Author: பதாகை

பிக்னிக்

  எஸ். சுரேஷ் –

தாய் வாத்தின் பின்னால் ஒழுங்கான வரிசையில்
புட்டத்தை அசைத்து அசைத்து நடந்துகொண்டிருந்த
குட்டி வாத்துக்கள், டீச்சர் பின்னால் கலைந்த வரிசையாய்ச்
சென்று கொண்டிருந்த மாணவர் கூட்டத்தைக் கடக்கும்பொழுது
குட்டி வாத்து ஒன்று, ஒரு மாணவனைப் பார்த்து கேட்டது-
“எல்லோரும் எங்கே போகிறீர்கள்?”
மாணவன் மகிழ்ச்சியில் மேலும் கீழும் குதித்து,
“நாங்க பிக்னிக் வந்திருக்கோம். ஏரிக்குப் போய்
வாத்து பார்க்க போறோம்”,
என்று உற்சாகத்துடன் கூவினான்.
பிறகு தன்னைக் கடந்து சென்றுகொண்டிருக்கும்
வாத்துக் கூட்டத்தை குழப்பத்துடன் நோக்கினான்.

மேவாரின் பட்டத்தரசன்: மீராவின் கணவன்: கண்ணனின் பகைவன்

அஜய் ஆர்

மேவார் ராஜ்ஜியத்தின் அடுத்த வாரிசு, மகாராஜ் குமார் என்று பட்டம் சூட்டி அழைக்கப்படும் இளவரசருக்கு, ஒரு பெரிய சிக்கல். அவர் மனைவி தான் இன்னொருவருக்குச் சொந்தமானவர் என்கிறார். மகாராஜ் குமாரால் யார் அந்த ஆசாமி என்று கண்டுபிடிக்க முடியவில்லை, அப்படி ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை. சரி, ஏதாவது தீய அமானுஷ்ய சக்தியின் வேலையாக இருக்கும், பேயோட்டலாம் என்று பார்க்கும்போது. “You can exorcise the devil. But how do you rid yourself of a God!” என்ற கேள்வி எழுகிறது. ஆம் இளவரசி தன் மனதில் வரிந்திருப்பது கண்ணனை.

ராஜஸ்தானிய இளவரசி கண்ணன் மீது கொண்ட பிரேமை என்று படிக்கும்போது, ‘மீரா பாய்’ நினைவுக்கு வருகிறார் அல்லவா. அவரைப் பற்றிய தொல்கதைகள் பரவியுள்ள அளவிற்கு அவர் கணவர் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அப்படியே தெரிந்ததும் தன் மனைவியின் பக்தியை புரிந்து கொள்ளாத கல் மனிதராக என அவ்வளவு சிறப்பாக இருக்காது. அவரின் கோணத்தை கிரண் நகர்கர் (Kiran Nagarkar), தன்னுடைய ‘Cuckold’ நாவலில் தர முயன்றுள்ளார். ஆனால் இந்த நாவல் மகாராஜ் குமார் குடும்ப வாழ்க்கை, தனிமனித உறவுகள் என்று மட்டும் பேசுவதாக இல்லாமல், விரிவான வரலாற்றுப் பார்வையையும் முன்வைக்கிறது. மேவார் ராஜ்ஜியத்தில் நடக்கும் அரசியல் சதிகள், மேவார் குஜராத்/ டெல்லி ராஜ்ஜியங்களுடன் நடத்தும் போர்கள், பாபரின் வருகை என பதினைந்தாம் நூற்றாண்டு வடமேற்கு இந்தியாவின் சித்திரத்தையும் அளிக்கிறது. (more…)

சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லும் கலை – ‘The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century- Steven Pinker’.

இது நூல் மதிப்பீடோ, நூல் அறிமுகமோ விமரிசனமோ அல்ல. மேற்கண்ட புத்தகத்தில் பல விஷயங்கள் பேசப்பட்டிருக்கின்றன என்றாலும் எழுத வந்த விஷயத்தைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு செய்வது எப்படி என்பது பற்றி சில குறிப்புகளைப் பதிவு செய்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

ஸ்டீவன் பிங்கர் எழுதிய, “The Sense of Style: The Thinking Person’s Guide to Writing in the 21st Century” என்ற புத்தகம் அண்மையில் வெளிவந்திருக்கிறது. இது பற்றி இணையமெங்கும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். Cognitive Scientist, Linguist என்றெல்லாம் அறியப்படுவதாலும் பொதுவாசகர்கள் படிக்கும் வகையில் அறிவியல் புத்தகங்களை எழுதுவதில் வெற்றி பெற்றவர் என்பதாலும் பிங்கர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. (more…)

முகம் பார்த்தல்

சுற்றும் முற்றும் பார்க்கிறேன் தெரிந்த முகம் எதுவுமில்லை
கூட்டம் அதிகரிக்கிறது
உள்ளே வரும் ஒவ்வொருவரையும் உற்றுப் பார்க்கிறேன்
தெரிந்த முகம் இல்லை
கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க தனிமை அதிகரிக்கிறது
அழையாத விருந்தாளி போல் நான்

ஆனால் அழைத்திருந்தார்கள்

சரவணன் பல ஆண்டுகளுக்கு முன் சென்று விட்டான்
மேடையில் இருக்கும் பேத்திக்கு அவன் முகம் இல்லை

வயதானவர்கள் முகங்களைப் பார்க்கிறேன்
நடுத்தர வயது முகங்களைப் பார்க்கிறேன்
இளைஞர்களைப் பார்க்கிறேன்
யார் முகத்திலாவது தந்தை முகமோ
தாத்தா முகமோ தெரியுமா என்று
ஆனால் தெரிந்த முகம் தோன்ற மறுக்கிறது

தம்பதிகளுக்கு பின்னால் பூ அலங்காரம்
பட்டுப் புடவையில் அழகான பெண்கள்
என்னைச் சுற்றி சிரிப்பும் விசாரிப்புகளும்
தனித்து நான்

அனுமன் வால் போல் நீண்டிருக்கும் க்யூவில் நின்று
மேடை ஏறுகிறேன்
நான் சரவணனின் மனைவியைப் பார்த்து வணக்கம் சொல்ல
அவர் முகத்தில் முதலில் குழப்பம்
பிறகு ஒரு சிரிப்பு, உண்மையான சந்தோஷம்

கீழே இறங்குகிறேன், தெரிந்த முகம் எதுவுமில்லை
ஆனால் இப்பொழுது அது பெரிய விஷயமாக தெரியவில்லை

நெல் ப்ராய்டன்பெர்கருடன் ஒரு நேர்முகம்

நீங்கள் வெளிநாடு செல்ல நேர்ந்தது எப்படி?

பட்டப்படிப்பு முடிந்ததும் ஓராண்டு பாங்காக்கில் இருந்தேன், அங்கு ஓர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினேன். அதன்பின் இந்தியாவில் இரண்டு மாதங்கள் இருந்தேன், அடுத்த ஆண்டு கோடையில் புதுதில்லி சென்று அங்குள்ள குடிசைப் பகுதியிலுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பள்ளியொன்றில் வகுப்புகள் எடுத்தேன்.

அமெரிக்கா குறித்த உங்கள் பார்வையை நீங்கள் வெளிநாட்டில் இருந்த காலம் எப்படி மாற்றிற்று?

அமெரிக்கனாக இருப்பது என்பதைப் பற்றி அர்த்தமுள்ள வகையில் நான் நினைத்துப் பார்த்ததே அப்போதுதான். நம் பூகோளத்திலோ அல்லது அரசியல் தனிமையிலோ ஏதோ ஒன்று அமெரிக்கனாக இருப்பது பற்றி சுவாரசியமாக எதுவும் நினைப்பதை இங்கிருக்கும்வரை தடுப்பதாக இருக்கிறது. தாய்லாந்தில் நாற்பது ஆங்கில ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று நினைக்கிறேன், அவர்களில் முப்பத்து ஒன்பது பேர் நடுத்தர வயது தாய் பெண்மணிகள். நான் ஏதோ காட்சிப்பொருளாக இருப்பது போல் உணர்ந்தேன், நான் செய்வது ஒவ்வொன்றும் அத்தனை அமெரிக்கர்களும் செய்வதாக இருக்க வேண்டும் என்பது போன்ற எதிர்பார்ப்பை உணர்ந்தேன். இதற்கு என்ன அர்த்தம் என்பது குறித்த பிரக்ஞை எனக்கு இருந்து கொண்டேயிருந்தது. (more…)