Author: பதாகை

மஞ்சுக் குட்டி

கலைச்செல்வி

sometimes__when_i_m_alone_in_my_mind_by_narcissagrey-d736dtd

இரு பக்கமும் காதுகள் வைத்த சில்வர் அண்டா நிறைய பிரியாணி இருந்தாலும் அளவு தட்டில் கூம்பாக எடுத்து கரண்டியால் வழித்து விடும் போது பாதி மீண்டும் அண்டாவுக்குள் விழுந்து விடுகிறது. தட்டில் இருந்த பிரியாணியை சதுரமாக வெட்டப்பட்ட செய்தித்தாளின் மீது வைக்கப்பட்ட சருகு இலையில் கொட்டி கவிழ்த்த போது ஜிவ்வென்று எழுந்த வாசம் நாசிகளை சுண்டி இழுத்தது. எந்த கவனமும் எடுத்ததாக தெரியவில்லை. ஆனாலும் பொட்டலத்தில் கோழியின் எலும்பு பகுதி எடுத்து சாப்பிட தோதாக ஸ்பூன் போல வைக்கப்பட்டு இருந்தது. கொதிக்கும் பிரியாணியில் அமிழ்த்தி வைக்கப்பட்ட முட்டை பருக்கையின் வடிவத்தை உள் வாங்கி கொண்டது.. ஏற்கனவே கட்டப்பட்ட தாள்ச்சாவில் ஒரு பாக்கெட்டும் வெங்காய பச்சடியில் ஒரு பாக்கெட்டையும் அனிச்சையாக எடுத்து போட்டு பிரியாணி கவரை அவனிடம் நீட்ட, அவனும் நுாறு ரூபாய் தாளை நீட்டிக் கொண்டே கவரை வாங்கினான். தெருவோர கடை அது. “ஒண்ணு போதுமா.. இன்னொன்னு கட்டுட்டுமா..”

வழக்கமாக இந்த வாசத்துக்கு இன்னொன்னு கட்டு என்பான். இன்று சாப்பிடும் உடல்நிலையில் இல்லை. வயிறு பிரட்டிக் கொண்டிருக்கிறது. ஒண்ணு போதும்.. சொல்ல வாயெடுத்தான். அலைபேசி ஒலித்தது. அவள்தான்.

”ஆங்.. என்னாது..?”

”குமாரு வந்துருக்கான்.. காசு நாளக்கு தாரேன்னுட்டு இன்னொன்னு கட்டிக்க..”

”காசெல்லாம் இருக்கு..”

”நுார்றுவா தான குடுத்தேன்.. நீ சாப்புடுல..”

”எனக்கு வேணாம்.. வவுறு கொடயறாப்பல இருக்கு.. கஞ்சி எதுனா போட்டுக் குடேன்..”

கஞ்சியெல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டாள் என்று தெரிந்தும் கேட்டான்.

”சும்மா கெடக்கன் பாரு..” நொடித்தாள். அவள் எப்போதும் சும்மாயிருப்பதில்லை. சில சமயங்களில் சுமந்தும் கொண்டிருப்பாள் என்பது அவனுக்கு தெரியும்.. எப்போதாவது குரூப் ஆர்டிஸ்ட் வாய்ப்பு கிடைக்கும். கவரிங் நகை செட் வாடகைக்கு விடுவாள். அந்த நகை செட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் முதலீடு போட்டது கூட அவன்தான். மனைவி காந்திமதி சிறுவாடாய் சேர்த்து வைத்த தொகை அது. வாயிலும் வயிற்றிலும் அறைந்துக் கொண்டு கதறுவாள் என்பது அவனுக்கும் தெரியும். ஆனாலும் அவனால் எடுக்காமல் இருக்க முடியவில்லை. எப்படியோ பாடுபட்டு பிள்ளைகளை வளர்த்திருப்பாள். பிறந்தது மூன்றுமே ஆண்பிள்ளைகள். ஐந்தும் நான்கும் ஒன்றுமான வயதிலிருந்தன இவன் அவர்களை விட்டு பிரியும் போது. இப்போது பெரியவனுக்கு பனிரெண்டு வயதிருக்கும். தாயுடன் கட்டட வேலைக்கு செல்ல தொடங்கியிருப்பான். நடுவுள்ளவனும் பதினோரு வயதிலிருப்பான். தகப்பனை போல வளர்த்தியான பிள்ளைகள். காந்திமதி அவனையும் தன்னோடு வேலைக்கு அழைத்து சென்றிருப்பாள். வீட்டை விட்டுக் கிளம்பும் போது இவன் தான் எப்பா போவதப்பா.. போவதப்பா.. என்று கதறினான். காந்திமதி கல்லால் அடித்து வைத்தது போல சமைந்திருந்தாள்.. தடுக்கவுமில்லை..கதறவுமில்லை.

குருவிக்கூடு போலெல்லாம் ஒன்றி வாழ்ந்தவர்களில்லை என்றாலும் இப்படி ஓரேயடியாக பிரிந்தும் வந்ததில்லை. மஞ்சுளா என்ற பெயரே அவனை கவரப் போதுமானதாக இருந்தது. பார்த்திபன் ஒரு சினிமாவில் ரம்பாவுக்கு குழி பணியாரம் கொண்டு வந்து நீட்டுவாரே.. அது மாதிரியான ஒரு பரவச நிலையில்தான் இருந்தான் இவனும். இத்தனைக்கும் மஞ்சுளா குரூப் டான்சர்களில் ஒருத்தி. தாயும் மகளுமாக வந்திருந்தார்கள். இருவருமே டான்சர்கள்தான். மஞ்சுளா இருபத்தைந்திலிருந்து முப்பது வயதிற்குள்ளிருந்தாள். மாநிறமான உடல். கல் மாதிரி தேகம். முன்னழகுக்கு பிரத்யேக ஒப்பனைகள் செய்வதில்லை என்பது அவளுடன் நெருங்கி பழகிய பிறகு தெரிந்தது. நல்ல உயரமாக இருப்பாள். அதனாலேயே நடனங்களில் பின் வரிசையில் இருக்க வேண்டிய கட்டாயம்.

மலையடிவார கிராமம் அவனுடையது. ஊரில் அவ்வப்போது படப்பிடிப்புகள் நடக்கும். .அதில் அத்தனை ஆர்வம் இருப்பதில்லை அவனுக்கு. சைக்கிள் கடை வைத்திருந்தான். அவனிடம் வாடகைக்கு சைக்கிள் எடுக்க வந்த பையனுடன் இவளும் வந்திருந்தாள். “வெய்யிலு இம்மாம் கொளுத்துது.. ஆனா ரவக் கூட வேக்லியே..” என்றாள் அவனிடம் பழகியவள் போல. ”மல பக்கம்ல்லாம் அப்டிதான இருக்கும்.. பச்சப்புள்ளயாட்டம் கேக்கறக்கா..“ என்றான் கூட வந்தவன். பத்து சைக்கிள்கள் இருந்தது அவனிடம். மொத்தமாக ஆறு நாள் வாடகைக்கு எடுத்துக் கொண்டார்கள். இரண்டு மடங்கு வாடகை தேறிய சந்தோஷத்தில் இருவருக்கும் டீ வாங்கிக் கொடுத்தான். மலை வாழைப்பழம் கொடுத்தான். மலம் இறுகலாகப் போகிறது. என்பதால் காந்திமதி மதிய உணவோடு கொடுத்தனுப்பியிருந்தாள். வாழைப்பழத்தை தின்று விட்டு சதைப் பற்றான தோலை நகத்தால் வழித்து சாப்பிட்டாள் மஞ்சுளா. “எக்கா.. அதுக்கெல்லாம் கொரங்கு இருக்கு.. பூரா தோலயும் நீயே தின்னுடாத..“ கிண்டலடித்தான் பையன். “அப்டியா… தோலெல்லாம் கொரங்கு சாப்டுடுமா..” என்றாள். தெரிந்த விஷயத்தை புதுசு போல கேட்பதை வைத்து இவளை விவரமில்லாதவள் என்பதா.. பேரம் பேசி சைக்கிளுக்கான முன் பணத்தை கணக்காக எண்ணி வைத்ததில் விவரமானவள் என்பதா என்று கணிக்க முடியவில்லை அவனால். காதின் முன்புறம் வழியே சுருண்டிருந்த முடி அவள் முகத்துக்கு களையைக் கூட்டியது. சற்றே விலகியிருந்தது தெரிந்தும் சேலையை இழுத்து விட்டுக் கொள்ளவில்லை. தாழ்வாக படர்ந்திருந்த மரக்கிளையின் இலையொன்றின் நுனியைக் கிள்ளி காற்றில் பறக்க விட்ட நேரத்தில் அவள் மீது காதல் கொண்டான்.

”பிரியாணி வாங்கியார எம்மா நேரமாக்குவே..?” மஞ்சுளா அலைபேசியில் கடிந்துக் கொண்டாள். எப்போதும் சிடுசிடுப்பாகதான் பேசுவாள். உடம்பு காந்துவது போலிருந்தது அவனுக்கு. கஞ்சியோ ரொட்டியோ வயிற்றை நிரப்பிக் கொண்டு அப்படியே காய்ச்சலில் மல்லாந்து விடுவது ஒரு சுகம். மஞ்சுளாவிடம் வந்து சேரும் வரை அவனது காய்ச்சல் காலம் அப்படிதான் கழிந்தது. இருப்பது ஒரே அறை. அதை மஞ்சுளாவும் குமாரும் நிறைத்திருப்பார்கள். வாசற்படியில் உட்காரலாம்தான். மஞ்சு.. மஞ்சு.. என்று குமார் குழைவது எரிச்சலாக வரும். குமாரை அவளுக்கு பிடிக்காது என்றாலும் ஒன்றிரண்டு பட வாய்ப்புகள் அவனால் வருவதால் அவனை தவிர்க்க முடிவதில்லை.

”மஞ்சு..” அவனின் குரலுக்காக காத்திருந்தவள் போல விரைந்து வந்தாள் மஞ்சுளா. நீட்டிய பையை வாங்கும் போது அவன் கையின் சூடு தெரிந்தது. ஆனாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

”காசிருந்தா குடு.. டீயும் பன்னும் வாங்கிக்கிறேன்.. வாயி நரவலா கெடக்கு..” என்றான்.

”காசு.. காசு.. புடுங்கியெடு..” கோபமாக உள்ளே சென்றாள்.

மஞ்சுவுக்கு பூஞ்சை உடம்பு. அடிக்கடி முடியாமல் போய் விடும். சீசனுக்கு வருகிற சாதாரணக் காய்ச்சல் கூட அவளுக்கென்றால் ஆரவாரமாகதான் வரும். மஞ்சள்காமாலை வந்த போது பிழைத்தெழுவாள் என்ற நம்பிக்கையே அற்று போய் அழ தொடங்கி விட்டான். தெரிந்த.. தெரியாத இடமெல்லாம் அலைந்தும் பைசா பெயரவில்லை. கந்து வட்டிக்கு கடன் வாங்க போக வட்டிக்காரன் கை கால்களை முறித்து அடைத்து போட்டு விட்டான். மஞ்சுவோ தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என ஒதுங்கி கொண்டாள். அந்த கடனுக்குதான் இன்னும் ஓட்டல்காரனின் உழைக்க வேண்டியிருக்கிறது.

ஓட்டல் கடையில் விறகு பிளந்து தருவான். அல்லது மூன்று சக்கர வண்டியில் மாவு அண்டாக்களை வைத்து ஓட்டிக் கொண்டு வருவான். தண்ணீர் எடுத்துத் தருவான். மரக்கட்டைகளை லாரியிலிருந்து இறக்கி அடுக்குவான். சிலசமயங்களில் சாக்கடை அடைத்துக் கொண்டால் உள்ளிறங்கி அடைப்பை எடுத்து விடவும் தயங்குவதில்லை. காந்திமதி பார்த்தால் உயிரையே விட்டு விடுவாள் என்று அப்போதெல்லாம் தோன்றும் அவனுக்கு. காந்திமதி பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தகப்பன் இறந்து விட அண்ணன் மகனுக்கு மகளை கொடுத்து விட்ட திருப்தியில் காந்திமதியின் அம்மாவும் போய் சேர்ந்து விட்டாள். அவளின் சேமிப்புதான் அவனுக்கு சைக்கிள் கடை வைக்க உதவியது. குடியிருக்கும் ஓட்டு வீடும் அவளுடையதுதான். மருமகன் கோர்ட் ஆபிசுக்கு முன் அமர்ந்து வாடகை தட்டச்சுப் பொறியில் தட்டச்சு செய்வது அவளுக்கு அத்தனை பெருமையாக இருக்கும். பரம்பரையிலேயே இல்லாத வழக்கமாய் மருமகன் பத்தாவது பாஸ் பண்ணி தட்டச்சு கற்றுக் கொண்டது குறித்தும் முதல் வாரிசே பேரனாக பிறந்தது குறித்தும் பெருமைப்பட்டுக் கொண்டே நிறைவாக இறந்து போனாள்.

காலி சருகுகளை வெளியே வீச வரும்போது இவன் இன்னும் அங்கேயே உட்கார்ந்திருப்பதை பார்த்தாள் மஞ்சுளா. “உசுர வாங்கன்னே வந்து சேந்துருக்க..” முனகிக் கொண்டே உள்ளே சென்றவள் இருபது ரூபாய் தாள் ஒன்றை எடுத்து வந்தாள். குமாரிடம் வாங்கியிருக்கலாம். “இந்தா.. பன்னு வாங்கி தின்னுட்டு எங்கயாவது இருந்துட்டு வா..” என்றாள். இந்த மாதிரி சமயங்களில் இவனே கௌரவமாகதான் நடந்துக் கொள்வான். இன்று உடம்பு அத்தனை துாரம் ஒத்துழைக்கவில்லை.

”வாபார டயத்துல இங்ஙன ஒக்காரதேங்கிறேன்ல்ல..” நீளமான வாசற்படிக் கொண்ட பழைய காலத்து காபிக் கடை. காலத்திற்கேற்ப டைல்ஸ் பதித்து டேபிள் சேர் பளபளப்போடு ஓட்டல் கடையாக மாறியிருந்தது.

ஓட்டல்காரரின் சத்தம் கேட்டு சுதாரிப்பாய் எழுந்தான். மூன்று நாளைய தாடி என்றாலும் சற்று அதிகமாகவே இருந்தது. நாற்பதை தாண்டவில்லை. அதற்குள்ளேயே கண்கள் உள்ளோடி கிடந்தன. அளவுக்கதிகமான உயரம் கொண்ட நாசியும் சிரிப்பது போலவே தோற்றமளிக்கும் அதரங்களும் ஒழுங்கற்றிருந்த மீசை முடிக்குள் பொலிவை இழந்திருந்தன. பவிசோடு இருந்திருந்தால் உடலின் வெண்மை நன்றாகவே பளிச்சிட்டிருக்கும்.

”ஓரமாதானே குந்தியிருக்கன்..” என்றான். கண்கள் கதகதப்பாக இருந்தன. மஞ்சுவோடு தனிக்குடித்தனம் வந்த அன்று பாய்.. தலையணை.. வாளி.. சமையல் பாத்திரம் என துாக்கு சுமைகளை இந்த படிக்கட்டில்தான் இறக்கி வைத்திருந்தான். அன்று மொத்தம் பனிரெண்டு பேருக்கு டிபன் வாங்கிக் கொடுத்தான்.

”பின்னால போய் ஒக்காந்துக்க..” என்றான் ஓட்டல்காரன் சற்று கரிசனமாய். இவனோடு நெருக்கமாகதான் பழகுவான். வியாபாரம் மந்தமாகிப் போனால் இவனிடம் புலம்ப கூட செய்வான். என்றாவது ஒருநாள் ஓசி டீ கொடுப்பான். ஆனால் வியாபாரம் என்று வந்து விட்டால் ஆள் கறார்தான். ஒருமுறை காந்திமதி எப்படியோ தேடி பிடித்து இந்த ஓட்டலுக்கு வந்து விட்டாள். சாயங்கால சமையலுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதிய நேரம் அது. கொத்தோடு அவன் சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டு நின்றவளை பார்த்ததுமே புரிந்து போனது எல்லோருக்கும். வாய் வார்த்தையாக பேசாமல் படாரென அவள் கையை உதறிக் கொண்டு ஓடினான் இவன். துரத்திக் கொண்டே ஓடி போய் அவனை இழுத்து வந்தாள். கல்லுளிமங்கனாய் நின்றவனிடம் பேசி அலுத்த ஒரு தருணத்தில் கழுத்தில் கிடந்த மஞ்சள் துண்டு கோர்த்த மஞ்சள் கயிற்றை கழற்றி வீசினாள். அவன் தலையை நிமிரவேயில்லை.

அடுத்த இரண்டு மாதங்களில் மீண்டும் வந்தாள் காந்திமதி. இந்த முறை அவன் வீட்டில் இருந்தான். ஆவேசமாக கத்தியதில் காந்திமதிக்கு மூக்கிலிருந்து தண்ணீர் வழிந்தது. இந்த முறையும் மஞ்சள் கயிறை கழற்றி வீசினாள். மண்ணை வாரி இறைத்து விட்டு கதறிக் கொண்டே போனாள். இத்தனை சத்தத்திற்கும் மஞ்சுளா வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. அதற்கு பிறகு காந்திமதியும் அவனை தேடி வரவேயில்லை.

இரவு மணி எட்டை தொட்டிருந்தது. சப்ளையர் ஒருவன் பராசிட்டமால் மாத்திரையும் டீயும் கொடுத்தான். சட்டையில் கிடந்த அலைபேசி அலற பிரயத்தனப்பட்டு எழுந்து உட்கார்ந்து எடுத்தான். “நாளக்கு வெளியூர்ல சூட்டிங்கு இருக்கு.. ராத்திரி பன்னெண்டு மணிக்கு பொறப்புடுணுமாம்.. செத்த கண்ணசந்தாதான் ஒடம்பு தோதுப்படும்.. வாரதுன்னா சீக்ரம் வந்து சேரு.. கதவ சாத்தீட்டு படுக்கப் போறேன்..” என்றாள். அவளை நம்ப முடியாது. பொய்யை கூட நிஜம் போலவே சொல்வாள்.

ஆனாலும் அவளை நினைத்தால் பாவமாக இருந்தது அவனுக்கு. வெளியூர் படப்பிடிப்பு என்றால் சில சமயம் ஒரு வாரம் கூட ஆகி விடும். “ஒடம்பெல்லாம் அடிச்சு போட்டப்பல இருக்கு..“ என்பாள். சுடுதண்ணீர் விளாவித் தருவான். குளித்து முடித்து வருபவளுக்கு ஆட்டுக்கால் சூப் வாங்கி தயாராக வைத்திருப்பான். தலையை ஈரம் போக துவட்டி விடும் போதே அவளின் நெருக்கம் தேவைப்படும் அவனுக்கு. அப்போது மஞ்சுக்குட்டி என்று அழைப்பான். அவளும் மறுப்பு சொல்வதில்லை. அன்றுதான் புதிது என்பது போன்ற ஆவேசம் இருக்கும் இருவரிடமும். எப்போதாவது எழும் மகன்களின் நினைப்பு கூட மஞ்சுக்குட்டியின் அணைப்பில் பஸ்பமாகி விடும்.

மகாராணியின் தோழிப் பெண்ணாக வேடம் கிடைத்த தனது தோழி ஒருத்திக்கு மஞ்சுளா நகையை வாடகைக்கு விட போக கொத்தாக எங்கோ தொலைத்து விட்டு நின்றாள் அந்த பெண். சண்டையில் மண்டை உடைய பாதிக்கு பாதி பணம் தேறியது. அதுவும் பிரியாணி தின்றே தீர்ந்து போனது. சம்பாதிக்கும் பணத்தை அப்படியே அவளிடம் கொடுத்து விடுவான். இன்று அவள் கொடுத்த நுாறு ரூபாய் கூட நேற்று முன்தினம் அவன் கொடுத்ததுதான். அவனுக்கு குடிப்பழக்கம் இல்லாதது இருவருக்குமே வசதிதான். ஆனால் அவளுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவன் நிறைய சம்பாதிக்க வேண்டியிருந்தது.

தட்டு தடுமாறி வீட்டுக்கு செல்லும் போது குளித்து முடித்து புத்துணர்வோடு இருந்தாள் மஞ்சுளா. இப்போதுதான் குமார் சென்றிருப்பானாக இருக்கும். தலையில் ஈரத்துண்டோடு “எனக்கு துாக்கம் வருது.. எங்க போய் தொலஞ்ச..“ என்றாள் கோபமாக. குளித்திருந்தாலும் குடி நாற்றம் மிச்சமிருந்தது. பரோட்டா வாங்கி சாப்பிட்டுருப்பாள் போல. தீர்ந்து போன பார்சல் கவர்கள் அங்கேயே கிடந்தன. அதை அப்படியே அள்ளிக் கொண்டு வந்து தெருவில் எறிந்தான். பிறகு வலதுகையை நீட்டி அதன் மீதே தலையை சாய்த்துக் கொண்டு படுத்துக் கொண்டான். உடல் அசந்திருந்தாலும் கை கால்கள் முறித்தெடுத்ததில் துாங்க இயலவில்லை.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து அங்கிருந்து நாற்காலியில் எறிந்துவிட்டு புளிச்.. புளிச்.. என்று தட்டினாள். அவன் மீது நீர் தெளித்ததில் கண்களை சுழித்து முகத்தை மறுபக்கமாக திருப்பிக் கொண்டான். கிளிப்புக்குள் முடியை அடக்கிக் கொண்டாள். பானை மீது கவிழ்த்திருந்த டம்ளரை எடுத்து அதில் பாட்டிலில் மீதமிருந்த சரக்கை ஊற்றினாள். சிறிது தண்ணீரை எடுத்து அதில் கலந்து வாயில் சரித்துக் கொண்டாள். கைகளை ஊன்றி மண்டியிட்டுக் கொண்டே அவனிடம் வந்து ஒருக்களித்து கிடந்த அவனின் இடுப்பில் தலையை சாய்த்துக் கொண்டாள். இடது கை அவன் தோளை அணைத்துக் கொண்டது. வலது கையால் காலருக்குள் கை விட்டு கழுத்தைத் தொட்டாள்.

”ரொம்ப சூடாருக்கு.. டாட்டருட்ட போவமா..?” என்றாள் சற்றே குளறலாக.

”மாத்தர போட்டுருக்கன்..” என்றான். அனிச்சையாக இடது கையை அவள் மீது படரவிட்டான். அவள் அப்படி கவிழ்ந்திருந்தது உடல் வலிக்கு இதமாக இருந்தது.

”கட்டங்கடசீல ஒம் பயலுவ இருக்கானுங்க ஒன்ன பாத்துக்க..” என்றாள்.

”ஆமா.. நாந்தேன் வளத்தேன் பாரு.. அவனுங்க என்ன பாத்துக்க..” என்றான்.

”வளக்காட்டீ.. நீ தகப்பன் இல்லேன்னு ஆயிடுமா..”

சட்டென்று ஜாக்கிரதையானான். குடித்து விட்டால் நிறைய பேசுவாள். நீதிபோதனை வகுப்பெல்லாம் கூட நடக்கும். தெளிந்ததும் இவன் சொன்ன பதில்களாலேயே இவனை மடக்கி போட்டு பிடித்து விடுவாள்.

”அப்ப நீ கை நெறய சம்பாதிச்சும் எங்கிட்ட பிச்ச எடுக்கறாப்பல கெடக்கற.. அப்டிதானே..?”

”அடீப்போடீ.. எல்லா ஆம்பளப்பய பொழப்பும் அதான்..” என்றான் மழுப்பலாக.

”அத அவனுங்க தெனமும் சொல்லிக் காட்டுவானுங்க.. ஒன்ன மாதிரி நெஞ்சுலயே வச்சுக்கிட்டு கழுத்தறுக்க மாட்டானுங்க.. வீடு புடிச்சு கௌரதியா வச்சிருக்க.. நாந்தா ஒன்ன தெரத்தி தெரத்தி வுடுறேன்.. ஏன் இப்டி செய்றடீ பொம்பளேன்னு கைய நீட்டி அடிச்சாலும் அடங்கி போவும் மனசு..”

”நாந்தானே ஒன்ன கூட்டியாந்தேன்.. சோறு போட்டுதானே ஆவுணும்.. சும்மா பேசாம போய் படு..” என்றான்.

”எங்காச ஒனக்கு குடுக்கறதுக்கு நீ என்ன தாலி கட்டுன புருசனா..? நாள மக்காநாளு ஒம் பொண்டாட்டி கூப்டா மசிரே போச்சுன்னு ஓடிப் போயீடுவே..”

”ஆமா போறாங்க.. அவள புடிச்சிருந்தா நா ஏன் ஒம் பின்னாடி ஓடியார்றேன்..?”

உடலை மேலே உயர்த்தி அவன் கன்னத்தி்ல் மெலிதாக முத்தமிட்டாள். ”அப்ப புடிக்காமதான் புள்ள பெத்துக்கிட்டியா..?” அதே கன்னத்தை வலிக்காமல் நிமிண்டினாள்

”இருட்டுல எல்லா பொம்பளங்களும் ஒண்ணுதான்.. ஆனா நீ ரொம்ப பெசலு..” என்றான் உஷாராக. காந்திமதியை பற்றிய பேச்சு எப்போதாவதுதான் வரும். அதுவும் அவளே இழுத்தால்தான் உண்டு. போன முறை குடித்து விட்டு புரண்டுக் கொண்டு கிடந்தபோதும் இப்படிதான் வலிய பேசினாள். அந்த மாதிரி நேரங்களில்தான் அவளிடமிருந்து அன்பான வார்த்தைகள் வரும் என்பதால் அவனுக்கும் சற்றே விட்டு பிடிக்கத் தோன்றும். “ஒன் பொண்டாட்டி புள்ளய பாக்கணும்னு தோணுல..” என்றாள்.

”அத்த வுடு.. வேறா எதுனா பேசு..”

”வேறு என்னாத்த பேச சொல்ற.. அதுங்க கூட போறதுன்னா சொல்லு.. நா பேசி பாக்றேன்..”

”பேசாம இருக்க மாட்டே..” விருட்டென்று வெளியே வந்து விட்டான். எழுந்து போவதற்கும் இன்று உடம்பு ஒத்துழைக்கவில்லை.

”கேக்க நாதியத்து அனாத பொம்பளயா சுத்திக்கிட்டு கெடக்கேன்.. நாலு காசு சேத்து வச்சாதான எம் பொணம் சுடுக்காடு போவும்..”

”இப்ப என்ன சொல்லீட்டேன்னு பெரும்புடியா பேசுற..?” என்றான். இந்த மாதிரி நேரங்களில் அவனின் எந்த பேச்சுக்கும் சமாதானமாக மாட்டாள். வாய் வார்த்தை வலுத்து ஒரு வாரமோ.. பத்து நாட்களோ.. அவன் ஓட்டல் கடையின் ஓரமாக முடங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.. இவளாக பார்த்து கூப்பிடும் வரை வரக்கூடாது என்ற அவன் பிடிவாதத்தை மழையோ பனியோ கூட அசைத்துப் பார்த்ததில்லை. சில சமயம் மாதக் கணக்கில் கூட பாராமுகமாக இருப்பாள். ஒருமுறை தெருவோர கடையின் சாக்குப்படுதா மறைவில் கிடந்தவனை போலீஸ் தட்டியெழுப்ப, ரயிலடிக்கு போனான். நல்ல துாக்கம் வேறு. அன்று அவனுக்கு சோதனையான காலக்கட்டம் போல. அங்கும் போலீஸ் துரத்தியடிக்க மேம்பாலத்திற்கடியில்தான் அன்று அவனுக்கு வாய்த்தது. விழித்துப் பார்த்த போது மலங்களுக்கு மத்தியில் கிடந்தது தெரிந்தது. பன்றிகள் அசிங்கமாக கடையோர பல்வரை காட்டிக் கொண்டு ஒரு மாதிரியான உருமலில் மலத்தை உண்ண, நாற்றம் சகிக்கவில்லை அவனுக்கு. ஏனோ அன்று நெடுநேரம் வாய் விட்டு அழுதான். அன்று வழக்கத்தை விட அதிகமான விறகுகளை பிளந்துப் போட்டதில் ஓட்டல் முதலாளி மூன்று நேர சாப்பாடும் சொல்லிக் கொள்ளும்படியான கூலியும் கொடுத்தான். மஞ்சுவும் அவனும் பெரிய ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டார்கள்.

காய்ச்சலில் ஏற்பட்ட கையாலாகததனத்தில் அவளை மெல்ல அணைத்துக் கொண்டான்.

”ஒடம்பு ரொம்ப காந்துதுய்யா.. இரு மாத்ர இருந்தா வாங்கியாரேன்..”

கையை விலக்கி விட்டு எழுந்து எங்கோ சென்றாள். வரும்போது கையில் ஒரு டம்ளர் பாலும் இரண்டு மாத்திரைகளும் இருந்தன. மாத்திரையை படக் படக்கென்று விழுங்கினான். தண்ணியாக ருசியற்று இருந்த பால் அவனுக்கு அமிர்தமாக தோன்ற நாக்கில் சூடு பறக்க பறக்க குடித்து விட்டு அவளிடம் டம்ளரை நீட்டினான். அதை வாங்கி ஒரு ஓரமாக வைத்தவள் பாயை விரித்து அவனை படுக்க வைத்துவிட்டு அவன் தலையணையிலேயே தலையை வைத்து அவனை கட்டிக் கொண்டு படுத்தாள். இருவரும் ஏதும் பேசவில்லை என்றாலும் உடல்கள் தன்னிச்சையாக இயங்கின.

அவனும் அவளும் அருகருகே அமர்ந்து சூடாக டீ பருகினார்கள். இந்த மாதம் அவளுக்கு இரண்டு படப்பிடிப்புகள் ஒப்பந்தமாயிருந்தன. அன்று ஒருநாள் படப்பிடிப்பு ஒன்றில் கைரேகை ஜோதிடர் ஒருவர் அவள் கையை நெடுநேரம் பிடித்து திருப்பி திருப்பி பார்த்து விட்டு ஒனக்கு சனிதான் பிரச்சன.. ஒருக்கா திருநள்ளாறு போய்ட்டு வந்துடு.. என்று சொன்னது அவள் நினைவிலேயே இருந்தது. அதை அவனிடம் சொல்ல இருவரும் பஸ்ஸில் அருகருகே அமர்ந்து திருநள்ளாறுக்கு பயணம் செய்தனர்.

ம்ம்ம்.. லேசான முனகலில் விழித்துக் கொண்டாள். “அய்ய.. அம்புட்டும் கனவாக்கும்..“ சலிப்பாக வந்தது அவளுக்கு. மாத்திரையின் வேகம் குறைந்ததில் அவன்தான் முனகிக் கொண்டிருந்தான்.

துாக்கு வாளியை எடுத்துக் கொண்டு டீக்கடைக்கு புறப்பட்டாள். டிரெயின் சத்தம் கேட்டது. மணி அஞ்சாயிடுச்சா.. ஆறு மணிக்கு புது டைரக்டரை பார்க்க குமார் அவளை வரச் சொல்லியிருந்தான். நடையை எட்டிப் போட்டாள். பன்னும் டீயும் வாங்கிக் கொண்டு திரும்பினாள்.

அவனது முனகல் குளறலாக வந்தது போலிருந்தது. என்னாச்சு இந்தாளுக்கு.. ஏழு வருசத்துல ஆள் இப்டி சொணங்கி பாத்ததேயில்லயே.. குனிந்து நெருங்கி அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து சூடு பார்த்தாள். அந்த முனகல் காந்தி.. காந்தி.. என்று கேட்டது. மீண்டும் உற்றுக் கேட்டாள். காந்திமதியைதான் அழைக்கிறான்.

அவனை எழுப்பினாள். “இந்தாய்யா.. எந்திரி.. இத சாப்டுட்டு படு..” என்றாள். மலங்க விழித்தவன் மறுப்பு சொல்லாமல் வாங்கி தின்றான். “மொத வேலயா டாக்டர்ட்ட போவுணும்..“ என்றாள்.

“ஆமா.. காச்சலுக்கெல்லாம் களுத டாக்டர்ட்ட போறதா..? ரெண்டு நாள்ல்ல எல்லாம் சரியாயிடும்..” என்றான்.

“நா வெள்ளன கௌம்புணும்.. வர ரெண்டு நாளாவும்.. இந்தா காசு.. காச்ச வுட்டோன்ன நீ கௌம்பி உங்கூருக்கு போயீடு..”

அதிர்வாக நிமிர்ந்தான். ”என்னன்னமோ பேசுற..?”

”அதெல்லாம் ஒண்ணுல்ல.. வூட்ட காலி பண்ண சொல்றாங்க.. பேசாம எங்காளுங்களோடு சேந்துக்கலாம்னு பாக்றேன்..”

”நா வேணா ஓட்டல் கடயிலயே தங்கிக்கிறன்.. நீ அப்பப்ப பாத்துட்டு போ..”

”அதெல்லாம் தோதுப்பட்டு வராது.. நீ கௌம்பு..”

”அய்ய்.. இப்டிதான் சொல்லுவ.. அப்றம் எங்கன்னாலும் என்ன தேடி புடிச்சு ஒடியாந்துடுவ.. லுாசு.. போடீ.. என்ன துாங்க வுடு..” என்றான்.

”இல்ல.. நீ கௌம்பு.. ரெண்டு நாளு கழிச்சு நான் வாரதுக்குள்ள ஒன் சட்டத்துணிமணிய எடுத்துக்கிட்டு கௌம்பிப் போயிடு.. நானும் குமாரும் கல்யாணம் கட்டிக்கலாம்னு இருக்கோம்.. நீ இங்கருந்தா தோதுப்பட்டு வராது..“ என்றாள் திடீரென்று தோன்றிய எண்ணத்தை பேச்சாக்கி.

இந்த இரண்டு நாட்களுக்கு எங்கு தங்குவது என்பதுதான் அவளது அப்போதைய சிந்தனையாக இருந்தது.

picture courtesy: Deviant Art

நான் ஏன் எழுதுகிறேன்? – செந்தில்நாதன்

செந்தில் நாதன்

நான் கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளாக இணையத்தில் அங்குமிங்குமாய் எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கு முன்னர் எதுவும் எழுதியதில்லை, நாட்குறிப்பில் கவிதை எழுதியதைத் தவிர. இணையத்திலும் மொழிபெயர்ப்பு (நான்கு சிறுகதைகள், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு இருபது கவிதைகள், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு நூற்றைம்பது பழந்தமிழ்க் கவிதைகள்) எழுத்துக்களே அதிகம்.

ஏதேனும் ஒரு படைப்புக்காகவாவது சன்மானம் வாங்கியவர் தான் எழுத்தாளர் என்றால் நான் எழுத்தாளனில்லை. மிஞ்சிப் போனால் ஒரு இருநூறு பேர் நான் எழுதியவற்றைப் படிப்பார்கள். நாலைந்து பேர் பின்னூட்டமிடுவார்கள். நான் இதுவரை எழுதியவற்றைப் புத்தகமாகப் போட்டால் ஒரு பத்து இருபது பேர் வாங்கலாம். ஆனாலும் விடாமல் எழுதத் தூண்டுவது எது?

நான் அறிந்தவற்றை உலகத்தோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை தான். இதில் உலகத்துக்கு எந்தப் பயனும் இருக்கிறதா என்ற கவலை எனக்கில்லை. எனக்கு சந்தோஷமாக இருப்பதால் எழுதுகிறேன். இதில் சற்று கர்வம் ஒளிந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். நான் மதிக்கும் நபர்களிடம் இருந்து பாராட்டுகள் வரும் போது சற்றே மிதப்பாகத் தான் இருக்கிறது.

எழுதுவது எனக்குத் தொழில் அல்ல. தொழிலுக்கு நடுவே எழுதுகிறேன். அது போல எழுதுவதற்கு ஏற்ற இடம் என்றெல்லாம் எதுவுமில்லை. எனது பல படைப்புகள் நான் வாரா வாரம் இரயில் வண்டியில் பயணம் செய்யும் போது மனதில் எழுதப் படுபவையே. மனதளவில் ஒரு வடிவம் வந்த பிறகு தட்டச்சிடுவதே எனது எழுதுமுறை. காகிதத்தில் எழுதியது மிகமிகக் குறைவு. கணிணியிலும் கைபேசியிலும் தட்டச்சிட்டதே அதிகம்.

எழுதாமல் என்னால் இருக்க முடியுமா என்றால் முடியும் தான். ஆனால் என் வாழ்க்கையில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டேயிருக்கும். எழுதுவது என்னை முழுமையடைய வைப்பதாய் நான் நினைக்கிறேன். அதனால் எழுதுகிறேன். எனக்காகத் தான் எழுதுகிறேன். என் பார்வையை உலகமும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற பேராசையினாலும் தான் எழுதுகிறேன்.

oOo

(13 வருடங்களாக வலைப்பதிவுகளில் எழுதி வரும் செந்தில்நாதன், மொழிபெயர்ப்புகள் மூலம் இணையவெளியில் அறியப்பட்டவர். சங்ககாலக் கவிதைகள் முதல் நவீனக் கவிதைகள் வரை 150 கவிதைகள் மற்றும் சதத் ஹசன் மண்டோவின் 4 சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளார். தற்போது ஈடுபட்டிருப்பது பழந்தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பு – https://oldtamilpoetry.wordpress.com . சென்னையிலும் தூத்துக்குடியிலும் வசிக்கும் இவர், கனரக வாகன நிறுவனம் ஒன்றில் பங்குதாரராய் இருக்கிறார்)

நிறப்பிரிகை: இரண்டு – நீலம்

சரவணன் அபி

விரி வானை
விஞ்சும்
மனிதத்தின்
மனவிரிவு

கைவிரல் பற்றி
படர விடும்
நம்பிக்கை

அமைதியற்ற உயிர்
காத்து நிற்கும்
விடியற் கீற்று

கூரை
தாங்கிப்பிடிக்கும் தரை
சூழவமைந்த குடில்

அகண்டவெளிப் பெருக்கு
அகத்தமைந்த ஞானச்செருக்கு

நீங்கள் கைதூக்க அல்ல இக்கேள்வி

பெருந்தேவி

பொதுக் கழிவறைச் சுவர்களில்
கலை ஆர்வத்தோடு
கணவனைப்
படம்போட்டு பாகம் குறிக்க
எந்தக் கண்மணிதான்
நினைப்பதில்லை?

எதற்காக எழுதுகிறேன்? – மோனிகா மாறன்

 

மோனிகா மாறன்

எதற்காக எழுதுகிறேன்? இதற்கு தனிப்பட்ட முறையில் என் பதில்- சிறந்த எழுத்து வாசிப்பவரைத் தொடர்ந்து சிந்திக்கவும் எழுதவும் வைக்கும் என்பதே. ஆக என் வாசிப்புகளின் தொடர்ச்சியே என் எழுத்து. எழுதி எழுதியே நம் தரவுகளை உருவாக்கிக் கொள்ள இயலும். அந்த வகையில் எழுத்து எனக்கு ஆக்கப்பூர்வமான தரவுகளையும் வாழ்வியல் வரைமுறைகளையும் உருவாக்குகிறது.

வேறுபட்ட சிந்தனைகள் கொண்டவர்களை இச்சமூகம் எளிதில் ஏற்பதில்லை. என்னைப் பொருத்தவரையில் மிகச் சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகிற்கு வந்துவிட்டேன். எனவே நான் வாசித்த மிகப்பெரும் எழுத்தாளுமைகளின் சிந்தனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றியே என் செயல்கள், பேச்சுகள் இருக்கும். ஆனால் நம் சமூகத்தின் பொதுவெளியில் அப்படிப்பட்ட எதையும் வெளிப்படையாக அவர்களின் காலங்காலமான நம்பிக்கைகளுக்கு எதிராக பேசிவிட இயலாது. அது மதமோ சினிமாவோ இலக்கியமோ அரசியலோ எதுவாக இருந்தாலும் நம் எண்ணங்களை வெளிப்படையாக இயம்புதல் எளிதானதன்று. இவ்விடத்தில் ஒரு பெண்ணாக இதனை நான் தீவிரமாக கூற இயலும்.

பொதுவாக, இதைப் பற்றியெல்லாம் நீ ஏன் பேசுகிறாய் என்ற பாவனையே எனக்கான எதிர்வினையாக இருக்கும். இத்தகைய சூழலில் எழுத்துலகம் எனக்கு முழுமையான வெளியாகவே உள்ளது. என் நினைவுகளை, சிந்தனைகளை மிக உண்மையாய் கட்டுப்பாடுகளற்று வெளிப்படுத்தும் தளம் எழுத்துதான். அத்தகைய விடுதலையை வேண்டியே நான் எழுதுகிறேன்.

தீவிர வாசிப்பும் நுண்மையும் கொண்ட எனக்கு எழுத்து என்பது என் இருத்தலின் ஆகச்சிறந்த உளவியல்  வெளிப்பாடு. எழுதுவதால் என் கருத்துகள், கொள்கைகள் மேலும் மேலும் வலுப்பெற்று என்னை உருவாக்குகின்றன. சில வேளைகளில் நான் எழுதும் படைப்புகளை எந்த இதழுக்கும் அனுப்பாமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு. ஏனெனில் அவை எனக்காக எழுதப்பபட்டவை. உண்மையில் பிரசுரமானவற்றைவிட பிரசுரமாகாத படைப்புகள் என்னிடம் நிறைய உள்ளன.

எந்த இதழுக்கு அனுப்பினாலும் இல்லையென்றாலும் தினமும் எதையாவது எழுதுவது என் இயல்பு.. எப்படி வாசிப்பின்றி என் நாள் நிறைவுறாதோ அதே போன்று ஒரு பக்கமாவது எழுதாமல் முடிவுறுவதில்லை. எத்தனை பணிகள் இருப்பினும் எந்தச் சூழலிலும் என்னால் எழுத இயலும் என்பதை தன்னம்பிக்கையுடன் கூற இயலும்.ம ஏனெனில் இன்று அதிகம் பேர் நேரமில்லை, சூழல் சரியாக இல்லை என்றெல்லாம் காரணங்கள் கூறுகிறார்கள்.

எனில் எப்படி என்னால் எழுத இயலுகிறது? தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், இணையம்  என்று பொழுதுபோக்கு கொண்டாட்டங்கள் நிறைந்த இக்காலகட்டத்தில் இலக்கியம், தீவிர வாசிப்பு என்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு. மேலோட்டமாக அதிகபட்ச கவன ஈர்ப்பாக பதினைந்து நிமிடங்களுக்கு மேல் எதையும் கூர்ந்து நோக்குவதற்கு நிறைய பேருக்கு விருப்பமில்லை. இவையெல்லாம் தெரிந்தும் எதற்காக எழுதுகிறேன்? எழுத்து என் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வழி மட்டுமன்று. அது என் வாழ்வின் அனைத்து செயல்களிலும் உள்ளது என்றே கூறுவேன். நான் எழுதுவதாலேயே பிறருடன் என் உறவுகள் மிகச்சீராக உள்ளன. அந்த புரிதலை உண்டாக்குவது என் எழுத்தே. நம்மைச் சுற்றி உள்ளவர்களின் உண்மையான இயல்பு பிறர் நடத்தும் பாவனைகள், மெலோடிராமாக்கள்   எல்லாவற்றையும் புரிந்து கொள்ள அடிப்படை நான் எழுதுவதே.

பொதுவாக நான் மிக இயல்பாக, எளிதாக அனைவரிடமும் பழகும் இயல்புடையவள். என் நட்பு வட்டம் மிகப்பெரியது. என் கருத்துகளுடன் முரண்பட்டாலும் என்னுடன் பழக மிக விருப்பத்துடன் உள்ள நண்பர்களே அதிகம். நிறைய பேர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். அனைவரும் விருப்பத்துடன் கேட்கும் வகையில் உண்மையுடன், கூரிய தரவுகளுடன், நண்பர்களிடமும் உறவுகளிடமும் சுவாரசியமாக பேசும் உற்சாக மனநிலை என் எழுத்தின் வாயிலாக நான் அடைந்ததே. எவரிடமும் பொய் முகம் காண்பிக்காமல் உண்மையாய் இருப்பது எத்தனை கடினமானது என்பது அனைவருக்கும் தெரியும்.

இத்தகைய சூழலில் பூச்சுகளற்று உண்மையுடன் வாழ எனக்கு அடிப்படையாக உள்ளது என் எழுத்தே. அந்த உண்மைத்தன்மையை, நட்புணர்வை, எவரையும் நேசிக்கும் பண்பட்ட மனதை எனக்களித்தது என் எழுத்தே என்று நான் உணர்ந்திருக்கிறேன். சமூகம், உறவுகள் சார்ந்த என்  உள எழுச்சிகளை, கோபங்களை நான் எவரிடமாவது நேரடியாகக் கூறியிருந்தால் இன்று நிச்சயம் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்தான் இருந்திருப்பேன். மனச்சீற்றங்களை என் எழுத்தில் கொட்டித் தீர்ப்பது என்னளவில் மிக இயல்பான மன நிறைவு என்பேன்.

எழுத்தின் வாயிலாக நான் உணரும் மனித மனங்களின் நுண்ணுணர்வுகள் வாழ்வில் அவர்களுடன் பழக எளிதாக உள்ளது. சோர்வுகளற்று, புலம்பல்களற்று, முணுமுணுப்புகளற்று, பேராசைகளின்றி வாழ்வின் எளிய மகிழ்வுகளையும் உன்னத அனுபவங்களையும் உற்சாகமாய் எதிர்கொண்டு பிறருக்கும் அந்த மனநிலையைக் கடத்தும் அளவிற்கு என்னை வைத்திருப்பது என் எழுத்தே. பிறரிடம் எனக்கான இடத்தை அளித்ததும் எழுத்துதான் என மகிழ்வுடன் பகிர்கிறேன்..

oOo

(மோனிகா மாறனின் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் இணைய இதழ்களிலும் அச்சிதழ்களிலும் வெளிவந்துள்ளன. கவிதைகள் மற்றும் சில கட்டுரைகளும் வெளியாகியுள்ளன. இவரது நாவல் ஒன்று எழுதி முடிக்கப்பட்டு வெளியாக உள்ளது. செவ்வியல் மற்றும் தீவிர இலக்கிய வாசிப்பில் அதிக நாட்டம் கொண்ட இவர் தமிழ் இலக்கியத்தின் பல முக்கிய புத்தகங்களுக்கு விமர்சனங்கள் எழுதியுள்ளார். வேலூரில் ஆசிரியையாக பணியாற்றுகிறார்).