Author: பதாகை

பிரமலிபி – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

கடவுள் இந்த உலகத்திற்கு இனி இறங்கிவரப் போவதில்லை
கைவிடப்பட்ட கூட்டத்தின் செயல்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றன
இந்த உலக விளையாட்டில் ஒவ்வொரு மனிதனும் பந்தயக் குதிரைதான்
என்னைப் போன்ற முடமான குதிரை மீது யார்தான் பணம் கட்டுவார்கள்
இந்த நாடகத்தில் பாத்திரத்தோடு நான் ஒன்றிப் போய்விட்டேன்
விதியின் கைகள் என் தலையில் என்ன எழுதி வைத்துள்ளதோ
தாகம் கொண்ட மீனுக்குத் தெரியாது தான் தண்ணீரில் இருக்கிறோமென்று
வாழ்வுநெறிகளைப் போதிக்கும் மறைகளெல்லாம்
கடவுளால் அருளப்பட்டவைதானா என்று சந்தேகம் எழுகிறது
எத்தனை இரவுகள் காத்திருப்பது
இன்றாவது எனது வாழ்வில் வசந்தம் வீசாதா என்று
ஆலயங்களில்கூட தெய்வீகத்தன்மை வெளிப்படுவதில்லை
இந்தப் பாவிகளின் கூடாரத்தை நிர்வகிப்பது யார், கடவுளா? சாத்தானா?
ஆயுள் முழுவதும் உலக அரங்கில் பார்வையாளனாகவே இருக்க வேண்டியதுதானா?
கடவுளே இந்த உலகத்தினரை நியாயந் தீர்க்கும் அதிகாரத்தை
யாருக்கு வழங்கி இருக்கிறாய்
ஆத்மா சோதனைக்குள்ளாகும் போது என் மனவானம் உனது அருள்மழைக்காக ஏங்கி நிற்கிறது
கெளபீன சந்நியாசியிடம் லெளகீக பிச்சையைத்தானே நாம்
இன்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
மரணம் வரட்டும் என்று கல்லறையில் காத்துக் கொண்டிருக்க முடியாது
பசி வயிற்றைக் கிள்ளும்போது கடவுள் இருக்கும் திசைகூட மறந்துவிடும்
எண்ண அலைகளின் தோற்றுவாயை தேடிக் கொண்டிருக்கிறேன்
மனம் சலனமற்று இருக்கும் போதுதான் அதில் கடவுளின் முகம்
பிரதிபலிக்க முடியும்
தொலைத்த பின்புதான் தெரிந்தது வாழ்க்கை பொக்கிஷமென்று.

2

காகிதத்தில் உணவு என்று எழுதினால் வயிறு நிறைந்துவிடுமா
இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களே
வாழ்க்கையின் வேர்களாக இருக்கிறார்கள்
நினைத்ததை அடைந்தவுடன் வேறு ஒன்றை நோக்கி
மனம் தாவிவிடுகிறது அல்லவா
ஏதோ ஒன்றை நோக்கி தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கின்றோமே ஏன்
பூத்துக் குலுங்கும் மரங்களில் தானே பறவைகள் கூடு கட்டுகின்றன
ரசிப்பதற்கு யாருமற்ற வனாந்திரத்திலும் பூக்கள் பூக்கத்தானே செய்கின்றன
உன்னிடம் சன்மானம் எதிர்பார்த்தா குயில் கூவுகிறது
இரவுப்பொழுதில் யாரோ உன்னை பின்தொடர்வதுபோல்
இருப்பதை அவதானித்து இருக்கின்றாயா
புனிதத்தின் காலடியைத் தேடித்தானே கடவுள் அலைந்து கொண்டு இருக்கின்றான்
மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத சுவர்கள் பூமியைச் சுற்றி இருக்கத்தானே செய்கின்றன
எல்லைகளை வகுத்துவிட்டு கடவுள் எங்கே சென்றுவிட்டான்
விதிவலை இழுக்கப்படும்போது அகப்பட்டுக்கொண்டவர்கள்
துடிக்காமல் என்ன செய்வார்கள்
சித்தர்களே புனிதத்தின் மீது காறி உமிழ்ந்தவர்கள்தானே
இன்னும் எவ்வளவு காலம் இந்த உடலைச் சுமந்தலைவது
அடைக்கலம் கொடுத்ததற்கு நன்றி கூறவா கோயிலுக்குச் செல்கிறோம்
பிச்சைக்காரன் உன்னிடம் எதர்பார்ப்பது சில்லரைகளை மட்டும்தானா
மகத்தானவர்கள் கருணையினால்தானே மற்றவர்களிடமிருந்து வேறுபட்டார்கள்
மன்னிப்பது கடவுளின் குணமல்லவா
சக்கரவர்த்தியானாலும் மரணத்திற்கு முன்பு மண்டியிட்டுத்தானே ஆகவேண்டும்
நாளையைப் பற்றிய எதிர்பார்ப்பில் தானே
வாழ்க்கையின் உதாசீனங்களைப் பொறுத்துக் கொள்கிறோம்
கடவுளே வந்து சென்ற மெசியாவுக்கு நான் சாட்சியாக இருப்பது
உனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறதா
கடவுளே உனக்கு கருணை கிடையாது என்னைக் காயப்படுத்திப்
பார்த்துக்கொள் குருதி வழிகிறதா என்று
ஆடம்பரமான மாளிகையில் எவ்வளவு சுகபோகத்தில் வாழ்ந்தாலும்
கடைசியில் மனிதனை மண்தானே தின்கிறது.

3

தூக்கத்திற்கு தூண்டில் போடுகின்றன விழிகள்
மனம் இந்த இரவை மட்டும் கடந்துவிட்டால் போதும் என்கிறது
வழக்கத்திற்கு மாறுதலாய் நிசப்தமாய் இருக்கிறது வானம்
இந்த உலகத்தின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை
மெய்யியலைத் தேடுபவர்கள் உங்களுக்கு பைத்தியமாகத்தான் தெரிவார்கள்
இந்தப் பூமிக்கு யாரும் முக்கியஸ்தர்கள் இல்லை
மரணஅலைகள் ஒவ்வொரு நாளும் கொண்டுபோய்க் கொண்டிருக்கிறது உயிர்களை
இந்த உலகத்தின் வேர்களை அறிந்து கொள்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல
பிறப்பு, இறப்பு இரண்டிலொன்றை தேர்வு செய்யவேண்டிய
இக்கட்டான நிலை எனக்கு
இந்த உலகம் இரவுப்பொழுதை சாத்தானுக்கு ஒப்புக் கொடுத்துவிட்டது
மரணப்பறவை எனக்கான செய்தியை எப்போது கொண்டுவரும்
வாழ்க்கை என்னவென்று புரியாமலேயே இவ்வளவு
காலங்கள் ஓடிவிட்டன
எனது மரணத் தாகத்தைத் தணிக்க பெருங்கடல் போதாது
பால் வேற்றுமையிலிருந்தும், தோல் விவகாரத்திலிருந்தும்
இந்தப் பிறவிலாவது விடுபட்டுவிட முடியுமா
இந்தப் பாவிக்கு பின்னாலிருப்பது மரணத்த்தின் காலடிகள்தானே
மரணதேவதை என்னுடன் விளையாடுகிறது
கடவுளை அடைவதற்கு உன்னதமான வழி
தற்கொலைதான் என்று சொல்லிச் சிரிக்கிறது
இந்த இரவுப்பொழுது நான் சபிக்கப்பட்டவன் என்பதை உறுதிப்படுத்துகிறது
பாவத்தின் சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்
துயரப் படுக்கையில் எவ்வளவு நாள் காலங் கழிப்பது
கடவுள் செய்யும் சித்ரவதைகளுக்கு
மரணம் முடிவு கட்டிவிடும் அல்லவா?

4

இந்த உலகைப் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன
மனிதனின் வேர்கள் பலமிழந்துவிட்டன
சாதாரண தரைக்காற்றுக்குக்கூட தாங்காது அவைகள்
தான் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடம்
மயானத்தின் மீது எழுப்பப்பட்டது என அவனுக்குத் தெரியாது
இந்த உலகில் செயல்படும் விதிகள் என்னைக் குழப்பமுறச் செய்கின்றன
அல்லல்படுவோரின் கூப்பாடுகளெல்லாம்
வெற்றுக் கூச்சல் என புறந்தள்ளப்படுகின்றன
இரவுக் கடவுள் தரும் உறக்கம்
மனிதர்களை நரக இருளிலிருந்து விடுவிக்கிறது
கடவுளின் ஆளுகைக்குள் இந்தப்பூமி மட்டும் உட்படாததன் ரகசியம் என்ன
ஆதாமின் சந்ததிகள் கடவுளின் சாம்ராஜ்யத்தில் ஒருநாளும் நுழையமுடியாதா
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடத் தொடங்கும்போது
தெய்விக ஒளி புலப்பட ஆரம்பிக்கிறது
இந்த உலகத்தில் எல்லாவற்றுக்கும் ஒருவிலை இருக்கின்றது
மெய்யான வாழ்வுக்கு பரிசுத்தம் தேவையாய் இருக்கிறது
ஆற்றைக் கடக்க உதவியதற்காக தோணியை தோளில் சுமந்தலைய முடியுமா
இந்த உலகம் கனவு என்று தெரிய வரும் நாளைத்தான்
நாம் மரணம் என்கிறோம்
நிர்பந்தித்து செய்ய வைக்கும் எதுவும்
தனது புனிதத்தன்மையை இழந்துவிடுகிறது
பூமியின் விடுதலை ஏக்கத்தைத்தான் மனிதன் பிரதிபலிக்கிறான்
உடலை எது செலுத்துகிறது என்று நாம் எண்ணிப் பார்த்தோமா
திகட்ட திகட்ட சுகத்தை அனுபவிப்பவர்கள்
தாம் யாருக்கு கருவியாய் இருக்கிறோம் என்பதை உணர மாட்டார்கள்
நூல்கொண்டு ஆடும் பொம்மைகளுக்கு
சுதந்திரக் கனவென்பது விடியாத இரவாகத்தான் இருக்கப் போகின்றது
வாழ்க்கைப் புத்தகத்தில் என் பக்கங்களை வெற்றிடமாக விட்டுவிடுங்கள்
நான் அர்த்தப்படுத்திக் கொண்ட உலகை சிருஷ்டிக்க நான் கடவுளல்ல.

ஓட்டை பைக்கற்று – இஸ்ஸத் குறுங்கதை

இஸ்ஸத்

கடந்த சில நாட்களாக அவனிடம் பணம் என்று இருந்ததே அந்த 20 ரூபாய் மாத்திரம்தான். அந்த நோட்டில் உள்ள படத்தில் இருக்கும் இரு மீனவர்கள் மீது எவரோ பீடி பற்ற வைத்தபோது விழுந்த தீப்பொறியினால் ஏற்பட்ட ஓட்டையும், அதன் அச்சிடப்பட்ட திகதி 1995.11.16 என்பதுவும், அதன் ஓரங்களில் ஆட்டினுடையதோ அல்லது கோழியினதோ குருதி தோய்ந்து இருந்ததையும் தூக்கத்திலெழுப்பி கேட்டாலும் விபரமாக சொல்லுமளவு அந்த நோட்டோடு அவ்வளவு ஐக்கியமாயிருந்தான். அவன் அதை செலவு செய்யாமல் இருப்பதற்கு காரணம்: தன்னிடமும் பணம் இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் மாத்திரமே.

பல நாட்கள் அந்த பணத்தை வைத்துக்கொண்டு தனது பணக்கார தோரணை கருதி அதனைக் கொண்டு தனது பசியை போக்கிக் கொள்ளாமலேயே இருந்தவனுக்கு இன்று யாரோ ஒரு புண்ணியவானினால் புரியாணி பார்சல் கிடைத்துவிட்டது. அதனை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரை கட்டுக்கு சென்று குளித்துவிட்டு தனது பையினுள் இருந்த ஆடைகளுள் எது நல்ல ஆடையோ அதை மாற்றிக்கொண்டு அவ்விடத்திலேயே தனது உணவு பொட்டலத்தை ஆசையாக பிரித்து வயிறு முட்ட உண்டு முடித்தான். என்னதான் புரியாணியாக இருந்தாலும் அதை உண்ட பிற்பாடு பீடா ஒன்று போட்டால்தான் அது இராஜ விருந்தாகும் என்றபடி தனது 20 ரூபாயை செலவழிக்க முடிவெடுத்தவனாய் தனது தோல் பைக்குள் இருந்த பணத்தை எடுத்து காற் சட்டைப் பைக்குள் போட்டுக்கொண்டு சற்று தொலைவிலிருந்த பீடா கடையை நோக்கி ஓட்டமும் நடையுமாக போய்ச் சேர்ந்தான்.

பீடா கடை முன்பாக நின்று கொண்டு வயிறு முட்ட சாப்பிட்டதனால் வந்த ஏப்பத்தை விட்டபடியே பணத்தை எடுப்பதற்காக வேண்டி தனது காற்சட்டைப் பைக்குள் கையை விட்டவனுக்கு கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் அப்போதிருந்த அவனது இரு நண்பர்களுடன் ஹோட்டலில் ரீ குடித்துவிட்டு ஹோட்டலின் முன்பாக சாய்ந்து கிடந்த ஆலை மரத்தின் தடித்த தண்டின் மீது உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி ரவை அவனது தொடையில் தற்காலிக தஞ்சமடைந்ததினால் ஏற்பட்ட வடுவை வருடும் பாக்கியம் மாத்திரமே கிடைத்தது.

அவன் தனது பைக்கற்றுக்குள் கையை விட்டு துலாவியபடியே தனது பணம் எங்கோ விழுந்து விட்டதை ஊர்ஜிதம் செய்து கொண்டே கையை பைக்கற்றின் அடி ஆழம் வரை விட்டு ஓட்டையான காற்சட்டை பைக்கற்றை புரட்டி வெளியே எடுத்து அதன் இடுக்குகளில் இருந்த மண்ணையும், தூசிகளையும் துப்பரவு செய்தபடி எதுவித சலனமுமின்றி தனது ஏமாற்றத்தை சிறு புன்னகையால் தவிர்த்தவனாய் நடக்கலானான்.

அவனின் புன்னகையிலும், தொய்வற்ற நடையிலும், தான் இன்னும் எவ்வளவு இழப்பையும் தாங்குவேன் என்றும், இன்னுமொரு புதிய அல்லது பழைய பதிப்பையுடைய 20 ரூபாய் நோட்டு கிடைக்காமலா போய்விடும் என்ற நம்பிக்கையும் வலிகளும் பல ஏமாற்றங்களும் கண்ட முதிர்ச்சியும் இல்லாமலில்லை.

 

ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’- வான்மதி செந்தில்வாணன் மதிப்பீடு

வான்மதி செந்தில்வாணன்

தங்களது எழுத்துகளில் மேலோட்டமான கிளர்ச்சியினை கதை முழுக்க பரவலாக்கி வாசகர்களைத் தெளிவற்றதொரு மயக்கநிலையில் ஆழ்த்தும் படைப்பாளிகளுக்கு மத்தியில் பொதுப்பார்வையில் மிகவும் “கீழ்த்தரம்” என எண்ணக்கூடிய ஒரு சமூகத்தைத் தனது கதைக்கென தெரிவு செய்ததோடு ஒப்பனையற்ற எழுத்தினை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய இலக்கியத்தரம் வாய்ந்த படைப்பாளிகளுள் முதன்மையான ஆளுமையாக திகழ்கிறார் ஜி. நாகராஜன். இவர் ஒரு வழமையான எழுத்தாளர் அல்லர். இவருடைய கதாபாத்திரங்களும் வழமையானவை அல்ல. பெரும்பாலானோரால் ஒதுக்கப்பட்ட, பெரும்பாலானோர் எழுதத் தயங்கிய அல்லது எழுத மறுத்த ஒரு களத்தெரிவில்தான் வாசகர்களின் தரமான அபிமானத்தைச் சம்பாதித்துள்ளார். தனது தெரிவுக்களத்தில் வாழ்வியல் குறியீடுகளையும், யதார்த்த தத்துவங்களையும், செறிவான உள்ளடக்கங்களையும், தனித்தன்மையான வடிவமைப்பையும் தனக்கென சிறப்பான, ஆனால் எளிய, சத்தான, மொழியினைக் கையாண்டு திட்டமிட்ட எழுத்தினைச் செதுக்கியதன் மூலம் இலக்கியத்தில் வலுவான காலடித்தடம் பதித்துள்ளார்.

“நாளை மற்றுமொரு நாளே” நாவல் ஒரு மனிதனின் ஒரு நாளுடைய வாழ்வின் நினைவுகூர்தலின் அடிப்படையில் கதையாக்கம் பெற்றுள்ளது. நமக்கென அடுத்த நாளின் எந்த ஒரு காட்சியும் நாவலில் கிடையாது. ஆக, நமக்கான சிந்தனை, விரிவான, கட்டற்ற இயக்கம் கொண்டிருப்பினும் இருப்பதை மட்டுமே நாம் பேச அனுமதிக்கப்படுகிறோம். இந்நாவலில் தனித்தனி அத்தியாய பிரிவுகள் ஏதுமின்றி பற்பல கதைகள் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு இறந்த மற்றும் நிகழ்கால நிகழ்வுகளென ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாய்க் கோர்க்கப்பட்டுள்ளன. வாசகர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் ஒருவித வியப்பளிக்கும் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“குறத்தி முடுக்கு” க்ளாசிக் குறுநாவலாகட்டும், இந்நாவலாகட்டும், நீள் பக்கங்களுடையவை எனச் சொல்வதற்கு வாய்ப்பின்றி வாசிக்க வாசிக்க விரைவில் கரைந்துபோகும் பக்கங்களையே கொண்டுள்ளன.மேலும், எண்ணற்ற பல சிறப்பான சிறுகதைகளையும், ஒரு நல்ல நாவலையும் ஒருசேர வாசித்தது போலான திருப்தியுணர்வு மனதிற்குக் கிட்டுகிறது. ஒரு சுருள் நுனியில் தொங்கவிடப்பட்டிருக்கும் குரங்கு பொம்மையானது பேருந்தின் நகர்விற்கேற்ப அசைவுறுவதுபோல தமது கதையமைப்பின் மூலம் வாசகர் மனதைத் திடமாகப் பற்றியபடி உலுக்கிவிடுகிறார். பேருந்து நின்றபிறகும்கூட, பொம்மையிடம் சன்னமான அசைவு இருப்பதைப்போல வாசித்து முடித்த பிறகான மனம் கதையின் கூறுகளை அசை போடுவதிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.

நேர்மறையும் எதிர்மறையும் கலந்து இயங்குவதான இச்சமூக வாழ்வியலில் எதிர்மறையினை மட்டுமே தெரிவுசெய்து தனது கதையினை மிகவும் திறமையாக நகர்த்திச் செல்கிறார். முந்தைய நாளில் கோவில் வாசலில் மீனாவைக் கண்ட கந்தன் அவளைப் பின்தொடர்ந்து சென்று, “வேசி” எனத் தெரிந்தபிறகும் அவளது சம்பாத்தியத்தை வாழ்நாள் முழுக்கச் சுரண்டி, உடல் உழைப்பற்ற சொகுசான வாழ்வினை அனுபவிக்கத் திட்டமிடுகிறான். எண்ணியபடியே அடுத்த நாள் அவளை விலைக்கு வாங்கிவிடுகிறான். ஆக, மீனா கந்தனுக்குக் கிடைத்துவிடுகிறாள். கந்தனின் நண்பனான “முத்துச்சாமியின்” ஆசைப்படி “கைம்பெண்” அவனிடம் அடைக்கலமாகிறாள். காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரி “சுப்பையா செட்டியார்” நினைத்ததுபோலவே ஆங்கிலோ இண்டியப் பெண்ணான “ஐரீன்” அவருக்குக் கிடைத்துவிடுகிறாள். தன் மீது துளியும் விருப்பமற்ற, மீன் விற்கும் பெண்ணான “ஆயிசா பீபி” க்கு பல இடையூறுகளை விளைவித்ததன் மூலம் அவ்வூரின் செல்வாக்குமிக்க முத்துக்கோனாரிடம் அவள் அடிபணிகிறாள். இவர்களில் மீனா மட்டுமே கந்தனுக்கு மனைவி எனும் உரிமையினைப் பெறுகிறாள். மற்ற அனைவருமே ஆசைக்கிணங்கும் தற்காலிக உறவுகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். மேலும், தான் நினைத்தது போலவே கந்தன், லாட்ஜில் இருப்பவரிடம் திட்டம் போட்டு பணம் பறிக்கிறான். அதுமட்டுமன்றி வீட்டை விட்டுக் கிளம்புகையில் எந்த நோக்கத்துடன் கத்தியை எடுத்து உறையினுள் திணித்தானோ இறுதியில் யதார்த்தமாக அதைச் செயல்படுத்தியும் முடிக்கிறான். இப்படியாக, அனைத்து நிகழ்வுகளும் எதிர்மறையாக இருப்பினும் அவரவர் விருப்பப்படி அவை நியாயமாக நடந்தேறிவிடுகின்றன.

இவரின் கதாபாத்திரங்களுக்கு எவ்வித கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுங்குமுறையோ, ஒளிவுமறைவோ, ஒப்பனைகளோ கிடையாது. விசித்திரமான இவரின் கதாபாத்திரங்கள் கதைதோறும் அழுகையை மௌனமாய்ச் சுமந்து திரிகின்றன. கதாபாத்திரங்களும், கதையின் பற்பல நிகழ்வுகளும் நமது மனவோட்டங்களை வெவ்வேறு சூழல்களில் கேள்விக்குட்படுத்துகின்றன. அவ்வாறு, மனமானது கேள்வி எழுப்பத் துணிகையில் “நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால் இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்? என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள் “, என்று வாசிக்கும் யாதொருவரையும் மிரளச் செய்கிற தொனியில் தனது கருத்தை முன்வைக்கிறார் கதாசிரியர். நமது மனம் தயங்கித் தயங்கி ஏற்க மறுப்பினும் உண்மை அதுவாகத்தான் இருக்கிறது என அடித்துச் சொல்லும்படி அமைந்துள்ளது அவரின் கருத்து. இவரது கதாப்பாத்திரங்களின் இயல்புகளை வாதத்திற்கு வேண்டுமானால் நாம் எடுத்துக் கொள்ளலாமேயொழிய அக்கதாபாத்திரங்களில் நமது தலையீடு எதுவும் செல்லுபடியாகாது. கதையைப் பொறுத்தவரை இது சரி, இது தவறு எனப் பிரித்தறிய வாய்ப்பின்றி போவதுடன் தனிநபரின் புரிதலுக்கு சில சம்பவங்கள் தவறெனப் பதிந்தாலும் கதையைப் பொறுத்தவரை அவை மிகச்சரியே.

மனிதனிடம் நிலவும் இல்லாமையும், இயலாமையுமே அவனது பிரத்தியேகப் பிரச்சினைகளாக அமைந்துவிடுகின்றன. வாழ்வின் பெரும் பிரதானமான பணத்தின் பின்னே நாம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலும் அதை மீறிய ஒரு அத்தியாவசியத் தேவை மனித சமூகத்திற்கு மிகவும் அவசியமாகிறது. பொருளாதார விளிம்புநிலையில் வாழும் அடித்தட்டு மக்களில் ஆரம்பித்து இவ்வுலகம் முழுமைக்கும் “பாலுணர்வு” என்பது மிகவும் அவசியமான ஒன்று. இவ்வுணர்வை மையமாய்க் கொண்டுதான் வாழ்க்கைச் சக்கரம் விடாப்பிடியாய் சுழன்று வருகிறது. எனவே இதனை வாழ்க்கைச் சக்கரத்தின் “அச்சாணி” எனவும் குறிப்பிடலாம். உடல் சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படும்போது அதுவே தனித்த உளவியல் ரீதியான பல பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைகிறது. பெரும்பாலும் மனிதன் அகச்சிக்கலிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்காக பாலுறவை நாடுகிறான். மற்ற உயிர்களுக்கு இவ்வுணர்வு இயல்பாகவே அமையப்பெற்றுள்ளது. பொதுவாகவே, நமது கலாச்சாரம் பாலியலை வெளிப்படையாகப் பேச அனுமதி மறுப்பதுதான் பாலுணர்வைத் தூண்டவும், அதுசார்ந்த இன்னபிற தொடர்ச் செயல்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது. ஒரு சமூகம் தனக்குரிய ஒழுக்கப்பாதையில் பயணிக்க “பாலியல் நுண்ணறிவு” அவசியமாகிறது.

ஒரு மனிதனின் தேவையை நிர்ணயிப்பதில் அதிகபட்ச உரிமைக்கு உரித்தானவன் அவன் மட்டுமே. தவிர, தனது தேவையை அடுத்தவர் மீது திணிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. ஆனால் திருமண பந்தத்தில் இணையும்போது அங்கு ஒருவரின் தேவையை எவ்வித குறைவுமில்லாமல் மற்றவர் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உருவாகிறது. ஏன்…, கட்டாயம் என்றே சொல்லலாம். அங்கு “போதாமை” என்ற ஒன்று ஏற்படுமானால் மெதுமெதுவாக ஒரு வெற்றிடம் உருவாகிறது. இந்த வெற்றிடப்பரப்பு அதிகமாகும்போதுதான் சிக்கல் ஆரம்பமாகிறது. இதுவே சமூக ஒழுக்கச் சீர்கேட்டிற்கு அடித்தளமாக அமைகிறது. இந்நாவலில் மூக்கனின் மனைவியான “ராக்காயி” என்கிற “மோகனா” தன் கணவனுடன் இல்லற வாழ்வில் இணைந்திருக்கும்போதே இந்த வெற்றிடம் காரணமாக விபச்சார வாழ்வில் ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.

ஒழுங்கற்ற ஒரு சமூகச் சூழலின் பாலியல் சித்தரிப்புகள் நாவல் முழுமைக்குமே படர்ந்திருக்கின்றன. இந்நாவலைப் பொருத்தமட்டில் ஜி. நாகராஜனின் பாலியல் எழுத்து பாலுணர்வைத் தூண்டுவதாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விடம் ஒரு புணர்வுச்சூழலின் மிதப்புநிலை போட்டுடைக்கப்பட்டதன் காரணமாக பல நுட்பமான உணர்வுகளும், வாதங்களும் வாசகர் மனதை ஆட்கொள்கின்றன. மீனாவுடன் புணர்விலிருக்கும்படியான ஒரு சூழலில், மற்ற ஆண்களுடனான அனுபவங்களைக் கந்தன் அவளிடம் கேட்டறியும்படி சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு கதை நிகழ்வில் அவனது காத்திரமான ஒரு மனோபாவமும், ஆணாதிக்கமும் தெள்ளத்தெளிவாக புலனாகிறது. மீனா அதற்கு நாசூக்காக பதிலளிப்பினும் அவளது மனவலியை வாசகர்கள் தொட்டுணர முடிகிறது. இதுபோலவே தி. ஜானகிராமனின் “மரப்பசு” நாவலில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் “அம்மணி” வீடு திரும்பியதும் தனது புணர்வு அனுபவங்களை “கோபாலி”யிடம் பகிர்வதுபோலான ஒரு சித்தரிப்புக் காட்சி இடம் பெற்றுள்ளது.

கதை முழுக்க பெண் மற்றும் பண வேட்டைகள் நடைபெற்றவண்ணம் உள்ளன. ஆணாதிக்கம் மிக்கச் சமூகம் இயங்குகிறது. மேலும், ஆண் மையநோக்கில் கதை நகர்வு அமைந்துள்ளது எனவும் குறிப்பிடலாம். மனித வாழ்விற்கான இன்றியமையா தேவை பணம். பணத்திற்கென செய்யும் எந்தவொரு காரியமும் தவறல்ல எனும் உத்தி நாவல் முழுக்க பரவலாகக் கையாளப்பட்டுள்ளது. இந்நாவலைப் பொருத்தமட்டில் பணம் என்பது ஒருவனைப் பாலியல் தொழிலாளியாக்குகிறது, பொய் பேச வைக்கிறது, ஏமாற்று வித்தையைக் கற்றுத் தருகிறது, இறுதியில் கொலைகாரனாக்குகிறது. கதையின் ஒரு நிகழ்வான செய்தித்தாள் கொலை வழக்கும்கூட பணத்தை பிரதானமாகக் கொண்டதுதான்.

“பணம் ஒரு மானங்கெட்ட விஷயம்”, எனும் தத்துவத்தை அந்தோணி கதாபாத்திரத்தின் வாயிலாக முன்வைக்கிறார் ஆசிரியர். தன் பால்ய காலத்து நிர்வாண ஓட்டத்தினை அந்தோணி நினைவுகூர்வதின் முலம் இக்கூற்று ஆணித்தரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித வாழ்வின் பொக்கிஷமாகத் திகழும் பணத்தை மானங்கெட்ட விஷயம் எனத் தயக்கமின்றி போட்டுடைக்கிறார். மேலும், பணம்_ மானங்கெட்ட விஷயம் என்பது “ஞானம்” என தத்துவார்த்தப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு முரண்களின் கலப்பே வாழ்வாகிறது.

தன் வாழ்வில் எவர் மீதும் நம்பிக்கையற்று, எச்செய்கைக்கும் வருத்தமற்று பணத்தை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு பயணிக்கும் கந்தன், சலூன் கடையில் அமர்ந்திருக்கையில் அங்கு வரும் இளைஞனிடம் ராசிபலன் வாசிக்கச் சொல்லும் நிகழ்வு மட்டுமே அவனுக்கு வாழ்வின் மீது பலம் பொருந்திய ஒரு பிடிப்பினை ஏற்படுத்துவதாகப் படுகிறது. ஒருமுறை கந்தனின் நண்பன் முத்துச்சாமி, “நீங்க வாழ்க்கைலே எதைச் சாதிக்கனும்னு திட்டம் போட்டிருக்கீங்க?” என்று கந்தனிடம் எழுப்பும் வினாவிற்குச் சிரித்துக்கொண்டே “எந்தத் திட்டம் போட்டு சொர்ணத்தம்மா வயத்துலே வந்து பொறந்தேன்?” எனக் கூறும் பதில் சிலிர்ப்பை ஏற்படுத்துவதோடு சற்று நேரம் அவ்விடத்தே நம் எண்ணத்தை உறையவைக்கிறது.

ஆன்மீகம் தொடர்பாக, கோவில் எனும் சொல் பெயரளவில் இருக்கிறதே தவிர வழிபாடு என்பது எவ்விடத்திலும் இல்லை. மேலும் சொல்லளவில் “சாமியார்”, “டிரம் சாமியார்”, எனும் பெயர்களை மட்டுமே ஆசிரியர் உலவவிட்டுள்ளார். வீடென்றால் கடவுள் படங்கள் நிச்சயம் இருக்கும். இக்கதையினை “கடவுள் படமற்ற வீடு” எனக் கூறலாம்.

ஒரு சமூகம் முழுமைக்கும் பணம் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பட்சத்தில் அதை நோக்கிய பயணமே பெரும் சவாலாக அமைந்துவிடுகிறது. பணமானது ஒவ்வொருவரிடமும் இருப்பளவில் மாறுபடுகிறது. பணத்தைப் பொறுத்தவரை ஈட்டல் மற்றும் இழத்தல் எனும் இரு செயல்கள் சமூக நிலைப்பாடுகளாக அமைந்துள்ளன. நமது சமூகம் மேல்தட்டு, நடுத்தரம் மற்றும் அடித்தட்டு மக்களைப் பிணைத்தவாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகையினரின் ஈட்டல் அளவுகள் வேலையின் தன்மைக்கேற்பவும் இழத்தல் அளவானது செலவினம் பொறுத்தும் அமைகிறது. பெரும்பாலும், ஈட்டலில் அதிக பணத்தை இருப்பாகக் கொண்டிருப்பவர்கள் முதலாளிகளாகவும், மற்றவர் தொழிலாளிகளாகவும் உள்ளனர்.

பொதுவாக ஒருவரிடம் எவ்வளவு இருப்பு இருப்பினும் மற்றவரிடம் சுரண்டும் நிலைப்பாடு சமூகத்தில் பரவலாகத் தொடர்ந்து நிலவி வருகிறது. இத்தகைய சுரண்டலைத் தடுப்பதற்கென பல்வேறு புரட்சிகள், பல்வேறு நாடுகளில், பல்வேறு காலகட்டங்களில் வெடித்தன. அவற்றுள் முதலாளித்துவமற்ற நோக்கினை அடிப்படையாய்க் கொண்டு தொழிலாளர் நலன்கருதி சுரண்டலை ஒழிப்பதற்கென கொண்டுவரப்பட்ட பொதுவுடைமைத் தத்துவமான “கம்யூனிசம்” பற்றிய மேலோட்டமான உரையாடல் நாவலில் இடம்பெற்றுள்ளது. ஒரு சமூகம் மாற வேண்டுமானால் தனித்த சமூகவாசிகளின் ஒட்டுமொத்த ஆதரவும் அவசியம். தனி மனிதன் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள முன்வர இயலாத நிலையில் ஒரு சமூக மாற்றத்தை எவ்வாறு கொண்டுவர இயலும்? எத்தனை புரட்சி தோன்றி என்ன செய்ய? சுரண்டல் எப்படி, எப்போது தடைபடும்? இப்படியான வினாக்களை எழுப்பி கதாபாத்திரங்கள் வாயிலாக நமது கவனத்திற்கு கொண்டுவருகிறார் கதாசிரியர்.

பணம், பாலியல் மற்றும் இவை சார்ந்து இயங்கும் சமூகம் இம்மூன்றையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, திரைத்துறையில் தரமான இலக்கியப் படைப்பை மையமாய் வைத்தோ அல்லது தழுவியோ எடுக்கப்படும் திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாகவே அமைகின்றன. தமிழில் வெளியான “சதுரங்க வேட்டை” திரைப்படம் முழுக்க முழுக்க இந்நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். நாவலில் இடம்பெற்றுள்ள “முள்ளங்கில நெறய பாதரசமிருக்கு, கோசுல சுண்ணாம்பிருக்கு, காலிபிளவர்ல தங்கம் தட்டுப்பட ஆரம்பிச்சிருக்கு”, எனும் பொய்ப்பிரசங்கமானது “பிதாமகன்” மற்றும் “சதுரங்க வேட்டை” திரைப்படங்களை நினைவூட்டுகின்றன. இந்நாவலை வாசித்து முடித்ததும் சதுரங்க வேட்டை திரைப்படத்தைக் கண்டுகளிப்பதென்பது சாரயக்கடையில் அமர்ந்திருக்கும் ஒருவன் இரத்தப்பொரியலுக்கு பச்சை மிளகாயைக் கடித்துக் கொள்வதுபோல் அப்படியொரு சுவை.

இவரது படைப்பு குறித்து கருத்து தெரிவிப்பதென்பது சாமான்ய காரியமல்ல. குறிப்பெடுக்க காகிதமும் பென்சிலும் கையுமாக அமர்ந்தால் புத்தகம் முழுமைக்குமே கரிக்கோடுகளும், அடைப்புக்குறிகளும்தான் நிரம்பியிருக்கின்றன. அதி தீவிரமாக நேசிக்கப்பட வேண்டிய இலக்கியப் படைப்புகள் இவருடையவை. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் இவரை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட வேண்டும். கொண்டாட்டமென்பது இவரது படைப்புகளை ஒன்றுவிடாது வாசிப்பதே.

ஜி.நாகராஜனின் ஓரிரு படைப்புகளை வாசிப்பதன் மூலம் மட்டுமே இவரது புனைவுலகம் பற்றிய சரியான புரிதல் வாசகருக்கு ஏற்பட வாய்ப்பில்லை. இவரது படைப்புகளை தொடர்ச்சியாக வாசிப்பதன் மூலம் இவரின் எண்ண ஓட்டங்களில் வாசகர்கள் தம் மனதை செலுத்தி உள்ளீடுகளின் சாராம்சங்களை தெளிவாகக் கண்டடையலாம். இத்தகையதொரு இலக்கியப் படைப்பினை வாசிக்காது தவறவிடுவதோ அல்லது வாசிக்காது கடந்து செல்வதோ நம் வாழ்வின் ஈடுகட்ட இயலாத ஒரு பேரிழப்பாக அமையும்.

_

மஜீஸின் இரு கவிதைகள்

மஜீஸ்

01

மலையொத்த சாபமொன்றை தோளில் சுமந்து
அடர்வனத்தின் வழியே அலைவுருகிறேன்.
சமுத்திர சமமாய் என் காதலையும், கருணையையும்
ஒரு கிண்ணத்தில் இட்டு நிரப்பியுள்ளேன்,
அருந்த வாவென்று சமிக்ஞை செய்கிறாய்-

சாபத்திற்கும், கருணைக்குமிடையிலான தூரத்தில்
யதார்த்தமும் பிரமையும் தாயக்கட்டையை
உருட்டி உருட்டி விளையாடுகின்றன

02

அரூபமான இப் பின்னிரவில்
காற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
வெள்ளை பூனைக்குட்டிக்கு
விம்பங்களை தொலைத்த இருட்டுக்கு
முகமில்லை என்ற சங்கதி
விடியும் வரையும் தெரிவதில்லை

வெயிலும் நீர்ப்பாம்புகளும், மரணத்தை ஸ்பரிசித்தல் – ஆ. ஜீவானந்தம் கவிதைகள்

ஆ. ஜீவானந்தம்

வெயிலும் நீர்ப்பாம்புகளும்

தெளிவாய் ஓடினாள் தென்பெண்ணை
நான் யார் என்று கேள், என்று சொன்னார்கள்
அவ்வாறே ஐயா…

மாலை நீர் இதமாயிருந்தது
நான் யாரென்று கேட்பது யாரென்று கேளெனச் சொன்னார்கள்
ஆம் சுவாமி……

நீர் மடியில் தலை சாய்த்திருந்தேன்…
நான் யாரென்று கேட்பவர் யாரென்பதைப் பார்ப்பவர்
யாரென்று பார், என்று சொன்னார்கள்….
அப்படியே குருவே….

மூச்சுத் திணறி வெண்மணலில் விழுந்தேன்…
என்னில் பாதியை நானே விழுங்கியிருப்பதை
வெயிலிடம் சொல்லி சிரிக்கின்றன நீர்ப்பாம்புகள்.

oOo

மரணத்தை ஸ்பரிசித்தல்

இறந்தகாலத்தை மிதி
மிதிக்க மிதிக்க அது நழுவுகிறதே

எதிர்காலத்தைத் துப்பு
ஐயோ அது முன்னரே குடலோரங்களில் உறிஞ்சப்பட்டுவிட்டதே

இப்பொழுதை உணர்…
உணர்கிறேன்… உணர்கிறேன்…..

இப்பொழுதின் சக்தியை ஏந்து
ஏந்துகிறேன்… ஏந்துகிறேன்…

இப்பொழுதின் வெம்மையில் உறைந்திரு…
இருக்கிறேன்… இருக்கிறேன்…

சரி, சொல், இப்பொழுது எப்படி இருக்கிறது
அது இறந்தகாலத்தின் இனிமையாகவும்
எதிர்காலத்தின் பயமாகவும் உள்ளது…

தப்பாகச் சொல்கிறாய், மீண்டும் சொல்…
அது சுட்ட தீயாகவும் குத்தப்போகும் முள்ளாகவும் உள்ளது….

இல்லையில்லை, மீண்டும் சொல்…
அது புணர்ச்சியாகவும் பிரசவமாகவும் உள்ளது

தோல்வியுற்றாய், போய் வா…
அது என் அழுகையாகவும் உங்கள் புன்னகையாகவும் உள்ளது.

மௌனமாய் மூடப்பட்ட கதவுகளுக்கு முன் நின்று நான் கதறினேன்
ஐயா, அது என் மரணமாக உள்ளது.