அஜய். ஆர்

முடிவிலி தருணங்கள்- காலத்துகள் குறுங்கதை

காலத்துகள்

போர்-பி வகுப்பறையில் ஹீமேன் தொலைக்காட்சி தொடரின் நேற்றைய அத்தியாயத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவனை, மேரி மார்க்கெட் மிஸ் அருகில் அழைக்கிறார். மேரி மார்க்கரெட் என்பதை மேரி மார்க்கெட் என்று அழைப்பதில்தான் பயல்களுக்கு குஷி. உள்ளங்கை தரையை நோக்கி இருக்குமாறு கையை நீட்டி விரல் முட்டியில் ஸ்கேலால் அடிவாங்கிவிட்டு தன் இருக்கைக்குச் செல்ல முயல்பவனை நிறுத்தி, ‘கோ தேர் அண்ட் ஸிட்,’ என்கிறார் மார்க்கெட் மிஸ். ‘மிஸ் மிஸ்’ என்று கெஞ்சுபவன் அவர் முன்னால் மீண்டும் கையை நீட்டுகிறான். பின்னாலிலிருந்து பயல்களின் கிண்டல் சிரிப்பொலி. ‘கோ தேர்’ என்று கையை ஓங்கிக் கொண்டு மிஸ் வர தளர்ந்த நடையில் அந்த பெஞ்ச்சிற்குச் சென்று அமர்கிறான்.

மூன்று பேர் அமரக் கூடிய பெஞ்ச்சின் இடது முனையில் இவன், அடுத்து சந்திரா, அதற்கடுத்து ப்ரியா. வகுப்பு நடக்கையில் பேசி மாட்டிக் கொண்டால் பெண்கள் அருகில் அமர வைக்கப்படுவது அவ்வப்போது தரப்படும் தண்டனைதான். இனி அடுத்த பீரியட் முழுதும் பயல்கள் கிண்டல் செய்து படுத்தி எடுப்பார்கள். யாராவது ஒருவன் மனமிரங்கி ஆட்காட்டி விரலை வளைத்து, நடு விரலை அதனுடன் இணைத்து இவன்த் தோளை தொட்டு பழம் விடும் வரை ‘ஏய் கிட்டக்க வராத’, ‘தொடாத’ தான். மார்க்கெட் மிஸ் இன்னும் இரண்டு மூன்று முறைகூட அடித்திருக்கலாம்.

முடிந்தவரை சந்திராவிடமிருது தள்ளி இருப்பதற்காக பெஞ்ச் முனையில் அமர முயன்றாலும், இரண்டு பேர் மட்டுமே சௌகரியமாக அமரக்கூடிய இடத்தில் இடைவெளி என்பது சாத்தியம் இல்லை. நேரே போர்ட்டை மட்டுமே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறான், மிஸ் ஏதோ சொல்கிறார். அடுத்த பீரியடிற்குப் பிறகு லஞ்ச் டைம். அதற்குள் பயல்களைச் சரிகட்டி விடவேண்டும். இதவரை நுகர்திராத மணமொன்றை உணர்பவன் தலை தாழ்த்தி சந்திராவைப் பார்க்கிறான். அவள் உடலிலிருந்தோ, பள்ளிச் சீருடையிலிருந்தோதான் அந்த வாசம் வருகிறது. வீட்டில் பண்டிகை நாட்களில்போது சாமி படங்களுக்கு மாட்டப்படும் பூச்சரங்கள் அடுத்த நாள் எடுக்கப்படும்போது ஒவ்வாமையையும், கிளர்ச்சியையும் ஒரு சேரத் தரும் மணத்தை போன்ற அடர்த்தியான வாசம். ஒரே ஒரு முறை அத்தர் தெளித்துக் கொண்டபோது நுகர்ந்த மணமும் இப்படித்தான் இருந்ததோ?

மீண்டும் அவள் பக்கம் திரும்புகிறான். வகுப்பில் இருக்கும் பெரும்பாலான பயல்களைவிட உயரம், உறுதியான உடல்வாகு சந்திராவிற்கு. உடலை அசைத்துக் கொள்கிறான், மனமும் நிலையழிகிறது. இடது கால் முழுதும் பெஞ்சிற்கு வெளியே இருக்குமாறு விலகுபவன் மீண்டும் அதை உள்ளிழுத்துக் கொள்கிறான். அடுத்த தன்னிச்சையான உடலசைவில் அவனுடைய உடலின் வலது பாகம் சந்திராவின் இடது பாகத்தை தொடுகிறது. இன்னும் நெருங்கி அவனைச் சூழும் அவளின் அடர்மணம். ஸ்கர்ட்டைத் துளைத்து வரும் அவள் கால்களின் வெப்பம், ஷார்ட்ஸ் அணிந்த இவன் தொடையைச் சுடுகிறது. வலது காலை மட்டும் சற்று நகர்த்த இருவரின் தொடைப் பகுதிகள் சமநிலையில் இணைகின்றன. சந்திரா, மார்க்கெட் மிஸ் சொல்வதை நோட்டில் குறித்துக் கொண்டிருக்கிறாள். ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறான். ‘போர்-ஏ’ க்ளாஸ் பெண்கள் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு ஓடுகிறார்கள். முதல் முறையாக பார்ப்பது போல் உள்ளது. பார்வையை விலக்குகிறான். அவஸ்தை. இது தவறில்லையா? ‘அவர் பாதர் இன் ஹெவன்’. மூச்சை உள்ளிழுத்து சந்திராவின் மணத்தை உடல் முழுதும் நிரப்புகிறான்.

oOo

ட்வெல்வ்-பியில் சதாசிவம் ஸார் வழக்கம் போல் கீச்சுக் குரலில் ஆங்கில பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார். எதேச்சையாக திரும்புவது போல் உமா அமர்ந்திருக்கும் பக்கம் பார்க்கிறான். ஜூலை மாத மதியம் மூன்றரை மணி வெயில் ஜன்னல் வழியாக பெண்கள் பகுதியை நிரப்பியிருக்கிறது. உமாவின் கன்னத்தில் வியர்வை வழிகிறதா என்பதை உறுதி செய்வதற்குள் ‘எதேச்சையாக’ பார்ப்பதற்கான நேரம் முடிந்த உணர்வு ஏற்பட ஸார் பக்கம் திரும்புகிறான். இனி சிறிது நேரம் கழித்துதான் பார்க்க வேண்டும். மீண்டும் எதேச்சை. எண்ணை வழியும் முகத்திலும் உமா துலக்கமாகத்தான் இருக்கிறாள். அவளுக்குப் பின் பெஞ்சில் அமர்ந்திருக்கும், சற்றே சதைப்பற்றான உதடுகளையுடைய மீராவிற்கு ஒருபோதும் வியர்க்காது போல.

பெண்கள் வரிசையில் கடைசி பெஞ்ச்சில் சந்திரா. இத்தனை வருடங்கள் இவனுடன்தான் படித்து வருகிறாள் என்றாலும் கண்ணில் படுவதென்பதோ இது போல் எதேச்சையாக எப்போதேனும்தான். தினமும் அட்டென்டென்ஸ் எடுக்கப்படும்போதுகூட அவள் மனதில் பதிவதில்லை. பெண்களுக்கு அருகில் அமர வைக்கப்படும் தண்டனையை ஐந்தாம் வகுப்புடன் நிறுத்தியாயிற்று. பயல்கள் அதற்கு அடுத்தான வகுப்புக்களில் அதை தண்டனையாக பாவிக்க மாட்டார்கள் என்பதை ஆசிரியர்கள் அறிந்திருக்கிறார்கள். பி.டி. பீரியட்டில் ஷார்ட்ஸ் அணிந்து பங்கேற்பதும் ஐந்தாவதுடன் முடிந்தாயிற்று.

சந்திராவிற்கு அன்று இவன் அவளருகில் அமர்ந்திருந்தது நினைவில் இருக்குமா? அன்று அனுபவித்த அவஸ்தையான கிளர்ச்சியை சந்துருவுடன்கூட பகிர்ந்து கொண்டதில்லை. ஆறாவது படிக்கும் போது தான் உமாவின் இருப்பை உணர ஆரம்பித்தான், பின் மீரா, கடந்த இரு வருடங்களாக அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் சுந்தரி அக்கா பற்றி குற்றவுணர்வு ஏற்படுத்தும் எண்ணங்கள். ஆனால் அந்த அரை மணி நேரத்திற்குப் பின் ஒரு முறைகூட சந்திராவிடம் ஈர்ப்பு ஏன் ஏற்பட்டதில்லை என்பதை புரிந்து கொள்ள முயன்று, அது இயலாமல் தலையசைத்துக் கொள்கிறான்.

oOo

நிச்சயதார்த்தம் முடிந்தபின் வனிதாவுடன் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறான். காரின் பின்னிருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருக்க, அவளுடன் ஒட்டியபடி மெல்லிய குரலில் உரையாடல். ‘நிவியா’ உபயோகிக்கிறாள். அசையும்போது அவள் உடுத்தியிருக்கும் பட்டுப் புடவையின் சரசரப்பில் உடல் கிளர்கிறது. யாரையும் முத்தமிட்டதுகூட கிடையாது, இன்னொருவரின் எச்சில் ருசி, மணம் எப்படி இருக்கும். வாட ஆரம்பித்திருக்கும், வனிதா சூடியிருக்கும், பூச்சரத்தின் மணம். வண்டி குலுங்க வனிதாவின் உடல் இவன் மீது சாய தொடைகள் ஒட்டுகின்றன. உமாவின் வியர்வை வழிந்த முகத்திலும், மீராவின் சதைப்பற்றான உதடுகளிலும், காரக் குழம்பு கிண்ணத்தை நீட்டும் சுந்தரி அக்காவிடமிருந்து வரும் பூண்டு, மசாலா பொடிகளின் மணத்திலும், இப்போது வனிதாவின் ‘நிவியா’ வாசத்திலும், தன் இருப்பை உணர்த்தியபடி இருக்கும் சந்திராவின் மணம். இதுவரையிலான பாலுணர்வுத் தருணங்களின் ஒவ்வொரு கணத்துடனும் பிணைந்திருக்கும், இனியும் பிணைந்திருக்கப்போகும், போர்-பியின் அந்தச் சில முடிவிலி நிமிடங்களை தன்னுள் நிகழ்த்திப் பார்ப்பவன், சந்திரா மீது இறுதி வரை எந்த ஈர்ப்பும் உருவாகாததின் முரண்நகையைப் புரிந்து கொள்ளச் செய்யும் முயற்சி எப்போதும் போல் தோல்வியடைகிறது. “என்ன சிரிக்கறீங்க?” என்று வனிதா கேட்பதற்கு பதில் சொல்லாமல் தலையசைத்துவிட்டு, கார் ஜன்னலுக்கு வெளியே பார்வையைச் செலுத்தி, “அப்ஸர்ட்” என்று முணுமுணுத்துக் கொள்கிறான்.

பேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

தீம் பார்க்கினுள் நுழைந்த அந்த குள்ளமான மனிதரை டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றிருந்தவர் தடுக்க, அவரிடம் தன் அடையாள அட்டையை தந்தார். கவுண்ட்டர் ஆசாமி அதை வாங்கிப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் திருப்பித் தந்தவுடன் நடக்க ஆரம்பித்தவர், தன் பின்னால் எழுந்த மெல்லிய சிரிப்பொலியை கவனித்ததைப் போல் காட்டிக்கொள்ளவில்லை. படிக்கட்டில் இறங்கியவுடன் உடை மாற்றும் அறைகள். அருகே நடப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பந்தலுக்கு கீழே இருந்த இருபது முப்பது நாற்காலிகளில் சிலர் அமர்ந்து, எதிரே இருந்த நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தங்கள் நண்பர்களை, உறவினர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிதுங்கும் தொந்திக்கு கீழே மிகச் சிறிய உள்ளாடையுடன் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் மூன்று குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த இரு பெண்களுக்கு அருகே வர, அனைவரும் நீச்சல் குளத்தில் இறங்கினார்கள்.

‘குட் மார்னிங் ஸார்’ என்று குரல் கேட்டு திரும்பி ‘குட் மார்னிங் வய்’ என்றார் குள்ளமான மனிதர்.

‘என்ன ஸார் பேர் இது?’

‘இந்தக் கதைக்கு மட்டும்தான்யா நான் எக்ஸ், நீ வய். இப்போதைக்கு இதுக்கு மேலலாம் யோசிக்க முடியாது, அடுத்த கதைல பேர் வெச்சிடறேன்னு சொல்லிட்டாரு ஆத்தர், என்ன செய்யறது. இது பரவாயில்லை, மொதல்ல ட்ரிப்பிள் எக்ஸ், ட்ரிப்பிள் வய்னு பேர் வெச்சார், நல்ல காலம் எடிட்டர் அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டார்’

‘கதையே வேணாம்னு சொல்லியிருக்கலாம்’

‘என்னய்யா’

‘ஒண்ணுமில்ல ஸார், ஏதோ பேருன்னு ஒண்ணு வெச்சாரே, போன கேஸ்ல பெயரிலியா இருந்ததுக்கு பரவாயில்லை. ஆனா பெர்மனென்ட் பேர் வைக்கும்போது நம்ம ஊர் பேரா வெக்கச் சொல்லுங்க, மேக் இன் தமிழ் நாடு. அவர் பாட்டுக்கு ஏதேதோ நாட்டு குற்றப் புனைவ படிச்சுட்டு உச்சரிக்கவே முடியாத பெயரா வெச்சிடப் போறார், அதுவும் ஐஸ்லேண்ட் நாட்டு க்ரைம் பிக்க்ஷன் ரைட்டர்ஸ் பெயரெல்லாம் சொல்றதுக்குள்ள வாய் சுளுக்கிடும் ஸார்’

‘மேக் இன் இந்தியாலாம் வடக்கத்திய கருத்தாக்க திணிப்புய்யா, நமக்கெல்லாம் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும், யாதும் ஊரே யாவரும் கேளிரதானே, அதனால எந்த பேர் வெச்சாலும் நம்ம கடமைய நாம சரியா செய்யணும். ஆனா கரடுமுரடா பெயர் வெச்சா அவருக்கு அத தமிழ்ல டைப் பண்றது கஷ்டமா இருக்குமே, அதனால ஈஸியாவே வைப்பார், கவலைப்படாத.’

‘சரி ஸார், எந்தப் பெயரா வேணா இருக்கட்டும், உலகத்திலேயே ஸ்காட்லாண்ட் போலீஸுக்கு அடுத்தது தமிழ் நாட்டு போலிஸ்னு ப்ரூவ் பண்ணுவோம்’

‘நாம அவங்களுக்கு அடுத்ததுன்னுலாம் யாருய்யா சொன்னது’

‘ஸி.ஐ.டி சங்கர், ரகசிய போலிஸ் 115, விருத்தகிரி, சங்கர்லால், விவேக்ன்னு ஒரு கூட்டமே பல காலமா இதைத்தான் சொல்லிட்டிருக்காங்க ஸார்’

‘அந்த ரகசிய போலிஸ்தான ஒரு குட்டைல குதிச்சு நீந்தி பாகிஸ்தான்லேந்து இந்தியாவுக்கு வருவாரு, ‘இந்தியான்னு’ தமிழ்ல வேற எழுதிருக்குமே.’

‘ரகசிய போலீஸ் பத்தி எதுவும் தப்பா பேசாதீங்க ஸார், அவர் வாத்தியார்’

‘அதுவும் சரிதான் நம்ம புலனாய்வை ஆரம்பிப்போம். எப்படி போகணும்?’ என்று கேட்டார் எக்ஸ்.

‘இந்தப் பக்கம் ஸார்’

ஐம்பதடி சென்றவுடன் இன்னும் ஆழமாக நீர் நிரப்பட்டிருந்த மற்றொரு நீச்சல் குளம். ‘அங்க பார்யா’ என்றார் எக்ஸ். முக்காடிட்டிருந்த பெண்கள் குளத்தின் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘மார்வாடீஸ் ஸார், இந்த முக்காடுல எந்தளவுக்கு மூஞ்சி தெரியும்’

‘அத விடு, எப்படி ஸ்விம் பண்ணுவாங்க?’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே முக்காடுப் பெண்களில் ஒருவர் புடவையுடனேயே நீரினுள் குதிப்பதைச் சிரித்தபடி பார்த்துக் கொண்டே நகர்ந்தார்கள். ‘காத்தால சாப்பிடக்கூட இல்ல ஸார்’ என்று மூடப்பட்டிருந்த புட் கவுண்ட்டரை கடக்கும்போது வய் சொல்ல, ‘மத்தியானம் நல்லா சாப்பிட்டுடலாம்யா, அதுக்குள்ள கேஸ் சால்வ் பண்ணிடுவோம்’.

‘முடியுமா ஸார்?’

‘கண்டிப்பா, இது ஷார்ட் ஸ்டோரிதானே. ஆரம்பிச்சு ஒரு பக்கம் முடிஞ்சிருக்கும், இது வரைக்கும் ஆத்தர் கதைக்கே வரல, வெட்டிப் பேச்சு பேச வைக்கிறார். இனிமே கதைய ஆரம்பிச்சு சட்டு புட்டுன்னு முடிச்சுடுவார். ஆனா இங்க எதுவும் ப்ராப்ளம் இல்ல போலிருக்கே, எல்லாரும் ஜாலியாத்தானே இருக்காங்க’

‘பேய் ஸார், இங்க ஏதோ பேய் நடமாட்டம் இருக்கறதா கம்ப்ளைண்ட் வந்திருக்கு, தீம் பார்க் ஓனர் செல்வாக்கானவர் ஸார், அதனால இத பெரிசா எடுத்துக்கிட்டு நம்மள கவனிக்க சொல்லிருக்காங்க.’

‘பேய்லாம் எதுவும் இருக்காது, மனுஷங்க வேலைதான்’

‘எப்படி ஸார் சொல்றீங்க’

‘இது குற்றப் புனைவுயா, இதுல ஆரம்பத்துல பேய், பிசாசு, குட்டிச் சாத்தான்னுலாம் வந்தாலும், கடசில யாரோ ஒரு மனுஷன்தான் எல்லாத்தையும் செய்யறான்னு முடியணும்,’ என்ற எக்ஸ் தொலைவில் இருந்த குதிரை ராட்டினத்தைச் சுட்டி, ‘யாருமே இல்ல, குட்டிப் பசங்க வந்திருக்காங்களே’

‘அது யூஸ்ல இல்ல ஸார், ஆனா அங்கயும் பேய பாத்திருக்காங்க, பெருசா எடுத்துக்கல போல. ஆனா நேத்து ஈவினிங் ஹாரர் ஹவுஸ்ல பிரச்சனையாயிடுச்சு’

‘அது எங்க?’

‘தோ எதுத்தாப்ல அந்த கார்னர்ல ஸார்’

‘என்னய்யா, இங்கயும் யாரையும் காணும்’

‘இதெல்லாம் ஈவினிங்லதான் ஓபன் ஆகும், அதுக்குப் பக்கத்துல இருக்கறது கார், ஹெலிகாப்டர் ஓட்டற எடம். அதையும் ரொம்ப யூஸ் பண்றதில்லயாம்’

‘அப்ப தீம் பார்க்குன்னு சொன்னாலும் இது கிட்டத்தட்ட ஸ்விம்மிங் பூல்தான் இல்லையா’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போது எதிரே வந்தவரை, மேனேஜர் என்று அறிமுகப்படுத்தினார் வய்.

‘என்ன ஏதோ பேய் இருக்குன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கீங்க போல’

‘ஆமா ஸார், ஏதோ ஒரு ப்ரிசென்ஸ வேலை செய்யறவங்க நோட்டிஸ் பண்ணிருக்காங்க’

‘ஆம்பள பேயா, பொம்பள பேயா? ஆம்பளனா ஒரு சேஞ்சா இருக்கும்’

‘பையன் ஸார்’

‘இன்டிரெஸ்ட்டிங், என்ன செய்யுது அந்தப் பேய், அதாவது பையன்?’

‘இங்க நிறைய இடங்கள் ஈவினிங்தான் ஸார் ஓபன் பண்ணுவோம், சிலது யூஸ் பண்றதே இல்லை. இந்த இடங்கள்லதான் அந்தப் பையன பாத்திருக்காங்க. நீங்க வரும்போது என்ட்ரன்ஸ் பக்கத்துல பாத்திருப்பீங்கல அந்த குதிரை ராட்டினத்துல அந்த பையன் ஆப்டர்நூன் டைம்ல ஒக்காந்திருக்கானாம். அப்பறம் இங்க கார் ஓட்டற எடத்துல சில சமயம்.’

‘நீங்க நேரா பாத்திருக்கீங்களா?’

‘ஆமா ஸார். நாலஞ்சு நாள் முன்னாடி நான் இந்த வழியா வந்திட்டிருக்கேன், அப்போ இங்க ஹெலிகாப்டர்ல ஒரு பையன் ஒக்கந்திட்டிருந்தான்’

‘கிட்டக்கக் போனீங்களா, என்னாச்சு?’

‘இந்த இடத்துக்கு வந்தப்போ யாரும் இல்ல’

‘இதுவரைக்கும் ஏன் ரிபோர்ட் பண்ணல?’

‘நா ஒரு வாட்டிதான் ஸார் பாத்தேன், இந்த எடத்த கவனிச்சுக்கற பெரியவர் கிட்ட கேட்டதுக்கு யாரும் இங்க வரலைன்னு சொன்னாரு. நானும் மத்தவங்க சொல்றத கேட்டுக் கேட்டு ஏதோ கற்பனை பண்ணிட்டேன் போலிருக்குன்னு விட்டுட்டேன். நேத்து பாருங்க, ஈவினிங் ஹாரர் ஹவுஸ்ல ஒரு பேமிலி போயிருக்காங்க. திடீர்னு எக்ஸ்ட்ராவா ஒரு பையன் அங்க இருந்திருக்கான். யாரு நீன்னு கேட்டதுக்கு எதுவும் சொல்லலையாம், அங்க இருட்டா, திடீர்னு லைட்ஸ், சவுண்ட்ஸ் வந்து போகுமா, ரொம்ப பயந்துட்டாங்க. வெளில வந்துட்டு அடுத்து உள்ள போறதுக்கு காத்துக்கிட்டிருந்தவங்க கிட்டயும் இத அவங்க சொல்ல எல்லாரும் உள்ள வராம கிளம்பிட்டாங்க. அப்பறம்தான் விஷயம் ஓனருக்கு போச்சு’

‘ஏதாவது வயலன்ட்டா பிஹேவ் பண்றானா அந்தப் பையன்?’

‘அப்டிலாம் இல்லை, விளையாடறான் அவ்ளோதான். க்ளோசிங் ஹவர்ஸ்ஸுக்கு அப்பறம்தான் அவன் அடிக்கடி கண்ல படறாங்கறதுனால வேலை செய்யறவங்க பயப்படறாங்க. கிட்டக்க போய் பார்த்தா காணாம போயிடறான்’

‘இவ்ளோ பெரிய எடத்துல மறஞ்சுக்கறது ஈஸி. எல்லா இடத்துலையும் அவன பாத்திருக்காங்களா?’

‘எஸ் ஸார்’

‘இந்த இடத்துக்கு யார் இன்சார்ஜ்?’

காது கேட்கும் மெஷினைப் பொருத்திக் கொண்டிருந்த முதியவரை மேனேஜர் அழைக்க அவர் அருகே வந்தார். ‘நீங்கதான் இந்த இடத்தோட இன்சார்ஜா?’

‘ஆமா ஸார்’ என்றவரிடம், ‘இங்க ஏதோ பையன் பேயா உலாத்தறான்னு சொல்லிக்கறாங்களே, நீங்களும் பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டார் வய்.

‘என் கண்ல அப்படி யாரும் பட்டதில்லை ஸார், மத்தவங்க சொல்றாங்க’

‘இந்த இடத்துலயே பாத்திருக்காங்க இல்லை, ஹாரர் ஹவுஸ்லகூட.’ என்றார் வய்.

‘நேத்து சொன்னாங்க, நான் பாக்கல ஸார்’

‘ஒரு குடும்பமே பாத்திருக்காங்களே, உங்க மேனேஜர்கூட பாத்தேன்னு சொல்றார்’

‘நேத்து இருட்டுல அவங்க பசங்களையே தப்பா பேய்னு நினைச்சிருக்கலாம் ஸார்’

‘நீங்க இதப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ ஹெலிகாப்டர் அருகே நின்றுகொண்டிருந்த எக்ஸ் கேட்க, ‘தெரியல ஸார், நெறைய சின்னப் பசங்க இங்க தினோம் வராங்க, அதுல யாரையாவது பாத்து தப்பா புரிஞ்சுக்கிறாங்க போல’

‘ஆனா அந்த குதிரை ராட்டினம் பக்கம் யார் போ…’ என்று ஆரம்பித்த வய்யை இடைமறித்த எக்ஸ் ஹெலிகாப்டரைச் சுட்டி, ‘இது எலெக்ட்ரிசிடிலதான ஓடுது, ஸ்விட்ச் எங்க இருக்கு’ என்று கேட்க, எழுந்து வந்த முதியவர் ஸ்விட்ச் போர்ட்டை காட்டினார்.

‘நீங்க பாக்கும்போது ஹெலிகாப்டர் சுத்திட்டிருந்துதா?’

‘ஆமா ஸார், கொஞ்சம் உயரமா பறந்து திருப்பி இறங்கிடும், அன்னிக்கும் அப்படித்தான்,’ என்றார் மேனேஜர்.

‘மெயின் போர்ட் எங்க இருக்கு ஒங்க ட்யு டைம் என்ன?’ என்று முதியவரிடம் கேட்டார்.

‘டென் டு பை ஸார்’

‘ஒங்க வீடு எங்க இருக்கு?’

‘இங்கதான் ஸார் இருக்கேன், ஆபிஸ் ரூம் பக்கத்துலையே இன்னொரு ரூம் இருக்கு ஸார் அங்கதான் தங்கறேன்’

‘கார் ரைடுக்கு எவ்ளோ பணம்?’

‘நாலு நிமிஷத்துக்கு முப்பது ரூபாய்’

இடத்தை ஒருமுறை சுற்றி வந்த எக்ஸ், ‘மத்த இடத்தையும் பாத்துடலாம் ஹாரர் ஹவுஸ் சாவி இருக்கா, தொறந்து காட்ட முடியுமா?’

‘இப்பவே பாக்கலாம் ஸார், பன்னிரண்டுதான் ஸார் ஆகுது, பத்து நிமிஷத்துல நீங்க பாத்திடலாம்’.

ஹாரர் ஹவுஸை விட்டு வெளியே வந்தவுடன், ‘குதிரை ராட்டினம் பக்கம் போகலாம் வாங்க, அந்த இடத்துல பையன யாரோ பாத்தாங்கன்னு சொன்னீங்கல, அவர கூப்பிடுங்க’

‘நீங்க பாக்கும் போது பையன் என்ன செஞ்சிட்டிருந்தான்?’

‘குதிரை மேல ஒக்கந்திட்டிருந்தான் ஸார்’

‘சுத்திட்டிருந்துதா, இல்ல?’

‘இல்ல ஸார், ஜஸ்ட் அவன் சும்மா ஒக்கந்திருந்தான் அவ்ளோதான்.’

‘இங்கயும் குதிரைங்க சுத்தற மாதிரி ஆப்பரேட் பண்ண முடியும் இல்லையா, யார் இன்சார்ஜ்?’

‘முடியும் ஸார், நான்தான் இன்சார்ஜ். நாலு மணிக்குதான் ஆன் பண்ணுவேன், அதுக்கு முன்னாடி மதியம் செக் பண்ண வருவேன் அப்பதான் அந்தப் பேய்ப் பையன பார்த்தேன்.’

மீண்டும் ஒரு முறை தீம் பார்க்கை சுற்றி வந்தார்கள். ‘ஸ்விம்மிங் பூல்ல அந்த பையன யாரும் பாத்ததில்லையா’ என்று மேனேஜரிடம் கேட்டார் வய்.

‘இல்ல ஸார், இங்க வேலை செய்யறவங்க மட்டும் தான் நேத்து வரைக்கும் பாத்திருக்காங்க’

முதியவரிடம் இரு பொட்டலங்களை தந்து கொண்டிருந்தவரைச் சுட்டி ‘அங்க என்ன தராங்க?’ என்று எக்ஸ் கேட்க, ‘லஞ்ச் ஸார், இங்க வேலை செய்யறவங்களுக்கு நாங்களே லஞ்ச் தந்துடுவோம்’

அதன் பின் மேனேஜர் அறைக்கு வரும் வரை எக்ஸ் எதுவும் சொல்லவில்லை.

‘இப்ப என்ன ஸார் பண்றது’ என்று மேனேஜர் கேட்க, ‘இனி இன்னிக்கு இங்க நாம செய்யறதுக்கு ஒண்ணுமில்ல, கெளம்பறோம். நாளைக்கு வந்து அப்சர்வ் பண்றோம், அதுக்கு முன்னாடி எதாவது நடந்தா கால் பண்ணுங்க’ என்று சொன்ன எக்ஸ் ‘ஒங்க நம்பர் அவர் கிட்ட இருக்குல?’என்று வய்யிடம் கேட்க ‘இருக்கு ஸார்’. ‘ஓகே நாளைக்கு பாப்போம்’ என்று கைகுலுக்கி விட்டு கிளம்பினார்கள்.

நுழைவாயில் படிக்கட்டருகே வந்தவுடன் ‘வாங்க அப்படி போலாம்’ என்று வய்யிடம் சொல்லிவிட்டு மீண்டும் வேறொரு திசையில் உள்ளே சென்ற எக்ஸ், சிறிது தூரம் நடந்த பின் இரு புதர்களுக்கு பின்னாலிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து, ‘இங்க வெயிட் பண்ணலாம்’ என்று சொன்னார். அந்த இடத்திற்கு எதிரே இருந்த அரங்கைச் சுட்டி, ‘அப்ப இவர்தான்..’ என்று கேட்ட வய்யிடம், ‘பாப்போம்’ என்றார் எக்ஸ். சிறிது நேரம் கழித்து ‘என்ன ஸார் யாரும்…’

‘டைம் ட்வெல் தர்ட்டி ஆகப்போது வய், எனி டைம் நவ், அங்க கவனிங்க’

‘தலைக்கு மேல ஹூட் போட்டிருக்கற பையனா ஸார்’

‘யெஸ்’

அந்த சிறுவன் அரங்கினுள் நுழைய, ‘ போலாம் ஸார்’ என்ற வய்யிடம் ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணலாம்யா,’ என்றார் எக்ஸ்.

‘சாப்பாடு நல்லா இருந்ததா?’ என்று எக்ஸின் குரல் கேட்டவுடன் தடுமாறி எழுந்த முதியவர் ‘ஸார் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ஸார் ‘ என்று கைகூப்பியபடி அவர்கள் அருகே வரவும் ‘பதட்டப்படாதீங்க’ என்று எக்ஸ் நாற்காலியில் அமரச் செய்தார். ஓட ஆரம்பித்தச் சிறுவனை பிடித்து நிறுத்தினார்.

‘பயப்படாதீங்கய்யா, தண்ணி குடிக்கறீங்களா’

இரு மிடறுகள் விழுங்கி விட்டு தொடைகளில் கைகளை தேய்த்துக் கொண்ட முதியவரிடம் ‘ஏன் இப்படி பண்றீங்க’ என்று எக்ஸ் கேட்க ‘பயமுறுத்தனும்னு பண்ணலைய்யா, மாட்டி விட்டுடாதீங்க’ என்று முணுமுணுத்தார்.

‘ஸார்கிட்ட விஷயத்தச் சொல்லுங்க, எதுவும் நடக்காது,’ என்றார் வய்.

துள்ளுவதை நிறுத்தியிருந்த சிறுவனைச் சுட்டி, ‘இவன் ஒங்க பேரன்னு நினைக்கறேன், சரியா?’ என்று எக்ஸ் கேட்க, ‘ஆமாம் ஸார், பையனோட பையன். என் மகன் மருமகள விட்டுட்டு ரெண்டு வருஷம் முன்னாடி எங்கயோ ஓடிட்டான், அவதான் வளத்துட்டிருந்தா. போன மாசம் அவளும்…’ அழ ஆரம்பித்த முதியவரைப் பார்த்து சிறுவனும் அழ, வய் அவனைத் தேற்றினார்.

‘இவனப் பாத்துக்க வேற யாரும் இல்ல ஸார், எனக்கும் இந்த இடத்த விட்டா தங்கறதுக்கு வேற எங்கயும் போக முடியாது. அதனாலதான் இப்போதைக்கு இவன யாருக்கும் தெரியாம இங்கயே தங்க வெச்சிருக்கேன். என்னத் தவிர வேற யாரும் தங்க ஒத்துக்க மாட்டாங்க. வேற வேலை பாத்திட்டிருக்கேன் ஸார், கடச்ச உடன கெளம்பிடுவேன்.’

எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.

‘ரூம்லேயே எவ்ளோ நேரம் அடச்சு வைக்கிறது ஸார், அதனால கும்பலோட சேர்ந்திட்டா ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்கன்னு…’ என்று முதியவர் ஆரம்பிக்க அந்தப் பையன் பக்கம் எக்ஸ் திரும்பினார்.

‘நெறய பேர் இருப்பாங்க ஸார், யாருக்கும் என்னத் தெரியாது. தனியா எல்லாரோடையும் சுத்திட்டிருப்பேன். அப்பறம்தான் நானே விளையாட ஆரம்பிச்சேன்’ என்றான் அவன்.

சிறிது நேர அமைதிக்குப் பின் ‘சமூக நலத்துறைகிட்ட சொன்னா அவங்க ஒங்க பேரன ஹாஸ்டல்ல சேப்பாங்க. நீங்க சனி ஞாயிறு அவன போய் பாக்கலாம். நான் அவங்க கிட்ட பேசறேன்’ என்றார் எக்ஸ்.

‘வேணாம் ஸார், நானே இவன பாத்துக்கறேன்’ என்று முதியவர் சொல்லவும், பேரனும் ‘தாத்தாவோடத்தான் இருப்பேன்’ என்றான்.

‘இங்க ஒங்ககூட இருந்தா அவன் படிப்புலாம் எப்படி? ஓனர் கிட்ட பேசி இப்போதைக்கு இங்க தங்க வைக்க சொல்றேன், அப்பறம் ஒன்னு ஹாஸ்டல்ல சேக்கணும், இல்ல நீங்க வேற வேலை பாத்துக்கணும்’

‘ஸார் ஓனர்..’

‘எதுவும் சொல்ல மாட்டாரு, நான் பாத்துக்கறேன். இப்பதான் அவன் இங்க தங்க வர மாதிரி சொல்லிக்கலாம். பேய், பிசாசு புரளிலாம் இனி திரும்பி வரக் கூடாது சரியா’

முதியவர் தலையாட்டினார்.

தீம் பார்க் உரிமையாளரிடம் பேசி அவரிடம் முதியவரின் பேரன் அவருடன் சில நாட்கள் தங்க அனுமதி பெற்றார்கள். ‘இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல வேற ஏற்பாடு பண்ணிடலாம், நாங்களே வந்து சொல்றோம்’ என்று முதியவரிடம் தெரிவித்து விட்டு கிளம்பினார்கள். ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்ற எக்ஸ், மீண்டும் உள்ளே சென்று முதியவரிடம், ‘இத வெச்சுக்குங்க’ என்று பணம் கொடுக்க, அதை வாங்கத் தயங்கிவரைப் பார்த்து, ‘பேரனுக்குதான் தர்றேன், வாங்கிக்குங்க’ என்றவுடன் வாங்கிக் கொண்டார்.

‘வாங்க வய்’

‘என்ன ஸார் திரும்பி உள்ள போனீங்க?’

‘ஒண்ணுமில்ல’ என்று எக்ஸ் சொல்ல, ஏதோ கேட்க வந்ததை நிறுத்தினார் வய்.

‘முந்தைய கேஸ்போது கொஞ்சம் நெர்வஸா இருந்த மாதிரி தோணிச்சு வய், இந்த தடவை அப்படி தெரியல, குட் ஜாப்’

‘புனைவுலகம்கூட ஒரு நாடக மேடைதானே ஸார். போன தடவை நம்ம அரங்கேற்றம், வாசக பார்வை நம்ம மேலேயே இருக்குங்கற உணர்வு என்னை இயல்பா இருக்க விடல. இப்ப கொஞ்சம் பழகிடுச்சு’

‘தனியாவே கேஸ் ஹேண்டில் பண்ணலாம் நீங்க’

‘கண்டிப்பா ஸார், அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா…’ என்று ஆரம்பித்தவர் எக்ஸின் முக மாற்றத்தை கண்டதும் தொடரவில்லை. எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்த எக்ஸிடம் ‘ஆத்தர் தன் வசதிக்கு கதைய எங்கேயோ கொண்டு போய் திடீர்னு முடிச்சிட்டார்னு சொல்லப் போறாங்களோன்னு தோணுது ஸார். ஜாய்லேண்ட் நாவல்லேந்து…’

‘அது வாசகர் பாடு, எழுத்தாளர் பாடு நமக்கென்ன வந்தது. பாஸ்டீஷ், ஸெல்ப்-பாரடி வகை கதை இப்படி ஏதாவது சொல்லி நியாயப்படுத்துவார்.’

‘நெஜமாவே அவர் இந்த பாஸ்டீஷ் வகைமைலாம் மனசுல வெச்சுகிட்டு தான் எழுதறாரா ஸார், அப்ப நாம என்ன கோமாளிகளா. நான் ஸ்காட்லாண்ட் யார்ட்..’

‘யோவ் நிறுத்துய்யா ஸ்காட்லாண்ட் யார்ட் புராணத்த. எழுத்தாளர் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறார். அவருக்கு ஒத்துழைப்பு குடுக்கணும்யா. என்னைக்  கூடத் தான் குள்ளமான மனிதர்னு இந்தக் கதைல சொல்லி இருக்கார் , கடுப்பா இருக்கு. இப்ப அதைப் பத்தி கேட்க  முடியாது, அதனால புகழ் பெற்ற நம் சமகாலத்து பிரஞ்சு  குற்றப்புனைவு காவல்துறை அதிகாரி கேமெலிய வெஹவென் கூட குள்ளம் தானேன்னு என்னை தேத்திக்கறேன். இன்னும் ஒண்ணு ரெண்டு கேஸ் சால்வ் ஆகட்டும், ஹைட்ட இன்க்ரீஸ் பண்ணிடறேன் பாரு. இப்போதைக்கு அவர் செய்யறதை பொறுத்துத்தான் ஆகணும், அப்பறம் நாம நினைத்ததை செய்யலாம். பாத்திரங்கள் உயிர் பெற்று எழுத்தாளனை மீறிச் செல்வது புனைவுலகில் ஒன்றும் புதுசில்லையே, வி ஹேவ் டைம் பார் தட். இலக்கிய அமரத்துவம் காத்திக்கிட்டிருக்குங்கறத மறந்துடாத’

‘ஓகே ஸார், ஆனா குற்றப் புனைவுன்னா, அது பகடியாவே இருந்தாலும் வாசகர்களுக்கு எப்படி மர்மத்தை கண்டு பிடிச்சோம்னு சொல்லி ஆகணும் இல்லையா.எப்படி பெரியவர சஸ்பெக்ட் பண்ணீங்கன்னு அவங்களுக்கு நாம தெரிவிக்கணும்’

‘ரெண்டு மூணு விஷயம் இருக்குயா. பர்ஸ்ட் அந்த பையன் குதிரை ராட்டினத்துல குதிரை மேல ஒக்காந்திருந்திருக்கான் அவ்ளோதான், அதை அவன் ஓட்டலை, ஆனா ஹெலிகாப்டர ஓட்டிருக்கான். அப்ப இன்னொருவர் யாராவது அதை ஆப்பரேட் பண்ணிருக்கணும் இல்லையா, ஏன்னா பையன் ஒரே ஆளா ரெண்டையும் செய்ய முடியாது. ரெண்டாவது விஷயம் இது, ரொம்ப முக்கியம். வேலை செய்யறவங்க பல பேர் பையன பாத்திருக்காங்க, ஆனா தான் யாரையும் பாத்ததில்லைன்னு பெரியவர் அடிச்சு சொன்னார். அதுவும் இவர் வேலை செய்யற இடத்துலேயே, மேனேஜர் பார்த்ததா சொல்லியும் ஒத்துக்க மாட்டேங்கறார்னா அது சந்தேகத்தை கிளப்பியது. நேத்து ஹாரர் ஹவுஸ்ல வெளியாள் ஏழெட்டு பேர் பார்த்திருக்காங்க, இவர் அந்த இடத்துக்கு பக்கத்திலேயே இருந்தும் அப்பவும் யாரையும் பாக்கலைன்னுதான் சொன்னார். உளவியல் ரீதியான க்ளூன்னு இதை வெச்சுக்கலாம்னு ஆத்தர் சொல்றார்’

முதல் நீச்சல் குளத்தை வந்தடைந்திருந்தார்கள்.

‘இன்னொரு க்ளு இருக்குல ஸார்’

‘…’

‘ரெண்டு சாப்பாட்டு பொட்டலம் வந்ததே. ஒரே ஆளுக்கு ரெண்டு எதுக்கு, அதுவும் வயசானவர் புல் கட்டு கட்ட வாய்ப்பில்லையே. அது தான் உங்களுக்கு முக்கியமமான க்ளூஇல்லையா ஸார்’

‘யோவ், எப்படியா அத கண்டு பிடிச்ச’

‘நானும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படிச்சிருக்கேன் ஸார்’

‘சரி, அந்த ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைய பத்தி வேற எதுவும் பேச வேண்டாம். அது நுட்பமான க்ளூன்னு ஆத்தர் நெனச்சாருய்யா..’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போது அதீத ஒலியில் பாடலொன்று ஒலிக்க ஆரம்பிக்க, நீச்சல் குளங்களில் இருந்தவர்கள் வெளியேறி, திறந்த வெளி ஷவரை நோக்கி ஓடினார்கள். தொந்தி மனிதர் தொப்பை, தொடை, மேலுடம்பு என பாகங்களை தனித் தனியாக அசைத்துக் கொண்டு செயற்கை மழையில் நனைந்தபடி நடனமாட ஆரம்பித்தார்

‘எங்கய்யா சாப்பிடலாம், ராம் இன்டர்நேஷனலா இல்ல சற்குருவா?’

‘ஸார் எவ்ளோ சீக்கிரமா பிரச்சனைய தீர்த்திருக்கோம், அத இப்படியா     கொண்டாடுறது. நம்ம கதைதான் ரொம்ப சாத்வீகமா இருக்கு, சாப்பாடாவது…’

‘சரி காரை ரெஸ்டாரண்டுக்குப் போவோம், இல்ல பஞ்சாபி தாபா’

ஷவரை கடக்கும்போது ‘காட்ஸ் இன் ஹிஸ் ஹெவன் எவ்ரிதிங் இஸ் ரைட் வித் த வர்ல்ட்’ என்றார் வய்.

‘என்னய்யா திடீர்னு சம்பந்தம் இல்லாம, அதுவும் தப்பா வேற சொல்ற, அது ஆல்ஸ் ரைட் வித் த வர்ல்ட்’

‘ஒரு வார்த்தைதான ஸார் மாறியிருக்கு, ஆனாலும் இப்ப நமக்கு பொருந்துதே. இன்னொரு கேஸ ரொம்ப சீக்கிரம் சால்வ் பண்ணிட்டோம், தாத்தாவோட பிரச்சனை தீர்ந்திடுச்சு, இனி தீம் பார்க்ல பேய் இருக்காது, இங்க வர ஜனங்க ஜாலியா இருக்கலாம், அங்க பாருங்க ஷவர் டான்ஸ்ல என்னமா கூத்தடிக்கறாங்க, நாமளும் நல்லா மூக்கு முட்ட வெட்டப் போறோம், பஞ்சாபி தாபால பட்டர் சிக்கனும் லஸ்ஸியும் செம காம்பினேஷன். எல்லாம் சுபம் இல்லையா’

எக்ஸ் எதுவும் சொல்லாமல் வர, சில கணங்கள் கழித்து வய், ‘தன்னோட புனைவுகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கணும்னு ஆத்தர் ரொம்ப ஏங்கறார். இலக்கிய மேதைகளின் வரிகளை கதைல பொருத்தமா சேர்த்தா அப்படியொரு அதிசயம் நடக்கும்னு ஒரு எண்ணம் அவருக்கு. அதனால குடுக்கற டயலாக்க சொல்லிட்டுப் போவோம் ஸார், நம்மால முடிஞ்ச உதவி. மனுஷன் என்னலாமோ ட்ரை பண்றார் பாவம்.’

‘அவரவர் மன வழிகள்’ – சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரு சிறுகதைகள்- அஜய். ஆர்.

அஜய். ஆர்.

அதியமான், உள்நோயாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் தன் நண்பர் துரைசாமிக்காக உப்பில்லாத இட்லியும், காபியும் வாங்கிக் கொண்டு வரும் இடைப்பட்ட நேரத்தில் துரைசாமி காலமாகிவிட்டச் செய்தியை நர்ஸ் தெரிவிக்க, துரைசாமி பற்றிய நினைவுகள் ‘ஒரு காதல் கதை’யாக மேலெழும்புகின்றன. ‘ஒரு’ என்று தலைப்பில் இருந்தாலும் உண்மையில் ஆசிரியர் சொல்வது போல் ‘ஒவ்வொரு காலகட்டத்திலும்’ ஒரு பெண்ணை நினைத்து வந்திருக்கிறார், திருமணமாகி பெண் குழந்தை பெற்று அவருக்கு திருமணமும் முடித்து விட்ட, துரைசாமி. பெண்கள் மீது அவருக்கும், பெண்களுக்கு அவர் மீதும் பரஸ்பர ஈர்ப்பு எப்போதும் இருந்துள்ளதால் அவர் இதற்காக எந்த பெரிய பிரயத்தனமும் செய்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரியில் அவர் படிக்கும்போது ஏற்பட்ட, சொல்லாமலேயே முடிந்துவிட்ட ஒருதலைக் காதலின் வெற்றிடத்தை நிரப்ப பெண்களை நாடி, அவர்களிடம் ஏற்படும் பிரியம், பின் பிரிய நேரிடும்போது பல நாட்கள் நீடிக்கும் துக்கம், மனச்சோர்வு, பின் அடுத்த ஈர்ப்பு என்ற வட்டத்தில் சுழலும் அவர் வாழ்வில், அப்பெண்களில் அந்த முதல் காதலியை தேடுகிறார் என்றாலும், அவர்களை ஒரு பதிலீட்டாக மட்டுமே அணுகவில்லை என்பதையும் உணர முடிகிறது.

Image result for அவரவர் வழி

விலைமாது ஒருவரிடம் ஈர்ப்பு கொண்டு அவரைத் தேடிச் செல்பவர், அப்பெண் காவல்துறையினரிடம் சிக்கி மொட்டை அடிக்கப்பட்டதை பார்த்து, அவருடன் பேசித் திரும்பியபின் மீண்டும் சந்திக்கச் செல்லாததால் துரைசாமிக்கு வெறும் பாலியல் ஈர்ப்பு மட்டுமே இருந்திருக்கிறது என்று வாசகருக்கு தோன்றும். அந்த எண்ணம் குறித்து, திருமணமான மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்திருந்த துரைசாமி, அப்பெண் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும்போது சென்று பார்த்து வருவதும், அவர் மறைந்தபின் மனச்சோர்வு அடைவதும், சந்தேகம் கொள்ளச் செய்கிறது. பாலியல் ஈர்ப்பு என்று ஒற்றைப்படையாக, பெண்களுடனான துரைசாமியின் உறவுகளை புரிந்து கொள்ள முடியாது.

மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் தன் முதல் காதலியின் சாயலில் இருப்பதாக இறப்பதற்கு முன் அதியமானிடம் சொல்லிக் கொண்டிருந்ததால், நர்ஸ்ஸின் குடும்பம் குறித்த கேள்விகளை அதியமான் அவரிடம் கேட்கிறார். அவர் காதலியின் மகளாகவோ, பேத்தியாகவோ இருந்தால் அது வழமையான, வலிந்து திணிக்கப்படும் மிகையுணர்ச்சியாக இருக்கக்கூடும் (இப்படி ஒரு சந்திப்பு நிகழ்வதற்கு சாத்தியக்கூறு சிறிதளவயாகினும் இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கு இல்லை), அல்லது நர்ஸ் வேறு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தால் அதுவும் ஒருவிதத்தில் நமக்கு பரிச்சயமான ‘வெறுமையே’. ஆனால் கதை இந்த முடிச்சைப் பற்றி மட்டுமா அல்லது ‘ஒரு காதல் கதை’ என்று பெயர் வைத்துவிட்டு இத்தனை காதல்களை விவரிப்பதில் இருக்கக்கூடிய பகடியிலா? (அத்தகைய தொனி கதையில் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும்). இறக்கும் தருவாய் வரை தன் முதல் காதலியை துரைசாமி மறவாதிருப்பதால் தலைப்பு பொருத்தமான ஒன்றுதான் என்றும் கூற முடியும். இவற்றைத் தவிர இன்னும் இரு கோணங்களில் கதையை அதன் முடிவில் வாசகன் அணுகக்கூடும்.

‘தன் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள யாரேனும் ஒருவர் இருந்தால், அதுவும் அருகில் இல்லாவிடினும் தூரத்தில் இருந்தாலும் சரி’ என்று துவங்கும் மனமுருக்கும் பாடல் ‘மேரே அப்னே’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் உண்டு. துரைசாமிக்கு தன் மனதில் உள்ளவற்றை திறந்து வைப்பதற்கான வடிகாலாக அதியமான் மட்டுமே இருந்துள்ளார் (அதிலும் ஒரு சில விஷயங்களை தன்னுள்ளேயே துரைசாமி வைத்திருந்தார் என்று சுட்டப்படுவதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும், முழுவதுமாக ஒருவர் தன்னை வேறு யாரிடமும் திறந்து காட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது), எனும்போது அந்த நட்பின் கதை, காதல் கதைக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது, அந்த வகையில் இப்படி அருகிலேயே தன்னுணர்வுகளை பகிர்ந்து கொள்ள, வாழ்வின் பெரும்பகுதிகூட வந்த நண்பனை கொண்ட துரைசாமி அதிர்ஷ்டசாலிதான். ஆனால் இது ஒரு வழிப் பாதையாக மட்டுமே இருந்திருக்குமா, அதியமான் தன் உள்ளக்கிடக்கைகளை துரைசாமியிடம் பகிர்ந்து கொண்டிருப்பாரா, அல்லது தன் நண்பனின் உணர்ச்சிகளுக்கான சாட்சியாக மட்டுமே இருந்து வந்திருப்பாரா? நண்பனுடன் சேர்ந்து அதியமானும் விலைமாதுவிடம் சென்றிருக்கிறார் எனும் புள்ளியில் தொடங்கினால், கதை துரைசாமியைப் பற்றியதுதான் என்றாலும், அதன் நீட்சியாக அதியமானின் கதையைப் பற்றியும் வாசகன் சிந்திக்க இடமிருக்கிறது.

துரைசாமியின் மனைவி குறித்து வாசகனுக்கு பெரிதாக தெரிவதில்லை என்றாலும், மேலோட்டமாகவேனும் சுமூகமான மணவாழ்வு வந்திருக்கிறார்கள் என்று யூகிக்க முடியும். தன் நண்பன் மட்டுமே அறிந்திருந்த மற்றொரு வாழ்வை துரைசாமி வாழ்ந்ததை போல் அவர் மனைவிக்கும் தனி அக வாழ்க்கை இருந்திருக்குமா என்ற கேள்வி எழுமெனின் ‘மாய யதார்த்தம்’ சிறுகதையை படிக்க வேண்டியிருக்கும். அதில் வரும் சூர்யகுமாரி வேற்று மதத்தவரை காதலிக்கும் தன் மகளின் திருமணத்தை நடத்தி வைக்கும் முயற்சியின்போது கிறிஸ்டோபர் தம்பிதுரையைச் சந்திக்கிறாள். அவர் உதவியுடன் திருமணம் நடக்கிறது. சூர்யகுமாரியும் தம்பிதுரையும் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள், சில நேர்/அலைபேசி பேச்சுக்கள், அவரை நினைக்கையிலேயே உருவாகும் உள்ளூர படபடப்பு என்ற அளவிலேயே இந்த உறவு இருக்க, கணவர் மகாராஜனுடன் இல்லற வாழ்வு மறுபுறம் எப்போதும் போல். கணவர், தம்பிதுரை இருவருடனும் காரில் செல்வது போன்ற கனவொன்றில் விபத்து ஏற்பட்டு கணவர் அங்கேயே இறக்க, தம்பிதுரையை காரிலிருந்து தள்ளிவிட்டு சூர்யகுமாரி தனியே நிற்கிறாள். சில காலம் கழித்து நிஜ விபத்தொன்றில் சிக்கி மகாராஜனும், மருமகனும் இறந்து விடுகிறார்கள். சூர்யகுமாரிதான் இப்போது குடும்பத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தம்பிதுரையின் அழைப்பை இப்போதெல்லாம் அவள் ஏற்பதில்லை, இனி பேச வேண்டாம் என்று அவரிடம் கூறி விடுகிறாள். அவள் கனவை இந்த முடிவுடன் எப்படி பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள? (அது தேவையா?). கனவில் கணவன் இறக்க, மனம் விரும்புகின்றவனை தள்ளிவிட்டு அவள் தனியே நிற்பது நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்வதாக (foreshadowing உத்தி) எடுத்துக் கொள்ளலாமா, அதுதான் இங்கு மாய யதார்த்தமா? அல்லது இன்னொரு வகையில் அணுகவும் கூடுமா?

மகாராஜன் உயிருடன் இருந்திருந்தால் சூர்யகுமாரி, தம்பிதுரை உறவு இன்னும் உறுதிப்பட்டிருக்கும் என்று எண்ணுவது முற்றிலும் தவறாக இருக்காது, கணவனின் இறப்பே தம்பிதுரையின் அனைத்து தொடர்பையும் அவள் முறித்துக் கொள்ள காரணமாகிறது (கனவு குறித்த குற்றவுணர்ச்சி காரணமா என்றும் யோசிக்கலாம்). இருவருக்கிடையேயான உறவில், அது அடைந்திருக்கக்கூடிய பரிணாமத்தில், மகாராஜன் உயிருடன் இருப்பதைவிட அவருடைய இறப்பே விரிசலை ஏற்படுத்துகிறது என்பதில் உள்ள ‘நடைமுறை யதார்த்தம் சார்ந்த’ நகைமுரணை ‘மாய யதார்த்தமாக’ கொள்ளலாமா? துரைசாமியின் மனைவிக்கும் இப்படி ஒரு அகவாழ்வு இருந்திருக்கக்கூடுமோ என்று சூர்யகுமாரியிடமிருந்து அவருக்கு ஒரு இணைப்பை உருவாக்கிக் கொள்ளலாம்.

டெபோரா ஐஸன்பெர்க்கின் ‘அதிநாயகர்களின் அந்திப்பொழுது’ (Twilight of the Superheroes) தொகுப்பில் உள்ள “வடிவமைப்பில் உள்ள குறை” (‘The Flaw in the design’) கதையில் குடும்பமொன்றின் இரவு நேர உரையாடல்தான் களன். புரட்சி செய்ய விரும்பும், தான் பெற்றிருக்கும் வசதிகள் குறித்த குற்றவுணர்வு கொண்ட, அதே நேரம் அவற்றை விட மனமில்லாத பதின்பருவ மகன் மற்றும் கணவனுடன் நாயகி பேசிக் கொண்டிருக்கிறாள். அன்றாட உரையாடல்கள்தான். அவற்றுக்கிடையே வாசகன், அப்பெண் அன்று ஒரு அன்னியனுடன் பொழுதைக் கழித்துவிட்டு வந்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்கிறான் (அவன் அன்னியன் என்பது ஒரு யூகமே, இது பல காலமாக தொடரும் உறவாகக்கூட இருக்கலாம்). அன்று நடந்ததை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துவிட்டு அன்றாட வாழ்க்கையை எந்த சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்லும் இவருக்கும், துரைசாமிக்கும், சூரியகுமாரிக்கும், வாழ்க்கைச் சூழல், பொருளாதார வளம், சமூக பின்புலம் போன்ற வேறுபாடுகள் இருந்தாலும் அகத்தளவில் ஒற்றுமையையும் காண முடிகிறது. இல்லறத்திற்கு வெளியே உருவாகும் முதல்/ ஒரே உறவைக் குறித்தே கிளர்ச்சியும், சந்தேகமும், இறுதியில் குற்றவுணர்வும் கொண்டிருந்தாலும் அது தன் இல்லற வாழ்வை பாதிக்காதவாறு சூர்யகுமாரி நடந்து கொள்கிறார். துரைசாமிக்கு குற்றவுணர்வு எதுவும் இருந்தது போல் தெரிவதில்லை, ஒரு வேளை அதியமானிடம்கூட அதை அவர் சொல்லாமல் மறைத்திருக்கலாம், எப்படி இருப்பினும் அவருடைய இல்வாழ்வு பெருமளவு வெற்றிகரமான ஒன்றே என்றுதான் அவரைத் தெரிந்தவர்கள் கூறுவார்கள். அதியமானிடமும், சூர்யகுமாரி/ துரைசாமி இருவரின் வாழ்க்கைத்துணையிடம்கூட இந்த ஒற்றுமை காணக் கிடைக்கக்கூடும்.

இந்த மூன்று பேருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் (அல்லது அப்படி நம்பிக் கொண்டிருப்பவர்கள்) கூட தாங்கள் தெரிந்து வைத்திருக்கும், இவர்களின் வாழ்க்கை பயணத்திற்கு இணையாக வேறு அக பாதைகளில் தன் நண்பர்/தோழி/மனைவி பயணிப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். வாழ்வின் இறுதி வரை யாருமறியாத அல்லது ஓரிருவர் மட்டுமே அனுமதிக்கப்படும் இணை பிரயாணத்தை மேற்கொள்வது இந்த மூவர் மட்டுமல்ல நாமாக கூட இருக்கலாம். ஏதேனும் காரணத்தால் அந்த அகப் பாதை முட்டுச் சந்தில் முடிந்தாலோ அல்லது கிளை பிரிந்தாலோ, மற்றொரு வழித்தடத்தை உருவாக்கி, எந்நேரத்திலும் தங்களுடைய புற வாழ்வின் பாதையுடன் சேராதபடி தொடர்ந்து நீளும் பயணத்தை அவரவர் மனவழிகள் வழியே மேற்கொண்டிருக்கிறோம்.

துப்பறியும் கதை – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

‘மண்டே மார்னிங்கே என்னய்யா ப்ரச்சன,’ வண்டியிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கேட்டதற்கு கேட்டருகில் நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர், ‘சடன் டெத் ஸார்,’ என்று பதிலளித்தார்.

வீட்டின் மீது பார்வையைச் செலுத்தினார் இன்ஸ்பெக்டர். ‘என்னாச்சு?’

‘அறுபத்தஞ்சு வயசு மேல் ஸார், வைப் நோ மோர். பையன் பிரான்ஸ்ல இருக்கார். ரெண்டு வீடு தள்ளி சொந்தக்கார பையன்தான் வேணுங்கறத கவனிச்சுக்குறான், வீட்டு வேலை செய்யறதுக்கு ஒருத்தங்க வராங்க. அந்தம்மா எப்பவும் போல இன்னிக்கு ஆறரை மணிக்கு வேலைக்கு வந்திருக்காங்க. பெல் அடிச்சும் கதவை தொறக்கலைன்னவுடனே ரிலேடிவ்கிட்ட சொல்லிருக்காங்க. அவர் தன்கிட்ட இருந்த சாவிய வெச்சு தொறந்து பாத்தா, ஓனர் பெட்ல டெட். ஒடனே இன்பார்ம் பண்ணிடாங்க’

‘நம்ம டாக்டர் வந்து பாத்தாச்சா?’
‘இன்னும் இல்ல ஸார். அவங்கதான் ரிலேடிவ் அண்ட் வேலை செய்யறவங்க’ என்ற சப்-இன்ஸ்பெக்டர் இருவரையும் அருகில் அழைத்தார். வேலைக்காரம்மா புதிதாக எதுவும் சொல்லவில்லை. சொந்தக்காரர், ‘நா நேத்து நைட் மெடிசன் வாங்கித் தந்துட்டு கெளம்பறதுக்கு முன்னாடி பேசிட்டிருந்தாரு. ரொம்ப லோன்லியா இருக்குப்பா, பேரன பாக்கணும்னு ரொம்ப வருத்தப்பட்டார், அதுக்காக சூசைட் பண்ணிப்பார்னு நெனக்கவே இல்லை ஸார்’ என்று அழுதார்.

‘நீங்க இங்கயே இருங்க, பாடி எங்க இருக்கு?’

பெரிய படுக்கையறை. உடலின் அருகில் சென்று பார்த்தார் இன்ஸ்பெக்டர். எந்த துன்புறுத்தலுக்கும் ஆளானது போல் தெரியவில்லை.

‘சந்தேகப்படும்படியா எதுவும் இல்லை ஸார், ஒரு பார்மாலிட்டிக்கு ஒங்களுக்கு இன்பார்ம் பண்ணினோம்’

‘அப்டி ஈஸியா எடுத்துக்காதய்யா , இதுதான் வாசகர்கள் படிக்கற பர்ஸ்ட் கேஸ், நெறைய பேர் பார்வை நம்ம மேல இருக்கு’

‘நெறைய பேர் படிக்காறாங்களா…’

‘என்னய்யா’

‘ஒண்ணுமில்ல ஸார்’

‘பர்ஸ்ட் இம்ப்ரெஸ்சன்தான் முக்கியம், எதாவது சொதப்பிட்டோம்னு வெச்சுக்க, லிடிரரி சூசைட்தான்’

சப்-இன்ஸ்பெக்டர் பதிலெதுவும் சொல்லவில்லை. அறையைச் சுற்றி வந்தார் இன்ஸ்பெக்டர். கட்டிலுக்கு அருகே இருந்த மேஜையில் நேற்றைய தினசரி, வாட்டர் பாட்டில். குனிந்து கட்டிலுக்கு அடியில் பார்த்தார். ‘ஸ்ட்ரேஞ்’ என்றபடி எழுந்தவரிடம், சப்-இன்ஸ்பெக்டர், ‘என்ன ஸார் தேடறீங்க’ என்று கேட்டார் .

‘இந்த ரூம்ல இருக்க வேண்டிய ஒண்ணு இல்லைன்னு கவனிச்சீங்களா?’.

இல்லையென்று தலையாட்டினார் சப்-இன்ஸ்பெக்டர்.

‘ரொம்ப கேர்புலா அப்சர்வ் பண்ணுங்க. டாக்டர் இன்னும் வரலைன்னு சொன்னீங்கல்ல’

‘ஆமாம் ஸார்’

‘குட். அந்த ரெண்டு பேரையும் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க’

‘நீங்க ரூம்ல வந்தவுடனே என்ன பண்ணீங்க. கரெக்ட்டா, ஒண்ணு விடாம சொல்லுங்க’

வேலைக்காரம்மா சொந்தக்காரரைச் சுட்,டி ‘இவரு வீட்டு கதவ தொறந்துட்டு, ஸார கூப்ட்டுக்கிட்டே போனார், நான் பின்னால வந்தேன். இங்க ஸார் பெட்ல இருந்தாரு. இவர் கிட்டக்க போய் பாத்துட்டு ஐயோன்னு கத்தினாரு,’ என்று சொல்ல சொந்தக்காரர் பக்கம் இன்ஸ்பெக்டர் திரும்பினார்.

‘உடம்ப தொட்டுப் பாத்தேன் ஸார், ஜில்லாப்பா இருந்தது, உடனே வெளில வந்துட்டோம்’

‘வேறே எதையாவது பெட் பக்கத்துல பாத்தீங்களா, தேடினீங்களா?’

‘இல்ல ஸார்’

‘அப்ப எவ்ளோ நேரம் இந்த ரூம்ல இருந்தீங்க?’

‘ரெண்டு மூணு நிமிஷம்தான் இருக்கும் ஸார்’

‘ஓகே, ஒடம்ப தொட்டு பார்த்து இறந்துட்டார்னு தெரிஞ்சுக்கிட்டீங்க, ஆனா சூசைட் பண்ணினாருன்னு எப்படி முடிவுக்கு வந்தீங்க, அதுவும் பதட்டமா இருந்திருப்பீங்க, ரூம்ல வேற ரெண்டு மூணு நிமிஷம்தான் இருந்தேன்னு சொல்றீங்க,’ என்று இன்ஸ்பெக்டர் கேட்க.
‘நேத்து அவரு…’

‘சூசைட் பண்ணிக்கப் போறேன்னு சொன்னாரா ‘

‘இல்ல ஸார், தனியா இருக்கறதபத்தி தான்…’

‘அத வெச்சே சூசைட்னு நீங்க முடிவு பண்ணிட்டீங்களா?’

‘..’

‘உங்ககிட்டயும் இந்த வீட்டுச் சாவி இருக்குல்ல’

சொந்தக்காரர் தலையசைத்தார்.

‘நேத்து நைட்டு இங்க வந்தபோதுதான் அவர கடசியா நீங்க பாத்தது, இல்லையா?’

‘ஆமாம் ஸார்’

‘எப்ப வந்தீங்க, எப்ப கிளம்புனீங்க?’

‘எட்டு, எட்டே கால் இருக்கும் ஸார் நான் வந்தப்போ, பேசிட்டு ஒன்பது மணி வாக்குல கிளம்பினேன், அப்படி பேசும்போதுதான் அவரு..’

இடைமறித்த இன்ஸ்பெக்டர், ‘அதுக்கப்பறம் நீங்க இங்க வரவேல்ல இல்லையா?’ என்று கேட்டார்.

‘ஆமா ஸார்’

‘நேத்து நீங்க மெடிசன் வாங்கிட்டு வந்ததா சொன்னீங்கல்ல?’

‘ஆமா ஸார்’

‘என்ன மெடிசன்?’

‘வழக்கமா சாப்பிடறதுதான் ஸார்’

‘எந்த பார்மஸில வாங்கினீங்க?’

பெயரைச் சொன்னார்.

‘அதே க்வான்ட்டிடி தான வாங்கினீங்க’

‘ஆமா ஸார்’

‘எப்பவும் வாங்கற கடையாத்தான் இருக்கும்லையா, நேத்து வாங்கினதுக்கான பில் வெச்சிருப்பீங்க’

‘…ஸார்கிட்ட தந்துட்டேன் ஸார்… இந்த ரூம்ல தான் ஸார் இருக்கணும்’

‘தேடுவோம், எங்க போகப் போகுது. ஒரு சின்ன விஷயம், நீங்க எப்படி அவர் சூசைட் தான் பண்ணிக்கிட்டார்னு முடிவுக்கு வந்தீங்கன்னுதான் எனக்கு புரிய மாட்டேங்குது. டாக்டரே இன்னும் வந்து பாக்கலையே’

‘..’

‘சொல்லுங்க. இந்த ரூம்ல எந்த மெடிசனும் இல்லையே, எங்க போச்சு’

‘..’

‘பிடிங்க அவன!’

அறையை விட்டு ஓடிய சொந்தக்காரரை வெளியே இருந்த காவலர்கள் பிடித்தார்கள்.

‘இந்த மாதிரி கேஸ்ல சஸ்பெக்ட்ஸ் எல்லாரையும் இந்த மாதிரி ரூம்ல கூட்டி வெச்சு க்ரைம் எப்படி நடந்திருக்கும்னு எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு, அத இந்த ரூம்ல இருக்கற யாரோதான் பண்ணியிருக்காங்கன்னு சொல்லி, கடசியா நீதான் குற்றவாளின்னு அடையாளம் சொல்லணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை,’ காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் இறந்தவரின் உறவினரைப் பார்த்தபடி சொன்னார் இன்ஸ்பெக்டர்.

‘ரெண்டு பேர்தான் இருந்தாங்க ஸார்,இன்னும் கொஞ்சம்…’

‘அடுத்த வாட்டி பாத்துக்கலாம்யா, க்ரைம் பிக்க்ஷன்ல குற்றங்களுக்கு பஞ்சமே கிடையாதுயா, நெறைய சஸ்பெக்ட்ஸ் கிடைப்பாங்க’

‘இவ்ளோ சீக்கிரத்துல சால்வ் பண்ணிட்டீங்க ஸார். ஒங்களத் தவிர யாரும் இது ஒரு மர்டர்னு சந்தேகமே பட்டிருக்க மாட்டாங்க, க்ரேட்’

‘அப்படி சொல்ல முடியாதுயா, இதுல நான் எக்ஸ்ப்ளைன் பண்ணாத ஒரு விஷயம் இருக்கு, நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல. வாசகர்கள் அப்சர்வ் பண்ணிட்டாங்கன்னா அவ்ளோதான், நம்ம லிடரரி லைப் ஓவர். அப் கோர்ஸ் அதுக்கும் என்கிட்டே ஒரு விளக்கம் இருக்கு பட் ஸ்டில்..’

‘என்ன ஸார் அது’

‘நீயே கண்டுபிடி. மிசஸ். ப்ராட்லிகிட்ட(https://www.gladysmitchell.com/on-mrs-bradley) பேசணும்னு ரொம்ப நாளா ட்ரை பண்ணி மெயில்லாம் அனுப்பி நேத்துதான், இன்னிக்கு மார்னிங் அவங்ககிட்ட பேச கால் பிக்ஸ் பண்ணியிருந்தேன். அவங்க குற்றங்கள இன்வெஸ்டிகேட் பண்ற விதத்துலேந்து நாம கத்துக்கறதுக்கு நிறைய இருக்கு. எல்லாம் சொதப்பலா போச்சு. அவங்ககிட்ட எக்ஸ்க்யுஸ் கேக்கணும்’

‘நூறு வயசுக்கு மேல இருக்கும்ல ஸார் அவங்களுக்கு?’

‘அதுக்கு மேலயே இருக்கும், ஒன் ட்வென்டி பைவ் இருந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒண்ணுமில்ல. அவங்களோட முதல் இன்வெஸ்டிகேஷன்போதே வயசானவங்கதான். அதான் லிடரரி லைப், க்ளிக் ஆயிடுச்சுன்னா நித்தியத்துவம்தான்’

வண்டியில் சென்று கொண்டிருக்கும்போது சப்-இன்ஸ்பெக்டர், ‘ஸார் ஒண்ணு கேக்கணும்னு,.. நம்ம ரெண்டு பேரையும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்ன்னு தான் குறிப்பிட்டிருக்க தவிர, நேம் இல்லையே. அதுலயும் நாம யுனிபார்ம்ட் கேடரா இல்ல ஸ்பெஷல் ப்ராஞ்ச், சிபி-ஸிஐடி, ஹோமிசைட் மாதிரி வேற ஏதாவதான்னுகூட தெரியலையே.’

‘இத பத்தி எழுத்தாளர் கிட்ட கேட்டேன். மொதல்ல இந்த இன்வெஸ்டிகேஷன் பத்தி வாசகர்கள் பாசிட்டிவா ரெஸ்பான்ட் பண்ணட்டும், அப்பறம் பெயர் வெக்கறத பாத்துக்கலாம்னு சொல்லிட்டார். அதுக்கு முன்னாடியே போலிஸ் டிபார்ட்மென்ட்ஸ் பத்திலாம் ரிசர்ச் செய்யறதுல என்னால டைம் வேஸ்ட் பண்ண முடியாதுங்கறார். இந்த க்ரைம நாம கண்டுபிடிச்ச விதம் நம்பற மாதிரியே இல்லைனோ, போர் அடிக்குதுன்னோ சொல்லிட்டாங்கன்னா நம்ம கதை முடிஞ்சுது ..’

‘இன்னொரு விஷயம் ஸார், அதாவது நான்.. என்னோட ரோல்..’

‘அதைப்பத்தியும் ஆத்தரே சொன்னார். பொதுவா இந்த மாதிரி ரெண்டு பேர் இன்வெஸ்டிகேட் பண்ணும்போது ஒருத்தர் சும்மா டம்மியாத்தான் இருப்பார், ஆனா அத நான் மாத்தப் போறேன்னாரு. இந்த ழானர்ல புதுசா நிறைய விஷயங்கள் பண்ணப் போறாராம். அதனால ஒனக்கும் நிறைய சான்ஸ் கிடைக்கும், அத பத்தி கவலைப்படாத. நெறைய ரீடர்ஸ் இத படிக்கணும், படிச்சிட்டு நல்லபடியா ரெஸ்பான்ட் பண்ணனும், அதுதான் முக்கியம்.’’

சிறிது நேர அமைதிக்குப் பின் ‘என்னய்யா யோசிச்சிட்டிருக்க’ என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.

‘பாவம் ஸார் ரீடர்ஸ், இப்ப அவங்கள நெனச்சாத்தான் கவலையா இருக்கு’

அதிநாயகனின் குதிகால் – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

மேகபுரி சாகசம் 

‘ஹி வாஸ் டிராப்புடு பிகாஸ் ஆப் ஹிஸ் பார்ம். பார்ம், தட் மீன்ஸ் அவன் ஒடம்பு ஷேப்ல ஏதோ பிராப்ளம், சரியில்ல. அதனால அவன டீம்லேந்து எடுத்துட்டாங்க.’ உடலை இடுப்பருகில் வளைத்து மேற்பகுதியை குறுக்கி, ‘பார்மில்’ ஏற்படக்கூடிய பிரச்னையை செவென்-எப் வகுப்பறையில் மைக்கேல் சார் விளக்கிக் கொண்டிருந்தார்.

தலையை குனிந்தபடி சந்துரு பக்கம் திரும்பி, ‘என்னடா பார்ம்க்கு இப்படி ..’ என்று சொல்ல ஆரம்பித்து, ஜன்னலுக்கு வெளியே வானில் மூக்குரசிக் கொண்டிருந்த பழுப்பு நிற ஆமையையும் பன்றிக் குட்டியையும் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டவன், ‘என்னடா’ என்று கேட்ட சந்துருவுக்கு பதில் சொல்லாமல் தலையசைத்தான். சில மாதங்களாக,எதைப் பற்றிய பேச்சு எழுந்தாலும் இடைச்செறுகலாக ஸார் சொல்லும், ‘ஒங்கள விட மூணு நாலு வயசு தான் பெரியவன் சச்சின் பாத்துக்குங்க’விற்குச் சென்று விட்டார்.

நோட்டில் எழுதுவது போல் குனிந்து மீண்டும் வெளியே பார்த்தபோது, வாலும், பின்னங்கால்களும் மறைந்துவிட்ட பன்றிக்குட்டி, முதலையாக மாறிவிட்ட ஆமையுடன் முகமுரசிக் கொண்டிருந்தது. இரண்டைச் சுற்றியும் சுற்றி புதிதாக இன்னும் சில மேகங்கள் வெவ்வேறு உருவங்களில். ‘நீங்களும் சச்சின் மாதிரி யுங் ஏஜ்லையே அச்சீவ் பண்ணனும்’. சிறிது நேரம் முன்பு வரை உணராத குளிர் வகுப்பறையில். க்ளாஸ் நோட்டில் எழுதிக் கொண்டிருக்கும் பக்கத்தின் வலதோர நுனியைப் பிய்த்து வாயில் போட்டு மென்றவன், பின் இடது உள்ளங்கையால் வாயை மூடிக் கொண்டு இரண்டு மூன்று முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு, ஜன்னலுக்கு வெளியே பார்க்க வேண்டுமென்ற உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஸார் பின்னாலிருக்கும் கரும்பலகையின் மீது முழு கவனத்தை செலுத்தினான்.

பலகையில் இன்று பூத்திருந்த ஐம்பத்தி எட்டு ‘பட்ஸும்’ மறைந்து மைதானத்தில் பேட் செய்து கொண்டிருக்கிறான். வகார் யூனிஸின் பந்து முகத்தில் மோதி விழுபவனின் அருகே பதறி வருகிறார் சச்சின். சமாளித்து எழுந்து தொடர்ந்து ஆடுவதாகச் சொல்பவன் அடுத்த பந்திலேயே பவுண்டரி அடிக்க, சச்சின் உற்சாகமாக அவன் தோளில் குத்துகிறார். டெஸ்ட் டிராவில் முடிந்ததில் இவனுடைய பங்கை அனைவரும் பாராட்டுகிறார்கள். அடுத்து மழையால் பாதிக்கப்பட்ட ஒருநாள் போட்டியில் அப்துல் காதிரின் பந்து வீச்சை துவம்சம் செய்கிறான். ஒரே ஓவரில் மூன்று நான்கு சிக்ஸர். அடுத்த பந்திற்காக காத்துக் கொண்டிருந்தவனின் எதிரே, காதிருக்கு பதிலாக ரிக்க்ஷா தாத்தா சாக்கை தலையில் போர்த்திக் கொண்டு மெல்ல நடந்து வர, பேட்டை கீழே போட்டு விட்டு மைதானத்திலிருந்து ஓடி, மாம்பலம் கிரி ஸ்ட்ரீட்டிற்குச் சென்று, கார்கால நாளொன்றின் மாலை நேர மழைக்குள் நுழைபவனுக்கு இப்போது ஆறு வயது.

அம்மா வேலை முடித்து வர வீட்டில் தனியாகக் காத்துக் கொண்டிருக்கிறான். இவனைப் பள்ளிக்கு ரிக்க்ஷாவில் அழைத்துச் செல்லும் தாத்தா, சற்றே கூன் போட்ட, உயரமான உடலின் மேற்பகுதியை மட்டும் போர்த்தியிருக்கும் சாக்குடன் மழையினூடே தள்ளாடியபடி நடந்து வந்து இவன் போர்ஷன் முன் நிற்கிறார். ஏதோ சொல்ல ஆரம்பிப்பவரின் குரல் உயர, அடுத்த போர்ஷனில் குடியிருக்கும் மாமியின் தலையீட்டுக்குப் பின் திரும்பிச் செல்கிறார். பின் அம்மாவும் அடுத்த போர்ஷன் மாமியும் பேசிக் கொண்டதை கேட்டதில் ரிக்க்ஷா வாடகை, குடி போன்ற வார்த்தைகள் காதில் விழுகின்றன. மழை தொடர்ந்த அடுத்த இரு நாட்களும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்து பின் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவன் அந்த பள்ளியாண்டில் மீதி இருந்த மூன்று மாதங்களும் தாத்தாவின் முகம் பார்க்கவே -அவர் பலமுறை தானாகவே பேச்சு கொடுக்க முயன்றபோதும் – பயந்தான். அந்த ஏப்ரல் மாதம்தான் செங்கல்பட்டிற்கு குடி பெயர்ந்தார்கள்.

இறுதி பெல் அடித்தது. சந்துரு பேசியபடி வர, வானை பார்த்தபடியே முதல் தள வராண்டாவில் நடந்தான். இந்த ஆறு வருடங்களில் தாத்தாவின் முகத்தை மறந்து விட்டாலும், மழை மேகங்களினுள் சாக்கைப் போர்த்திக் கொண்டு தள்ளாடியபடி நடந்து வரும் அவருடைய நெடிய உருவத்தை இன்றும் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

‘எங்க போற, இரு’, என்று சந்துரு சொல்ல நின்றான். சைக்கிள் நிறுத்துமிடத்திற்கு வந்திருந்தார்கள். ‘நான் போயிட்டிருக்கேண்டா, நீ வண்டிய எடுத்துட்டு வா’, என்றிவன் சொல்ல, ‘என்ன அவசரம், வெயிட் பண்ணு’, என்று ஸ்டேண்ட்டினுள் நுழைந்து கொண்டிருந்த கூட்டத்துடன் சந்துருவும் சேர்ந்தான். வெளியேறிக் கொண்டிருந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தவன், பெண்கள் பக்கத்திலிருந்து உமா சைக்கிளில் வர வேறு பக்கம் பார்வையை திருப்பி, அவள் தன்னை கடந்து செல்ல தேவைப்படக்கூடிய கணங்கள் கழித்து, திரும்பி அவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆறாவதில் இருந்தே பள்ளிக்கு சைக்கிளில்தான் வருகிறாள், பி.எஸ்.ஏ. எஸ்.எல்.ஆர். அவள் வீட்டில் கார்கூட இருப்பதாகச் சொல்கிறார்கள். வானில் மேகமொன்றிலிருந்து துதிக்கை நீட்டிக் கொண்டிருந்தது. ‘வாடா,’ என்று சந்துரு சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்ல ஆரம்பித்தான். காலையில் பள்ளிக்கு வரும்போது மட்டும்தான் அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டு வருவான், மாலையில் அதை தள்ளிக் கொண்டே இவனுடன் நடைதான்.

‘டபுள்ஸ் போலாமாடா, மழ வர மாதிரி இருக்கு, சீக்கிரம் போயிடலாம்’.

‘சரி வா’, என்று சந்துரு சொல்ல, பின்னால் அமர்ந்து கொண்டான். செட்டித் தெருவில் சந்துரு வீடு வந்தவுடன் ‘வரேண்டா நாளைக்கு பாக்கலாம்’ என்று கிளம்பியவனிடம், ‘தண்ணி குடிச்சுட்டு போடா’, என்று சந்துரு கேட்க, ‘இல்ல மழ ஆரம்பிக்கறதுக்கு முன்ன போய்டறேன்’, என்று சொல்லிவிட்டு இப்போது எந்த உருவமும் தென்படாத, முழுதும் ஒற்றை அடர் பழுப்பு நிறமாகிவிட்ட வானை அவ்வப்போது பார்த்தபடியே விரைந்தவன், செட்டித் தெரு முனையை அடைந்து பெரிய மணியக்காரத் தெருவிற்குள் நுழைய சாலையை கடக்கும்போது இடி சப்தம் கேட்டு பாய் கடையருகே ஒதுங்கி வானத்தைப் பார்த்தான்.

வெண்ணிறமும் சிகப்பும் கலந்த சற்றே கிறுக்கலாக எழுதப்பட்ட ‘Y’ போலிருந்த மின்னல், மறையும் முன் வானின் சிறு பகுதியை விண்டு விட்டுச் செல்ல, பிரிந்த அந்தப் பகுதி தன் பழுப்பு நிறத்தை இழந்து வெள்ளை நிற யானையாக மாறி, மெல்ல மிதந்தபடியே அதன் துதிக்கையை அங்கிருந்து இவனை நோக்கி நீட்ட, அதைப் பற்றிக் கொண்டவனை உயர்த்தி தன் மேல் அமர்த்திக் கொண்டு மீண்டும் வானுடன் இணைந்து உள் நுழைந்தது.

‘இன்னும் ரெண்டு மூணு மணி நேரத்துல ட்யூட்டி ஆரம்பிக்கணும், என்னமா குளுருது’ என்று தன் வட்ட உடலைச் சிலுப்பியபடி சொல்லிக் கொண்டிருந்த நிலவிலிருந்து சில நீர்த்துளிகள் இவன் மீது பட்டன. முதலில் நிலவிடம் இவனை அறிமுகம் செய்து வைத்த யானை, ‘அங்க யார் வரா பாரு’, என்று சுட்டிய திசையில் நோக்கினான். நட்சத்திரக் கூட்டமொன்று இணைந்து கரடியாக மாறி இவனை நோக்கி வந்தது. ‘ஏன் பயப்படற, ஷேக் ஹாண்ட் பண்ணு’ என்று யானை சொன்னதைப் போல் செய்தான். ‘வா என் மேல ஏறிக்கோ’ என்று கரடி அழைக்க, தயங்கியவனை யானை சிறு குன்று போலிருந்த மேகத்தின் மீது அமர வைத்தது. ‘யாரு புதுசா இருக்கு’ என்றபடி வந்த ஆமையொன்று ‘இவங்க ரெண்டு பேரையும் விட நான் ஸ்பீடா போவேன், என் மேல ஏறிக்கோ’ என்று கூறியதற்கு பதில் எதுவும் சொல்லாமல் இருந்தவனிடம் ‘யோசிக்காத, நான் மலையையே முதுகுல சுமந்த பரம்பரைல வந்தவன் தைரியமா வா’ என்று மேலும் கூறியது. ‘உக்கும் இதையே எத்தனை யுகத்துக்கு இதே புராணத்த சொல்லப் போறானோ’. யானையின் குரல். ‘சும்மா பேசக் கூடாது ரேஸ் போலாமா’ என்று ஆமை அறைகூவல் விடுக்க ஓட்டப்பந்தயம் ஆரம்பித்தது.

போட்டோ பினிஷ். ‘நான்தான பர்ஸ்ட்’ என்று மூச்சிரைத்துக் கொண்டே யானை இவனிடம் கேட்க, ‘ஒடம்ப குறை மொதல்ல, நீ லாஸ்ட்’ என்றது ஆமை. ‘இவன் சின்னப் பையன், இரு நான் அவர கேக்கறேன்’ என்று அங்கே தோன்றியிருந்த விண்மீன் கூட்டத்தைச் சுட்டி யானை அழைத்ததும், அவை வில்லேந்திய ஆணாக உருப்பெற, அவர் அவர்களை நோக்கி நடந்து வந்தார். ‘இவர் பெரிய ஹன்டர், பேரு ஒரயன்’ என்று இவனிடம் நிலவு கூறியதும், ‘நம்மூர்ல கூப்பிடற பேர சொல்லு, இவர் பேரு ம்ரிகா’ என்று ஆமை இடைமறித்தது. ‘நீ இந்த இடத்த விட்டு நகர மாட்ட, நான் எல்லா எடத்துக்கும் போகணும். ஒவ்வொரு எடத்துல ஒரு பேரு இவருக்கு, எனக்கே எங்க எந்த பேர்ல இவர கூப்பிடனும்னு குழப்பம் உண்டு’, என்று நிலவு சொன்னது. ‘ஏதோ ஒரு பேரு விடு, யாரு ஜெயிச்சாங்க அத சொல்லுங்க,’ என்று யானை அவரிடம் கேட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் தூறல்கள் ஊடுருவ நிலவு சிலிர்த்தது. மேகக் குன்றிலிருந்து அவசரமாக இறங்கி தடுமாறியபடி ஓட ஆரம்பித்தவனைத் தடுத்த வேட்டைக்காரர், ‘இரு பயப்படாதே’ என்று கூறிவிட்டு வளைந்த நீண்ட வாளை இவனிடம் தந்து, ‘விக்கிரமாதித்யன் உபயோகித்த, தேவியின் அருள் பெற்ற, வாள் இது’ என்று சொல்ல, கையில் அதை ஏந்திக் கொண்டான். ‘எலுமிச்சைப் பழம் என்னாச்சு அழுகிடுச்சா’ என்று கரடி கேட்டதற்கு யானை பிளிறிச் சிரிக்க, ‘சும்மாருங்க ரெண்டு பேரும்’ என்றது நிலவு. இவனை நோக்கி வந்த மழைக் கணைகளை வாளால் இன்னும் சின்னஞ் சிறிய சிதறல்களாக துண்டாக்க ஆரம்பித்தான்.

‘போதும், முடிந்து விட்டது அங்கே பார்,’ என்று இவன் தோளைத் தொட்டு நிறுத்தி வேட்டைக்காரர் சுட்டிய திசையில் மேகங்களினுள் ஊடுருவிக் கொண்டிருந்த நிறச்சேர்க்கையைப் பார்த்து, ‘ரெயின்போதான அது’, என்று கேட்டான்.’ஆமாம், போய் அதை எடுத்துட்டு வா, பயப்படாத’ என்றவர் சொல்ல, கரடியின் மீதேறி அமர்ந்தவன், வானவில்லின் அருகில் சென்று வளைந்த அதன் நடுப்பகுதியில் கை வைத்து அரைவட்டமாக பிடித்து எடுத்தான். அப்போது தோன்றிய மின்னலிழையொன்றை தும்பிக்கையால் பிடித்திழுத்து இவனிடம் நீட்டி, ‘இந்தா இதை அம்புக் கயிறா கட்டிக்கோ’ என்றது யானை. வேட்டைக்காரர் உதவியுடன் நாண் பூட்டியபின் ‘அம்பு’ என்று கேட்டவனிடம், ‘தோ’, என்று நீண்ட இடித்துண்டொன்றை அவர் நீட்ட, அதை வானவில்லில்
பொருத்தினான். ‘நல்லா காது வரைக்கும் இழு அறுந்துடாது’, என்று வேட்டைக்காரர் சொல்ல, பின்கழுத்து வரை இழுத்து வேட்டைக்காரரை பார்த்தவனிடம், ‘அங்க விடு’, என்று எதிரே இருந்த மேகத்திரையைச் சுட்டினார். மூச்சை உள்ளிழுத்து, மின்னலம்பைத் தொடுத்தான். பள்ளி மேடையில் நாடகம் தொடங்கும்போது திரைச்சீலை இரண்டாக பிரிவது போல் மேகம் பிளவுபட, கண்கூசச் செய்யும் அடர்மஞ்சள் ஒளிக்கற்றைகள் உள்நுழைந்து அவ்விடத்தை நிறைத்தன. யானையின் பிளிறல் ஓசையுடன், நிலவின் மென்மையான கூக்குரல் இணைந்தது.

‘என்னடா அப்படியே நனஞ்சுட்டே வந்திருக்க, கொஞ்சம் வெயிட் பண்ணி வரக்கூடாதா. மழை நின்னுடுச்சு பாரு, இப்ப திருப்பி வெயிலடிக்குது. சரி போய் ட்ரெஸ் சேஞ் பண்ணு போ’, அம்மாவின் குரல் கேட்ட போது தன் வீட்டு போர்ஷனின் முன் நின்றிருந்தான்.

முகமற்றவர்களின் மர்மம்

‘ரூம்ல நானும், எங்கம்மாவும்தான் இருக்கோம். இவன் தொட்டில்ல. எல்லாருக்கும் தகவல் சொல்ல எங்கப்பா போய்ட்டா. இவன பாக்கவே மாட்டேன்னுட்டு மூஞ்சிய சுவத்து பக்கம் திருப்பிட்டிருந்தா. ம்மா பாரும்மான்னு கூப்படறேன், மாட்டேங்கறா. கொழந்த பொறந்தத நர்ஸ் சொன்னத, பொண் கொழந்த பொறந்ததா புரிஞ்சிண்டு ஒரே வருத்தம். கண்ண தொடச்சுக்கிட்டே ஒக்காந்திருக்கா. எங்கக்காக்கும் பொண் கொழந்ததான். என்னமா பேரன பொறந்துருக்கான், பாக்க மாட்டேங்கறன்னு சொன்னவுடன அப்படியே பாஞ்சு வந்து இவன் மேலே
போட்டிருந்த துணிய தூக்கி பாத்தா பாரு, ஆம்ப்ள கொழந்தடி, ஆம்ப்ள கொழந்தன்னு அப்டியொரு சந்தோஷம்’. சுந்தரி அக்காவிடம் அம்மா சொல்லிக் கொண்டிருக்க, படித்துக் கொண்டிருந்த ‘டின்டின்’ சித்திரக் கதையை மூடி வைத்துவிட்டு போர்ஷனை விட்டு வெளியே வந்தவனுக்குப் பின்னால் உரத்த சிரிப்புடன் சுந்தரி அக்காவின், ‘எல்லாடத்தலையும் இப்படித்தான்’. அம்மா அவ்வப்போது விவரிக்கும் நிகழ்வுதான், ஒவ்வொரு முறையும் கேட்பவர்களுக்கு உண்டாகும் குதூகலமும் பரிச்சயமானதுதான்.

போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டி வந்தமர்ந்தான். அம்மா அந்தச் சம்பவம் குறித்து பேசும்போதெல்லாம் இவனுள் உருவாகும், யாரிடமும் பகிர்ந்திராத, இப்போது தன்னுள் கவிய ஆரம்பிக்கக் போவதை சில கணங்களுக்கு முன்பே உணர்த்தும், நன்றறிந்த சங்கடம்.

அம்மாவின் அம்மா தவறாக காதில் வணங்கிக் கொண்டாள் என்பதை எப்படி உறுதியாக சொல்ல முடியும்? பிறந்த குழந்தைகள் சின்ன கவனமின்மையால் எளிதாக மாறி விடுவது பல திரைப்படங்களில் வருகிறது. ரெண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரைகூட இந்த பேச்செழும் போதெல்லாம் அன்றிரவு உடல் முழுதும் போர்த்திக் கொண்டு மூச்சுக் காற்றின் ஓசையை கேட்டபடி நெடுநேரம் விழித்திருப்பான். தனக்கும் அம்மா, அப்பாவிற்கும் உள்ள உருவ ஒற்றுமைகளை தேடிப் பட்டியலிட்ட நாட்களும் உண்டு. மூவரின் மாநிறத்தில் எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் தாத்தியும் சரி, அம்மாவின் அம்மாவும் சரி, நல்ல சிவப்பு என்பதில் வேறொரு குழப்பம். (‘எங்கம்மா மஞ்சள் வெள்ளை, அதான் அழகு வெள்ளை,’ என்கிறாள் அம்மா). ஒருபோதும் உறுதியான முடிவுக்கு வர முடியாத ஒப்பீடு, இப்போது போல்.

‘நல்லா பாத்தேன், இவன போட்டிருந்த தொட்டில் பக்கத்துல சாய் பாபா நின்னிட்டிருக்கார். தல நிறைய முடி, ரெட் ட்ரெஸ். இவனையே பாத்திட்டிருக்கார்’. அம்மா இதையும் இந்த நிகழ்வின் பின்னொட்டாகச் சொல்வதுண்டு. சாய்பாபா வந்து பார்த்திருந்தால் குழந்தை மாற வாய்ப்பே இல்லை, அவர் அப்படியெல்லாம் நடக்க விடமாட்டார், என்றுதான் அவரைப் பற்றி பத்திரிக்கைகளில் படித்துள்ளதை வைத்து நம்ப வேண்டியுள்ளது. ஆனால் ‘அதெல்லாம் பிரமை, நீயே அர மயக்கத்துல இருந்திருப்ப. அவருக்காக விரதம்லாம் இருந்தேல்ல, அதான் ஒனக்கு அப்படி தோணி இருக்கு’ என்கிறார் அப்பா.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’. போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள். ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. அவர்களின் கைகளின் அசைவிற்கேற்ப குரலின் ஒலி வலுப்பெற அம்மா அழுகிறாள். கால்சட்டை இவனை நோக்கி வர, அவரைத்’ தள்ளி விட்டு வீட்டிலிருந்து ஓடி பெருமாள் கோவில் குளத்தினருகே செல்பவன், அங்கிருக்கும் ஆலமரத்தின் கீழ் இவனுக்கு பரிச்சயமான, சிறுவனா இளைஞனா என்று சொல்லமுடியாத, முன்மண்டையில் குடுமியை செங்குத்தாக நட்டு வைத்திருப்பதைப் போன்ற சிகையமைப்பு உடைய, உலகெங்கும் அலைந்து திரிந்து தீயவர்களை வீழ்த்தும் சாகசக்கார நிருபர், மேலுடம்பில் எதுவும் அணியாத, கொழுத்த தொந்தியுடைய கத்திரிக்காயுடன் பேசிக் கொண்டிருந்ததை கண்டு அங்கிருக்கும் மாவு மில்லின் திண்ணையில் நின்று கொண்டு அவர்களை கவனித்தபடி இருந்தவனைப் பார்த்த டின்டின், அருகில் அழைத்தான்.

தன் பிரச்னையை விவரித்தவனிடம், ‘தண்டரிங் தய்பூன்ஸ், ஐ வில் ஹெல்ப் யூ’ என்று டின்டின் சொல்ல, கத்திரிக்காய் இவன் தோளில் தட்டி ‘கவலைப்படாதே, எங்கள் ஆசிரியர் சங்கர்லால் இருந்திருந்தால் மிகச் சுலபமாக இதை தீர்த்து வைப்பார். இப்போது அவர் மணிமொழியின் பிரச்னையை முடித்து வைக்கச் சென்றிருக்கிறார். ஆனால் இவரும் சாதாரணமானவர் அல்ல’, என்று தைரியமளித்தான். ‘ஸ்நோவி வரலையா’ என்று டின்டினிடம் இவன் கேட்க, ‘ஹி மஸ்ட் ஹவ் கம் அக்ராஸ் அ போன்’ என்று சலித்தபடி பதிலளித்து பின்னால் திரும்பி டின்டின் அழைத்தவுடன், டீக்கடையிலிருந்து வெளியே வந்த வெண்ணிற நாய் இவர்களுடன் சேர்ந்து கொண்டது.

‘வீ ஹாவ் டு கோ டு த நர்சிங் ஹோம் பர்ஸ்ட்’, என்று டின்டின் சொன்னதற்கு ‘வண்டி இல்லையே’, என்றிவன் பதிலளித்தான். ‘அதெல்லாம் கிடைக்கும் அங்கே பார்’, என்று கத்திரிக்காய் சுட்ட, ஆலரமரத்தின் அருகே இரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு, மரத்தின் பின்னால் இருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். ‘லெட்ஸ் டேக் தெம்’, என்று சொல்லிவிட்டு டின்டின், அவற்றில் ஒன்றில் ஸ்நோவியுடன் ஏறிக்கொள்கிறான். கத்திரிக்காயை இவன் ‘டபுள்ஸ்’ அடிக்க, சிறுநீர் கழிப்பதை பாதியில் நிறுத்தி விட்டு வண்டியின் உரிமையாளர்கள் கத்திக் கொண்டே பின்னால் ஓடி வந்து, பின் களைத்து நின்றுவிடுகிறார்கள். மருத்துவமனையில் நர்ஸிடம் ஏதோ கேட்டுத் தெரிந்து கொள்ளும் டின்டின், முழுதும் ஆவணங்களால் நிரப்பப்பட்டிருக்கும் பெரிய அறைக்குள் கத்திரிக்காயுடன் சென்று தேடுகிறான். கையில் கோப்புடன் ‘கிடைத்து விட்டது ஐயா’, என்று உரக்க சத்தமிடும் கத்திரிக்காயை அணைத்து தட்டிக் கொடுத்து ‘லெட்ஸ் கோ’ என்கிறான் டின்டின். கிளம்பி வீடு வருகிறார்கள்.

பின்புறச் சுவற்றின் ஓரத்தில் உள்ள எலுமிச்சை மரத்தினடியில் டின்டின் புடவை, பேண்ட் சட்டை ஆட்களிடம், கோப்பு காட்டி ஏதோ கேட்டுக் கொண்டிருக்க, அவனை ஊக்குவித்தபடி கத்திரிக்காய். ஸ்நோவியின் சிறிய உறுமல்கள். பயங்கொண்ட வெண்தோல் போர்த்திய முகங்கள் சைகை செய்ய, புதிதாக மூன்று பேர் சேர்ந்து கொள்கிறார்கள். டின்டினின் முஷ்டி அவர்களின் தாடையை பதம் பார்த்ததும், அவர்கள் மேலெழும்பி தரையில் விழ, அப்போது காற்றில் வரையப்படும், ‘கோன் ஐஸ்’ போன்று தலை கீழாக திருப்பிப் போடப்பட்ட முக்கோணமும், மேல் பகுதியில் காளானின் வடிவமும் கொண்ட, சித்திரக் கதைகளில் வருவது போன்ற வெண்ணிற பலகைகளில்

BOOM!
THUMP!
WHAM!
CRASH!

கீழே விழுந்து கிடப்பவர்களின் தலையச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை நிற நட்சத்திரங்கள், அவர்களின் இடுங்கிய கண்களின் கீழ் கருவளையங்கள். சுதாரித்து, சுவற்றை அடுத்திருக்கும் காலி மனையில் குதித்து அனைவரும் ஓட, குரைத்தபடி எதிராளிகளைத் துரத்தும் ஸ்நோவி, அவர்களில் ஒருவனின் பின்புறத்தை கடிக்க

OVV!

என்று புட்டத்தை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு மேலும் கீழும் குதிக்கிறான். ‘எல்லாம் நல்லபடியாக முடிந்தது நண்பா’ என்று இவன் தோளைத் தட்டி விட்டு கத்திரிக்காய் செல்கிறான். ‘ஐ வில் அல்வேஸ் பி தேர் டு ஹெல்ப் யூ’ என்கிறான் டின்டின்.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன் எங்க பையன்’ போர்ஷனுக்கு வெளியே சத்தம் கேட்டு, அம்மாவும் அப்பாவும் வாசலுக்குச் செல்கிறார்கள். இவன் முன்னறையில் இருந்து பார்க்கிறான். கிணற்றடியில் இருவர் நிற்கிறார்கள், ஒருவர் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்றொருவர் சேலை. இருவருக்கும் முகத்தில் மட்டும் எந்த பாகமும் இல்லை, வெண்தோல் மட்டும் மேலே பூசப்பட்டிருப்பதைப் போல. இவன் குளக்கரைக்கு ஓட, அங்கே மீண்டும் டின்டின், கத்திரிக்காய், ஸ்நோவி. மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்.

BOOM!
THUMP!
WHAM!
CRASH!

தலையைச் சுற்றி வட்டமிடும் சிகப்பு, பச்சை வண்ண நட்சத்திரங்கள். முகமில்லாதவர்களின் ஓட்டம். பிருஷ்டத்தைக் கடிக்கும் ஸ்நோவி.

‘நர்சிங் ஹோம்ல கொழந்த மாறிடுச்சு, இவன்..’

‘என்னடா அங்க தனியா பாக்ஸிங் பண்ணிட்டிருக்க, பெரிய டைசன்தான். அம்மா கூப்டுட்டே இருக்காங்க என்னன்னு போய் கேளு’, சுந்தரி அக்காவின் குரல் கேட்டு, முகத்தினருகே இருந்த முஷ்டிகளை இறக்கியவன், சற்று குனிந்திருந்த உடலை நிமிர்த்திக் கொண்டு போர்ஷனை நோக்கிச் சென்றான். யாருமில்லாத கிணற்றடியைக் கடக்கும்போது திரும்பிப் பார்க்க பின்புற மனை எப்போதும் போல் காலியாக இருந்தது.

படுகளம்

சிறுவனொருவன் செய்யும் சாகசக் கதையொன்றை படித்துக் கொண்டிருந்தான். இதெல்லாம் பெரிய விஷயமில்லை, அந்தப் பயலைவிட எளிதாக, விரைவாக, இவன் செய்து முடித்து விடுவான். ‘மலைக்குகை மர்மத்தை’ கண்டுபிடிப்பவன், வியப்பு நிறைந்திருக்கும் கண்களால் இவனைப் பார்த்தபடியே இருக்கும், இவனுடன் படிக்கும், உமா மற்றும் மீராவின் பக்கம் திரும்பாமல், காரியத்தை முடித்த நிறைவுடன் அவர்களை கடந்து செல்கிறான். ‘இன்னிக்கு கண்டிப்பா போயிட்டு வந்துடு, டிலே பண்ணாத’, அப்பா சொன்னதற்கு பதிலேதும் சொல்லாமல் எழுந்து அரிந்து முடித்த கீரையுடன் சமையலறைக்குள் அம்மா நுழைய ‘என்ன முணுமுணுக்கற, எதுவாருந்தாலும் நேர சொல்லு, பின்னாடி பேசாத, எனக்கு எதுவும் நேரா சொல்லித்தான் பழக்கம்’. பின்னால் சென்றபடி அப்பா, அம்மா எதுவும் கூறியது  போல் தெரியவில்லை. இதுவரை அவள் அப்பாவின் முகத்தின் எதிரே சொல்லிப் பார்த்ததும் இல்லை.

போர்ஷனின் பின்புறத்தில் உள்ள காலி மனையை ஒட்டியுள்ள சுவற்றில் அமர்ந்தான். இன்னும் இரண்டு வாரங்களில் கோடை விடுமுறை முடிந்து விடுவதற்குள் கண்டுபிடிக்க வேண்டிய மர்மங்கள், புதையல்கள் பல உள்ளன. இந்த வருடம் எட்டாவது. இனி பள்ளிக்கு பேண்ட் அணித்து செல்லலாம், இன்னும் பெரிய சாகசங்களை நிகழ்த்தலாம்.

இவனை அம்மா அழைக்கும் குரல் கேட்டு உள்ளே செல்லும்போது மணி பதினொன்றே முக்கால். ‘வா எல்.எல் வீட்டுக்கு போயிட்டு வரலாம்’ என்றாள்.

‘என்னமா’

‘வேல இருக்கு, அருணாவும் ஒன்ன பாக்கணும்னு சொல்லிட்டிருக்கான்னு எல்.எல் சொன்னாங்க, நீயும் வா’

கைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவளுடன் போர்ஷன் வாசலுக்கு வந்தபோது, முன்னறையில் இருந்த அப்பா ‘கெளம்பிட்டியா, சும்மா வந்துடாத’ என்று சொல்ல, வெறுமனே தலையாட்டினாள். கோம்ஸ் மிஸ் போர்ஷனை தாண்டும்போது ‘எதுக்கு போறோம்மா’ என்று மீண்டும் கேட்டான்.

‘அதான் சொன்னேனே வேல இருக்கு’

‘நா வரணுமாமா’

‘…’

‘அப்பறம் போய் அருணாக்காவ பாத்துக்கறேன்’

‘அதெல்லாம் வேணாம் வா’

பெரியமணிக்காரத் தெருவிலிருந்து, மேட்டுத்தெருவை தாண்டி பதினைந்து நிமிட நடை தூரத்தில் அம்மாவுடன் வேலை செய்யும் எல்.எல். டீச்சரின் வீடு. அம்மாவைவிட பத்து பதினைந்து வயது அதிகமிருக்கக் கூடியவருக்கு, சுருட்டை முடியில் பரவ ஆரம்பித்திருக்கும் நரையும், மூக்குத்தியும் கம்பீரம் கூட்டுகின்றன. அவரும் மஞ்சள் வெள்ளை என்கிறாள் அம்மா. வீட்டினுள் நுழைந்தபோது நோட்டில் எழுதிக் கொண்டிருந்தவர், ‘வா வா’, என்று அதை மூடிக் கொண்டே சொல்கிறார். ‘என்ன டீச்சர் நோட்ஸ் ஆப் லெஸ்ஸன் எழுதறீங்களா’, என்றபடி அம்மா அமர, சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அருணாக்கா, ‘என்னடா எப்படி இருக்க, தோ வரேன்’, கேட்டு விட்டு மீண்டும் உள்ளே செல்கிறார் .’ஒக்கார்டா’ என்றிவன் கையை பிடித்து தன்னருகே அமர வைத்துக் கொல்கிறார் எல்.எல்.

‘டிஸ்டர்ப் பண்ணிட்டோமா டீச்சர்’, என்று அம்மா கேட்க ‘அதெல்லாம் இல்ல, அருணாதான் இன்னிக்கு சமையல். எங்களலாம் பாக்க வரமாட்டியா’, என்று இவனிடம் கேட்டவர், ‘வருவேன், மாட்டேன் எதுன்னு புரியாத மாதிரியே தலையாட்டறான் பாரு’, என்று சொல்ல. அம்மாவும், மீண்டும் ஹாலுக்கு வந்திருந்த அருணா அக்காவும் சிரித்தார்கள். ‘இந்த வருஷம் ரிசல்ட் வரது கஷ்டம் போலருக்கு டீச்சர், இந்த செட்ட நெனச்சா நம்பிக்கையே வர மாட்டேங்குது, ரொம்ப மோசமா இருக்காங்க’, எல்.எல்லிடம் பேசிக் கொண்டிருக்கும போதே, அருணாவின் பக்கம் அவ்வப்போது பார்த்தபடி இருந்தாள் அம்மா.

குக்கர் விசில் சத்தம் கேட்டு ‘தோ வரேன்’, என்று அக்கா உள்ளே செல்ல ‘டீச்சர் ஒரு ஹெல்ப்’, என்று ஆரம்பித்து நிறுத்திய அம்மா, ஓரிரு நொடிகளுக்குப்பின், ‘இன்னிக்கு காத்தால தாம்பரம் போயிருந்தோம், என் அத்தைய பாக்க. திரும்பி வரும்போது டி-சிக்ஸ்டில செம ரஷ், என் பர்ஸ்ஸ இவன்கிட்ட குடுத்திருந்தேன், அத தொலைச்சிட்டான்’, என்று தொடர்ந்தாள்.

‘ஐயோ சின்னப் பையன்கிட்ட போய் ஏன் குடுத்த, ஏண்டா கொஞ்சம் கேர்புல்லா இருக்கப்படாதா’, என்று இவனிடம் எல்.எல். கேட்டுக் கொண்டிருக்கும்போது அருணாக்கா மீண்டும் ஹாலுக்கு வந்தார். இவன் எதுவும் பேசாமலிருந்தான்.

‘டிக்கெட் வாங்க காச எடுத்துட்டு, இத கொஞ்ச நேரம் வெச்சுக்கடான்னு குடுத்தேன், திரும்பி வாங்க மறந்துட்டேன். இவனும் தரலை, கீழ போட்டுட்டானோ இல்ல, யாராவது திருடிட்டாங்களான்னு தெரியல’ என்று அம்மா சொல்ல, தலையை குனிந்து கொண்டான்.

‘பஸ்ல இந்த மாதிரி நெறைய நடக்குது ஆண்ட்டி, இனி கேர்புல்லா இருப்பான் திட்டாதீங்க’

‘அதெல்லாம் திட்டல அருணா’

‘எவ்ளோ பணம் இருந்துச்சு’, என்று எல்.எல் கேட்டதற்கு, ‘அதான் இப்ப பெரிய பிரச்சனை’ என்று அம்மா சொல்ல எல்.எல் எதுவும் பேசவில்லை.

‘பர்ஸ்ல தான் வீட்ல இருந்த மொத்த காசு, எறநூத்தம்பது ரூபா இருந்தது, இன்னும் ஒரு வாரம் ஓட்டனும்’

‘ஏண்டி எல்லா பணத்தையும் ஒரே எடத்துல வெச்சிருந்தியா’

மீண்டும் சூழ்ந்த மௌனத்தை தலை நிமிர்ந்து நோக்கினான். அருணாவின் மீது பார்வையை செலுத்திய அம்மா சொல்ல ஆரம்பித்ததை நிறுத்தி சில கணங்களுக்கு பின் ‘அதான் டீச்சர் தப்பு பண்ணிட்டேன்…. ஒரு அம்பது ரூபா கெடச்சா, இந்த ப்ரைடே சாலரி வந்தவுடனே தந்துடுவேன்.. தப்பா எடுத்துக்காதீங்க’ என்று சொல்ல ‘உள்ள பர்ஸ் எடுத்துட்டு வா அருணா’ என்றார் எல்.எல்.

அம்மாவின் பர்ஸை கண்டுபிடிக்க டின்டினிடம் இவன் உதவி கோர, ‘ஸாரி, ஐ கான்ட் ஹெல்ப் யூ’, என்று சர்வதேச சதிகார கும்பலை பிடிக்கும் முயற்சியை ஸ்நோவியுடன் தொடர ஆரம்பித்தான். ‘மணிக்கொடியின் பிரச்சனையை இப்போதுதான் தீர்த்து விட்டு வந்தார் சங்கர்லால். ஆனால் அவரால்கூட இதை கண்டுபிடிக்க முடியாது, மன்னித்து விடு’, என்று தொந்தி மீது கையை மடக்கி வைத்துக் கொண்டு சொல்லி விட்டு கத்திரிக்காயும் தலை குனிந்து செல்கிறான். வேறொரு வானின் இரவில் டைட் ட்யுடி பார்த்துக் கொண்டிருந்த வேட்டைக்காரர், வெளிச்சத்தில் தன்னால் உதவ முடியாது என்றார். இவர் கண்டிப்பாக பர்ஸை கண்டுபிடிப்பார் என்று இறுதி நம்பிக்கையாக உதவி கேட்ட, நீள் அங்கி, தொப்பி அணிந்த, பைப் பிடித்துக் கொண்டிருந்தவரும் ‘ஸாரி, திஸ் இஸ் நாட் எலிமெண்டரி மை டியர் பாய்’ என்று கூறிவிட்டு, கேஸ் விளக்கின் வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருந்த மூடுபனி படர்ந்த தெருவினுள் இருக்கும் தன் மாடி போர்ஷனுக்குள் நுழைந்து, லண்டன் நகர குற்றவாளிகளில் முதன்மையானவரும், தன் பரம வைரியுமான பேராசிரியரை கைது செய்ய என்ன வியுகம் வகுப்பது என்பது குறித்து சிந்திக்க ஆரம்பித்தார்.