அனுகிரஹா

புத்தக கண்காட்சி 2020 – பதாகை பதிப்பக வெளியீடுகள்

ஒரு நாவல், இரண்டு சிறுகதை தொகுப்புகள், ஒரு கதம்ப படைப்பு மற்றும் ஒரு கட்டுரை தொகுப்பு என  பதாகை யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கு ஐந்து நூல்களை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது.

கத்திக்காரன்- ஸ்ரீதர் நாராயணன் – சிறுகதைகள். 

ஸ்ரீதர் நெடுநாட்களாக இணைய உலகில் இயங்கி வருபவர். பதாகையின் தோற்றுனர்களில் ஒருவர். அமெரிக்காவில் வசிக்கிறார்.பூர்வீகம் மதுரை. ‘கத்திக்காரன்’ முழுக்க அமெரிக்க பின்புலத்தில் உருவான கதைகள். ‘வானவில்’ அமெரிக்க இந்திய  பதின்மரின் வாழ்வை பற்றி நுண்ணிய சித்திரத்தை அளிப்பது. பியாரி பாபு ஹோரஸ் அலெக்சாண்டர் பற்றிய நினைவுகளை சொல்லும் கதை. ஸ்ரீதரின் கதைகூறும் முறை பிசிறற்ற தெள்ளிய முறை என சொல்லலாம். இரா.முருகன் ஒரு நல்ல முன்னுரையை அளித்திருக்கிறார்.இந்த ஆண்டு ஸ்ரீதரின் தொகுப்பு நன்கு கவனிக்கப்படும் என்று நம்புகிறேன்.

ஒளி – சுசித்ரா – சிறுகதைகள்

சுசித்ரா, சுவிட்சர்லாந்தில் வசிப்பவர். உயிரியல் துறையில் ஆய்வு செய்து வருகிறார். இவரும் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். ஆங்கிலத்தில் வலுவான வாசிப்புடையவர். அண்மையில் சொல்வனம் இணைய இதழில் வெளிவந்த அவருடைய ‘ஒளி’ முன்னோடி எழுத்தாளர்கள் பலரால் கவனிக்கப்பட்டு பாராட்டப்பட்டது. தொகுதியில் வெளிவந்துள்ள ‘தேள்’ ஒரு நல்ல டிஸ்டோபிய கதை. இரண்டு அறிவியல்புனைவுகளும் வாழ்க்கையின் அடிப்படை வினாக்கள் மீது கட்டி எழுப்பப்பட்டவை. ‘ஹைட்ரா’ எனக்கு பிடித்த கதை. இந்த ஆண்டு மிகவும் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். படைப்பூக்கம் கொண்ட எழுத்து. வருங்காலத்தில் முக்கிய எழுத்தாளராக அறியப்படுவார்.

வீடும் வெளியும் – அனுகிரஹா – கதம்ப படைப்பு

அனுகிரஹா  சொல்வனம்  மற்றும் பதாகை ஆசிரியர் குழுவில் இருப்பவர். சேலத்தை பூர்வீகமாக கொண்டவர். பெங்களூரில் வசிக்கிறார். அவருடைய ‘வீடும் வெளியும்’ நூலை படைப்பு கதம்பம் என்றே சொல்ல வேண்டும். தமிழுக்கு இப்படியான வடிவம் முன்மாதிரி அற்றது என எண்ணுகிறேன். நான்கு தலைப்புகளில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் அவரே வரைந்த ஓவியங்கள் என படைப்பின் எல்லா பரிணாமங்களும் கொண்ட நூல். அனுவின் கவிதைகள் மிக முக்கியமானவை. புதிய கோணங்களை திறப்பவை. அவை இவ்வாண்டு பேசப்படும் என்று நம்புகிறேன்.

இயர் ஜீரோ – காலத்துகள் – நாவல்

‘காலத்துகள்’ பதாகை வழி உருவாகி வந்த எழுத்தாளர். அவருடைய சிறுகதை தொகுப்பும் அடுத்து வர இருக்கிறது. ‘இயர் ஜீரோ’ செங்கல்பட்டில் தொண்ணூறுகளின் மத்தியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த ஒரு மாணவனின் கதை. நினைவுகளின் ஊடாக ஒரு தெறிப்பை காலத்துகள் இந்நாவலில் நிகழ்த்துகிறார். ஒரு தலைமுறையே அவருடைய கதையோடு தங்கள் நினைவுகளை பொருத்திப் பார்க்க முடியும். ஆத்மார்த்தமாக தன்னை கண்டடையும் நோக்கில், தன நினைவுகளை கிளறி எழுத்தாக்கும்போது அதன் நேர்மையின் ஆற்றலால் அப்படைப்பு நம்மை வசீகரிக்கிறது. தமிழில் வந்துள்ள சிறந்த ‘coming off age’ வகையிலான நாவல்களில் ஒன்று காலத்துகளின் ‘இயர் ஜீரோவை’ சொல்லலாம்.

பாண்டியாட்டம் – நம்பி கிருஷ்ணன் – மேலை இலக்கிய கட்டுரைகள்

நம்பி கிருஷ்ணன், அமெரிக்காவில் வசிக்கிறார். சொல்வனத்தில் தொடர்ச்சியாக உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி கட்டுரைகளை எழுதி வருகிறார். அரூ அறிவியல் புனைவு போட்டியில் அவருடைய கடவுளும் கேண்டியும் மூன்றாவது பரிசு பெற்றது. அவர் எழுதிய Ecco homo எனக்கு பிடித்த காந்தி கதைகளில் ஒன்று. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் செறிவான மொழியாக்கங்களை செய்திருக்கிறார். தமிழில் அவர் அளவுக்கு அயல் இலக்கிய வாசிப்பு உரியவர்கள் மிகக் குறைவு என்பது என் கணிப்பு. ‘பாண்டியாட்டம்’ உண்மையில் அப்படி பிரதிகளின் மீது அவர் தாவித்தாவி செல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான். பெருமைக்குரிய மிக முக்கியமான அறிமுகம் என நம்பியின் இந்த கட்டுரை நூலை கருதுகிறேன். ஓவியர் ஜீவானந்தத்தின் கோட்டுச் சித்திரங்களோடு நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது, கண்காட்சி முடிவதற்குள் வந்துவிடும்  என நம்புகிறேன்.

பதாகை இணைய தளம் தொடர்ந்து செயல்பட காரணமாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி. பதிப்பகமாக மலர்ந்திருக்கும் பதாகையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

முந்தைய ஆண்டு பதாகை- யாவரும் கூட்டாக வெளியிட்ட

1. பாகேஸ்ரீ- எஸ்.சுரேஷ்- சிறுகதைகள்

2. வெளிச்சமும் வெயிலும் – சிவா கிருஷ்ணமூர்த்தி – – சிறுகதைகள்

3. வளரொளி- நேர்காணல்கள், மதிப்புரைகள்- சுனில் கிருஷ்ணன்

ஆகியவையும் விற்பனைக்கு உள்ளன.

இந்த நூல்கள் புத்தக கண்காட்சியில் யாவரும் அரங்கில் (189 & 190) கிடைக்கும். ஆன்லைனில் பெற http://www.be4books.com or Whatsapp no.9042461472யை தொடர்புக் கொள்ளலாம்.

நான் ஏன் எழுதுகிறேன் – ச. அனுக்ரஹா

ச. அனுக்ரஹா

எழுத்து எப்போது பிறக்கிறது என்று நான் யோசித்திருக்கிறேன். அன்றாடத்தின் அலுவல்கள், பயணங்கள், சந்திப்புகளின் இடையே ஆயிரம் சிதறிய இடைவெளிகளில் எழுதுவதற்கான உந்துதல் கிடைக்கிறது. பெரும்பாலான தருணங்கள் அடுத்த நொடியின் அவசரத்தில் கடக்கப்பட்டுவிடுகின்றன. கடக்கப்படும் ஒரு சில உந்துதல்கள், இன்னும் அழுத்தமாக உருண்டு முட்டிக்கொண்டு வரும் தருணங்கள் அமைவதுண்டு. அப்போது, எழுதாமல் அடுத்த நொடி நகராது. பெரும்பாலான சமயம் நெருக்கடிகளும் மென்சோகங்களுமே எழுத வைப்பதுபோல தோன்றினாலும், உண்மையில் சந்தோஷங்களும்தான் அந்த உந்துதலை தருகின்றன. இன்னும் ஆழ்ந்து யோசித்தால், மேலோட்டமான நம்பிக்கைகளில், எதிர்பார்ப்புகளில் மனம் பதறாத நொடிகள் அவை. முன்னும் பின்னும் அறுக்கப்பட்டு இந்த நொடியின் தனிமையின்பத்தில் உதிப்பவை.

என் கவிதைகள் நம்மை சுற்றியிருக்கும் யதார்த்தத்திலிருந்து, அழகை தேடுபவை. சாலை நெரிசல்களிலிருந்து யாரும் பார்க்காத நிலவையும், காலை அவசரங்களில் யாரும் கவனிக்காத மரத்தையும் காட்டுபவை. பெரும்பாலான படைப்புகளில் இன்னும் தொலைந்துபோகாத குழந்தை உலகமும் உற்சாகத்துடன் வெளிப்படுகிறது. இயற்கையும், சின்ன சின்ன கவனிப்புகளும் சந்தோஷங்களும், மற்ற கடமைகளால் வடிவமைக்கப்பட்ட அன்றாடத்திற்கு சமன் நிலை அளிக்கின்றன. நம் சந்தோஷத்தை நாமே சிருஷ்டித்துக்கொள்ள முடியும் என்ற உற்சாகத்தை அளிக்கின்றன. இந்த நொடியின் பரிபூர்ணமான அனுபவம், ஒரு ஜன்மத்தின் நிறைவை அளிக்கிறது. அதை எழுதி பதிவு செய்வது என்பது, மீண்டும் மீண்டும் அங்கு செல்வதற்கான பாதை அமைப்பதே.

கவிதைகளின் அடிப்படையான மர்மம், அவை மொழியினால் கட்டப்படுபவை அல்ல; தன் வெளிப்பாடுகளால் மொழியையே கட்டமைப்பவை. மொழி என்பது கருவிதான். கவிதை, அனுபவம். மொழி மூலம் மட்டுமே ஒரு கவிதையை பகிர்ந்துகொள்ள முடியாது. அதற்கு மேலாக, அனுபவங்களின் உச்சியில் அவை அமைகின்றன. மிக நுட்பமான, மிக மிக அந்தரங்கமான, தனக்கேயான கவனிப்புகள் என்று நாம் நினைக்கக்கூடியவைதான் எப்படி மானுடத்தின் பொதுவான அனுபவங்களில் சென்று பதிகின்றன. கவிதைகள் அப்படி வாசகர்கள் மனதிலும் பதிந்து படர, மிக மிக நேர்மையாக இருக்க வேண்டும்.

எழுத்து என்பது தனி உலகம். இலக்கிய வாசகராகவும் படைப்பாளியாகவும் இருப்பதில் இருக்கும் உற்சாகமே , அப்படி ஒரு தனி உலகம் நமக்கு கிடைக்கும் என்பதுதான். அங்கு, தினம்தோறும் நாம் சந்திக்கும் மனிதர்கள், நம்மை பாதிக்கும் மனிதர்கள், நம் வாழ்வின் குறுகிய வட்டத்தைத் தாண்டி, மானுடத்தின் விரிந்த தூரிகையில் மீண்டும் மீண்டும் வரும் கதை பாத்திரங்களாக மாறக்கூடும். இப்படி நம் அனுபவங்களை, கதைகளாக சொல்லும்போது, அதை ஆராயந்து எதிர்கொள்வதற்கான தெளிவை எழுத்து நமக்கு அளிக்கிறது. புனைவுலகில் எல்லோரும் மன்னிக்கப்படக்கூடியவர்கள். ஒவ்வொருவரும் மானுடத்தின் ஒவ்வொரு குணம். அதில் நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கமுடியும். அது நம்மிடம் ஒரு காருண்யத்தை உண்டு பண்ணுகிறது. வாழ்க்கையை இன்னும் முதிர்ச்சியுடன் எதிர்கொள்வதற்கான நிதானத்தை அளிக்கிறது.

எனக்கு மிகப் பிரியமான எழுத்தாளர் அசோகமித்திரன். அவர் கதைகளைப் படித்து மூடும் ஒவ்வொரு முறையும், என்னைச் சுற்றிய உலகம் நூறு மடங்கு துல்லியத்துடன் தோன்றும். சாதாரணமாக நான் எடுத்து வைக்கக்கூடிய அடுத்த அடியில் ஒரு உற்சாகம் கூடும். அதுவரை சலிப்பளித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு விசேஷமும் மர்மமும் தெரியும். சாதாரண வாழ்க்கை என்பது சுவாரஸ்யமான சவால்களாலான கதாநாயக வாழ்க்கையாக மாறிவிடும். அதுபோல, என் அனுபவங்களில் ஒரு மாயாஜாலத்தையும் மர்மத்தையும் சேர்த்துப்பார்க்க நான் புனைவுகளை எழுதுகிறேன்.

என்னளவில் எழுத்து என்பது, எனக்கான ஒரு தனி உலகம். நிஜ உலகின் இலக்கணங்களும், நிர்பந்தங்களும் தாக்காத உலகம். சில சமயம் அவை அப்படியே தலைகீழாகும் உலகம். நான் கண்டறியும் உண்மைகளைக் கொண்டு சேர்த்துக்கொள்ளும் உலகம். அதுவே என்னை ஆசுவாசப்படுத்துகிறது. எங்கும் எப்போதும் அதற்குள் தஞ்சம் சேரலாம் என்ற உணர்வே சந்தோஷத்தை அளிக்கிறது. அந்த விரிந்த புன்னகையே படைப்பாளியை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது என்று நினைக்கிறேன். அந்த புன்னகையே என்னை எழுத வைக்கிறது.

(பொறியியல் படித்தபின் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றும் ச. அனுகிரஹா, கவிதைகள், ஒரு சில சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், நூல் விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். பெரும்பாலான படைப்புகள் சொல்வனம் இணைய இதழிலும், பதாகையிலும், ஆம்னிபஸ் தளங்களில் வெளிவந்திருக்கின்றன.)

அங்கு ஒரு கப்பல்

அனுகிரஹா


சூரிய ராட்டினங்களும்
குட்டி குதிரைகளும்
கட்டிய பலூன்களும்
பறக்க,
இரவில்
ஒளிப்பந்தலென
சலசலக்கும் கடற்கரை.

விளக்கணைந்த வீட்டின்
ரகசிய கதவுகளுடன்
உறங்கும் கடலின்
பெருமூச்சுகளின் மீது
மிதந்து செல்கிறது
அங்கு ஒரு கப்பல்.

ஒளிப்பட உதவி – Adriana Parsons

நேற்றிரவு

அனுகிரஹா

வேலை முடிந்திருக்கவில்லை. பக்கத்து ஸீட்டில் இருக்கும் டீம் மேட், அப்போதுதான் ஒரு கப் காபியும் கையுமாக வந்து உட்கார்ந்தாள். நாளை வந்து முடித்துக்கொள்ளலாம்தான். மாலை, 8 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருப்பது, நம் இரவை நீட்டித்துக்கொண்டே போகும். “அது நீங்க போன வாரமே முடிச்சிருக்கணும் ஆக்ச்சுவலி… என்ன பண்ணிட்டிருந்தது நீங்க?” என்று சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு போயிருந்தார் டீம் லீட். அதனால் என்ன, 8 மணிக்கு ‘கேப்’ பதிவு செய்திருந்தேன். அவசரமாக ஓடி, கீழ் தளத்தை அடைந்த போது 8:45. நல்ல வேளையாக அந்த ஏரியா ‘கேப்’ கிளம்ப தயாராக நின்றுகொண்டிருந்தது. இரண்டு பெண்கள் அமர்ந்திருந்தனர்.

‘கேப்’ வெளியே செல்ல செல்ல, டிரைவர், “மேடம் டீஸல் மட்டும் போட்டுக்கிட்டு போயிரலாம்.” அந்த ஜன்னலோரமாக உட்கார்ந்திருந்தவர் முணுமுணுத்துக் கொண்டே இருந்தார். நடு வகிடு எடுத்து எண்ணைப் போட்டு அழுந்த வாரியிருந்தார். கண்ணாடியும் சற்றே பெரிய பொட்டும் மேலே குங்குமம் மஞ்சள் என்று வரிசையாக. கையில் மூன்று பைகள், லேப்டாப் பை, கைபை மற்றும் சாப்பாட்டு பை. “இதெல்லாம் ரூல்ஸ் படி இல்லங்க..நானும் பார்த்துட்டேன்..தினமும் இப்படிதான் பண்றீங்க..டீஸல் போட்டுட்டுதான் வண்டிய உள்ளயே கொண்டு வரணும். “.எங்களைப் பார்த்து, “இவங்களுக்கும் உள்ளையும் ஏதோ அண்டர்ஸ்டாண்டிங்க்..” அதற்குள் நங்கள் பிரதான சாலைக்கு வந்திருந்தோம். நடுவில் உட்கார்ந்திருந்த பெண், “அண்ணா..டீஸல் போடணும்-நீங்களே.. பங்க்கு தாண்டிடுச்சு”

“இல்ல மேடம்..வேண்டாம்..அவங்க ரொம்ப வருத்தப்படறாங்க.. நான் உள்ள 8 மணிக்கே வர வேண்டியவன்..லேட்டாயிடுச்சு..நான் ஊருக்கு புதுசு..அதுதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு..நான் அப்பறம்மா போட்டுக்கறேன்.. யாருக்கும் யாருக்கூடயும் அண்டர்ஸ்டாண்டிங்க் எல்லாம் இல்ல..”

கொஞ்சம் அழுகையை அடக்கிக்கொண்டு பேசியதுபோல இருந்தது. இல்லை, கோபமா? எதுவாக இருந்தாலும், என் கவலை எனக்கு. எப்படி, வழி தெரியாதவர்களையே தினமும் டிரைவர்களாக போடுகிறார்கள்? “நீ அங்க ரூம்-ல தனியா இருந்துண்டு என்ன பண்ண போற..வந்துடேன் இங்க..இவாளும் வந்திருக்கா.. எல்லாரும் கொஞ்ச நேரம் சந்தோஷமா சேந்திருங்கோ..” மாமா, காலையில் சொன்னது. மாமா வீட்டுக்கு எனக்கு இன்னும் வழி மனப்பாடம் இல்லை. ஒவ்வொரு முறையும் தடுமாறும். ஊர் தெரிந்தவர்கள், எளிமையாக கண்டுபிடித்துவிடக்கூடிய லாண்ட் மார்க் தான்.

கூகிள் மேப்-ஐ திறந்துவைத்துக்கொண்டுதான் உட்கார்ந்திருந்தேன். சரியாக பிரதான சாலைக்கு திரும்ப சொல்லியாச்சு. அதில் சரியான திருப்பத்தில் மீண்டும் நுழைய வேண்டும். அவ்வளவே தான். நான் அப்போதும் கூகிள் மேப்-ஐயே பார்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டாம். அந்த கார்ப்பரேஷன் பள்ளி..அதை தாண்டிய திருப்பம்தான். எனக்கு தெரியும். ஆனால், தவறவிட்டுவிட்டேன். பிரதான சாலையில் அடுத்த முனைக்கு சென்றுவிட்டோம். கூட இருந்த பாதுகாப்பு எஸ்கார்ட்டும் வட நாட்டுக்காரர். அவரும் எச்சரிக்கவில்லை. அந்த முனையில், நான் எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை. என அருகில் இருந்த பெண், “இங்கிருந்து உங்களுக்கு போக தெரியுமா?”

“இல்ல, தாண்டிட்டோம்-நு நினைக்கறேன்”

“தினமும் எப்படி போவீங்க?”

“இல்ல..தினமும் இப்படி வரதில்ல..இன்னிக்கு சொந்தகாரங்க வீட்டுக்கு போறேன்..”

“சொந்தகாரங்க வீடாஆ!”. “இங்கிருந்து இறங்கி, ஆட்டோ பிடிச்சு போயிருவீங்களா?”

எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தோம். அவர்கள் இருவருமே, அந்த ஏரியா இல்லை, அதை தாண்டி போக வேண்டும். மணி ஒன்பது கடந்துவிட்டது. இன்னும், ஜன்னலோரம் இருந்த பெண்ணும் ஏதாவது பேசுவதற்குள் இறங்கிவிட வேண்டும். நான் இறங்கிவிட்டேன். டிரைவர் தனக்கு சம்பந்தமே இல்லாமல் எதுவோ நடப்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தார்.

“இல்ல..நான் பார்த்துக்கறேன்.. உங்களுக்கு லேட் ஆயிடப்போகுது.. இங்கதான் இருக்கு..நான் போயிடுவேன்.”

நான் இறங்கி, சில அடிகள் சென்றேன். நாடக மேடைப் போல எல்லாம், மஞ்சள் ஒளியில் நடமாட்டமும், அதை தாண்டிய விளிம்புகளில் கண்ணிற்கு தெரியாத இருளும் கவ்வியிருந்தது. நான் திரும்பி பார்க்கையில், கார் அதே இடத்தில் நின்று சிமிட்டிக் கொண்டிருந்தது. கிளம்புகிறார்களா, இல்லையா என்று நான் பார்த்திருக்க, செக்யூரிட்டி எஸ்கார்ட்ட் ஓடி வந்து,

“மேடம்..ஆப் ஜா சக்கேங்கே?”

“ஹான், சக்கேங்கே சக்கேங்கே”

அந்த சிறிய மனிதருக்கு,கொஞ்சமாக வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, என்ன செய்வதென்று அறியாமல் மீண்டும் வண்டியை நோக்கி ஓடிப்போனார். நான் திரும்பி பார்க்காமல், நடக்க துவங்கினேன். அவர்கள் என்னைப் பற்றி பேசிக்கொண்டிருக்க வேண்டும். என் அறியாமையை, நான் என் வீட்டிற்கு செல்லாமல், சொந்தகாரர் வீட்டிற்கு செல்ல கேப் எடுத்ததைப் பற்றி.

நான் மீண்டும் கூகிள் மேப்-ஐ திறந்துகொண்டேன். அது சத்தமாக கத்தியது, “நூறு அடியில் வலப்பக்கம் திரும்பவும்”. எதற்கும், அங்கு ஒரு போட்டோ கடையிலிருந்து வேளியே வந்துகொண்டிருந்தவர்களை கேட்டேன். “கார்பரேஷன் ஸ்கூல், எப்படி போகணும்?” “சரியா, பதினஞ்சு பில்டிங்க் தாண்டி ரைட் சைடுல வரும். நேரா போங்க”

அங்கு கட்டடங்களை அப்படி எண்ணுவது? அடுக்ககங்கள், சின்ன கடைகள், வெறும் ஓலைக்கூரையிலான கடைகள். போனையே பார்த்துக்கொண்டு தெருவில் நடக்கக்கூடாது. சாதாரணமாக அவர் நடந்துவந்திருக்கலாம். அந்த மஞ்சள் வெளிச்சத்தில் அவர் தள்ளாடுவது போல தெரிந்ததோ? இருந்தாலும் கைலியை தூக்கி கட்டிக்கொண்டு அருகில் வந்தபோது, நான் திடீரென நகர்ந்துகொண்டேன். அங்கு சைக்கிள் இருந்திருக்கிறது. நின்றிருந்த சைக்கிள் கீழே விழுந்தபோதுதான், அதனடியில் நாய் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்குள் நான் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். நாயின் சத்தம் கேட்கிறதா என்ற பதற்றத்தில், சுற்றி இருந்த மொத்த சத்தங்களும் மழுங்கிவிட்டன. கண்களின் ஓரத்தில் படுத்திருந்த நாய் பதறிக்கொண்டிருந்தது. நான் கண்களை இறுக்க மூடிக்கொண்டு நடந்தேன். வேகமாக.

“இந்த வலது திருப்பத்தில் திரும்பவும்” போன், நடந்தது தெரியாமல் சகஜமாக பேசுகிறது. கொஞ்சம்கூட பதற்றமற்ற குரலில், அது அப்படி பேசுவதை நினைத்து நான் அதிர்ந்துபோகிறேன். அதை கையில் இறுக்கமாக பிடித்துக்கோண்டு மேலும் நடக்கிறேன். பகலில் இருப்பது போல, இரவில் இருப்பதில்லை. ஒரு ஊரை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் பகல் உருவத்தையும் இரவு உருவத்தையும், இரண்டையுமேதான் தெரிந்துகொள்ள வேண்டும். தெருவிலிருந்த எல்லோருக்குமே இரவு பழக்கப்பட்டிருந்தது. ஒருவர், நைட்டியின் மீது துண்டை போர்த்தியபடி மளிக்கைக்கடைக்கு சென்றுகொண்டிருந்தார். பசங்க கூட்டமொன்று, சைக்கிள்களில் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருந்தது. எல்லோருக்குமே அந்த மஞ்சள் வெளிச்சம் சிதறிய இருண்ட சாலை, ஆடியன்ஸ் அறியாத மேடையாக தோன்றவில்லை. எனக்குதான், யாரோ போட்டுக்கொண்டிருக்கும் நாடகத்தினுள் தவறி தொலைந்துவிட்ட பதற்றம். தெரிந்த ஒரு கட்டடமும் தட்டுபடவில்லை. தேடி சென்ற ஸ்கூல், கடைசி வரை தென்படவில்லை. ஆனால், நான் எப்படியோ சேர வேண்டிய தெருவிற்குள் வந்து சேர்ந்திருந்தேன். அது நாடகம் முடிந்து வீடு செல்லும் பாதை போல, இருளென்றிருந்தது.

அங்கு மரத்தடியின் சின்ன அறையில், இரும்பு கம்பி கதவுக்குள் அம்மன் முழு அலங்காரத்தில் தனியாக அமர்ந்திருந்தாள். வாசலில் ஒரு நாய் படுத்திருந்தது. நிழல்கள் அடர்ந்திருந்த தெருமுனையில், வீடு டிவி சத்தத்தில் சலித்துப்போயிருந்தது. ஒரே வீட்டிற்குள் நான்கு மனிதர்கள், நாலு அறைகளில் இருந்தார்கள். சாப்பாட்டு நேரம் கடந்துவிட்டிருந்தது. குழாய் தண்ணீர் சத்தங்களும், பாத்திரங்கள் தம் இடங்களுக்கு செல்லும் கணகணப்புகளும், கதவுகள் பூட்டப்படும் சத்தங்களும், வீடு சொக்கிக்கொண்டிருந்தது. வரிசையாக எல்லோருக்கும் விரிக்கப்பட்டிருந்த படுக்கைகளில், கடைசியாக படுத்துக்கொண்டேன்.

காலை, அலாரத்தின் சத்தம். நாயின் ஊளையென விழித்துக்கொண்டேன்.

அறையும் மழை

அனுகிரஹா

திரைகள் அடர்ந்த
அறையினுள்
காற்றின் ஊளையும்
புயல் சின்னமும்.
அசைவற்றிருந்த அறையில்
கடலலைகள் தள்ளாடின.
மூலையில்
நின்றபடி ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி
திகைத்து
மூச்சிரைத்தது.
திறக்கப்படாத கதவிற்கு
வெளியே

பெருமழை பெய்துகொண்டிருந்தது.

புகைப்படம்: யதிராஜன்