மஜீஸ்

மஜீஸின் இரு கவிதைகள்

மஜீஸ்

01

மலையொத்த சாபமொன்றை தோளில் சுமந்து
அடர்வனத்தின் வழியே அலைவுருகிறேன்.
சமுத்திர சமமாய் என் காதலையும், கருணையையும்
ஒரு கிண்ணத்தில் இட்டு நிரப்பியுள்ளேன்,
அருந்த வாவென்று சமிக்ஞை செய்கிறாய்-

சாபத்திற்கும், கருணைக்குமிடையிலான தூரத்தில்
யதார்த்தமும் பிரமையும் தாயக்கட்டையை
உருட்டி உருட்டி விளையாடுகின்றன

02

அரூபமான இப் பின்னிரவில்
காற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்
வெள்ளை பூனைக்குட்டிக்கு
விம்பங்களை தொலைத்த இருட்டுக்கு
முகமில்லை என்ற சங்கதி
விடியும் வரையும் தெரிவதில்லை

கருணையின் கைகள்

மஜீஸ்

தனித்தலையும் காடென உணர்கிறேன்
இப்பயண வழி கொடியது
இது கனவுகள் நீண்ட சாலை
தீராக் கனவுகளும் தீர்ந்து போகும் இரவுகளும்
இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது எனக்கு
இந்த கண்ணாடியையும் இந்த முக மூடியைும்
நீ பத்திரப்படுத்திக்கொள்
ஏனென்ற கேள்வி
இங்கு தடை செய்யப்பட்டுள்ளது

ரகசியங்களை தேடி
நீ நெடுந்தூரம் பயணிக்கப் போகிறாயா?
எல்லா ரகசியங்களுக்கு பின்னாலும்
சிதைக்கப்பட்ட ஜீவிதத்தில் நான்
பூச்சியமாக்கப்பட்ட துயர் செய்தி மட்டுமே
உன்னை வந்தடையும் ஒரு நாளி்ல்

அந்த நாளில்
கருணையின் கைகள் நீளாதா
நீ விட்டுச்சென்ற இடத்தில்

உள்ளாடைகள் எப்போதும்

மஜீஸ்

 

உள்ளாடைகள் எப்போதும்
அவமானத்தின்
குறியீடுகளாகவே மட்டும்
பழக்கப்பட்ட அவளுக்கு
முப்பது தாண்டியும்
உள்ளூரில் எந்த முடவனும்
கரம் பிடிக்க தயாரில்லை யென்றதும்
சம்பிரதாயங்களும், நிர்பந்தங்களும்
கழுத்து நீட்டச் சொல்ல
ஓசைகள் பெருத்த நகரத்து
அழுக்கனின் அந்தப்புரத்திற்கு
அடிமையாக வேண்டியாயிற்று
கண்ணீரால் லௌகீகக் காயங்களை
கழுவிக்கொள்ளும் நகரத்து
மனை வாழ்க்கையின்
நீட்சியில்
அவள் பழகிக்கொண்டதும்
மாற்றிக்கொண்டதும்
கொங்ரீட் காடுகளில் கசியும்
வெயிலுக்கு ஏதுவாக
கட்டப்பட்ட கொடியில் எந்த வித
சங்கோஜமுமின்றி துவைத்த
உள்ளாடைகளைக் காயப்போட
மட்டுமே.

காதல்

மஜீஸ்

மழை நாளின் கொடுங் காற்று போல
நெடிய மௌனமொன்றை
விடுவித்த
முதற் சொல் போல
இடைவெளிகள் ஆக்கிரமித்த
நெருக்கத்தின் ஞாபகங்கள் போல
இதில்
எது போலவும் அல்ல
அது

தொன்நூறு நாட்கள் தாண்டியும்
குளிக்காமலும்
இடது காலில் மட்டும்
வலக்கால் செருப்போடும்
சட்டைக்கு மேல் சட்டை போட்டு
எங்கள் சந்தையில் அலையும்
ஒரே நாளில் பைத்தியங்களான
இரண்டு பைத்தியக்காரர்கள் போலவே
அது

பொறிக்குள் அகப்படாத எலி

மஜீஸ்

பொறிக்குள் அகப்படாத
அந்த எலி
கால் பெருவிரலில் கடித்து
வஞ்சம் தீர்த்துவிட்டு தப்பியிருந்தது
எலிக்கடிக்கு ஆஸ்பத்திரி மருந்து
விஷம் முறிக்காது
கடிபட்ட இடத்தில்
“தங்கத்தைச் சுட்டு தேய்த்தால்”
விஷம் நொடிப்பொழுதில்
முறிந்து விடுமென்று
மரபு வழி வைத்தியமொன்றை
பரிந்துரைக்கும்
பக்கத்து வீட்டு கிழவிக்கு தெரியாது
அடுத்த அறுவடைக்குப் பிறகு
மீள முடியுமென்ற நம்பிக்கையில்
உள் வீட்டு அலுமாரியில்
பத்திரப்படுத்தியிருக்கும்
அடகு சீட்டுக்கள் ஒரு போதும்
தங்கத்திற்கு ஒப்பாகாதென்று.