சுடுகஞ்சி

பத்மகுமாரி

கிளம்பும்போது ஹெட்செட்டை எடுத்து பைக்குள் போட்டுக்கொள்ளச்  சொன்னாள் அம்மா. ““அந்த செவிட்டு மெஷின எடுத்துப் போட்டாச்சா?”“. நான் எதுவும் பதில் பேசவில்லை. பைக்குள் ஏற்கனவே எடுத்து வைத்திருந்தவற்றை இரண்டாவது முறையாக சரி பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மாவும் பதில் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. போகிற போக்கில் சொல்லிக்கொண்டே என்னை கடந்து படுக்கையறைக்குள் போய்விட்டிருந்தாள். படுக்கையறை அலமாரி கதவுத் துவாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சாவிக் கொத்தின் சாவிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொள்ளும் சத்தம் கேட்டது.

“மாஸ்க் வேண்டாமா?” நடையில் இறங்கும்பொழுது புது முகக்கவசத்தை அம்மா நீட்டினாள்.

“மறந்துட்டேன்ம்மா”

“ம்ம். முக்கியமானதெல்லாம் மறந்திருவ” அம்மா தேவையற்றது என்று எதைக் குறிப்பிடுகிறாள் என்று புரிந்தது.  ஹெட்செட் மாட்டிக் கொள்வதை பார்க்கும்போதெல்லாம் அம்மா இப்படி சொல்வாள். “காத தொறந்திட்டு கேக்க வேண்டிய பாட்ட, இத மாட்டிகிட்டு காத அடச்சிகிட்டு கேக்க எப்படி தான்‌ முடியுதோ”

தெருவின் திருப்புமுனைக்கு வந்துவிட்டு திரும்பி பார்க்கையில் அம்மா நடையில்  நின்று கையசைத்துக் கொண்டிருந்தாள். பதிலுக்கு நானும் கையசைக்க, அவள் உள்ளங்கையில் இருந்த அன்பு மொத்தமும் காற்றில் கலந்து வந்து என் உள்ளங்கையில் அந்த ஒரு நொடிக்குள் ஒட்டிக் கொண்டதாக தோன்றியது.

அம்மா வழி சொந்தங்கள், வீட்டுக்கு வந்து செல்கையில் தெருமுனை திரும்புகிற வரையிலும் நின்று கையசைத்து விட்டுதான் அம்மா வீட்டுக்குள் வருவாள். அம்மாவிற்கும் அப்பாவிற்கும் கல்யாணமாகியிருந்த புதிதில், அப்பா வழி சொந்தங்கள் வீட்டுக்கு வந்து திரும்புகையில், அம்மா நடையில் நின்று கொண்டிருந்ததாகவும், வந்தவர்கள் திரும்பிப் பார்க்காமலேயே தெருமுனையை கடந்துவிட்டதாகவும், இரண்டு மூன்று முறை அப்படி நடந்த பிறகு, அப்பா வழி சொந்தங்கள் வந்து போனால் நடையில் போய் நிற்பதை விட்டுவிட்டதாகவும் அம்மா கூறியிருக்கிறாள். அம்மா அடிக்கடி இதை சொல்லியிருக்கிறாள். அம்மா வீட்டு சொந்தங்கள் வந்து திரும்பும்போதும் இதைப் பற்றி சொல்லியிருக்கிறாள். அப்பா வழி சொந்தங்கள் வந்து திரும்பும் போதும் இதைப்பற்றி சொல்லியிருக்கிறாள். ஆனால் இந்த இரு வேறு நேரங்களிலும் அவள் கண்கள் வெவ்வேறு மொழி பேசுவதை கண்டிருக்கிறேன். “இந்த பழக்கத்துல, நீ எங்க வீட்டு ஆளுகள போலயே வந்துட்ட” இதை சொல்லும் போது அம்மாவின் கண்கள் சிரிப்பது நன்றாக தெரியும். இருபது நிமிட காத்திருப்பிற்கு பிறகு பேருந்து வந்திருந்த போதிலும், ஜன்னல் இருக்கை கிடைத்துவிட்டதில்  ஆனந்தம் அடைந்திருந்தது மனது. நான் எடுத்து வந்திருந்த, ஹெட்செட்டிற்கு வேலையில்லாதபடி ஆக்கியிருந்தது, பேருந்தில் பாடிக்கொண்டிருந்த ஒலிபெருக்கி.

ஜன்னல் கம்பிகளோடு போட்டியிட்டு எதிர்த் திசையில் ஓடிக்கொண்டிருந்த மரங்களை எண்ணியபடி அமர்ந்திருந்தேன். திடீரென்று கீதாவின் ஞாபகம் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டது. எதிர்த் திசையில் ஓடிய மரங்களின் உதிர்ந்த இலைகளின் வாசத்தில் இருந்தும் அது வந்திருக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு முன்னால் கொட்டித் தீர்த்திருந்த மழையின் மிச்சமாக ஜன்னல் கம்பிகளில்  ஒட்டிக் கொண்டிருந்த மழைத் துளிகளிலிருந்தும் அது வந்திருக்கலாம்.

கீதாவும் நானும் முதல் முதலில் பேசிக் கொண்ட அன்றைக்கும் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. அதற்கு முன்னால் பலமுறை கல்லூரி விடுதி வராந்தாவில் ஒருவரை ஒருவர் கடக்கிறபொழுது, ஒரு சம்பிரதாய புன்னகையோடு கடந்திருக்கிறோம். மற்றவர்கள் எங்களை அழைப்பதிலிருந்து என் பெயர் அவளுக்கும் அவள் பெயர் எனக்கும் தெரிந்திருந்தது.

அடுத்த நாள் தேர்விற்காக  நான் வராந்தாவில் அமர்ந்து பரபரப்பாக படித்துக் கொண்டிருந்தேன். பக்கங்களை வேகவேகமாக புரட்டிக் கொண்டிருந்தேன் என்றும் சொல்லலாம். கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த மழையின் கச்சங்கள் கைகளில் சில, கால்களில் சில என்று விழுந்து கொண்டிருந்த போதிலும் கண்டு கொள்ளாமல் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்ந நான், அவை புத்தகத்து பக்கங்களின் நுனியை தொட ஆரம்பித்ததும் உடம்பை  மேலும் ஒடுக்கி, விலகி உட்கார்ந்தேன்.

மழை கச்சங்களில் இருந்து என்னை நான் விலக்கிக் கொண்ட அந்த நொடி தான், என்னை கீதாவோடு இணைத்த நொடி. “இப்படி மழையில நனைஞ்சிட்டு எதுக்கு படிக்கிற? ரூமுக்குள்ள போயிருந்து படிக்கலாம்ல” இடது கை உள்ளங்கையை பாதியாக மடிந்திருந்த இடது கால் முட்டியில் ஊன்றியபடியே, வலது கையில் துணிகள் நிரம்பிய பச்சை பக்கெட்டை தூக்கிக் கொண்டு கீதா என் எதிரே நின்று கொண்டிருந்தாள்.

“இல்ல எங்க ரூம்ல, ரூம்மெட்டோட டிபார்ட்மெண்ட் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து குரூப் ஸ்டடி பண்ணிகிட்டு இருக்காங்க. அதான் சவுண்டா இருந்திச்சுனு வெளிய வந்தேன்.”“

“அப்படியா. அப்ப ஒண்ணு பண்ணு. எங்க ரூம்ல வந்து படி. அங்க அமைதியா தான் இருக்கு” சொல்லிக்கொண்டே ஒருமுறை அவள் அறையை கழுத்தை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டாள்.

“இல்ல பரவாயில்லை. இருக்கட்டும்” சமணம் போட்டிருந்த கால்களை இன்னும் இருக்கமாக பின்னிக் கொண்டேன்.

“என் ரூம்ல யாரும் எதும் சொல்லமாட்டாங்க.போ.  நான் இத காயப்போட்டுட்டு வந்திடுறேன்.” இடது பக்கமாக சாய்ந்து சாய்ந்து என்னைக் கடந்து அவள் நடந்து சென்ற பொழுது அவன் நீள பின்னலும் சரிந்து சரிந்து ஊஞ்சல் போல் ஆடியது.

வெறும் பக்கெட்டோடு திரும்பி வந்த அவள், நான் எவ்வளவோ மறுத்தும் என்னை தன் அறைக்கு அழைத்து சென்று விட்டாள். கட்டிலின் ஒருபக்கம் அவள் அமர்ந்துகொண்டு மறுபக்கம் என்னை அமரச் சொன்னாள்‌. சாய்ந்து கொள்வதற்கு வசதியாக ஒரு தலையணையை தந்தாள்.

அந்த நாளிற்கு பிறகு அவள் அழைக்காமலேயே அவள் அறைக்கு நான் அடிக்கடி சென்று வந்தேன். அவளும் என் அறைக்கு அப்படி வந்து போய் கொண்டிருந்தாள். ஒரு வருடத்திற்கு பிறகு என் அறை இரண்டாவது மாடிக்கு மாறிவிட்ட பிறகு, படி ஏறமுடியாத காரணத்தால் அவள் என் அறைக்கு வருவது நின்று போய்விட்டது. அவள் தன்னைப் பற்றியும் , அவள் பாலிடெக்னிக் படிப்பை முடித்ததிற்கும் பொறியியல் படிப்பில் சேர்ந்ததிற்கும் இடையே அவள் கழித்த இரண்டு வருடங்கள் பற்றியும்,  நிறைய சொல்லியிருக்கிறாள். சிலவற்றை சொல்லும் பொழுது அவள் கண்கள் வெறித்துப் போயிருக்கும். சிலவற்றை சொல்லும் பொழுது சிலிர்த்தும், சிலவற்றை சொல்லும் பொழுது நீரால் பளபளத்தும் இருக்கும்.

ஒருதடவை தலைதூக்க முடியாதபடி, காய்ச்சலால் சுருண்டு படுத்திருந்த மதிய வேளையில், விடுதி மெஸ்ஸில் வேலை பார்க்கும் அக்கா ஆவி பறக்கும் சுடு கஞ்சித் தட்டோடு அறை வாசலில் வந்து நின்று என் பெயரைச் சொல்லி அழைத்தார்கள்.ஆச்சரியத்தில் கண்கள் விரிய அவர்களை பார்த்தபொழுது, “கீதா பொண்ணுதான் மெஸ்ஸிக்கு வந்து, உன் ரூம் நம்பரையும் , பெயரையும் சொல்லி, கஞ்சி வச்சு கொண்டு கொடுத்திட்டு வரமுடியுமான்னு கேட்டுச்சு” என்று சொன்னார்கள் . அதன்பிறகு கீதா அறைக்கு நான் போகமுடிகிற அளவிற்கு தெம்பு வருகிறபடி காய்ச்சல் சரியாகிற வரைக்கும் இரண்டு நாட்கள் மூன்று வேளைக்கும் என் அறை வாசலுக்கே சுடு கஞ்சி வந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து அவளிடம் இதைப்பற்றி கேட்ட பொழுது, “நீ இங்க ரூம் பக்கமே வரலயேனு, உன் ரூம்மேட்கிட்ட கேட்டேன். நீ காய்ச்சல்னு படுத்திருக்கிறதா சொன்னா.” என்று பதில் சொல்லிவிட்டு, அதை கடந்து அதற்கு சம்மந்தமே இல்லாத ஏதோ ஒரு பேச்சுக்கு சென்று விட்டிருந்தாள். நானும் அவள் பேச்சை பிடித்துக் கொண்டே அவளோடு சென்று விட்டிருந்தேன்.

கல்லூரி முடிவதற்கு, ஒரு வாரத்திற்கு முன்பு அவளுக்கு திருமணம் நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்றும், மாப்பிள்ளை போலிஸ் உத்தியோகத்தில் இருப்பவர் என்றும், அவளுக்கு என்று தனி கைபேசி வந்தவுடன் அதிலிருந்து அவள் திருமணத்திற்கு அழைப்பதாகவும், திருமணத்திற்கு நான் கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னாள். கல்லூரி கடைசிநாள் விடுதியை காலி செய்து விட்டு வரும் பொழுது வாசல் வரை வந்து வழியனுப்பினாள். அவள் அண்ணன் அவளை அழைத்து செல்ல வருவார் என்று கூறினாள்.

பேருந்து ரயில்வே பாலத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்தது. கீதா கல்யாண கோலத்தில் பெரிய மீசை வைத்த வாட்டசாட்டமான ஒருவரின் அருகில் நிற்பதாக  கற்பனை செய்து பார்த்தேன். பாலத்தின் கீழேயுள்ள தண்டவாளத்தில் கடந்து சென்றிருந்த ரயிலின் சத்தம் தூரத்தில் கேட்டது. பாலம் முடிகிற இடத்தில் இடப்பக்கம் இருந்த குளத்தில் ஒரு ஒற்றை நீர்ப்பறவை அதன் முகத்தை தண்ணீரில் ஒரு முக்கு போட்டு நிமிர்ந்து தலையை உதற, அதிலிருந்து தெறித்த சில நீர்த்துளிகள் குளத்தில் விழுந்து சிறு சிறு நீர் வட்டங்களாக தோன்றி மறைந்தன.

அடுத்த நிறுத்தத்தில் இறங்குவதற்காக பையை எடுக்க ஜன்னல் கம்பியில் ஊன்றியிருந்த கையை எடுத்து பொழுது, கம்பியில் ஒட்டியிருந்த ஒரு சிறுதுளி கைமுட்டி மடிப்பின் அருகில் விழுந்தது. விழுந்த துளியை தேய்த்து துடைத்து விட்டு கொண்டபொழுது  சுடுகஞ்சி வாசனை வந்தது.

One comment

  1. கதை சுமார் கச்சங்கள் அல்ல எச்சங்கள் மழை எச்சங்கள் என வரும்
    எடிட்டர் இதனை அவதானிக்கலை
    சில இடங்கள் அவன் அவள் என மாறி இருக்கு

    ஆரா

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.