அவள் இவள்

ஜெகதீஷ் குமார்

எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி
இரு கட்டை விரல்களாலும்
ஒத்திக் கொண்டிருக்கிறாள் தொடுதிரையை

தவித்துத் திரியும் தங்கமீன்களைப் போல
இவள் விழித்திரையில்
மின்பிம்பங்கள் நடனமாடுகின்றன

மறுமுனைக் குறுஞ்செய்தியும்
இவள் தரும் எதிர்வினையும் இணைந்து
தொடர்க்கண்ணிகளாலான மாலையாகின்றது

விம்மித் தாழும் நெஞ்சுடன்
துண்டிக்க வழி தெரியாது
வளர்த்தபடியே செல்கிறாள்

எப்போதுமே அவள் தோழர்கள் இவளது
உள்ளங்கைக்குள்தான் இருக்கிறார்கள்
அவள் மிகத் தனியாக இருக்கிறாள்

தன்னுள் துள்ளும் குழந்தையை அடக்கி அழுத்தியபடி
இப்போதுதான் விலக்கிற்கு மெல்ல பழகிக் கொண்டிருக்கிறாள்

நச்சரிக்கும் தோழனின் கோரிக்கையை மனம் நாட
உடல் விதிர்ந்து ஒதுங்குகிறது

எமோடிகான்களால் பதிலளிக்கிறாள்
அவன் கேள்விகளால் தளும்பும்
திரையைப் பார்த்தபடி
அமைதி காக்கிறாள்
தன் இறுதிச் செய்தியை அனுப்பிவிட்டு
அணைக்கிறாள்
திரையையும் உள் உறையும் குழந்தையையும்.

 

One comment

  1. அருமையான கவிதை. இணையமே புது நட்புகளை வளர்க்க உதவினாலும் பெண்ணினால் தன் நண்பர்களுடன் ஒட்டி உறவாட இயலவில்லை. நண்பர்களின் கேள்விகளும், எதிர்பார்ப்புகளும்
    அவளை அதிர வைக்கின்றன.
    சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் எதிர்கொள்ளும் உணர்வைக்
    கவிதையில் அழகாகக் கையாண்டுள்ளார் கவிஞர் ஜெகதீஷ்.
    “எட்டு விரல்களையும் படுக்கையாகக் கிடத்தி” என்பது மிக அழகான கற்பனை. “தவித்துத் திரியும் தங்கமீன்கள்” என்று திரையில் வந்து போகும் பிம்பங்களைக் குறிப்பிட்டது மிக நன்று.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.