கலையரசி
பள்ளிக்கூடம் முடிந்து
வீடு திரும்பும்
குழந்தைப்பருவம்
நினைவுக்கனிகளில்
இன்னமும் சுவைத்திருக்கிறது.
காலம் போட்ட தொரட்டிக்காம்பில்
குறும்புகளைக் கொப்பளித்திருந்தது
கோணப்புளியங்காயின் துவர்ப்பு.
சதைப்பற்றை மென்று துப்பிய
ஒவ்வொரு சீதாப்பழ விதையும்
ஏகாந்தங்களை
மண்ணூன்றி இருந்தது.
நண்பனுக்குத் தெரியாமல்
திருடித்தின்ற நெல்லிக்கனி
அவ்வளவும் கசந்து போனது
அப்பாவியாய்
அவன் தந்த தண்ணீரை
அருந்தியபோது.
தேர்வு நேரங்களில்
புன்னகை துறந்த உதடுகளுக்கு
ஆறுதலாய் முத்தமிட்டிருந்தது
நாவல் பழத்துச் சாயம்.
எளிதாய் ஒடிந்த
வெள்ளரிப்பிஞ்சுகளின் ஓசைகளில்
பிணக்கு நீங்கிய
வெள்ளந்திச் சிரிப்புகள்
எதிரொலித்தன.
உக்கிர வெயிலின் கூர்முனை
உவர்ப்பையும் கார்ப்பையும் தடவி
கீற்றுக்கீற்றாக
மாங்காய்களை நறுக்கித்தந்தது.
படிப்பு முடிந்த காலத்தில்
கனிகளைச் சுவைத்து
வெளியேறிய போது
இலந்தையின் புளிப்பிலும்
இனிப்பிலும்
ஊறிப்போய் இருந்தது
எதிர்காலக் கனவுகள்.
அதன் பின்னர்
எந்தப் பருவமும்
நரம்புக்கிளைகளில்
சுவைக்கவே இல்லை
இன்றுவரை.