Author: பதாகை

குமாஸ்தா பூனை – ராஜேஷ் ஜீவா கவிதை

ராஜேஷ் ஜீவா

அழுகின்ற குழந்தைக்கு
விளையாட்டு காட்ட
மியாவ் மியாவ் என்றவன்
பின்னர் உற்றார் ஊராரிடமும்
பூனை மொழியில் பேசினான்
கனைத்தும் செருமியும்
பெருங்குரல் எழுப்பியும்
பழைய குரல் திரும்பவில்லை
அவனைப் பார்க்கும் வேளைகளில்
தெருநாய்கள் உர்ரென்று முறைக்க
வீடு இருக்கும் காம்பவுண்டில்
எலித்தொல்லையே இல்லையென
மனைவி பெருமை பேசினாள்
மருந்துக்கும் புன்னகைக்காத
உயரதிகாரி சூத்தைப்பல் தெரிய
நேற்று சிரித்தே செத்தார்
வீட்டுப்பூனையொன்று
குளித்து தலைசீவி பவுடர் பூசி
அலுவலகம் போய் வருவதை
ஊர்ப்பூனைகளும்
காட்டுப்பூனைகளும்
பேசிக்கொள்வதாய் கேள்வி

  நெடுஞ்சாலைப் பறவை – கமல தேவி சிறுகதை

கமல தேவி

மே வெயிலின் தாக்கம் காலையிலேயே தொடுகையென உறைத்தது. மெத்தையிலிருந்து எழுந்து சேலையை சரிசெய்து விடுதியின் முதல்தளத்தின் நடைபாதையில் வந்து நின்றேன். தொடுதிரையில் மாறும் நிறமென வானம் சட்டென்று ஔிக்கு மாறியது.

கிழக்கே பள்ளி மைதானத்தில் நாலைந்து ஆட்கள்  பந்தலைப் பிரித்து பின்னிய தென்னங்கீற்றுகளை ஒன்றின் மேலொன்றாக அடுக்கிக்  கொண்டிருந்தார்கள். தன்வசமில்லாத வேகத்தில் ஒருபயல் ஔியிலிருந்து ஏறுபவன் போல ஒரு தூணில் ஏறினான். கீழே ஔி ஒரு குளமென நின்றது. கையிலிருந்த கண்ணாடியை சேலைத் தலைப்பால் துடைத்து கண்ணில் மாட்டிக் கொண்டேன். பயலுக்கு கரிய மின்னும் முகம். அடர்ந்து படியாமல் தலைமுடி தலையைவிட தனியாகத் தெரிகிறது.

எனக்கான விழாவிற்கான பந்தல். இது போலொரு பந்தலை என் இருபத்தைந்து வயதில் வீட்டில் எனக்காக போட அப்பா ஆசைப்பட்டார். அறுபதை நெருங்கும் இந்தத் தருணத்தில் அன்று அறுபதிலிருந்த அப்பாவைப் புரிகிறது. இன்னேரம் எங்கோ சேலையை வரிந்து கொண்டு என் பேரப்பிள்ளைகளுக்காக அலைந்து கொண்டிருக்கலாம். எங்கு? என்று நினைத்ததும் அப்பா பார்த்த வரன்கள் சில பெயர்களாக நினைவிற்கு வந்தன.

கல்லூரிக்கு கிளம்புகையில் பெல் குடியிருப்பின் வெளித்தாழ்வாரத்தில் நாற்காலியில் அமர்ந்தபடி அடிக்கடி மாமா சொல்வார், “இந்த வயசில  பசங்க யாரையாவது பிடிக்கலாம் ஜென்ஸி… அவனை ஏன் பிடிக்குதுன்னு யோசிக்கனும்?”

“இல்ல மாமா,” என்று சொல்லிவிட்டு திரும்பி சிறிய சுவர் கண்ணாடியில், முகத்தில் பவுடர் அதிகமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன்.

“ கோபம் வருதில்ல? அதோட என்னோட கேள்வி புரியலதானே?”

“ஆமாம் மாமா.புரியல… என் மேல நம்பிக்கயில்லைன்னு எரிச்சலா வருது”

“எரிச்சல் வந்தா பரவாயில்ல. ஒன்ன நெனச்சுப் பாரு… ஒன்னோட ஒடன்பிறந்த ஐஞ்சு பேருக்கு கிடைக்காத படிப்பு உனக்கு வாச்சிருக்கு. அத வச்சி எதாவது செய்யனுன்னு தோணனும்,” வடிவான நாசியை தேய்த்தபடி ஆறடியில் குனிந்து அமர்ந்திருப்பார்.

“வேலைக்கு போறேன் மாமா”

“நான் சொல்றது அதில்ல ஜென்ஸி. நேரமாச்சு கெளம்பு,” என்பார். காலை வேளைகளில் வெளியில் செல்கையில்தான் இப்படியான பேச்சுகளைத் தொடங்குவார்.

வீட்டுக்கு வருகிறவர்கள் போகிறவர்கள் அந்தக் கண்ணாடியை பார்க்காமல் செல்வதில்லை. அத்தை, “யாரு வீட்லவாவது செருப்புகழட்ற எடத்துல கண்ணாடி உண்டா?,” என்று சலித்துக் கொண்டால் மாமா, “வீட்டுக்குள்ள நிழலாடுது… இல்லன்னா லைட்டு பளீர்ங்குது… இங்க பாத்தா நம்ம முகம் சரியா தெரியுதில்ல,”என்பார்.

ஞாயிறு கோவிலுக்கு போகையில் வருகையில் அத்தை, “ஜென்ஸிக்கு கிளாரா பையனை பாக்கலாமா?” என்று ஒவ்வொரு தடவையும் கேட்கையில் மாமா முகத்தைச் சுருக்கி, “படிக்கட்டும்…” என்பார்.

“படிச்ச பின்னதான்… நம்ம பக்கத்திலயே வச்சிக்கலாமில்ல?” என்று அத்தை திரும்பி மாமாவின் முகத்தைப் பார்த்து வாயை மூடிக் கொள்வார்.

படித்து முடித்து வேலைக்கு இங்கு வந்து சேர்ந்து இரண்டு ஆண்டுகளில் மீண்டும் வீட்டிலிருந்து திருமண பேச்செழுகையில் நான், “வேணாம்…” என்றதும் “ஒன்னூ கன்னியாஸ்திரியா போனும்… இல்ல கல்யாணம்,” என்ற வாதம் வருகையில், “நான் எதையும் துறக்க முடியாது. தள்ளி வைக்கதான் முடியும்,”என்று சொல்லுகையில் மாமா புன்னகைத்தார்.

அப்படியே ஆண்டுகள் உடன்பிறந்தாரின் திருமணத்தோடு ஓடிக் கடந்தன. கடைசி படுக்கையில் மாமா, “கிளாரா பையனை வேணான்னு மறைமுகமா சொன்னது எதுக்குன்னா… அவன் உன் ஒசரத்துக்கு, பாந்தத்துக்கு நிக்க மாட்டான்னுதான்… யாரோ உண்டுல்ல?”

“அதுக்கு இப்ப என்ன மாமா?”

“நீ என்னம்மா நெனச்சுக்கிட்டிருக்க?”

“சரியா தெரியல மாமா… நீங்கதானே சொன்னீங்க? ஏதாவது செய்யனுன்னு…”

“அதனால…”

“முழுசா செய்யனுன்னா தனியாதான் இருக்கனும்”

“யாரு அப்படி சொன்னாம்மா?”

“மனசு சொல்லுது மாமா”

“குடும்பத்துல சுயநலவாதின்னு பேர் வாங்கப்போற”

“பரவாயில்ல. என்னை உணர்த்தின நீங்க புரிஞ்சிக்கிட்டா போதும்,” என்றதும் மாமா மேலே எதுவும் பேசவில்லை. தலையில் கை வைத்து, “எந்த வயசிலயும் இந்த முடிவு துயரம் தராததா இருக்க கர்த்தர் கூட இருக்கட்டும்,” என்றார்.

கீழே ஜெனிட்டா சிஸ்டர், “டீச்சர்… நாங்க கோயிலுக்கு போயிட்டு வரோம். குளிச்சிட்டு சாப்பிட்டு இருங்க. நாங்க வந்திடறோம்,” என்றார்.ஜெனிட்டாவுக்கு முப்பத்தைந்து வயதிருக்கலாம். காவிப் புடவை அத்தனை சரியா பொருந்துகிறது. அவரின் பழக்கமில்லாத பழுப்புக் கண்கள் யாரும் சொல்லாத எதையோ எதிர்நிற்பவரிடம் பேசுகையில் சொல்லும். சிஸ்டர் அவர்களுடன் நடந்து பள்ளி வாயிலைக் கடந்து இருபுறமும் வயல்கள் சூழ்ந்த பாதையில் நடந்து செல்வது தெரிந்தது. இன்றும் ஊருக்குள் நடந்து செல்ல வேண்டியிருக்கும் இடம்.

கல்லூரி முடித்ததும் வேலை என்று இங்கு அழைத்து வந்த அன்று, ஆளில்லாக் காடு என்று இருந்தது. நீண்ட ஒற்றைக் கட்டடம். கொஞ்சம் தள்ளி தங்குவதற்கு இரண்டு சிறிய தகரம் வேய்ந்த கட்டடங்கள். பல ஆண்டுகளுக்கு எங்கோ பெரிய கங்குக்கு பக்கத்தில் இருப்பதைப் போன்றே இருந்தது.

மேற்கே தேவாலய கோபுரமும், அதன் பின்னால் கொல்லிமலையும், வீட்டின் பொருளாதாரமும் பிடித்து வைத்திருந்தன. தேவாலய மைதானத்திலிருக்கும் கெபியில் மத்தலேனாளின் எதையோ இறைஞ்சும் கரங்களும் கண்களும், பாதி மண்டியிட்டும் மீதி பின்னால் செல்லத் துடிக்கும் கால்களையும், விரிந்த கூந்தலையும் பார்த்துக் கொண்டேயிருந்த ஒரு கோடை விடுமுறை நாளில் தனித்தேயிருப்பது என்று உறுதியாக மனதிற்கு சொல்லிக் கொண்டேன். சிலையென்றாலும் மத்தலேனாலுக்கு கேட்டிருக்கக்கூடும் என்று அடிக்கடித் தோன்றும்.

முதலாண்டிலேயே படிக்க வந்த பெண்பிள்ளைகளின் திடுக்கிடும் விழிகளும், நீர்மை கொண்ட கண்களும், அவர்களின் தகப்பன்மார்களும் தாய்மார்களும், அவர்களின் சுபாவமும் மனதை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தன. பிள்ளைகள் பத்தாவது தேறி வெளியேறி ஆசிரிய பயிற்சிக்கும், சேவா வேலைக்கும், சத்துணவு பணிக்கும் செல்லத் தொடங்கியதும் எனக்கு தனிமை மறந்து, ஒட்டிக்கொண்ட  மகிழ்ச்சியும் துள்ளலும், வீட்டையும் ஊரையும் மறக்கச் செய்தது.

இத்தனை ஆண்டுகளில் துள்ளல் மாறி ஒரு அமைதி வந்திருப்பதன்றி வேறு ஒன்றும் பெரிதாக மாறவில்லை. நேற்றோடு இங்குள்ள அனைத்திற்கும் நிறைவு விழா. எங்கு சென்றும் மீண்டு வர இங்கு என்று ஒன்று இருந்தது. இங்கிருந்து எங்கு செல்ல? இங்கு வர அங்கு விட்டு வந்த எதுவும் இன்று அங்கில்லை. அங்கு நான் ஒரு விருந்தாளி மட்டுமே என்று நன்றாகத் தெரியும். நீண்ட நேரம் நின்றதால் கால்கள் நடுங்குவதை உணர்ந்ததும் மெதுவாக படிகளில் இறங்கி கழிவறைக்கு சென்றேன்.

உணவு அறைக்கு சென்றதும் அமலி, “ டீச்சர்… இன்னக்கி எழுந்திருக்க  லேட்டாயிடுச்சோ?” என்றபடி டீ கொண்டு வந்தாள். நீள் மூக்குக்கும், அவள் நிறத்திற்கும் சிறிய பொட்டு வைத்தால் மறுமுறை பார்க்க வைக்கும் அழகி. எத்தனை முறை சொன்னாலும் சரி என்பாள், வைக்க மாட்டாள். டீயைக் குடித்து விட்டு மைதானத்து எல்லையோரமாக நடக்கத் தொடங்கினேன்.

கையிலிருந்த அலைபேசியில் ஐெயராக்கினி அழைத்தாள்.

“கோயமுத்தூருக்கு எப்பக்கா வர்ற? அழச்சிட்டு போக மாமாவோட எப்ப வரட்டும்?”

“புதுசா என்ன ஜெயா? நான் வர மாட்டனா?”

“நீ எங்ககூட வந்திருக்கா… பிள்ளைங்க ஆளுக்கொரு திசையில நிக்குது. நிம்மதியில்ல…அவரும் ரிடையர்டு ஆகி வீட்ல இருக்காரு. கடைசி காலத்திலயாவது சேந்திருக்கலாம். மாமாட்ட பேசு…”

“ஜென்ஸிமா… எப்ப வரட்டும்?”

“வேணாம் மாமா. நானே வர்றேன்”. வைப்பதற்குள் தம்பிகள் அழைத்தார்கள். அவர்களும் கிட்டத்தட்ட அதையே பேசி வைத்தார்கள். அப்பா எனக்கு எழுதி வைத்த தென்னந்தோப்பை தம்பிகளுக்கு மாற்ற வேண்டும்.

காலைவெயில் உறைத்தது. முந்தானையை செருகிக்கொண்டு முடியை அவிழ்த்து கொண்டையிட்டபடி நடந்தேன். தெற்குபக்க கம்பிவேலியைப் பிடித்தபடி நின்றேன்.

தினமும் பார்க்கும் ராசுதான். என் வயதிருக்கலாம். இங்கு வந்த காலத்தில் அனைத்திற்கும் பயந்திருந்த நாட்களில் இவருக்கும் பயந்திருந்தேன். இவரின் மகள் என்னிடம் படித்தபோதுதான் எத்தனைக்கு வாஞ்சையான மனுசன் என்று தெரிந்தது. அவர் மண்வெட்டியை போட்டுவிட்டு வந்தார். தலைப்பாகட்டை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டார்.

“வாங்கம்மா. நேத்தோட வேலையிலருந்து விடுவிச்சுட்டாங்களாமே? ஊருக்குள்ள போஸ்டரு ஒட்டியிருந்தாங்க. பள்ளிக்கூடத்தில விருந்துன்னு சொன்னாங்க,” என்றார். வியர்வை முகத்தில் வழிய கைகள் இரண்டையும் அவர் சேர்த்து பிடித்துக் கொண்டு பேசினார்.

“ஆமாங்க,”என்ற என் இயல்பான தன்மை அவரை பேசத் தூண்டியிருக்க வேண்டும்.

“கட்டாத மயிரும், உங்க நெறமும் பாத்து மலையாளத்தாளுகன்னு நெனச்சிருந்தேனுங்க”

நான் வழக்கத்துக்கு மாறாக புன்னகைத்தபடி, “பக்கத்திலதான்,” என்றேன்.

“செத்த இருங்க…” என்று அருகிலிருந்த வேம்படியில் வைத்திருந்த சிறு பையிலிருந்த வெள்ளைத் துண்டை எடுத்து இரு கைகளிலும் ஏந்தி, “எடுத்துக்கங்கம்மா… இங்கன எப்பவும் வருவீங்கங்கன்னு பாத்திருந்தேன்,” என்றார். எடுத்துக் கொண்டபடி அவர் முகத்தைப் பார்த்து புன்னகைத்தேன்.

“பெத்தவங்க உண்டா?” என்றார்.

“இல்ல”

“மிச்சசொச்ச நாளுக்கு எங்கனு போகலானிருக்கீங்க? காலம் கெடக்கற கெடப்பில காச வச்சிக்கிட்டு, நோய வச்சிகிட்டு தனியா கெடக்கறது நல்லதில்ல”

“ம்..தம்பியோ, தங்கச்சியோ?”

“சரிதானுங்க… எனக்குத் தெரிஞ்சி பொறந்தவக்கூட இருந்துக்கறது நல்ல கூறு”

மெதுவாக சிந்தனையில் தலையாட்டியபடி , “போயிட்டு வரேங்க. பாத்து இருங்க,” என்றேன்.

“சரிங்கம்மா. எங்கன்னாலும் நல்லாயிருப்பீங்க… எத்தன பிள்ளைங்கள கரையேத்தி விட்டுருக்கீங்க…” அவர் மேலும் எதும் சொல்வதற்குள் தலையாட்டிவிட்டு நடந்தேன். மூச்சு வாங்குவதை உணர்ந்தவுடன் மரத்தடியில் நின்றேன். புங்கையில் பழுத்த இலைகள் தவிப்பதைப் பார்த்தபடி கொஞ்ச நேரம் நின்று கொண்டிருந்தேன்.

சுற்றி வந்து குழந்தை யேசு சிலையருகேயிருந்த பன்னீர் மரத்தடி பெஞ்சில் உட்காருகையில் நன்றாக வியர்த்து நனைத்திருப்பதை உணர்ந்தேன்.

“அமலி… மோட்டாரைத் தட்டி விடு,” என்று குரல் கொடுத்தேன். தண்ணீர் குழாயை குழந்தை யேசுவை வட்டமாக சுற்றி நின்றிருந்த பூச்செடிகளின் நடுவில் வைத்தேன். வந்து நின்ற அமலியிடம், “இந்த மொட்ட வெயிலிலும்  பூத்திருக்கா பாரு…” என்று கனகாம்பரத்தைக் காட்டிவிட்டு, நிமிர்ந்து மாதா கெபியை, பள்ளிக்கட்டடங்களை, நடைபாதைகளை, படிகளை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தேன். சட்டென்று எழுந்து குளித்துவிட்டு சந்திராவுக்கு போன் செய்து டாக்ஸி அனுப்பி வைக்கச் சொன்னேன்.

அய்யாவுவை அழைத்து மேலே நடைபாதையில் வைத்திருந்த பெட்டிகளை கீழே வைக்கச் சொல்லிவிட்டு ,காலை உணவை முடித்துவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்துவிட்டு வெளியே வந்தேன்.

சிஸ்டர்கள் கோவிலிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களிடம் விடை சொல்லிவிட்டு காரில் ஏறுகையில் ரோசி, ”டீச்சர் மதியானம் சாப்பிட்டுக்கங்க,”என்று வாழையிலை பொட்டலத்தைக் கொடுத்தாள். இவள் கொஞ்சம் கவனமாக படித்திருந்தால் ஏதாவது ஒரு வேலைக்கு தள்ளி விட்டிருக்கலாம்.

அய்யாவு,”திருச்சியில ரயிலில் ஏத்தி விட்டுட்டுதான் வரனும்,”என்று ஓட்டுனரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“நம்ம பையன்தானா! வண்டிய பாத்து ஓட்டனும். கோவில்ல பியானோவ சட்டுன்னு தூக்கறாப்பல செய்யக்கூடாது,” என்றதும்  டென்னிஸ் தலையாட்டி சிரித்தான். அய்யாவுவிடம் ஒரு போர்வை பார்சலைக் கொடுத்து, “ வச்சுங்க,” என்றபடி காரில் ஏறினேன்.

ஐெனிட்டா சிஸ்டர், “இறங்கினதும் போன் பண்ணிடுங்க. திருச்சி வரைக்கும் வரலான்னா… வேணாங்கறீங்க,” என்றார்.

“நேத்தே முடிஞ்சிருச்சில்ல சிஸ்டர். உங்க வேலய தொடங்குங்க. மறுபடியும் மனசு தளும்பும். வர்றேன்,” என்று அனைவரையும் பார்த்து புன்னகைத்தேன். கார் கிளம்பி நின்றவர்களைக் கடந்து பன்னீர் மரத்தை, குழந்தை யேசுவை, புங்கை மரத்தை, அசோக மரத்தைக் கடந்து வாயிலில் வெளியேறிக் கொண்டிருந்தது.

அலைபேசி அழைத்ததும் எடுத்து, “கிளம்பிட்டேன். சாயங்காலம் வந்திடுவேன்,” என்றேன். மாறி மாறி பேசிய நீண்ட பேச்சில்தான் எனக்கு வழக்கம் போல புரிந்தது அவர்களுக்கு என் மொழி கொஞ்சம் விளங்கவில்லை என்று.

ஊருக்குள் தேவாலயத்தின் முன் வண்டியை நிறுத்த சொன்னேன். சந்திராவுடன் உள்ளே சென்று அமர்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் எழுந்து வெளியே வருகையில் பெர்க்மான்ஸ் சிஸ்டர் எதிரே வந்தார்.

“கிளம்பிட்டிங்களா? கடைசியா ஒரு தரம் என்கிட்ட  செக்கப் பாத்துட்டு போலாமே”

“நல்லாயிருக்கேன் சிஸ்டர்”

“கிளம்பியே ஆகனுன்னு அவசரமில்லையே…”

“உங்க மாதிரி துறந்து வரலயே. வேலைக்காகதானே… முடிஞ்சதும் கிளம்ப வேண்டியதுதான்,” என்று சிரித்தேன்.

“ மறக்க முடியாத ஒன்ன துறக்கறது எப்படி? முழுசா மறந்தா அது அல்சைமர் மாதிரி ஏதோ ஒன்னு… எதில இருந்தும் கொஞ்சம் தள்ளி இருக்கத்தான் மனுசங்களால முடியும். முழுமையான வேலையும் அர்ப்பணிப்புதான்னு உணராமையா இத்தன வருஷம் தனியா இங்கயே இருந்த?  கர்த்தர் உடனிருக்கட்டும்…,”என்று புன்னகைத்து அவரின் ஜெபமாலையைக் கொடுத்துவிட்டு தேவாலயப் படிகளில் ஏறினார். மேல்படியில் சந்திரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நடந்த வழிகளில் மல்லிகை அடர்ந்து வெண் சிறு சங்குகளாய் பூப்பித்திருந்தது. மொட்டுகள் நீண்டு திரண்டிருந்தன. காரை நோக்கி நடந்தேன். டென்னிஸ் புன்னகையாடு காரை எடுப்பதாக சைகை காட்டி கதவைத் திறந்தான். வழியில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கத்தில் வண்டி நிற்கையில் வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். பக்கவாட்டில் சாலையோரத்து மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு கூடு இருந்தது. எந்தப் பறவையினுடையது? இந்த இடம் எந்த வகையில் அதற்கு பாதுகாப்பானது?  வண்டி நகரத் தொடங்கியது. கண்களில் அந்தக் கூடு மட்டுமே வியாபித்திருந்தது. மெல்லிய காற்று எதிர்த் திசையில் கடந்தது. ஔி கடந்தது. நிழல் கடந்தது. கூடு…கூடு. மத்தலேனாள் இறுதியில் மலைக் குகையில் காத்திருந்தாள் என்று கதைகள் உண்டு. கண்களை மூடித் திறந்தேன். இந்த வண்டி ஒரு குகையென தோன்றியது. நெடுஞ்சாலையில் நகரும் குகை. முன்னால் கண்ணாடி வழி என் முகம் பார்த்த டென்னிஸ், “எதாவது வேணுமா டீச்சர்?” என்றான். இல்லையென தலையாட்டினேன். பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான். கண் முன்னால் நெடுஞ்சாலை கடந்து கொண்டிருந்தது.

 

 

 

 

 

வதை – ப. மதியழகன் கவிதை

ப. மதியழகன்

1

இந்த இரவின் சக்கரங்கள் நகர மறுக்கின்றன
எனது மனக்குகை வெளவால்களின் இருப்பிடமாக இருக்கிறது
கனவுலகம் எனது பாரத்தைச் சிறிது நேரம் இறக்கி
வைத்துவிட்டு ஆறுதல் தரட்டும்
இந்த நடுநிசியில் அமைதியின் வாசல்
திறந்தேயாக வேண்டுமாய் தவமிருக்கிறேன்
வசந்தத்தின் பாதையை எனது ரதம் தவறவிட்டுவிட்டது
துக்கத்தின் புதல்வனுக்கு
இந்த இரவு ஒரு யுகமாகத்தான் நீளப்போகிறது
கண்கள் ஜீவகளையை இழக்கின்றன
இந்த இரவாவது நான் நிம்மதியாக உறங்க வேண்டும்
உயிர்கள் உறக்கத்தில் லயித்திருக்கும்போது நான்
பிசாசு போல் விழித்திருக்கிறேன்
இந்தப் பூமிப்பந்தில் சகலவிதமான உரிமைகளும்
எனக்கு மறுக்கப்படுகின்றன
எண்ண அலைகளின் வேகத்தை எனது உடலால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை
அமைதியற்ற மனம் இந்த இரவில் ஆறுதலைத்தேடி அலைகிறது
உறக்கத்தைப் பறித்துக் கொள்ளுதல் கடவுளின் தண்டனை
முறைகளுள் ஒன்று என தெரிய வருகிறது
அடிமையாயாவது இருக்கின்றேன் யாராவது ஐந்து
நிமிட உறக்கத்தை பிச்சையாய் இடமுடியுமா
சுவர்க்கோழிகள் என்னை கேலி செய்கின்றன
சேவலே கூவிவிடு உன் சத்தத்தைக் கேட்டாவது
சூரியன் எழட்டும்
நினைவலைகளில் மிதக்கும் காகிதக் கப்பல்
கரைசேர துடிக்கிறது
கங்கையில் முங்கினாலும் எனது பாவங்கள் தொலையாது
விடுதலைக் குயில்களே கீழ்வானம் சிவந்தால்
எனக்குச் சேதி சொல்லுங்கள்
ஒவ்வொரு பகலுக்குப்பின்னும்
இரவு வந்தேயாக வேண்டுமா
இரவு என்னைப் பைத்தியக்காரனாக அலையவிட்டுவிட்டது
நரம்புகளைச் சாகடிக்க கிண்ணத்தில் மதுவை
ஊற்ற வேண்டியிருந்தது
இந்த இரவுக் கடலை கடப்பதற்கு கண்ணை மூடிக்கொண்டு
போதையின் பாதையைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது
எனது நம்பிக்கை வேர்கள் பலமிழந்துவிட்டன

2

இதோ என் கண்ணெதிரே கடவுள் இறந்து கிடக்கிறார்
இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் உடல் நாற்றமெடுக்க தொடங்கிவிடும்
இன்றுவரை மரணத்தீவில் அவர் பதுங்கி இருந்திருக்க வேண்டும்
மனிதனின் போலியான நடிப்பைக் கண்டு அவர் ஏமாந்துவிட்டார்
கடவுளின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்க மனிதன் விரும்பவில்லை
அவரது ஆளுகைக்கு கீழிலிருந்து இந்த பூமியையாவது
விடுவித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தான்
நியாயத்தீர்ப்பு நாளில் கடவுள் தன்னை சோதனைக்குள்ளாக்குவதை
அவன் விரும்பவில்லை
பாவத்தின் சம்பளத்தை அவன் ஏற்றுக்கொள்ள மறுத்தான்
சகல அதிகாரங்களையும் கொண்ட ஒருவர் இருந்தால்
தனது திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிடுமோ என பயந்தான்
தனது செல்வத்தைக் கொண்டு தேவலோகத்தையே பூமியில்
அவனால் சிருஷ்டிக்க முடிந்தது
அவன் வாரி இறைத்த பணத்துக்காக தேவதைகள் அவனது
காலடியில் வீழ்ந்து கிடந்தனர்
மனிதன் தனது ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள
என்ன செய்வதற்கும் தயாராக இருந்தான்
கடவுளைத் தவிர எதையும் அவனால் விலைக்கு
வாங்க முடிந்தது
விதிக்கு கட்டுப்பட்டே தீர வேண்டுமென்று என்னை யாரும்
கட்டாயப்படுத்த முடியாது என்றான்
பக்கத்து வீட்டில் துக்கம் நிகழ்ந்தபோதும்
மரணத்தைப் பற்றி அவன் கவலை கொள்ளவில்லை
கடவுளின் இருப்பு இங்கு யாருக்கும் எந்த விதிவிலக்கும்
கிடையாது என்று அவனுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தது
நிரந்தரமான ஏதோவொன்று அவன் கைக்கு அகப்படாமல் இருந்தது
இந்த உடலில் எங்கே உயிர் குடியிருக்கிறதென்று
அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை
எந்த வழியில் சென்றாவது உடலின் தேவையை
பூர்த்தி செய்து கொண்டான்
அடுத்தவன் முதுகை எப்படி படிக்கல்லாகப் பயன்படுத்தி
கொள்வதென்று அவனுக்குத் தெரிந்திருந்தது
கடவுளின் குமாரனென்று யாரும் பூமிக்கு சொந்தம்
கொண்டாடிட கூடாதென்று அஞ்சியே
கடவுளைக் கொலை செய்தான்
கடவுளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
மனிதனிடம் நம்பிக்கை வைத்த குற்றத்துக்காக
சிதையில் கடவுள் எரிந்து கொண்டிருந்தார்.

3

நீ போதித்த அன்பு இந்த உலகத்தில் ஆட்சி செலுத்தவில்லை
மலைப்பிரசங்கம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
எனது இருண்ட வாழ்க்கையில் உனது உபதேசங்களே ஒளியேற்றி வைத்தன
இந்தப் பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு ரகசியத்தை நாமிருவரும் மட்டுமே அறிவோம்
எதிர்வருவது நீதான் என்று தெரியாமல் பலமுறை உன்னைக்
கடந்து சென்று இருக்கிறேன்
கடவுள் ஒரு பரதேசி என்பதை இந்த உலகத்தினர் ஒருநாளும்
ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
நீ ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் உள்ளுக்குள் எரிந்து கொண்டுதான் இருக்கிறது
இந்த உலகம் கடவுளின் பொம்மை விளையாட்டு என்பதை
உன் மூலமாகத்தான் நான் அறிந்து கொண்டேன்
அடிமைகளிடமிருந்து எழுந்த முதல் விடுதலைக்குரல் உன்னுடையது
ஆவிக்குரிய வாழ்விலிருந்து நான் விலகிப் போகும்போது உள்ளுக்குள்
உன் குரல் கேட்கும்
சிலுவையில் நீ இறக்கும் தருவாயில் முணுமுணுத்த வார்த்தை
என்னவென்று நான் மட்டுமே அறிவேன்
சத்தியத்தின் பாதையை தேர்ந்தெடுத்தால் மரணம்தான்
பரிசாகக் கிடைக்கும் என்று நான் உனக்குச் சொல்லியிருந்தேன்
கடவுள் உண்டென்று நீ ஏற்றுக் கொண்டாய்
அக்கணமே அந்த சக்தியானது உன் மூலமாக செயல்பட ஆரம்பித்துவிட்டது
இந்த உலகம் அன்பினை போதித்தவர்களையெல்லாம் அலட்சியப்படுத்தியது
மனிதன் தன் சுவர்க்கக் கனவுகளை பணத்தின் மூலம் நனவாக்கிக்
கொள்ள முயன்று கொண்டிருந்தான்
மனித மனம் சாத்தானுக்கும் கடவுளுக்கும் இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
அதிர்ந்து பேசாதீர்கள் இப்போது கல்லறையில் உறங்குபவன்
வாழும்போது தூக்கத்தைத் தொலைத்தவனாக இருக்கலாம்
இந்த பூமியில் வாழ்க்கையின் வேர்களைத் தேடிப் போனவர்களை
விரல்விட்டு எண்ணிவிடலாம்
நான் தவறவிட்ட தேவனின் காலடியை இந்தப் பிறவியிலாவது
அடைய முடியுமா
நான் ராஜபாட்டையை தவிர்த்து முட்களின் பாதையை ஏன்
தேர்ந்தெடுத்தேன் அது உன்னை வந்தடையும் என்பதால்தான்
கர்மவினைகள் என்னைத் துரத்துகின்றன எனது இரவு உறக்கத்தை
பேய்கள் களவாடிவிடுகின்றன
மாய உலகத்தில் கடவுளின் ஒளிக்கீற்றை காண முடியவில்லை
நான் நரக இருளில் தள்ளப்பட்டதற்கு விதியை காரணம் காட்டி
தேவன் தப்பிப்பது சரியா
கோள்களின் இயக்கத்தைக் கட்டமைத்தவனைத்தானே
நீங்கள் கடவுள் என்கிறீர்கள்
உங்கள் கடவுள் சாத்தானுடன் நடந்த சூதாட்டத்தில்
இந்த உலகை பணயம் வைத்து இழந்துவிட்டாரா
எதை எதையோ துரத்தி ஓடுகிறேன்
மரணம் என்னை துரத்துவதை மறக்க
குழந்தைத்தனமான கடவுள் நயவஞ்சகமான மனிதர்களைப்
படைத்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா
இரவின் கண்கள் தனிமையில் அழும் கடவுளைக் கண்டிருக்குமல்லவா
இறைவனின் அடிவயிற்றில் எரியும் நெருப்புதானே மனிதனை சாம்பலாக்குகிறது
எச்சமிட்ட காக்கைகளுக்கு மரம் நன்றி சொல்கிறதா என்ன
இன்னும் இன்னும் என்று ஓடும் மனதினை எதைக்
கொண்டு நான் அடக்குவேன்
அங்குசத்தை தொலைத்துவிட்ட பாகனைப் போன்றதுதானே
கடவுளின் நிலைமை
வாழ்க்கையின் கோரமுகத்தை நான் பார்த்துவிட்டேன்
எப்போது இந்த சித்ரவதைக் கூடத்திலிருந்து எனக்கு
விடுதலை அளிப்பாய்
ஒவ்வொரு இரவும் கண்மூடும்போதெல்லாம்
இந்த இரவு எனக்கு விடியக் கூடாது என்றுதானே நான் வேண்டுகிறேன்
எதிர்ப்படுபவர்களில் யாராவது கடவுளாக இருக்கலாம்
என்று எண்ணித்தானே திருவோட்டை நீட்டுகிறேன்
உன்னால் எனக்கு மரணத்தை பிச்சையாகயிட முடியுமா?

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

‘மண்டே மார்னிங்கே என்னய்யா ப்ரச்சன,’ வண்டியிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு கேட்டருகில் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், ‘சடன் டெத் ஸார்,’ என்று பதிலளித்தார்.

வீட்டின் மீது பார்வையைச் செலுத்தினார் இன்ஸ்பெக்டர். ‘என்னாச்சு?’

‘அறுபத்தஞ்சு வயசு மேல் ஸார், வைப் நோ மோர். பையன் பிரான்ஸ்ல இருக்கார். ரெண்டு வீடு தள்ளி சொந்தக்கார பையன்தான் வேணுங்கறத கவனிச்சுக்குறான், வீட்டு வேலை செய்யறதுக்கு ஒருத்தங்க வராங்க. அந்தம்மா எப்பவும் போல இன்னிக்கு ஆறரை மணிக்கு வேலைக்கு வந்திருக்காங்க. பெல் அடிச்சும் கதவை தொறக்கலைன்னவுடனே ரிலேடிவ்கிட்ட சொல்லிருக்காங்க. அவர் தன்கிட்ட இருந்த சாவிய வெச்சு தொறந்து பாத்தா, ஓனர் பெட்ல டெட். ஒடனே இன்பார்ம் பண்ணிடாங்க’

‘நம்ம டாக்டர் வந்து பாத்தாச்சா?’
‘இன்னும் இல்ல ஸார். அவங்கதான் ரிலேடிவ் அண்ட் வேலை செய்யறவங்க’ என்ற சப்-இன்ஸ்பெக்டர் இருவரையும் அருகில் அழைத்தார். வேலைக்காரம்மா புதிதாக எதுவும் சொல்லவில்லை. சொந்தக்காரர், ‘நா நேத்து நைட் மெடிசன் வாங்கித் தந்துட்டு கெளம்பறதுக்கு முன்னாடி பேசிட்டிருந்தாரு. ரொம்ப லோன்லியா இருக்குப்பா, பேரன பாக்கணும்னு ரொம்ப வருத்தப்பட்டார், அதுக்காக சூசைட் பண்ணிப்பார்னு நெனக்கவே இல்லை ஸார்’ என்று அழுதார்.

‘நீங்க இங்கயே இருங்க, பாடி எங்க இருக்கு?’

பெரிய படுக்கையறை. உடலின் அருகில் சென்று பார்த்தார் இன்ஸ்பெக்டர். எந்த துன்புறுத்தலுக்கும் ஆளானது போல் தெரியவில்லை.

‘சந்தேகப்படும்படியா எதுவும் இல்லை ஸார், ஒரு பார்மாலிட்டிக்கு ஒங்களுக்கு இன்பார்ம் பண்ணினோம்’

‘அப்டி ஈஸியா எடுத்துக்காதய்யா , இதுதான் வாசகர்கள் படிக்கற பர்ஸ்ட் கேஸ், நெறைய பேர் பார்வை நம்ம மேல இருக்கு’

‘நெறைய பேர் படிக்காறாங்களா…’

‘என்னய்யா’

‘ஒண்ணுமில்ல ஸார்’

‘பர்ஸ்ட் இம்ப்ரெஸ்சன்தான் முக்கியம், எதாவது சொதப்பிட்டோம்னு வெச்சுக்க, லிடிரரி சூசைட்தான்’

சப்-இன்ஸ்பெக்டர் பதிலெதுவும் சொல்லவில்லை. அறையைச் சுற்றி வந்தார் இன்ஸ்பெக்டர். கட்டிலுக்கு அருகே இருந்த மேஜையில் நேற்றைய தினசரி, வாட்டர் பாட்டில். குனிந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தார். ‘ஸ்ட்ரேஞ்’ என்றபடி எழுந்தவரிடம், சப்-இன்ஸ்பெக்டர், ‘என்ன ஸார் தேடறீங்க’ என்று கேட்டார் .

‘இந்த ரூம்ல இருக்க வேண்டிய ஒண்ணு இல்லைன்னு கவனிச்சீங்களா?’.

இல்லையென்று தலையாட்டினார் சப்-இன்ஸ்பெக்டர்.

‘ரொம்ப கேர்புலா அப்சர்வ் பண்ணுங்க. டாக்டர் இன்னும் வரலைன்னு சொன்னீங்கல்ல’

‘ஆமாம் ஸார்’

‘குட். அந்த ரெண்டு பேரையும் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க’

‘நீங்க ரூம்ல வந்தவுடனே என்ன பண்ணீங்க. கரெக்ட்டா, ஒண்ணு விடாம சொல்லுங்க’

வேலைக்காரம்மா சொந்தக்காரரைச் சுட்,டி ‘இவரு வீட்டு கதவ தொறந்துட்டு, ஸார கூப்ட்டுக்கிட்டே போனார், நான் பின்னால வந்தேன். இங்க ஸார் பெட்ல இருந்தாரு. இவர் கிட்டக்க போய் பாத்துட்டு ஐயோன்னு கத்தினாரு,’ என்று சொல்ல சொந்தக்காரர் பக்கம் இன்ஸ்பெக்டர் திரும்பினார்.

‘உடம்ப தொட்டுப் பாத்தேன் ஸார், ஜில்லாப்பா இருந்தது, உடனே வெளில வந்துட்டோம்’

‘வேறே எதையாவது பெட் பக்கத்துல பாத்தீங்களா, தேடினீங்களா?’

‘இல்ல ஸார்’

‘அப்ப எவ்ளோ நேரம் இந்த ரூம்ல இருந்தீங்க?’

‘ரெண்டு மூணு நிமிஷம்தான் இருக்கும் ஸார்’

‘ஓகே, ஒடம்ப தொட்டு பார்த்து இறந்துட்டார்னு தெரிஞ்சுக்கிட்டீங்க, ஆனா சூசைட் பண்ணினாருன்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க, அதுவும் பதட்டமா இருந்திருப்பீங்க, ரூம்ல வேற ரெண்டு மூணு நிமிஷம்தான் இருந்தேன்னு சொல்றீங்க,’ என்று இன்ஸ்பெக்டர் கேட்க.
‘நேத்து அவரு…’

‘சூசைட் பண்ணிக்கப் போறேன்னு சொன்னாரா ‘

‘இல்ல ஸார், தனியா இருக்கறதபத்தி தான்…’

‘அத வெச்சே சூசைட்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா?’

‘..’

‘உங்ககிட்டயும் இந்த வீட்டுச் சாவி இருக்குல்ல’

சொந்தக்காரர் தலையசைத்தார்.

‘நேத்து நைட்டு இங்க வந்தபோதுதான் அவர கடசியா நீங்க பாத்தது, இல்லையா?’

‘ஆமாம் ஸார்’

‘எப்ப வந்தீங்க, எப்ப கிளம்புனீங்க?’

‘எட்டு, எட்டே கால் இருக்கும் ஸார் நான் வந்தப்போ, பேசிட்டு ஒன்பது மணி வாக்குல கிளம்பினேன், அப்படி பேசும்போதுதான் அவரு..’

இடைமறித்த இன்ஸ்பெக்டர், ‘அதுக்கப்பறம் நீங்க இங்க வரவேல்ல இல்லையா?’ என்று கேட்டார்.

‘ஆமா ஸார்’

‘நேத்து நீங்க மெடிசன் வாங்கிட்டு வந்ததா சொன்னீங்கல்ல?’

‘ஆமா ஸார்’

‘என்ன மெடிசன்?’

‘வழக்கமா சாப்பிடறதுதான் ஸார்’

‘எந்த பார்மஸில வாங்கினீங்க?’

பெயரைச் சொன்னார்.

‘அதே க்வான்ட்டிடி தான வாங்கினீங்க’

‘ஆமா ஸார்’

‘எப்பவும் வாங்கற கடையாத்தான் இருக்கும்லையா, நேத்து வாங்கினதுக்கான பில் வெச்சிருப்பீங்க’

‘…ஸார்கிட்ட தந்துட்டேன் ஸார்… இந்த ரூம்ல தான் ஸார் இருக்கணும்’

‘தேடுவோம், எங்க போகப் போகுது. ஒரு சின்ன விஷயம், நீங்க எப்படி அவர் சூசைட் தான் பண்ணிக்கிட்டார்னு முடிவுக்கு வந்தீங்கன்னுதான் எனக்கு புரிய மாட்டேங்குது. டாக்டரே இன்னும் வந்து பாக்கலையே’

‘..’

‘சொல்லுங்க. இந்த ரூம்ல எந்த மெடிசனும் இல்லையே, எங்க போச்சு’

‘..’

‘பிடிங்க அவன!’

அறையை விட்டு ஓடிய சொந்தக்காரரை வெளியே இருந்த காவலர்கள் பிடித்தார்கள்.

‘இந்த மாதிரி கேஸ்ல சஸ்பெக்ட்ஸ் எல்லாரையும் இந்த மாதிரி ரூம்ல கூட்டி வெச்சு க்ரைம் எப்படி நடந்திருக்கும்னு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு, அத இந்த ரூம்ல இருக்கற யாரோதான் பண்ணியிருக்காங்கன்னு சொல்லி, கடசியா நீதான் குற்றவாளின்னு அடையாளம் சொல்லணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை,’ காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் இறந்தவரின் உறவினரைப் பார்த்தபடி சொன்னார் இன்ஸ்பெக்டர்.

‘ரெண்டு பேர்தான் இருந்தாங்க ஸார்,இன்னும் கொஞ்சம்…’

‘அடுத்த வாட்டி பாத்துக்கலாம்யா, க்ரைம் பிக்க்ஷன்ல குற்றங்களுக்கு பஞ்சமே கிடையாதுயா, நெறைய சஸ்பெக்ட்ஸ் கிடைப்பாங்க’

‘இவ்ளோ சீக்கிரத்துல சால்வ் பண்ணிட்டீங்க ஸார். ஒங்களத் தவிர யாரும் இது ஒரு மர்டர்னு சந்தேகமே பட்டிருக்க மாட்டாங்க, க்ரேட்’

‘அப்படி சொல்ல முடியாதுயா, இதுல நான் எக்ஸ்ப்ளைன் பண்ணாத ஒரு விஷயம் இருக்கு, நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல. வாசகர்கள் அப்சர்வ் பண்ணிட்டாங்கன்னா அவ்ளோதான், நம்ம லிடரரி லைப் ஓவர். அப் கோர்ஸ் அதுக்கும் என்கிட்டே ஒரு விளக்கம் இருக்கு பட் ஸ்டில்..’

‘என்ன ஸார் அது’

‘நீயே கண்டுபிடி. மிசஸ். ப்ராட்லிகிட்ட(https://www.gladysmitchell.com/on-mrs-bradley) பேசணும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணி மெயில்லாம் அனுப்பி நேத்துதான், இன்னிக்கு மார்னிங் அவங்ககிட்ட பேச கால் பிக்ஸ் பண்ணியிருந்தேன். அவங்க குற்றங்கள இன்வெஸ்டிகேட் பண்ற விதத்துலேந்து நாம கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. எல்லாம் சொதப்பலா போச்சு. அவங்ககிட்ட எக்ஸ்க்யுஸ் கேக்கணும்’

‘நூறு வயசுக்கு மேல இருக்கும்ல ஸார் அவங்களுக்கு?’

‘அதுக்கு மேலயே இருக்கும், ஒன் ட்வென்டி பைவ் இருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமில்ல. அவங்களோட முதல் இன்வெஸ்டிகேஷன்போதே வயசானவங்கதான். அதான் லிடரரி லைப், க்ளிக் ஆயிடுச்சுன்னா நித்தியத்துவம்தான்’

வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது சப்-இன்ஸ்பெக்டர், ‘ஸார் ஒண்ணு கேக்கணும்னு,.. நம்ம ரெண்டு பேரையும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்ன்னு தான் குறிப்பிட்டிருக்க தவிர, நேம் இல்லையே. அதுலயும் நாம யுனிபார்ம்ட் கேடரா இல்ல ஸ்பெஷல் ப்ராஞ்ச், சிபி-ஸிஐடி, ஹோமிசைட் மாதிரி வேற ஏதாவதான்னுகூட தெரியலையே.’

‘இத பத்தி எழுத்தாளர் கிட்ட கேட்டேன். மொதல்ல இந்த இன்வெஸ்டிகேஷன் பத்தி வாசகர்கள் பாசிட்டிவா ரெஸ்பான்ட் பண்ணட்டும், அப்பறம் பெயர் வெக்கறத பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். அதுக்கு முன்னாடியே போலிஸ் டிபார்ட்மென்ட்ஸ் பத்திலாம் ரிசர்ச் செய்யறதுல என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாதுங்கறார். இந்த க்ரைம நாம கண்டுபிடிச்ச விதம் நம்பற மாதிரியே இல்லைனோ, போர் அடிக்குதுன்னோ சொல்லிட்டாங்கன்னா நம்ம கதை முடிஞ்சுது ..’

‘இன்னொரு விஷயம் ஸார், அதாவது நான்.. என்னோட ரோல்..’

‘அதைப்பத்தியும் ஆத்தரே சொன்னார். பொதுவா இந்த மாதிரி ரெண்டு பேர் இன்வெஸ்டிகேட் பண்ணும்போது ஒருத்தர் சும்மா டம்மியாத்தான் இருப்பார், ஆனா அத நான் மாத்தப் போறேன்னாரு. இந்த ழானர்ல புதுசா நிறைய விஷயங்கள் பண்ணப் போறாராம். அதனால ஒனக்கும் நிறைய சான்ஸ் கிடைக்கும், அத பத்தி கவலைப்படாத. நெறைய ரீடர்ஸ் இத படிக்கணும், படிச்சிட்டு நல்லபடியா ரெஸ்பான்ட் பண்ணனும், அதுதான் முக்கியம்.’’

சிறிது நேர அமைதிக்குப் பின் ‘என்னய்யா யோசிச்சிட்டிருக்க’ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

‘பாவம் ஸார் ரீடர்ஸ், இப்ப அவங்கள நெனச்சாத்தான் கவலையா இருக்கு’

பகல் ரயில், தொடர்பு எல்லைக்கு வெளியே – பைராகி கவிதைகள்

பைராகி

 

பகல் ரயில்

ரயிலின் திடும் ஆட்டம்
எல்லாரையும் குலுக்கியது.
பள்ளிச்சிறுவர்கள் கூடிச் சிரித்தனர்
அக்கணக் குலுக்களில்

முன்னறிவிப்பில்லாமல் ரயில் மீண்டும் கிளம்ப
விழுவதும், எழுவதும், தள்ளுவதுமாக
சிறுவர்கள் சிரிப்பைத் தொடர்ந்தனர்
அடுத்த நொடி ஆட்டத்தின் எதிர்பார்ப்பில்

என் பக்கத்தில் தனியே உட்கார்ந்திருந்த பாட்டி
யாரிடமோ சண்டையிட்டுக் கொண்டிருந்தார்
தனது இளமையில்.

போனஸ் சிக்கலை
வண்டியோட்டி தனது சகாவிடம்
புலம்பிக்கொண்டிருந்தார் அன்றைக்கு இரவில்.

ரயிலின் குலுக்கலில்
முன்னும் பின்னுமாக ஆடிய
காலத்தை கணக்கில் வைத்த
குவளை முகப் பறவை
நிதானமாகக் கடக்கும் ரயிலின்
தற்பொழுதை கிளை மறைவிலிருந்தபடி
வரவில் வைக்கிறது.

தொடர்பு எல்லைக்கு வெளியே

பேசத்தொடங்கிய குகை வாசியின்
பெருந்தனிமை எனைச் சூழாதிருக்க
மனம் விரும்பியும்
சோம்பிக்கிடக்கப் பிடிக்காது
சுள்ளென அடித்த வெயிலைப்
போர்த்திக்கொள்ள மெல்ல
வாசலுக்கு வந்தேன்.
குறுக்கும் நெடுக்குமான அண்டை வீட்டுச் சுவர்கள்.
சுருட்டி வைத்திருந்த அன்றைய பேப்பரை
ஓனர் கையிலிருந்து வாங்கினேன்.
தரையில் முழுவதுமாக விரித்து
பேப்பர் சுருளை நீவிடத்தொடங்கினேன்.
தொட்டும் விலகியும் சென்ற மடிப்புகள்
நேற்றும இன்றும் போல
தொடர்பற்றுக் கிடந்தன.