Author: பதாகை

வீடு – ப.மதியழகன் சிறுகதை

விடிஞ்சா தீபாவளி. வீடே எனக்கு அந்நியமாத்தான் தெரியுது. ஆத்தா தான் சோறூட்டணும், ஆத்தா கூடத்தான் படுத்துக்கணும், ஆத்தா தான் குளிப்பாட்டணும்னு எல்லாத்துக்கும் இந்த ஆத்தா தான். இந்த நிசப்தம் என்னைய ஏதோ செய்யுது. மனுசனை உசிரோட சிலுவையில அறையறது மாதிரி. கால்ல சக்கரம் கட்டின மாதிரி அங்கேயும் இங்கேயும் பறப்பா. யானையாம் கோழியாம் என்று கதையை ஆரம்பித்த உடனேயே கண்ணு சொருக ஆரம்பிச்சுடும் அவளுக்கு.

எல்லாப் பொண்டு, பொடுசுகளும் கீர்த்தனா இல்லையா கீர்த்தனா இல்லையாகிதுங்க நான் என்னத்த சொல்ல. அவ பிறந்ததுக்கப்புறம் தான் அவரு முகத்துல சிரிப்பையே பாத்தேன். அந்த சிட்டானுக்காகத்தான் நாங்க உசிரை கையில புடிச்சிகிட்டு இருக்கோம். வீடுங்கறது சுவரும், செங்கல்லுமா மனுசா இல்லையா? வயசுல நான் ஒண்ணும் இல்லாதப்பட்டவ இல்ல. அப்பாவுக்கு தியாகி பென்ஷன் வந்தது. மூணு அண்ணன் நான் கடைசி. பிள்ளையார் மாதிரி அப்பா, அம்மாவையே சுத்திகிட்டு திரிஞ்சா சரிப்படாதுன்னு மூத்த அண்ணனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சாங்க. அங்கேயே கல்யாணம் பண்ணி அந்த நாட்டு குடிமகனாகவும் ஆயாச்சி. வந்து அப்பா அம்மாவை பார்த்து போவார் தான் வருஷத்துக்கு ஒரு முறை.

இவரு தான் நாராயணன் பார்டருல வேலை பாக்குறாரு அரசாங்க உத்தியோகம் தான் நல்ல சம்பளம் என்று அவர்களாக முடிவெடுத்துவிட்டு சமாச்சாரத்தை என்னிடம் வந்து சொன்னார்கள். அம்மா இருந்தாலாவது உனக்குச் சம்மதமா என்ன ஏதுன்னு வாய் வார்த்தையா கேட்டிருப்பா அவதான் எங்களை அனாதையா உட்டுட்டு போயிட்டாளே. அம்மா போனப்பவே அவ கூட போயிருக்கணும் எல்லாம் விதி. தலையெழுத்துண்ணு ஒன்னு இருக்குல்ல அதை யாரால மாத்த முடியும். கழுத்த நீட்டியாச்சி பத்து நாள் கூட இருந்துட்டு ரயில் ஏறுனவர்தான் முத குழந்தை பிறந்தப்பக் கூட வந்து என்ன ஏதுன்னு எட்டிப் பாக்கலை.

அப்பவே ஆஸ்பத்திரி வாட்ச்மேன் கேட்டான் பொண்ணா பொறந்துட்டு நீ கஷ்டப்படுறது பத்தாதாம்மா ஏம்மா பொண்ணைப் பெத்தேன்னு. டவுன்ல வளந்த பொண்ணு நான் கிராமத்துல குப்பை கொட்டுற மாதிரி ஆயிடிச்சி. மாமியார் அவருக்கு சின்ன வயசிலேயே தவறிட்டா. அவளுக்கும் சேர்த்து வைச்சி மாமனார் இல்லாத அக்கிரமமும் பண்ணினார். யார்கிட்ட சொல்லி நான் அழறது. எழுதுன கடிதாசியைக் கூட படிச்சுப் பார்த்துதான் போஸ்ட் செய்வாரு. தான் பொண்ணுக்கு குழந்தை இல்லைனா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்.

கலாவுக்கு ஒரு வயசு ஆனப்ப லீவுல வந்தாரு. அப்ப எடுத்த போட்டோ தான் இங்க மாட்டியிருக்கிறது. அடுத்தது தான் இவன் பொறந்தான். பேராண்டிக்கு நான் பேரு வைக்கிறேன்னு தாத்தா புகழேந்தின்னு வைச்சாரு. அவன பிழைக்க வைச்சி கொண்டு வந்ததே எனக்குப் பெரும்பாடா போச்சி. அவரு மாத்தலாகி தமிழ்நாட்டுக்கு வந்த கொஞ்ச வருஷத்துல பேராண்டியை தொட்டு தூக்கி பாத்த சந்தோஷத்துல அந்த புண்ணியவான் போய்ச் சேந்தாரு. வீட்டு மேல பஞ்சாயத்து நடந்தப்ப ஊர்ல யாரும் இவரு பக்கம் பேசலை. அதோட கொடுத்த பணத்துக்கு வித்துட்டு நாங்க ஒதுங்கிட்டோம்.

வாய கட்டி வயித்தகட்டி என் சொந்த ஊர்ல மனை வாங்குனோம். அங்க இங்க கடன் வாங்கி வீட எழுப்பங்காட்டிலும் நாக்கு தள்ளிடிச்சி. புதுசா கட்டடம் எழுப்பினா உடையவங்களை காவு வாங்கும்னு சொல்வாங்களே அதே மாதிரி ஆகிப்போச்சி. நான் செத்து பிழைச்சி வந்தேன்னா பார்த்துக்குங்க. எல்லாம் தலையெடுக்கிற காலத்துல அவரை சென்னைக்கு தூக்கி அடிச்சாங்க. கடைசி வரைக்கும் நகரத்து வாழ்க்கையோட எங்களால ஒத்துப் போக முடியலை. அங்க அப்பன் ஆத்தா கூட இருந்து புத்திமதி சொல்லியும் புகழேந்தி எந்த வேலையிலேயும் நிலைக்க மாட்டேனுட்டான். ஜோசியக்காரனுங்க சூரிய திசை முடியனும்னு சொல்லிட்டாங்க வேறன்ன செய்யிறது.

அவரு ரிட்டயர்டு ஆனாரு. சாமான் செட்டெல்லாம் தூக்கிகிட்டு சொந்த வீட்டுக்கே குடிவந்தோம். கலாவை சென்னையில இருக்கிறப்பயே கட்டிக் கொடுத்தாச்சி. அப்பப்ப இங்க வந்து இருக்கறோமா இல்லையான்னு எட்டிப்பார்ப்பா அவ்வளோதான். அடிமை வேலை ஒத்துவர மாட்டேங்கிதுன்னு புகழேந்திக்கு கடை வைத்துக் கொடுத்தோம். புகழேந்திக்கு கல்யாணப் பேச்சு எழுந்ததும் கலா கேட்டேவிட்டாள் கடையில வர்ற வருமானத்தை வச்சி எப்படி குடும்பம் நடத்துவான்னு.

இல்லாதப்பட்டவங்க அதனால நாம கேட்கக் கூடாதுன்னு கட்டுன புடவையோடதான் சுசீலாவைக் கூட்டி வந்தோம். சுசீலா நல்லவதான் ஆனா ஒருசொல் பொறுக்க மாட்டாள். இல்லாதப்பட்டவங்க வீட்டிலேர்ந்து வந்ததுனால நம்மை இளக்காரமா நினைக்கிறாங்களோ என்ற எண்ணம் அவளுக்கு. சரின்னு நானும் உட்டுட்டேன் கோவம் இருக்கற இடத்துலதானே குணம் இருக்கும்னு. இரண்டு வருஷம் கழிச்சி சுசீலாவுக்கு தங்கியது. முருகப்பயபுள்ள தான் பேரனா பொறப்பான்னு நினைச்சிருந்தேன். கீர்த்தனா பிறந்தாள். வீட்டில ஒரு குழந்தை தவழ்ந்தா குதூகலத்துக்கு கேட்கவா வேண்டும். அள்ளி அள்ளி அவளை அணைத்துக்கொண்டேன். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துலதானே. இந்த அணையப்போற தீபத்துக்கு எண்ணை வார்க்கத்தான் கடவுள் கீர்த்தனாவை அனுப்பி வைச்சிருக்கான். கீர்த்தனான்னா அவருக்கும் உசிரு என்ன இருந்தாலும் தன்னோட வாரிசு இல்லையா? அவருக்கு உடம்பு நோவு வந்து ஆஸ்பத்திரி, ஆபரேஷன்னு அலைய வேண்டி வந்துடுச்சி. கீர்த்தனாவை பாக்கும் போது அவரு முகம் பிரகாசமடையும் பாருங்க தாத்தாவின் உலகத்தில் பேத்திக்கான இடம் பாட்டிக்கான இடத்தைவிடப் பெரியது தானே.

அவரு நடமாட முடியாம வீட்டில இருந்தப்ப ஆழந்தெரியாம காலை விட்டு கடையையும் மூடிவிட்டான் புகழேந்தி. கஷ்டகாலம் குழந்தை முகத்தை பார்த்தாவது திருந்தணும். ஒரு அவசரத்துக்கு எங்க போவான். எல்லாம் எங்க தலையிலேயே வந்து விழுந்தது. பேத்திக்கு ஒண்ணுன்னா அவரு கணக்கு பாக்க மாட்டாரு. தாத்தா செல்லமா அவ இருந்தாலும் அடிப்பதற்கும், அணைப்பதற்கும் நான் தான் வேணும் அவளுக்கு. அந்த பச்ச மண்ண எதுக்க வைச்சிகிட்டு சண்டை போட வேண்டியதா போச்சி.

நான் சராசரி மாமியார் இல்ல. அதை தொட்டா குத்தம் இத தொட்ட குத்தம்னு சொல்ல மாட்டேன். சமையல் வேலை என்னுது நீ ஒத்தாசையா இருந்தா போதும் என்பேன். என்ன இருந்தாலும் மருமகளைவிட பெத்தமவ ஒருவிதத்துல உசத்தியாதான் போயிடுறா. மருமகள எந்த மாமியார் மகமாதிரி நடத்துறா சொல்லுங்க பார்ப்போம். எதுக்கெடுத்தாலும் பாம்பா படமெடுத்து ஆடுனா நான் என்ன செய்யிறது. சொல்லிக் கொடுக்கிற அக்கம்பக்கத்துக் காரங்களுக்கு நாம நல்லபடியா வாழணுங்கிற எண்ணம் இருக்காது. வெளி தெருவுக்கு போனா நம்மளபத்தி நாக்கு மேல பல்லுபோட்டு யாரும் பேசிடக்கூடாது. அதுக்கு நாம குடும்ப விஷயம் எதையும் வெளியில பேசக்கூடாது இதுதான் என் தரப்பு.

உத்தியோகம் புருஷலட்சணம் போய் சம்பாரிச்சுட்டு வாடாண்ணா. உப்பு விக்கப் போனேன் மழை பெய்யுது உமி விக்கப்போனேன் காத்து அடிச்சிதுன்னு தான் உருப்படாததுக்கு காரணம் சொல்ல ஆரம்பிச்சிட்டான் புகழேந்தி. எவ்வளவு காலத்துக்கு நாங்க முட்டுக் கொடுத்துக்கிட்டே நிற்போம் நாங்க இருக்கிறப்பவே சொந்தக் கால்ல நிக்கப் பழகிக்க வேணாம். எல்லாத்துக்கும் நம்ம கைய எதிர்பார்த்தா எரிச்சலா வராது. குழந்தைக்கு செய்யலாம் சரி அவனுக்கும் சேர்த்து நாமளே செய்யணும்ணா எப்படி. நான் பெத்தது சிங்கமா இருந்துதுன்னா இந்த விஷயம் சந்தி சிரிச்சிருக்காது. பொண்ணு பொறந்திருக்கு நாளைக்கே சடங்கு, சம்பிரதாயம்னு எடுத்து செய்ய வேண்டி வருமேன்னு பொறுப்பு வேணாம்.

சுசீலாவுக்கு எதற்கெடுத்தாலும் எங்கையையே எதிர்பார்த்து நிக்கிறது பிடிக்கலை. எரிஞ்சி எரிஞ்சி விழறாண்ணா ஏன் விழமாட்டா. பேசாம எப்படி கேட்டதுக்கெல்லாம் பணம் கொடுக்க முடியும் அப்படி இப்படி சொல்லத்தானே செய்வோம். அதை அவ உடும்பா பிடிச்சிகிட்டா. இப்ப என்னாச்சி அந்த உருப்படாதவனால ஊரே சிரிச்சிப் போச்சு. இதுல கலா வேற எரிகிற நெருப்புல எண்ணை ஊத்துற மாதிரி சம்பந்தமில்லாமல் வார்த்தையை விட்டுவிட்டாள். தனிக்குடித்தனம் போறோமென்று வேறு வீடு பாத்து போய்விட்டார்கள்.

அவருக்கு வெளி தெருவுக்கு செல்ல முடியாது. சீவனத்துப்போய் வீட்டோட இருக்கற மனுசனுக்கு கீர்த்தனா தான் ஒரே ஆறுதல். அவ இல்லாம அவருக்கு வீட்ல இருக்க முடியலை. இதுக்கெல்லாம் நான்தான் காரணம்னு ராத்திரியெல்லாம் ஒரே புலம்பல். எனக்கு அங்கேயும் இங்கேயும் கீர்த்தனா ஓடுறது கணக்கா பிரமை, அவ உருவம் என் கண்ணுக்குள்ளயே நிக்கிறதாலேயோ என்னவோ. விசேஷத்துக்கு போயிருந்தா கூட ஆத்தா என்னோட படுக்கிறதுக்கு வந்துடு என்று போன் செய்வாள். ஏனோ தெரியலை ஒருமணி நேரத்தில் இருபது தடவையாவது வாசலை வந்து பாத்துட்டேன். எவ்வளவு அழுத்தத்தைத்தான் மனசு தாங்கும். எங்க காலம்தான் மலையேறிப் போச்சில்ல. என்னால வந்த பிரச்சனையை நானே தீர்க்கறேன்னு செருப்பை போட்டுகிட்டு புகழேந்தி வீட்டுக்கு கிளம்பிட்டேன். வாசலில் வந்து நின்று கொண்டு நான் போவதை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார். இத்தனை வருடங்களாக குடும்பம் நடத்தி இருக்கும் அவருக்குத் தெரியாதா நான் மருமக காலில் விழுந்தாவது கீர்த்தனாவோட அவளையும் கூட்டிவருவேனென்று.

திரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை

தூரத்திலேயே காவல் நிலையம் முன்பு கூட்டம் சூழ்ந்திருப்பது தெரிந்தது .  கூட்டத்தினை கண்டவுடன் சட்டென  உள்ளத்தில் பற்றி கொண்ட பதட்டம் காரணமாக  100 அடி முன்பாகவே சாலையின் ஓரத்தில் பைக்கை நிறுத்தி காவல் நிலையம் நோக்கி நடந்து சென்றேன் , அதிகமும்  இளைஞர்களும் நடுவயது ஆட்களுமாக இருந்தனர் , பரபரப்பாக மாறிமாறி பேசிக்கொண்டிருந்தவர்கள்  நான் வரும்போது  பேச்சை விடுத்தது  என்னை நோக்கினர் , நான் பதட்டம் காரணமாக யார் முகத்தையும் நோக்காமல் வேகமாக  ஸ்டேஷன் வாசல் நோக்கி நடந்தேன் . கூட்டத்திலிருந்து ஒரு குரல் ‘பொண்ணு சைடு ஆள் போல ” என்று  பேச ஆரம்பித்தது  காதில் விழுந்தது , கூடவே அதனை தொடர்ந்து இன்னொரு குரல் ” எவனா இருந்தா என்ன ” என்றது , நான் எதையும் உள் வாங்காதவனை பாவனையுடன் காவல் நிலைய வாசல் நோக்கி உள்ளே நுழைந்தேன் .வாசலை அடைந்ததும்  மனம் உடனடியாக கண்கள் வழியாக உள்ளே  துழாவியது , உள்ளே ஒரு இளைஞனின் பின்பக்கம் ஒட்டிக்கொண்ட படி நின்றிருந்த அவள் நின்று கொண்டிருந்தாள் . அவள் சரியாக அந்நேரம் பார்த்து எதேச்சையாக வாசலை நோக்கியவள் என்னை பார்த்ததும்  சட்டெனெ குழிக்குள் பதுங்கும் எலி போல தலை கவிழ்த்து கொண்டாள் .

பிறகுமற்றவர்களை கவனித்தேன் , வரவேற்பு அறைக்கு நேராக உள்ளே  இருந்த ஒரு அறைக்குள்  இன்ஸ்பெக்டர் எதிரில் ஈஸ்வர் சாரும் அவர் மனைவியும் அமர்ந்திருக்க அவர்கள் அருகில் முகுந்தன் நின்றிருந்தான் , நான் நேராக போய் அவன் அருகில் நின்று கொண்டேன் , பின் மனம் துறுதுறுத்து மீண்டும் திரும்பி அவளை நோக்கினேன் ,அவள் முகம் திரும்ப மேலெழவே இல்லை , ஆனால் உடன் இருந்த இளைஞன் கடுகடுக்கும் முகத்துடன் என்னையே  நோக்கி கொண்டிருப்பதை அப்போதுதான் கவனித்தேன்  , அவன் முகத்தில் சற்றும் பதட்டமில்லைலை ,மாறாக தெனாவட்டான முகபாவனைத்தான் இருந்தது , அதைப்போலவே அவன் அருகிலிருந்த இன்னொரு நடுவயது ஆளிடமும் அதே போன்று சாதரண விஷயம் ஒன்றை அணுகுவதை போன்ற முகபாவனையே இருந்தது . அவர்களை விடுத்து திரும்பவும் அவளை மட்டும் மீண்டும் கவனித்தேன் , மிக சாதரணதொரு சேலை உடுத்தியிருந்தாள் , சரியாக சீவ படாத தலை , தூக்கம் இல்லாத கண்கள் , பாதி தூக்கத்தில் எழுந்து வந்து நிற்பவள் போலவோ அல்லது ஒரு பேய் படம் பார்த்து வந்தவள் போலவோ  இருந்தாள் .  இந்த சூழல் அல்லாது வேறு எங்காவது இந்த கோலத்தில் அவளை பார்த்திருந்தால் வேறொரு பெண் என்றே எண்ணியிருப்பேன் , மனம் சோர்ந்து அவளை பார்ப்பதை தவிர்க்க எண்ணி மனதை வலுக்கட்டாயமாக திருப்பி இன்ஸ்பெக்டரின் பேச்சினுள்  கவனத்தை கொண்டு சென்றேன் .

ஈஸ்வர் சார் எனக்கு அறிமுகமானது முகுந்தன் வழியாக , நாங்கள் நண்பர்கள் பொதுவாக கூடி பேசும் இடங்கள் என்பது இங்குள்ள  பேக்கரிக்கள்தான் ,ஒவ்வொரு பகுதிக்கும் அங்கிருக்கும் பேக்கரிகளில்தான் கூடுவோம் ,முகுந்தன் வேலை செய்யும் இடமருகில் இருக்கும்  அருணா பேக்கரியில் தான் ஈஸ்வர் சாரை முதலில் சந்தித்தேன் ,அப்போது முகுந்தனோடு வந்தார் ,அவனது உயர் அதிகாரி இவர்  ,பிறகான அடுத்தடுத்த சந்திப்புகளில் என் நெருங்கிய நண்பராகவும் மாறினார் , ஈஸ்வர் சாரின் சொந்தவூர் தஞ்சை பக்கம் ,நிறைய விவசாய நிலம் என  வசதியான குடும்ப பின்னணி கொண்டிருந்தவர்  காதல் திருமணம் காரணமாக அதையெல்லாம் இல்லாமலாகி கோவையில் வந்து சேர்ந்தவர்  , இங்கு இவருக்கு சொந்தங்கள் என ஏதும் இல்லை ,  நண்பர்களும் குறைவு . ஈஸ்வர் சார்  வயதானவர் என்றாலும் பேச்சில் அது தெரியாது , பேச்சில் எதிர்மறை அம்சமே இருக்காது , அது காரணமாக என் கனவுகளை எல்லாம் அவரிடம்தான் பகிர்வேன் , என்னை பற்றி என்னை விட அவர்தான் அதிகம் நம்பிக்கை கொண்டிருந்தார் .எனக்கு  அவரை பிடிக்க இன்னொரு காரணம் அவரது தோற்றம் , எப்போதும் சீவிய தலை ,இன் செய்த உடை என இருப்பார் ,மேலும் அவரிடம் இருந்த நிதான இயல்பு எனக்கு  மிகவும் பிடிக்கும் , குடிநிகழ்வுகளில்  அவ்வளவு போதையிலும் பையனிடம் பில் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபார்த்த பின்புதான் கணக்கை முடிப்பார் . இவரது  ஒரு குடும்ப விழாவிற்கு சென்ற போதுதான் இவருக்கு இப்படியான ஒரு அழகான இளம்பெண் இருப்பது தெரிந்தது , ஒரே ஒரு மகள்தான் , அதனாலேயே உருவான தனி கவனம் அவரில் எப்போதும் இருந்தது , அன்று எனக்கு அவளை அவர் அறிமுகபடுத்தும் பொழுது அவள்  ” அங்கிள் ,அப்பாவை கொஞ்சம் செலவு பண்ண சொல்லுங்க ” என்று சிரித்துகொண்டே   தந்தையை வாரி பேச துவங்கினாள் ,அப்போது அவளில் புது நபர் என்ற கூச்சமோ தயக்கமோ சிறிதும் இருக்க வில்லை , பேசிக்கொண்டே இருந்தாள் , அவளில் ஆடை உட்பட எல்லாமே மின்னியது ,அருகிலிருந்த முகுந்தன் அவளை வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் , என் கவனமும் அவள் பேச்சில் மட்டும் இருக்க படாதுபட்டது . அதன் பிறகான  ஈஸ்வர் சாரை  சந்திக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவளின் நலம் நான் விசாரிப்பேன் . அவருக்கு அவளின் எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்ற கனவு சர்வகாலமும்  உடனிருந்துகொண்டே இருந்தது , அதை பற்றி பேச ஆரம்பித்ததுமே மனிதர் உற்சாகமாகி விடுவார் .

இன்ஸ்பெக்டர் ஈஸ்வர் சாரிடம்  ” கல்யாணம் பண்ணிட்டாங்க ,பொண்ணு மேஜர் , எங்களால இனி ஒன்னும் பண்ண முடியாது ” என்று வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினார் , நான் உடனே கொஞ்சம் நகர்ந்து அறைவிட்டு வெளியே சென்று தனியான இடத்தில் நின்று அலைபேசியில்  சாரதி அண்ணனை அழைத்து விஷயம் கூறினேன் ,கேட்டுக்கொண்டிருந்தவர் பிறகு  அலைபேசியை   இன்ஸ்பெக்டரிடம் கொடுக்குமாறு கூறினார் , பின்பு அந்த அறைக்குள் சென்று அலைபேசி கொடுத்த  போது நிமிர்ந்து பார்த்த அவர் பின் ஏதும் சொல்லாமல் போன் வாங்கி பேசினார் , அதன்பிறகு அலைபேசியை  என்னிடம் கொடுத்து ”அவர் உனக்கு யாரு” என்றார் ,நான் குரலை தாழ்த்தி  “ரொம்ப வேண்டியவரு” என்றேன் . சிறுது நேரம் மவுனமாக இருந்தவர் பிறகு ” ஒன்னு வேணும்னா பண்ணலாம் ,பொண்ணுட்ட பேசி பாருங்க ,அவங்க உங்க கூட வரதா சொன்னா ,உங்க கூட அனுப்பிடறேன் ” ,”ஆனா அந்த பொண்ணு மறுத்தா ஒன்னும் பண்ண முடியாது “என்றார் .அப்போது அறைக்கு வாசலுக்கு அருகில் நின்றிருந்த அந்த இளைஞன் கூட வந்திருந்த நடுவயது ஆள் ” அதுதான் கல்யாணம் பண்ணிட்டாங்களே ,அப்பறம் என்ன புள்ளையை அனுப்பறது ” என்றார் . இன்ஸ்பெக்டர் சட்டென எகிறி “இது போலீஸ் ஸ்டேஷன் ,உங்க வீடு இல்ல ” என்றார் . பின் அந்த பெண்ணை  அழைத்து  “இங்க வந்து உட்காருமா” என்றார் ,பிறகு அந்த இளைஞனையும் நடுவயது ஆளையும் “வெளிய போய்  நில்லுங்க” என்றார் . நடுவயது ஆள் ” பொண்ணை  நீங்க மிரட்டுவீங்க ” என்றார் ,இன்ஸ்பெக்டர்  பதிலுக்கு “உங்களை வெளிய போய் நிக்க சொன்னேன் ” என்றார் குரல் உயர்த்தி . பின்பு அவர்கள் வெளியேறியதும் வெளியே நின்றிருந்த கூட்டத்தில் இருந்து வாக்குவாத சத்தங்கள் அதிகரித்து உள்ளே வரைக்கும் கேட்டது . இன்ஸ்பெக்டர்எங்களிடம்  “நீங்க பொண்ணுகிட்ட பேசுங்க “என்று சொல்லி அறைவிட்டு வெளியே நகர்ந்தார் .

அவள் இன்ஸ்பெக்டர் சொன்ன  இருக்கையில்மெதுவாக அமர்ந்தாள் , தலை மேலெலெவே இல்லை ,அழும் ஒலி மட்டும்  சன்னமாக கேட்டது ,அருகில்  இருந்த ஈஸ்வர் சார் எதிரில் இருந்த சுவரை நோக்கி கண்கள்  வெறித்தபடி அமர்ந்திருந்தார் ,அவரது அருகில் அவர் மனைவி ,அப்போதுதான் உரைத்தது  அவர் மனைவியும் அவர் பெண்ணும் கிட்டத்தட்ட ஒருபோலவே இருப்பது  ,அதே உடல்வாகு ,அதே போலவே அமர்ந்திருந்தது ,அதைப்போலவே தலைகவிழ்ந்து அழுவது என ,அதை உணர்ந்ததும்  சட்டென என்னை மீறி என் முகத்தில் லேசான சிரிப்பு  வந்து போனது . மூவருமே ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தனர் , முகுந்தன் ஈஸ்வர் சாரிடம் ” சார் ஏதாவது பொண்ணுட்ட பேசுங்க சார் “என்றான் . அப்போது ஏதோ யோசித்து கொண்டிருந்தவர் போல தோன்றியவர் சட்டெனெ எழுந்து வெளியே வேகமாக நடந்து போனார் ,முகுந்தன் ” சார் கொஞ்சம் பொறுமையா இருங்க “என்று சொல்லியபடியே பின்னால் சென்றான் ,இப்போது இந்த அறைக்குள் இந்த இருபெண்கள் அருகில் நான் மட்டும் நின்றிருந்தேன் , எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை ,பின்  தயக்கத்தை உடைத்துகொண்டு ஈஸ்வர் சார் அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தேன் , மெல்ல “ஸ்வேதா” என்று அந்த பெண்ணை அழைத்தேன் , அவள் பதில் ஏதும் சொல்லாமல்  அப்படியே துளி அசைவும் கூட இல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் . அவளது அசைவின்மை எரிச்சலை உண்டுபண்ணியது ,உள்ளுக்குள்” கள்ளி “என்று எண்ணம் வந்து போனது  ,பின்பு பொறுமையை வரவழைத்து கொண்டு ” இங்க பாருமா ,உன்னை அந்த பையனை விட்டுடு னெல்லாம் நான் சொல்ல வரல ,ஆனா இப்ப அம்மா அப்பா கூட போ ,பிறகு பேசி க்ராண்டா கல்யாணம் வச்சுக்க்கலாம் ,இப்போதைக்கு வெளிய தெரிய வேணாம் , உனக்கே தெரியும் அப்பா அம்மா க்கு நீ மட்டும்தான் எல்லாம் , நீ இப்ப வரலைனா அப்பறம் இவங்க என்ன செய்வாங்க னு எனக்கே பயமா இருக்கு , அப்பறம் இல்லாத பிறகு ஏங்கி ஒன்னும் செய்ய முடியாது ” என்றேன் . அவள் அதற்கும் பதிலேதும் சொல்ல வில்லை ,ஆனால் அவளில் அழகை சத்தம் இப்போது அதிகமானது . திரும்பவும் ” என்ன சொல்ற ” என்றேன் , அவள் பேசவே இல்லை, எனக்கு  எரிச்சலாக இருந்தது . சிலக்கணம் ஒன்றும் சொல்லாமல் இருந்தேன் ,பிறகு ” என்ன முடிவெடுத்தாலும் அம்மா அப்பாவை ஒரு முறை நினைச்சு பார்த்து முடிவெடு ,அவ்வளவுதான் சொல்ல முடியும் ” என்றேன் . பின் எனக்கு சட்டெனெ ஓர் எண்ணம் தோன்ற ” பையன் சைடு ல இருந்து மிரட்டினாங்களா ,இல்ல வேறு ஏதாவது விஷயத்தில் மாட்டியிருக்கியா ,பயப்படாம சொல்லு நான் பார்த்துக்கறேன் ” என்றேன் ,நான் சொல்லி முடிப்பதற்குள் இல்லை என்பது போல தலையசைத்தாள் , பிறகு நான் கொஞ்சம் கோபமாக “எதுக்கு இப்படி திருட்டு கல்யாணம் ,அப்பாட்ட சொல்லி சம்மதிக்க வச்சு பண்ணியிருக்கலாமல ” என்றேன் , “அப்பா ஒத்துக்க மாட்டாரு ” என்று அழுகைக்கிடையே சொன்னாள் ,அவள் பேச ஆரம்பித்த போது அவள் மனதை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை என் மனதுள் வந்தது , ,அந்த உற்சாகத்தை காட்டி கொள்ளாமல் பொறுமையாக ” இப்ப ஒன்னும் சிக்கல் இல்லை ,நான் பேசி அப்பாவை சம்மதிக்க வைக்கிறேன் ,நீ இப்போதைக்கு எங்க கூட வந்துடு ,மறுபடியும் சேர்த்து வைப்பது என் பொறுப்பு ” என்றேன் ,அப்படி சொல்லும் போதே மனதினுள் பெண்ணினை வேறு ஊர் மாற்றி கொண்டு சென்று விட வேண்டும் என்று எண்ணி கொண்டேன் . அவள் மனம் அசைவது போல தோன்றியது . பின் கடைசி சொல்லாக ” உங்க அம்மாவை அழ வைக்காத ,அவ்வளவுதான் சொல்ல முடியும்” என்றேன் ,அப்போது நான் சொல்லி முடிப்பதற்குள் அந்த இளைஞனும் அவனோடு இருந்த நடுவயது ஆளும் உள்ளே வந்தனர் , அவன் நேராக உள்ளே வந்து அவள் தலை மீது கைவைத்து ” என்ன மிரட்டினாங்களா ” என்றான் ,என்னை முறைத்து பார்த்தான் ,நான் அவனது பார்வை தவிர்த்தேன் , அவன் என்னை நோக்கி எதோ சொல்ல வந்தவன் பின்பு ஒன்றும்  சொல்லாமல் நின்றான் , அவன் உடல் லேசாக நடுக்கம் கொண்டிருந்தது , நன்றாக குடிப்பவன் போல தெரிந்தான் . அப்போது  இன்ஸ்பெக்டர் உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தார் ,என்னை பார்த்து” பொண்ணோட அப்பா எங்கே “என்றார் ,நான் பதிலேதும் சொல்லாமல் அவரை பார்த்தேன் , அவருக்கு எப்படியும் 50 வயது இருக்கும் ,இது போல நிறைய பார்த்திருப்பார் என்று எண்ணி கொண்டேன் . அவர் என்ன பேசுவது என்பதில் தெளிவாக இருந்தது தெரிந்து , தெளிவான குரலில் அவளை நோக்கி ” இங்க பாருமா ,உனக்கு யார் கூட போக விருப்பமோ அவங்க கூட போலாம் ,உன் முடிவுதான் ,எதையும் யோசிச்சு முடிவு பண்ணிக்கோ ” என்று சொல்லி எங்களையும் அந்த இளைஞனையும் வரவேற்பு அறையில் இருந்த பெஞ்சில் போய் அமருமாறு சொன்னார் , இளைஞன் நகராமல் அதே இடத்தில நின்றிருந்தான் ,” அங்க போ னு சொன்னேன் ” என்று மிரட்டல் தொனியில் சொன்னார் , நாங்கள் அதற்குள்ளாக நகர்ந்து விட்டிருந்தோம் , அப்போதுதான் உரைத்தது அவள் அம்மா ஒன்றுமே பேசவே வில்லை என்பது , சிலை போல அமர்ந்திருந்தவர் இன்ஸ்பெக்டர் சொன்னதுமே எழுந்து போய் அதே விதத்தில் பெஞ்சில் அமர்ந்து கொண்டார் ,

இன்ஸ்பெக்டர் அந்த பெண்ணிடம் அவள் மட்டும் கேட்கும் அளவிற்கு ” உன்னை யாரும் மிரட்ட முடியாது ,நான் இருக்கேன் , உனக்கு எது சரினு படுதோ ,அதை செய் , உன் அப்பா எல்லாம் பாவப்பட்ட ஆளா தெரியறாரு , எதையும் யோசி , அப்பா அம்மா கூட போறதுதான் எனக்கு நல்லதுன்னு தோணுது , ஆனா உன் விருப்பம்தான் ,நீ முடிவு பண்ணிக்க என்கிறார் ”

சில கணங்கள் அவள் எதுவும் பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தாள் , பிறகு திரும்பவும் இன்ஸ்பெக்டர் கேட்க அவள் ” நான் அவர் கூடயே போறேன் சார் “என்றாள் .சில கணங்கள் மவுனமாக இருந்த இன்ஸ்பெக்டர் பின் எழுந்து எங்கள் பக்கம் வந்து ” பொண்ணு பையன் கூடயே போறேன் னு சொல்றா ,விட்டுடுங்க ” என்றார் , அவள் அம்மா அப்போதும் அதைப்போலவே தலைகவிழ்ந்துதான் இருந்தாள் ,அவளிடம் “பொண்ணுட்ட திரும்பவும் ஏதாவது பேசி பாக்கறீங்களா “‘என்றேன், அவளிடம் என் வார்த்தைகள் உள்ளே செல்லவே இல்லை என்று தோன்றியது  . நான் பெண்ணின் முடிவை யூகித்திருந்தேன் என்றாலும் எங்களோடு வருவாள் என்ற சிறு நம்பிக்கை இருந்தது ,இப்போது கடும்  ஏமாற்றம் மனதில் தோன்றியது , பெண் எங்களை நோக்கி சற்றும் திரும்பாமல் அவன் அருகில் போய் பழையபடி ஒட்டிக்கொண்டு நின்று தலை கவிழ்ந்து கொண்டாள் .

இன்ஸ்பெக்டர் என்னிடம் திரும்பவும் ” விட்டுடுங்க ,அவ்வளவுதான் ” என்று சொல்லி ” சரி வெளிய போறேன் ,வரீங்களா ” என்றார்  , நான் அவள் அம்மாவை பார்க்க “அவங்க இருக்கட்டும் ,நீங்க வாங்க ” என்றார் . வெளியே செல்லும் போது  வாசலில் திரண்டிருந்த கூட்டத்தினர் எங்களையே பார்த்து கொண்டிருந்தனர் ,அவர் புல்லட்டில் இரு சாலைகள் தாண்டி இருந்த காபிசாப்  சென்றோம் , அவர் மிக ரிலாக்ஸாக இருந்தார் ,பிறகு  ” தம்பி, பொண்ணோட விருப்பம்கிறதெல்லாம் ஒரு விஷயமே இல்ல , கூட்டம் ,அதுதான் பேசும் , அதுதான் வலு , ,பொண்ணுகிறது ஒரு அசட்  மாதிரிதான் , நம்ம கிட்ட வலு இல்லைனா நம்ம கைய விட்டு போயிடும் ” என்றார் . பின் காபி ஒரு முடக்கு பருகிய பின் ” இந்த கூட்டம் இல்லைனா பொண்ணை உங்க கூட அனுப்பியியிருப்பேன் ” என்றார்

அன்பு மழை – கா.சிவா கவிதை

ஒவ்வொரு துளியாக
ஆவியாகிறது எப்போதும்
அதற்கிணையான
வெம்மையை அளித்துவிட்டு
உயிரே  வெந்து
ஆவியாகும் கணத்தில்
மெல்லிய சாரலாய் தொடங்கி
துளித் துளியாகவே
பொழிகிறது
முந்திவரும் சில துளிகளே
உள்நுழைந்து உயிரையும்  நனைத்துவிட
தொடர்ந்து பொழிந்து வழிவதை
சேமிக்க முயலாமல்
மனம் குளிரக் காண்கிறேன் …
வேறு வேறல்ல
மழையும் அவளன்பும்

ஹைட்ரா – சுசித்ரா சிறுகதை

பின்மதிய இடைவேளையில் அட்சயாதான் வந்து சொன்னாள். “ஐஷூ ரொம்ப அழறாப்பா. என்னன்னே தெரீல…”கண்கள் விரிய லட்சுமி ஒரு கணம் அவளை ஏரிட்டுப் பார்த்தாள். காற்றில் தும்பிக்கைகள் அலைய வினோத்தின் ரெக்கார்ட் நோட்புக்கில் ஹைட்ரா படத்தை வரைந்துகொண்டிருந்தவள் அதை அப்படியே போட்டுவிட்டு அட்சயாவுடன் ஓடினாள்.

அப்போதெல்லாம் ஒவ்வொருநாளும் காலை பத்தரை மணி இடைவேளையில், அது முடியவில்லை என்றால் லஞ்ச் பிரேக்கிலாவது, லட்சுமி ஐஷ்வர்யாவை சென்று பார்த்துவிடுவாள். அல்லது இவளைப் பார்க்க அவள் வந்துவிடுவாள். ஆனால் அன்று மட்டும் லட்சுமிக்கு ஐஷ்வர்யாவை சந்திக்க முடியாமல் போயிற்று.  ஏனோ, காலையிலிருந்து வேலை. கிளாஸ் மானிட்டர் பொருப்புகள்.

முதலில் யூனிட் டெஸ்ட் தாள்களை கணக்கிட்டு டோட்டல் போட்டுத் தரச்சொல்லி உத்தரவு வந்தது. மதியம் போகலாம் என்றால் அன்று காலாண்டு பரிட்சைக்கு முந்தய வெள்ளிக்கிழமை. ரெக்கார்ட் நோட்டுகளை முடித்துத்தர வேண்டிய கடைசி நாள். வரிசையாக ஆளாளுக்கு வந்து “ஏய் ஒரு படம்தான் போட்டுத்தாயேன்” என்று நின்றார்கள். லட்சுமி “முடியாது” என்று சொல்லத் தெரியாத குட்டி. பீடி பீரியடிலும் தும்பிக்கைகளாக வரைந்துகொண்டிருந்தாள்.

ஐஷ்வர்யாவும் லட்சுமியும் எட்டாம் வகுப்புவரை ஒரே பெஞ்சில் ஒன்றாகவே படித்தவர்கள்.  ஐஷூ-லச்சு என்று இணை பெயராகத்தான் அறியப்பட்டார்கள். லட்சுமியின் ஹீரோ பேனாவை அந்த வகுப்பிலேயே பயன்படுத்தக்கூடிய ஒரே ஆள் ஐஷ்வர்யா மட்டும் தான் என்பது வித்யா விஹார் பள்ளியின் எட்டாம் வகுப்பு வரிசையே அறிந்த விஷயம். ஏனோ ஒன்பதாம் வகுப்பில், விதி –  கிருஷ்ணகுமாரி டீச்சரின் கட்டளையை அப்படியும் சொல்லலாம் – அவர்களை வெவ்வேறு செக்‌ஷன்களில் பிரித்துவிட்டது. ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே பிள்ளைகள் சேர்ந்து படித்தால் ஒட்டிக்கொண்டுவிடுவார்கள், கவனம் குறையும் என்ற தர்க்கத்தின் அடிப்படையில் அந்த வருடம் எல்லா வகுப்புகளிலும் செக்‌ஷன்களை கலைத்துப் பிரித்தார்கள். விளைவாக லட்சுமி நைன் – ஏ. ஐஷ்வர்யா நைன் – சி.

வகுப்புகளாவது பக்கம் பக்கமாக இருந்ததா என்றால் அதுவும் இல்லை. அப்போது பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியை இடித்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே நைன் – ஏ மேலே மூன்றாம் மாடியிலும், நைன் – சி கீழே ஆடிட்டோரியம் பின்னாலேயும் அடியும் முடியுமாக இருந்தது. ஆகவே அன்று மதியம் ஐஷ்வர்யாவை பார்க்க, துப்பட்டாவும், தலைப்பின்னலும், அதிலிருந்து அவிழ்ந்து தொங்கிய கருநீலக்கலர் ரிப்பனும் முதுகுக்குப் பின்னால் படபடக்க, லட்சுமி படிகளில் தாவித்தாவி குதித்து கீழ் தளத்துக்கு ஓடினாள்.

நைன் – சி வகுப்பின் பின் வரிசையின் கடை ஓரத்தில் பெஞ்சு மீது உடலையே கூடென்றாக்கிக்கொண்டு தலையை கவிழ்த்து படுத்திருந்தவள்தான் ஐஷ்வர்யா என்று லட்சுமி கண்டுகொள்ள ஒரு நொடி பிடித்தது. வெள்ளைச்சீருடையிட்ட அந்த உரு நடுங்குக்கொண்டிருந்தது. கருநீல துப்பட்டாவின் முனை துவண்டு இருபக்கமும் தொங்கியது. உள்ளே அவள் விசும்பியிருக்கவேண்டும், உடலே தூக்கிப்போட்டு அதிர்ந்தது. லட்சுமி ஓடிப்போய், “ஐஷூ! ஐஷூ! ஏய், என்னடீ ஆச்சு? கேக்கறேன்ல?” என்று அவள் தோளை பிடித்துக் குலுக்கினாள். ஐஷ்வர்யா பந்தாகவே கிடந்தாள். ஒன்றும் சொல்லவில்லை. தலையைக்கூட நிமிரவில்லை. வகுப்பில் பத்து பேர்களுக்கு மேல் இருக்கவில்லை. முதல் பெஞ்சில் சில பையன்கள். இன்னும் சிலர் ஜன்னலோரமாக நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஐஷ்வர்யா  பக்கத்தில் உட்காரும் திவ்யா அங்கே இருந்தாள்.

“திவ்யா என்னடீ ஆச்சு இவளுக்கு?” என்று லட்சுமி குரல் கொடுத்தாள்.

திவ்யா கும்பலுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்து தோள் குலுக்கினாள்.  “உடம்பு சரியில்லன்னு லஞ்ச் பிரேக்லியே பின்னால போயி படுத்துகுட்டா… தெரியல” என்று நின்ற இடத்திலிருந்தே பதில் சொல்லிவிட்டு உடனே தலையை உள்ளிழுத்துக்கொண்டாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் லட்சுமி பதறி சுற்றும் முற்றும் பார்த்தாள். “கிருஷ்ணகுமாரி மேடத்துட்ட போய் சொல்லலாமா?” என்று அட்சயா கேட்டாள்.

குனிந்த உருவிலிருந்து ஒரு கை மட்டும் பிரிந்து வந்து லட்சுமியின் கையைத் தேடி கெட்டியாக பிடித்துக்கொண்டது. “வேண்டாமே… ப்ளீஸ்?”

ஐஷ்வர்யா தலை நிமிர்ந்தாள். முகமெல்லாம் சிவந்து கன்னங்களில் உப்புக்கரை தீட்டியிருந்தது. “திட்டுவாங்க…” குரல் கெஞ்சி சிறுத்தது. அழுகையானது.

“என்ன ஆச்சுன்னு சொன்னா தானப்பா ஏதாச்சும் செய்ய முடியும்?” என்றாள் லட்சுமி. பதற்றத்தில் அவள் குரல் அதிர்வாக தொனித்தது.

அந்தக்குரலின் ஆணைக்கு கட்டுப்பட்ட பாவைபோல் ஐஷ்வர்யா இலேசாக எழுந்து திரும்பி குர்த்தாவை இழுத்துவிட்டுக் காட்டினாள். நீளமாகத்தொங்கிய அவள் பின்னலுக்கடியில் பெரிய செம்பருத்திப்பூவாக ஒரு குருதித்தடம் பதிந்திருந்தது. எழுந்தபோது மரபெஞ்ச்செல்லாம் சிவப்பான பசபசப்பு. அதன் வீச்சம் எழ என்ன செய்வதென்று தெரியாமல் ஐஷ்வர்யா பதறி உடனே அதன் மேலேயே  திம்மென்று உட்கார்ந்தாள்.  அவளால் அதன்பின் யார் கண்ணையும் சந்திக்க முடியவில்லை.

லட்சுமி ஒரு நொடி தயங்கினாள். எழுந்து சென்றாள். முன்பெஞ்சு அருகே நின்றவனிடம், “பிரவீன்… பசங்களையெல்லம் கொஞ்சம் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெளிய இருக்க சொல்றியா? ப்ளீஸ்?” என்றாள். பிரவீன் முழித்தான். ஆனால் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சொன்னதை செய்தான்.

லட்சுமி நோட்டுப்புத்தகத்திலிருந்து தாள்களை கிழித்தாள். ஐஷ்வர்யாவை எழச்சொல்லி அவள் உட்கார்ந்த இடத்தை வழித்து எடுத்தாள். மூன்று நான்கு முறை எல்லாத் தடமும்  போக துடைத்தாள். இரத்தம் படிந்த தாள்களை மடித்து மடித்து இன்னொரு தாளில் சுருட்டி யாரோ சாப்பிட்டு குப்பையில் போட்டிருந்த காலி சிப்ஸ் பாக்கெட்டில் போட்டு அதையும் சுருட்டி ஓர் ஓரமாக வைத்தாள். அதை எங்கே போடுவதென்று அவளுக்குத் தெரியவில்லை. மற்ற எல்லோரும் எட்டியே நின்று வேடிக்கை பார்த்தார்கள். யாரும் பக்கத்தில் வரவில்லை.

அடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்குத் தெரியவில்லை. “ஐஷூ, வீட்டுக்குப் போறியா?” என்றாள். ஐஷூ விசும்பினாள். அந்நேரத்தில் அவள் வீட்டில் யாரும் இருக்கமாட்டார்கள் என்று லட்சுமிக்குத் தெரியும். தவிர இந்த நிலையில் வெளியே எப்படி போவது?

“பேசாம டீச்சர்ட்டையே சொல்லிடலாமா?” என்று மீண்டும் அட்சயா கேட்டாள். “எந்த டீச்சர்?” என்றாள் லட்சுமி. ஒவ்வொரு பெயராக அவர்கள் மனதில் ஓடியது.

“செங்கொடி மிஸ் இன்னைக்கி லீவாச்சே?” என்றாள் அட்சயா. “வேற யார்ட்ட சொல்றது? சங்கரலிங்கம் சார்ட்டையா?” என்றாள் லட்சுமி. அதை யோசிக்கவே அவளுக்கு சிரிப்பாக வந்தது. ஐஷ்வர்யாவைப் பார்க்க அவளும் கண்ணீரை மீறி சிரித்துக்கொண்டிருந்தாள்.

“சரி. ஒண்ணு பண்ணு,” என்றாள் லட்சுமி. “இன்னொரு நேப்கின வச்சுகிட்டு இங்கியே உக்காரு. இன்னும் ரெண்டு பீரியட்தானே? சாய்ந்தரம் நானும் கூட வரேன். சேர்ந்தே வீட்டுக்குப் போகலாம். பஸ் வேண்டாம். ஆட்டோல போயிடலாம்,” என்றாள்.

ஐஷ்வர்யா பயந்த பார்வையுடன் பார்த்தாள். “ஏற்கனவே ரெண்டு வெச்சிருக்கேன்,” என்றாள்.

“பரவால்ல, மேல ஒண்ணு வெச்சுக்க,” என்றாள் அட்சயா.

ஐஷ்வர்யாவுக்கு பதட்டம் குறையவில்லை. “இதோட எப்பிடி டாய்லெட்டுக்கு போவேன்? எல்லாரும் பாப்பாங்களே?” என்றாள். அப்போது மூன்றரை மணி பெல் அடித்தது. கதவைத்திறந்து எல்லோரும் உள்ளே நுழையத்தொடங்கினார்கள்.

லட்சுமியின் அனிச்சையாக அதைச்செய்தாள். இரண்டு தோள்களிலிருந்து இரண்டு பின்களையும் நடு நெஞ்சிலிருந்து மூன்றாவது பின்னையும் சிவப்பு மானிட்டர் பேட்ஜையும் கழட்டி கருநீலநிற துப்பட்டாவை இழுத்து உதறினாள். இரண்டாக மடித்தாள். ஐஷ்வர்யாவை இழுத்து அவள் இடுப்பைச் சுற்றி கட்டி முடி போட்டாள்.

ஐஷ்வர்யா உடல் மெலிந்தது. இரண்டு கட்டு சுற்ற முடிந்தது. சொறுகிவிட்டு, “போ, ஒண்ணும் தெரியாது. இங்கியே திரும்ப வந்து உட்காரு. யாராவது கேட்டா உடம்பு சரியில்லன்னு சொல்லிக்கோ. கரெக்டா அஞ்சரைக்கு நான் வரேன், சரியா? நான் வரவரைக்கும் நீயா எங்கியும் போகாத. என்ன?” என்றாள். ஐஷ்வர்யா மௌனமாக தலையசைத்தாள்.  வெள்ளை குர்த்தாவில் லட்சுமி வகுப்பைவிட்டு வெளியேறினாள்.

அப்போதெல்லாம் வித்யாவிஹார் பள்ளியில் வாரத்துக்கு ஒரு முறை இந்த ‘வெள்ளைச்சீருடை’ தினம். மாணவிகள் மற்ற நாட்களில் கருநீல சல்வாரும் துப்பட்டாவும் இளநீலக்கட்டம் போட்ட குர்த்தாவும் போட்டுவர வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் வெள்ளைக் குர்த்தா. வெள்ளை கான்வாஸ் ஷூ. மாணவர்களுக்கும் இதே நியமம், என்ன சல்வார்-குர்த்தாவுக்கு பதிலாக பாண்ட்-சட்டை. துப்பட்டா கிடையாது.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்துக்குள் ஒரு கூட்டம் ஆசிரியர்கள் மாறி மாறி ஷிஃப்ட் போட்டு பிள்ளைகளை கண்போனபோக்கில் நிறுத்தி சீருடைகளை சரிபார்ப்பார்கள். நுணுக்கி நுணுக்கி நோட்டமிடுவார்கள். நகங்களை வெட்டியிருக்க வேண்டும். ரிப்பனை முறுக்கியிருக்க வேண்டும். முகத்தில் முடி வளர்ந்திருந்தால் மழித்திருக்க வேண்டும். துப்பட்டாவை பெரிய பதாகையாக மடித்து பின் குத்தி நிலைநிறுத்தப்பட்டிருக்கவேண்டும். அதன் முனை காற்றில் பறக்காதபடிக்கு தோளுக்குப்பின்னால் முடித்துவிடப்பட்டிருக்க வேண்டும். வெள்ளைச் சீருடை பளீரென்று ஒரு பொட்டு கறையில்லாமல் முகத்திலறையும்படி இருக்கவேண்டும்.

உடலோடு ஒட்டிய வெள்ளை குர்த்தாவின் நுணி கால்களில் படபடக்க லட்சுமி படியேறிச்சென்றாள். மூன்று மாடிகள். மூச்சு வாங்க ஓடி வகுப்பை அடைந்தாள். நல்ல வேளை அடுத்த வகுப்புக்கான ஆசிரியர் வரவில்லை. கழுத்திலிருந்து நெஞ்சுக்குள் வேர்வை வழிந்தது. தன்னுடைய இருக்கையை அடைந்தபோது எல்லோரும் அவளையே பார்த்தார்கள். பிரீதி “துப்பட்டா எங்கடீ?” என்றாள். “நீ மொதல்ல தள்ளு…” என்று அவளுக்கும் ஜெனிஃபருக்கும் நடுவே தன்னை பொருத்திக்கொண்டாள் லட்சுமி.

மேசை மேல் அவள் பாதியில் விட்டுச்சென்ற ஹைட்ரா தும்பிக்கைகளை ஆர்வமாக துழாவியபடி காத்திருந்தது. எத்தனை ஆனந்தம்! நொடிப்பொழுதில் லட்சுமிக்கு முகமெல்லாம் குன்றும் குழியுமாய் பிளந்தது. ஒருநொடிக்கு அவளும் எங்கேயோ நெல்குருத்துபோல் ஆடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் ஜென்னிஃபர் “கைல என்ன?” என்றாள். சிரிப்பு மறைய “ம்ம்?” என்று குனிந்தாள். இரண்டு கைகளிலும் எதையோ கெட்டியாக பிடித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் உணர்ந்தாள். இடது கையில் ரத்தம்படிந்த தாள்களை சுருட்டிவைத்திருந்த சிப்ஸ் பாக்கெட். வலதுகையில் சிவப்பு நிற மானிட்டர் பேட்ஜ்.

என்ன செய்வதென்று தெரியாமல் சிப்ஸ் பாக்கெட்டை தன்னுடைய ஸ்கூல் பேக்கின் ஒரு மூலையிலேயே அமுக்கி வைத்தாள். வீட்டுக்குப்போய் தூரப்போடலாம். கைகூட கழுவவில்லையே? அதனால் என்ன, பேப்பர்தானே? ஒன்றும் வியாதியெல்லாம் தொத்திக்கொள்ளாது… அவள் மானிட்டர் பேட்ஜை மீண்டும் நெஞ்சில் குத்திக்கொண்டிருந்தபோதே வைஸ் பிரின்சிபல் கிருஷ்ணகுமாரி டீச்சர் வகுப்பில் நுழைந்தார்.

அது அவருடைய வகுப்பு என்பதையே லட்சுமி மறந்துவிட்டிருந்தாள். இறுக்கிப் போர்த்திய முந்தானையும் இழுத்துக்கட்டிய கொண்டையுமாக அவருடைய குட்டி உருவம் உள்ளே உருண்டு வந்தது. வெறப்பா கைய கட்டிகிட்டு நிக்குற ஹைட்ரா! லட்சுமிக்கு சிரிப்பாக வந்தது. “ஏய், குனி. அவுங்க கண்ல பட்ட சாவுதான்,” என்று பிரீதி காதை கடித்தாள்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் அனாவசியமாக எந்த உடலசைவையும் செய்வதில்லை. கை உயர்த்துவதில்லை. குரல் உசத்துவதில்லை. கண்ணோட்டத்திலேயே வகுப்பை கட்டுக்குள் கொண்டுவரும் ஆற்றல் கொண்டிருந்தார். இப்போதும் கண்ணாடிவிளிம்பிலிருந்து இரண்டுபக்கமும் தொங்கிய திரி ஊசலாட கண்களை உயர்த்தி வகுப்பை நோட்டம் விட்டார் டீச்சர். உடனே சலசலப்பு அடங்கியது. அமைதி.

வரலாற்றுப் பாடம் தொடங்கியது. சுதந்திரப்போராட்டப்படலம். காந்தி இரண்டாம் வட்டமேசை மாநாட்டுக்கு 1931-ல் லண்டன் செல்கிறார். கச்சையாகக்கட்டிய ஒற்றைக் கதராடையில் லண்டன் குளிரையும் அங்குள்ள பிரிட்டிஷாரையும் எதிர்கொள்கிறார் காந்தி. பிறகு அரிஜனங்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அரிஜனமும் பொதுஜனம் அல்லவா? அவர்களுக்கும் கைகொடுத்து உதவவேண்டியது கடமையல்லவா? 1932-ல் பூனா ஒப்பந்தம் கையொப்பமாகிறது. 1935-ல் இந்திய அரசுச் சட்டம்… கிருஷ்ணகுமாரி டீச்சர் ஆண்டுகளையும் நிகழ்வுகளையும் மென்மையாக பிசகில்லாமல் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிச் செல்வதே வரலாற்றுப்பாடம் எடுக்கும் வழிமுறை. மாணவர்கள் அவற்றை அப்படியே வார்த்தை மாறாமல் எழுதிக்கொண்டிருந்தார்கள். 1937-ன் தேர்தல்களுக்கு வந்த போதுதான் நீல அலையாகத்தெரிந்த மாணவிகள் பக்கத்தில் ஒரு வெண்ணிற உருவை கண்டுகொண்டார்.

“லக்‌ஷ்மி!”

வெள்ளை குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு லட்சுமி நீலத்திரைக்குமேல் எழுந்தாள். விரல்களை இறுக்கி மடித்து தலை கவிழ்ந்தாள். எல்லோரும் திரும்பினார்கள்.

“ஒய் ஆர் யூ நாட் இன் யூனிஃபார்ம்?” டீச்சரின் குரல் அறை முழுவதும் ஒலித்தது.

லட்சுமி ஒன்றும் சொல்லாமல் நிமிர்ந்து டீச்சரின் கண்களை சந்தித்து மீண்டும் தாழ்த்திக்கொண்டாள்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் அவள் பெஞ்சை நோக்கி விடுவிடுவென்று நடந்து வர லட்சுமி தன்னை அறியாமலேயே பின்வாங்கினாள். கிருஷ்ணகுமாரி டீச்சர் பையன்கள் சேட்டைசெய்தால் நடுவகுப்பிலேயே தொப்புள்சதையை பிடித்து திருகுவார். அப்போது அவளையும் அப்படி செய்யுமளவுக்கு அவர் உடலில் வேகம் இருந்தது.

ஆனால் டீச்சர் அப்படியேதும் செய்யவில்லை. அவளை அடைந்தார். தாழ்வாக, நெருக்கமாக, சீரலாக, அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த ஆபாசம் பேசும் குரலில், “ஏய், துப்பட்டா எங்கடீ?” என்றார்.

அவள் அப்போதும் பதில் சொல்லாமல் நின்றாள்.

டீச்சரின் பார்வை அவள் மீது ஊறிச்சென்றது. அவர் பார்வை பட்ட இடங்களிலெல்லாம் கண்களாக முளைத்துவிட்டதுபோல் இருந்தது லட்சுமிக்கு.

“ஸிட் டௌன்,” என்றார்.

தோள்களை குறுக்கியபடி லட்சுமி உட்கார்ந்தாள். தலையை குனிந்தாள்.

ரெக்கார்ட் நோட்டிலிருந்து ஹைட்ரா எல்லா கைகளையும் ஆட்டியது. அழாதே, அழாதே என்பதுபோல்.

“ஹைட்ரா ஆழத்தில் வாழும். ஹைட்ரா தண்ணீரில் நீந்தும். ஹைட்ராவுக்கு கண் தெரியாது. ஹைட்ராவுக்கு கை மட்டும் தான் உள்ளது. ஒரு கை வெட்டப்பட்டால் ஹைட்ராவுக்கு அந்த இடத்தில் மற்றொரு கை முளைக்கும்.” பாடத்தின் வரிகளை லட்சுமி தனக்குள் அனிச்சையாக மறுபடியும் மறுபடியும் சொல்லிக்கொண்டே இருந்தாள். வார்த்தைகளை அப்படி இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருப்பது வரை அழுகை வராது என்று அவளுக்குத்தெரியும்.

“ஏய் துப்பட்டாவ என்னடீ பண்ண? அவங்கட்ட சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே?” என்று முணுமுணுத்தாள் பிரீதி. லட்சுமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. வினோதும் கார்த்தியும் திரும்பி பரிதாபமாக பார்த்தார்கள்.

வகுப்பு முடிந்த கையோடு டீச்சர் லட்சுமியை எழுப்பினார். மூன்று மாடிகள் இறங்கி கீழ்தளத்துக்கு அவர்களுடைய அறைக்கு கூட்டிச்சென்றார். தலைகுனிந்தபடியே லட்சுமி அவரை பின்தொடர்ந்து இறங்கினாள்.

தன்னுடைய அறையிலிருந்து லட்சுமியை அவள் அப்பாவுக்கு போன் போட்டுத்தரச்சொன்னார் டீச்சர். போனில் மென்மையாக, நிதானமாக, ஆனால் வலுவாக பேசினார்.  “ஆமா சார். ப்ளீஸ் கம் இம்மிடியட்லி… இல்ல, பதட்டப்பட ஒண்ணுமில்ல, ஆனா நீங்க வந்தா பெட்டர்.”

லட்சுமி அறையின் ஒரு மூலையில் அதே வெள்ளை குர்த்தாவில் உட்கார்ந்திருந்தாள். தன்னுடைய தாள்களில் மூழ்கியிருந்த கிருஷ்ணகுமாரி டீச்சர் அவ்வப்போது நிமிர்ந்து கண்ணாடிச்சில்லுக்கு மேலிருந்து அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கினார். அவருக்குப்பின்னால் ஒரு சட்டகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கண்சொக்கி நான் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல் இருந்தார். பக்கத்திலே வெண்சேலையில் சாரதாதேவி அந்த அரங்கை பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

டீச்சர் நிமிர்ந்தார். “நீ உள்ள ஷிமீஸ் போடுறதில்லியா?” என்றார்.

லட்சுமி குனிந்து தோளுக்குள் விரலை விட்டு ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டாள்.

குர்த்தாவுக்கடியில் அதே வெண்ணிறத்தில் பருத்தி ஒற்றையாடையாக ஷிமீஸ் போட்டிருந்தாள். அதற்கடியில் உள்ளாடை. பொதுவாக இந்த அமைப்புக்கு மேல் துப்பட்டாவும் இருக்கும். இன்று இல்லை. ஓடி வியர்வையில் தோலோடு ஒட்டியதால் எந்த ஆடையும் தனியாகத் தெரியவில்லை. அவள் ஏதும் சொல்லவில்லை.

குரல் மாறியது. “காலையில துப்பட்டா போட்டுட்டுதான வந்த… எதுக்கு கழட்டுன? யாராவது பாத்தா தப்பா நெனைப்பாங்கல்ல? அதானே டீச்சர் கேக்கறேன்?”

ஆனால் அதற்கும் அவள் ஏதும் சொல்லவில்லை. தலை குனிந்தபடியே இருந்தது.

கிருஷ்ணகுமாரி டீச்சர் கண்களை சுறுக்கினார். “கேக்கறேன்ல? அங்க என்ன தனியா யோசனை? இப்படி கொஞ்சம் இறங்கி வர்ரது.”

லட்சுமி கண்கள் படபடக்க நிமிர்ந்து தலையசைத்தாள். கைவிரல்களை மடியில் முஷ்டியாக மடக்கிக்கொண்டாள். மேசை மீதிருந்த தூசின் மேல் ஹைட்ராக்கள் நெளிந்தன. கைகள் காற்றை அளைந்தன. அவை கொடிகளைப்போல் படபடத்தன. சுழலாக வட்டம்போட்டன. கைகோர்த்து நடனமிட்டன. லட்சுமி அவற்றை பார்த்துக்கொண்டிருந்தாள்.

லட்சுமியின் அப்பா வர ஐந்து மணிக்கு மேல் ஆனது.

“மேடம்… என் டாட்டர்… சி.லட்சுமி…” உள்ளே செருகப்படாமல் பாண்டுக்கு வெளியே தொங்கிய சட்டைநுணி மெல்லத்திரும்பிய ஃபேன் காற்றில் துடித்தது.

“உட்காருங்க. லட்சுமியோட அம்மாவால வரமுடியலியா?”

“இல்ல மேடம்…” லட்சுமியின் அப்பா தயங்கினார். “அவ இல்ல. இவளுக்கு மூணு வயசிருக்கும். அப்ப ஒரு ஆக்சிடண்ட்ல போயிட்டா”

“ஓ… ஐ யம் சாரி.” டீச்சர் கண்களை விலக்கிக்கொண்டார். மீண்டும் அவர் முகத்தை பார்த்தார். “இல்ல, கொஞ்சம் டெலிகேட் இஷ்யூ… அதான் உங்ககிட்ட எப்படி டிஸ்கஸ் பண்ணன்னு தெரியல…”

பெருமூச்சு விட்டார். “சார், தப்பா எடுத்துக்காதீங்க. ஆனா சொல்றது எங்க கடமையில்லிங்களா? உங்க டாட்டர்… ஷீ இஸ் நாட் அ சைல்ட் எனிமோர். அவளுக்கு இன்னும் கொஞ்சம் தன்ன பத்தின சென்ஸ் இருக்கணும் சார்.”

“மேடம், என்ன நடந்துச்சு?” லட்சுமியின் அப்பா திரும்பி மகளை பார்த்த்தார். “என்ன டா?”

ஒரு ஹைட்ரா கைகளை விரித்து காற்றாடி போல் அவள் கண்ணுக்கு முன்னால் மெல்ல சுற்றிக்கொண்டிருந்தது. அப்பா பார்த்ததை லட்சுமி பார்க்கவில்லை.

டீச்சர் கண்ணாடியை கழற்றினார். “சார், இன்னைக்கு அவ துப்பட்டா… அதான் பிள்ளைங்க மேல போடுவாங்களே… அதப்போடாம என் கிளாசுக்கு வந்தா. எங்கேயோ தொலச்சிருக்கா. நானும் விசாரிச்சு பாத்திட்டேன். சொல்லமாட்டேங்குறா. என்ன கேட்டாலும் உம்முணாம்மூஞ்சி கல்லு மாதிரி உக்காந்துட்டிருக்கா.” ஒரு கோப்பைத் திறந்தார். “இதோ நீங்களே பாருங்க. காலையில ஃபுல் யூனிஃபார்ம்லதான் வந்திருக்கா. ரெக்கார்ட்ல இருக்கு. நடுவுல எங்கியோ லூஸ் பண்ணியிருக்கா.”

லட்சுமியின் அப்பா இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தார்.

“மேடம்… இது… எங்கியாவது விழுந்திருக்கும்…” என்றார்.

டீச்சர் நெற்றி சுருக்கினார். “என்ன சார் சீரியஸ்னெஸ் புரியாம பேசரிங்க? மிஸ்பிளேஸ் பன்றதுக்கு துப்பட்டா என்ன சாவிக்கொத்தா? பின்பண்ணி வரணும்னு இன்சிஸ்ட் பன்றோம். அதப்போயி எதுக்கு கழட்டணும் சொல்லுங்க? அப்புறம் துப்பட்டா போடலன்றளவுக்கு அவ்வளவு மறதியா ஒரு பொண்ணுக்கு?

“சரி, நீங்க சொன்ன மாதிரியே விழுந்திருக்கட்டும். அப்ப கேட்டா சொல்றதுக்கென்ன?” டீச்சர் அவரை ஓரக்கண்ணால் பார்த்தார். “வேறெங்கேயாவது போயிருக்கக் கூடாதில்ல?”

லட்சுமியின் அப்பா ஒன்றும் சொல்லாமல் வெறிக்க டீச்சர் கண்ணாடியை துடைத்து அணிந்தபடி தொடர்ந்தார். “துப்பட்டா தொலஞ்சுபோனதுகூட சரி சார். ஆனா பாருங்க. அதப்பத்தின அக்கறையே இல்லாம இருக்கா. புரியுதுங்களா சார்?” டீச்சர் தாள்களை சேர்த்து கொத்தாக அடுக்கி ஃபைலுக்குள் சேர்த்து அதன்மீது கைகோர்த்து பாந்தமாக இருத்தி அவர் கண்களை சந்தித்தார். “அவளுக்கு தன்னப்பதின சென்ஸே இல்ல. எங்கேயோ இருக்கா. அதத்தான் சொல்ல வர்ரேன்.”

அப்பா அவளை மீண்டும் திரும்பிப் பார்த்தார். அவளுடைய வெள்ளைச்சீருடை அப்போதுதான் அவர் கண்களில் பட்டதுபோல் ஒரு நொடி விழித்துக் கொட்டினார். பெரிய பதாகையைப்போல் நெஞ்சின்மேல் மையமாக குத்தியிருந்த சிவப்புநிற வட்டத்திலிருந்து அவரால் கண்களை எடுக்கமுடியவில்லை.

குரலை மீடெட்டுத்து லட்சுமியின் அப்பா மெல்ல, “மேடம்… தப்பா ஒண்ணும் நடந்திருக்காது…
நல்லா விசாரிச்சுப் பாத்தீங்களா?” என்றார்.

கிருஷ்ணகுமாரி டீச்சர் பொறுமையிழந்த உச்சுக்கொட்டுடன் நிமிர்ந்தார்.

“சார், தப்பா எதுவும் நடந்திருக்காதுன்னே வெச்சுக்குவோம். சரி. ஆனா கேள்வின்னு வந்திருச்சுல்ல? இப்ப நான் கேக்கறா மாதிரி அவ வெச்சுக்கலாமா, சொல்லுங்க? அந்த சென்ஸ் அவளுக்கா இருக்கணும் சார். நாமள எல்லாரும் பாக்கறாங்களே, கேள்வி கேப்பாங்களேன்ற உணர்வு உடம்போட இருக்கணும். எல்லாம் லைஃப்ல நெறைய பார்த்தாச்சு சார்… அந்த ஆதங்கத்துல சொல்றேன். அவ கொழந்த இல்ல. அம்மா இல்லாத பிள்ளைன்னு வேற சொல்றிங்க, வீட்ல யாராவது பெரியவங்கள விட்டு பேசிப் புரியவைங்க சார்…”

பேச்சுமும்முறத்தில், ஒரு ஹைட்ராவின் கை அந்த அறையிலிருந்து நீண்டு வெளிச்சென்றதை இருவருமே கவனிக்கவில்லை. அது தாழ்வாரங்களில் தலைகவிழ்த்தபடியே கண்ணில்படாமல் ஒழுகிச்சென்றது. நைன் – சி வகுப்பின் கடைசி பெஞ்சில், லட்சுமியின் துப்பட்டா முனையை கெட்டியாக பிடித்துக்கொண்டு அவள் வருவதற்க்காக அப்போதும் காத்துக்கொண்டிருந்த ஐஷ்வர்யாவின் கையை அடைந்தது. தலைதூக்கி, ‘நான்தான்’, என்று மெல்ல முட்டியது.

முட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை

ஞாயிறு மதியம் ஒரு மணியளவில் நண்பனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேன். ‘சண்டே லஞ்சுக்கு வாடா,’ என்று நேற்று அழைத்திருந்தான். நான் மட்டும் வருமாறு அவன் சொல்லவில்லையென்றாலும், என் குடும்பத்தை பற்றி குறிப்பிடவில்லை என்பதால் குழம்பினேன். ஆனால் முன்பொருமுறை மனைவி, மகனுடன் அவன் வீட்டிற்குச் சென்று சாப்பிட்டிருப்பதால் தங்களை அழைக்கவில்லை என்றாலும் என் வீட்டினர் கோபப்பட மாட்டார்கள் என்பதால் நான் மட்டுமே செல்வதாக முடிவு செய்திருந்தேன். அடுத்த குழப்பம், தனியாக வரச் சொல்கிறான் என்றால் பணவுதவி கேட்கப் போகிறானோ? அவனுக்கு கணிசமான சம்பளம், சொந்த வீடு கட்டியிருக்கிறான். ஆனால் அதை வைத்து முடிவு செய்ய முடியாது. என் பெயரிலும் அபார்ட்மெண்ட் இருக்கிறது, கூடவே இன்னும் பதினொரு வருடத்திற்கு ஈ.எம்.ஐயும். எந்தப் பெயர் வைத்துச் சுட்டினாலும், அது கடன்தானே. அவனுக்கும் பணப் பிரச்சனை இருக்கக்கூடும். அப்படி அவன் கடன் கேட்டால் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன்தான் வந்திருந்தேன்.
‘பையன் எங்கடா?’ ஹாலில் அமர்ந்ததும் நான் கேட்க, ‘வெளையாட போயிருக்கான்’ என்றவனின் மனைவியும் ஹாலுக்கு வந்து பேச ஆரம்பித்தார். அலைபேசியில் நேரத்தை பார்த்தேன், வந்து பத்து நிமிடத்திற்கு மேலாகிவிட்டது. சமைக்கும் வேலை இல்லையா, அல்லது எல்லாம் முடித்து விட்டாரா? மகன் வேறு வீட்டில் இல்லை, கண்டிப்பாக உதவி கேட்கப் போகிறான். ‘ஒரு நிமிஷம், வாட்ஸாப் இம்சை. கடுப்பேத்தறாங்க, ரிப்ளை பண்ணிடறேன்,’ என்றுவிட்டு வாட்ஸாப்பில் வந்திருந்த மெசேஜ்களை படிக்க ஆரம்பித்தேன். நேர் உரையாடலைத் தவிர்க்க நான் கடைபிடிக்கும் உத்தி. வராத செய்திகளை படிப்பது போல் ஒன்றிரெண்டு நிமிடங்கள் கழித்தால் எதிரே பேசிக்கொண்டிருப்பவர் கவனமும் சிதறும்.

இந்த முறை உண்மையாகவே நான் படிக்கச் செய்திகள் இருந்தன. பள்ளி வாட்ஸாப் க்ரூப்பில், கூடப் படித்தவனின் அன்றைய கனவுக் கன்னியான சக மாணவி பற்றி ஒருவன் சீண்ட அதையொட்டி தொடர்ந்து பல மெசேஜ்கள் வந்து விழுந்து கொண்டிருந்தன. என்னுடைய பங்களிப்பையும் அளித்தபடி, நண்பன் பணவுதவி கேட்டால் என்ன சொல்வது என்று யோசித்தேன். நேற்றிலிருந்து பதில் கிடைக்காத கேள்வி, அந்த நேரத்திற்கு என்ன தோன்றுகிறதோ, அதுதான் பதில். ‘ஸாரி, வாட்ஸாப் அன்இன்ஸ்டால் பண்ணிடப் போறேன்’ என்றபடி அலைபேசியை அருகில் வைத்து விட்டு எதிரே நோக்கினேன்.

ஹாலில் யாருமில்லை. நண்பனை பெயர் சொல்லி அழைத்ததற்கு எந்த பதிலுமில்லை. அவன் மனைவி பெயர் தெரியுமென்றாலும், அப்படிச் சொல்லி அழைத்ததில்லை. ‘சிஸ்டர்’ என்றழைப்பது என்னை வெறி கொள்ளச் செய்யும் செயல். ‘மேடம்’ பொருந்தாது. ‘ஏங்க, ஹலோ’ என்றபடி சமையலறை வாசலுக்குச் சென்றேன், யாருமில்லை. திறந்திருந்த அவன் மகனின் படுக்கையறை காலி. மூடியிருந்த மாஸ்டர் பெட்ரூம் கதவைத் தட்ட தயங்கினேன். விருந்தாளி வந்திருக்கும்போது அவனை விட்டுவிட்டு கதவை மூடி.. அதுவும் பகல் நேரத்தில்… வக்கிர புத்தி எனக்கு. தட்டியதற்கு பதிலில்லை. உள்ளே தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ? கதவைத் தள்ள, திறந்தது. இங்குமில்லை. வாசலுக்கு வந்து நடமாட்டமில்லாத தெருவை கவனித்த பின் மாடிக்குச் சென்று பார்த்தேன். எங்கே போனார்கள்?

காலை பத்து-இருபதுக்கு ‘எங்கே போனார்கள்?’ என்ற வரியை எழுதினேன். மாலை நான்கு மணியானது. என் நண்பனும் அவன் மனைவியும் எங்கு சென்றிருக்கக் கூடும் என்பதற்கான ஓரிரு சாத்தியக்கூறுகளைக்கூட என்னால் யூகிக்க முடியிவில்லை. புனைவெழுத ‘முயற்சிக்கும்’ எனக்கு ‘கற்பனை’ பிரச்சினைக்குரிய விஷயம் என்பதில் உள்ள நகைமுரணை நான் உணர்ந்தே இருக்கிறேன் என்றாலும், இந்தக் கதையை எழுத ஆரம்பித்ததற்கு காரணம் உண்டு. இதில் வரும் நண்பன் கற்பனை பாத்திரம் அல்ல, பத்து நிமிட தூரத்தில் வசிப்பவன்தான். ஏழெட்டு மாதத்திற்கு முன் வாட்ஸாப் க்ரூப்பொன்றை உருவாக்கி அதில் என்னையும் சேர்த்தான். பத்து பேர் இருந்திருப்போம். ஆரம்பத்திலிருந்தே அதில் எந்த உரையாடலும் பெரிதாக நிகழவில்லை. ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கம் சொல்லும் மெசேஜ்கள் சில நாட்கள் வந்து பின் அவையும் நின்றன. சென்ற வாரம் இந்த குழுமம் குறித்து நினைவுக்கு வந்து அதில் நுழைந்தேன். என்னையும், வேறொருவரையும் தவிர மற்ற அனைவரும் க்ரூப்பிலிருந்து வெளியேறி இருந்தார்கள். அதை ஆரம்பித்த என் நண்பனும்தான். அவனை வாரமொரு முறையேனும் பார்க்கிறேன், தினமும் வாட்ஸாபில் உரையாடுகிறோம், ஆனால் இதை அவன் என்னிடம் சொல்லவில்லை. அவனை வசை பாட அலைபேசியில் அழைப்பு விடுக்க எண்ணியவனுக்கு ஒரு விஷயம் உறைத்தது. இது ஒரு அபத்த சுவை கொண்ட சம்பவம் (அல்லது நான்அப்படி தான் அதை எடுத்துக் கொள்கிறேன்), இதை புனைவாக்கிவிடலாமே.

நண்பன் செய்ததை விவரித்து, அதனால் கடுப்புறும் கதைசொல்லியாகிய நான், புதிதாக இன்னொரு க்ரூப்பை உருவாக்கி அதில் அவனைச் சேர்த்து பின் விலகி விடுவதாக முதலில் எழுத எண்ணியதை அது புனைவு போல இல்லையென்பதாலும், சிறுபிள்ளைத்தனமான பழிவாங்கும் செயலாக இருப்பதாலும் அதை ஒதுக்கினேன். ஏன் நடந்ததை அப்படியே எழுத வேண்டும். அவனை பழிவாங்க வேறு வழி இல்லாமலா போய் விடும் என்று தான் இந்த புனைவின் ஆரம்பத்திலுள்ள ‘கதையை’ எழுத முயன்று, பிள்ளையாரை எப்போதும் போல் குரங்காக மாற்றினேன்.

இரண்டு நாட்கள் அந்தக் கதையை பற்றி யோசிக்காமலிருந்துவிட்டு . மீண்டும் அதை எடுத்தேன். மர்மம், திகில் என கதையின் ஆரம்பம் ஓரளவிற்கு சுவாரஸ்யமாக உள்ளது என்றுதான் நினைக்கிறேன், ஆனால் இதுவரை அதை கொண்டு செல்லும் வழி புலப்படாத நிலையில் இனி அது தோன்றுமென்று நம்புவது வீண். என் போதாமைகளை நன்குணர்ந்தவன் நான். தவிர இதை திகில் கதையாக எழுதி முடித்தால் இலக்கிய உலகின் அவச்சொல்லுக்கு ஆளாக வேண்டி வரும். அதில் எனக்கு அனுபவம் உண்டு. எனவே மீண்டும் முதலில் யோசித்தது போல் நண்பன் செய்ததை விவரித்து அதை வேறு திசையில் கொண்டு செல்லலாம்.

இந்த முறை என் முன் சில பாதைகள் தெரிந்தன.

  • க்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவருடன் கதைசொல்லி ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்க ஆரம்பித்து, அவர்களுக்கிடையில் ஏற்படும் உறவை விவரிக்கலாம். அந்த ஒரு கணம், யோசிக்காமல் கதைசொல்லி அனுப்பும் செய்தி இரண்டு பேரின் வாழ்வை எப்படி திசைமாற்றுகிறது என்பது பற்றிய புனைவாக அது உருபெறக்கூடும். ஆனால் ஆண்-பெண் உறவு என்ற பகற்கனவை பேசும் கதை, அதை எழுதியவன் எளிய குமாஸ்தா என்ற விமர்சனம் வரும்.

 

  • க்ரூப்பில் மிச்சமிருப்பவரை பெண்ணாக மாற்றி, அவரிடம் கதைசொல்லி, ‘இப்படி எல்லோரும் விலகி விட்டார்களே’ என்று பேச்சு கொடுக்கிறான். அந்தப் பெண் ‘என்னை தொந்தரவு செய்யாதீர்கள்,’ என்று பதில் அனுப்ப, இவன் எரிச்சலுற்று தொடர்ந்து ‘இனிய காலை’, ‘இனிய இரவு’ வணக்கங்களை அனுப்புகிறான். அந்தப் பெண் தொடர்ந்து கடுமையாக எதிர்வினையாற்றுகிறார். வாட்ஸாப் மோதல் முற்றி, கதைசொல்லி அந்தப் பெண்ணைப் பற்றிய சிந்தனையால் பீடிக்கப்படுகிறார். அவளுடைய பேஸ்புக் விவரத்தை கண்டுபிடித்து இணையத்தில் பின்தொடர ஆரம்பிக்கும் கதைசொல்லி, பின் வீட்டின் முகவரியையும் அறிந்து கொண்டு மாலை வேளைகளில் அந்தத் தெருவிலேயே சுற்றுகிறார். தான் வெளியே செல்லும்போதெல்லாம் பின்னால் ஒருவன் வருவதை கவனிக்கும் அப்பெண் முதலில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும் பின் பயந்து கணவனிடம் இது குறித்து சொல்கிறார். கதைசொல்லிக்கும் கணவனுக்கும் மோதல் (வாய்ச் சண்டை தான், கைகலப்பு பற்றி எனக்கு எழுத வரவில்லை), அதன் பின்பும் தன் நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாத கதைசொல்லி, ஒரு கட்டத்தில் உளச்சிக்கல் முற்றி அப்பெண்ணின் வீட்டினுள் நுழைந்து விட அவர்கள் காவல்துறையிடம் புகார் செய்கிறார்கள். பெரிய சிக்கலில்லாத மத்திய தர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன் சிதைவதை பற்றிய புனைவு, காமம் – எளிய பகற்கனவு – சிறிது கூட கிடையாது, எனவே இந்தக் பாதையைப் பொறுத்தவரை நான் குமாஸ்தா இல்லை. ஆனால் ‘மிட் ஏஜ் க்ரைசிஸ்’ பற்றிய சராசரி கதை என்று இது விமர்சிக்கப்படக்கூடும். ‘என்னடா உன்னோட சொந்தக் கதையா இது,’ என்று கேட்கும் நண்பர்கள் வேறு எனக்கு வாய்த்திருக்கிறார்கள்.

 

  • க்ரூபில் கதைசொல்லியைத் தவிர யாருமே இல்லை. தான் அனுப்பிய செய்திகளால் தான் அனைவரும் வெளியேறி விட்டார்கள் என்று நினைக்கும் கதைசொல்லி வெறிகொண்டு அந்த குழுமத்தில் தொடர் மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பிக்கிறான். பின் அச் செய்திகளுக்கான எதிர்வினைகளும் அவனாலேயே அனுப்பப்படுகின்றன. ஒரு செய்திக்கு நாலைந்து விதமான – அதை ஏற்றும், மறுத்தும் – எதிர்வினைகளை அனுப்ப ஆரம்பிக்கிறான். குழுமத்தில் கடும் விவாதங்களை ஒற்றை ஆளாய் அவனே நடத்தி, வேறெதிலும் கவனம் செலுத்தாமல் பாராட்டுக்களும், வசைகளும் நிறைந்து வழியும் அந்தக் குழுமத்தில் மூழ்கி விடுகிறான். (ஒரு ஆள் மட்டும் உள்ள க்ரூபில், கேள்வியும் நானே, பதிலும் நானே பாணியில் மெசேஜ் அனுப்ப முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்). கொஞ்சம் கூட நம்பும்படி இல்லையென்ற விமர்சனம் இந்தக் கதைக்கு கண்டிப்பாக வரப்போகிற விமர்சனத்தை மெய்நிகர் இணைய உலகைப் பற்றிய கூர்மையான அவதானிப்பை இந்தக் கதை முன்வைக்கிறது என்று எதிர்கொள்ள முடியும். முந்தைய பேஸ்புக் போஸ்ட்டை விட சிறிது குறைவாக லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்தாலும் சோர்வடைபவர்களைப் பற்றியும், நடுநிசியில் முழித்து அன்று மாலை தாங்கள் செய்த போஸ்ட்டிற்கு எத்தனை பேர் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள் என்று பார்ப்பவர்கள் பற்றியும் நாம் படிக்கிறோமே?

வார இறுதி வரை காத்திருந்தேன். மூன்றில் எதை தேர்வு செய்தாலும், ‘த ரோட் நாட் டேக்கன்’ என்று நான் வருந்த வாய்ப்பில்லை, எந்தப் பாதையில் சென்றாலும் அதன் முடிவு, புதைகுழி அல்லது முட்டுச்சந்துதான் என்று உறுதியாக தெரிந்தது. நிஜத்தை நிழலாக்குவது என்னால் இயலாது, எனவே நிஜத்தை அப்படியே எழுத வேண்டியதுதான். அதாவது, நடந்ததை நடந்தபடி விவரித்திருக்கும் இந்தக் கதை.

இதை நேற்றிரவு எழுதி முடித்து விட்டு பெரியவர் முற்றுப்புள்ளிக்கு அனுப்பினேன். இன்று பலமான காலையுணவை சாப்பிட்டு அவர் வீட்டிற்கு கிளம்பினேன். என் கதைகள் குறித்த அவருடைய விமர்சனங்களை கேட்டபின் அன்று முழுதும் உண்ணவே தோன்றாது, எனவே என் செவிகளுக்கான உணவை அவர் தரும் முன் என் வயிற்றை நிரப்பி விடுவேன். அவர் என்ன சொல்வார் என்பதும் எனக்கு இப்போதே தெரியும். (எப்போதும் அவர் சுட்டிக்காட்டும் இலக்கிய ஆளுமைகள்/ படைப்புக்கள் பற்றிய பெயர் உதிர்த்தல்கள் இந்தப் புனைவில் அதிகம் இல்லை என்பது சாதகமான அம்சம் என்று இப்போதே என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்கிறேன்1). அவர் விமர்சனத்தையும் புனைவாக்கி விடலாம். இரண்டு கதைகள். இரண்டில் ஒன்றாவது பிரசுரமாகாதா?

எப்படியிருந்தாலும் சரி, முற்றுப்புள்ளியை சந்தித்து திரும்பும்போது, இந்தக் கதையை என் நண்பனை படிக்க வைக்க வேண்டும். அவனுக்கு நான் தரக்கூடிய ஆகக் கொடூரமான தண்டனை இதுவாகத்தான் இருக்க முடியும். (‘ஆகக் கொடூரம்’ என்று எழுதவதற்கு தயக்கமாக இருந்தது. ஆனால், ‘ஆகச் சிறந்த’, ‘பேரன்பு’, ‘பெருங்கோபம்’, ‘ஆயிரம் அன்பு முத்தங்கள்’, ‘பெருங்கதையாடல்’ போன்ற மிகை சொற்றொடர்கள் இப்போது அதிகம் உபயோகப்படுத்தப் படுகின்றன என்று எனக்குத் தோன்றுவதால் நானும் அப்படியே செய்திருக்கிறேன், மற்றபடி இது பொருத்தமாக உள்ளதா என்பது குறித்து வாசகர்கள் தான் முடிவு செய்யவேண்டும்)