Author: பதாகை

நிகழ்தகவின் மானுடத்துவம்

காஸ்மிக் தூசி

இரவி அணைந்து
இரவு வரக்கண்டு
விடாய் கொண்டு
விழி அயர்ந்து
கடாவு எழ
அனுட்டானம்
எனப் பிரக்ஞை கொண்டு
கண் மலர எழுந்தனன்
யானே இன்று,

எழாவிடின்
உறட்டை
சவம் ஊனம்
ஊத்தைப்பிணம்
மவுத்தி விடக்கு கங்காளம்
கழுமலை நெட்டைகழியுடல்
கிலுமொலெனல்

நிவகம்
எவர்க்கும்
சூதகம்.

ஒழுக்கவாதி

ஆனந்த் குமார்

ஒழுக்கவாதி நாளிதழ்களை
அடுக்கி வைக்கிறார்
ஒன்றின் மீது ஒன்றாக
அவர் நாட்களை அடுக்கி வைக்கிறார்.
மூன்று மாதங்கள் சேர்ந்ததும்
கட்டித் தூக்கி மேலே போடுகிறார்.
பரணில் கொஞ்சம்
தூசு சேர
எடைக்குப் போட மேலே ஏறுகிறார்.
ஒவ்வொரு கட்டாய்
கீழே போட்டு
பெருமூச்சுடன் இறங்கியவர் தலையில்
ஆடி ஆடி வீழ்கிறது
போன வருடத்திற்கு இடையிலிருந்து
அவர் திறந்து பார்த்திராத
ஒரு ஞாயிற்றுக்கிழமையின்
வண்ணப்பக்கம்.

தட்டிப்போன தவம்

அர்ஜூன் ராச் 

ஒருநாள்

மனதில் கல்லெறிந்து கொள்ளாமலும்
மனதை கல்லாக்கிக் கொள்ளாமலும்
இருந்தேன்

நினைவுகளின் வலியை
சொரிந்து கொள்ளாமலும்
கனவின் விடியொளியில்
நிலா காயாமலுமிருந்தேன்

யாரையும் பகைத்தோ நேசித்தோ வைக்காமாலிருந்தேன்
சந்தித்தும் பேசாமலும்.

தொலைத்துக் கொள்ளலாம் அல்லது
ஞாயிலாகிக் கொள்ளலாம் என்றெண்ணி
வேண்டாமென
காணாமல் போனதாக இருந்துவிட்டேன்

ரோட்டைப் பார்த்து வண்டியோட்டுவது போலவும்
நாவிதரின் சவரப்பணிக்கு கட்டுப்படுவது போலவும்
ஒரு முகம் ஒப்புவித்திருந்தேன்

நிரம்பிய தண்ணீர் குடத்தோடு
நடை சென்றுவரும் வரை
இரண்டாவது குடம்
நிரவலாக விடுவது போல்
பசியைப் பார்த்துக் கொண்டேன்

அன்றிரவு நின்மதியாக
உறங்கி விடிந்ததும்
இமைப்பிரித்துப் பார்க்க
சூக்கும நிலையில்
கண்கள் கனவுத் தடங்களற்ற
குருடாக இருந்தன

எல்லோருமிருந்திருந்திருந்த
இடத்தினில் யாருமே
இல்லாமலிருந்ததுபோல் எனக்கு
இருள்மயமாக இருந்தது

“திடீரென அலன்று
பயமாக இருக்கிறதென்று சொன்னேன்
கெட்டகனவு கண்டிருப்பீர்
அமைதியாக இமை பொருத்திக் கொள்ளச் சொன்னாள்

இல்லை.
அது இனிதாகத்தானிருந்ததென்று
சொல்வதற்குள்
அலறியதைப் பற்றிக் குழம்பிக்கொண்டே
நா குழற படுத்துக்கொண்டேன்

இப்போது தூல நிலை துலங்கித்தர
கனவு வருவதுபோல்
கனவுகள் வரலாம்

ஆயினும் நான்
அலறாமலிருந்திருக்கலாம்

சிறியதை விழுங்கப் பெரியது

இனியவன் காளிதாஸ் 

 

சிறியதை விழுங்கப் பெரியது
அதனை விழுங்க
மற்றொன்று
இடையில் மிதக்கும்
நதியிலை

என்றபடி கடக்கும்
காலத்தின் கால் தடத்தைத்தான்
நீங்கள் வாழ்க்கை
என்று கூறித் திரிகிறீர்கள்.

காற்புள்ளிகள்

இனியவன் காளிதாஸ் 

 

காற்புள்ளிகள் மேல் வைக்கப்பட்ட
முற்றுப் புள்ளிகள்

இறந்தகாலத்தின்
உதரம் கிழித்து
உறைந்து கிடக்கும்
நினைவுத் துணுக்குகளை
நிழலாடச் செய்கிறது

கனவின் அடியாழங்களில்
கால்வைத்து இறுகிக்கிடக்கும்
சந்தோசத்தின்
பூட்டுகளைத் திறவுகிறது

பிசுபிசுத்துக் கிடக்கும்
பெருங்கதறல்களின்
சாம்பல் குழைத்து
உடலெங்கும் பூசிக் கொண்டு

பல்லிடுக்கில் சிக்கிய
உணவுத் துகளாய் ,
நழுவிப்போன
பால்யத்தை முத்தமிட்டு,
நிகழ்காலத்தின் முகவரிக்குள்
அழைத்துவரும்
நிழற்படங்கள் யாவும்

நினைவுகளின்
பிம்பங்கள் மட்டுமல்ல

ஓய்வின்றி
நகரும் காலத்தின்
காற்புள்ளிகளின்
மேல் வைக்கப்பட்ட
சிலவிநாடி முற்றுப்புள்ளிகள் .