ஸ்ரீதர் நாராயணன்

நெடுமரம்

ஸ்ரீதர் நாராயணன் 

 

tree-life-18184847

என் வழியில் நின்று கொண்டிருக்கும்
நெடுநெடுவன உயர்ந்திருக்கும் விருட்சம்.

இலைஇலையாக விரித்து
என்னைப் பற்றியிழுக்கிறது.
கிளைகிளையாகப் பற்றி
மேலேறுகிறேன்.
கணுக்கணுவாய் பிளந்து
கையில் எடுக்கிறேன்.
துகள்துகளாக்கி தொகுத்துக் கொள்கிறேன்.
செதில்செதிலாக சிதறடித்து
சேர்த்து எடுக்கிறேன்.

அள்ளிஅள்ளி உண்டு
ஆற்றல் பெருக்குகிறேன்.

நிமிர்ந்து எழுந்து வேரூன்றி
கிளைகள் பரப்பிக் காத்திருக்கிறேன்,
நீ கொண்டுவரும் கோடலிக்கென.

 

Picture courtesy: Deviant Art

தண்டட்டி

ஸ்ரீதர் நாராயணன் 

thandatti
சிட்டிகை திருநீறு
சிறு நெட்டி முறிப்பு
விரிந்த புன்னகை
வெள்ளையான வாழ்த்துரை

‘தொலைதூரம் போவறவஹ
காத்து கருப்பு அண்டாம
சாக்கிரதையா போயிட்டு வரனும்’

கையைத் தட்டிவிட்டுக் கொண்டு
முந்தானையுடன் விபூதிப்பையையும்
இடுப்பில் செருகிக் கொண்ட
தயிர் விற்கும் அம்மாளின்
காது தண்டட்டி ஆடுகிறது

நெகிழ்ச்சியை வெளிக்கிடாமல்
நாசூக்காக நாணுகிறேன்.
வளர்ச்சியின் அடையாளமென
விடுபட்டு விலகி ஓடுகிறேன்.

காப்பிக்கடையில்
சில்லறை பாக்கி கொடுக்கும்
கொரியன் அம்மாளின்,
நீளக்காதுகளில் கனத்த தோடுகள்.
கண்பற்றி நிற்கின்றன
நெடிய கணங்களுக்கு.

விழைவின் ஆதர்சம்

ஸ்ரீதர் நாராயணன் 

உக்கிரமாக எறியும் பந்தை
உருளை மட்டையால் ஓங்கியடிக்கிறார்
சிவப்பு காலுறைக்கார வீரர்.

பார்வையாளர் மாடத்தில்
தோல் கையுறையுடன்
எம்பிக் குதிக்கிறான் சிறுவன்.

முதுவழுக்கையை மறைத்து
தொப்பியணிந்த கிழவர்களுக்கும்,
கூர்முனை குதிகால் செருப்பணிந்த
இளநங்கையருக்கும்,
பியர் ஏப்பம் விட்டபடி
தொடையாட்டிக் கொண்டிருக்கும்
பெருமகனாருக்கும்
அவனொரு வேடிக்கை.

மைதானத்தின் மத்தியிலிருந்து
அத்திசைக்கு பந்து ஒன்று
பறந்து வந்தால்
பிடிக்க பாயும் பல கைகளிடையே
அவனுடைய தோல் கையுறை
காணாமல் போய்விடும்.

அதுவரை அவர்களுடைய விழைவின்
ஆதர்சமாக
எம்பிக் குதித்துக் கொண்டிருக்கிறான்
அவன்.

மாறுதல்

ஸ்ரீதர் நாராயணன்

changes

ஷனா துவா என வாழ்த்துரைக்கும்
வங்கி காசாளரின்
வெள்ளி மணி ஒலியென
ஒத்ததிரும் குரல்
மூன்றாம் வகுப்பு நண்பனை
நினைவுப் படுத்துகிறது.

அவன் அஞ்சலில் அனுப்பிய
பொங்கல் வாழ்த்தட்டைக்கு
நன்றி சொல்லும் முன்னர்
ஊர் மாறிப் போய்விட்டோம்.

காலணிக் கயிறுகளை
முடிச்சிட்டுப் பழகும் சிறுமியின்
தலை ரிப்பனின் வண்ணம் போன்றதொரு
பச்சையில் கையெழுத்திட்டிருந்தான்.

அடுத்த அழைப்புக்கு,
பின்னாலிருந்தவரை வரிசையில்
முன்னால் அனுப்பிவிட்டு
அவள் முன்னே முழந்தாளிட்டமர்ந்து
முயல் காதுகள் கொண்டு
முடிச்சிடும் விதத்தை
பாடியபடி செய்துக் காட்டுகிறேன்.

ஆற்றுகை

ஸ்ரீதர் நாராயணன்

கூர்சுடர் கீற்றென
பல்லவி முடிந்து
கார்வையில் நிற்கும் ரீங்காரம்.

குறுகிய கட்டையின் மீதேறி
விரித்த கைகளுடன்
கால்நுனியில் ஒரு மென்நடை.

புருவமுயர்த்தி முன்னிற்பவர்
ஐயம் தீர்ந்து நம்பிக்கை கொள்ள
வசியம் தொடங்கிய சொல்லாடல்.

வண்ணத் தெறிப்புகளில்
கண்சிமிட்டி முளைத்தெழும்
புத்துருச் சித்திரிப்பு.

கடற்கரை மணலை
குழைத்து எழுப்பும்
சிறு கோபுரம்.

இனிமையாக ஆரம்பிக்கிறது
இக்கணத்தின் நிலையுறுதி.

எதிர்நோக்கும் தருணங்களின்
அநிச்சயத்தால் கிளர்ச்சியுற்று
ஆற்றுகையின் அடுத்த படியென
அலையும் கடல் நீர்ப்பரப்பின்மீது
கால் பதிக்கிறேன்.