உன்னைக் கட்டிக் கொண்டு வாழ்வதற்கான காரணங்கள் சொல்லக் கூடியவையல்ல

எஸ். சுரேஷ்

 

ஐந்தடி பத்து அங்குல உயரம், ஸ்வரவ்ஸ்கி கிரிஸ்டல்ஸ் பதித்த நீல நிற பட்டுச் சேலை. நேர்கொண்ட பார்வையும் நிமிர்ந்த நன்னடையுமாய் தங்களை நோக்கி வந்த வர்ஷாவை விருந்தினர்கள் மேல் பன்னீர் தெளிக்க அமர்த்தப்பட்ட மூன்று பெண்களும், வாயில் காவலனும், மாளிகையை அலங்கரித்துக் கொண்டிருந்தவர்களும் வாய் திறந்து இமை மூடாமல் பார்த்தார்கள். இவர்கள் யாரையும் கவனிக்காமல் அரவிந்துடன் ஹாலுக்குள் நுழைந்தாள் வர்ஷா. ஹாலின் மறுபுறத்தில் உள்ள கதவை காட்டி,“அந்த கதவ திறந்தா வேற லோகம். அங்கதான் அம்மாவும் இருக்கா”, என்று சொல்லிவிட்டு அரவிந்த் வேறு யாரையோ வரவேற்க சென்றுவிட்டான்.

ஐநூறு பேர் தாராளமாகக் கொள்ளும் ஹால் அலங்கரிக்கப்டுவதை பார்த்தபடியே மறுபக்கம் சென்றுக் கொண்டிருந்த வர்ஷா தன் பெயரை யாரோ கூப்பிடுவதை கேட்டு திரும்பி பார்த்தாள். அன்னபூர்ணா ஆண்ட்டி வேகமாக அருகில் வந்தது வர்ஷாவை அணைத்துக்கொண்டு, “எவ்வளவு நாள் ஆயிற்று உன்னை பார்த்து. எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள். “நீ இவ்வளவு இறுக்கமாக கட்டிக்கொண்டால் அவள் புடவை கசங்கிவிட போகிறது. கொஞ்சியது போதும். அவளை விடு”, என்று கூறிக்கொண்டு ராவ் அங்கிள் அருகில் வந்தார்.

“உன் புடவை அருமையா இருக்கு. இனிக்கி நீ ரொம்ப அழகா இருக்க. தலைல ஒரு முழம் மல்லிப்பூ வச்சிருந்தா அப்படியே மஹாலக்ஷ்மி மாதிரி இருப்ப”, என்றாள் அன்னபூர்ணா ஆண்ட்டி.

“அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன்”, என்றார் ராவ்

“அழகா இருப்பது எப்பவுமே ஃபேஷன்தான்”, என்றாள் அன்னபூர்ணா ஆண்ட்டி

“யெஸ்” என்ற வர்ஷா அன்னபூர்ணா ஆண்ட்டிக்கு ஹை ஃபைவ் கொடுத்தாள்.

வர்ஷாவுக்கு இந்த தம்பதியை பார்த்தபோதெல்லாம் அவள் பால்ய நினைவுகள் மேலோங்கி வந்தது. அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்ததும், வர்ஷாவை தங்கள் குழந்தை போலவே பார்த்துக்கொண்டதும் மனக்கண் முன் தோன்றின. அவர்கள் இன்னும் தன் மேல் அதே அளவு பாசம் வைத்திருப்பதை கண்டு வர்ஷா நெகிழ்ந்தாள். எப்பொழுதும் போல், “இவர்களுக்கு நிஷா எப்படி மகளாக பிறந்தாள்?” என்றால் கேள்வி மனதுக்குள் எழுந்தது.

வர்ஷா கார்டனுக்கு செல்லும் கதவை திறந்தவுடன் ராட்சச ஸ்பீக்கரிலிருந்து அவள் காதுகளை செவிடாக்கும் அளவுக்கு ஒலி கேட்க முகம் சுளித்தாள்.

வர்ஷாவின் கண்ணுக்கு முன் பரந்திருந்த புல்வெளியில் நான்கு வடநாட்டு ஆண்கள் அங்கு கூடியிருந்த பெண்களுக்கு மருதாணி இட்டுக்கொண்டிருப்பதை கண்டாள். வர்ஷாவின் மகள் ஓடி வந்து தன் கைகளை காட்டி, “இந்த பேட்டர்ன் நல்லா இருக்கு இல்ல?” என்று கேட்டாள். “ரொம்ப நல்லா இருக்கு”, என்று சொன்னவுடன் அங்கிருந்து ஓடி அவள் நண்பர்கள் கூட்டத்தில் மறைந்தாள். நாலாபுறமும் பிரகாஷை தேடிய வர்ஷாவின் கண்களுக்கு தூரத்தில் ஒரு செயற்கை அருவியும், மரங்களிலிருந்து வழியும் சீரியல் பல்புகளும், சிறு குளமும் அதில் இரு வாத்துகளும்தான் தென்பட்டன. “வர்ஷா” என்று மறுபடியும் ஒரு குரல் கேட்டது. பிரதீபாவின் குரல். பிரதீபா மணமகளின் தாய். வர்ஷாவுடைய இளவயது தோழி. வர்ஷாவின் இரண்டு ரகமான தோழிகளில் பிரதீபா முதல் ரகத்தை சேர்ந்தவள். வர்ஷாவின் வெற்றிகளை தன் வெற்றியாய் நினைத்து அவளுக்கு தோழியாக இருப்பதை பெருமையாக நினைப்பவள். இன்னொரு ரகம் வர்ஷா எட்டிய உயரங்களை கண்டு பொறாமைப்பட்டவர்கள். அந்த சங்கத்துக்கு நிஷா நியமிக்கப்படாத தலைவியாக இயங்கினாள்.

வர்ஷாவைப் பார்த்தவுடன் பிரதீபா கூறிய முதல் வாக்கியம், “பிரகாஷ் ஒரு மணி நேரமா குடிக்கிறான். எப்பவும் போல நிஷா என்கரேஜ் செய்யறா”. அதற்கு பிறகு தான், “வாவ். புடவை சூப்பர். உன் செலெக்ஷன் எப்பவுமே சூப்பர்தான்” என்று சொன்னாள். பிரகாஷ் எங்கிருக்கிறான் என்று வர்ஷா கேட்பதற்குமுன், பிரதீபாவின் தந்தை வர்ஷாவை கைகாட்டி அழைத்தார்.

வர்ஷா அவர் அருகில் உட்கார்ந்தவுடன், “என்னம்மா வர்ஷா. நீயும் டான்ஸ் ஆடப் போறியா?” என்று கேட்டார்.

பாட்டுச் சத்தம் காதைப்  பிளந்து கொண்டிருந்ததால் அவர் உரக்க பேச வேண்டியிருந்தது. அப்படியிருந்தும் வர்ஷாவுக்கு அவர் பேசியது காதில் சரியாக விழவில்லை. அவர் மறுபடியும் அதே கேள்வியை இன்னும் உரக்க கேட்டார்.

“வை நாட்?” என்றார் பிரதீபாவின் தாயார். “காலூரியில் டான்ஸ் போட்டியென்றால் அதில் வர்ஷாதான் ஜெயிப்பாள் என்று பிரதீபா கூறியிருக்கிறாள்.”

“அப்படியென்றால் சரி. இப்பொழுதெல்லாம் டான்ஸ் தெரியவில்லை என்றால் கல்யாண சத்திரத்துக்குள் விடுவதில்லை தெரியுமா?”.

“அப்பா டோன்ட் எக்ஸாஜிரேட்”, என்ற பிரதீபா, “இவர் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார். அதுதான் அவர் வேலை. நாம போகலாம் வா”, என்று கூறிவிட்டு வர்ஷாவை அழைத்துக்கொண்டு நூறு மீட்டர் தூரத்தில் இருந்த கண்ணாடி மாளிகையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வளைந்து நெளிந்து சென்ற பாதையின் வலதுபுறத்தில் வண்ண ரோஜாக்கள் பூத்து குலுங்கின.. இடது பக்கம் டிஸ்க் ஜாக்கி ஒருவன் சி‌டிகளை மாற்ற, இளம் பெண் ஒருத்தி மைகில் “பீப்பிள் லெட் மீ சீ சம் எனர்ஜி” என்று கத்த, கூடியிருந்த இளைஞர் கூட்டம் புயலில் சிக்கிய தென்னை மரம்போல் தலையை வேகமாக ஆட்ட, மருதாணி காயாத கைகளை வான் நோக்கி வைத்துக்கொண்டு நடனமாடும் பெண்களை கடந்து வர்ஷாவும் பிரதீபாவும் நடந்தனர்.

“நிஷாவுக்கு உன் மேல இன்னும் அந்த கோவமும் பொறாமையும் போகவே இல்ல. பிரசாத் உன்ன கல்யாணம் செஞ்சதுலேர்ந்து அவ இப்படி ஆயிட்டா. அப்ப கோவப்பட்டா போறாமப்பட்டா சரி. இப்போதான் அவளுக்கு எல்லாம் இருக்கே. இன்னும் ஏன் இந்த கோவமும் பொறாமையும்?” என்று பிரதீபா கேட்டாள்.

“சில பேர மாத்த முடியாது. அவளுக்கு பிரசாத் மேல கோவம் இல்ல. அவளுக்கு கல்யாணம் ஆன பிறகு பிரகாஷை காதலிப்பது விட்டுட்டா. ஆனா ஏனோ தெரியல. அவளுக்கு ஏன் மேல கோவமே தீரல”

“நீ நாக்க புடுங்கிக்கிற மாதிரி நாலு வார்த்தை அவக்கிட்ட பேசணும். நீ இன்னும் ஸ்கூல் பிரண்ட் மாதிரியே அவள நடத்திட்டிருக்க.” இருவரும் மௌனமாக நான்கு அடிகள் எடுத்து வைத்த பின்னர் பிரதீபா வர்ஷாவை கேட்டாள், “ஏன்டீ, அந்த ஆள இன்னும் ஏன் டிவோர்ஸ் பண்ணாம இருக்க. எவ்வளவு நாளு தான் அவன் தொல்லைய தாங்கிண்டிருப்ப? அவன் வேலைக்குப் போயி இப்போ என்ன பத்து வருஷம் ஆச்சா? அதுக்கு மேல குடிக்காம ஒரு நாளும் அவனால இருக்க முடியாது. பின்ன எதுக்கு அவன கட்டிண்டு அழற” பிரதீபா இதை  ஐம்பதாவது முறை கேட்கிறாள். எப்பொழுதும் போல் வர்ஷா, “பாக்கலாம், பாக்கலாம்” என்றாள்.

ஏதோ பேச ஆரம்பித்த பிரதீபா எதிரில் வந்தவரை நிறுத்தி“இது அமெரிக்காவில் இருக்கும் என் மாமா”, என்று வர்ஷாவுக்கு அறிமுகப்படுத்தினாள். “இவள் என்னுடைய நெருங்கிய தோழி, வர்ஷா. இவள் ஐ‌பி‌எம் இந்தியாவின் தலைமை அதிகாரி. இந்தியாவின் டாப் டென் பவர்ஃபுல் பெண்களில் எட்டாவது இடத்தை பிடித்தவள்.” “ஓ ஐ ஸீ”, என்றாள் வர்ஷா

வர்ஷா ஐ‌பி‌எம் இல் தலமை அதிகாரி என்று கேட்டவுடம் அவர் முகம் மாறியது. இவள் அவர் பதவியை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்ற அவர் தவிப்பு வர்ஷாவுக்கு புரிந்தது. வர்ஷா எதுவும் கேட்பதற்கு முன்னால், “கிவ் மீ எ மினிட்”, என்று சொல்லிவிடு அங்கிருந்து நகர்ந்தார்.

பிரதீபா கேட்ட கேள்வியை வர்ஷா அசை போட்டுக் கொண்டிருந்தாள். தான் ஏன் விவாகரத்து வாங்கவில்லை என்று வர்ஷாவுக்கே விளங்கவில்லை. தனக்கு போட்டியாக வந்த பல ஆண்களை இடது கையால் புறம் தள்ளிவிட்டு முன்னேறிய என்னால் பிரகாஷை ஏன் என் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறிய முடியவில்லை? எல்லா பக்கமும் வைக்கப்பட்டிருந்த ராட்சச லைட் பல்புகளின் ஒளியில் நாலு பக்கமும் தங்கள் நிழல் கூட வ \ர, மௌனமாக கண்ணாடி மாளிகைக்குள் வர்ஷாவும் பிரதீபாவும் நுழைந்தார்கள். நுழைந்தவுடன்  நிஷாவை பார்த்தார்கள். நிஷா அவர்களை பார்த்துவிட்டு கையாட்டினாள். கையில் வைத்திருந்த கோப்பையை உயர்த்தி, “டெகீலா” என்றாள் நிஷா. “உனக்கும் ஒரு கோப்பை சொல்லவா?”

“நீங்க நடத்துங்க. எனக்கு வேலை இருக்கு”, என்று சொல்லிவிட்டு பிரதீபா அவர்களிடம் விடை பெற்றாள்.

“உனக்கு என்ன லைம் ஜூஸ் தானா?” என்று வர்ஷாவை கேட்டாள் நிஷா

“ஆம்”, என்று சொன்னவுடம் அங்குள்ள ஒரு சர்வரிடம் “ஒரு லைம் ஜூஸ் கொண்டு வா”, என்று நிஷா ஆணையிட்டாள்.

வர்ஷாவின் கண்கள் பிரகாஷை தேடின. “பிரகாஷ் அங்க இருக்கான் பார்”, என்று வலது மூலையை காட்டினாள் நிஷா.

அந்த மூலையில் பார் இருந்தது. மேஜைகளின் மேல் வைன், விஸ்கி, ஸ்காட்ச், ரம், வொட்கா, டெகிலா, ஜின் என்று பலத்தரப்பட்ட உயர்ரக மதுபானங்களும், அதை பருகுவதற்கு பல வடிவங்களில் கண்ணாடி கோப்பைகளும், அதன் அருகில் ஐஸ் க்யூப், சோடா மற்றும் ஸ்ப்ரைட் புட்டிகளும் இருந்தன. கொறிப்பதற்காக வறுத்த வேர்க்கடலையும், முந்திரியும் வைக்கப்பட்டிருந்தன. மேஜைக்கு அருகில் கையில் ஒரு கோப்பையுடம் பிரகாஷ் நின்று கொண்டிருந்தான்.

“நான் பிரகாஷுக்காக இங்கு வரவில்லை”, என்றாள் வர்ஷா.

அதை கேட்காதவள் போல் நிஷா சொன்னாள், “அவன் குடிக்க ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆகிவிட்டது”. அவள் உதடுகளில் ஒரு வெற்றிப் புன்னகை இருந்தது.

வர்ஷா பல்லைக் கடித்துக்கொண்டு மௌனமாக இருந்தாள். பிரகாஷை இந்த கல்யாணத்துக்கு வரவேண்டாம் என்று வர்ஷா சொல்லியிருந்தாள். முதலில் சரி என்று சொன்னவன், நிஷாவின் பேச்சை கேட்டு தன் முடிவை மாற்றிக்கொண்டு வர்ஷா வருவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே இங்கு வந்துவிட்டான்.

“ஒன்று சொல்ல வேண்டும் வர்ஷா. இது போன்ற இடங்களில்தான் பிரகாஷ் மகிழ்ச்சியாக இருக்கிறான். நான் அவனை எப்பொழுது வீட்டில் பார்த்தாலும் டல்லாக இருப்பான். இங்கயாவது அவனை கொஞ்சம் சந்தோஷமாக இருக்க விடு”, என்று கூறிவிட்டு வர்ஷாவின் பதிலுக்கு  காத்திருக்காமல், “நான் இன்னொரு ரவுண்ட் டெகிலா கொண்டு வரேன்”, என்று சொல்லிவீடு அங்கிருந்து நகர்ந்தாள்.

எப்பொழுதும் போல் நிஷாவின் பேச்சு வர்ஷாவை ஆத்திரப்பட வைத்தது. ஆனால் அவளால் நிஷாவை நோக்கி கடும் சொற்கள் வீச முடியவில்லை. கோபத்தில் இருந்த அவள் தோளை யாரோ தட்ட வர்ஷா திரும்பி பார்த்தாள். பிரதீபாவின் கணவன் ராஜேஷ் வர்ஷாவை பார்த்து புன்னகைத்தான். “வெல்கம் வர்ஷா. ஏற்பாடுகள் எப்படி இருக்கு” என்று உரக்க கேட்டான். வெளியில் யாரோ வால்யூம் அதிகமாக்கியிருந்தார்கள். உள்ளே இருப்பவர்கள் பேசுவது கண்ணாடி சுவர்களில் முட்டி எதிரொலித்து வெளியிலிருந்த வந்த ஒலியுடன் கலந்தது. அந்த கண்ணாடி அறை சப்தங்களால் நிறைந்திருந்தது.

“எல்லாமே நல்லா இருக்கு ராஜேஷ். நான் இந்த ரிசார்ட்டுக்கு இதுவரை வந்ததில்ல. நல்ல எடமா இருக்கு”, என்றாள் வர்ஷா

“ஒன் ஆஃப் தி பெஸ்ட். பெங்களூர்ல இதவிட நல்ல ரிசார்ட் உனக்கு கிடைக்காது. சரி, நான் சென்று எல்லாவற்றையும் கவனிக்கிறேன்”, என்று சொல்லி அங்கிருந்து நகர்ச் சென்றவன் வர்ஷவிடன், “பிரகாஷ் மேல ஒரு கண்ணை வைத்திரு. அவனை அதிகம் குடிக்க நிஷா தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

கோப்பையுடன் வந்த நிஷா, “வா. அங்கே போகலாம்” என்று பிரகாஷ் இருந்த இடத்தை காட்டினாள். வேண்டாவெறுப்பாக வர்ஷா நிஷாவுடன் நடக்க ஆரம்பித்தாள்.

வர்ஷா வருவதை பார்த்ததும் பிரகாஷுடன் உரையாடிக்கொண்டிருந்த அனைவரும் மௌனமானார்கள். வர்ஷாவை பார்த்தவுடன் தன் கணவன் ரகு பேச்சை நிறுத்தியதை பார்த்து நிஷாவுக்கு கோபம் வந்தது. அங்கு கூடியிருந்த எல்லோரும் ஐ‌டி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள். இவர்கள் எல்லோரைவிடவும் வர்ஷா உயர்த்த பதவியில் இருந்ததால் அவளை கண்டவுடன் பேசுவதை நிறுத்திவிடுகிறார்கள்.

வர்ஷாவின் பார்வை தன் கையிலிருந்த கோப்பை மேல் சென்றவுடன், பிரகாஷ் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டே, “இப்போதான் ஆரம்பித்தேன்” என்றான். பிரகாஷ் ஆறடி அழகன். எல்லோரும் சிரிக்கும்படி பேசுவான். அதனால் குடிப்பவர்கள் மத்தியில் அவனுக்கு என்றுமே வரவேற்பு இருந்தது. ஆனால் குடி அதிகமாகிவிட்டால் வாட்ஸாப்பில் வந்த கட்டுக்கதைகளை தானே சொல்வது போல் உளறுவான். இன்னும் அதிகம் போதை ஏறிவிட்டால் சண்டை போட தயாராகிவிடுவான். இவன் எப்படி அடி வாங்காமல் வீடு திரும்பியிருக்கிறான் என்று சில சமயங்களில் வர்ஷா ஆச்சரியப்பட்டதுண்டு.

வர்ஷா கஷ்டப்பட்டு தன் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டாள். அவன் இப்பொழுது இரண்டாம் கட்ட போதையில் இருந்தான். யாரும் நம்ப முடியாத கதைகளை சொல்வதை பலர் ஏளனமாக பார்த்தனர். வேறு சிலர் வர்ஷாவை பரிதாபமாக பார்த்தனர். அந்த பார்வையை வர்ஷாவால் தாங்கமுடியவில்லை.. வர்ஷாவின் சங்கடத்தை உணர்ந்த நிஷாவின் உதடுகளில் புன்னகை பூத்திருந்தது.. இன்னும் ஒரு பெக் அடித்தால் பிரகாஷ் சண்டை போட ஆரம்பித்துவிடுவான் என்று உணர்ந்த வர்ஷா. “பிரதீபாவின் பெற்றோர்கள் உன்னை பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்கள். நாம் அவர்களை ஒரு முறை பார்த்துவிட்டு வரலாம் வா”, என்றாள்

“சிறுத்து நேரம் கழித்து செல்லலாம். இப்பொழுதுதான் நான் இங்கு வந்தேன்”, என்றான் பிரகாஷ்

“போய் விட்டு வாங்களேன். வந்து இதை தொடருங்கள்”, என்று பிரகாஷின் பக்கத்தில் நின்றிருந்தவர் கூறினார்.

போதை ஏறியிருந்த பிரகாஷ். “மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்” என்று அவரை பார்த்து கத்தினான். அவன் அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கு முன் பிரதீபவின் கணவன் மைக்கில் பேச ஆரம்பித்தான். “ஜென்டில்மென் அண்ட் லேடீஸ். இப்பொழுது சங்கீத் ஆரம்பிக்கிறது. எல்லோரும் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கீத் முடியும் வரை பார் மூடப்படும். அதற்கு பிறகு மறுபடியும் பார் திறக்கப்படும். எல்லோரும் மெயின் ஹாலுக்கு வருமாறு கேட்டுக்கொள்கிறேன்”

வர்ஷாவுக்கு நின்ற மூச்சு மறுபடியும் வந்தது போல் இருந்தது. “ஷிட்” என்று சொல்லிவிடு பிரகாஷ் கோப்பையில் மிச்சம் இருந்த விஸ்கியை குடித்துவிட்டு கிளம்பினான். எல்லோரும் சங்கீத் நடக்கும் அறைக்குள் நுழைந்தன. வர்ஷா ஹாலை பார்த்து வியப்படைந்தாள். ஒரு மணி நேரம் முன் தான் வர்ஷா இந்த ஹாலை கடந்து சென்றிருக்கிறாள். இப்பொழுது அடையாளம் தெரியாத அளவுக்கு ஹால் பூ மாலைகளால்  அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடையில் இரண்டு பெரிய ஃபோகஸ் விளக்குகள், மேலே நான்கு ஃபோகஸ்விளக்குகள், படம் பிடிப்பதற்காக ஒரு பெரிய கிரேன், அதை இயக்க ஒரு ஆபரேட்டர், எல்லோரும் பார்ப்பதற்காக அறை யெங்கும் பல பெரிய டி‌வி ஸ்கிரீன்கள் மற்றும் ஸ்பீக்கர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள் வர்ஷா.

ஒரு இளம் ஆணும் பெண்ணும் எல்லோரையும் வரவேற்றார்கள். பிறகு சங்கீத் ஆரம்பித்தது. முதலில் மணமகளை பற்றியும் மணமகனை பற்றியும் ஒரு படம் திரையிட்டார்கள். பிறகு நடனங்கள் தொடங்கின. மணமகள் தன் தோழிகளுடனும், மணமகன் தன் தோழர்களுடம் ஒரு மாதமாக டான்ஸ் மாஸ்டர் வைத்து பயின்ற நடனத்தை ஆடினார்கள். பிரதீபாவின் தந்தை சொன்னது போல் எல்லோரும் ஹிந்தி மற்றும் பஞ்சாபி நடனம் தான். ஒவ்வொரு நடனத்தையும் அறையில் கூடியிருந்த இளைஞர்கள் விசில் அடித்தும், உரக்க கூச்சல் போட்டும் கொண்டாடினார்கள். அவர்களின் உற்சாகம் எல்லோருக்கும் தொற்றிக்கொண்டது.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு ஒரு இளைஞன்,  “நாங்கள் நடனமாடி முடித்துவிட்டோம். இப்பொழுது பெரியவர்கள் நடனமாட வேண்டிய தருணம். முதலில் பிரதீபா ஆண்டி மற்றும் ராஜேஷ் அங்கிள் அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்”.  பிரதீபா, “நோ நோ நோ,” என்றாள். எல்லோரும் பலத்த கரகோஷம் செய்து “எஸ் எஸ் எஸ்” என்று கத்தினார்கள். ராஜேஷ் அவள் கையை பிடித்து மேடைக்கு அழைத்து சென்றான். இவர்களுக்கு என்று ‘அந்த அரபி கடலோரம்’ தமிழ் பாடலை போட்டார்கள். பிரதீபாவும் ராஜேஷும் ஓரளவுக்கு நன்றாகவே ஆடி முடித்தவுடன் விசில் சத்தமும் கரகோஷமும் காதை துளைத்தது.

“அடுத்ததாக நிஷா ஆண்ட்டி மாற்று ரகு அங்கிள்”. ரகு உற்சாகமாக காணப்பட்டான். “கமான். கமான்”, என்று கூறிக்கொண்டே நிஷாவின் கையை பிடித்து அழைத்து சென்றான். “இவனுக்கு டான்ஸ் வருமா?”, என்று பிரதீபா வர்ஷாவை கேட்டாள்.  “அவன் போற வேகத்தை பாத்தா பிரபு தேவா லெவலுக்கு ஆடுவான் போல இருக்கு”. என்று வர்ஷா கூற பிரதீபா உரக்க சிரித்துவிட்டாள்

அவர்களுக்கு ஒரு ஹிந்தி பாட்டை போட்டார்கள். ரகு கை கால்களை தன் இஷ்டத்துக்கு ஆட்டுவதை பார்க்க தமாஷாக இருந்தது. பாட்டின் தாளத்துக்கும் அவன் அசைவுகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல். ‘சிப்பிக்குள் முத்து” படத்தில் கமலஹாசன் ஆடுவது போல் ரகு ஆடினான். நிஷா இரண்டு ஸ்டெப் போட்டவுடன் அவளை தன் பக்கம் இழுத்து அவள் ஆடும் நடனத்தையும் கெடுத்தபோது கூடி இருந்த இளைஞர்களுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.  அவன் ஆடி முடித்தவுடன் “ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர்”, என்று எல்லா இளைஞர்களும் கோஷம் போட, உண்மையாகவே தன் நடனத்தை இவர்கள் எல்லாம் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு, “ஓகே” என்று ரகு மறுபடியும் ஆடத் துடங்கினான். கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க, வர்ஷாவும் பிரதீபாவும் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துவிட, நிஷாவின். முகத்திலிருந்து கோபக் கனல் பறந்தது. நடனம் முடிந்து அவள் கீழே இறங்கும்போது ரகுவை கொளுத்திவிடுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்.. “நாளைக்கு ரகுவோட நிலைமையை என்னவோ?” என்று முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு பிரதீபா கேட்டாள். வர்ஷா சிரித்துவிட்டு, “நிஷாவின் கோபம் ரகுவுக்கு புதுசு ஒன்றும் இல்லையே” என்றாள். பிரதீபா மறுபடியும் சிரித்தாள்..

“அடுத்தது நான்”, என்று பிரகாஷின் குரல் உரக்க ஒலித்தது. “ஓ . லெட்  அஸ்  கிவ்  இட் டு பிரகாஷ் அங்கிள்”, எல்லோரும் கை தட்டினார்கள். “அங்கே என் மனைவி நிற்கிறாள். அவளையும் மேடைக்கு வரச் சொல்லுங்கள்”, என்று வர்ஷாவை நோக்கி கை காண்பித்தான் . “வி  வாண்ட் வர்ஷா ஆண்ட்டி” என்று எல்லோரும் கத்த விருப்பமில்லாமல் வர்ஷா மேடையை நோக்கி சென்றாள்.

கல்லூரி நாட்களில் வர்ஷாவும் பிரகாஷும் சேர்ந்து பல மேடைகளில் நடனம் ஆடியிருக்கிறார்கள். நடனம் ஆடி பல வருடங்கள் ஆகிவிட்டதால் வர்ஷாவுக்கு பயமாக இருந்தது. அவள் பிரகாஷை பார்த்தாள். அவனுக்கு போதை இறங்கியிருந்தது. பிரகாஷ் மைக்கை பிடித்துக்கொண்டு, “முதலில் நாங்கள் ஒரு மெலடி பாடலுக்கு ஆடப் போகிறோம். அதற்கு பிறகு ஹை எனர்ஜி பாடலுக்கு ஆடுவோம்” என்று அறிவித்தான். ‘சம்மர் வைன்” எனும் பாட்டு ஸ்பீக்கர்களில் ஒலித்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு மெதுவாக நடனம் ஆடினார்கள். இந்த பாட்டிற்கு பல முறை சேர்ந்து ஆடியிருந்த்தால் எந்த பிசிறும் தட்டாமல் நடனம் அருமையாக வந்தது. ஆடி முடித்தவுடன் பலத்த கை தட்டலை பெற்றார்கள்.

அடுத்து ஒரு ஸ்பானிஷ் பாடல் ஒலித்தது. இதற்கும் அவர்கள் பல முறை சேர்ந்து ஆடியிருக்கிறார்கள். இந்த ஸ்பானிஷ் நடனத்தில் பல போஸ்களில் நிற்கவேண்டும். அவர்கள் ஒவ்வொரு போஸ் கொடுக்கும்பொழுதும் எல்லோரும் கை தட்டினார்கள். பாடல் முடியும் தருணத்தில் மேடையின் ஒரு கோடியில் வர்ஷாவும் இன்னொரு கோடியில் பிரகாஷும் நின்று கொண்டிருந்தார்கள். இசை தீவிரமடைய, வர்ஷா ஐந்து முறை தட்டாமலை சுற்றிவிட்டு சரியாக பிரகாஷ் நிற்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள். பிரகாஷ் தன் வலது கரத்தை நீட்டி கொண்டிருந்தான். வர்ஷா தன் இடது கரத்தை அவனிடம் கொடுக்க, அவன் வர்ஷாவை தன் பக்கம் இழுத்துக்கொள்ள, இன்னொரு முறை சுற்றிவிட்டு  அவன் மார்பில் வர்ஷா தன் பின்மண்டையை சாய்த்து கூட்டத்தை பார்த்தாள். தட்டாமாலை சுற்றி வந்ததால் அவளுக்கு தலை சுற்றியது. முகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்துக்கொள்ள ஹால் முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் வர்ஷாவை எரித்துவிடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த நிஷாவின் கண்கள் மட்டும் அசையாமல் ஒரே இடத்தில் நின்றிருந்தன.

 

 

 

One comment

  1. ரசிக்கும்படியான கதை. ஐ.டி. துறையில் பணியாற்றும் தென்னிந்திய இளைஞர்கள், தேவையில்லாமல் வடநாட்டுப் பழக்கவழக்கங்களில் சிக்கிக்கொண்டு , எவ்வாறு பண்பாட்டுச் சீரழிவை உண்டாக்கித் தங்களைப் பாழ்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை விளக்கும் கதை. -இராய செல்லப்பா

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.