Author: பதாகை

எதற்காக எழுதுகிறேன்? – எம்.ஜி.சுரேஷ்

 

எம். ஜி. சுரேஷ்

mgs-image

 

நீங்கள் என்னிடம் உங்கள் சுட்டு விரல் உயர்த்திக் கேட்கிறீர்கள்: ‘நீ எதற்காக எழுதுகிறாய்?’

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?

‘நான் ஏன் எழுதுகிறேன் என்றால், அப்படிச் செய்யாமல் இருக்க என்னால் முடியவில்லை’ என்று சமத்காரமாகப் பேச நான் விரும்பவில்லை. அதே போல், ‘எனது வாழ்க்கை சொற்களால் ஆனது; ஒன்று நான் வாசித்த சொற்கள், இரண்டு நான் எழுதிய சொற்கள்’ என்று சார்த்தர் சொன்னது போல் கம்பீரமாகவும் என்னால் சொல்ல முடியாது. ஏனெனில், சார்த்தர் அளவுக்கு நான எழுதிக் குவிக்கவும் இல்ல, அவரைப்போல் படித்து முடிக்கவும் இல்லை. ‘வாழ்க்கையால் பாதிக்கப்பட்ட இளைஞன் பதிலுக்கு வாழ்க்கையை பாதிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சியே இலக்கியம். எனவே, என்னை பாதித்த வாழ்க்கையை, பதிலுக்குப் பாதிக்க நான் எடுத்துக் கொள்ளும் முயற்சியே எனது இலக்கியம்’ என்று நான் வசனம் பேசி வாதிட மாட்டேன். ஏனெனில், நான் எழுத்தாளன் மட்டுமே. புரட்சிக்காரன் அல்ல.

சரி, நான் என்னதான் சொல்லட்டும்.

எனக்கு இப்படிச் சொல்லத் தோன்றுகிறது. எதற்காக எழுதுகிறேன் என்பதற்கு முன்னதாக, நான் எப்படி எழுத வந்தேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்வது சரியாக இருக்கும் என்று படுகிறது. ஆமாம். நான் எப்படி எழுத வந்தேன்?

அடிப்படையில் நான் ஒரு வாசகன். வாசிப்பது எனக்குப் பிடித்தமான காரியங்களில் ஒன்று. கறாராகச் சொல்லப் போனால் பிடித்தமான ஒரே காரியம் அதுவாகத்தான் இருந்தது. பள்ளிப்பருவத்தில் எனக்குப் படிக்கக்  கிடைத்தவை வார இதழ்கள் மட்டுமே. குமுதம், விகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் என்னுள் இருந்த வாசனை உயிர்ப்பித்தன. அவற்றில் வந்த சிறுகதைகள், தொடர்கதைகள் என்னை வசீகரித்தன. பின்னர், கசடதபற, கணையாழி போன்ற சிற்றிதழ்களின் பரிச்சயமும் கிடைத்தது. பலவிதமான எழுத்துகளை வாசிக்க வாசிக்க எனக்கு எழுத்தின் ருசி என்னவென்று தெரிந்தது. நிறையப் படித்தேன். நிறைய விவாதித்தேன். என்னுடைய அம்மா லக்‌ஷ்மியின் ரசிகை. நானும் லக்‌ஷ்மியின் வாசகன் ஆனேன். என் தாத்தா கல்கியின் ரசிகர். நானும் கல்கியின் வாசகன் ஆனேன். என் மாமா ஜெயகாந்தனின் ரசிகர். நானும் ஜெயகாந்தனின் ரசிகன் ஆனேன். பின்னர் நானே சுந்தரராமசாமி, கிருஷ்ணன் நம்பி, கி.ரா. என்று தேடிக் கண்டுபிடித்தேன். பல எழுத்தாளர்களை நேரில் பார்த்துப் பேசினேன். நா.பா., அகிலன், வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஞானக்கூத்தன், வண்ணநிலவன், இளவேனில் போன்ற பலர் என்னுடன் நேர்ப்பழக்கம் உள்ள இலக்கியவாதிகள். ஆனாலும், எனக்கு எழுதவேண்டும் என்று ஏனோ தோன்றியதே இல்லை. நான் அடிக்கடி சந்திக்கும் சில எழுத்தாளர்களில் இளவேனிலும் ஒருவர். அப்போது அவர் கார்க்கி என்ற மாத இதழை நடத்திக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் எழுத்தாளர் இளவேனில் தனது ‘கார்க்கி’ இதழுக்காக ஒரு சிறுகதை எழுதித் தருமாறு என்னைக் கேட்டார். என்னால் நம்ப முடியவில்லை. ‘நிஜமாகவா கேட்கிறீர்கள்?’ என்றேன். ‘ஆமாம், ஏன் கேட்கிறீர்கள்? என்றார் அவர். ‘என்னை நம்பியா’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, ‘ஒன்றும் இல்லை’ என்றேன். பின்பு எனது முதல் சிறுகதையான ‘இரண்டாவது உலகைத் தேடி’ யை எழுதினேன். சரியாக வந்த மாதிரிதான் தோன்றியது. எழுதியதை அவரிடம் கொடுத்தேன். படபடப்பாக உணர்ந்தேன். பின்னர் அதைப்பற்றி மறந்துவிட்டேன்.  அவரிடம் அது பற்றிய அபிப்பிராயம் எதையும் நான் கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. ஒரு வேளை, கதை அவருக்குப் பிடிக்காமலிருந்து, முகதாட்சண்யத்துக்காக, ‘பிடித்திருக்கிறது’ என்று பொய் சொல்லும் தர்மசங்கடத்துக்கு அவரை ஆளாக்க வேண்டாம் என்று நினைத்தேன். அடுத்தவாரமே கார்க்கி இதழ் வந்தது. அதில் என் சிறுகதை முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. இப்படித்தான் நான் எழுத வந்தேன்.

‘கதை நன்றாக வந்திருக்கிறது. தொடர்ந்து எழுதலாமே’ என்றார் அவர். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. அதற்கு முன்னால் நா.பா கேட்டதற்கிணங்க தீபம் இதழில் புதுக்கவிதை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அது 1970 ஆண்டு தீபம் இதழில் பிரசுரமாகி இருந்தது. சிறுகதை என்று பார்த்தால் கார்க்கியில் எழுதியதுதான் முதல். அந்தக் கதையை வாசித்த நிறையப்பேர் பாராட்டினார்கள். எனக்கும் எழுத வருகிறது என்பது எனக்கே ஒரு புதிய செய்தியாக இருந்தது. அந்த நேரத்தில் நான் புதுக்கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். தீபம், கணையாழி, மற்றும் பல சிற்றிதழ்களில் அவை பிரசுரமாகிக் கொண்டிருந்தன. இப்போது ஒரு கதை பிரசுரமானதும் கவிதை எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். தொடர்ந்து சிறுகதைகள், குறுநாவல், நாவல் என்று கிளை பரப்பினேன். எனது ஆதர்ச எழுத்தாளர்களான க.நா.சு., ஜெயகாந்தன், தி.ஜானகிராமன்  ஆகியோருக்கு என் எழுத்து பிடித்திருந்தது என்பது ஒரு விசேஷம். அந்த அங்கீகரிப்பு என்னை மேலும் தொடர்ந்து எழுதுமாறு செய்தது. முதலில் கவிதை எழுதினேன். அதற்கு அங்கீகாரம் கிடைக்காததால் அதை விட்டுக் கதைகள் எழுதினேன்.

ஆக, அங்கீகாரத்துக்காகத்தான் நான் எழுதுகிறேனோ?

ஏன் கூடாது? அதற்காகவும்தான் எழுதுகிறேன்.

இந்தத் தருணத்தில், நானும் என்னையே கேட்டுக் கொள்கிறேன், ‘எதற்காக எழுதலானேன்? பிறர் எழுதச்சொல்லித் தூண்டியதால் மட்டுமா? ஒருவேளை பிறர் என்னை எழுதச்சொல்லிக் கேட்காமல் இருந்திருந்தாலும் நான் எழுத ஆரம்பித்திருப்பேனோ என்று கூட தோன்றுகிறது.

முதலில் ஒருவர் சொன்னதன் பேரில் எழுத ஆரம்பித்தாலும், அதன் பிறகு யாரும் சொல்லாமலே தொடர்ந்து எழுதவும் செய்கிறேனே, அது ஏன்?

ஆசை. எழுதும் ஆசை. மனசுக்குள் முட்டி மோதும் விஷயங்களை வெளியே கொட்டத்துடிக்கும் ஆசை. பின்பு, அதற்குச் சாதகமான எதிர்வினைக்கான தாகம் ஏற்படும் போது அந்தத் தாகம் தீரப் பாராட்டல்களைப் பருக ஆசை. பாராட்டுகள் வர வர தாகம் தீர்ந்து விடுவதில்லை என்பது ஒரு வினோதம். பாராட்டப் பாராட்ட தாகம் தீர்வதற்கு மாறாக வளர்கிறது. யாராவது என் எழுத்துகளைக் கவனிக்கிறார்களா என்று மனக்குறளி கூர்ந்து கவனிக்கிறது. யராவது கவனித்துவிட்டால் போதும், காய்ந்த மரத்தில் தீ பற்றிக் கொள்வதைப் போல், புறக்கணிக்கப்படும் தருணங்களில் எனக்குப் பிறரின் கவனத்தைக் கவரும் ஆசை பற்றிக் கொள்கிறது. தொடர்ந்து எழுதுகிறேன். பாராட்டுகள் தொடர்கின்றன. விருதுகள், பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுதல் போன்ற கௌரவங்கள் தொடர்கின்றன. என்னை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. இதற்காகவும் எழுதுகிறேன்.

வாசிப்பு நமக்குப் புதுபுது இலக்குகளை நிர்ணயிக்கின்றன. ஜெயகாந்தனை வாசித்தபோது அவர் மாதிரி எழுத வேண்டும் என்பது இலக்காக இருந்தது. பின்பு, உலக இலக்கியங்கள் பரிச்சயமான போது, அவர்கள் ரோல் மாடல்களாக இருந்தார்கள். பின் நவீனத்துவம் அறிமுகமானபோது இதாலோ கால்வினோ, டொனால்ட் பார்தல்மே, உம்பர்த்தோ எக்கோ போல் எழுத ஆசை வந்தது. இலக்குகள் மாற, மாற வேறு வேறு மாதிரி எழுதிப்பார்ப்பதும் நேர்ந்து விடுகிறது. இதனால் புது மாதிரி எழுத வேண்டியதாகி விடுகிறது. . ஏற்கெனவே எழுதியதில் வரும் திருப்தியின்மை மேலும் மேலும் எழுத வைக்கிறது என்று நினைக்கிறேன். இதற்காகவும் எழுதுகிறேன்.

சரி,இதனால் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கவும் முடியுமா?

முடிவதில்லைதான். சில சமயங்களில் எழுதவும் செய்கிறேன் பல சமயங்களில் எழுதாமலும் இருக்கிறேன். அது எதனால்?

யோசித்துப் பார்க்கையில் ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்து என்பது சொற்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் ஆனது. சொற்களுக்கு இடையே நிலவும் மௌனங்கள். எழுதுவது சொற்களை உருவாக்குதல். எழுதாமல் இருப்பது மௌனங்களை உருவாக்குதல். இரண்டுமே எழுத்தின் பாற்பட்டவை.

ஏதோ ஒரு உந்துதலின் விளைவாக எழுத வருகிறார்கள். சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். சிலர் இடையிலேயே விட்டு விடுகிறார்கள். ஃபிரெஞ்சுக் கவி ரிம்பாட் தனது பத்தொன்பதாவது வயதிலேயே எழுதுவதை நிறுத்திக் கொண்டான். மௌனி இருபத்தைந்து சிறுகதைகளுக்கு மேல் எழுதவில்லை. ஜெயகாந்தன் எழுபதுகளுக்குப் பிறகு சுமார் நாற்பதாண்டுக்காலமாக எழுதாமல் இருந்தார். ‘புயலில் ஒரு தோணி’ ப. சிங்காரம் தனது இரண்டு நாவல்களுக்குப் பிறகு எழுதுவதை விட்டுவிட்டார். இவர்களெல்லாம் பெரிய சாதனையாளர்களாகக் கருதப்படுபவர்கள். அப்படியும், இவர்களெல்லாம் ஏன் தங்கள் பிரதிகளை எழுத வந்தார்கள். அதே போல்  ஏன் பின்னர் எழுதாமல் நிறுத்திக் கொண்டார்கள்? எழுதியவரை போதும் என்று தோன்றியிருக்கலாம். அதில் தவறில்லை. அது ஒரு விதமான மௌன நிலை என்று படுகிறது.

மௌன நிலையில் இருப்பதனால் அவர்கள் எழுதவில்லை என்று சொல்ல முடியுமா என்ன?

இப்போதும் கூட நான் என் கதைகளை முதல் வரி முதல் கடைசிவரி வரை,- ஏன் கடைசிச் சொல் வரை – மனசாலேயே எழுதிப் பார்த்துவிடுகிறேன். அதன் பின்னரே காகிதத்துக்கு பெயரக்கிறேன். அனேகமாக என் மனதில் இருந்த எல்லாவற்றையும் பெயர்த்து விடுகிறேன். ஒரு சில விஷயங்கள் இந்தப் பெயர்த்தலின் போது கை நழுவிப் போய் விடுவதும் உண்டு. அவற்றை மீண்டும் மீட்டெடுத்துப் பிரதியில் சேர்ப்பது ஒரு மூச்சு முட்டும் அனுபவம்.

ஒரு விஷயம் புலப்படுகிறது. எழுத்தாளர்கள் எழுதும்போது செய்வதைப் போலவே, எழுதாதபோதும் ஒரு காரியத்தைச் செய்கிறார்கள். அது சிந்திப்பதும், சிந்தித்ததை அரூபமாக எழுதுவதும். அதாவது, ஸ்தூலமாகக் கைகளால் எழுதாத போது, அரூபமாக மனதால் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. நாம் எல்லோருமே இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனம். ஒரு எழுத்தாளனுக்கு மூளைச்சாவு வரும் வரை இந்த இயக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

ஆடிப்பழகிய கால்கள் ஆடாமல் இருக்க முடியாது. அது போல் எழுதப் பழகிய கைகளால் எழுதாமல் இருக்க முடியாது. ஒருவன் ஸ்தூலமாகக் கைகளால் எழுதினாலும், அல்லது அரூபமாக மனதுக்குள் எழுதினாலும் அவன் எழுதிக் கொண்டிருப்பவனே. எனவே, எழுதாமல் நிறுத்திக் கொண்டவர்களும் மனசுக்குள் எழுதிக் கொண்டிருப்பவர்களே. ஒருவேளை, எதிர்காலத்தில் நான் எழுதுவதை நிறுத்திக்கொண்டால், அப்போது ‘எதற்காக எழுதாமல் இருக்கிறேன்’ என்|று பதில் சொல்லுமாறு என்னிடம் கேள்வி கேட்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

oOo

(எம்.ஜி. சுரேஷின் நாவல்கள், நூதனமான புனைவுகளின் வழியே மனித இருப்பு குறித்த ஆழமான விசாரணையைக் கோரி நிற்கின்றன. சோதனை முயற்சி நாவல்கள என்றாலே வாசிக்கச் சிக்கலானவை என்கிற பிம்பத்தை தன் இயல்பான கதைகூறு திறத்தால் சரித்தவர் எம்.ஜி. சுரேஷ். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று குறுநாவல்கள், ஆறு நாவல்கள், இரு திறனாய்வு நூல்கள், தவிர ஐந்து ‘பின் நவீன சிந்தனையாளர் அறிமுக‘ நூல்கள் என இவர் பங்களிப்பு ஒவ்வொன்றும் தமிழ்ச் சூழலில் முக்கிய வரவுகள் எனலாம். இவரது நாவல்கள் புனைவுக்குள் வரலாற்றையும், வரலாற்றுக்குள் புனைவையும், புதிய தொன்மங்களையும், தொன்மத்துக்குள் சமகால அரசியலையும், புனைந்து வண்ணப்பொலிவுடன் மிளிர்பவை. பின் நவீனம் என்கிற எதிர்கோட்பாடு பற்றிய புரிதல்களை தமிழில் நிகழ்த்தியவர்களில் முக்கியமானவர் எம்.ஜி. சுரேஷ்.)

 

எதற்காக எழுதுகிறேன் – அறிமுகம்

நரோபா

yetharkkaha-228x228

 

அண்மையில், சந்தியா வெளியீடாக வந்துள்ள “எதற்காக எழுதுகிறேன்” என்ற சிறு நூலை வாசிக்க நேர்ந்தது. தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சி,சு,செல்லப்பா, க,நா.சு, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, லாசரா, ஆர்.ஷண்முகசுந்தரம் உட்பட அக்காலகட்டத்து எழுத்தாளர்கள் பலரும் இந்த கேள்வியை எதிர்கொண்டு எழுதி (பேசி) இருக்கிறார்கள். அன்றைய காலத்தில் பிரபலமாக இருந்த தொடர்கதை எழுத்தாளர் ஆர்.வியின் கட்டுரை கூட இடம் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதம், ஒவ்வொரு தொனி.

எனக்கே எனக்காக எழுதுவதைப்பற்றி என்ன சொல்ல முடியும்? விஸ்தாரமாக சொல்ல என்ன இருக்கிறது? எனக்கே எனக்காக எழுதவேண்டும் போலிருக்கிறது எழுதுகிறேன். அது என்னமோ பெரிய ஆனந்தமாக இருக்கிறது. காதல் செய்கிற இன்பம் அதிலிருக்கிறது. காதல் செய்கிற இன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஒன்றிப்போதல், வேதனை- எல்லாம் அதில் இருக்கின்றன. இன்னும் உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிறர் மனைவியை காதலிக்கிற இன்பம், ஏக்கம், நிறைவு – எல்லாம் அதில் இருக்கின்றன.,“ என்று எழுத்து அளிக்கும் கிளர்ச்சியை, அதனால் தனக்கு கிடைக்கும் இன்பத்தை, அந்த நிலையை மீண்டும் மீண்டும் அடைந்து நிலைத்திருக்கும் வேட்கையை எழுதுகிறார் தி. ஜானகிராமன்..

ஜெயகாந்தன் அவருக்கே உரிய முறையில் தனது தரப்பை வலுவாக வைக்கிறார். எழுத்தாளன் தனக்குள் சுருண்டுகொள்ளும் குகைவாசி அல்ல என்று அவனை இழுத்து கொண்டுவந்து நிறுத்துகிறார்-

எழுத்தாளன் சோம்பேறியோ, பொறுப்புக்களற்றவனோ அல்ல. அவன் உலகத்து இன்பங்களை, அல்லது குறைந்தபட்ச வசதிகளை அனுபவித்துக்கொண்டு தனக்குதானே, தன் மன அரிப்புக்காக வாழும் மனமைதுனக்காரன் அல்ல.

அரசியல்வாதியும், விஞ்ஞானியும், கலைஞனும் இந்த உலகத்தை நிர்ணயிக்கிறார்கள். இதன் தன்மையை மாற்றியமைத்து வளர்க்கிறார்கள்.

அவர்களது இந்த போராட்டத்தில் நான் எனது கடமையைச் செய்கிறேன். இதை மறுத்தால் நான் வாழும் காலத்திற்கும், எனது உடன் பிறந்தோர்க்கும் நான் துரோகம் செய்தவனானேன்.

ஆர்விக்கு வேறு கவலைகள் இருக்கின்றன. “எழுத்தைக்கொண்டு என்னவும் செய்யலாம். “இன்னும் நேரில் திட்ட முடியாத ஆட்களை, எஜமானர்களை, எதிரிகளை பெயரை மாற்றிபோட்டு இஷ்டப்படி தீர்த்து கட்டுகிறபோது ஏற்படுகிற இன்பத்துக்குப் பெயர் எதாவது இருந்தாள் அது என்ன? அதிலும் ஆத்மதிருப்தி இருக்கிறது என்று சொல்ல முடியாதோ?

அழகிரிசாமி, க.நா.சு, பிச்சமூர்த்தி ஆகிய மூவரின் கருத்துக்களும் ஆன்மீக தளத்தில் விரிகின்றன.

ஆகவே, எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான் மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன் ..எழுத்துப் பணியின் உச்ச நிலையில், நான் மற்றச் சகல உயிர் வர்க்கங்களுனுடனும் ஒன்று கலந்து ஐக்கியமாகிவிடுவதால் நான் எனக்கு செய்யும் மனித சேவை, மண்ணுயிர் சேவையாகவும் இருக்கிறது. நான் உயர்ந்தால், உலகமும் உயர முடிகிறது. இப்படிப்பட்ட காரியத்தை கலைகளினாலேயே சாதிக்க முடியும். நான் பயின்ற கலை எழுத்து, அதனால் எழுதுகிறேன்,” அழகிரிசாமி எழுத்தின் வழியாக தான் அடையும் இரண்டற்ற நிலையை பேசுகிறார்

ஈடுபாடில்லாமல் கண்டு, கண்டதைத் திரும்பச் சொல்லி, பிறரையும் அதேபோல காண செய்வதுதான் கலையின் லட்சியம். காண்பதிலும், கண்டதை திரும்ப சொல்வதிலும் ஆனந்தம் காண்பதே இலக்கிய ஆசிரியர்களின் லட்சியம். இந்த ஆனந்தத்துக்காகத்தான் நான் எழுதுகிறேன்,” என்று க.நா.சுவும் ஏறத்தாழ இதே போன்ற ஆன்மீக தளத்தில் நின்று தான் தன் எழுத்தை பற்றி மதிப்பிடுகிறார்.

இப்போது எதற்காக எழுதுகிறேன்? சுத்தமாக பணத்திற்காக எழுதுகிறேன் என்று சொல்லிக்கொள்வதில் நான் வெட்கம் கொள்ளவில்லை!..ஆம் வீடுகட்டும் என்ஜினீயர் மாதிரி பணம் கொடுத்தால் – நாவலோ, சரித்திரமோ – தயார் செய்து கொடுக்க வேண்டியதுதானே? …வீட்டிலுள்ள உயிர்கள் – நம்மை நம்பி இருக்கின்ற ஜீவன்கள் சோர்ந்து கிடக்கையில், ‘என் கொள்கை, என் லட்சியம்’ என்று அலட்டிகொள்வதில் என்ன பிரயோஜனம்?” என்று ஆர்.ஷண்முகசுந்தரம் எழுதும் போது மனம் கனக்கிறது.

ஆனால் பிச்சமூர்த்தி அதை உறுதியாக மறுக்கிறார். “உண்மையில் கலைஞனும் விதையைபோல. பணமும் புகழும் பிரச்சாரமும் கலைக்கு நேரடியாக காரணங்கள் அல்ல. புஷ்பத்தை சந்தையில் விற்கலாம், ஆனால் வியாபாரம் நடத்துவதற்காக மல்லிகை மலர்வதாக நினைத்துவிட முடியாது… சிருஷ்டி இயற்கையின் லீலை. ஆன்மீக விளையாட்டு.

இதில் எது சரி? எது தவறு? எனக்கு எல்லாமே சரி என்று தான் தோன்றியது. .

அண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கவிஞர் இசை ‘ஏன் எழுதுகிறேன்’ என்றொரு கட்டுரையை அந்திமழை இதழில் எழுதி இருக்கிறார். ஆர்வெல், ஹெமிங்க்வே, புக்கோவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்கள் எழுத்தை பற்றியும் ஏன் எழுதுகிறேன் என்பதை பற்றியும் விளம்பி இருக்கிறார்கள்.

இந்த கேள்வி எனக்கு முக்கியமானதாக பட்டது. காலந்தோறும் எழுப்பப்பட வேண்டிய கேள்வியாகவும் பட்டது. எழுதுபவரே வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு பதில்களை கண்டடையும் சாத்தியம் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றைய இணைய யுகத்தில் கவனம் சிதையாமல் எழுதுவது ஒரு சவாலாக இருக்கிறது. அன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிடும் போது, பணம் இன்று எழுத அத்தனை முக்கிய காரணி இல்லை என்றே தோன்றுகிறது. இணையத்தின் எழுச்சி வேறுவகையில் அதிகம் எழுதி குவிக்கவும் சாத்தியம் உள்ள காலகட்டமும் இதுவே.

எழுதும் அந்த நேரத்தில் வேறு எதை எதையோ செய்திருக்கலாம்.  உண்மையில் ஒருவன் ஏன் எழுத வேண்டும்? நம்முள் எழுத்தாக வெளிப்படத் துடித்து நம்மை உந்தித் தள்ளிக் கொண்டிருக்கும் அது என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை இருக்கலாம். எல்லா சமயங்களிலும், எல்லோருக்கும்  எழுத்து ஒரு கொண்டாட்டமாக இருப்பதில்லை. பெரும் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், எழுத துவங்கியவர்கள் என எல்லோரையும் நோக்கி இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியது. அந்தரங்கமாக ஒரு சின்ன கடைதலை இக்கேள்வி நிகழ்த்தி தனக்கான விடையை அவர்கள் கண்டுகொண்டு நமக்களிக்கும்போது அது நமது விடையாகவும் இருக்க கூடும். திஜாவின், பிச்சமூர்த்தியின், அழகிரிசாமியின் விடை என்னுடையதும்தான். புனைவாளர்கள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என பல தரப்பட்டவர்களை நோக்கி இக்கேள்வியை கேட்க விரும்பினேன். தமிழில் வெகு அரிதாக வாசிக்கப்படும் அறிவியல் கட்டுரையை இத்தனை மெனக்கெட்டு ஏன் எழுத வேண்டும்?

பதாகை சார்பாக நாங்கள் அறிந்த பலரிடமும் இக்கேள்வியை வைத்தோம். பெரும்பாலும் எவரும் மறுக்கவில்லை. மேலும் பலரையும் கேட்பதாக இருக்கிறோம். இதை வாசிக்கும் வாசகர்கள் எழுத்தாளர்கள் அவசியம் எழுத வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம். இந்த இதழ் துவங்கி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து, எழுத்தாளரின் சிறிய அறிமுகத்துடன் இனைந்து,  பல்வேறு எழுத்தாளர்களின் பார்வை வெளிவரும் என நம்புகிறேன்.

Picture courtesy: சந்தியா பதிப்பகம்

லிடியா டேவிஸ் குறுங்கதைகள் – ஒரு விரிபார்வை

 அஜய் ஆர்

cover1

We are sitting here together, my digestion and I. I am reading a book and it is working away at the lunch I ate a little while ago.

Companion‘ என்ற தலைப்பிலான லிடியா டேவிஸின் (Lydia Davis) ‘குறுங்கதை’ இது. கதையா, நாட்குறிப்பா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க, இதில் நாம் என்ன வாசிக்க முடிகிறது?. கதைசொல்லியும் அவருடைய செரிமானமும் ஒருவருக்கொருவர் துணை என்று Companion என்ற தலைப்பை வைத்து புரிந்து கொள்வதோடு, புத்தகமும், கதைசொல்லியும் ஒரு இணை, வாசிப்பும் செரிமானமும் மற்றொரு இணை என்றும் வாசிக்கலாம். வெளிப்படையாகச் சுட்டப்படாவிட்டாலும், ‘working away at the lunch’ என்பதை, உண்டதை வெளிக் கொணரும் குமட்டல் நிறைந்த எழுத்தை கதைசொல்லி வாசிக்கிறார் என்ற பிழைவாசிப்பையும் நாம் நிகழ்த்தக்கூடும். செவிக்குணவில்லாதபோது மட்டுமே வயிற்றுக்கு ஈவதை டேவிஸ் கொஞ்சம் மாற்றுகிறார் என்றும் இது குறித்து பேசிப் பார்க்கலாம் இல்லையா? .

Away from Home (தலைப்பு)

It has been so long since she used a metaphor!

இந்த நொடிக்கதையின் ஒரே வரியான ‘உருவகத்தை அவள் உபயோகித்து பல காலமாகி விட்டது’ என்பதை தலைப்போடு பொருத்தி வாசிப்போமே. எழுத்தாளனுக்கு உருவகங்கள் மிக நெருக்கமானவை என்பதால், அதை அவள் உபயோகிக்காமல் இருந்துள்ளது, தன் தாய் (தன் சொந்த) வீட்டிலிருந்து/ நாட்டிலிருந்து மிகவும் விலகிப் போய்விட்ட உணர்வை அவளுக்குத் தந்திருக்கக்கூடும் என்ற வாசிப்பை நிகழ்த்தலாம். தலைப்பில் உள்ள ‘Home’ ஐ உருவகமாக வைத்துப் பார்த்தால், Away from Home போன்ற உருவகம் கொண்ட தொடரைப் பல காலம் கழித்து இப்போதுதான் எழுதி இருக்கிறார் என்றும் தலைகீழாக வாசிக்கக்கூடுமா?

Spring Spleen (தலைப்பு)

I am happy the leaves are growing large so quickly.
Soon they will hide the neighbor and her screaming child.

அண்டை வீட்டார் தன் கண்களில் படமாட்டார்கள் என வசந்த – இனிமையின் – காலத்தின், நாம் எண்ணிப் பார்த்திராத நன்மையை டேவிஸ் முன்வைக்கிறார். அதில் ‘screaming’ என்ற பெயர் உரிச்சொல்லின் (adjective) தேவை என்ன? அண்டை வீட்டுப் பெண்ணும் அவள் குழந்தையும் கண்ணில் பட மாட்டார்கள் என்று சொல்லிவிட்டு போயிருக்கலாமே? இலைகள் உருவத்தை மறைத்தாலும், சத்தத்தை மறைக்கக்கூடுமா, அந்தளவிற்கு அடர்த்தியாக செடிகள், பல குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் வளர்ந்திருக்குமா என்று கேட்டு இந்த குறுங்கதையை புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். குழந்தையின் அலறல் எப்படியும் கேட்கப் போவதால், தான் இப்போது உணரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, அரைகுறையானது என்பதை கதைசொல்லி புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை சுட்ட ‘screaming’ஐ பயன்படுத்தி இருக்கிறாரா?

Examples of Remember (தலைப்பு)

Remember that thou art but dust.
I shall try to bear it in mind.

(Italics as in print edition)

முதல் வரியில் உள்ள அறிவுரைக்கான, (அரைமனதான?) ஒப்புதலாக இரண்டாவது வரி உள்ளது. இது ஒரு வாசிப்பு. இரண்டு வரிகளையும் தலைப்போடு பொருத்திப் பார்த்தால், அவை தனித்தனியே கூட அர்த்தம் கொள்கின்றன, அதாவது தலைப்பில் உள்ள ‘Examples’ இந்த இரண்டு வரிகள். சில வார்த்தைகள் ‘Italics’ல் குறிப்பிடப்பட்டுள்ளது அவசியமான ஒன்றா அல்லது சொல்ல வருவதை வாசகனுக்கு திணிக்கும் முயற்சியா என்றும் வாசகன் கேள்வி எழுப்பக்கூடும். எப்படி இருப்பினும் நம் வாசிப்பை ‘Italics’ எப்படி பாதிக்கின்றன போன்ற கேள்விகளையும் இங்கு எழுப்பலாம்.

Insomnia (தலைப்பு)

My body aches so-
It must be this heavy bed pressing up against me

தூக்கம் வராத ஒருவர் அதற்கான காரணமாக, படுக்கையைச் சுட்டுகிறார் – அவருக்கு வேறேதும் உடல்/ மனரீதியான காரணங்களும் இருக்கலாம், ஆனால் வசதியாக படுக்கை மீது பழி போடுகிறார் – என்பது இந்தக் கதையின் முதல் வாசிப்பாக இருக்கக்கூடும். ‘against me’ என்று சொல்லப்படும்போது, படுக்கை எப்படி ஒருவர் மீது அழுத்த முடியும், கரடுமுரடான படுக்கை என்றாலும், படுப்பவர்தானே அதன் மேல் அழுந்தி இருக்கிறார் என்று ஒரு கேள்வியை எழுப்பலாம். அப்போது உடல் வலி என்று வருந்துவது, அவ்வலியால் தூங்க இயலாமல் துன்புறுவது படுக்கை நிலை கொண்டிருக்கும் தரை போலிருக்குமோ? அப்போது, மண்ணின் சுமையே தன்னை அழுத்துவதாக வாசிக்கலாம்.

The Busy Road (தலைப்பு)

I am so used to it by now
that when the traffic falls silent,
I think a storm is coming.

வரிகள் மடக்கி எழுதப்பட்டு இருப்பதால் மட்டுமல்ல, இது உருவாக்கும் துல்லியமான பிம்பமும், அதில் பொதிந்துள்ள உணர்வும் கவித்துவ கணத்தை நினைவுபடுத்தக்கூடும். ‘so used to it’ என்று நம்பிக்கையோடு ஆரம்பிக்கும் கதைசொல்லி ஏன் ‘think’ என்று தயக்கத்துடன் /சந்தேகத்துடன் முடிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் போக்குவரத்து அமைதியாகும்போது, புயல் வரப்போகிறது என்று நினைத்து அது பொய்த்து விடுகிறது என்பதாக இந்த சந்தேகத்தைப் புரிந்து கொள்ளலாமா? அல்லது இரைச்சலுக்குப் பழகிய செவிகளை மௌனம் அச்சுறுத்துகிறது என்றோ, மக்கள் திரளுக்கு நடுவே வாழ்ந்து பழகியவர்கள் தனிமையை அஞ்சுகிறார்கள் என்று புரிந்து கொள்ளலாமா?

இன்னொரு கவிதையையொத்த குறுங்கதை.

Head, Heart (தலைப்பு)

Heart weeps.
Head tries to help heart.
Head tells heart how it is, again:
You will lose the ones you love. The will all go. But
even the earth will go, someday.
Heart feels better, then.
But the words of head do not remain long in the ears of
heart.
Heart is so new to this.
I want them back, says heart.
Head is all heart has.
Help, head. Help heart.

எல்லாருக்கும் தெரிந்த கதைதான். மூளை சொல்வதை மனம் கேட்பதில்லை, அப்படியே கேட்டாலும் அது நீடிப்பதில்லை. மனக் குரங்கு மீண்டும் வெளியே உலவ ஆரம்பித்து விடுகிறது. ‘Heart is so new to this’ என்பதின் அர்த்தம் என்னவாக இருக்கும். மனம் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பதால், புதிய புதிய வருத்தங்கள் அதற்குள் தோன்றுகின்றன அல்லது பழைய வருத்தங்கள் மீண்டெழுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் மனம் துயர் கொள்ள, அதை மீண்டும் மூளை தணிக்க என இது தொடர்கதையாக நீள்கிறது. எனில் இங்கு யார் ‘Sisyphus’, தொடர்ந்து துயருறும் மனமா அல்லது துயரைத் துடைத்து சில காலத்திலேயே மீண்டும் அதே துயர் துடைத்தலில் ஈடுபடும் மூளையா?

டேவிஸ் அதிகமும் குறுங்கதைகள்/ நிமிடக்கதைகள் மட்டுமே எழுதி இருக்கிறார், அதிலும் சொல்/ மொழி விளையாட்டை மட்டுமே நிகழ்த்தியுள்ளார் என்று அவர் எழுத்தைக் குறித்த பிழைத்தோற்றத்தை இந்தக் கட்டுரை தரக் கூடும் .Lonely என்ற “No one is calling me. I can’t check the answering machine because I have been here all this time. If I go out, someone may call while I’m out. Then I can check the answering machine when I come back in,” குறுங்கதையில் அவர் தனிமையை மட்டுமல்ல, அதை தவிர்க்க எதைப் பற்றிக்கொள்வது என்ற மனதின் வேட்கை இட்டுச் செல்லும் உளச் சிக்கலையும் சித்தரிக்கிறார். ‘A Strange Impulse’ என்ற ஒரே ஒரு பத்தி அளவு கதையில் வெய்யில் காயும் பரபரப்பான கடை வீதியில், திடீரென கடை முதலாளிகள் காதைப் பொத்திக் கொள்கிறார்கள், வீதியில் உள்ள மற்றவர்கள் அடித்துப் பிடித்து ஓட ஆரம்பிக்கிறார்கள். விரைவில் முடிவுக்கு வரும் இந்த பித்து நிலை அன்றாட வாழ்வின் எரிச்சலுக்கான வடிகாலாக சுட்டப்படுகிறது.

இல்வாழ்கை, நட்பு, உள்முகப் பரிசோதனை , தனிமை என வாழ்வின் பல பரிணாமங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக்கொணரும் டேவிஸ், சிறுகதையின் வழமையான அளவிலும் சரி, குறுநாவலின் அளவிலும் சரி கதைகள் எழுதியுள்ளார். புனைவின் தெளிவான அம்சங்கள் கொண்டவை , புனைவும் நிஜமும் இணைபவை என சொல்லத்தக்கவை, கவிதை வடிவுக்கு நெருக்கமானவை, ‘What you learn about the Baby’ போன்ற வகைப்படுத்த முடியாதவை என பல்வேறு நடை, தொனி கொண்ட கதைகள் அவர் புனைவுலகில் உள்ளன. குறுங்கதைகள் அவர் புனைவுலகின் குறிப்பிடத்தக்க, ஆனால் அதை பிரதிநிதப்படுத்தும், ஒரே அம்சம் கிடையாது. கவிதை/ புனைவு/ அ-புனைவு என அனைத்தின் வரையறைகளையும் ஒன்றுடன் ஒன்று முயங்கச் செய்து கலைத்துப் போடும் டேவிஸின் எழுத்தை வகைப்படுத்த முயல்வது என்பது வியர்த்தமாகவே முடியும்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் டேவிஸின் புனைவுலகைப் பற்றிய ஆழமான குறுவெட்டு பார்வையை தருவதோ , அவரது எழுத்தின் கச்சாப் பொருட்கள், கேன்வாஸ், நுட்பங்கள் பற்றியோ பேசுவது அல்ல, தன் குறுங்கதைகள் மூலம் வாசிப்பை அவர் எவ்வாறு வாசகனை அவன் அறிந்திராத பாதைகளில் பயணிக்கச் செய்கிறார் என்பதை மட்டும் பார்ப்பதே. தங்களின் அளவைச் சார்ந்து குறுங்கதைகள் இயல்பாகவே அதற்கு தோதாக உள்ளன. அவை ஒரு சிறிய, பூட்டிய கதவை வாசகன் முன் வைக்கின்றன. அதை திறந்து உள்நுழைபவன் வானமே கூரையாய், வெளியே நாற்புற சுவராய் இருக்கும் முடிவில்லா -உலா வர வழிகளற்ற பாதைகள் கொண்ட – வீட்டினை காண்கிறான். அதனுள் அவன் தேர்ந்தெடுத்து செல்லக் கூடிய பாதைகளும், திசை தப்பிய அலைதலும் – அதற்கிணையான இந்தக் கட்டுரையிலேயே இருக்கும் பிழைவாசிப்பின் சாத்தியங்களும் – மட்டுமே இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

மறைந்து…

மோனிகா மாறன்

நாமாக அலைந்து
நானாகிப் போன அந்த
குளிர் இரவில்
நம்மிடையே அமர்ந்திருந்தது

நடுங்கிய என் விரல்களில்
அடங்காமல்
வழிந்தோடிய
இதழ்களில்,

கங்குலில் மறைந்திருக்கும்
தான்றி மரத்தின்
காய்ந்த விதைகளில்

உதிரச்சுவையறிந்த
வேங்கையின
நாவில்

அசையும் தூளியிலிருந்து
நீளூம் காலின்
வெள்ளிக் கொலுசொலியில்

பொங்கும் யவனத்தின்
பூரிப்பில்

ஸ்பரிசங்களும்
களைதல்களும் ஒன்றான
மௌனத்தில்

நீர்த்தாரைகள் ததும்பும்
ஏரிக்கரை சதுப்பின் வாசத்தில்

கருவறையில்
அமுதுணவில்
நீள்மூச்சில்
நெடுங்கனவாய்
நிறைந்திருந் தது

எட்டிப் பார்த்த முதல் நரையில்
கிறுகிறுத்து விழுந்த நான் அறிகிறேன்
அது நமக்குள் உறைந்திருந்த மரணத்தின்
முதல் சாய லென்று

ஏன் எழுதுகிறேன்? – ரவி நடராஜன்

ரவி நடராஜன்

தமிழில் வழக்கமான விஷயங்களை எழுத எனக்குப் பிடிக்காது.

அலுவலகத்திற்குப் புறநகர் ரயிலில் பயணம் செய்வது எனது அன்றாட வழக்கம். சமீபத்தில் எழுதிய தொழில்நுட்பக் கட்டுரை ஒன்றை அச்சடித்துச் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். அதே ரயிலில் பயணம் செய்யும் தமிழ் நண்பர் ஒருவர், தமிழில் ஏதோ படித்து/திருத்திக் கொண்டிருந்த என்னிடம்,

“என்ன தமிழ்க் கவிதையா?” என்றார்.

“நாளைய தொழில்நுட்பம் பற்றி தமிழில் எழுதி வருகிறேன். சரிபார்க்க ரயில் பயணம் சரியாக இருக்கிறது”, என்று சொன்னவுடன், அவசரமாக வேறு தலைப்பிற்குத் தாவினார். இத்தனைக்கும், தொழில்நுட்பத் துறைதான் அவருடைய தொழிலும்! சத்தியமாக, நான் தமிழில் வழக்கத்திற்கு மாறான விஷயங்களைச்  செய்யும் பைத்தியம் என்று அவர் நினைத்திருப்பார். அவருடைய பார்வையில், கவிதை எழுதுவதற்கான ஒரு மொழி தமிழ். மற்றபடி வீட்டில் குடும்பத்தாருடன் பேசவும் பழகிய ஒரு மொழி. அதைத் தாண்டி ரஜினி, கமல், இளையராஜா, ரகுமான், கருணாநிதி, ஜெயலலிதா விவாதிக்க தோதான மொழி. அவ்வளவுதான்.

என்னுடைய இன்னொரு நண்பர், என்னுடைய எழுத்துக்களைப் படிக்கும் எழுத்தாளர். வீட்டிற்கு வந்த சில நண்பர்களிடம்,

“இவர் தமிழில் நிறைய எழுதி வருகிறார்”  என்றார்.

உடனே மற்ற நண்பர்கள், “குமுதத்திலா, விகடனிலா எழுதுகிறீர்கள்? நீங்கள் சிறுகதையா இல்லை தொடர்கதை எழுத்தாளரா?” என்று அடுக்கினார்கள். விஞ்ஞானம் அல்லது தொழில்நுட்பம் என்று சொன்னால் போதும், உடனே சுஜாதாவிற்குத் தாவிவிடுவார்கள். இந்தத்  தமிழ் எழுத்தாளனை முழுவதும் மறந்து நைலான் கயிறு/கரையெல்லாம் ஷெண்பகப்பூ கதைக்கு உரையாடல் தாவிவிடும். தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் எல்லாம் ஒத்து வராது என்று சொல்வதோடு நிற்காமல், “மடிக்கணினி என்றால் யாருக்குப் புரியும்? தமிழால் ஆங்கிலத்துக்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாது. நாமெல்லாம் ஆங்கிலத்தில்தானே படித்தோம். அதனால்தானே இன்று வேலையில் இருக்கிறோம்” என்று 300 ஆண்டு பழைய பல்லவியைப் பாடுவார்கள். அதை மீறி சில விவாதங்களை முன் வைத்த பொழுது, என்னை சற்று அடாவடி அல்லது பைத்தியம் என்று முடிவு கட்டியிருப்பார்கள் என்பது என் எண்ணம்.

சரி, தமிழில் எழுதுவதால் நாம் புகழ் பெற முடியுமா? ?

என்ன அபத்தமான கேள்வி! முதலில் தமிழர்கள் அதிகம் படிப்பதே இல்லை. படித்தாலும், அரசியல் மற்றும் சினிமாதான் கல்லூரிப் படிப்பைத் தாண்டி, தமிழில் படிக்கிறார்கள். சிலர், கவிதை, சிறுகதை, மற்றும் தொடர்கதை படிக்கிறார்கள். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் என்பது வேலை கிடைக்க ஒரு கருவி. வேலை கிடைத்தவுடன் தொழிலுக்கு தேவையானதை ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு தமிழைப் பின்னுக்குத் தள்ளுவதுதான் முதல் வேலை J

இப்படியிருக்க ஏன் தமிழில் எழுதுகிறேன்?

எனக்கு விஞ்ஞான தர்க்கரீதியான சிந்தனைதான் பிடித்திருக்கிறது என்பதால், கவிதை சரிப்பட்டு வராது. “மெர்க்குரிப் பூக்களே, செவ்வாய்க் குளங்களே” என்று எழுதுவது எனக்கு மிகவும் பித்தலாட்டமாகத் தெரிகிறது (விஞ்ஞானப்படி இரண்டும் சாத்தியமில்லை. மெர்க்குரியில் வெப்பநிலை 188 டிகிரி, செவ்வாயில் கடும் குளிர், -55 டிகிரி). கவிதை எழுத பல்லாயிரம் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கட்டுரை ஒன்றை 2009 –ல் எழுதப் போய், 30 வருட இடைவேளைக்குப் பிறகு, சில பக்கங்கள் தமிழில் எழுத முடிகிறதே என்ற மகிழ்ச்சிதான் முதல் படி.

சரி, சில சின்ன முயற்சிகள் செய்யலாமே என்று வெவ்வேறு தொழில்நுட்ப விஷயங்களைப் பற்றி கட்டுரைகள் எழுதி, அவை வெளி வந்தவுடன், மேலும் பத்திரிகை ஆசிரியர்கள் ஊக்குவிக்க, ஏன் விஞ்ஞானக் கட்டுரைகளைத் தமிழில் எழுதக்கூடாது என்று தோன்றியது.

தமிழ் மிகவும் பழைய, ஆனால் ஏழை மொழி. தொழில்நுட்பக் கல்வியிலும் அறிவியல் செல்வாக்கிலும் அதிகம் முன்னேறாததால், இன்னும் பழமையாகவே உள்ளது. இத்தனை காலம் தாக்கு பிடித்ததே பெரிய விஷயம் என்றாலும், இனியும் இணைய உலகில் தாக்கு பிடிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ரஜினியும், ஜெயலலிதாவையும் வைத்து ஜல்லியடித்து இணையத்தில் தமிழைக் கரையேற்ற முடியாது. தமிழின் ஏழ்மை, அதில் அதிக வகைவகையான விஷயங்கள் இல்லாததே. ஏன் தமிழர்கள் தமிழ் என்றவுடன் கருணாநிதியையோ அல்லது வைரமுத்துவையோ முன் வைக்கிறார்கள் ? இந்த இருவரின் தமிழும் பழைய விஷயம். சுஜாதாவின் முயற்சிக்கு மேல் தமிழ் விஞ்ஞான/ தொழில்நுட்ப உலகில் வளரவேயில்லை.

தொழில்நுட்பத்திற்கு செண்டிமெண்ட் கிடையாது, பிரிடிஷ் ஆங்கிலத்தைப் பின்னுக்குத் தள்ளிய அமெரிக்க ஆங்கிலம் இன்றைய இணையத்தின் சிந்தனை மொழி. பிரிடிஷ் ஆங்கிலத்திற்கே இந்த நிலை என்றால், தமிழ் சில காலங்களில் மறக்கப்பட்ட மொழியாக வாய்ப்புள்ளது.

மூன்று விஷயங்கள் தமிழில் தொழில்நுட்ப/ விஞ்ஞானக் கட்டுரைகள் எழுத என்னை தூண்டிய வண்ணம் உள்ளது.

  1. தமிழில் அதிக அளவில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பச் சொற்கள் இல்லாததால், புதிய சொற்களை உருவாக்கும் வாய்ப்புகள் இம்மொழியில் ஏராளம். புதிய சொற்களை உருவாக்கும் இன்பம் அலாதியானது. எத்தனை பேருக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு? சத்தியமாக கன்னித்தமிழ் தான் – ஒப்பீட்டில் மற்ற மொழிகள் பாட்டிகளாகத் தோன்றுகிறது J
  2. விக்கிப்பீடியா தமிழில் உள்ளது. வழக்கம் போல, அதிகம் பயனற்ற கட்டிரைகள், அரசியல், தனிநபர், மற்றும் சினிமாவாகத் தமிழ் சிரிக்கிறது. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகள் நிறைய தமிழில் வர வேண்டும். எளிதில் இணைய நுகர்வோர் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ள வழி வகுக்க வேண்டும். 15 லட்சம் பேர் உள்ள டச்சு மொழியில் 90 லட்சம் பேர் பேசும் தமிழ் மொழியைவிட பல மடங்கு நல்ல கட்டுரைகள் இருப்பது என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது
  3. ஆராய்ச்சி அடிப்படையில் தமிழில் அதிகம் எழுதப்படுவதில்லை. சொல்லப் போனால், ஆராய்ச்சி என்பது நம்முடைய வழக்கத்தில் இல்லாத ஒன்று. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளுக்கு ஏராளமான ஆராய்ச்சி தேவை. மேற்கோள்களும் அவசியம். சிக்கலான் இத்துறையை எளிமைப் படுத்துவதோடு, இதில் மேலும் படித்து முன்னேறவும் வழி வகுக்க வேண்டும். இத்தகைய முறைகள் தமிழில் அதிகம் இல்லாதது ஒரு புறம் குறையாகப் பட்டாலும், இதுவே ஒரு உந்துதலாகவும் உள்ளது. இம்முறைகளை இன்னும் சில எழுத்தாளர்கள் பின்பற்றத் தொடங்கியுள்ளது இன்னொரு உந்துதல் என்று சொல்லலாம்

கட்டுரை எழுதுவது ஒரு புறம். இன்றைய இணைய தமிழ் உலகில் இரண்டு விஷயங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது.

  1. இணையம் என்றால், ஆழமான விஷயங்களை தமிழர்கள் அதிகம் படிப்பதில்லை. திறன்பேசிகளில் சும்மா மேய்கிறார்கள்
  2. படித்த கட்டுரையை தமிழர்கள் பாராட்டுவதும் இல்லை, விமர்சிப்பதும் இல்லை. உலகிலேயே மிக மெளனமான படிப்பாளிகள் தமிழ் மக்கள் என்றுதான் தோன்றுகிறது

இதை எல்லாம் மாற்றத்தான் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

 

oOo

தமிழில் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானக் கட்டுரைகள் மற்றும் தொடர்ந்து எழுதி வரும் ரவி நடராஜன், தொழில்முறையில் கணினி மென்பொருள் தொழிலில் பல்லாண்டுகளாக பணிபுரிபவர். கனடாவில் வசிக்கும் ரவி, ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் பல கட்டுரைகளை எழுதி வருபவர். இதைத் தவிர புத்தக விமர்சனம், இளையராஜா இசை ஆய்வு மற்றும் இந்தியப் பொருளாதாரம், கல்வி பற்றி அவ்வப்பொழுது எழுதுபவர்.

இவருடைய பெரும்பாலும் தொழில்நுட்ப/விஞ்ஞான கட்டுரைகளை இங்கே வாசிக்கலாம்:

http://solvanam.com/?author_name=ravinatarajan

இவருடைய புத்தகங்கள் இங்கே இலவசமாகப் படிக்கலாம்;

http://freetamilebooks.com/ebooks/vignana-mutti-mothal/

http://freetamilebooks.com/ebooks/growth-of-scientific-thoughts/

http://freetamilebooks.com/ebooks/glimpses-of-internet-technologies/

http://freetamilebooks.com/ebooks/internet-technologies-part-2/

http://freetamilebooks.com/ebooks/alternatenergy_initiative_savings/

http://freetamilebooks.com/ebooks/music-genious-raja/