Author: பதாகை

அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்

அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018

உணவே மருந்து என்றொரு கூற்றுண்டு. உடலை வருத்தாமல் அதை மகிழ்விக்கும் உணவை உண்பவர்களுக்கு வேறு மருந்து தேவையில்லை. உணவின் சாறை மருந்தென பிரித்தெடுத்து, அது தேவையான உடலுக்கு வழங்கப்படுகிறது. வாசிப்பை மனதின் ஒருவகை உணவென்று கூறலாம். தத்துவ வாசிப்பு, மனதைக் கூர்மையாக்கி நுண்ணுணர்வுடன் வாழ உதவுகிறது. தத்துவத்தின் சாறை பிழிந்தெடுத்து புனைவென்னும் இனிப்பைக் கலந்து வைத்திருக்கும் மருந்தாக, இமைக்கணம் நாவல் தத்துவத்தின் செறிவுடனான வாசிப்பை வழங்குகிறது. இதை தீவிரமான மனநிலையுடன் மட்டுமே வாசிக்க முடியும். அவ்வாறு வாசிக்க முடிந்தால், மனதின் அடியாளம் வரை உள்ள நோய்மையை அகற்றவும் கூடும் – விடுதலை, அடையும் ஒன்றல்ல. மாறாக தளைகளற்ற இருப்பே அது..

ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வரிசையில் பதினேழாவது நாவல் இமைக்கணம். பாண்டவர் தரப்பு பாரதப் போருக்கான தயாரிப்புகளில் இருக்கும் நிலையில், கிருஷ்ணன் போரில் நேரடியாக கலந்து கொள்வதில்லை என உறுதியெடுத்திருப்பதால், நைமிஷாரண்யம் என்னும் காட்டில் சென்று தன்னில் ஆழ்ந்திருக்கிறார். திரேதாயுகத்தில், ராமாவதாரத்தின் இறுதியில், யமன் அடைந்த அறச்சிக்கலுக்கு விடை காணும் பொருட்டு, காத்திருந்து, துவாபரயுகத்தின் இறுதியில் நைமிஷாரண்யத்தில் இருக்கும் கிருஷ்ணனிடம் யமன் கேட்கும் கேள்விகளும், அவற்றிற்கு கிருஷ்ணனின் பதில்களும், பதில்களை அடைவதற்கு யமன் அடைந்த அனுபங்களுமாக இமைக்கணம் நாவல் புனையப்பட்டுள்ளது.

மனிதர்கள் அடையும் பெருந்துன்பமும், துன்பத்திலிருந்து மீட்சிக்கான வழிகளுமே இதன் களமாகும். உச்சக்கட்ட துன்பத்தில் உழல்வதை வேள்வி என்றும், அதை யாதனாயக்ஞம் என்னும் சொல்லாலும் இமைக்கணம் குறிப்பிடுகிறது. யாதனா என்னும் சொல்லை தொடர்ந்தபோது, பைரவயாதனா (https://youtu.be/rgDQoGx0czY) என்னும் இந்தக் குறிப்பு கிடைத்தது. இக்குறிப்பின்படி, மரணத்திற்கு முந்தைய கணத்தில், கணநேரத்தில் மனிதர்கள் அவர்களுக்கான அனைத்து கொடுந்துன்பங்களையும் மிகமிக வேகமாக அனுபவித்துத் தீர்ப்பது பைரவயாதனா எனப்படுகிறது. இது வாழ்க்கையின் தளைகளிலிருந்து விடுதலை பெற்று மரணிக்கும் வாய்ப்பை மனிதர்களுக்கு வழங்குகிறது. இமைக்கணத்தின் பேசுபொருளும் கிட்டத்தட்ட இதுவேதான். நைமிஷாரண்யத்தில் கிருஷ்ணனை சந்திக்கும் ஆளுமைகள், கணநேரத்தில் தங்கள் நெடுவாழ்க்கையை வாழ்ந்தறிகிறார்கள். அறிவின் விடுதலையோடு மீள்கிறார்கள்.

இந்த நாவல் பன்னிரண்டு பகுதிகளாகக் விரிந்துள்ளது. முதல் பகுதி ‘காலம்’. காலத்தை நாமறியும் காலத்திலிருந்து விலக்கி உள்ளத்தின் காலமாக விரித்தும் சுருக்கியும், தத்துவக்களத்தை உள்வாங்கும் மனநிலையை இப்பகுதி வாசகனுக்குள் ஏற்படுத்துகிறது. தன் செயலில் எழுந்த அறச்சிக்கலை உணர்ந்த யமன், அதைப் போக்கும்பொருட்டு தன் தொழிலை விடுத்து, தவத்தில் மூழ்குகிறார். இதனால் பூமியில் இறப்பு இல்லாமல் போகிறது. இறப்பிலிருந்து விடுபடும் உயிரினங்கள் முதல் கணத்தில் அதைக் கொண்டாடுகின்றன. ஆனால் அவை இறப்பிலிருந்து விடுபடவில்லை, இறப்பு இல்லாமல் போவதால் அங்கு விடுபடுதல் என்பதற்கான கேள்வியே இல்லை என்பதை அறிவதுடன், இருப்பும் இல்லாமல் போய்விடுகின்றன என்பதை, அந்த நேரத்திலும் தன்னுணர்வை இழக்காமல் இருக்கும் தியானிகன் என்ற புழுவும் பிரபாவன் என்ற பறவையும் அறிகின்றன. தியானிகனும் பிரபாவனும் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் தருணத்தில் அவை அடையும் சிக்கல்களும், விளைவாக அவற்றின் செயல்களும், செறிவான தத்துவம் தொன்மம் குறியீடுகள் ஆகியவற்றின் மூலம் விவரித்து, இந்த நாவலுக்கான களத்தை உருவாக்குகிறது. அனைத்து உயிர்களுக்கும் மரணம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதையும், இறப்பினாலேயே இருப்பு அர்த்தம் கொள்கிறது என்பதையும், இறப்புக்கும் இருப்புக்கும் இடையே உள்ள ஊடாட்டங்கள், செயல்கள், இன்ப துன்பங்கள் மூலம் வாசகனுக்கு உணர்த்துகின்றது. தியானிகனும் பிரபாவனும் தமது கூட்டுச் செய்கையால், கிருஷ்ணனின் மூலம் யமன் தன் சந்தேகத்துக்கான விடையை அடைய முடியும் என்பதை நாரதர் வழியாக யமனை அறியச் செய்து, தன் தொழிலுக்கு மீளச்செய்கின்றன.

இரண்டாம் பகுதி ‘இயல்’. இதில் கிருஷ்ணன் நைமிஷாரண்யத்துக்கு வந்ததை அறிந்த யமன், தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக பூமிக்கு மானுட வடிவில் வருகிறார். மானுட வடிவென்பதால் அவர் எண்ணங்களும் மானுட மொழியிலேயே அமைந்திருக்கிறது. தன் சந்தேகங்களை மானுட மொழியில் வெளிப்படுத்த இயலாத யமன், அவை  மானுட வாழ்க்கையில் என்னவாக நிகழ்கிறதென்பதைக் கொண்டே சொல்வடிவாக்க முடியும் என்பதை அறிகிறார்.

மனிதன் வாழ்ந்த வாழ்வை நனவு மனம் தொகுக்கிறது. கனவு மனம் அவற்றை நினைவுகளாக்குகிறது. ஆழ்மனம் அவற்றை குறியீடுகளாக்குகின்றன. துரியம் அவற்றை இன்னும் செறிவடையச் செய்து மாத்திரைகளாக மாற்றுகின்றன. மனதின் இந்த நான்கு நிலைகளும் சேர்ந்து மனித ஆளுமையை உருவாக்குகிறது. எனவே கிருஷ்ணனைக் கண்டு, தன் ஐயங்களை வினவ தீவிரத்துடன் இருக்கும் மனிதனின் மனதில் புகுந்து, மனதின் நான்கு நிலைகளிலும் கண நேரம் அமைந்து எழுந்தால் அந்த மனிதனாகவே மாறிவிட முடியும் என்று மனித ஆளுமையின் வரையறையை அளித்து, ஒரு மனித மனதின் இந்த நான்கு நிலைகளையும் அறிவதன் மூலம் அந்த ஆளுமையாகவே மாறிவிடமுடியும் என்றும் யமனுக்கு நாரதரால் கூறப்படுவதாக புனையப்பட்டுள்ளது.

அந்தக் கணத்தில் கிருஷ்ணனைக் காண வேண்டும் என்னும் பெருவிருப்புடன் தன் அரண்மனையில் இருந்த கர்ணனின் மனதில் கணநேரம் புகுந்து வெளிவந்த யமன், நைமிஷாரண்யத்தில் கர்ணனாக கிருஷ்ணனின் குடிலுக்குச் செல்கிறார். கர்ணன் இயல் வாழ்க்கையில், ஷத்திரியன் இல்லை என்னும் காரணத்தால் புறக்கணிக்கப்பட்டவன். கிடைக்க வேண்டியவை மறுக்கப்பட்டவன். விரிவான தத்துவ விளக்கங்களின், கனவு நிலைக்காட்சிகளின் மூலம் வாழ்க்கை எவ்வாறு இருக்கிறதோ அவ்வாறு இல்லாமல் அவன் விரும்பியபடி இருந்தால், வாழ்வு எவ்வாறு துயரமானதாக பொருளற்றதாக இருக்கும் என்பதையும், இயல் வாழ்க்கையில் இயைந்து செயலாற்றுவதே கர்ணனுக்கான மெய்மையின் வழி என்பதையும் இப்பகுதி விளக்குகிறது.

மூன்றாம் பகுதி ‘ஒருமை’. இயல்வாழ்க்கைக்கான மெய்மையில் மட்டும் நிறைவடையாத யமன், அடுத்ததாக இயல் வாழ்க்கையில் இயைந்து வாழ்ந்து ஆனால் அதைக் கடந்து செல்ல முடியாமல் வருந்தும் பீஷ்மரின் உளத்தில் புகுந்து, பீஷ்மராக நைமிஷாரண்யத்திற்கு வருகிறார். அவருக்கு செயலை யோகமெனச் செய்து அதைக்கடந்து செல்வதற்கான செயல் யோகம் உரைக்கப்படுகிறது.

அடுத்ததாக ‘அறிவு’ என்னும் பகுதியில், தன் ஒற்றை நோக்கத்தில் சந்தேகத்தை அடையும் சிகண்டிக்கு சந்தேகம் போக்கப்பட்டு செயல் ஞானம் போதிக்கப்படுகிறது. ‘விடுதல்’ என்னும் பகுதியில் விதுரராக வரும் யமனுக்கு, தான் கொண்டவையிலிருந்து விடுபட்டு செல்லும் விடுதலை குறித்து உணர்த்தப்படுகிறது. ‘ஊழ்கம்’ என்னும் பகுதியில் சொல் விளைவிக்கும் வியாசருக்கு, சொல் அடங்கும் ஊழ்கம் சொல்லப்படுகிறது. ‘மறைமெய்’ என்னும் அடுத்த பகுதியில், அனைத்தையும் கற்றறிந்த யுதிஷ்டிரருக்கு கற்றறிந்தவற்றிற்கு அப்பால் இருக்கும் மறைஞானம் கூறப்படுகிறது. ‘சுடர்வு’ என்னும் பகுதியில். திரௌபதியின் உள்மன ஆழங்களை அவளுக்கு உணர்த்தி, சுடரொளி போல் கனிவால் அனைத்தையும் ஒளி பெறச் செய்வதன் மூலம் அவளுக்கான மெய்மையை அடைய வழிகாட்டப்படுகிறாள். ‘சொல்’ பகுதியில் வேதம் உரைக்கும் வைதிகர்கள், தாங்கள் உரைக்கும் வேதத்தின் மீதும் இயற்றும் வேள்விகளின் மீதும் கொள்ளும் சந்தேகங்கள் கிருஷ்ணனால் அகற்றப்படுகின்றன. ‘பொருள்’ என்னும் பகுதியில், உதங்கர் என்னும் வேதாந்தி, வேதாந்த தத்துவங்களின் மேல் கொள்ளும் ஐயங்கள் உரிய விளக்கங்களால் அகற்றப்படுகிறது. இறுதியாக ‘முழுமை’ என்னும் பகுதியில் முழுமையடைந்த சுகர் என்னும் முனிவர் வழியாக முழுமையின் இயல்பு யமனுக்கு உணர்த்தப்படுகிறது. இந்த பத்து நிலைகளில் யமன் அறக்குழப்பபத்திலிருந்து முழுமையாக விடுபட்டு யம உலகிற்கு மீண்டு செல்கிறார். நாவலின் இறுதிப்பகுதியான இறைப்பாடலில், முந்தைய பத்து நிலைகளில் கூறப்பட்டவைகள் தொகுக்கப்பட்டு, பகவத்கீதையாக அர்ஜூனனுக்கு கிருஷ்ணனால் உரைக்கப்படுகிறது.

இங்கு உரைக்கப்படும் மெய்மைகள், யமனுக்கு உரைக்கப்படுகிறதா அல்லது, யமனாக வரும் ஆளுமைகளுக்கு உரைக்கப்படுகிறதா என வாசகனுக்கு இயல்பாகவே எழும் சந்தேகம், அவர்கள் தங்கள் ஆழ்கனவில் அவற்றை உணர்ந்தார்கள் என இறைப்பாடல் பகுதியில் யுதிஷ்டிரனாலும் அர்ஜூனனாலும் போக்கப்படுகிறது.

இமைக்கணம் ஆசிரியர் ஜெயமோகன், ”சுத்த அத்வைதம்” என்னும் தத்துவமுறையை தனக்கானதாகக் கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனவே இயல்பாகவே இதில் கூறப்பட்டிருக்கும் தத்துவ விளக்கங்கள், அத்வைதத்தை நோக்கியே இருக்கக் கூடும். அதனால் பிற தத்துவ மரபுகளை தங்களுக்கானதாகக் கொண்டவர்களுக்கு இந்த நாவல் ஆர்வமூட்டுவதாக இல்லமலாகலாம். ஆனால் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல் இதில் நுழைபவர்கள், குறைந்தபட்ச தத்துவ ஆர்வமுடையவர்களாக இருந்தால், இந்திய மெய்யியல்கள் பெரும்பாலானவற்றின் செறிந்த வடிவத்தையோ அல்லது அவை இருப்பை வகைமை படுத்தியுள்ள முறைகளையோ இங்கு கண்டடைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

தத்துவத்தை களமாக கொண்ட நாவல் என்பதால், புனைவின் சாத்தியங்களால் கதை மாந்தர்களின் வாழ்க்கையின் இடர்கள் மூலம் தத்துவம் பேசப்படுகிறது. புனைவாக கூறப்படுவதால், தத்துவத்தை அதன் வடிவில் வாசிப்பதன் சலிப்பு தோன்றவில்லை. தத்துவத்தின் மேல் சற்றும் ஆர்வமில்லையெனில் இதை ஒரு நாவலாக வாசிக்க இயலாமல் போகலாம். ஆனால் வாழ்க்கையிடர்களுக்கான கருத்தியல் விளக்கங்களே தத்துவம் என்பதை உணரும் வாசகருக்கு, இதில் கூறப்பட்டிருக்கும் பத்து வாழ்க்கைகளின் தரிசனங்கள் மூலம், தன் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடும் பெரும்பாலான சூழ்நிலைகளுக்கேற்ற கருத்தியல் விளக்கங்களை இமைக்கணத்திலிருந்து பெற முடியும். அந்த வகையில் இதை வாழ்விற்கான வழிகாட்டி எனவும் கொள்ளலாம்.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த நாவல் அச்சில் வரும்போது கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்கள்வரை வரலாம். வெறும் எண்ணூறு பக்கங்களில், பத்து வெவ்வேறு நிலைகளிலிலிருக்கும் ஆளுமைகளின் வழியாக அனைவரின் வாழ்க்கையிலும் சாத்தியமான அனைத்து மெய்யறிதலுக்கான தேடுதல்களையும் மிக விளக்கமாக வேதாந்தத் தத்துவத்தை சாரமாகக் கொண்டு கூறுவதென்பது சாத்தியமில்லாதது. இந்த நாவல் அதைச் செய்ய முயல்கிறது. எனவே ஒவ்வொன்றும் மிகமிகச் செறிவாகவே கூறப்பட்டிருக்கிறது.

வியாசர், கிருஷ்ணனுடனான உரையாடலின் இறுதியில், தன் மகன் சுகன் முழுமையடைந்து விண்மீனாக இருப்பதை தன் அகஉணர்வில் அடைந்த பின், அவற்றை சொற்களாக வெளிப்படுத்துவது, அழகான ஒரு கவிதையாக இந்நாவலில் இடம்பெற்றுள்ளது. அக்கவிதையின் இறுதியில், இந்நாவலின் முதல் பகுதியாக வரும் தியானிகன் பிரபாவன் கதையை எழுதுவதாக வருகிறது. இது கதைக்குள் கதை அமைந்திருப்பதாக தோற்றமளிக்கிறது. மேலும் கனவுக்குள் கனவு, அதற்குள் இன்னுமொரு கனவு எனவும் கதை சுழல்கிறது. இந்த வடிவம், தத்துவத்தை களனாகக் கொண்ட கதையின் மேல் ஆர்வத்தை மேலும் எழுப்புகிறது.

தத்துவம் போதாமையாக எழும் இடங்களையும், அது அடையும் முரண்களையும், முரண்களிலிருந்து விடுபடும் முறைகளையும் இந்த நாவல் ஆங்காங்கு கூறிச் செல்கிறது. உதாரணமாக, ஒரு தத்துவ நிலைப்பாட்டை எடுத்தவன் மெய்யறிவிற்கான வாய்ப்பை முழுவதும் இழந்து விடுகிறான். இது பீஷ்மர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “அறிந்ததைக் கைவிடாமல் அறிபவர் அறிந்ததையே மீண்டும் அறிகிறார்” என்பதிலும், சிகண்டி-கிருஷ்ணன் உரையாடலில் வரும் “மெய்யை தேடுபவர்கள் தேடும் மெய்யை கண்டடைகிறார்கள்” என்பதிலும் விதுரர்-கிருஷ்ணன் உரையாடலில் வரும் ”அறிந்தவை அறிவனவற்றுக்கு முன்சொல்லாக அமைவதன் மயக்கம் சொல்லுக்கு பொருள் அளிக்கும் புலமென்றாகி அனைத்தையும் தானெனக் காட்டுகிறது. முன்னறிவால் வருமறிவு வகுக்கப்படுவதனால் முன்னறிவே அறிவின் எல்லையென்றாகிறது” என்பதிலும் உணர்த்தப்படுகிறது

“அவையில் முன்வைக்கப்படும் தத்துவம் சொல்நுரையையே கிளப்பும். அகத்தே விதையென விழும் தத்துவம் அங்கிருந்து மெய்மையென எழும்” என்னும் விதுரருடனான உரையில் வரும் வாக்கியம், அனுபவமாகாமல் வெறும் உரையாடலாக எஞ்சும் தத்துவத்தின் பொருளின்மையை விளக்குகிறது.

தன்னைவிட பெரியவர்களாக உணர்பவர்களிடம், அகங்காரத்தை முற்றிலும் அகற்றிவிட்டே அணுக வேண்டும் என்பதை சிகண்டியுடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியத்தை விட தெளிவாகக் கூறிவிட முடியாது. “தன்னுள் ஐயம் கொண்டவன் அறிந்துகொள்ளக்கூடும். ஐயத்தை கவசமென்றும் வாளென்றும் கொண்டவன் வெல்லப்படுவதே இல்லை. தன்னைவிடப் பெரியவற்றால் வெல்லப்படுவதே கல்வி என்பது”

பீஷ்மருடனான உரையாடலில் வரும் இந்த வாக்கியம், வெறும் இருபத்தைந்து வார்த்தைகளுக்குள் மனிதன் தன் செயல்களின் மூலம் வாழ்க்கையின் வலைகளில் முடிவின்றி சிக்கியிருப்பதையும், அதை அறியாமலே முழுவாழ்வையும் முடித்துவி டுவதையும் கூறுகிறது. “பீஷ்மர் “யாதவரே, முடிந்தவரை அகன்றிருக்கிறேன். முழு வாழ்வும் எதையும் செய்யாதிருந்திருக்கிறேன். இருந்தும் இத்தனை கட்டுகளா?” என்றார். இளைய யாதவர் புன்னகைத்தார். “அவ்வாறென்றால் இங்கு ஒவ்வொன்றிலும் தாங்களே சென்று சிக்குபவர்கள் சிக்கியிருக்கும் வலைதான் எவ்வளவு பெரிது!” என்றார் பீஷ்மர். “அறுக்கமுயலாதவரை அந்த வலை இல்லை என்றே இருக்கும்” என்றார் இளைய யாதவர்.”

நாவலின் செறிவான பகுதிகளை மேற்கோள் காட்டுவதென்றால், அதன் பெரும்பகுதியை இங்கு கூற வேண்டியிருக்கும். இதன் செறிவின் காரணமாக, வருங்காலத்தில் இமைக்கணத்திற்கு விளக்க நூல்கள் வெளிவந்தாலும் ஆச்சரியம் இல்லை. வேறு எதற்காக இல்லாவிடிலும், இந்த நாவலை தமிழுக்கு அளித்ததற்காக, வரும் பல நூற்றாண்டுகளுக்கு, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேனும் ஜெயமோகன் பெயர் வாழ்ந்து கொண்டிருக்கும்.. ஆனால் என்ன, பகவத்கீதை எவ்வாறு விளக்குபவர் சார்ந்திருக்கும் தத்துவமுறைகளுக்கேற்ப விளக்கப்படுகிறதோ அதைப்போலவே அவரவர் எடுத்திருக்கும் தத்துவ நிலைப்பாடுகளுக்கேற்ப இமைக்கணமும் விளக்கப்படலாம்.

இந்தியத் தத்துவங்கள் என்றாலே, பெரும்பாலான கலைச்சொற்கள் சமஸ்கிருதத்தில் இருக்கும். ஆனல் இமைக்கணம் தமிழ் வார்த்தைகளையே உபயோகப்படுத்துகிறது. மிகக்குறைவான இடங்களில் சமஸ்கிருத மூலச் சொல்லை ஒரு முறை கூறி, பின் அதற்கான தமிழ்ச்சொல்லை மட்டுமே உபயோகப்படுத்துகிறது. இது சமஸ்கிருத கலைச்சொற்களுடன் தத்துவ அறிமுகம் பெற்றவர்களுக்கு, சற்றே இடராக இருக்கலாம்.

தத்துவ ஆர்வமுள்ளவர்களின் சிந்தனை முறையை இமைக்கணம் மேலும் செறுவூட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தத்துவ ஆர்வமுள்ளவர்களில் கணிசமானவர்கள் முன்றிவை துறக்க சாத்தியமில்லாதவர்களாக இருப்பார்கள் என்பதும் வேதனையான முரண்.

இமைக்கணம் – ஜெயமோகன்

 

 

அன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்

 – வெங்கடேஷ் சீனிவாசகம் – 

அப்பா இறந்தபோது எனக்கு வயது பதினொன்று. பக்கத்து ஊர் சென்னம்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் மூன்று பையன்கள். நான்தான் மூத்தவன். எனக்கடுத்து இரண்டிரண்டு வருட வித்தியாசங்களில் இரண்டு தம்பிகள். அப்பா பள்ளிக்கூட ஆசிரியர். தங்கை பெண்ணையே திருமணம் செய்து கொண்டவர். அம்மாவின் அம்மாவை நாங்கள் அத்தை என்று கூப்பிடலாம் என்றாலும், நாங்கள் பாட்டி என்றுதான் கூப்பிட்டோம். அப்பாவுக்கும், அம்மாவுக்கும் பனிரெண்டு/பதினான்கு வருடங்கள் வயது வித்தியாசம். அம்மாவிற்கு திருமணம் ஆகும்போது, அம்மாவிற்கு வயது பதினைந்து. அம்மாவின் பதினாறாம் வயதில் நான் பிறந்தேன். கோவை வேளாண் கல்லூரியில் படிக்கும்போது, விடுதியில் தங்கியிருந்தேன். ஒருமுறை அம்மா பார்க்கவந்து, விடுதியின் விருந்தினர் தங்கும் அறையில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். உடன் படிக்கும் நண்பிகள் ரேணுகா, நிர்மலா, சுகுணா-வை அறைக்கு கூட்டிச்சென்று அம்மாவிற்கு அறிமுகப்படுத்தியபோது, “வெங்கடேஷ் அம்மாவா நீங்க?; அக்கா மாதிரி இருக்கீங்க!” என்று அவர்கள் வியந்தது இன்னும் ஞாபகமிருக்கிறது.

அப்பா மிகவும் நல்லவர். எங்கள் மேலும், அம்மா மேலும் மிகப்பிரியம். ஓடைப்பட்டியிலும், களரிக்குடியிலும், புளியம்பட்டியிலும் “சீனி வாத்தியார்” என்றால் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். பெரும் மதிப்பு. எல்லோருக்கும் உதவுவார். ஊரின் கடைசியிலிருக்கும் காலனியிலும் நெருக்கமான நண்பர்களிருந்தார்கள். பக்கத்து ஊர், திருமங்கலம் விருதுநகர் சாலையிலிருக்கும், கள்ளிக்குடியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷ்னில், பள்ளியில், கடைவீதியில்…எல்லோருமே நட்புதான். அவரிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. குடி. அம்மா சொல்லி சொல்லி பார்த்தார்கள். அவர் குடிக்கும் ஒவ்வொரு முறையும் அம்மா அழுவார்கள். அம்மா அழும் நேரங்களிலெல்லாம் குடியை விட்டு விடுவதாக சொல்வார். குடியை அவர் கடைசி வரை விடவில்லை. விபரமறியா என் நான்கைந்து வயதுகளில், என் மனதில் பதிந்துபோன அந்தச் சித்திரம் இன்னும் என்னால் நினைவிலிருந்து அழிக்கமுடியாது… – அப்பா குடித்துவிட்டு வரும் நாட்களில், மச்சு வீட்டுக்குள் சென்று, கொடியில் தொங்கும் துணிக்ளுக்கிடையில், முகம் புதைத்து விம்மி அழும் அம்மா.

அப்பா ஈரல் பாதிப்பில், மதுரை இராஜாஜி மருத்துவமனையில் எங்களை விட்டுப் பிரிந்தபோது, அம்மாவுக்கு வயது இருபத்தாறு. அம்மா திருமணத்திற்கு முன் ஒன்பதாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். அப்பா மறைவிற்குப் பின், அம்மா பத்தாம் வகுப்பு தனியாக வெளியிலிருந்து படித்து தேர்வெழுதி தேர்ச்சி பெற்று, அப்பா-வின் அரசு வேலையினால், செங்கப்படை பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தார்கள். அம்மாவிற்கு உதவியாக, எங்களையும் பார்த்துக் கொள்வதற்கு, தாத்தாவும் பாட்டியும் களரிக்குடியிலிருந்து மாறி எங்களுடன் ஓடைப்பட்டியில் தங்கிக்கொண்டார்கள்.

அந்த பதினோரு வயதில், எனக்கு அப்பாவின் மறைவின் வெற்றிடம், பெரிதும் உறைக்காதவாறு அம்மா பார்த்துக் கொண்டார்கள். அப்பா இறந்தபிறகு எங்கள் மூவரையும் படிக்க வைத்து வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்கள்…சொற்களால் விளக்க முடியாதவை. அப்போதிருந்த வயதில் எனக்கு உறைக்கவில்லை. அப்பா இறந்து, அடுத்த பதினாலு வருடங்களில் அம்மா தொண்டை புற்று நோயினால் 1997-ல் இறந்தார்கள். அப்போது எனக்கு வயது 25. அம்மாவின் மறைவு எனக்கு பேரிடியாய் மனதைத் தாக்கியது. அந்த வெற்றிடத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. கடந்த பதினான்கு வருடங்கள் அவர்கள் பட்ட கஷ்டத்தையெல்லாம் முற்றாகத் துடைத்து அவர்களை நன்கு வைத்திருக்கவேண்டும் என்று ஆசை கொண்டிருந்தேன். அம்மாவிற்காக ஒரு துரும்பளவில் கூட ஒன்றுமே செய்யவில்லையே என்ற சுய வெறுப்பும், பச்சாதாபமுமே மனதை அறுத்து கொன்று கொண்டிருந்தது. அப்பா இல்லாத அம்மாவின் அந்த வாழ்க்கையை நினைக்கும்பொழுதெல்லாம், தொண்டை அடைக்கும்; மனது நிலையில்லாமல் தவிக்கும்.

லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை ஓசூரில் இருந்தபோது ஒருநாள் பின்னிரவில் வீட்டில் படித்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் இயலும் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியில் மழை பெய்து ஓய்ந்து தூறிக்கொண்டிருந்தது.

நான்கு தலைமுறைகள் கொண்ட கூட்டுக் குடும்பம். நான்காவது பையனுக்கு திருமணம் ஆகிறது. சாந்தி முகூர்த்தத்தை, நல்ல நேரம் கணித்து தை மாதத்திற்கு தள்ளி வைக்கிறார்கள். தீபாவளி வருகிறது. வேலை விஷயமாய் அவசரமாய் அழைப்பு வரவே கிளம்பிப் போகிறான் நான்காம் பையன். தலை தீபாவளிக்கு, வீட்டில் இல்லாத கணவனுக்கு கடிதம் எழுதுகிறாள் ஜெகதா. சிறுகதை முழுதுமே, ஜெகதா எழுதும் கடிதம்தான்.

சிறுகதையின் ஒவ்வொரு வார்த்தையும், வரியும் இத்தனை அன்பில் தோய்த்து எடுத்ததாய் இருக்க முடியுமா?. என் ஆச்சர்யங்கள் அதிகரித்துக்கொண்டேயிருந்தன. கூட்டுக் குடும்பத்தின் நிகழ்வுகளை ஜெகதா கடிதத்தில் எழுதுகிறாள். அம்மாவைப் பற்றி (கணவனின் அம்மா), மற்றவர்களைப் பற்றி…அம்மா தன் கால் பிடித்து மருதாணி வைத்தபோது தான் அழுததைப் பற்றி…தன் அப்பா தெருவில் போகும் வயதானவர்களைக் கண்டால், கைகூப்பி நமஸ்கரிப்பது பற்றி…கணவனின் அண்ணன், குடும்பத்தின் இரண்டாம் பையன் ஒரு தீபாவளியன்று பட்டாசுக் கடைக்குச் சென்று, விபத்தில் இறந்த விஷயம் தனக்குத் தெரியவந்தது பற்றி…

தலை தீபாவளிக்கு, அம்மா வந்து கூப்பிட்டும், தான் இங்கேயே இருந்துவிடுவதாக சொல்லிவிடுகிறாள் ஜெகதா. அம்மாவிற்கும் ஜெகதா இங்கேயே இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமும். தீபாவளிக்கு இரண்டு/மூன்று நாட்கள் முன்னதாகவே பட்சணங்கள் தயாராகிறது.
தீபாவளியன்று, மூன்றாவது மாடியில் இருக்கும் கொள்ளுப்பாட்டியை கீழிறக்கி கூட்டிவந்து குளிக்கவைத்து, ஹாலில் இருத்தி, குடும்பத்தில் எல்லோரும் ஆசி வாங்குகிறார்கள்.

குட்டிப் பையன் சேகர், ”வீல்” என்று அலறி கத்திக்கொண்டே ஓடி வருகிறான். அம்மா அடித்துவிட்டதாய் சொல்கிறான். சேகர், பாட்டி செல்லம். விபத்தில் இறந்துபோன இரண்டாமவனின் பையன். கணவர் இறக்கும்போது, சேகர் காந்திமதியின் வயிற்றில் மூன்று மாதம். கோபத்துடன் அம்மா காந்திமதி அறைக்குப் போகிறாள். காந்தி விரித்த தலையுடன் ரேழி ஜன்னலில் உட்கார்ந்திருக்கிறாள். ஜெகதாவிடம், மற்றொரு மன்னி “காந்திக்கு வெறி பிடித்துவிட்டது” என்று காதில் கிசுகிசுக்கிறாள். கணவன் இறந்ததிலிருந்தே, காந்திக்கு ஆறேழு மாதங்களுக்கு ஒருமுறை இம்மாதிரி ஆகிவிடுவதாக சொல்கிறாள்.

லா.ச.ரா-வின் வார்த்தைகளில்…

“அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது.

“ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு – குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?”

“நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கேயிருக்கு?”

காந்திமதி மன்னி குரலில் நெருப்பு கக்கிற்று.

“அதற்குக் குழந்தை என்ன பண்ணுவான்?”

”பாட்டி! பாட்டி! நான் ஒண்ணுமே பண்ணல்லே. ஊசி மத்தாப்பைப் பிடிச்சுண்டு வந்து ‘இதோ பாரு அம்மா’ன்னு இவள் முகத்துக்கெதிரே நீட்டினேன். அவ்வளவுதான்; என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் குனிய வெச்சு முதுகிலேயும் மூஞ்சிலேயும் கோத்துக் கோத்து அறைஞ்சுட்டா, பாட்டீ!” பையனுக்குச் சொல்லும் போதே துக்கம் புதிதாய்ப் பெருகிற்று. அம்மா அவனை அணைத்துக் கொண்டார்.

“இங்கே வா தோசி, உன்னைத் தொலைச்சு முழுகிப்பிடறேன்! வயத்திலே இருக்கறபோதே அப்பனுக்கு உலை வெச்சாச்சு, உன்னை என்ன பண்ணால் தகாது?”

அம்மாவுக்குக் கன கோபம் வந்துவிட்டது.

“நீயும் நானும் பண்ணின பாபத்துக்குக் குழந்தையை ஏண்டி கறுவறே? என் பிள்ளை நினைப்புக்கு, அவனையாவது ஆண்டவன் நமக்குப் பிச்சையிட்டிருக்கான்னு ஞாபகம் வெச்சுக்கோ. ஏன் இன்னிக்குத் தான் நாள் பார்த்துண்டையா துக்கத்தைக் கொண்டாடிக்க? நானும் தான் பிள்ளையத் தோத்துட்டு நிக்கறேன். எனக்குத் துக்கமில்லையா? நான் உதறி எறிஞ்சுட்டு வளையவில்லை?”

மன்னி சீறினாள். “உங்களுக்குப் பிள்ளை போனதும் எனக்குக் கணவன் போனதும் ஒண்ணாயிடுமோ?””

என் மனம் ஒரு கணம் உறைந்துபோனது இங்குதான். அம்மாவின் உருவமும், அம்மாவின் அந்த பதினான்கு வருட வாழ்க்கையும், தத்தளிப்புகளும், துயரங்களும் மனக் கண் முன் நிழற்படங்களாய் வந்துபோயின. எனக்கு அப்பா போனதும், என் தாத்தா, பாட்டிக்கு மருமகன் போனதும், அம்மாவிற்கு கணவன் போனதும் ஒன்றாகுமா?. மனம் நினைவு திரும்பியதும் பெரும் கேவல் எழுந்தது. மல்லிகாவும், இயலும் விழித்துக் கொண்டு விடுவார்களோ என்று பயந்து கதவு திறந்து வெளியில் வந்தேன். இன்னும் தூறிக் கொண்டுதான் இருந்தது. இரண்டு தெரு தள்ளி,ரோடு தாண்டியிருக்கும் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ரயில் ஒன்று கிளம்பிச் செல்லும் சத்தம் கேட்டது. இறங்கி தெருவில் மழையில் நின்றேன். வாய்விட்டு அழ வேண்டும்போலிருந்தது. அழுது கரைத்துவிட்டு, வீட்டினுள் வந்து தலை துவட்டிவிட்டு, மறுபடி புத்தகத்தை எடுக்கும்போது, இயல் தூக்கத்தில் புரளும் கொலுசோசை கேட்டது. எழுந்து சென்று, படுக்கையறையில், இரவு விளக்கு வெளிச்சத்தில் இயலைப் பார்த்தபோது, குட்டியாய் இடதுபக்கம் திரும்பி படுத்திருந்தது. மெலிதாய் விரல்களைப் பிடித்துக்கொண்டேன். மெத்தென்றிருந்தது.

“அம்மா ஒன்றும் பதில் பேசவில்லை. குழந்தையைக் கீழேயிறக்கி விட்டு நேரே மருமகளை வாரியணைத்துக் கொண்டார்.
மன்னி பொட்டென உடைந்து போனாள். அம்மாவின் அகன்ற இடுப்பைக் கட்டிக் கொண்ட குழந்தைக்கு மேல் விக்கி அழுதாள். அம்மா கண்கள் பெருகின”

பேரன்பின் அணைப்பு. தழுவல். அன்பு ஒரு ஒட்டுவாரொட்டிதான். பேரன்பின் கணம் நிகழும்போது அதைத் தாங்கும் சக்தி உங்களுக்கிருக்கிறதா?…

லா.ச.ரா எனும் பேரன்பிற்கு என் தாழ் பணிந்த நமஸ்காரங்கள்.

சீர் – கமல தேவி சிறுகதை

கமல தேவி

மழை பெயருக்கு பெய்திருந்த முன்மதியம். மண்ணில் விழுந்து காய்ந்த துளிகளின் தடங்களின் மேலிருந்த சில பாதங்களைப் பார்த்தபடி அமுதா வாசல் படியில் அமர்ந்திருந்தாள். எதிர்த்தத் திண்ணையில் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வாயசாளிப் பாட்டிகளும், அம்மாக்களும், எதிர்வீட்டுஅய்யாவும் அடுத்தத் தெரு மாமாவும் தாயம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

செல்லத்தின் குரல் கிழக்கே தெரு முடக்கில் தெளிவில்லாமல் கேட்டது. பதறியக் குரலாக இருக்கவும் அமுதா சட்டென எழுந்தாள். அதைப்பார்த்த எதிர்வீட்டய்யா, “என்னம்மா,” என்றார். சரியாகத் தெரியாமல், “ஒன்னுமில்லங்கய்யா,” என்றாள்.

குரல் நெருங்கி வந்ததும், “செல்லத்துக் குரல் கேக்கல,” என்றாள்.

தாயக்கட்டைகளை நிறுத்தி கூர்ந்தப்பின், “ஆமா… என்னன்னு தெரியலயே,”என்று எழுந்து தெருவின் நாற்சந்திப்பில் நின்றார்கள். ஒருப்பக்கம் துப்பட்டா வீதியில் இழுபட  வெள்ளய்யன் தாத்தா வீட்டில் பேசிவிட்டு விடுவிடு என்று வந்தாள்.

“நா என்னத்த செய்ய? எங்காளுக்கிட்ட என்ன பதில் சொல்றது?”என்று அழுதபடி வந்தாள். மேற்கு பக்கம் நின்றவள் நகர்ந்து வடக்குப் பக்கமாக நின்றாள்.

அய்யா கொஞ்சம் முன்னால் வந்து, “என்னாச்சு… பதறாம சொல்லு,” என்றார்.

செல்விஅம்மா, “கன்னுக்குட்டி எங்கடி,” என்றாள். மீண்டும் திரும்பி நின்று தலையைத் தடவிவிட்டுக் கொண்டாள்.

செல்லம் மூச்சு வாங்கியபடி அய்யாவிடம், “மாமா… கன்னுக்குட்டிக்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு பாலம் வர வந்துட்டேன். கன்னுக்குட்டி ஆத்துல பூந்துருச்சு,” என்றாள்.

“யாரையாச்சு கூப்பிட வேண்டியது தானே..” என்றபடி அவர் முன்னால் வந்தார்.

“அக்கம் பக்கம் ஆளில்ல மாமா. ஆத்துல எறங்கி பின்னாலயே ஓடுனா, அது ஓட்டத்துக்கு என்னால முடியல. மேல வயல்ல ஏறி மறஞ்சிருச்சி. கள்ளுக்கட முடக்குல ஆளுகளப் பாக்கவும் ஓடியாந்து சொல்லி அவங்க பைக்குல கொஞ்ச தூரம் பாத்துட்டு வந்துட்டாங்க..” என்றபடி இடையில் கைவைத்து குனிந்து வளைந்து நின்றாள்.

“ஜல்லிக்காளையில்ல… என்னப்புள்ள நீ..”

“அவன் அதுக்கு மீறின ஐல்லிக்காள. என்னப் பண்ணப் போறியோ?”

“ஆம்பிளயள போவச் சொல்லாம உனக்கதுக்கு?” என்ற பங்காரு அத்தை குரலை கடுமையாக்கினாள்.

“அதுதான் இன்னிக்கு நாளக்குன்னு பெரும்போக்கா இருக்கவும் நா போனேன்,”என்ற செல்லத்தின் குரல் வெட்டி வெட்டி நின்றது.

“குமாரு எங்க?” என்ற பூஞ்சோலை அம்மா வடக்குப் பாதையைப் பார்த்தாள்.

“அதுக்கு போன் பண்ணி கள்ளுக்கட முடக்குக்கு வந்துருச்சு. தேடிப் போயிருக்கு,”

“அடிச்சானா..” என்று சின்னசாமிமாமா குரலை தாழ்த்திக் கேட்டார்.

“ம். அங்கனயே.. ஆளுங்க வந்து தடுத்துட்டாங்க,” என்படி குனிந்து அழுதாள்.

“பின்ன கொஞ்சுவானா?” என்ற கிழவியின் குரலால் அமைதியானார்கள்.

“இன்னிக்கு அந்தக் கன்னுக்குட்டி என்ன வெலக்கி போகும். பொழப்புல கருத்து வேணாம். என்னத்த எழவு இந்த காலத்துப் பிள்ளங்க வெவரமும் பொழப்பும்,” என்று மணியக்கா சொல்லிக் கொண்டிருக்கையில் கலைந்தார்கள்.

அமுதா, “அது போனதுக்கு நீ என்ன பண்ணுவ… பேசாம இரு. ரெண்டு நாளில வேகம் குறஞ்சிரும். என்னப் பண்றது… நாம நெனச்சா நடக்குது,” என்றாள்.

படியாக போட்டிருந்த அகன்ற கருங்கல்லில் அமர்ந்தாள். ஆளாளுக்கு பேசிவிட்டு விட்ட இடத்திலிருந்து தாயத்தை தொடர்ந்தார்கள். வழியில் வந்தவர்கள் போனவர்கள் என்று அனைவருக்கும் செல்லம் ஒரே பதிலை சொல்லிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு வயிற்றில் பசி எரிந்தது. எந்த நேரத்திலும் யாரும் வந்துவிட்டால் என்ன செய்வது என்று சோற்றுக் கிண்ணத்தைப் பார்த்தபடி தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கல்லில் அமர்ந்தாள். பக்கவாட்டில் குந்தாணியில் அமர்ந்த காகம் தலையைகுனிந்து எடுத்துத் தின்றது.

மதியம் கடந்து வெயில் இறங்கிக் கொண்டிருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அலைபேசியை எடுத்தாள். வரும் வழியில் காலில் கல் குத்திய இடத்தை தடவிவிட்டபடி இருந்தாள்.

“கன்னுக்குட்டி பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுதாய்யா…”

“…….”

அலைபேசி நின்றதும் செல்லம் உதட்டை வளைத்தபடி அதை பக்கத்தில் வைத்தாள். மணியைப் பார்த்தாள். பிள்ளைகள் வரும் நேரம். சட்டென்று எழுந்தாள். தகரக்கதவை ஒருக்களித்து வைத்து அப்படியே இருக்க அகல கல்லை பின்னால் முட்டுகொடுத்துவிட்டு அலைபேசியை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

உள்கதவை ஒருக்களித்து வெளியில் பார்க்கும்படி நான்று அவசர அவசரமாக வெறும் சோற்றை அள்ளித் தின்றாள். தண்ணீர் குடிக்கையில் வண்டி சத்தம் கேட்கவும் கிண்ணிய மூடி வாயைத் துடைத்தபடி வந்தவள் தாழ்வாரத்திலிருந்த கருங்கல் தொட்டி நீரில் கையை அலசி துடைத்துவிட்டு வெளியே வந்தாள்.

“என்ன வேலய பண்ணித் தொலச்சிருக்க…” என்று கையை ஓங்கிக்கொண்டு வந்தவனை உடன்வந்த பயல்கள் பிடித்துக் கொண்டார்கள்.

“உங்கண்ணன் பொங்கலுக்கு சீராக் குடுத்ததுன்னு சீராட்டி வளத்தது இப்படி தர்மத்துக்கு ஓட்டிவிடத்தானா..” என்று கத்தினான்.

செல்லம் அசையாமல் நின்றாள். அவன் கத்திக் கொண்டிருந்தான்.

“நான் என்னப் பண்றது.. ஆள ஒருஇழுப்பு இழுத்து விட்டுட்டு ஓடிருச்சு. தடுமாறி பின்னால ஓடறதுக்குள்ள அது ஆத்துக்குள்ள நிக்குது. பின்னால ஓடி கன்னுக்குட்டியப் பிடிச்சவங்க யாரு?”

குமார், “நல்லா பேசு… இரு ஒனக்கு இருக்கு,” என்றான்.

பப்புலு அண்ணனுடன் ஓட்டமும் நடையுமாக வந்தாள்.

“ம்மா…மாமா ஊர்க்கு போலாமா,” என்று திருந்தாத மொழியில் கேட்டாள்.

“ஆமா…அது ஒன்னுதான் குறச்சல்,”என்று அவள் முதுகில் ஒன்று வைத்தான். அவள் வீல் என்று கத்தவும், அவள் அண்ணனும் சேர்ந்து அழுதான்.

“அந்தட்டம் போவல தூக்கிப் போட்டு மிதிச்சுப்புடுவன்,” என்று அவன் கத்திக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டிலிருந்து அவன் அக்கா வந்து பிள்ளைகளை தூக்கிக்கொண்டு போனாள்.

“த்த ப்பா அடிக்குது,”என்றாள்.

அத்தை, “செவல காணாமப் போச்சுடி,”என்றாள்.

“அது தண்ணிக் குடிக்க வந்துடும்,”என்ற பப்புலு இடையிலிருந்து இறங்கியபடி, “அப்பா அடிக்குதுன்னு அங்க போச்சா,”என்று கையை தூக்கிக் காட்டினாள்.

வெளியில் நடராசு ஆசாரியார், “டேய்…பழகுன கன்னுக்குட்டி காத்தால வந்துடும்,” என்றார்.

“அது என்ன நாய்க்குட்டியா வரதுக்கு,” என்றான். கன்று காணாமல் போன இடத்திலிருந்து முன்னப் பின்ன பக்கத்து ஊர்களில், வயல்காடுகளில் விசாரித்தான். ஒருவரும் கன்றை பார்த்ததாகக்கூட சொல்லவில்லை. வயல்காட்டுக்குள்ளயே போயிருக்கலாம் என்று சிலர் சொன்னார்கள். “ஒத்தக் கண்ணுலக் கூடவா படல,” என்று உடன்வந்தப் பயல்கள் சொல்லவும் ஆற்றுக்குள் இறங்கி ஆனமட்டும் தேடிவிட்டு வந்தார்கள்.

காலையில் வந்தால் ஆளைத் தேடும் என்று குமார் வயலில் போய் படுத்துக் கொண்டான்.

அதிகாலையில் அமுதா வாசல் தெளித்து கூட்டுவதற்காக தென்னம்மார் துடைப்பத்தை இடது உள்ளங்கையில் தட்டி சரிசெய்தாள். செல்லம் வாசல் தெளித்துவிட்டு கல்லில் உட்கார்ந்தாள். மெலிந்த தேகம் அவளுக்கு. கல்லூரிக்கு போகும் வயதில் பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள். செல்லத்துக்கு ஊரறிந்த காதல் கல்யாணம்.

சொந்தத்தில் கல்யாணத்தில் பார்த்த இவனைத்தான் கட்டிக்குவேன்னு வயசு பதினெட்டாக காத்திருந்து கல்யாணம் செய்து கொண்டதை நினைத்துக் கொண்ட அமுதா, “என்னாச்சு செல்லம்,” என்று கேட்டாள்.

“நேத்து சரியா சோறு திங்கல. நடுராத்திரி வர அந்தாளு பேசிக்கிட்ட இருந்துட்டு வயலுக்கு போயிருக்கு”

“கன்னுக்குட்டி வந்துரும் . மனசப்போட்டு குழப்பிக்காத. உங்கண்ணன் கல்யாணம் நாளக்கு தானே. போகலியா?”

இல்லை என தலையாட்டியபடி செல்லம் பெருமூச்சு விட்டாள். எழுந்து வாசலைக் கூட்டினாள்.

இருவரும் தெருவிளக்குக்கடியில் கூட்டிக்கொண்டு நெருங்கி வருகையில் நிமிர்ந்து நின்றார்கள். தெருவில் யாரும் விழிக்கவில்லை. ராசு தாத்தா மட்டும் டீ க்கடைக்கு போய்க் கொண்டிருந்தார்.

“வறக்காப்பியாச்சும் போட்டுக்குடி செல்லம்”

“பப்புலு ராத்திரி பசிக்குதுன்னு அழுதா. வறக்காப்பி ரெண்டு கிளாஸ் குடிச்சா.. மிச்சம் இருக்கு,” என்றாள்.

“அண்ணன் கல்யாணத்துக்கு போகனுமேன்னு இருக்கா?”என்று தோளில் கைவைத்தாள்.

“நீ வேறக்கா. என்னயவிட நொந்து போவியாட்டுக்கு,”

“இல்ல… அண்ணன் கல்யாணம்ன்னா ஆசதானே,” என்று கையை எடுத்துக்கெண்டாள்.

“கட்டிக்கிட்டு வந்தப்புறம் அண்ணன் கல்யாணம்ன்னாலும் சீரோட போனாதான் எல்லாம்..”

“எதும் வாங்கலியா?”

“எதுவும் வாங்காட்டி பரவாயில்லயே. எங்கண்ணங்கிட்ட வாங்கின கடன கல்யாண செலவுக்குக் கேட்டா, எங்காளு குடுக்காம எகத்தாளம் பேசுது. என்னால கூடப் பொறந்தவன் மூஞ்சியில முழிக்க முடியல. அதான்…”என்றபடி சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள்.

“அதான்.. அநியாயக்காரனுக்கு என்ன நியாயம்ன்னு நேத்து அண்ணன ஆத்துக்குள்ள நிக்க சொல்லி கன்னுக்குட்டிய ஓட்டிவிட்டுட்டேன்”

“ஐய்யோ… யாருக்கும் தெரிஞ்சுட்டா…”

“அண்ணன் ஆத்தோட கொண்டு போய் வித்து காசாக்கிருச்சு,” என்றபோது மேற்கால வீட்டுக்கதவு திறந்தது. செல்லம் குனிந்து கூட்டியபடி நகர்ந்து உள்ளே சென்றாள்.

“கூட்டிட்டு எடுப்பியா.. இந்நேரத்துல சாவகாசமா நின்னுக்கிட்டு. இந்த சந்தில சங்கிலிகருப்பன் ஓட்டம் இருக்குல்ல,” என்று மேற்கால வீட்டு அம்மா அமுதாவை விரட்டினாள்.

வானில் மெல்லிய ஔி பரவிக்கொண்டிருந்தது. கதவுகள் திறக்க அரைமணியாகும்  என்று நினைத்தபடி கோலத்தை வரைந்துவிட்டு எழுந்து பெருமூச்சு விட்டபடி செல்லத்து வீட்டைப் பார்த்தாள். கூட்டிப்பெருக்கிய வாசல் சந்தடியின்றி அரையிருளில் தெரிந்தது.

 

 

 

வாராணசி – வே. நி. சூரியா கவிதை

வே. நி. சூரியா

புறப்படுதல்

வாழ்வின் மண்டபத்தில்
அபத்த சங்கீத பிரவாகம்
பின்தொடரும் இனியதோல்வியை
சுயம்வரித்துக் கொண்டேன்
நோயுற்ற காக்கையாய்
ப்ளாட்பாரங்களில்
கூச்சலிட்டது இதயம்
அதோ ஒரு துருப்பிடித்த ரயில்
தொலைந்துபோவதற்காக
அதன் ஏதோவொரு சன்னலோர இருக்கையில்
ஒடுங்கியிருக்கும்
அடக்கமுடியாத ஆசைதான் நானா

பயணம்

ஒரு நிலவெளியிலிருந்து
இன்னொரு நிலவெளி
அந்த இன்னொரு நிலவெளியிலிருந்து
இன்னொரு நிலவெளியென
விரைகிறது ரயில்.
ஒவ்வொரு நிலவெளியும்
ரயிலை
ஒவ்வொரு விதமாய் வரவேற்கிறது.
நிலவெளி ஏதுமற்ற நிலத்தை
ரயில் அடையும் போது
அந்த ரயிலே
ஒரு நிலவெளியாய் மாறி விரைகிறது
இன்னொரு நிலவெளியை நோக்கி

வாராணசி சித்திரங்கள்

0

மைந்தன் கனலுக்கு
காத்திருக்கிறான்
காலை மத்தியானமாக
மலர்ந்துவிட்டது
அந்தப்பக்கமாக நானே
இரண்டு மூன்று முறை
சென்றுவிட்டேன்
இன்னும் கனல்
கிடைக்கவில்லை போலும்
அன்னாரின் உடல்
வருத்தத்திலிருக்கிறது
சாயும்காலமும்
நெருங்கிவிட்டது தன் பத்து தலைகளுடன்
சற்றுதொலைவில் காத்திருந்தேன்
எனக்கு மட்டும்தான்
தெரிந்ததாயென தெரியவில்லை
அந்திச்சூரியனுக்கு பக்கத்தில்
எண்ணற்ற கரங்கள் கனலோடு நிற்க
தன் தந்தையை சுமந்துபடி
அவன் விண் ஏகிக்கொண்டிருந்தான்

0

யாத்ரீகர்கள் பராக்குப்
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்
குரங்களும் பசுக்களும் கூட
சவம் சுடலையில் காத்திருக்கிறது
இனி பிறக்கவே கூடாது என்ற
வைராக்கியமும் அதற்கிருக்கிறது
நல்லதுதான்
விறகுகளை கம்பளித்துணியைப்போல
போர்த்துகிறார்கள்
பின்பு காத்திருந்து பெற்ற நெருப்பை
விறகின் மேல்
உட்காரவைத்தார்கள்
நீங்களும் நானும்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தோம்
நீங்கள் உங்கள் நிலக்கடலை பொட்டலத்தை
பிரிக்கிறீர்கள்
நான் என்னுடையதை
பிறகு நாம் நம் அழகிய புட்டங்களை
எழில்பட ஆட்டினோம் மரணத்தின் முகத்திற்கெதிராக

0

மல்லாந்து படுத்திருக்கிறது வாராணசி
காலம் அதன் கழுத்தில் ஆபரணமாய்
அமரத்துவம் அதன் தலையணையாய்
வாராணசி இன்னும்
தூங்கிக் கொண்டிருக்கிறது
ஏழு ரத சூரியனும்
வந்துவிட்டது
வாராணசியை எழுப்பவேண்டாமா
ஆளுக்கொரு திசையில்
திகைத்து நிற்கின்றன
ஆலய மணிகள்

0

துறவிகள் பயணிகள் திருடர்கள்
ஆய்வாளர்கள் நீங்கள், நான்
என எல்லோரும்
குழுமியிருக்கிறோம்
கங்கைக்கு தீபாராதனை
பெண்கள் விளக்குகளை
மிதக்கவிடுகிறார்கள்
நரிகள் பரிகளான கதையாய்
அத்தனையும் ஓடங்களாக உருதிரிய
அதிலொன்றில் கேமராக்களுடன்
ஆய்வாளர்கள் ஏறிக்கொள்கிறார்கள்
பிறிதொன்றில்
உள்ளூர்வாசிகள் குழாம்
நான் இன்னொன்றில்
ஏறிக்கொள்ளப்போகிறேன்
நீங்களும் வருகிறீர்களா

திரும்புதல்

எங்கிருந்தோ ஒலிக்கின்றன
பூசாரிகளின் உச்சாடன குரல்கள்
முதலைகள் கண்களுக்குள்
நீந்துகின்றன
சேலை மாற்றிக்கொண்டிருக்கிறாள்
எனக்குள்ளிருக்கும் பெண்
இந்நீண்ட மத்தியானவேளையில்
கங்கை
வீதியில் பாய்கிறது
அதன் கரைகளில் புகை
உடுக்கையடித்தபடி ஆடுகிறது
நான் இன்னும் வீடுவந்து
சேரவில்லையோ