Author: பதாகை

என் மக்கள்

உஷாதீபன் 

       வீட்டு வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக் கொண்டிருந்தது. இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார் மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான். ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும். அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.

எப்பொழுதுமே வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும் வாங்குவதில்லை. பதிலாக அவர் ஒன்று செய்கிறார். சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைக் கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள காலனியிலிருந்து  எடுத்து வரச் செய்கிறார். ஒரு குடத்திற்கு இவ்வளவு என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில் அவரின் அந்த சைக்கிளுக்கு டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார். அவருக்கு அது திருப்தியாக இருக்கிறது. மனசும் இருக்கிறது.

ஈஸ்வரன் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து ரூபாய் என்றால் மாதத்துக்கு முன்னூறா. என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.

அப்படியொன்றும் அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட வைத்துக் குடிக்க இறக்கியபோது  மேலாகப் படர்ந்திருந்த பவுடர் போன்ற படலமும், அசாத்தியக் க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக் கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும் வாங்கிக்கவா?

இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின் ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது. அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு வீடுகளில் விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி பதினோரு மணிக்குக் கூட அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.

குடத்திற்கு ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாயாகி பின்பு ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை. சில வருடங்களாகவே அந்த ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் வசதி. தொலை தூரத்திலிருந்து கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில் அடுக்கி வந்து பிடித்துச் செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும். .சலுப்பக்குடிச் சண்டை. ஆனாலும் அந்த பாஷை கேட்க இதம்.  நியாயம் தலை தூக்கி நிற்கும்.

நீங்க ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும். தொடர்ந்து பத்தையும் பிடிக்க முடியாதாக்கும். அப்புறம் நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா? பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப் பண்ணி. எம்புட்டு வேல கெடக்கு.  நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக. ஒங்க பக்கமெல்லாம் குழாயே இல்லாமப் போச்சா. ? இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?

அந்தச் சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும். நமக்கென்ன.  எப்படியும் நாளுக்கு நூறு தேறும். வண்டிக்காரன் நின்னால். அது குறையும். ரெண்டு டிரிப் அடிக்கிறானே? அங்குதான் ஈஸ்வரன் சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர் கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம் அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில் குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர் தூக்கி நிறுத்தி. அமர்க்களமாகிப் போனது.

அந்தச் சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு குடமாய் ரெண்டு நடை கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப் பண்ணினால் கூட வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு திரும்பும்போது மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு கொக்கியில் தொங்கவிட்டுக் கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான் இருந்தது. மேடு பள்ளத்தில் ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம் அதைத் தேடிக் கொண்டே வந்தார். என்னா கெரகம் இது. நமக்குன்னு அமையுதே. என்று ஒரே வேதனை அவருக்கு.

சாமீ. .என்னா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே. கேன் வாணாமா? என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும் அவரை அந்த வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான். அந்த மனுஷாளின் ஈடுபாடே தனி.

ஈஸ்வரனுக்குப் பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர் குடியிருக்கும் பகுதியில், காலையில் உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர் சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம். வாங்கய்யா. என்னா ரொம்ப நாளாக் காணலை. என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு கை வெண்டைக்காயை அள்ளிப் போடும் பெண்மணி. அய்யா. வாங்க. தோட்டத்துக் காயி. காலைல பறிச்சதாக்கும். வாங்கிட்டுப் போங்க. ..என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான் வாங்குகிறோம் என்றாலும் நாற்பது கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும் திருப்தி. மன நிறைவு.

வழக்கமாய்ப் பார்க்கும் போஸ்ட்மேன்..மனோகரன் சார் தண்ணி கொடுங்க என்று உரிமையோடு வாங்கிக் குடிக்கும் நெருக்கம். வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க வரும் சிவசாமி. அன்றாடம் கீரை கொடுக்கும் முனித்தாய். உப்பு. உப்போய். .என்று சைக்கிளில் ஒரு மூடை உப்பை வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன். தெருக் கடைசியில் தோசை மாவு விற்கும் மரியக்கா. இங்க வண்டிய நிறுத்திக்கிறட்டா சார். என்று கேட்டு புதிதாய்த் தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி நிழலைப்  பிடித்த அயர்ன்காரர் அந்தோணிசாமி. வாரம் தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும் பஞ்சாயத்துப் பேச்சி. இன்னும் எத்தனையெத்தனை பேர். யாரை நினைப்பது. யாரை மறப்பது?   என்னவோ ஒரு ஒட்டுதல். எதனாலோ ஒரு பிடிப்பு. இனம் புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும் போலிருக்கிறதே.  பிரியத்தோடு முகம் பார்த்தலும்,பரஸ்பர  நலம் விசாரிப்புகளும்

ஒரிஜினல் உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள். எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள். பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய் இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள். அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு. அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்.  யார் யாரை நினைச்சு உருகப் போறாங்க. ? எல்லாம் வெறும் வேஷம் மாயை.  அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.

பிடித்த மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான். அதிலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம் முகம் பார்க்கிறார்களே.  அது ஒன்று போதாதா?  பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி விட்டார்களே.  ஒரு வார்த்தை பரஸ்பரம் பேசியதில்லைதான். பேசினால்தான்  ஒட்டுதலா? பார்வையிலேயே எத்தனை நேசம் வழிகிறது அங்கே?

இல்லையென்றால் அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா? மனிதனின் இயல்பே உதவுவதுதான். அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின் கஷ்டங்கள்தான் அவர்களைத் திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ் மனதில் படிந்து போன நன்னெறிகள் அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.

மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர் லாரிகள் அவரின் நினைவுக்கு வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய் குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல் கீங். கீங். கீங். .என்று காது கிழிய ஏர் உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால் சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின் தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும். வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள் மக்கள். கிளம்பும் சர்க்கிளில் கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று லாரிக்குள் தண்ணீரை இறக்கி நிரப்பி,  ஒரு பொட்டலம் குளோரின் பாக்கெட்டைத் தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான். நகரின் கேடுகெட்ட சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு பாக்கெட் குளோரின் பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி. ..அவ்வளவுதான் நீர்ச் சுத்திகரிப்பு முடிந்தது.

பார்த்துப் பழகி மனம் நொந்துதான் போனார் ஈஸ்வரன். வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ அவருக்கு ஒட்டவில்லை. ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக் காசு கொடுத்து மாளவில்லை. அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும் அங்கேதான் பல்வேறு இடங்களில் நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது. அநியாயத்திற்கு இப்படியா விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி. .மாற்றி மாற்றி. .கல்யாணம், காட்சி, வளைகாப்பு, ஜனனம், மரணம். .என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க. .போகாமல் முடியவில்லையே? மொய் எழுதியும், டாக்சிக்குக் கொடுத்துமே பென்ஷன் காசு பூராவும் கரைந்து போகும் போலிருக்கிறதே.  என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று செலவு செய்து கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல் என்ன மாயா ஜாலம் இது?.  நல்ல கதையப்பா. நல்ல கதை.  வெறுத்தே போனார் ஈஸ்வரன். ..

சொர்க்கமே என்றாலும். ..அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா?

ஆள விடு..சாமி.  என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப் போயி இருக்க முடியாதுப்பா. .என்று பையன் சொல்ல. .என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே போதும். எனக்கு. ..அதுவே பெரிய ஆரோக்கியமாக்கும். என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார். மனைவி ஸிந்துஜா பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா என்ன. என்னால வாழ முடியாதா? இருந்து காட்டறேன் பார். .என்று நினைத்துக் கொண்டார். வயசாக வயசாகக் கணவன் மனைவிக்குள் பிரியமும், பாசமும் அதிகரிக்கும் என்று பெயர். இங்கே என்னடாவென்றால் இவர் எப்படா தனியே ஓடுவோம் என்று காத்திருந்தார். பையனிடம் அவ்வளவு ஒட்டுதல் பார்ப்போம் அந்த நாடகத்தையும்

நீயும் வர்றியா? என்று கூட ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. கிட. .அவ்வளவுதான். . நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான் இருப்பேன் என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும் குறுக்கிடாத தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும். அது அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர் பிராணன் போனால்தான் நிம்மதி.

இதோ. .அவருக்கென்று உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக் கிளப்பி விட்டார் ஈஸ்வரன். இன்னும் அந்தப் பகுதியில் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும் தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும் அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு. அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக் கேட்டாக வேண்டும்.     அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை.  அவர்களின் அந்த வெள்ளை மனசு. அன்றாடப் பாடுகளில் உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக் கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை. .கரித்துக் கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும் அவர்களின் அன்றாடப் பொழுதுகள். அவைதான் எத்தனை ரசனைக்குரியவை. எவ்வளவு மதிப்பிற்குரியவை.

அடடே. வாங்க சாமீ. .என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை. ..- என்றவாறே ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில் கலங்கிப் போக, வந்தாச்சு. வந்தாச்சு. இங்கயே வந்தாச்சாக்கும். ”.என்று சிறு குழந்தைபோல் உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு நகரலானார் ஈஸ்வரன்.

கொண்டாங்க கேனை. முதல்ல நிரப்பிடுவோம். என்றவாறே எட்டி வாங்கினது ஒரு பெண்.

மகளே. . என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார்.

கொஞ்ச நேரம் உங்களோட உட்கார்ந்து பேசிட்டு, அப்புறம் பிடிச்சிட்டுப் போறேனே. நீங்கல்லாம் பிடிங்க .என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு நடுவே போய் சம்மணம் போட்டு  அமர்ந்தார் ஈஸ்வரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த் தொடங்கியது.

—————————-

 

அக்கினிக் குஞ்சொன்று

ஷ்யாமளா கோபு 

 

“பாலா…..பாலாமணி……….பாலா” குடிசையின் வாசலில் நின்று குரல் கொடுத்தாள் மல்லிகா. உள்ளேயிருந்து ஒரு சிறு அசைவும் வரவில்லை. கொஞ்ச நேரம் நின்று பார்த்தவள் மெல்ல எட்டிப் பார்த்தாள். கயிற்றுக் கட்டிலில் தலைமாடு கால்மாடாகப் படுத்திருந்தார்கள் பாலாவும் நிஷாவும். தூளியில் தூங்கிக் கொண்டிருந்தது உஷா. மீண்டும் குரல் கொடுத்தாள் மல்லிகா. “பாலா”

“ம்.” என்று எழுந்தவள் எதிரே மல்லிகா நிற்பதைக் கண்டதும் அவசர அவசரமாக எழுந்து அருகில் கிடந்த மகளையும் எழுப்பியவாறே “அம்மா, வாங்கம்மா” என்றாள்.

“என்ன பாலா, நல்ல தூக்கம் போல. எழுப்பி விட்டு விட்டேனா?”

“அப்படி எல்லாம் இல்லம்மா. இந்த புயலில் மூணு நாளா அலமலந்து போய் கிடக்கிறோம். ஏன்னா புயலு, காத்து…அதோ அங்கப் பாருங்க” அவள் காட்டிய திசையில் நிமிர்ந்து பார்த்தவளுக்கு ஐயோ பாவமே என்று இருந்தது. குடிசையின் மேற்கூரை பாதி காணாமல் போயிருந்தது. பின்பக்க சுவரும் இடிந்து தரை மட்டமாகி இருந்தது.

“என்ன பாலா இது?” என்று திடுக்கிட்டவள்  ரொம்ப கோராமையா இருக்கே?”என்றாள்.

“இருக்கிற சொச்ச கூரையும் இடிந்து தலையில் விழுந்துடுமோன்னு பயந்துக் கிட்டு ராவெல்லாம் தூங்காமல் கிடந்தோம் அம்மா. இப்பத் தான் காலையிலே இருந்து காத்து இல்லாமல் அப்பப்போ கொஞ்சம் சிலுசிலுன்னு தூறிக்கிட்டு இருக்கவே சித்த நேரம் படுக்கலாம்னு படுத்தோம். நல்ல அலுப்பு. பசி வேற. கண் அசந்துட்டோம்” என்றவள் “வந்து ரொம்ப நேரமாச்சா?” என்று கேட்டாள்.

“நீங்க எல்லாம் புயலில் சிக்கிக்கிட்டு கிடப்பீங்க. அதனால் தான் ஆஸ்பத்திரிக்கு மாதாந்திர மாத்திரை வாங்க வரவில்லைன்னு தெரிஞ்சி கையோட மாத்திரையைக் கொண்டாந்திருக்கேன் பாலா”

“உக்காருங்கம்மா” சொன்னவள் கட்டிலில் கிடந்த துணிகளை அப்புறப்படுத்தி அவள் அமர இடம் ஒதுக்கிக் கொடுத்தாள். அவள் காட்டிய இடத்தில் அமர்ந்தவள் தன் கைப்பையில் இருந்து மாத்திரையை எடுத்து பாலாவின் கையில் கொடுத்தாள்.

“இதுல கொஞ்சம் சாப்பாடு இருக்கு. நான் வீட்ல செஞ்சி எடுத்துக் கிட்டு வந்திருக்கேன். இதோ கொஞ்சம் அரிசியும் இருக்கு. ஒரு வாரத்துக்கு தாங்கும். அதுக்குள்ள நீங்களே சமாளிச்சிர மாட்டீங்களா?”

“மேடம், சோத்துக்கு வழியில்லாமல் நாதியத்துப் போய் நான் நிப்பது இது ரெண்டாவது தடவை. முதல் முறையும் நீங்க தான் உதவினிங்க. இதோ இப்பவும் நீங்க தான் ஆபத்துல காப்பாத்துற கடவுளா கண் முன் வந்து நிக்கறீங்க”

கைக் கூப்பித் தொழுது நின்றவளை கரம் பற்றி “இதற்கு எனக்கு சம்பளம் தராங்க பாலா” உணர்ச்சி வசப்பட்டு கிடந்தவளை லகுவாக்குவதற்காக சிரித்தாள் .

“மாத்திரைக் கொடுப்பதற்குத் தானே சம்பளம். இந்த அரிசிக்கும் சாப்பாட்டுக்குமா சம்பளம் தராங்க” கொண்டையை முடிந்துக் கொண்டு அடுப்பருகே கிடந்த ஒன்றிரண்டு நனைந்த சுள்ளிகளை தட்டி தட்டி அடுப்பில் திணித்து விளக்கில் கிடந்த மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்தாள்.

“என்ன பண்ணப் போறே?”

“கொஞ்சம் கட்டங்காப்பி போடுறேன் மேடம். எங்களுக்கும் சேர்த்து தான்”

“சரி” என்று ஒப்புக் கொண்டவள் “பாலா உனக்கு ஒரு விஷயம் சொல்லணும். அதுக்குத் தான் முக்கியமா நான் வந்ததே”

ஈர சுள்ளியினால் புகையத் தொடங்கியிருந்த அடுப்பை ஊதாங்குழளால் ஊதியவள் நிமிர்ந்து கண்ணில் அடித்த புகைக்கு ஒரு கண்ணை மூடியவாறு  என்ன என்பதைப் போலப் பார்த்தாள்.

“உன்னோட  வழக்கு வர வெள்ளிக்கிழமைக்கு வருது இல்ல. ஞாபகம் இருக்கா?”

“அதுக்குத் தானே உசுரை கையில பிடிச்சிக்கிட்டு இருக்கிறேன்”

“போன வாரம் வக்கீலய்யாவை வேற ஒரு விஷயமா பார்க்கப் போயிருந்தேன். எல்லா பேப்பர்ஸ்ம் தயாரா இருக்கு. நாம் மருத்துவமனையில் கேட்டிருந்தவைகள் கிடைத்து விட்டது. அதனால் முழு நம்பிக்கை இருக்காம். உன் கேஸ் நல்லபடியா முடிஞ்சிரும்னு சொல்ல சொன்னார்”

“கடவுள் உங்களை மாதிரி மனித உருவத்தில தான் வந்து நம்மை காப்பாத்தி கரை சேர்ப்பாருன்னு படிச்சிருக்கேன் மேடம்”

“ரொம்ப பேசறே நீ” விளையாட்டாக ஒரு விரலை பத்திரம் காட்டினாள்.

“உணமையைத் தான் பேசறேன்” சிரித்தாள் பாலா.

பாலாமணியின் கணவன் ரங்கசாமி பக்கத்து ஊரில் ஓரளவிற்கு நிலம் நீச்சென்று வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். நாமக்கல்லில் லாரி புக்கிங் ஆபிஸ் வைத்து கொண்டு தொழில் செய்து வந்தான். அவனுடைய அக்கா இங்கேயே அரசு ஆசிரியையாக நல்ல வழமையாகவே வாழ்ந்து வந்தாள். பாலாவின் குடும்பம் ஓரளவிற்கு நடுத்தர குடும்பம். வலுவில் வந்து பெண் கேட்ட  ரங்கசாமியின் பெற்றோரின் தன்மையும் பண்பாடும் எதையும் யோசிக்காமல் அவர்கள் பெண்ணைக் கொடுப்பதற்கு சம்மதிக்க வைத்தது.

இப்போது புதிதாகப் பிறந்ததும் பெண்ணாக பிறந்து விட்டது என்று ரங்கசாமிக்கும் அவன் தாய்க்கும் நிரம்பவே ஆதங்கம். ஜாடைமாடையாக ஏசத் தான் செய்வார்கள். ஆனால் ரங்கசாமி பாலாவை நகை நட்டு கார் என்று நல்ல வசதியாகவும் ஆசையாகவும் வைத்திருக்கவே ஆண் குழந்தை இல்லையே என்ற ஆதங்கத்தில் மாமியார் ஏசுவதை பாலா பொருட்படுத்தவில்லை.

எல்லாமே நல்லபடியாகவே சென்று விட்டால் தெய்வத்தை மனிதன் மறந்து விடுவான் இல்லையா! ரங்கசாமி நோய்வாய்ப்பட்டான். அங்கே சுற்றி இங்கே சுற்றி ஆட்கொல்லி நோயான ஹ.அய்.வி முற்றி இன்று எய்ட்ஸ் என்று வந்து நின்றது. அவளுக்கும் குழந்தைகளுக்கும் பரிசோதிக்க வேண்டியது கட்டாயம் என்ற போது கூட விவரம் அறியாதவளாக சம்மதித்தவளுக்கு தலையில் இடி இறங்கியது. அவளுக்கும் அவளுடைய இரு குழந்தைகளுக்கும் நோயின் தன்மை இருப்பதாக பரிசோதனை முடிவு சொன்ன போது உலகமே இருண்டு போனது.

“எல்லாம் உன்னால் தானே?” அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள் பாலா.

“அதற்கு நான் என்ன செய்ய முடியும்?” சட்டையை நீவியவன் ரொம்பவும் இறுமாப்புடன் கேட்டான்.

“கல்யாணத்திற்கு முன்பே உனக்கு வியாதி இருப்பது தெரியும் தானே. வீணில் என்னை ஏன் பழி  வாங்கினாய்? நான் உனக்கு என்ன கெடுதல் செய்தேன்?”

“என் நிலைமை தெரிந்து வழக்கமாக வரும் பெண்கள் வர மறுத்து விட்டார்கள். கல்யாணம் என்று செய்து கொண்டு விட்டால் இந்த வம்பே இல்லை. யார் பின்னாலேயும் தொங்க வேண்டாம் பார்”

“உன் அக்கா மகளை கட்டியிருந்திருக்கலாமே”

“என்னைப் பற்றி நன்கு தெரிந்தும் அவள் மகளை எனக்கு கொடுப்பாளா அவள்?”

”நான் உன்னைக் கட்டிய பாவத்திற்கு எனக்கு இது தேவை தான். நம் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்”

“எனக்குன்னு ஒரு புள்ளைப் பொறக்கலைன்னா அப்புறம் இந்த உலகம் என்னைப் பொட்டைப்பய என்று சொல்லாதா?”

“அதுக்கு இன்னொன்னும் எதுக்கு பெத்தே?”

“ஏய் என்னமோ நான் தான் கேட்டது போல பேசறே?”

“நீ தானே ஆம்புளை புள்ளை வேணும்னு கேட்டு கேட்டு நச்சரிச்சே”

“நான் என்ன உன்ன மாதிரி அன்னக்காவடியா? எத்தனை சொத்து சுகம் இருக்கு. அத்தனைக்கும் ஒரு வாரிசு வேண்டாமா?”

“ஏன் பெத்து வெச்சிருக்கியே ஒரு புள்ளை. அது போதாதா? அதோட நிறுத்தி இருக்கலாம் இல்ல. இப்ப இன்னொன்னு பெத்து அதுவும் உன்னை மாதிரி சீக்கில சாகப் போவுது” நெஞ்சு வெடித்து அழுதாள்.

“அறிவு இருக்கா உனக்கு? எவன் வீட்டுக்கோ போகப் போறது எனக்கு வாரிசா? ஆம்புள்ளைப் புள்ளையப் பெத்துக் கொடுக்க வக்கில்லாதவ பேசற பேச்சைப் பாரு”

அவனை அரசு மருத்துவமனையில் சேர்த்தவர்கள் அவன் உயிரோடு இருக்கும் வரை பாலாவை அம்மா தாயே மகாலட்சுமி பொறுமையில் பூமாதா என்றெல்லாம் கொண்டாடினார்கள். ஏனெனில் அவன் அருகில் இருந்து பாடுபார்க்க வேறு யாரால் முடியும்?

இழுத்துக் கொண்டு கிடந்தவன் ஒருவழியாக கண்ணை மூடிய போது தன் வாழ்க்கை அஸ்தமித்துப் போனதைப் போல நிராசையுடன் கிடந்தாள் பாலா. ஆசையுடன் அருமையாக வைத்திருந்தவன் இறந்து போனானே என்று இறந்தவனுக்காக அழுவதா அன்றி தெரிந்தே தனக்கும் தன் இரு குழந்தைகளுக்கும் நோயைக் கொடுத்து சீரழித்து விட்டானே என்று கசந்து கொள்வதா என்று புரியவில்லை அவளுக்கு.

இனி தன் எதிர்காலம் என்னாகும் என்பது அவளுக்குப் புரிந்தது. தனக்கு வந்திருப்பதும் ஆளைக் கொள்ளும் ஆள்கொல்லி நோய். இதில் தான் தப்பிக்கவே முடியாது. ஆனால் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? வாழ வேண்டிய வயதில் நோயுடன் போராடத் தான் அவர்களுக்கு பலம் இருக்குமா? ஏன் பலம் இருக்காது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் பாலா. இந்த உலகமும் உறவினர்களும் உடன் இருந்தால் நோயுடன் போராடி வென்று நீண்ட நாட்கள் நம் மகள்கள் வாழ முடியும் என்று தன்னைத் தானே திடப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவளுக்கு காத்திருந்தது அடுத்து அடுத்து இடிகள்.

கைக் குழந்தையுடனும் இடுப்பில் மூன்று வயது பெண் குழந்தையுடனும் நின்றவளை குற்றம் சாட்டியது ரங்கசாமியின் குடும்பம்.

“உன்னால் தான். நீ தான் எங்கேயோ தறிக்கெட்டுப் போய் வியாதியை இழுத்துக் கொண்டு வந்து அவனுக்கும் கொடுத்து விட்டாய்”

“உங்கள் மகன் யோக்கியதை தெரிந்தும் நாக்கில நரம்பில்லாமல் பேசாதீர்கள்” ஆங்காரப்பட்டவளிடம் “ஆண்கள் என்றால் கொஞ்சம் அப்படி இப்படி என்று தான் இருப்பார்கள். ஆனால் அதனால் எல்லாம் நோய் வந்து விடுமா என்ன? அவன் லோடு லாரி விஷயமா வெளியே தெருவுல போயிருக்கும் போது நீ என்ன செஞ்சியோ? இப்போ உனக்கும் வந்து உன் பிள்ளைகளுக்கும் வந்திருக்கு”

“என் பிள்ளைகளா? உங்கள் பையனோட பிள்ளைகளம்மா”

“அப்படின்னு நெனப்புடன் வந்து விடாதே. அசிங்கப்பட்டுப் போயிடுவே” மாமியார் வெஞ்சினத்து உரைத்தாள்.

கையில் பத்தாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்தாள் நாத்தனார். ”ஏதோ அவன் காலம் முடிஞ்சிப் போச்சு. அவன் போட்ட நகை எல்லாம் கழட்டிக் கொடுத்துட்டுப் போ. நான் பத்திரமா வெச்சிருக்கேன். நாளை பின்னே மகள்களுக்கு கல்யாணம் காட்சின்னு வந்தா நாங்க தானே செய்யனும்”

“நகையை தரணுமா?”

“உங்க அப்பன் வீட்ல இருந்தா போட்டுக்கிட்டு வந்தே?” ஈவு இறக்கம் இல்லாமல் கழுத்தில் கிடந்த தாலிக் கொடியுடன் நகைகளையும் சேர்த்துக் கழட்டிக் கொண்டாள் அவள்.

பாலாவைப் பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் எட்டியே நின்றார்கள். “அப்பா என்னப்பா இப்படி பண்றாங்க” என்று அழுது கொண்டே அருகில் சென்றவளை எட்டியே நின்று “பாப்பா என்ன பண்றது?  உன் விதி. வேறு என்ன சொல்ல?” என்று ஒதுங்கிக் கொண்டார் அவர்.

“நானா அப்பா ஆசைப்பட்டுக் கட்டிக் கிட்டேன்?”

“நான் தான் கட்டி வெச்சேன். அதுக்கு இப்ப என்ன பண்றது?”

“என்னை இப்படி கஷ்டப்பட விடுவீங்களா அப்பா?” கேவி அழுதாள்.

“அவரு நல்லா வெச்சிருந்த போது நீ தானே அனுபவிச்சே. இப்பயும் நீ தானே அனுபவிக்கனும்”

“அப்பா வீட்டுக்கு வரேன்ப்பா. வேறே நான் எங்கே போறது?”

“அம்மா கொஞ்சம் யோசித்துப் பேசு. வீட்ல இன்னும் பிள்ளைங்க இருக்காங்க. அவுங்களுக்கும் கல்யாணம் காட்சின்னு நடக்கணும். உன் விவரம் கேள்விப்பட்டால் அப்புறம் என்ன ஆகும்னு கொஞ்சம் யோசித்துப் பேசும்மா”

“என்னம்மா யோசிக்கணும்?”

“உன் மாமியார் இந்த ஊர் பூரா உன் மேலே பழியை சொல்வாளே”

“அதை நீங்க நம்பறீங்களா?”

“எங்க வீட்ல இருந்தவரைக்கும் உன்னை ஒரு அப்பழுக்கு சொல்ல முடியுமா?”

“அப்படின்னா இப்போ சொல்லுவீங்களா?”

மொத்த குடும்பமும் மௌனமாக நின்றது. இடிந்து போனாள் என்ற வார்த்தை மிகவும் சாதாரணம். தனிமையில் கிடந்து அழுது கரைந்தாள். மனம் எதை எதையோ யோசித்துக் கிடந்தது.

நம் நடத்தையில் சந்தேகப்பட்டு இவர்கள் நம்மை பழி சொல்லவில்லை. மாறாக நம்மைத் தவிர்ப்பதற்காக நம் நடத்தையை வீணில் பேசுகிறார்கள். தங்களுக்கு எப்படித் தேவையோ அதைப் போல இந்த உலகை திருப்புகின்ற சுக்கான்கள் இவர்கள். இவர்கள் சொல்லுவதால் நான் அப்படி ஆகி விட மாட்டேன்.

அடுத்த வேளை உணவிற்கு வழியில்லை. கைப்பிள்ளை அழுகையில் கதறியது. அதன் அழுகுரல் நெஞ்சை வரட்டியது. வயிற்றைக் காந்தியது. கையில் இருக்கும் கொஞ்சம் பணத்திற்கு பால்டாயிலை வாங்கி வந்தாள். பாலில் கலந்து குழந்தைகளுக்கும் தனக்கும் குடிக்க டம்ளரில் ஊற்றினாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தாள். அது அவளும் அவள் குழந்தைகளும் இனி இந்த உலகில் வாழப் போகிற வாழ்க்கைக்கான கதவு திறப்பாக இருந்தது.

மருத்துவமனையில் இவர்களைப் பதிவு செய்திருந்ததினால் இன்று போல் அன்றும் மல்லிகா இவளை தேடி வந்தாள். அவர்களின் நிலை அறிந்தாள். தனக்குத் தெரிந்த பண்ணையில் பாலாவையும் நிஷாவையும் சேர்த்து விட்டு கைக்குழந்தையை வேறு அமைப்பில் சேர்த்து விட்டாள். கைப் பிள்ளைக்காக பகலில் மாரில் பால் சுரக்கும். இரவுகளில் படுக்கையில் நிஷாவை அரவணைத்துப் படுத்திருக்கையில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

காலம் போய்க் கொண்டிருந்தது. ஒருநாள் மருத்துவமனையில் மல்லிகா பாலாவிடம் துருதுருவென்று அங்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைக் காட்டி, “இது யார் என்று தெரிகிறதா?” என்று கேட்டாள்.

ஆளை இடித்து தள்ளும் பெருங் கூட்டத்திலும் பெற்றவளுக்குத் தன் பிள்ளையை தெரியாதா? தன் வாழ்நாள் காலத்தில் இனி ஒருமுறை பார்க்கவே பார்க்க முடியாது என்று மனதின் ஆழத்தில் போட்டு மூடி வைத்திருந்த ஏக்கத்தையும் துக்கங்கத்தையும் மீறி தன் குழந்தையைக் கண்ட மாத்திரத்தில் தன்னுள்ளே அலையடிக்கும் அந்த உணர்வுகள் தான் புரியாதா?

கண்கள் கசியத் தொடங்கியிருக்கவே மல்லிகா அவளை அணைத்துக் கொண்டாள். “உனக்கு வேண்டுமானால் நான் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு உன் மகளை பெற்றுத் தரட்டுமா பாலா. இப்போது தான் நீ ஓரளவிற்குத் தேறி விட்டாயே. சொல். கேட்கட்டுமா?”

“ஊஹூம்”

“ஏன்?” ஆச்சரியப்பட்டுப் போனவளை பார்த்து சன்னமாக முறுவலித்தாள் பாலா.மனம் கசந்து  நைந்த அந்த முகத்தைப் பார்த்து மல்லிக்காவிற்கு மனம் கனத்துப் போனது.

“வேண்டாம் மேடம். எனக்கு எப்போது சாவு மணி அடிக்குமோ தெரியாது. என்னை நம்பி  ஏற்கனவே நிஷா இருக்கிறாள். அவளை நல்லபடியாக நீண்ட ஆயுளோடு கொண்டு கரை சேர்த்து விட்டால் போதும். அங்கே நல்லபடியாக வளரும் அந்த குழந்தையை வீணில் நான் கொண்டு போய் அலைகழிப்பானேன்?”

“நிஷாவை என்ன செய்வாய்?”

“மாத்திரை மருந்தை சரியாக கொடுத்து நல்ல ஆகாரம் கொடுத்து பார்த்துக் கொண்டால் நல்லபடியாகவே வாழ்வாள். நல்ல படிப்பு கொடுக்கணும். உங்களை மாதிரி நல்ல உத்தியோகத்திற்குப் போகணும். நாளை பின்னே அவள் நிலை அறிந்து எவனாவது அவளுக்கு வாழ்க்கைத் துணைக் கிடைத்தால் அந்த வாழ்க்கையையும் வாழ்ந்து பார்க்கட்டும்”

“இத்தனையும் சின்னதற்கும் கிடைக்கும் தானே பாலா”

“கண்டிப்பாக. அதனால் தான் அந்த குழந்தை அங்கேயே இருக்கட்டும் என்று சொல்கிறேன்”

“நீ நிஷாவுக்கு சொன்ன அத்தனையும் உஷாவுக்கும் கிடைக்கும். ஆனால் அம்மா அக்கா என்று குடும்பம் கிடைக்குமா?”

“அது இருக்கிற நாள் வரை நல்லபடியா இருக்கட்டும் மேடம். என்னோடு வந்து அரை வயிற்றுக்கும் கால்வயிற்றுக்கும் அல்லல் பட வேண்டாம்”

“உனக்கு என்று குடும்பம் இல்லையா பாலா?”

“இருந்தது”

“இப்போது?”

“இல்லை”

“ஏன்?”

“ஏன் என்றால்?” சொன்னாள். ஆதியோடு அந்தமாக எல்லாவற்றையும் சொன்னாள். அவள் கதைக் கேட்டு மனம் கனத்து போனது  மல்லிகாவிற்கு.

வட்டமிடும் வல்லூறுகளும், சுற்றி வரும் ஓநாய்களும், கொத்தி தின்று விடப் பார்த்த பருந்துகளும், நோட்டமிடும் நரிகளும், நூல்விடும் பசு தோல் போர்த்திய புலிகளும் என்று ஒரு வனவிலங்கு கூட்டத்திற்கிடையே வாழ நேர்ந்த போதும், மல்லிகா பண்ணையின் முதாலாளி அவர்கள் குடும்பம் வீட்டு உரிமையாளர் என்று மனிதர்களும் அவளை சுற்றி வாழ்ந்து கொண்டு தான் இருந்தார்கள். அவர்களின் உதவியாலும் மனிதாபிமானத்தினாலும் அவள் தன்னை பாதுகாத்து தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

வீட்டிற்கு வந்த பாலாவிற்கு தன் மகள் உஷா கண் முன்னே இருந்து மறையவேயில்லை. மல்லிகா கேட்டதைப் போல தன் மகளுக்கு அம்மா அக்கா என்று குடும்பம் வேண்டுமே. எதிர்காலத்தில் நிஷாவிற்கும் ஒரு துணை வேண்டும். ஒருவருக்கு ஒருவர் என்று அக்கா தங்கை இருவரும் வாழும் போது வாழ்க்கை கொஞ்சம் இலகுவாகத் தானே இருக்கும். தன்னைப் போல தனியாளாக கஷ்டப்பட வேண்டியிருக்காதே. இப்போது கஷ்டப்பட்டு பண்ணையில் உழைப்பதைப் போல இன்னும் கொஞ்சம் கஷ்டம் பாராமல் உழைத்தால் இருவருக்குமே கஞ்சி ஊற்றலாம். அரசு பள்ளி இருக்கிறது. அரசின் இலவச ரேசன் இருக்கிறது. உலகில் இன்னும் நல்ல உள்ளம் படைத்த மனிதர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள். எல்லாருமேவா ரங்கசாமியைப் போலும் அவன் குடும்பத்தினரைப் போலும் இருந்து விடுவார்கள்? அவ்வளவு ஏன் தன் குடும்பத்தினரைப் போல நம்மை நிர்கதியாக விட்டு விடப் போகிறார்கள்?

உஷாவை கேட்டு அமைப்பில் விண்ணப்பித்து அவளை பாலாவிடம் சேர்த்தாள் மல்லிகா.  என்.ஜி.ஓவின் உதவியால் வக்கீல் மூலம் ரங்கசாமியின் குடும்பத்தினரிடம் சொத்தைக் கேட்டு நோட்டிஸ் அனுப்பினாள்.

நாத்தனார் தேடிக் கொண்டு வந்து முகத்தில் அறைந்தாள். ”புருஷனே போய்ட்டான். இன்னும் சொத்திற்கு அலைகிறாய்?”

“நான் உன் தம்பிக்குத் தானே இந்த பிள்ளைகளைப் பெத்தேன். அதற்கான அங்கீகாரம் இது. நீ எனக்கு இடும் பிச்சை இல்லை உன் சொத்து”

“வா வா கோர்டில் அசிங்கப்பட்டு நிக்கப் போறே?”

“எதுக்கு?”

“நீ எங்கேயோ போய் சீக்கை வாங்கி வந்து என் தம்பி தலையில் கட்டி விட்டே?”

“இந்த கதைக்கு பயந்த பாலா இல்லை நான். உன் கதையை நீ கோர்டில் சொல். என் கதையை நான் சொல்கிறேன்”

இதோடு போயிற்றா இத்தகையப் பேச்சுக்கள்? எங்கெங்கோ சுற்றி அவள் காதுக்கே வந்தது. சோர்ந்து போய் விடவில்லை. ஆண்டாண்டு காலமாக பெண்களுக்கு உண்டான சோதனையைத் தவிர வேறு என்ன பெரிதாக நமக்கு வந்து விடப் போகிறது? அடுத்தவன் மனையிலும் கற்புநிலைக் காத்துக் கொண்ட சீதையை தீக்குளிக்க வைத்த உலகம் அல்லவா இது. அதுவும் ஆனானப்பட்ட அவதார புருஷனான ராமனே கூட இதற்கு விதிவிலக்கல்லவே!.  மனம் தளரவில்லை. இத்தகைய ஏச்சு பேச்சுக்களுக்கு பதில் சொல்லவும் இல்லை. நம்மை நிரூபிக்கக் கிளம்பினால் அது இந்த ஜென்மத்தில் முடியாது. மேலும் நிருபிக்கும் அளவிற்கு அவர்கள் நமக்கு யார்? கணவனே ஆனாலும் நம்மை அவனுக்கு நிருபித்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. நான் அக்கினியைப் போல சுத்தமானவள் என்று எனக்குத் தெரிந்தால் போதும். அதை தவிர்த்து உபயோகமான வேலையைப் பார்ப்போம் என்று மனம் திடப்பட்டாள்.

நீதிமன்றத்தில் தன் இரு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பாலாவை, காரில் வந்து இறங்கிய ரங்கசாமியின் குடும்பத்தினர் கம்பளிப் பூச்சியை பார்ப்பது போல அருவெறுப்புடன் பார்த்து விட்டு கடந்து சென்றார்கள்.

அவர்களுடைய வக்கீலின் பிரதான வாதமே பாலாவிற்கு ரங்கசாமியை அல்லாது மற்ற பிற ஆண்களுடன் தொடர்பு உண்டு என்றும் அவளால் தான் ரங்கசாமிக்கு நோய் வந்தது என்பது தான். கிட்டத்தட்ட இரு குழந்தைகளுமே ரங்கசாமியின் பிள்ளைகளல்ல. அதனால் பாலாவிற்கும் குழந்தைகளுக்கும் குடும்ப சொத்தில் பங்கு கொடுக்க இயலாது என்பது தான்.

பாலாவின் வக்கீல், ரங்கசாமிக்கு நாமக்கல்லில் ஹ.அய்.வி கிளினிக்கில் பதிவு செய்திருந்த பதிவேட்டின் நகலில் உள்ள தேதியையும் மருத்துவ பதிவேட்டின் நகலையும் காட்டி ரங்கசாமிக்கு பாலாவை திருமணம் முடிக்கும் முன்பே நோய் இருந்தது என்று நிருபித்தாகி விட்டது. மனிதாபிமானம் மிக்க நீதிபதிக்குப் புரிந்து விட்டது இந்த வழக்கின் போக்கு.

கடவுள் கை விடவில்லை. கண் திறந்தும் பார்த்தார் போலும். தெளிவான தீர்ப்பை நீதிபதி  வாசித்தார். “ஆகையினால் ரங்கசாமியியன் மனைவி பாலாமணிக்கும் அவர்களுடைய இரு பெண் குழந்தைகளான நிஷா உஷாவிற்கும் ரங்கசாமியின் பரம்பரை சொத்துக்களில் ஆறில் மூன்று பங்கை இப்போதே கொடுத்து விட வேண்டும். ரங்கசாமியின் பெற்றோரின் காலத்திற்குப் பிறகு அவர்களுடைய ரெண்டு பங்கையும் அந்த பிள்ளைகளுக்கே கொடுக்க கட்டளையிடுகிறேன்”

“ஆங். என் சொத்தை கொடுக்க மாட்டேன். அதுவும் ஆம்பிள்ளைப் புள்ளையாக இருந்தால் கூட போனா போவட்டும்ன்னு யோசிப்பேன். போயும் போயும் பொட்டைப் புள்ளைங்களுக்கு என் சொத்தைக் கொடுக்க மாட்டேன்” கிரீச்சிட்டாள் மாமியார்.

தீர்ப்பை சொல்லி விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்த  நீதிபதி “அம்மா இன்னும் நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க? ஆம்புளை பொம்பிளைன்னு பேசிக்கிட்டு” என்று கடிந்து கொண்டு விட்டு அங்கே இருந்த உதவியாளரிடம் சொன்னார். ”அவுங்க கிராமம் இருக்கும் போலிஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லி ஆய்வாளரை இந்த பெண்ணிற்கு சொத்தைப் பிரித்து தரும் வரை உடன் இருந்து பாதுகாப்பு தரும்படி மனிதாபிமானத்துடன் உதவும்படி நான் பெர்சனலாக தகவல் சொன்னேன் என்று சொல்”

“ஆங்” என்று ஆங்காரப்பட்ட மாமியாருக்கு புரைக்கேறி கண்கள் கலங்கி மாரை அடைப்பதைப் போல ஆகவும் அருகில் இருந்த நிஷா தன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலின் மூடி திறந்து “பாட்டி கொஞ்சம் தண்ணீ குடிங்க” என்று வாயில் ஊற்றினாள். அவளை நிமிர்ந்து பார்த்த பாட்டியின் கண்கள் இறந்து போன மகனை அவளில் கண்டு நெஞ்சம் விம்மியது. மாமியாரின் வலது கரம் நிஷாவை அணைத்துப் பிடித்திருந்தது.

“உனக்கு கொஞ்சம் வேச்சிக்கம்மா.எல்லா தண்ணியையும் பாட்டிக்கே கொடுத்துடாதே” என்றார் தாத்தா.

“பரவாயில்லை தாத்தா. நான் அங்கே போய் தண்ணி  தொட்டியில் பிடிச்சிக்குவேன். பாட்டி நீங்க இன்னும் கொஞ்சம் குடிங்க” என்று மீத நீரையும் பாட்டியின் வாயில் ஊற்றினாள். தாத்தாவின் வலது கரம் நிஷாவின் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தது.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பாலாவிற்கு வானம் பிரகாசமாக இருந்தது அவள் எதிர் வரும் வாழ்க்கையைப் போல.

 

சுடுகஞ்சி

பத்மகுமாரி

கிளம்பும்போது ஹெட்செட்டை எடுத்து பைக்குள் போட்டுக்கொள்ளச்  சொன்னாள் அம்மா. ““அந்த செவிட்டு மெஷின எடுத்துப் போட்டாச்சா?”“. நான் எதுவும் பதில் பேசவில்லை. பைக்குள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தவற்றை இரண்டாவது முறையாக சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவும் பதில் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. போகிற போக்கில் சொல்லிக்கொண்டே என்னை கடந்து படுக்கையறைக்குள் போய்விட்டிருந்தாள். படுக்கையறை அலமாரி கதவுத் துவாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சாவிக் கொத்தின் சாவிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்ளும் சத்தம் கேட்டது.

“மாஸ்க் வேண்டாமா?” நடையில் இறங்கும்பொழுது புது முகக்கவசத்தை அம்மா நீட்டினாள்.

“மறந்துட்டேன்ம்மா”

“ம்ம். முக்கியமானதெல்லாம் மறந்திருவ” அம்மா தேவையற்றது என்று எதைக் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.  ஹெட்செட் மாட்டிக் கொள்வதை பார்க்கும்போதெல்லாம் அம்மா இப்படி சொல்வாள். “காத தொறந்திட்டு கேக்க வேண்டிய பாட்ட, இத மாட்டிகிட்டு காத அடச்சிகிட்டு கேக்க எப்படி தான்‌ முடியுதோ”

தெருவின் திருப்புமுனைக்கு வந்துவிட்டு திரும்பி பார்க்கையில் அம்மா நடையில்  நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள். பதிலுக்கு நானும் கையசைக்க, அவள் உள்ளங்கையில் இருந்த அன்பு மொத்தமும் காற்றில் கலந்து வந்து என் உள்ளங்கையில் அந்த ஒரு நொடிக்குள் ஒட்டிக் கொண்டதாக தோன்றியது.

அம்மா வழி சொந்தங்கள், வீட்டுக்கு வந்து செல்கையில் தெருமுனை திரும்புகிற வரையிலும் நின்று கையசைத்து விட்டுதான் அம்மா வீட்டுக்குள் வருவாள். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கல்யாணமாகியிருந்த புதிதில், அப்பா வழி சொந்தங்கள் வீட்டுக்கு வந்து திரும்புகையில், அம்மா நடையில் நின்று கொண்டிருந்ததாகவும், வந்தவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே தெருமுனையை கடந்துவிட்டதாகவும், இரண்டு மூன்று முறை அப்படி நடந்த பிறகு, அப்பா வழி சொந்தங்கள் வந்து போனால் நடையில் போய் நிற்பதை விட்டுவிட்டதாகவும் அம்மா கூறியிருக்கிறாள். அம்மா அடிக்கடி இதை சொல்லியிருக்கிறாள். அம்மா வீட்டு சொந்தங்கள் வந்து திரும்பும்போதும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறாள். அப்பா வழி சொந்தங்கள் வந்து திரும்பும் போதும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறாள். ஆனால் இந்த இரு வேறு நேரங்களிலும் அவள் கண்கள் வெவ்வேறு மொழி பேசுவதை கண்டிருக்கிறேன். “இந்த பழக்கத்துல, நீ எங்க வீட்டு ஆளுகள போலயே வந்துட்ட” இதை சொல்லும் போது அம்மாவின் கண்கள் சிரிப்பது நன்றாக தெரியும். இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு பேருந்து வந்திருந்த போதிலும், ஜன்னல் இருக்கை கிடைத்துவிட்டதில்  ஆனந்தம் அடைந்திருந்தது மனது. நான் எடுத்து வந்திருந்த, ஹெட்செட்டிற்கு வேலையில்லாதபடி ஆக்கியிருந்தது, பேருந்தில் பாடிக்கொண்டிருந்த ஒலிபெருக்கி.

ஜன்னல் கம்பிகளோடு போட்டியிட்டு எதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்த மரங்களை எண்ணியபடி அமர்ந்திருந்தேன். திடீரென்று கீதாவின் ஞாபகம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது. எதிர்த் திசையில் ஓடிய மரங்களின் உதிர்ந்த இலைகளின் வாசத்தில் இருந்தும் அது வந்திருக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு முன்னால் கொட்டித் தீர்த்திருந்த மழையின் மிச்சமாக ஜன்னல் கம்பிகளில்  ஒட்டிக் கொண்டிருந்த மழைத் துளிகளிலிருந்தும் அது வந்திருக்கலாம்.

கீதாவும் நானும் முதல் முதலில் பேசிக் கொண்ட அன்றைக்கும் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அதற்கு முன்னால் பலமுறை கல்லூரி விடுதி வராந்தாவில் ஒருவரை ஒருவர் கடக்கிறபொழுது, ஒரு சம்பிரதாய புன்னகையோடு கடந்திருக்கிறோம். மற்றவர்கள் எங்களை அழைப்பதிலிருந்து என் பெயர் அவளுக்கும் அவள் பெயர் எனக்கும் தெரிந்திருந்தது.

அடுத்த நாள் தேர்விற்காக  நான் வராந்தாவில் அமர்ந்து பரபரப்பாக படித்துக் கொண்டிருந்தேன். பக்கங்களை வேகவேகமாக புரட்டிக் கொண்டிருந்தேன் என்றும் சொல்லலாம். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையின் கச்சங்கள் கைகளில் சில, கால்களில் சில என்று விழுந்து கொண்டிருந்த போதிலும் கண்டு கொள்ளாமல் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்ந நான், அவை புத்தகத்து பக்கங்களின் நுனியை தொட ஆரம்பித்ததும் உடம்பை  மேலும் ஒடுக்கி, விலகி உட்கார்ந்தேன்.

மழை கச்சங்களில் இருந்து என்னை நான் விலக்கிக் கொண்ட அந்த நொடி தான், என்னை கீதாவோடு இணைத்த நொடி. “இப்படி மழையில நனைஞ்சிட்டு எதுக்கு படிக்கிற? ரூமுக்குள்ள போயிருந்து படிக்கலாம்ல” இடது கை உள்ளங்கையை பாதியாக மடிந்திருந்த இடது கால் முட்டியில் ஊன்றியபடியே, வலது கையில் துணிகள் நிரம்பிய பச்சை பக்கெட்டை தூக்கிக் கொண்டு கீதா என் எதிரே நின்று கொண்டிருந்தாள்.

“இல்ல எங்க ரூம்ல, ரூம்மெட்டோட டிபார்ட்மெண்ட் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணிகிட்டு இருக்காங்க. அதான் சவுண்டா இருந்திச்சுனு வெளிய வந்தேன்.”“

“அப்படியா. அப்ப ஒண்ணு பண்ணு. எங்க ரூம்ல வந்து படி. அங்க அமைதியா தான் இருக்கு” சொல்லிக்கொண்டே ஒருமுறை அவள் அறையை கழுத்தை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

“இல்ல பரவாயில்லை. இருக்கட்டும்” சமணம் போட்டிருந்த கால்களை இன்னும் இருக்கமாக பின்னிக் கொண்டேன்.

“என் ரூம்ல யாரும் எதும் சொல்லமாட்டாங்க.போ.  நான் இத காயப்போட்டுட்டு வந்திடுறேன்.” இடது பக்கமாக சாய்ந்து சாய்ந்து என்னைக் கடந்து அவள் நடந்து சென்ற பொழுது அவன் நீள பின்னலும் சரிந்து சரிந்து ஊஞ்சல் போல் ஆடியது.

வெறும் பக்கெட்டோடு திரும்பி வந்த அவள், நான் எவ்வளவோ மறுத்தும் என்னை தன் அறைக்கு அழைத்து சென்று விட்டாள். கட்டிலின் ஒருபக்கம் அவள் அமர்ந்துகொண்டு மறுபக்கம் என்னை அமரச் சொன்னாள்‌. சாய்ந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தலையணையை தந்தாள்.

அந்த நாளிற்கு பிறகு அவள் அழைக்காமலேயே அவள் அறைக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன். அவளும் என் அறைக்கு அப்படி வந்து போய் கொண்டிருந்தாள். ஒரு வருடத்திற்கு பிறகு என் அறை இரண்டாவது மாடிக்கு மாறிவிட்ட பிறகு, படி ஏறமுடியாத காரணத்தால் அவள் என் அறைக்கு வருவது நின்று போய்விட்டது. அவள் தன்னைப் பற்றியும் , அவள் பாலிடெக்னிக் படிப்பை முடித்ததிற்கும் பொறியியல் படிப்பில் சேர்ந்ததிற்கும் இடையே அவள் கழித்த இரண்டு வருடங்கள் பற்றியும்,  நிறைய சொல்லியிருக்கிறாள். சிலவற்றை சொல்லும் பொழுது அவள் கண்கள் வெறித்துப் போயிருக்கும். சிலவற்றை சொல்லும் பொழுது சிலிர்த்தும், சிலவற்றை சொல்லும் பொழுது நீரால் பளபளத்தும் இருக்கும்.

ஒருதடவை தலைதூக்க முடியாதபடி, காய்ச்சலால் சுருண்டு படுத்திருந்த மதிய வேளையில், விடுதி மெஸ்ஸில் வேலை பார்க்கும் அக்கா ஆவி பறக்கும் சுடு கஞ்சித் தட்டோடு அறை வாசலில் வந்து நின்று என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.ஆச்சரியத்தில் கண்கள் விரிய அவர்களை பார்த்தபொழுது, “கீதா பொண்ணுதான் மெஸ்ஸிக்கு வந்து, உன் ரூம் நம்பரையும் , பெயரையும் சொல்லி, கஞ்சி வச்சு கொண்டு கொடுத்திட்டு வரமுடியுமான்னு கேட்டுச்சு” என்று சொன்னார்கள் . அதன்பிறகு கீதா அறைக்கு நான் போகமுடிகிற அளவிற்கு தெம்பு வருகிறபடி காய்ச்சல் சரியாகிற வரைக்கும் இரண்டு நாட்கள் மூன்று வேளைக்கும் என் அறை வாசலுக்கே சுடு கஞ்சி வந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் இதைப்பற்றி கேட்ட பொழுது, “நீ இங்க ரூம் பக்கமே வரலயேனு, உன் ரூம்மேட்கிட்ட கேட்டேன். நீ காய்ச்சல்னு படுத்திருக்கிறதா சொன்னா.” என்று பதில் சொல்லிவிட்டு, அதை கடந்து அதற்கு சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு பேச்சுக்கு சென்று விட்டிருந்தாள். நானும் அவள் பேச்சை பிடித்துக் கொண்டே அவளோடு சென்று விட்டிருந்தேன்.

கல்லூரி முடிவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்பு அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்றும், மாப்பிள்ளை போலிஸ் உத்தியோகத்தில் இருப்பவர் என்றும், அவளுக்கு என்று தனி கைபேசி வந்தவுடன் அதிலிருந்து அவள் திருமணத்திற்கு அழைப்பதாகவும், திருமணத்திற்கு நான் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னாள். கல்லூரி கடைசிநாள் விடுதியை காலி செய்து விட்டு வரும் பொழுது வாசல் வரை வந்து வழியனுப்பினாள். அவள் அண்ணன் அவளை அழைத்து செல்ல வருவார் என்று கூறினாள்.

பேருந்து ரயில்வே பாலத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கீதா கல்யாண கோலத்தில் பெரிய மீசை வைத்த வாட்டசாட்டமான ஒருவரின் அருகில் நிற்பதாக  கற்பனை செய்து பார்த்தேன். பாலத்தின் கீழேயுள்ள தண்டவாளத்தில் கடந்து சென்றிருந்த ரயிலின் சத்தம் தூரத்தில் கேட்டது. பாலம் முடிகிற இடத்தில் இடப்பக்கம் இருந்த குளத்தில் ஒரு ஒற்றை நீர்ப்பறவை அதன் முகத்தை தண்ணீரில் ஒரு முக்கு போட்டு நிமிர்ந்து தலையை உதற, அதிலிருந்து தெறித்த சில நீர்த்துளிகள் குளத்தில் விழுந்து சிறு சிறு நீர் வட்டங்களாக தோன்றி மறைந்தன.

அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக பையை எடுக்க ஜன்னல் கம்பியில் ஊன்றியிருந்த கையை எடுத்து பொழுது, கம்பியில் ஒட்டியிருந்த ஒரு சிறுதுளி கைமுட்டி மடிப்பின் அருகில் விழுந்தது. விழுந்த துளியை தேய்த்து துடைத்து விட்டு கொண்டபொழுது  சுடுகஞ்சி வாசனை வந்தது.

நகல்

கார்த்திக் கிருபாகரன் 

மாலை நேரம் ஆகிவிட்டது.   மலையில் ஏறிக் கொண்டிருந்த கபிலனுக்கு இருட்டுவதற்குள் பாதுகாப்பாக தன் வீட்டை சென்றடைய வேண்டுமே என்ற கவலை. முடிந்த அளவு விரைவாக மலையேறிக் கொண்டிருந்தார்கள்.  கபிலனின் நடை வேகத்தை மலையின் ஏற்றமோ,  பாதையில் கிடந்த சிறு கற்களோ குறைக்க வில்லை. காரணம் அவன் இந்த பகுதியிலே வாழ்ந்து பழகியவன். ஹரிக்கு சற்று சிரம்மாகவே இருந்தது. என்ன தான் நடையில் விரைவைக் காட்டினாலும்,  மனதை மயக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை அழகும், நறுமணமும்,குளிர்ந்த காற்றும் அவ்வப்போது ஹரியை தாமதபடுத்தி கொண்டிருந்தன.

திரும்பிய திசை எல்லாம் இயற்கையின் வளம் கொட்டிக் கிடந்தது.  உயரமான மரங்கள்.  மலர்களிலோ விதவிதமான மலர்கள். எத்தனை வண்ணங்கள். எத்தனை மணங்கள். பட்டியலிட்டு முடியாது. எத்தனை முறை பார்த்தாலும் இந்த அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருந்தது. இப்படி காணாததை கண்டவன் போல மலையின் அழகை வியந்து கொண்டே முடிந்த வரை விரைவாக கபிலனுடன் ஹரி நடந்து கொண்டிருந்தான்.

குளிர் காலம் என்பதால்,மாலை ஐந்து மணிக்கெல்லாம் பனி சூழ தொடங்கி, இருட்ட ஆரம்பித்தது.சற்று நேரத்தில் மழை பெய்யும் நிலை உருவானது.

ஹரியின் அப்பா அரவிந்தனை நினைத்து கபிலன் பயப்பட ஆரம்பித்தான். ஹரியை வெளியே கூட்டி வந்தது அரவிந்தனுக்கு தெரியாது.

சிறு வயதிலிருந்து பழகிய நண்பன் ஹரிக்கு,மலை,தோட்டம் என சுற்றிய பழைய நினைவுகள் துளியும் ஞாபகம் இல்லாதது கூட சிறிது வருத்தம் இருந்தாலும், செல்லும் வழியில் சுற்றி திரிந்த சில இடங்களை கபிலன் காட்டிய போதும் ஹரிக்கு எதுவும் நினைவில்லை. எவ்வளவு முயற்சி செய்தும் நினைவு கொண்டு வர முடியாமல் போனது. அதுவும் மலை பகுதிக்கு ஹரியை அழைத்து கொண்டு வந்ததிலிருந்து, இப்போது செல்லும் வரை அவனது நடவடிக்கைகளை கபிலன் கவனித்து பார்த்ததில்,”இது நம்ம ஹரி இல்ல. முற்றிலும் மாறி போயிட்டான்” என்ற மனநிலையே அழுத்தமாக தோன்றியது. எது எப்படியோ!, இருட்டுவதற்குள் வேறு பகுதிக்கு ஹரியை பாதுகாப்பாக அழைத்து செல்ல நினைத்து வேகமாக கபிலன் கூட்டி சென்றான்.

குறிஞ்சிமலர் ஊருக்கு ஒதுக்குபுறமாக இரண்டு ஏக்கரில் உள்ள பூஞ்சோலை பங்களா மற்றும் அதன் சுற்றிய தோட்டம் அதன் பாதுகாப்பிற்கு சுற்றி எழுப்பபட்டிருக்கும் வேலி போன்ற தடுப்புச்சுவர். இதனை சிறு வயதிலிருந்தே கபிலன் தான் பாராமரித்து வருவான். வெளிநாட்டில் இருக்கும் முதலாளி டாக்டர் அரவிந்தன் வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் வந்து தங்கிவிட்டு போவார். அவர் அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு பெரிய ஆராய்ச்சியாளர். அவரது மனைவி மெலினா அவரோடு ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறார். இருவரும் காதல் திருமணம் செய்து அமெரிக்காவிலே வசித்தார்கள். மகன் ஹரியும் பிறந்து அங்கயே வளர்ந்து படித்து கொண்டிருந்தான். வெள்ளை நிறம்,மாநிற தலைமுடி,நடுத்தர உயரம்,20 வயதுள்ள இளைஞன் கார் ஓட்டுவதிலிருந்து,குதிரை சவாரி,நீச்சல் என அனைத்திலும் பயிற்சி பெற்றவன் ஹரி. சிறு வயதிலிருந்து ஆண்டுதோறும் அமெரிக்காவிலிருந்து, ஊருக்கு வந்த போது கபிலனுடன் குதிரை சவாரி செய்வது, காரில் மலைபகுதிகளில் சுற்றிய நாட்களும் உண்டு. ஆனால் அந்த நேரங்களில் அரவிந்தன் பங்களாவில் ஒரு அறையில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார். இவரின் ஆராய்ச்சி,புதிய மருந்து கண்டுபிடிப்பு அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த கண்டுபிடிப்புகளை தனியார்க்கு விற்றதில் பெரும் பங்கு லாபம் இவருக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு,நடு இரவில் பூஞ்சோலை பங்களாவிற்கு தனியாக ஒரு பெரிய பெட்டியோடு வந்து தங்கினார். அவர் வந்த போது உடன் மனைவியும்,மகன் ஹரியும் இல்லை. கடந்த மூன்று மாதங்களில் கபிலனை ஆராய்ச்சி அறைக்குள் நுழையவே அரவிந்தன் அனுமதிக்க வில்லை.

ஒரு சமயத்தில் கபிலன் பங்களாவை சுற்றிய தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது,ஆராய்ச்சி கூட அறையில் ஒரு உருவம் இருப்பது போன்றும்,அது உலவுவது போன்றும் ஜன்னல் வழியாக உருவத்தின் நிழல் தென்பட்டது. “திருடன் எவனோ,பங்களாவுக்குள் நுழைஞ்சுட்டான் போல” என்று மெதுவாக ஜன்னல் பக்கம் போய், ஜன்னல் கதவை திறந்து பார்த்தான். சிறு வெளிச்சம் அந்த ஜன்னல் வழியாக வருவதை பாரத்து,அந்த உருவம் ஜன்னல் பக்கம் வந்து நின்றது. எதற்கும் தயாராக கையில் தடி ஒன்றை வைத்து கொண்டே ஜன்னல் வழி கபிலன் பார்த்தான். ஜன்னல் வழியாக கபிலன் முகத்தை பார்த்த அந்த உருவம் பயந்து அலறியது. சட்டென்று நடுங்கியபடி ஜன்னல் வழி அந்த உருவத்தின் முகத்தை பார்த்த கபிலனுக்கு அதிர்ச்சியாகி போனான். நன்றாக பார்த்த போது தான், “அது ஹரி” என்ற முடிவுக்கு வந்தான். அவனை பார்த்த சந்தோஷத்தில், “டேய் ஹரி.எப்புடி இருக்க?,இங்க எப்ப வந்த ?” என்றான்.

அவன் எதுவும் பேசாமல் ஜன்னல் அருகே வந்து, “நீங்க யாரு” என்றான்.

“டேய்,என்ன தெரியலையா ?, நான்தான் கபிலன். உன் நண்பன்டா. உன்ன ஏன் டாக்டர் அடைச்சு வச்சுருக்காரு” என்றான்.

“என்ன சொல்ற ?, நான் அடைபட்டு கிடக்குறேனா ?” என்று குழப்பத்தில் ஹரி கேட்கும் போது,அறை கதவை திறந்து அரவிந்தன் உள்ளே வந்தார். அவர் வருவதை கவனித்தபடியே அமைதியாக நின்றான் ஹரி.

ஜன்னல் கதவு திறந்து,வெளிச்சம் வந்து கொண்டிருப்பதை கவனித்த அரவிந்தன் கோபபட்டு, “உன்ன யாரு,ஜன்னல் கதவ திறக்க சொன்னது. ஆபத்து மூடியே வை” என்று திட்டியபடி கதவை மூடினார். அவர் மூடிய அந்த நொடியில்,”கபிலன் எங்கே” என்று ஹரி தேடி பார்த்தான். அவன் அரவிந்தன் அறைக்குள் நுழைவதை பார்த்த போதே,அங்கிருந்து ஓடி, பங்களா முன் பகுதிக்கு வந்து சேர்ந்து,”ஹரியை ஏன் மறச்சு வச்சுருக்காரு. ஏதோ மர்மாம இருக்கு” என்று யோசித்தபடி எதுவும் தெரியாதவன் போல கபிலன் வேலையை தொடர்ந்தான். பின்பு எப்போதும் ஆராய்ச்சி அறையை அரவிந்தன் பூட்டிய படியே வைத்திருந்தார். அவர் இல்லாத போதும், இருந்தும் கவனிக்காத போதும் ஆராய்ச்சி அறை ஜன்னல் வழியாக ஹரியிடம் பல நாட்கள் பேச தொடங்கினான்.

“என்னய்ய ஞாபகம் இல்லைய்யா ?,உங்க அம்மாவுக்கு என்னாச்சு ?” என்றான் கபிலன்.

“எதுவும் தெரியலை.இதுக்கு முன்னாடி இங்க வந்த ஞாபகம் இல்ல” என்றான் ஹரி.

“ஒருவேளை இவனுக்கு எதாவது விபத்து நடந்து போய் மறந்து போய்ட்டானா ?” என்று நினைத்தபடி “ஏன் டாக்டர் எதுவும் சொல்ல மாட்டிகிறார் ?” என்றும் நினைத்தான்.

பலநாட்கள் ஜன்னல் வழியாக இருவரும் சந்தித்தனர். ‘எதற்கு அறையில் அடைந்து கிடக்கிறான். அவன் அம்மா பற்றிய ஞாபகம்’ என்று எதுவும் இல்லாமல் ஹரி கிடப்பது கபிலனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இன்று சந்தித்து பேச ஜன்னல் கதவை கபிலன் திறக்க, ஹரியும் வந்து,”என்னய வெளிய கூட்டிட்டு போக முடியுமா?,நீ சொல்லுற வெளி உலகம்,மலை,காடு எல்லாம் பார்க்கனும்” என்றான்.

“கொஞ்ச காத்திரு. நீ எதுக்கு இப்படி அடைஞ்சு கிடக்குற ?, உன் அம்மாவுக்கு என்னாச்சுன்னு நான் முதல்ல தெரிஞ்சுக்குறேன். அப்பறம் உன்ன சுதந்திரமா சுத்த விடுறேன்” என்று கபிலன் சொல்லி கொண்டிருக்க, சட்டென்று டாக்டர் அறைக்குள் வந்தார். ஜன்னலை பூட்டி விட்டு,ஒன்றும் தெரியாதவன் போல தள்ளி சென்று நின்றான் ஹரி. வெளியிலிருந்து ஐன்னலை மெல்ல திறந்து சிறு துவாரம் வழியாக நடப்பதை கபிலன் கவனித்தான். உள்ளே வந்தவர் ஹரிக்கு ஊசி போட்டு,அவனை படுக்க வைத்தபடியே ஸ்கேன் செய்து, அவனது இரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்து கொண்டே,செல்போனில் ஒருவரிடம் பேசினார்.  “சோதனை வெற்றிகரமா முடிய போகுது. இந்த சோதனையை என் மனைவிக்கு பண்ணி தோல்வியில முடிஞ்சது. இப்ப அப்படியில்ல. இன்னும் ஒரு நாள் தான் வெற்றிகரமா முடிய போகுது. எல்லாம் உன்னால தான். ரொம்ப சந்தோஷம்” என்று டாக்டர் பேசியது துவாரத்தின் வழியாக கவனித்த கபிலனுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. “அடப்பாவி புதிய மருந்துகளை கண்டுபிடிக்க பொண்டாட்டி மேல,மகன் மேல செலுத்தி சோதனை பண்ணுறனே!” என்று கடும் கோபமாக அரவிந்தனின் செய்கைக்கு முடிவு கட்ட யோசித்தவாறு முன் பகுதிக்கு வந்தான்.

ஆராய்ச்சி அறையை பூட்டி விட்டு,பெரு மகிழ்ச்சியோடு வெளியே வந்த அரவிந்தனிடம், “டாக்டர் என்னாச்சு,இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க ?” என்று பல்லை கடித்தபடியே கபிலன் கேட்டான்.

“என் வேதனை, துக்கம் எல்லாத்துக்கும் மருந்து கிடைக்க போகுது” என்றார்.

டாக்டரின் செயல் கபிலனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. எதையும் வெளிகாட்டாமல்,”நானும் உங்க கிட்ட மெலினா அம்மாவும்,ஹரியும் ஏன் வரலன்னு கேட்டேன். ஆனா நீங்க பதிலே சொல்ல மாட்டிறீங்கள!” என்றான்.

“அதுபத்தி அப்பறமா சொல்லுறேன்” என்று அங்கிருந்து தனது அறைக்கு சென்றார்.

கபிலனுக்கு டாக்டர் பேசிய விதம் பல எண்ணங்களை ஏற்படுத்தியது. “ஒருவேளை மருந்துவ சோதனையில் மனைவியை கொன்றிருப்பாரோ?” என்று நினைத்தான். பின் அதே மருந்தை மகன் மேல செலுத்தி சோதனை செய்யுறாரு போல,இந்த மருந்துனால அவன் பழைய நினைவுகளை இழந்திருப்பான் போல” என்ற பலவற்றை சிந்திக்க ஆரம்பித்தான்.

டாக்டர் அறையில் இருப்பதை உறுதி செய்து விட்டு,வேகமாக பின்புற ஆராய்ச்சி அறை பக்கம் போய் அறையின் மாற்று சாவி மூலம் திறந்து பார்த்தான். கதவு திறக்கவே உள்ளே சென்று பார்த்தான். சுருண்டு படுத்திருந்த ஹரியின் உடல் வெளிர் நிறமாக இருந்தது. அவன் வலியால் துடித்து,முனங்கிய படி கிடந்தான். அப்போது அறை கதவை திறந்து டாக்டர் உள்ளே வந்தார். அவரை பார்த்தவுடன்,அவர் கண்ணில் படாமல்  மெதுவாக மேஜை பகுதியில் கீழ் ஒளிந்தான். திரையால் மூடிய அந்த பகுதியில்,சிறிய பகுதியை திறந்தபடி நடப்பதை கபிலன் கவனித்தான். ஹரியை சோதனையிட்ட டாக்டருக்கு பெரும் மகிழ்ச்சி. மீண்டும் செல்போனில் ஒருவருக்கு பேசினார். ” ஹலோ மிஸ்டர் ஜென்” என்று அவர் ஆங்கிலத்தில் வெகு நேரம் பேசியது கபிலனுக்கு ‘என்ன பேசுகிறார்’ என்று புரியாமலே இருந்தது. வெகு நேரம் பேசிய பின்,மீண்டும் வேறு ஒருவருக்கு பேசினார். “நான் ஜெயிச்சுட்டேன்.என் புள்ளய்ய வச்சு உருவாக்குனது. இப்ப எனக்கு பெரிய புகழ் வர போது,ராயல்டி கிடைக்கும். அந்த குறிப்புகளை மெயில் பண்ணுறேன். சீக்கிரமா தயார் படுத்துங்க” என்று குதுகலத்தோடு பேசியதும்,ஹரியின் மோசமான நிலையையும் மறைவாக இருந்து கவனித்த கபிலனுக்கு டாக்டர் மீது கோபத்தை அதிகரித்தது. ‘டாக்டர் மோசமானவர்ன்னு நினைக்கவே இல்ல. ஹரியை காப்பாத்தி,டாக்டர் பணத்தாசைக்கு முடிவு கட்டுறேன்’ என்று நினைத்தபடியே பதுங்கி இருந்தான்.

டாக்டர் கதவை அடைத்து வெளியே செல்ல,மறைவிலிருந்த கபிலன் வெளியே வந்து,ஹரியை எழுப்பினான். அவனின் கை,விரல்,உடம்புகளில் மாட்டியிருந்த ஊசி குழாய்களை அகற்றி,குடிக்க தண்ணீர் கொடுத்து,அவன் நிதானத்தை அடைந்தவுடன், “உன்ன வச்சு உங்கப்பா பணம் சம்பாதிக்க போறாரு. உங்கம்மாவுக்கும் ஏதோ! மருந்து ஊத்தி சாகடிச்சுருப்பாரு. இப்ப உன் மேல மருந்து ஊசி போடவும், உனக்கு பழசு மறந்து நிக்கிற. இங்க இருந்தா! உன்னையும் கொன்னுடுவாரு. வா நான் உன்ன காபாத்துறேன்” என்றான் கபிலன்.
கண்ணீரோடு கபிலனை சில நொடி கட்டி பிடித்து,பின் அவனோடு ஹரி புறப்பட தயாரானான். மெதுவாக அறை கதவை திறந்து, டாக்டர் கவனிப்பதற்குள் வெளியே வந்து மலை பகுதிக்குள் ஓடினார்கள்.

ஹரியை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து கொண்டு போக, கரடுமுரடான ஆபத்தான பாதை வழியாக பயனித்து,வேறு பகுதியில் உள்ள தன் வீட்டிற்கு ஹரியை கபிலன் அழைத்து கொண்டு பயணமானான்.

பங்களாவில் சிறுது நேரம் கழித்து  அரவிந்தன் கவனித்த போது,ஆராய்ச்சி அறை கதவு திறந்திருந்தது, உள்ளே சென்று பார்த்த போது ஹரி இல்லாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “டேய் கபிலா!,கபிலா!” என்று கத்தியபடி பங்களாவை சுற்றி கபிலனையும்,ஹரியையும் தேடினார்.

இருட்டப் போகும் நேரம். எங்கு தேடுவது,”ஹரி எங்கு போனான்” என்ற குழப்பம், தற்காப்புகாக துப்பாக்கியையும் எடுத்து, வெளியே வந்து டார்ச் விளக்கு அடித்தபடியே தேட போனார். சுற்றி முற்றி தேடி இருட்டியது.

அந்த நேரத்தில்  கரடுமுரடான மலை பாதையில் செல்வது சிரமத்தை ஏற்படுத்தியது. ‘எந்த பக்கம் போவது’ என்ற பாதை தெரியாமல் தவித்தார். சட்டென்று அந்த பக்கமாக ஒருவர் வருவது தென்பட,அவரிடம், “சார்,இந்த பக்கமா ஒரு இருபது வயசு பையன் போறத பார்த்தீங்களா?” என்றார்.

அவர் தன் கை விளக்கினை உயர்த்தி பிடித்து அரவிந்தனின் முகத்தை பார்த்து, “பூஞ்சோலை பங்களா டாக்டர்ங்களா ?” என்றார்.

“ஆமாங்க. நீங்க யாரு” என்று பதட்டத்தோடும்,குளிர் நடுக்கதோடும் அரவிந்தன் சொல்ல, “ஏதோ,பிரச்சினை” என்று புரிந்து கொண்டவர், “நான் வீரா.உங்க பங்களாவுல வேல பாக்குற கபிலனுக்கு சொந்தம்” என்று சொல்லி,சிறிது யோசித்து,”கபிலன் கூட ஒரு பையன் போறத பார்த்தேன். எதாவது பிரச்சினையா” என்று சந்தேகமாக கேட்டார்.

“அட கடவுளே! கபிலன் கூடவா” என்று நினைத்து,அவரிடம் “எங்க போனாங்க” என்றார் அரவிந்தன்.

“எங்க போவானுங்க இந்த மலைக்கு பின்னால கபிலன் வீடு இருக்கு. அவன் அங்க தான் அந்த பையன கூட்டிட்டு போயிருப்பான்” என்றார் வீரா.

“சரி,நான் இப்ப உடனே, அங்க போகனும்.எனக்கு வழி காட்டுங்க” என்றார் அரவிந்தன்.

“டாக்டர், அந்த வழி அவ்வளவு ஈஸி இல்ல. அவனுங்க போய் இரண்டு மணி நேரத்துக்கு மேல இருக்கும். எதாவது ஜீப் இருந்தா கொண்டு வாங்க. ரோட்டு வழியா மலைக்கு அந்த பக்கம் போகலாம். அது சீக்கிரம் போகலாம்” என்று வீரா சொல்ல, “சரி வா” என்று அவனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து,பங்களாவுக்கு வந்து தனது காரை எடுத்து கொண்டு,உடன் வீரா வழிகாட்ட, கபிலன் வீடு நோக்கி போனார்கள்.

பல மணி நேரம் குறுக்கு பாதை வழியாக நடந்து வந்து,ஹரியை தன் வீட்டிற்குள் அழைத்து வந்தான் கபிலன்.

ஊரை விட்டு தள்ளி காட்டு பகுதிக்கு முகப்பில் இருந்த ஓட்டு வீடு. வீட்டை சுற்றி வேலி போட்டு வன விலங்குகள் ஆபத்தில்லாத வகையில் பாதுகாப்பாக வைத்திருந்தான்.

பல மாதங்கள் கழித்து வீட்டிற்குள் வருவதால், அட்டை பூச்சிகள், விஷ பூச்சிகள், பாம்புகளும் கிடந்தன.அதை பார்த்த ஹரி பயந்து நின்றான்.

“பயப்புடாத, இப்ப சுத்தம் பண்ணிருவேன்” என்று சொல்லியவாறு, உள்ளே இருந்த நாற்காலியை அவனுக்கு துடைத்து போட்டு, “இதுல கொஞ்ச நேரம் உட்காரு. இப்ப சுத்தம் பண்ணிடுறேன்” என்று உள்ளே சென்று வேகமாக சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.

பாம்புகளை அடித்து,பூச்சிகளை நசுக்கி வெளியே போடுவதை பாரத்த ஹரி சற்று பயந்தான். லேசாக மழை தூரல் விழ ஆரம்பிக்க, “உள்ள வா,அவ்வளவு தான்” என்று சந்தோஷமாக கபிலன் அழைக்க,சட்டென்று கார் வந்து நின்றது. கார் விளக்கு வெளிச்சத்தில் கண் குசியபடி, “யாரென்று” ஹரி கவனிக்க,கார் சத்தத்தை கேட்டவுடனே, “இது நம் முதலாளி டாக்டர் அரவிந்தன் கார் சத்தம். அவர் தான் வந்துட்டாரு” என புரிந்து, காரை வேடிக்கை பார்த்த ஹரியை இழுத்து, “வா ஓடி போயிடலாம். உங்க அப்பா உன்ன கொன்னுடுவாரு” என்று கத்தினான்.

“டேய்,ஓடாத நில்லுடா” என்றவாறு வலது பக்க கார் கதவு திறந்து அரவிந்தன் இறங்க, இடது பக்க கதவு திறந்து இறங்கி,வேகமாக ஓடி ஹரி கையை பிடித்தான்.
“வீரா அண்ணே! எங்கள விடுங்க” என்றவாறு கபிலன் அவரை பார்த்தான்.
“ஏன்டா! லூசு,டாக்டர் மகனை இப்புடியா கூட்டிட்டு வருவ ?, அந்த மனுஷன் பதறிட்டாரு” என்றபடி ஹரியின் கை பிடித்து டாக்டரிடம் அழைத்து போனான் வீரா.

“அண்ணே! அவரு ஹரிய கொன்னுடுவாரு” என்றான் கபிலன்.

“பெத்த புள்ளைய அவரா கொல்லுவாரு ?” என்றான் வீரா.

பதட்டத்தில், “ஆமாண்ணே!,அவர் புதுசா மருந்து கண்டுபிடிக்கிறேன்னு பொண்டாட்டிய கொன்னுட்டாரு. இப்ப இவன் மேலயும் ஊசி போட்டு,பழச மறக்கடிச்சுட்டாரு. இப்ப இவன எங்கயோ,விக்க போறாரு.அதான் இவன காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தேன்” என்று கபிலன் வீராவிடம் சொல்லி கொண்டிருக்க, வேகமாக வந்து கபிலனின் கன்னத்தில் ஓங்கி இரண்டு அறைவிட்டு, “முட்டா பயலே! எதுவும் தெரியாம, இப்படி பண்ணாத.உனக்கு எது சொன்னாலும் புரியாது” என்று கபிலனை திட்டி, ஹரியின் கையை பிடித்து இழுத்து கொண்டு கார் நோக்கி நடந்தார்.

“டாக்டர் ஹரிய விடுங்க” என்று ஓடி பிடிக்க முயல, தூரல் மழையில்,சட்டென்று வழுக்கி அவர்கள் முன்னால் விழுந்தவாறே டாக்டர் காலை பிடித்து நகர முடியாதபடி இறுக்கினான் கபிலன்.

நடப்பதை மழையில் நனைந்தவாறே, புரியாமல் வீரா வேடிக்கை பார்க்க, “அப்பா,என்ன விட்டுருங்க” என ஹரி அழுது, கையை விட சொல்லி உதறினான்.

“ஹரி, இந்த கிறுக்கன் பேச்சை கேட்டு தப்பா முடிவு பண்ணாத.  சொன்னா கேளு” என்று காலால் ஓங்கி கபிலனை உதை உதைத்து தள்ளி, ஹரியின் கை பிடித்து காரில் ஏற்றி, கதவை அடைத்து பூட்டினார் அரவிந்தன்.

அவன் என்ன செய்தென்று தெரியாமல் கண்ணீர் வடித்தபடி, ஹரி உள்ளே இருந்தான்.

சுருண்டு விழுந்த கபிலனை, வீரா வேகமாக வந்து தூக்கினான்.
கபிலன் எழுந்து, வேகமாக ஓடி, டாக்டரை  தாக்கி தள்ளினான்.பின் கார் கதவை திறக்க முயன்று முடியாமல் போக, பக்கத்திலிருந்த ஒரு மரகட்டை எடுத்து வந்து பூட்டியிருந்த கார் ஜன்னல் கதவை கட்டையால் அடித்து நொறுக்கினான்.

தட்டுதடுமாறி எழுந்த டாக்டர், கோர்ட் பாக்கெட்டிலிருந்த துப்பாக்கி எடுத்து கபிலன் கையில் சுட, அவன் கட்டையை கீழே போட்டு வலியால் துடித்தான்.
பின்னிருந்து வீரா கட்டையால் ஓங்கி டாக்டர் தலையில் அடிக்க, கலங்கி டாக்டர் கீழே விழுந்தார்.

வேகமாக ஓடி, கீழே விழுந்து கிடந்த கபிலனை தூக்க ஓடினான் வீரா.

மழை தூரலில் தலையில் அடியால் ஏற்பட்ட இரத்ததமும் கலந்து மண்ணில் விழுந்து ஓட,கீழே விழுந்தபடியே, அரவிந்தன் லேசாக தலையை பிடித்தவாரே மெல்ல, துப்பாக்கியால் சுட முதல் குண்டு காரின் வலது புற சக்கரத்தில் பட்டது. மீண்டும் சுட கபிலனை பிடிக்க போன வீரா காலில் குண்டு பட்டு அருகிலிருந்த மரத்தில் மோதி விழுந்தான்.

காரிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தபடியே ஹரி கதறினான்.

சில நொடிகளில் மழை விட்டு, உயர்ந்த மரங்களின் இலை வழியாக மழைதுளிகள் கீழே, சிறு சிறு குட்டையாக தேங்கிய நீரில் விழுந்த சப்தம் கேட்டது. இருளில் பூச்சிகள்,வண்டுகள் சத்தமும் கேட்டது. கார் விளக்கு வெளிச்சத்தால் அந்ந இடம் மட்டும் இருள் சூழாமல் இருந்தது.

மெல்ல மெல்ல தலையை பிடித்தவாறு எழுந்து வந்து காரின் கதவு பக்கத்தில் சாய்ந்தவாறு கிடந்த கபிலனிடம், “டேய் கிறுக்கா,என்ன எதுன்னு தெரியாம ஏன் இப்படி மடத்தனமா பண்ணுற” என்று சொல்லியவாறு வலி பொறுக்க முடியாமலும், நிலை தடுமாறி அவன் பக்கத்திலே விழுந்து, தட்டு தடுமாறி காரில் சாய்ந்தார். வீராவும் எழுந்திருக்க முடியாமல் அப்படியே மயங்கி கிடந்தான்.

“டாக்டர், ஹரிய உயிரோட விட்டுருங்க” என்றான் கபிலன்.

“ஹரி செத்துட்டான்டா லூசு” என்றபடி வலி பொறுக்க முடியாமல் அரவிந்தன் தவிக்க, அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக பார்த்தான் கபிலன்.

உடைந்த கண்ணாடி வழியே, அரவிந்தன் பேசுவதை கவனித்தான் ஹரி.

வலியை பொறுத்து மெல்ல, “டேய்,நிம்மோரியா வைரஸ் என் மனைவிக்கு இருந்தது. அந்த வைரஸால நாற்பது வயசுக்கு மேல பாதிக்கபட்டா. அதே வைரஸ் ஹரிக்கும் இருந்திருக்கு. இது ஜெனடிக் மூலமா வரும் வைரஸ். இதுக்கு சீக்கிரம் மருந்து கண்டுபிடிச்சு அவங்கள குணப்படுத்த முயற்சி செய்து தோல்வியில முடிஞ்சது. என் மனைவி,மகன் இரண்டு பேரும் இறந்து போனாங்க.

என் மனைவி,மகன் மரபணுவ எடுத்து முதல்ல  குளோனிங்க் மூலம் அவங்கள உருவாக்கினேன். ஆனா அந்த வைரஸ் குரோமோசோம் மூலம் குளோனிங் உடம்புலையும் வைரஸ் வளர ஆரம்பிச்சது. அதில இருக்குற வைரஸ்களை கட்டுபடுத்தி அழிக்க புது புது மருந்துகளை கண்டுபிடிச்சு  அவங்களுக்கு செலுத்தி சோதனை பண்ணினேன். அது நடக்கும் போதே,” என்று அவர் சொன்ன போது,கண்ணீர் வடிய உடைந்த கார் ஜன்னல் வழியாக அப்பாவை நினைத்து ஹரி அழுதான்.

கண்கள் சொறுகி,தலை முழுவதும் இரத்தம் வடிந்த நிலையில், “என் மனைவியோட சில மரபணுவை வச்சு அவள மாதிரியே இன்னும் மூன்று உருவாக்கினேன். இருக்குற குளோனிங் எல்லாத்துலையும் மருந்து செலுத்தி சோதனை பண்ணினேன். வைரஸ் அழியவே இல்ல. எல்லா குளோனிங்கும் அழிஞ்சது. மீதம் இருந்தது என் மகன் மரபணு தான் அதுலையும் குளோனிங் உருவாக்கி, மருந்து கண்டுபிடிக்க தான் இங்க வந்து முயற்சி பண்ணினேன். அது இன்னக்கி வெற்றி அடைஞ்சது. இந்த வைரஸால பல நாட்டுல மக்கள் பாதிக்கபட்டிருக்காங்க. அவர்களை காப்பாத்தவும், கண்டுபிடிச்ச இந்த மருந்தை இலவசமா எல்லாருக்கும்  கிடைக்க ஏற்பாடுகள் பண்ணனும். ஆனா அதுக்குள்ள நீ! இப்படி பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கல” என்று கபிலனை பார்த்து சொன்னார் அரவிந்தன்.

“என்ன மன்னிச்சிடுங்க டாக்டர்” என்றவாறு நீட்டியிருந்த அரவிந்தனின் காலை பிடித்தான் கபிலன்.

தலை வழி இரத்தம் வடிந்து முகம் முழுக்க இருந்தது. மெல்ல மெல்ல மூச்சு விட்டபடி, “இருபது வயதுடைய ஹரி மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது அறிவும், சிந்தனையும் அப்படியே ஹரி மாதிரி இருக்கும். நடை,உடையில வித்தியாசம் இருக்கும். ஆனா இவன் என் பிள்ளை தான். கடைசி வரை என் பிள்ளை கூட இருக்க முடியல. ஆனா,அவனால வந்தவன் கூடயாவது இருக்க நினைச்சேன். இப்படி முட்டாள் மாதிரி பண்ணிட்டீயே” என்றபடி கார் சாவியை கபிலனிடம் நீட்டி, கதவை திறக்க சமிஞ்கையில் சொன்னார் அரவிந்தன்.

கபிலன் சாவியை வாங்கி மெதுவாக எழுந்து கதவை திறக்க, ஹரி வெளியே வந்து, அவர் அருகில் அமர்ந்து, “அப்பா…..அப்பா…” என்று அழ ஆரம்பித்தான்.

அரவிந்தன் காதிலிருந்து இரத்தம் வர ஆரம்பித்தது. ஆனாலும் ஹரி தோளில் சாய்ந்தபடி, “அழுகாத” என்றபடி கண்களை மூடியபடியே அரவிந்தன் இறந்து விழுந்தார்.

“அப்பா…..அப்பா….” என்று கட்டி தழுவி கதறி அழுதபடி ஹரி துடிக்க,மலை பகுதியில் முன்பு துப்பாக்கி சுட்ட சத்தம் கேட்டு வனதுறை அதிகாரிகள் சிலர் தேடி, கார் வெளிச்சம் பார்த்து அங்கு வந்து சேர்ந்தனர்.

 

 

 

உறுத்தல்

ஸிந்துஜா

அங்கிள் நீங்க யங்கா இருந்தப்போ எல்லாரையும் படுத்தி எடுத்திருப்பீங்கல்லே?

சித்ராவின் முகத்தில் படர்ந்திருந்த குறும்பையும் சிரிப்பையும் பார்த்து சுவேதாம்பரத்துக்கும் சிரிப்பு வந்தது. ஜன்னல் வழியாக வெளியிலிருந்து ஓடி வரும் காற்றையும் இளம் வெய்யிலையும் சவாலுக்கு அழைப்பவள் போல அப்படி ஒரு இனிமையைத் தன்னைச் சுற்றி எறிந்து கொண்டிருக்கிறாள் அவள் என்று அவர் நினைத்தார்.

ஏன் அப்படிச் சொல்றே சித்தி?

ஆமா. நான் உங்களுக்குச் சித்தி! நல்ல வேளை பாட்டின்னு கூப்பிடாம இருக்கீங்களே என்று முகத்தை நொடித்துக் காட்டிக் கொண்டாள்.

சித்ரான்னா ஆன்னு வாயைத் திறக்கணும். பார்யா இவ்வளவு வயசுக்கு அப்புறமும் வாயைப் பொளக்கறான்னு பேர் வாங்கணுமா? சித்தின்னா ஸாப்டா இருக்கே. அதை விடு. இன்னிக்கு டாக்டர் வந்ததும் முதல்லே கம்ப்ளெய்ன்ட் பண்ணிடனும்.

என்னன்னு?

உங்க நர்ஸ் வம்புக்கு ரொம்ப அலையறான்னுதான்.

பேச்சை மாத்தாதீங்க. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க.

முதல்லே நீ ஏன் என்கிட்டே அப்படிக் கேட்டேன்னு சொல்லு.

ஆமா. உங்களைப் பாத்துக்கன்னு பெசலா எனக்கு டூட்டி போட்டிருக்காரு டாக்டர். ஆனா நீங்க எங்கே என்னை வேலை செய்ய விடறீங்க? தண்ணி குடிக்கணும்னா என்னயதானே கூப்பிடணும்? படார்னு கட்டில்லேந்து எறங்கி நடந்து போயி டேபிள் கிட்டே இருக்குற வாட்டர் ஜக்குலேந்து எடுத்துக் குடிக்கிறேன்னு சட்டை
யெல்லாம் நனைச்சிகிட்டு…

கிழவர் அவளை இடைமறித்து அந்த ஜக்கோட வாய் உடஞ்சு போயிருக்கு. முதல்லே ஒரு புது ஜக் வாங்கி வை என்றார்.

அதே மாதிரி பாத்ரூம் போகணும்னா என் கிட்டே சொன்னா ஜோசப் தம்பிய வரச் சொல்வேன்லே. அவன் வந்து கூட்டிட்டு போறதுக்குப் பதிலா நீங்களே தனியாப் போறீங்க. ‘அப்படியெல்லாம் தனியாப் போகக் கூடாது, நீ போக விடக்கூடாது’ன்னு
உங்களையும் வச்சுட்டுதானே டாக்டர் என்கிட்டே சொல்லிட்டுப் போனாரு. நீங்க
எங்கே கேக்கறீங்க? அதுக்குதான் நீங்க யங்கா இருந்தப்போன்னு… கேட்டேன்.

அவள் முகத்தில் இருந்த கனிவுக்கும், வார்த்தைகளில் நடமாடிய பொய்க் கோபத்துக்கும் இருந்த வித்தியாசத்தைக் கிழவர் கவனித்துச் சிரித்தார்.

உனக்கும் என் பொண்ணுக்கும் என்ன வித்தியாசம்? எப்பப் பாத்தாலும் என்னைக் கண்ட்ரோல் பண்ணிண்டு…

“ஐயோ, அக்கா எவ்வளவு பெரியவங்க? லண்டன்லே போயி பெரிய படிப்பு எல்லாம் படிச்சிட்டு வந்தவங்க. டெல்லியிலே பெரிய வக்கீல் கம்பனியிலே இருக்கறாங்க. நான் யாரு? ஒரு சுண்டக்கா. மதுரையிலே முக்கி முனகி பத்தாங் கிளாஸ் வரை படிச்சிட்டு இப்ப இங்க வந்து ஆயா வேலை பண்ணிக்கிட்டு இருக்கறவ.

இருந்தா என்ன? அவளுக்கு சாத்துக்குடி ஜூஸ் பிழிஞ்சு தரத் தெரியுமா? வலிக்காம ஊசி போடத் தெரியுமா? நான் தூங்கறச்சே அதோ அந்தச் சேர்லே உக்காந்துண்டு ராத்திரி பூரா தூங்காம இருக்கத் தெரியுமா?

அக்கா வக்கீலா நீங்க வக்கீலான்னு எனக்கு சந்தேகம் வருது என்று சிரித்தாள் சித்ரா. இப்பவும் பேச்சை மாத்திக்கிட்டே போயி நான் மொதல்லே கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாம இருக்கீங்க பாத்தீங்களா?

என்னது? நான் மத்தவங்களைப் படுத்தி எடுத்தேனாவா? மத்தவங்க என்னைப்
படுத்தாமா இருந்தா போறாதா?

அம்மாவைப் போட்டு ஆட்டி வச்சிருப்பீங்க.

என்னைக் குரங்காட்டிங்கறே.

ஐயையோ. நான் சொன்னது தப்பு தப்பு. ரொம்பத் தப்பு. நீங்க எவ்வளவு பெரியவரு. சாரி, சாரி.

எதுக்கு இப்படிப் பதர்றே? நானும் உன்னை மாதிரி ஜாலிக்குதானே சொன்னேன். என் ஒய்ப் ரொம்ப சாது. பக்கத்துத் தெருலே இருக்கற காய்கறிக் கடைக்குப் போறதுக்குக் கூட நான் வரணும்பா. நகையோ புடவையோ எது வாங்கினாலும் என் செலக்க்ஷன் வேதத்துக்கு முக்கியம். நான்தான் ஏதோ வேலை அது இதுன்னு முட்டாள் மாதிரி வெளியிலே அலைஞ்சிண்டு கிடந்தேன். ஷீ வாஸ் எ நைஸ் ஸோல். அதான் சீக்கிரம் கூட்டிண்டு போய்ட்டான்.

கிழவர் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டவர் போலப் பேச்சை நிறுத்தி விட்டார்.

சித்ராவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நாளக்கி சாவியோட பர்த்டே. ஞாபகம் இருக்கோல்லியோ?

ஓ மை காட். மறந்தே போயிட்டேன்டி வேதம். நல்ல வேளையா ஞாபகப்படுத்தினியே. இதைக் காலம்பறயே சொல்லியிருக்க மாட்டியோ? இப்ப அவனவன் எட்டு மணிக்குக் கடையைப் பூட்டிண்டு போக ஆரமிச்சிடுவான்களே. சரி சரி கிளம்பு.

எங்கே? எந்தக் கடைக்கு?

குழந்தை வாட்ச் வேணும்னு கேட்டுண்டு இருந்தாளே. மந்த்ரி மால் போகலாம் வா. ஷாப்பர்ஸ் ஸ்டாப்லே வாங்கிடலாம்.

இந்த மாதிரியா? என்று அங்கிருந்த மேஜையைத் திறந்து ஒரு சிறிய கறுப்பு நிற வெல்வட் பையை எடுத்து அவரிடம் தந்தாள்.

உள்ளே சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் கறுப்பு டயலுடன் தங்க முலாம் பூசப்பட்ட வாட்ச் படுத்திருந்தது.

அவர் வேதம் நீ பெரிய ஆள்டி என்றார்.

இப்படியே பேசிண்டு எப்பவும் ஆபீசைக் கட்டிண்டு அழுங்கோ. நாளைக்கு ஆறு மணிக்கு அவ பிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டிருக்கா. நீங்க அஞ்சறை மணிக்காவது வந்துடுங்கோ.

நிச்சயமா என்றார் சுவேதாம்பரம். ஆனால் வழக்கம் போல் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. ஐந்து மணிக்கு வீட்டுக்குப் போன் செய்தார்,

போனை எடுத்த வேதம் நீங்க வரலேன்னு சொல்லப் போறேள் இல்லையா? ஸ்கூல்லேந்து வந்த உடனேயே குழந்தை சொல்லிட்டா நீங்க வரமாட்டேள்னு.

அவர் சமாதானம் சொல்ல முயன்ற போது போன் எதிர்முனையில் வைக்கப்பட்டு விட்டது.

அப்போது அறைக்குள் யாரோ வரும் சத்தம் கேட்டு இருவரும் ஏறிட்டுப் பார்த்தனர்.

சித்ரா வந்தவனைப் பார்த்து குட் மார்னிங் சேகர் சார் என்று புன்னகை செய்தாள். கிழவரின் மகன்.

கிழவர் திரும்பிப் படுத்துக் கொண்டார்.

அவன் கட்டிலைச் சுற்றி வந்து “குட்மார்னிங் டாட்” என்றான்.

கிழவர் அவனிடம் எதுக்குடா இவ்வளவு சீக்கிரமா வந்துட்டே? என்று கேட்டார். சுவரில் தொங்கிய கடிகாரத்தைப் பார்த்து. எட்டு மணி கூட இன்னும் ஆகலையே.

சாவித்திரி அக்கா மத்யான ப்ளைட்லே வரா. பவானி மாமி லஞ்சுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவா காய்கறில்லாம் வாங்கிக் குடுத்துடுன்னு சொன்னா. அதுதான் சீக்கிரமா வந்து ஃப்ரேக்பாஸ்ட் கொடுத்துட்டு மார்க்கெட் பக்கம் போனேன்னா பத்தரை பதினொன்னுக்கு இங்க திரும்ப வந்துடலாம்னு… என்றான் அவர் பையன்.

அவ எதுக்குடா இப்ப இங்க ஓடி வரா? கால்லே நெருப்பைக் கட்டிண்டு? எவ்வளவு நாள் இருக்கப் போறாளாம்?

அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை.

இன்னிக்கி ராத்திரி ஃப்ளைட்டா? சொல்லேன்.

அவன் தயங்கியபடி நாளைக்குக் காத்தாலே திரும்பிப் போறா

ஓ, ரியல் ஃப்ளையிங் விசிட் என்று கிழவர் சிரித்தார். அவர் குரலில் இருந்த ஏளனம் ஆளை அடிப்பது போல இருந்தது.

உன்னையே ஏண்டா நீ பழி மாதிரி இங்க வந்து விழுந்து கிடக்கறேன்னு சொல்லிண்டு இருக்கேன். காலம்பரம் சாயந்திரம்னு வந்து வந்து உக்கார்றே, ஆபீசுக்குப் போய் வேலையைப் பாருங்கிறேன். காதிலேயே வாங்காம இருக்கே.

உங்களைப் பாத்துக்கறதை விட வேறே என்ன பெரிய வேலை எனக்கு?

ஏய் சித்தி, சிவாஜி கணேசன் வசனம் பேசறான். கேட்டுக்கோ.

சித்ரா புன்னகையுடன் அவரருகே வந்து அங்கிள் அவர் சொல்லுறது சரிதானே என்றாள்.

ஓ, சேம் சைட் கோல் போடுறியா. பரவாயில்லே. பாத்துக்கறேன்.

சேகர் சித்ராவைப் பார்த்து எட்டரை எட்டே முக்காலுக்குதானே சாப்பிடுவாரு? நீங்க கொஞ்சம் ஹெல்ப்…

கிழவர் அவனைப் பார்த்து ஓகே. ஓகே. பை பை என்றார். அவர் பார்வையில் தெரிந்த வெறுப்பை சித்ரா கவனித்தாள். இதற்கு முன்னால் நாலைந்து தடவை இந்தப் பார்வையை அவள் கவனித்திருக்கிறாள். முதல் தடவை அதிர்ச்சியாக இருந்தது. இப்போது லேசாகப் பழகி விட்டது.

சேகர் ஒன்றும் பேசாமல் வெளியே சென்றான்.

அங்கிள் அவரு ஒண்ணும் தப்பா சொல்லலியே. எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோவம்?

கிழவர் சில வினாடிகள் பேசாமல் இருந்தார்,

கார்த்தாலேந்து தலைவலி மண்டையைப் பொளக்கறதுன்னயே வேதம். அதை வச்சுண்டே சமையலையும் முடிச்சிட்டே. போய் கண்ணை மூடிண்டு அக்கடான்னு கொஞ்ச நாழி படுத்துக்கோயென்.

இன்னிக்கி சேகர் கிளாஸ்லே பி.டி. மீட்டிங். இந்தத் தடவை கொஞ்சம் போயிட்டு வந்துடறேளா? போன தடவையே வரலேன்னு அவன் டீச்சர் ரொம்பக் கோவிச்சிண்டா. ப்ளீஸ்.

அங்க அவ ரோல் நம்பர் படின்னா வரிசைலே நிக்கச் சொல்லிக் கூப்பிடுவா! இவன் பேர் வரதுக்கு ரெண்டு மணி நேரம் ஆகுமே. எனக்கு இன்னிக்கி ஆடிட்டர்ஸ் வேறே வரான்கள்.

அதுக்காக இவன் பேரை ஆராவமுதுன்னோ அன்பழகன்னோ மாத்திடலாமா? மொத்த மீட்டிங்கே ஒரு மணி நேரத்திலே ஆயிடும். உங்க ஆடிட்டர்ஸ் ஒரு மாசம் இருக்கப் போறா. ஒரு மாசத்துக்கு அவா மூஞ்சியைத்தான் நீங்க பாத்துண்டு அலையணும். இன்னிக்கி மாத்திரம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போங்கோ.

சரி, நீ இந்த மாசமும் பேரென்ட் டீச்சர் மீட்டிங் போக வேண்டாம். சேகரோட டீச்சருக்கு போன் பண்ணி உனக்குத் தலைவலி இல்லாட்டா ஜொரம்ன்னு சொல்லிடு.

அது எங்களுக்குத் தெரியாதாக்கும். அங்க ஸ்கூலுக்கு வரவாளைப் போய்ப் பாருங்கோ. முக்கால்வாசி குழந்தைகளோட அப்பாதான் வந்து நிக்கறா. உங்களுக்கு அப்படி என்னதான் கூச்சமோ? நாலு பேரைப் பாத்து நின்னு பேசிட்டு வரதுக்கு. சரி இந்தத் தலைவலியோடையே நான் போறேன். இன்னிக்கி சாயந்திரம் வேறே டியூஷனுக்குக் கூட்டிண்டு போயிட்டு வரச்சே டென்த் கிராஸ்லே டெயிலர் கிட்டே அவனைக் காமிச்சு தீபாவளி டிரஸ்ஸுக்கு அளவு குடுக்கணும்.

கிழவர் சித்ராவைப் பார்த்து என்ன கேட்டே? நான் ஏன் சேகரைக் கோவிச்சுக்கிறேன்னா? எனக்கு என்னைக் கண்டாலே வெறுப்பாயிருக்கு. இது என்ன லைஃப்? பிறத்தியார் கையை எப்பவும் எதிர்பாத்துண்டு? நான் எப்பவும் யாரையும் எதிர்பாக்காமதானே இத்தனை நாள் காலத்தைத் தள்ளிண்டு வந்திருக்கேன்?

அப்போ ஸ்டிராங்கா இருந்தீங்க. இப்ப அப்பிடியா? என்றாள் சித்ரா கனிவு நிரம்பிய குரலில்.

கிழட்டுப் பயலேன்னு செல்லமா கூப்பிடறே, இல்லே?

அவள் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியை அவர் ரசித்தார்.

அவள் ஏதோ சொல்ல வாயைத் திறந்த போது நான் விளையாட்டுக்குதான் சொன்னேன். எனக்கு உன்னைத் தெரியாதா? உங்கிட்டே நான் ஒண்ணு சொல்லட்டுமா? எம்பது வயசு என்னைக் கட்டிப் போட்டிருக்குன்னு எல்லாரும் நினைக்கிறான்கள். நிஜமாவே நான் கட்டுண்டா கிடக்கேன்? இல்லியே. நடந்தாதான் நடமாட்டமா? என் மனசு இன்னும் நூறு மைல் வேகத்திலே வேலை செய்யறது. வேதம் இருந்தாள்னா கையாவும் காலாவும் இருப்ப. அதுக்குதான் எனக்குக் கொடுத்து வைக்கலையே.

சித்ரா என்ன பதில் சொல்வது என்று குழம்பியவளாய் மௌனத்தைக் கடைப்பிடித்தாள்.

காரில் வரும் போது சாவித்திரி தம்பியிடம் ஹவ்’ஸ் தி ஓல்ட் மான்? என்று கேட்டாள்.

சாலையிலிருந்து பார்வையை எடுத்து சேகர் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

சரி, சரி. கோவிச்சுக்காதே. ஹவ்’ஸ் தி பாஸ்?

சேகர் அவர் உடம்பு பத்து நாளைக்கு முன்பு இருந்ததை விட இப்போது குணமடைந்திருக்கிறது என்றான்.

ஆனா என் தலையைப் பாத்தவுடன் ஒரு கோப மூஞ்சியை எடுத்து மாட்டிக்கறார்

நீ தினமும் அவரைப் போய்ப் பாத்துக்கிறியேடா!

எதுக்கு வரேன்னு திட்டறார்.

வராம இருந்தா நன்னி கெட்டவங்கள்னு திட்டுவாரே

தெரியலே அக்கா. ஆனா வேறே யார் இருக்கா அவரைப் போய்ப் பாத்துக்கறதுக்கு? இப்ப நீ வரப் போறேன்னு சொன்னவுடனே அவ எதுக்கு இப்ப ஓடி வரான்னு கேட்டார்.

வராதேங்கிறாரா?

வந்துட்டு இன்னிக்கி ராத்திரியே ஓடிப் போறதுக்கு எதுக்கு வரணும்னு கேட்டார்.

நான் பத்து நாள் லீவு போட்டுத் தங்கிட்டுப் போலாம்னுதான் வந்திருக்கேன் என்றாள் சாவித்திரி.

ஓ வெரி குட். ஆனா நீ நாளைக்கே திரும்பனும்னு போன்லே சொன்னியே. நானும் அதைத்தான் அவரிடம் சொன்னேன்.

இல்லே. எனக்கு மனசு கேக்கலே. எப்பப் பாரு என்ன சதா வேலையைக் கட்டி அழுதுண்டுன்னு அம்மா சொல்லுவாளே. அது எனக்கும் தோணிடுத்து. அப்பாவோட கொஞ்ச நாள் இருக்கணும்.

சேகர் இப்போதைக்கு அந்த நர்ஸ் சித்ராதான் அவரைக் கட்டி மேய்க்கிறா. அப்படியும் யார் பேச்சையும் கேக்காம எழுந்து எழுந்து ஒடிண்டு எல்லாக் காரியத்தையும் தானே செய்வேன்னு பிடிவாதம் பிடிக்கறார். முந்தா நாள் மத்தியானம் நான் ஆபீசுக்குப் போகணுமா இருந்தது. குவார்ட்டர்லி போர்டு மீட்டிங்னு. நான் இல்லாததைப் பாத்துட்டு வாக்கிங் போறேன்னு ரூம் வாசல்லேந்து இறங்கிட்டாறாம். எல்லாரும் அப்பிடியே பதறிப் போயிருக்கா. அவரோ வெளியிலே போகணும்னு ஒரே அடம். சித்ராவுக்கு அழுகையே வந்துடுத்தாம். அவர் கிட்டே அங்கிள், நீங்க உள்ளே போகலேன்னா நான் பெர்மனெண்டா இந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியேதான் போகணும்னா பாரேன். ஒரு மறுபேச்சு இல்லாம உள்ளே போயிட்டாறாம்” என்றான்.

அவருக்குள்ளே எதோ நடந்துண்டு இருக்கு. அது என்னன்னுதான் நமக்குத் தெரியலே. நாம சாயந்திரம் நாலு நாலேகாலுக்குப் போகலாமா?

இல்லேக்கா. சாப்பிட்டுட்டு நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் அவருக்கு லஞ்ச் எடுத்துண்டு போய்க் கொடுத்துட்டு அங்கே இருக்கேன். நாலு மணிக்கு ஆத்துக்கு வந்து உன்னைக் கூட்டிண்டு போறேன்.

மாலையில் அவர்கள் ஆஸ்பத்திரியை அடைந்த போது சுவேதாம்பரத்துக்கு சித்ரா சாத்துக்குடி ஜுஸ் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்தது. சித்ரா வாங்க அக்கா. நல்லா இருக்கீங்களா என்று விசாரித்தாள்.

சாவித்திரி அவரது படுக்கையின் அருகில் சேரைப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள்.

எப்படி இருக்கேப்பா என்று கேட்டாள்.

அதான் பாக்கறையே அனந்தசயனத்தை. அது சரி. நீ எதுக்கு குண்டாங் குண்டான்னு அவ்ளோ தூரத்திலேந்து ஓடி வந்திருக்கே. ப்ளேன் சார்ஜ் போட்டுண்டு.

உன்னை இருந்து பாத்துட்டுப் போகலாம்னுதான் என்று சிரித்தாள் சாவித்திரி.

இன்னிக்கு வந்துட்டு நாளைக்குத் திரும்ப ஓடறதுக்கு, இல்லே?

இல்லே. ஒரு பத்து நாள் இருந்துட்டுதான் போவேன்.

அவர் திடுக்கிட்டு அவளைப் பார்த்த மாதிரி இருந்தது.

உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா?

என்னப்பா, என்ன சொல்றேள்?

அவள் திகைப்புடனும் சந்தேகத்துடனும் அவரைப் பார்த்தாள்.

அவர் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. அவள் பார்வை அவரைச் சற்று உலுக்கியது.

இல்லேடி. பொட்டுண்டுவை யார் பாத்துப்பா? மாப்பிள்ளைக்கு குழந்தையைப் பாத்துக்க என்ன தெரியும்?

அவர் குரல் அவருக்கே சமாதானமாக இல்லை.

ஏன் அல்கா தீதிதான் வீட்டோட இருக்காளே? நா ஆபீஸ் வேலையா பாம்பே கல்கத்தான்னு போறச்சே அவதானே குழந்தையைப் பாத்துக்கறா?

அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேண்டாம் நீ. இங்க என்ன பாழாப் போறதுன்னு கிளம்பி வந்தேன்னு நினைச்சிண்டு இருக்கேன். பத்து நாள் இருக்காளாம். ஆஸ்பத்திரி டூட்டிக்கா? இதோ இந்த சித்ரா இங்கே இருக்காளே. நீ மொதல்லே நாளைக்கு கிளம்பப் பாரு.

அவர் நிர்தாட்சண்யமாக அவ்வாறு பேசியது சாவித்திரிக்கு மட்டுமல்ல, சேகருக்கும் சித்ராவுக்கும் கூட விசித்திரமாக இருந்தது.

அப்போது அறைக்குள் டாக்டர் வந்தார் என்ன கலாட்டா இங்கே என்றபடி. அவர்கள் பேசியதை அவர் கேட்டுக் கொண்டுதான் வந்திருக்க வேண்டும். சாவித்திரியைப் பார்த்ததும் “எப்போ டெல்லிலேந்து வந்தே? குழந்தை ஹஸ்பென்ட் எல்லாரும் எப்படியிருக்காங்க?” என்று கேட்டார்.

சாவித்திரி அவருக்கு வணக்கம் செலுத்தியபடி எல்லாரும் சௌக்கியம்தான் டாக்டர் என்றாள்.

அவர் கிழவர் அருகே சென்று யூ ஆர் லுக்கிங் சீர்ஃபுல் என்றபடி நாடியைப் பிடித்துப் பார்த்தார். ஸ்டெதஸ்கோப்பை அவரது மார்பிலும் வயிற்றிலும் முதுகிலும் வைத்துப் பார்த்து விட்டு குட் என்றார்.

சித்ராவைப் பார்த்து மத்தியானம் நல்லாத் தூங்கினாரா? என்று கேட்டார்.

அவள் பதில் சொல்வதற்கு முன் சுவேதாம்பரம் ஓ, ரெண்டு மணிக்குப் படுத்தவன் நாலு மணிக்குத்தான் எழுந்தேன் என்றார்.

கொஞ்சம் கஷ்டப்பட்டாரு டாக்டர் என்றாள் சித்ரா. கிழவர் அவளை முறைத்துப்
பார்த்தார்.

டாக்டர் சித்ராவிடம் அவருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகளில் இரண்டின் பேரைச் சொல்லி அவற்றை இனிமேல் கொடுக்க வேண்டாம் என்றார். கிழவரைப் பார்த்து ராத்திரி வீட்டுக்குப் போறதுக்கு முன்னாலே உங்களை வந்து பார்க்கிறேன் என்று கிளம்பினார். அவருடன் சித்ராவும் சென்றாள்.

ஒரு மணி நேரம் சேகரும் சாவித்திரியும் கிழவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். பேரன் பண்ணும் அட்டாகாசங்களை எல்லாம் சாவித்திரி சொல்லச் சொல்ல கிழவர் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தார். சாவித்திரியின் ஆபீஸ் வேலைகளை பற்றிக் கேட்டார். அவர்கள் கிளம்பிய போது அவர் சாவித்திரியிடம் “நீ கிளம்பி ஊருக்குப் போ. நான் இவனையே இங்கே ஏண்டா பிரும்மஹத்தி மாதிரி என்னைப் பிடிச்சிண்டு நிக்கறே. ஆபீசுக்குப் போடங்கறேன். நீயாவது நான் சொல்றதைக் கேளு என்றார்.

அவர்கள் கிளம்பிச் செல்கையில் சித்ரா கூட வந்தாள். அவர்களிடம் உங்களை டாக்டர் வந்து பார்க்கச் சொன்னார் என்றாள்.

டாக்டர் அறைக்குள் சென்று அவர்கள் அவரைப் பார்த்தார்கள்.

சேகர் அவர் கூடவே இருக்கறவன், நீதானே ரொம்ப நாள் கழிச்சு அவரைப் பாக்கறே. எப்படி இருக்கார்னு உனக்குத் தோணறது என்று சாவித்திரியிடம் கேட்டார்.

ஹி லுக்ஸ் ஆல்ரைட் டு மீ டாக்டர். பத்து நாளா படுக்கையிலே இருக்கறதினாலே மூஞ்சிலே கொஞ்சம் டயர்ட்னெஸ் தெரியறது. ஆனா…

ஆனா? என்று டாக்டர் கேட்டார்.

அவர் பேச்சென்னவோ வித்தியாசமா இருக்கற மாதிரி இருக்கு. இல்லியா சேகர்?

சேகர் அவள் சொல்வதை ஆமோதிப்பவன் போலத் தலையசைத்தான்.

நீ சொல்றது கரெக்ட்தான். ட்ரீட்மென்டுக்கு உடம்பு நன்னா கேட்டுண்டு வரது. உன்னைக் கிளம்பிப் போன்னு மறுபடியும் சொன்னாரா?

ஆமா. கிளம்பறச்சே ஏதோ விரட்டற மாதிரி கிளம்பிப் போன்னார் .

நான் ஒண்ணு சொல்லட்டுமா? என்றார் டாக்டர். சில வினாடிகளுக்குப் பின், சேகர், நீ தினமும் காலம்பரையோ ராத்திரியோ ஒரு வேளை மட்டும் வந்து அவரைப் பாத்துட்டுப் போ. சாவித்திரி, நீயும் நாளைக்குக் கிளம்ப முடிஞ்சா கிளம்பிடு. அவரை அடுத்த வாரம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவேன். அதுக்கப்பறம் ரெண்டு மூணு வாரமோ இல்லே ஒரு மாசமோ கழிச்சு வந்து அவரோட தங்கி இருந்துட்டுப் போற மாதிரி பிளான் பண்ணிண்டு வா என்றார்.

பிறகு நான் ரவுண்ட்ஸுக்கு போயிட்டு வரட்டா, குட் நைட் என்றபடி தன் இருக்கையிலிருந்து எழுந்து வெளியே சென்றார்.