் அதன் பிறகு அவனைப் பிடித்திருந்தது அவளுக்கு. தாத்தாவுடன் எப்போதாவது கூட வருகிறவள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வருவாள்.
“சிவாஜி மாதிரி நடுச்சுக் காட்டுட்டா.?”
“அதெல்லாம் தெரியுமா உனக்கு.?”
“அவரு நடிகருத் திலகமில்ல. “ கொஞ்சம் தள்ளி நின்றுக்கொண்டு நடந்துக் காட்டினான். “என்ன செஞ்ச?” என்றாள்
“இப்படித்தான் நடப்பாரு சிவாஜி”
“ஏதாவது பேசிக் காட்டு”
“உகும். அதெல்லாம் தெரியாது. ஆனா நடக்கத் தெரியும். திருவிளையாடல்ல இப்படித்தான் நடப்பாரு.”
அஙளுக்கு அவன் கூட இருந்தால் நேரம் போவது தெரியாது. கல்லாட்டம் கற்றுக் கொடுத்தாள். அவனுக்கு அது பிடிபடவில்லை. “எனக்கு விளையாட்டுன்னா ஜில்லிதான் புடிக்கும் .” என்றான்.
“ஜில்லி இல்லை. கில்லி. “
“சரி வச்சுக்கோ. அப்புறம் பம்பரம். உனக்கு கோலி விளையாடத் தெரியுமா.?”
“உகும்.”
“கத்துத் தர்றேன். எங்கப்பாதான் கத்துக் கொடுத்தாரு. அவரு நல்லா வெளையாடுவாரு. தெருவுல சிரிப்பாங்க.,,. எங்கப்பா என்னைய ஈஸியா ஜெயிப்பாரு. எங்கம்மா சிரிப்பாங்க. “
வம்சி திரும்ப பேத்தியைப் பார்த்தார். அவள் சுவாரஸ்யமாக கல்லாட்டத்தில் இருந்தாள். சிரித்தபடி எழுந்து அவளருகில் சென்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு அருகில் மரத்தின் கிளையில் மாட்டியிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கும்போது.”தாத்தா. என்னப்பா இன்னும் அண்ணனைக் காணோம்.? “ என்றாள்.
“அதான் தெரியலையேம்மா.”
“தாத்தா. அங்கப் பாரு.”
ஒரு மேட்டில் பக்கோடா தெரிந்தான். முதுகில் பையெலெலாம் இல்லை… தள்ளாடுவது தெரிந்தது. நான்கடிகள் வைத்து கொஞ்சம் சரிந்து கீழே விழுந்தான்.
0000
பக்கோடா மூக்கிலிருந்து ரத்தம். கைகளில் சிராய்ப்புகள். “அச்சுட்டாங்க. அச்சுட்டாங்க. “ என்றான். சட்டையெல்லாம் கிழிந்திருந்தது.அருணா “அண்ணா. அண்ணா. “ என்று அழுதாள்.
வம்சி கிழிந்திருந்த அவன் சட்டையை கழட்டினார். இரத்தத்தை துடைத்தார். கண்கள் கிறங்கி வெயிலுக்கு திறக்க முடியாமல் இறுக்கமாக மூடியபடி “அச்சுட்டாங்க. பெருசு.” என்றான்.
“நாசாமா போனவங்க. அவங்க நல்லாவே இருக்கமாட்டாங்க.”
பெரியவர்.”யாரு பாப்பா.?”
“அவங்கதான். இவனை அடுச்சவங்க. தாத்தா. தூக்கு. தூக்கு. மரத்துக்கிட்ட போய்டலாம். “
பக்கோடா.”பாப்பா. நான் உன்னதான் பாக்க வந்தேன். அச்சுட்டாங்க.”
அருணா அவன் கால்களை புடித்துக்கொண்டாள். வம்சி அவனை தூக்கிக்கொண்டு மரத்திடம் நகர்ந்தார்.ஒரு கருப்பாடு திரும்பிப் பார்த்து “மே. மே. “ என்றது.
“அது என்னை விசாரிக்குது.”
பெரியவர்.”சும்மா இர்றா. என்னடா ஆச்சுது.?.”
“அச்சுட்டாங்க.”
“அதான்டா. என்ன ஆச்சுது.?”
““கஞ்சித்தண்ணி இல்லன்னுட்டாங்க. ஆட்டை பத்திட்டு போமாட்டேன்னு சொல்லிட்டேன். அந்த தடியன் இருக்கான் பாரு . “
“யாரு. அவம் மகனா.?”
“இல்ல. எப்பப் பாரு திண்ணைல உக்காந்திட்டு தின்னுக்கிட்டு இருப்பானே. அந்த பெரிசு நாய்.”
“ஓ. துண்டுக்காரா.?”
“ஆமாமா. ஓடிவந்து என்னைய புடிச்சு கீழ தள்ளி மூக்கு மேல குத்திட்டான். என் சட்டைய கிழிச்சு .” உதடுகளை கோணிக்கொண்டான். இன்னொரு ஆடு பக்கத்தில் வந்தது. அருணா அவன் கால்களை தடவினாள். “தாத்தா. அவனுங்கள விடாத தாத்தா. போய் சண்டப் போடு தாத்தா. “
“அப்புடி செய்ய முடியாது. “ தாத்தா அவனை கீழே கிடத்தினார். சட்டையை நனைத்து அவன் மூக்கைத் துடைத்தார். இவன் கண்களைத் திறந்து வேறு பக்கம் திரும்பிக்கொண்டான். சலிப்பாக இருந்தது. களைப்பாக இருந்தது. “பெருசு. ஏதாவது வச்சிருக்கியா.?” என்றவன் அருகிலிருந்த ஆட்டை “ஏ. போ. “ என்றான்.
அருணா .”களியும் வெண்டக்கா கொழம்பும். தாத்தா . எடு. எடு.”
“வேணாம் . எனக்கு கஞ்சித் தண்ணி வேணும்.”
பெருசு “கஞ்சிக்கு செத்த பயம்மா இவன்.”
“தாத்தா. எல்லாத்தையும் குச்சுட்டியா.?”
“கொஞ்சமா இருக்கும். எடும்மா அந்த பாட்டலை. “ அடியில் கொஞ்சம் கம்பங்கஞ்சி இருந்தது. சரிவாக சரிந்து உறிஞ்சுக் குடிக்கும்போது. “எங்கப்பா இருந்தா. ம். அவனுங்கள. “ என்று உறுமினான்.
அருணா அழுதாள். அவன் அவளை முழுமையாகப் பார்த்து “ஏய். அழாத. அழாத. ஆனாப் பெருசு. அங்க இருக்கனுவங்கெல்லாம் வேடிக்க பாத்தானுங்க பெருசு. எனக்கு அதெல்லாம் கூட இல்ல. எவனோ ஒருத்தன் எங்கம்மாவ தப்பாப் பேசினான் பெருசு. கத்தி எடுத்து ஒரு கீறு கீறனும்னு தோணுச்சு. “
பெரியவர்.” அடக்கி வாசி. அவனுங்கெல்லாம் சரியில்லை. நம்மள மாதிரி சொந்தமா ஆடு வளக்கறதுக்கு பாரு. “
“எங்க போறது சொந்த ஆட்டுக்கு.?”
அருணா. “தாத்தா. ரண்டு ஆட்டைக் கொடுத்துடு. “
“கொடுத்துடலாம். ஒரு குட்டிய தர்றேன். பத்திட்டு வளக்கறதுக்குப் பாரு. பொட்டக் குட்டி.வளந்து குட்டிப் போடும்போது எனக்கு ஒன்ன திருப்பித் தந்துடு.”
பக்கத்தில் ஆளரவம் கேட்டது. பக்கோடாவின் கூட்டாளி தலைக்கு உருமா கட்டிக்கொண்டு அகலக் கால் வைத்து வந்தான். முகத்தில் இறுக்கமாக கிட்ட வந்ததும் “பஞ்சாயத்துக்கு வரச்சொல்றாங்க. உங்கம்மாவை பஞ்சாயத்துல நிக்க வச்சுட்டாங்க. வாடா போலாம். “
0000
சுமார் பத்து நபர்கள் இருந்தார்கள்… இரண்டு. மூன்று பெண்கள். எதிர்க் கடையில் பத்து. பதினைந்து நபர்கள். பக்கோடாவின் அம்மா ஒரு ஓரமாக தனியாக குந்தியிருந்தாள். ஒரு மூலையிலிருந்த தென்னை மரத்திலிருந்து குயில் கத்தியது. பக்கோடா வேகவேகமாக வந்தவன் அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்துக் கொண்டான்.
துண்டுக்காரர் “பய நம்ம புள்ளதான். இன்னிக்கு என்னவோ புத்தி சரியில்ல. “ என்று சிரித்தார்.
“தூக்கிப் போட்டு மிதிச்சா சரியாப்போடும்.” என்றான் ஒருத்தன். இரண்டுப் பெரியவர்கள் “ஏண்டா. வேல செய்யற எடத்துல இப்படியா நடந்துக்கவ.;?”
இவன் அம்மா.”எம் பையன உட்டுருங்க. அறியாத புள்ள.”
“தடிமாடு மாதிரி இருந்துக்கிட்டு.”
“இருந்துட்டுப் போகட்டும். கஞ்சிதானே கேட்டான். அதுக்கு இப்படியா.?”
“அப்படித்தான். ஏ. இங்கப்பாரு. எனக்கு இவன் இல்லன்னா வேற ஒருத்தன். எப்படி பங்கஜம்.?” என்றது துண்டு.
“உக்கும். “ என்றாள் ஒருத்தி.
ஒரு பெருசு. “ஏம்பா. நம்ம பையப்பா. அப்பா. இல்லாதவன். வுட்டுடுங்க. இனிமேல இந்த மாதிரி செய்யாத தம்பி. “
“கஞ்சியாலதானே இந்தப் பிரச்சினை. ஒரு வருஷமா இருக்கான். ஏதாவது எடக்கு மடக்கு நடந்திருக்குதா.?”
துண்டு “அட. வாரத்துக்கு ஒரு நாளு இப்புடித்தான் நடக்கும். பயபுள்ளய சமாளிச்சு அனுப்புவோம். இன்னிக்கு ஆட்டைய பத்திட்டு போகமாட்டேன்னு போயே போயிட்டான்.
“என்னடா சொல்ற.?” என்றது ஒரு பெரிசு.
வம்சி இடையில் புகுந்தார். “ஆடு பத்திட்டு போகாதது தப்புதான். அவனுக்கு கஞ்சி கொடுக்காததும் தப்புதான். இன்னிக்கு ஆயிருச்சு. நாளையிலிருந்து இந்த மாதிரி வேணாம். என்னடா சொல்ற ?”
அருணா தாத்தாவின் மடியில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு கூனிக்குறுகி உட்கார்ந்திருந்த பக்கோடாவின் அம்மாவைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. மெலிந்து. கண்கள் உள்வாங்கி. ஒரு பக்கம் புடவை கிழிந்திருந்தது. தரையில் கோடு போட்டுக்கொண்டிருந்தாள். இடுப்பில் வெத்தலைப் பை. தலைமுடி கலைந்து வெள்ளை முடிகள் காற்றில் ஆடியது. கைகளில் தளர்ச்சி தெரிந்து சுருக்கங்களை கோடுகளாக காட்டியது
டீக்கடையிலிருந்து ஒருத்தன் கத்தினான். “அவன் ஆடுங்களைப் பத்தலைன்னா அவங்கம்மா இனிமே பத்திட்டுப் போட்டும். “
துண்டு “ஆமாமா. “ என்று பல்லைக் காட்டியது.
பக்கோடா திரும்ப குரல் விட்டான்.”ஏன். உங்கம்மாவை அனுப்பு ஆடுங்களை பத்தறதுக்கு. “
“என்னடா சொன்ன. ?” கடையிலிருந்து இரண்டுப் பேர் ஓடி வந்தார்கள். வம்சி சட்டென்று எழுந்து “ஏம்பா. இருங்க. இருங்க.”
அருணா பயந்துப்போய் தாத்தாவைக் கட்டிக்கொள்ள துண்டு “என்ன தைரியம் இருந்தா அவங்கம்மாவைப் பத்திப் பேசுவ.?.”
“அப்புடின்னா உங்கம்மாவை அனுப்பு.” ஓடிவந்த இரண்டுப் பேரில் ஒருத்தன் நேராக பக்கோடா மீது விழப்போய் சரிந்து வேறுப் பக்கம் முட்டிக்கொண்டான்… பக்கோடா அம்மா.”டேய். ஓடிர்றா. ஓடிர்றா. “என்று அவனை அனைத்துக்கொள்ள அவன் திமிறி விடுபட்டு இன்னொருத்தனின் கால்களைப் பார்த்து உதைத்தான்.
துண்டுக்காரர் தன்னுடைய பெரிய மகனிடம் “போய் சாத்துடா அவன. உங்கம்மாவ பத்திப் பேசறான். வெக்கமில்லாம பாத்துக்கிட்டு.”
பக்கோடா அம்மாவைத் தள்ளிக்கொண்டு “தாத்தா. கூட்டிக்கிட்டு போங்க எங்கம்மாவ.” என்றவன் சட்டைக்குள்ளிருந்து கத்தியை உருவினான். நீளமாக கருத்துப்போய் கூர் நீட்டிக்கொண்டிருந்தது. “வாங்கடா. ஆம்பளையா இருந்தா வாங்கடா டேய்.ய்.”
அருணாவுக்கு சிரிப்பு வந்தது. கிட்டே நெருங்கியவர்கள் தயங்க. பக்கோடாவின் கூட்டாளி இன்னும் இரண்டு பேருடன் வந்தான். “கிட்ட வந்தாங்கன்னா தலய சீவிடு பக்கோடா. “
அருணா கலகலவென்று சிரித்தாள். கத்தியை ஓங்கி தனியே அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு “வாங்கடா. “ என்றவனை பார்த்து தரையில் குதித்து ஆடினாள். வம்சி அவளைத் தூக்கிக்கொண்டு “சும்மாரு. சும்மாரு. ஏம்மா. வா இப்படி.” பக்கோடாவின் அம்மாவை தள்ளிக்கொண்டு வெளியேறினார். அவள் “எம் பையன் அவங்க அப்பா மாதிரியே. ஊரே பயந்துச்சுள்ள. “
பக்கோடா கத்தியை இறக்கவில்லை. துண்டு “டேய். புடிங்கடா அவன.”
பக்கோடா சுற்றிலும் திரும்பி “வாங்கடா. வாங்கடா. “
“எம்மாந் தைரியம்.”
“வாங்கடா டேய். இன்னிக்கு வெட்டிட்டுதாண்டா போகப்போறேன்.”
அருணா திரும்பிப் பார்த்தாள். கிட்டே வந்த ஒருத்தனின் இடதுக் கையை பார்த்து பக்கோடாவின் கத்தி இறங்கியது தெரிந்தது.
0000
வெயில் நெற்றியில் வியர்வையை வரவழைத்தது. புங்க மரத்தின் இலைகள் ஆடாமல் வெறுமனே இருந்தது. நிழல் சற்றுத் தள்ளி ஒரு சரிவாக விழுந்திருக்க நான்கைந்து ஆடுகள் திடீரென்று ஒன்றுக்கொன்று முட்டிக்கொண்டது. அந்த மலையின் சரிவில் பச்சைப்புற்களுக்கு நடுவே ஆடுகளின் தலைகள் தென்பட்டது. ஒற்றையாக அங்கங்கே பனை மரங்கள். உச்சியில் இருந்த கோயிலின் வெளிப்புறம் ஒரு மாடு கத்தியது. அருணா தாத்தாவின் மடியில் படுத்துக்கொண்டு கற்களை உருட்டிக்கொண்டிருந்தாள்.
“தாத்தா. அண்ணா எப்ப வரும்.?”
வம்சி வெறுமையாக அருகிலிருந்த ஆட்டின் கால்களைப் பார்த்தவாறு.”வந்திடுவான். “
“மூணு நாள் ஆச்சுது தாத்தா.”
“அவன் ஒருத்தன வெட்டிட்டான் இல்லையா. போலிஸ் தேடுது. எங்கையோ ஓடிட்டான். “
“பாவம் அவன். “
“அவங்கம்மா கூடத்தான். “
“தாத்தா. அண்ணா வந்திருமா. ?”
“வருவான். ஆனா போலிஸ் வுடாது. அவனய பத்தி இனிமே பேசாத பாப்பா. அவன் சரியில்லை. கத்திய தூக்கிட்டான். அப்படி செஞ்சிருக்கக் கூடாது. “
அருணா சிரித்தாள். “தாத்தா. அண்ணனுக்கு தைரியம் அதிகம்,, எம்புட்டு தைரியம். கூட்டமே அப்படியே பயந்துருச்சு. ஒருத்தன் வெளிய ஓடிட்டான். பாத்தியா தாத்தா. பயம். யாரைத் தாத்தா அண்ணன் வெட்டினது.?”
“அந்த துண்டுக்காரர் பையனை. வுடமாட்டாங்க. பெரிய எடம் அது. ஆனா காயத்தோட போயிடுச்சு. இல்லன்னா கொல கேஸாயிருக்கும். நீ எழுந்திரு. வெயில் அதிகமாயிருக்குது. தள்ளி உக்காருவோம். “
ஆடுகள் சட்டென்று ஒரு பக்கமாக தலையை திருப்பியது. இரண்டு ஆடுகள் ஒரு மாதிரி கனைத்தது. ஒரு பக்கமாக வேல மரங்கள் அடர்ந்த காட்டு வழியாக ஒன்று நடந்துப் போய் நின்று எங்கேயோ பார்த்தது. கூடவே இன்னும் இரண்டு ஆடுகள் சேர்ந்தது. வம்சி அவளை சற்று தள்ளி ஒரு கோணியின் மீது படுக்கவைத்துவிட்டு “வர்றேன். இரு. “ என்று நகர்ந்தார். வேல மரங்களை ஒட்டி ஏரி. தண்ணீர் இல்லை. ஆனால் அடர்ந்து வேல மரங்களின் இலையுதிர்வில் இடுக்குகளாக காட்சியளித்தது. நடுநடுவே ஆங்காங்கே தென்பட்ட வெறுமையில் மாடுகள் நின்றுக்கொண்டிருந்தன. குட்டையும் நெட்டையுமான மரங்களுக்கு நடுவே ஒற்றையடிப் பாதைகள் பிரிவதும் சேர்வதுமாக இருந்தது. ஆடுகள் நிமிர்ந்துப் பார்ப்பதைத் தவிர்த்து மறுபடியும் மேய ஆரம்பித்தது. தூரத்தே கைகளில் குச்சிகளோடு ஒன்றிரண்டு நபர்கள் தெரிந்தார்கள். உச்சியில் அந்த கோவிலருகே யாறோ வந்துப் போன மாதிரி தோன்றியது. உற்றுப் பார்த்தார். அவர் பார்க்கும்போதே அவருடன் இருந்த இரண்டு ஆடுகளும் அவ்வாறேப் பார்த்தது. அங்கிருந்து சற்றுத் தள்ளி ஒன்றிரண்டு மாடுகள் இருந்தன. கோவிலின் அருகே சிறியதாக தெரிந்த வேப்பமரத்தின் உச்சியில் இலைகள் ஆடுவது தெரிந்தது.
அவர் நகர்ந்து அருணாவிடம் வந்தார். அவள் “என்னத் தாத்தா.?” என்றாள்.
அவன் இங்கதான் காட்டுக்குள்ளதான் இருக்கான் போல. எமகாதகப் பய.” என்றார்.
“அண்ணனா.?”
“ஆமா.”
“இருக்காது தாத்தா. அண்ணன் எங்கோ போய்டுச்சி. பாவம். சாப்பாட்டுக்கெல்லாம் என்ன செய்யுதோ. “
“வூட்டுக்கு போனப் பெறகு அவங்கம்மாவ போய் பாத்துடலாம். கொஞ்சம் கம்பும்.சோளமும் கொடுத்துட்டு வரலாம்.. “
“சரி தாத்தா. “
“இரு. என்னவோ சத்தம் கேக்குது. “ எழுந்து சற்று நடந்து ஒரு பனைமரத்தின் பின்னாடிப் போனார். உதட்டில் ஒரு புன்னகை தோன்றியது. திரும்ப வந்து “அந்த கோணிய கொடு. அப்படியே தண்ணியும்.”
“என்னத் தாத்தா.?”
“குட்டிப் போட்டிருக்குது. ரண்டு கெண்டி. ஒன்னு பொட்ட. “
“பொட்ட குட்டியா.?”
“ஆமா. பொட்ட.”
“அய். பொட்டக்குட்டி. பொட்டக்குட்டி…அண்ணனுக்கு அது.” அருணா தாத்தாவின் கால்களை கட்டிக்கொண்டு சிரித்தாள். சற்று தூரத்திலிருந்து அந்த குட்டிகளின் கலவையான “மே…. மே. மே… “ சத்தம் கேட்டது.
0000